31/03/2019

டங்கிலீசு கிராமியப் பாடல்-ஆலிவ் கிளியே


தன்ன நானே
தானென் நானே
தானென் நானே
நானனனே—-(2)


#ஆண்:

ஆலிவ் கிளியே
.....ஆசிட் விழியே
........கூடிப் பேச
...........வாடி புள்ள
..........ஆப்பிள் செல்லே
........ஆவ்சம் ஆப்பே
....ஓடி இங்கே
வாடி புள்ளே

#பெண்:

கொஞ்சிப் பேசி
....கொம்பைச் சீவி
.......சீனு போடத்
......... தேவையில்லை
.........டீசர் போட்டு
........பில்மு காட்டி
.....பாடும் பாடல்
பிடிக்க வில்லை

#ஆண்:

என்ன வேனும்
...சொன்னால் போதும்
......கூகிள் எல்லாம்
........தேவையில்லை..
.........கண்ணை மூடி
........கண்ணைத் திறந்தால்
.......அங்கே வருவேன்
..அமேசான்போல...

#பெண்:

ஐயோ ஐயோ
...ஆசை ஆசை
.......தன்னனானே
........நான னன்னே
.......சும்மா நீயும்
.....வந்து பாரு
...தன்னனானே
நான னன்னே

✍️செ. இராசா

https://youtu.be/DYtpMGEjgR4

30/03/2019

#பொரியுருண்டைத்_தத்துவம்



பொரிகளின் கூட்டுப் பொரியுருண்டை அஃதே
பொருட்களின் கூட்டுப் புவியுருண்டை- பாரும்
பொரிகளின் உள்ளே பொதிந்த வெளியைப்
பொருட்களின் உள்ளும் புகுந்து!

✍️செ. இராசா
**************************************
(வெளி- வெற்றிடம், இங்கே அனைத்துப் பொருட்களும் அணுக்களால் ஆனது. அனைத்து அணுவிலும் 99.99% வெற்றிடத்தால் ஆனது என்று அறிவியல் சொல்கிறது. ஆகவேதான் இங்கே பொரியுருண்டை உவமையாக வந்துள்ளது. பொரியிலும் காற்றுதானே உள்ளது.

குறிப்பு: நான் சொன்னது படத்தில் உள்ள பொரியுருண்டையை மட்டுமே)

#பொரியுருண்டைத்_தத்துவம்

#தேநீர்_தியானம்_5



நீ
சிலருக்கு இனிப்பாக...
சிலருக்கு இனிப்பில்லாமல்..

நீ
சிலருக்கு சூடாக
சிலருக்கு சூடில்லாமல்..

நீ
சிலருக்கு கருப்பாக...
சிலருக்கு சிவப்பாக...

நீ
அனைவரையும் அடைந்தாயா?
அறியேன் நான்...

உன்னை
அனைவருக்கும் பிடித்ததா
அறியேன் நான்...

ஆனாலும்....

உன்னால்தான் மகிழ்கின்றேன் நான்
உனை ஈன்றத் தாயாக...

என்னருமைக் கவிகளே......

#தேநீர்_தியானம்_5

29/03/2019

#குறள்_7--வண்ணத்துப் பூச்சி



வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கையைப் போல்;நல்ல
எண்ணத்துப் பூக்களில் ஏறு!

#குறள்_7

✍️செ. இராசா

#என்னிலும்_சிறந்தவர்கள்---ஒரு பாராட்டு



r 

#என்னிலும்_சிறந்தவர்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
https://www.facebook.com/photo.php?fbid=267287280873247&set=a.104368663831777&type=3&theater
எனக்கு நினைவு தெரிந்த
நாட்களில் இருந்து
நான் பாராட்டியவர்களின்
எண்ணிக்கை வெகு சொற்பமே.

எனது பணியிடத்தில் நான்
யாரையாவது பாராட்டி விட்டால்
அவர்கள் அதைப் பெருமையாகப்
பலரிடம் கூறக் கேட்டிருக்கிறேன்.

#என்_பார்வையில்_தகுதி
#இல்லாதவர்களை_என்_மனமறிய
#நான்_பாராட்டியதில்லை.

#முக_ஸ்துதி_செய்வதிலும்,
#முக_ஸ்துதியை_ஏற்பதிலும்
#எனக்கு_சம்மதமில்லை.

#இந்த_முகநூலுக்கு_வந்த_பின
#தமிழுக்காக_நான்_பாராட்டியவர்கள்
#ஐவர்_மட்டுமே.

#சிலர்_விடுபட்டு_போயிருக்கலாம்.
#என்_நினைவில்
#கொண்டு_வர_இயலவில்லை.

#உண்மையைச்_சொல்லப்_போனால்
#இவர்கள்_என்னிலும்_சிறந்தவர்கள்.
#இவர்களின்_தமிழைப்_பார்த்த
#நான்_வியந்திருக்கிறேன்.

#இந்த_ஐவருமே_முதன்மையானவர்கள்
#என்பதால்_நான்_எண்ணிடாமல்
#வரிசைப்_படுத்தி_இருக்கிறேன்.

Anandh Umesh

Mani Thiyages

Jenitha Ashok Matthew

Raja Manickam

Asokan Subramanian

#முகநூலில்_நான்_மதிக்கும்_தமிழுக்குச்
#சொந்தக்_காரர்கள்_இவர்கள்.

#என்னில்_எனக்கு_நம்பிக்கை_உண்டு.
#எனக்குள்_எந்த_Ego_வும்_கிடையாது.

எனக்கென்ன ஒரு வருத்தம் என்றால்
இவர்கள் ஐவருமே தங்களின்
#அடையாளத்தை(ID) ஆங்கிலத்தில்
வைத்திருக்கிறார்கள் என்பதே.

அஃது அவர்களின் சுய விருப்பம்.
அதில் நான் தலையிட முடியாதில்லையா...?
இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.
அதை பின்னொரு முறை சொல்வேன்.

………....…- ‘’அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன்.
………………..………………………….……….29.03.2019.

மது புராணம்


திராவிடக் கட்சிகள்மேல் குற்றச்சாட்டு
************************************
திராவிடக் கட்சிகளே...
திராவிடக் கட்சிகளே...

திராவிடக் கட்சிகளின்
திராவக அரசியலில்- நீங்கள்
அடிமையை ஒழிப்பதுபோல்
அடிமையாய் மாற்றிவிட்டீர்!

மது விலக்கைத் தள்ளி வைத்து
மன விளக்கை இருள வைத்து
நிர்வாகம் செய்வதுபோல்- நீங்கள்
நிர்வானம் ஆக்கிவிட்டீர்!

குற்றச்சாட்டு மறுப்பு
*********************
இருவரும் வருமுன்னே
இல்லையா மதுப்பழக்கம்?!

ஆண்பாலும் பெண்பாலும்
அருந்துவது தவறென்றே
கூப்பாடு போடும்முன்
கூர்ந்தொன்றைக் கவனிப்பீர்;

அறிவாளி ஔவையும்
அறவாழி அதியமானும்
சமூகமாய் அருந்தியதற்கு
சங்ககாலச் சான்றுண்டு!

களிப்பென்ற சொல்கூட
கள்ளிலிருந்து வந்ததென்று
இரண்டிற்கும் பொதுவான
இன்பமென்ற பொருளுண்டு!

தென்னையிலும் பனையிலும்
முந்திரிப்பழக் கொட்டையிலும்
அரிசிச்சோற்றுக் கஞ்சியிலும்
இருப்பதெல்லாம் கள்ளாகும்!

ஊறலென்றும் கள்ளென்றும்
தேறலென்றும் தோப்பியென்றும்
நறவென்றும் பிழியென்றும்
அத்தனையு மதுவாகும்!

சாம வேத காலத்திலும்
சோம பானம் உள்ளதென்று
ஆரியரும் வேதியரும்
அருந்தியது மதுவாகும்!

வாத்சாய சாத்திரமும்
கோக்கோக சூத்திரமும்
கள்ளோடு களியாடும்
கல்(ல)வியிலு மதுவுண்டு!

சாராயப் குப்பிகளை
சாமிக்குப் படையலிட்டு
சாமியின் வேடமிட்டு
சாத்தியதைக் கண்டதுண்டு!

பாவத்தைப் போக்குகிற
பரலோகக் கடவுளுக்கு
ஒயினைப் படையலிடும்
ஒயின்விழா இங்குண்டு!

போட்டியிலே வென்றவர்மேல்
புட்டியினைத் திறந்துவிட்டு
குளிப்பாட்டி மகிழ்வோடு
குதிப்போரைக் கண்டதுண்டு!

அன்று முதல் இன்று வரை
அனைவருமே அருந்துகையில்
மதுஏற்பு திட்டம்
மகத்தான திட்டமன்றோ?!

நீதி
***
மகன் செய்தத் தவறென்று
மகனையே கொன்றவனை
மனத்திலே ஏற்றிக் கொண்ட
மனுநீதிச் சோழர்களே...

நீரின்றி அமையாத
நீதிநூல் வள்ளுவத்தை
சரியாகப் புரிந்து வைத்த
சரித்திரத் திராவிடர்களே...

கருணையில் கடை திறந்து
கருணா நிதி திரட்டி
குடிமகன் அனைவரையும்
குடிமகனாய் மாற்றியவரே..

மூன்றெழுத்தில் எப்போதும்
மூச்சிருக்கும் என்று சொல்லி
தமிழர் வாழ்வினையே
தரிசாக்கிய நல்லவரே...

கொடுப்பதும் தவறில்லை
குடிப்பதும் தவறில்லை- ஆனால்
குடியிலே அரசாளும்
குடியரசு தவறில்லையா?!!

வேகமாய்க் கடை திறந்து
விதவையாய் மாற்றிவிட்டு- எங்கள்
குடிகெடுத்து அரசாளும்
கொடியரசு தவறில்லையா?!

✍️செ. இராசா

28/03/2019

அடடா நான் என்னசொல்ல



அடடா நான் என்னசொல்ல
அடிநாக்கு ஊறுதே...
அடியேன் உனைக் கண்டாலே
அடிமனசு பொங்குதே..

உப்பிட்ட உன்னோடு
ஓடி மனம் வருகுதே..
புளிக்கின்ற உன்னையும்
புசித்திடவேத் தோனுதே...

அழகு அரைநெல்லியே
ஆசை மாங்காயே
இன்ப எலந்தைகளே
என்னோடு வாருங்களேன்!

✍️செ. இராசா

ஐரா


“மேகதூதம் பாடவேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்”

என்ற தாமரையின் பாடல் வரிகளுக்காக நான் போன படம் இது. சமீப காலங்களில் நயன்தாரா நன்றாக படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. அதனாலேயும் இந்த படம் பார்க்க போனேன் என்று உண்மையைச் சொல்லலாம்தான். இருந்தாலும் நாமலும் பாடல் எழுதுகிறோம்னு வேறு எப்படி காண்பிப்பது?!!... சரி விடுங்க. படத்துக்குள்ள போவோம்.

ஆரம்பத்தில் மிக வேகமாகப் போனாலும் இடை இடையே மெதுவாகப் போனது சற்று சலிப்பு தந்தது. ஆனால், இந்தப்படத்தின் சொல்ல வந்த கருத்துக்கு அந்த மெதுவான நகர்வு தேவையே. இராசியில்லாத பெண் என்று சில கசப்பான சம்பவங்களை வைத்து ஒரு பெண்ணை இந்த சமூகம் சாடும்போதும் அவள் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை மையமாக வைத்து பிண்ணப்பட்ட கதை. இரண்டு நயன்தாராக்கள் இந்தப் படத்தில் உண்டு.

இதில் நயன்தாரா நடிப்பில் பிண்ணி எடுத்துள்ளார். அதிலும் அந்த கருப்பு நயன்தாரா...அற்புதம் போங்க. நானும் கருப்பாய்ப் பிறந்துவிட்டோமே என்று ஆரம்ப காலங்களில் வருத்தப்பட்டது உண்டு. அப்படி ஆக்கிருவாங்க நம்மல. அந்த கருப்பு நயன்தாராவும், சிறுவயது பாத்திரத்தில் வந்த அந்த டிக்டாக் புகழ் சகோதரியும் கலக்கி உள்ளார்கள்.

யோகிபாபு காமெடி பரவாயில்லை ரகம்.
பிண்ணனி இசை மற்றும் பாடல்கள் அருமை. அப்புறம் முக்கியமான விசயம்: நம்ம ஊதாச்சட்டையும் இருக்கிறார். படத்திலும் யூடியூப் வழியாகவே வருகிறார். செம்ம...போங்க

சின்னக் கதையை சின்னத் திரைக்கதையாகவே எடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

அந்த கருப்பு நயன்தாராவின் நடிப்பிற்காக
என் மதிப்பெண்: 3.75/5

#தேநீர்_தியானம்_4






உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு நொடித்துளியும்
என்னை “நான்” இழப்பதை
எப்படி நான் சொல்லிடுவேன்?!

கண்ணுக்குள் சென்றெந்தன்
கவிதைக்குள் வருவாயே..
மௌனத்தில் பேசி என்னுள்
மோனத்தை விதைப்பாயே..

புரட்டும் போதெல்லாம்
புதியதாய் இருப்பாயே..
முடிந்த பின்னாலும்
தொட்டிடவே செய்வாயே..

அடி அடியாய் ருசிக்கையிலே
ஆனந்தம் தருவாயே...
வரி வரியாய் வந்தென்னுள்
வசீகரம் செய்வாயே...

உன்னோடு நானிருக்கும்
ஒவ்வொரு நொடித்துளியும்
என்னை “நான்” இழப்பதை
எப்படி நான் சொல்லிடுவேன்?- சொல்
எந்தன் #நல்ல_புத்தகமே சொல்

✍️செ. இராசா

#தேநீர்_தியானம்_4

#கற்றது_கையளவு_4



முன்பெல்லாம் சமூக வலைத்தளங்களில் மக்கள் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது அப்படி இல்லை. கைப்பேசி உள்ளவர்கள் அனைவருமே பெரும்பாலும் வாட்சப் அல்லது முகநூல் பயன்படுத்துகிறார்கள். அதிலும் இந்த யூடியுப் தெரியாதவர்கள் கிடையவே கிடையாது என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்காக நுழைந்து அதிலேயே மூழ்கியவர்கள் அதிகம். அதை வர்த்தக ரீதியில் பயன்படுத்த முயல்பவர்களும் ஏராளம். அது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இதில் எப்படி அந்த நிறுவனங்கள் பணம் செய்கின்றன என்பதை பார்ப்போமா (எனக்குத் தெரிந்ததை மட்டும் இங்கே எழுதுகின்றேன்).

நிறைய பேரிடம் பணம் வாங்கி கொஞ்ச பேரிடம் கொடுக்கும் மிகத் தந்திரமான வேலையை மட்டுமே இந்த யூடியுப் போன்ற சமூக வலைத்தளங்கள் செய்கிறது என்றால் நம்புவீர்களா?. முன்பெல்லாம் கட்டுப்பாடுகள் குறைவாக வைத்திருந்த யூடியுப், தற்போது பணம் சம்பாதிக்க நிறைய மாற்றியுள்ளது. நம் காணொளியை எவ்வளவு நபர்கள் பார்க்கிறார்களோ அதற்கு அவன் தருகிறான் பணம், ஏன் தெரியுமா? இடையிடையே விளம்பரம் போடுவதற்கு பணம் வாங்கலாம் என்பதையும் தாண்டி, வேறு ஒரு கோக்குமாக்கு வேலையும் உள்ளது நண்பர்களே.....

அதாவது உங்கள் காணொளியை எத்தனை பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கும் நீங்களே பணம் கொடுக்க வேண்டும். அதற்குப் பெயர் ப்ரோமோஷன். பணம் கட்டிய சற்று நேரத்திற்குள்ளாக பார்வையாளர்கள் கணக்கு மாறிவிடும். உண்மையில் இந்தக் கணக்கை நாம் யாரும் சரிதானா என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு தொகையை நிறைய பேரிடமிருந்து வாங்கிவிடுவான் அவன். மிகவும் குறைவானவர்களுக்கே திரும்பக் கொடுக்கிறான்.

முகநூலில் இது சற்று வேறு மாதிரி உள்ளது. அதாவது, தங்களின் சாதாரண கணக்கோடு, தாங்கள் பேஜ் (பக்கம்) என்று தனியாக எத்தனை வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். அங்கே தங்கள் பக்கத்தை விளம்பரம் செய்யலாம். உதாரணமாக, என் விளம்பரம் எந்தத்த பகுதிக்கு காண்பிக்க வேண்டும் எத்தனை நாட்கள் காண்பிக்க வேண்டும் என்பதைப் பொருத்து ஒரு தொகை. இங்கேயும் காணொளிக்கு பார்வையாளரைக் கூட்டிக் காண்பிக்க ப்ரோமோஷன் உண்டு.

ஆக, இங்கே அனைத்தும் பணம் பணம் பணம் மட்டுமே. நாம் கவனமாகக் கையாண்டால் முகநூல் போன்ற சமூக மாய வலையில் சிக்காமல் தப்பிக்கலாம்.

செ. இராசா

27/03/2019

#நான்_நாயாக்கும்



ஒன்றை நானும் பற்றிடத்தான்- இங்கு
ஒன்றை நோக்கியேப் பாய்கின்றேன்!
பற்றிய ஒன்றில் நின்றிடத்தான்- என்
பற்றைக் குவித்தேப் பாய்கின்றேன்!

முயலின் வேகம் போனாலும்- என்
முயற்சியின் வேகம் பத்தவில்லை!
முயற்சியில் வேதனை வந்தாலும்- நான்
முயற்சியை விட்டிட விரும்பவில்லை!

இன்னும் இன்னும் ஓடிடுவேன்- நான்
இன்னொரு முறையும் முயன்றிடுவேன்!
இம்முறை மீண்டும் வீழ்ந்தாலோ-அட
இன்னும் ஒருமுறை ஓடிடுவேன்!

#நான்_நாயாக்கும்

✍️செ. இராசா

பட உதவி: திரு. Antony Satheesh அவர்கள்
(மிகச் சிறந்த ஒளிப்படக் கலைஞர். இவரெல்லாம் படம் எடுப்பதில் வேற மாதிரி. அவர் படங்களைப் பாருங்கள். அசந்து போவீர்கள்)
— with Antony Satheesh.
குறைகாணும் நெஞ்சங்கள்
குற்றத்தைக் காணும்!

நிறைகாணும் நெஞ்சங்கள்
நிம்மதியில் வாழும்!

உடல் பொருள் ஆவியெல்லாம்


உடல் பொருள் ஆவியெல்லாம்
உனக்காகத்தானே...
உடன்படத் தயங்குவதேன்
ஓடி வா மானே...

வெண்ணிலவு நீ என்றால்
உன் பருதிநானே...
வெண்மையினை நீ பெறவே
உன்னை அடைவேனே

***பொறுமை***

உனைத் தொடும் வரைக்கும்தான்
உருகிடுவான் பெண்ணே...
உடை தொடும் முன்னாலே
ஓடி விடு கண்ணே...

கவிதையிலே கவுத்திடுவான்
கவனங்கொள் பெண்ணே
கழட்டிவிட முயன்றாலோ
கழட்டி அடி பெண்ணே- செருப்பைக்
கழட்டி அடி பெண்ணே!!!

✍️செ. இராசா
முற்பகல் கொடுத்தால்
பிற்பகல் விழுகிறது
ஓட்டு

26/03/2019

#தேர்தல்_பாடல்_2019

 https://youtu.be/NQm6zxEpWU8
நாடு நாடு நாடு
நம்ம தமிழ் நாடு!
பாரு பாரு பாரு
யாரு வரான் பாரு!
மாசு மாசு மாசு
லூசுக்கெல்லாம் மாசு!


காசு காசு காசு
கொடுப்பான்டா காசு


முட்டாள்கள் கூட்டத்தில்
முட்டாள்கள் இராஜாங்கம்
எப்போதும் எந்நாளும்
தோற்காதேடி...

கூமுட்டைக் கூட்டத்தில்
கூப்பாடு போட்டாலும்
வெத்தாகும் வீணாகும்
வேகாதேடி...

உருவுதே நம்மை எல்லாக் கட்சியும்
ஒழிக்குதே நம் வாழ்வைத்தான்

பிரிக்குதே நம்மை எல்லாக் கட்சியும்
பறிக்குதே நம் உரிமையைத்தான்

#தேர்தல்_பாடல்_2019

✍️செ. இராசா
https://youtu.be/NQm6zxEpWU8

#கொக்கோகம் கூவுதடி!



கொக்கெல்லாம் கூடியிங்கேக்
கொஞ்சுவதைக் காணுகையில்
கொக்கைப்போல் என்னுள்ளம்
#கொக்கோகம் கூவுதடி!

✍️செ. இராசா

பட உதவி: திரு Riaz Ahamed அவர்கள், மிகச் சிறந்த ஒளிப்படச் சிற்பி

#கொக்கோகம்- இன்பத்துப்பாலில் அதிவீர ராம பாண்டியன் எழுதிய நூல்
— with Riaz Ahamed.

#கடவுள்_என்னும்_பலூன்_காரனே



காற்றை சிறைபிடித்து
கயிற்றிலே கட்டிவிட்டு
கயிற்றின் மறு நுனியை
கையோடு வைத்தவனே!

உயரத்தில் பறப்பதுபோல்
உருவத்தை வடிவமைத்து
ஒவ்வொரு நிறத்தையுமே
உலவவிட்டு ரசிப்பவனே!

வெளியே இருப்பதையே
உள்ளே அடைத்துவிட்டு
ஊதிய காற்றிற்கு
ஊதியங்கள் கேட்பவனே!

மேனியில் ஓட்டையெனில்
மூச்சை வெளியேற்றி
சூக்கும உடலுக்கு
சுதந்திரம் அளிப்பவனே!

கிழிந்த தேகத்தைக்
குப்பையிலே எரிந்துவிட்டு
புதிய உடலுக்குள்
புது மூச்சு தருபவனே..!!!

நீ பெரிய விற்பனனே....!!!

#கடவுள்_என்னும்_பலூன்_கார
னே

25/03/2019

#அன்னைத்_தமிழ்_யாசகனாய்_நான்



அன்பு பெருக்கெடுக்க
ஆசை ஊற்றெடுக்க
இன்பம் கூடிவர
ஈரம் கண்ணில் வர
உள்ளம் உருகி நிற்க
ஊமையாய்த் திகைத்து நிற்க
என்னை மயங்க வைத்து
ஏகனை மறக்க வைத்து
ஐந்து இந்திரியத்தை
ஒன்றில் உணர வைத்து
ஓங்கிச் சொன்னாயே?!-உன்
ஔதாரியம் புரியலையே...
அஃதே நீயென்று
அன்றைக்குத் தெரியலையே

அத்தனை அலட்சியமாய்
எப்படி நானிருந்தேன்?!!

சிந்திய பூக்களை எல்லாம்
சேமிக்க மறந்தேனே...
எடுத்த மலர்களை எல்லாம்
தொடுக்க மறந்தேனே....
தொடுத்த மாலை எல்லாம்
தொலைத்தும் விட்டேனே...

நான் செய்த அலட்சியத்தால்
நீ என்னை மறந்தாயோ?!!

#அன்னைத்_தமிழ்_யாசகனாய்_நான்

✍️செ. இராசா

வருந்தும் பாவை


இருபது விரல்களும்
..இணைந்தே இருந்திட
....இமைகள் நான்கும்
......இருளிலே மூழ்கிட
........இதயங்கள் இரண்டும்
❤️.....இடவலம் துடித்திட
❤️....இடைவெளி இன்றியே
.......இன்னிசை முழங்கிட
......நாசிகள் இரண்டும்
....நர்த்தனம் புரிந்திட
..வாசித்த கவிதையில்
வசந்தம் வந்திட
இருந்தது எல்லாம் கனவென்றால்
இருக்கிற வாழ்வும் கனவன்றோ?!

✍️செ. இராசா

(தமிழ்ச்சோலை தலைப்பிற்கு எழுதியது

கவிதை

வெறும் சொற்களின் அலங்காரமல்ல
உணர்ச்சிகளின் ஓவியமே
கவிதை ✍️

24/03/2019

நல்ல வி(த்)தை



கிடைக்கும் இடங்களில்
வேகமாய்த் துளிர்க்கிறது
நல்ல வி(த்)தை

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!- வெண்பா_8


சோதனை நாயகா! சூழ்நிலைக் காவலா!
வேதனை தாண்டிய வித்தக சோதரா!
ஓடியே வந்திடும் உண்மையின் காதலா!
பாடினேன் நானொரு பா!

**********^^^
கவிதையாய் இல்லாமல், கொஞ்சம் பழைய அந்த எதார்த்த வரிகளில் உன்னோடு
சில நினைவுகளை அசை போடுகிறேன் நண்பா இங்கே....
******************************

முதல் சந்திப்பு....
எட்டாம் வகுப்பு
ஒக்கூர் பள்ளி
எப்போதும் சண்டை
அப்போதும் நட்பு
முட்டாள் ராசா நாடகத்தில்
முட்டாள் ராசாவாய் நான்
பேட்மிட்டன் ஆட்டத்தில்
ஆட்ட நாயகனாய் நீ
தெக்கூர் பிரிவில் எழுதிய முதல் மடல்
பிள்ளையார்பட்டிக்கு போன டூர்
அம்மாவின் திருக்கை மீன் குழம்பு
50 காசுக்கு அரைபக்கத் தத்துவம்
அப்பா தயவில் பொறிஞராய் நான்
உந்தன் முயற்சியில் ஆசிரியராய் நீ
அம்மாவின் இழப்பு
அடுத்தடுத்த இடிகள்
.....
நீயும் நானும்
மாறி மாறி ஓடியது
இன்னும் ஓடுவது
சோகமும் துக்கமும்
மாறி மாறி துரத்தியது....
இன்னும் துரத்துவது
என்ன ஆனாலும்...
என்ன வந்தாலும்...
அந்தப் புன்னகை
அதுதான் நண்பா உன் நகை
அதுதான் நண்பா பொன் நகை
போதும்டா...அது போதும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா!

23/03/2019

தீராதிரு நினைவே (பாடல்)


தீராதிரு நினைவேத் தீராதிரு- ஞானத்
தீயாயிரு நினைவேத் தீயாயிரு!

யாரென்ன சொன்னாலும் குற்றம் இல்லை
யாரிங்கே போனாலும் நட்டம் இல்லை
ஞாலத்தின் பார்வைக்கு எங்கே எல்லை?!
ஞானத்தின் பார்வைக்கு அன்பே எல்லை!

வாடாதிரு மனமே வாடாதிரு- நீ
கூடாதிரு சினமே கூடாதிரு!

நிர்வாண நிஜமாக மண்ணில் வந்தோம்
நிஜமான நிர்வாணம் எங்கே கண்டோம்?!
கண்மூடிக் கனவாகக் கண்ணில் கண்டோம்
கண்மூடும் முன்னாலே எங்கே சென்றோம்?

✍️செ. இராசா

தலைப்பு: திரு. மோகனன் அவர்கள்

பின்னூட்ட வெண்பா (6 & 7)--கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் & கவிஞர் அகன்

கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் அப்பா அவர்களின் அழகிய இரட்டைக்கிளவிக் கவிதைக்கு அளித்த பின்னூட்ட வெண்பா

(1)
இரட்டைக் கிளவியின் இன்பம் இனிதே
இரட்டை இடியில் இனிக்கும்- சரமாய்
வரட்டும் கவிகள் வரட்டும் கவியே
விரட்டும் கவியில் மிரட்டு!


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கவிஞர் அகன் மாமாவின் அழகிய இன்னிசை வெண்பாவிற்கு வழங்கிய பின்னூட்ட வெண்பா

(2)
ஆடிய ஆட்டத்தில் அங்கங் குலுங்கிடக்
கூடிய கூட்டத்தைக் கொற்றவன் கண்டிட
ஊடிய நாட்களை உள்ளத்தில் எண்ணிட
பாடினான் கூடலின் பாட்டு!

✍️செ.இராசா
(பெரிய இரண்டு கவிஞர்களோடு என் இரு கவிக்குழந்தைகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.)

22/03/2019

படைப்பாளியின் வாகனம்
இரசனை என்னும் எரிபொருளில்தான் ஓடுகிறது
✍️
சாக்லேட் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?

தெரியுமே.....
தீந்து போயிடும்

நக்கீரர் ---.இது அரசியல் பதிவே...


(தம்பி Ramesh Devar கொடுத்த சூழ்நிலையை உள்வாங்கி படைத்த படைப்பு...இது அரசியல் பதிவே...)

சிவன் (புலவர் வடிவில்)
********************
கொற்றவன் கொடுக்கிற
பொற்கிழிப் பையினை
தட்டித் தடுக்கிற
தற்குறி யாரிங்கே?

கற்றவன் மூளையைக்
கற்பனை என்றே
நக்கலாய்ப் பேசிய
நக்கீரன் யாரிங்கே?!

பாண்டிய மன்னன்
*****************
எந்தமிழ் நாட்டின்
செந்தமிழ்ப் பேரவை
எந்தமிழ் அன்னையின்
சங்கத் தலைவனை
ஒருமையில் பேசுதல்
பெருமை இல்லை...
பொறுமை தேவனே..
பொறுமை பொறுமை

நக்கீரர்
*******
தருமியின் திட்டம்
தவறுள்ள திட்டம்
உட்பொருள் பிழைகளை
உரைக்கிறேன் கேளும்..

வைகை அணையின்
வளத்தைக் காக்க
தெர்மாக் கோலில்
தீட்டிய திட்டம்
முற்றும் தவறென
முழங்கிச் சொன்னேன்!

குனிந்தோர் இங்கே
குறைவின்றி இருக்க
குனிந்து வணங்கும்
கூவத்தூர் திட்டம்
கொடுஞ் செயலென்றே
கோடிட்டு சொன்னேன்!

கோடிக் கணக்கில்
கேடியாய் அடிக்கும்
அப்பல்லோ இட்லியை
தப்பெனச் சொன்னேன்!

கொட்டத்தை அடக்க
கோட்டைக்கு சென்றோன்
சட்டையைக் கிழிக்கும்
சண்டியர் திட்டத்தை
ஆக...ஆக......
அதையும் சொன்னேன்!

எல்லாக் காசும்
செல்லாப் போக
ஒரே நாளில்
உருவும் திட்டத்தை
அதையும் தானே
அழுத்திச் சொன்னேன்!

அவனும் இவனும்
இவனும் அவனும்
மாறி மாறியே அடிக்கிற திட்டம்
மாற்றிட நானும்
வேகமாய்ச் சொன்னேன்!

இத்தனை ஓட்டைகள்
இருக்கிற திட்டத்தை
எப்படிச் சரியென
எவரிங்கே சொல்வார்?!!

(சிவனின் நெற்றிக்கண் திறக்கிறது)

ஊடகக்கண்ணால்
ஊரை எரித்தாலும்
சினிமாக் கண்ணால்
சீரழிவு தந்தாலும்
ஆயிரம் முறைநான்
அடித்துச் சொல்வேன்

நெற்றிக் கண் திறப்பினும்
குற்றம் குற்றமே...

முடிவு
******
முகநூலில் விருப்போடு
அகநூலில் சிரிப்போடு
கனவு கலைகிறது.....
நினைவைச் சுமந்தபடி..

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

கடற்கரையில் கால் இடறிய அக்கணம் என்னங்க...என்றாள்!
“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்றானவன்! (அவனை உடனே உள்ளே தள்ளிவிட்டாள்😃😃)
இளமையை மறைக்க
போட்டி நடக்கிறது
முடிகளின் ஊடே...
✍️

#தேநீர்_தியானம்_3




ஒன்றோடு ஒன்று கூடினால்
சந்தோசம் என்கிறார்கள்...
ஆம்..
கூடலில் தானே கூடுகிறது
புவியுலகின்
புது வருகை...

இங்கே
கூடக்கூடத்தான் சந்தோசம்

பணம் கூட
பதவி கூட
உதவி கூட
உயரம் கூட
உறவு கூட
உடுப்பு கூட
.......
இப்படி இன்னும்
கூடக்கூடத்தான் சந்தோசம்

எனில்
கழித்தல் துக்கமா?!!
யார் சொன்னார்கள்?!
அடக்கியவனுக்குத் தானே தெரியும்
ஆனந்தக் களி(ழி)ப்பு

செல்வந்தனுக்குத் தானே தெரியும்
செலவின் களி(ழி)ப்பு

ஏறும் படிக்கட்டைவிட
இறங்கும் சருக்கலில்தானே
ஆனந்தம்...
சந்தேகமெனில்
குழந்தையாய்மாறி
பூங்கா செல்லுங்கள்

ஏற்றும் சரக்கைவிட
இறக்கும் போதையில்தானே
சந்தோசம்
சந்தேகமெனில்,
என்னது சந்தேகமா?!!
மன்னிக்கவும்....

உண்மையில் கழித்தல் இன்பமானதே?
ஆனால்
உயிர்களின் கழித்தல் துன்பமாயிற்றே?!

இதையெல்லாம்
நாளைய பிணங்கள் சொல்லக்கூடாது
முன்னால் உயிர்களே சொல்ல வேண்டும்

உண்மையில்
கூட்டலையும் கழித்தலையும்
சமமாய்ப் புரிந்தவர்களே
சமாதியாய் ஆகிறார்கள்...
ஆம்..
ஆதிக்கு சமம் ஆகிறார்கள்

#தேநீர்_தியானம்_3

✍️செ.இராசா

#கண்ணன்_என்_மன்னன்




இசையோடு இசையாக
இசை(க்)கின்ற போதே-இவன்
இடையாட்டி இடையாட்டி
இடரோட்டும் இடையன்!

குயிலோடு குயிலாக
குழலூதிக் கொண்டே-இவன்
நகையோடு உறவாடி
பகையோட்டும் மன்னன்!

கவியோடு கவியாக
கவிபாடிக் கொண்டே-இவன்
குடைநீட்டி குணங்காட்டி
குடிகாக்கும் கண்ணன்!

#கண்ணன்_என்_மன்னன்

21/03/2019

நல்லோர்க்கும் உண்டு

சொல்லாத பக்கங்கள்
எல்லோர்க்கும் உண்டு..
பொல்லாத விடயங்கள்
நல்லோர்க்கும் உண்டு..✍️

வரிக் கொள்(கை)ளை

கொஞ்சமாய் உருவினால்
தெரியாதெனத் தொடர்கிறது
வரிக் கொள்(கை)ளை

20/03/2019

#தேநீர்_தியானம்


இதழ்கள் ஸ்பரிசிக்கும்
அந்த கணங்களில்
இமைகள் மௌனிப்பது
ஏன் தெரியுமா?!

அந்த இதமான மென்சூடு
இதழ்களுக்குத் தானாம்..
அது.....கண்படக்கூடாதாம்...
#தேநீர்_தியானம்

✍️செ. இராசா

#முகவரிகள்



(1)
முதுமை கூடக்கூட
வேகமாய்க் கூடுகிறது
#முகவரிகள்

(2)
அன்பின் முகவரிகள்
அழுத்தமாய்த் தெரிகிறது
#முதியோர்_இல்லங்களில்

(3)
செரித்ததை எடுத்து
அசைபோட நினைக்கிறது
#முதுமை

விதியென்று சொல்லலாமா?!!



தூவுகின்ற வித்தெல்லாம்
துளிர்விட்டு எழுவதில்லை

விழுகின்ற விதையெல்லாம்
விருட்சமாய் வருவதில்லை

மழைமேக நீரெல்லாம்
முத்தாய்ப் பிறப்பதில்லை

படைக்கின்ற படைப்பெல்லாம்
படியேற முடிவதில்லை

வீரியங்கள் மிகுந்தாலும்
விரையமாய்ப் போவதை
விதியென்று சொல்லலாமா?!!

#தேநீர்_தியானம்_2




ஒவ்வொரு தேனீர் கோப்பையும்
ஒவ்வொரு கவிதையே...
அது ருசிப்பவனை
ஏதோ ஒன்று செய்வதால்...

பெரும்பாலும்
தர நிர்ணயங்களில்
தரும் கரங்களும் சேர்ந்து விடுகிறது

இங்கே
அனைத்து ருசிகளுக்கும்
ஆட்கள் இருப்பதால்
கொடுத்ததையே கொடுக்க
கோப்பைகளேகூட விரும்புவதில்லை..

சில சமயங்களில்
சூடு அதிகமாகும் போது
விமர்சன நாக்குகளில்
விருந்தாகி விடுகிறது.....

சில சமயங்களில்
சூடு குறையும் போது
விலக்கும் தீர்மானத்தை
விரல்களே எடுத்து விடுகிறது..

இதில்
இனிப்பின் அளவீடுதான்
இன்னும் தடுமாறுகிறது...
எது சரியென்று தெரியாமல்!!!

19/03/2019

அடங்க மறு! திருப்பி அடி!



அடங்க மறு! திருப்பி அடி!
ஆனால் எப்படி?

இரயிலில் இறக்கியவனை
இந்தியாவைவிட்டே இறக்கினாரே
காந்தி....அது அடி?

மரண வண்டியில் இறக்கியோரை
அரசியலைவிட்டே இறக்கினாரே
அம்மையார்....அது அடி?

பாகிஸ்தான் வாலை
பங்களாதேசில் அறுத்தாரே
இந்திரா காந்தி.....அது அடி?!

தோல்வியே இல்லாமல்
தொடர்ந்து அடித்தாரே
கலைஞர்....அது அடி?!

வாக்கில் அடித்தவரை
வாங்கி அடித்தாரே
கவியரசர்....அது அடி?

நக்கல் பந்துகளை
சிக்சரில் வதைத்தாரே
சச்சின்...,,அது அடி?

அமெரிக்க நாட்டையே
அதிர வைத்தாரே
சே குவேரா.... அது அடி?!

கடைசி நிமிடம்வரை
களத்தில் அடித்தாரே
மாவீரர்..... அது அடி?!

இன்னா செய்தார்க்கும்
நன்னயம் செய்தாரே
காமராசர்.........அது பெரிய அடி!

அடி..
அடிக்கும் நேரத்தில்
சரியாய் அடி....
அந்த நேரமே
உனக்கான படி...

அடி...
திருப்பி அடி
ஒரே....விரலில் ஓங்கி அடி....
அந்த அடியே
அதிகாரத்தை ஆட்டும் அடி...
https://youtu.be/m7xNqV7wh_o
#அடங்க_மறு_திருப்பி_அடி

இன்னும் #மனித_நேயம் மலரலையே...

மெதுவாய்ப் பேசினால் மிதவாதி!
வேகமாய்ப் பேசினால் தீவிரவாதி!
மதத்தைப் பேசினால் மதவாதி!
மறுத்து பேசினால் குழப்பவாதி!

இல்லை என்றால் நாத்திகவாதி!
இருக்கு என்றால் ஆத்திகவாதி!
இரண்டு என்றால் த்வைதவாதி
ஒன்றே என்றால் அத்வைதவாதி!

அளந்து பேசினால் சிந்தனைவாதி!
அள்ளி விட்டால் அரசியல்வாதி!
பழமை பேசினால் இலக்கியவாதி!
புதுமை பேசினால் புரட்சிவாதி!

தன்னலம் பேசினால் சுயநலவாதி!
தன்னினம் பேசினால் பிரிவினைவாதி!
உள்ளதைப் பேசினால் சத்யவாதி!
உரிமையைப் பேசினால் கம்யூனிசவாதி!

இத்தனை வாதிகள் மத்தியிலும்
இங்கே மனிதவாதிகள் தோன்றலையோ?

இன்னும் #மனித_நேயம் மலரலையே...
***********************************************
தலைப்பு: Ganesh Kannan நண்பர், திருச்சி பட்டிமன்ற நடுவர் மற்றும் இசைப்பள்ளி பேராசிரியர்

மாதவ ஹைக்கூ

மூன்றாம் அடியிலே//
ஓங்கி அடிக்கிறது//
மாதவ ஹைக்கூ//

(இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி-வெண்பா_5



இல்லையென்று சொல்லா இளவலே; அன்பினை
எல்லையிட்டு தள்ளா இளைஞனே- எல்லோரும்
இன்றைக்கு வாழ்த்தும் இனிதான நன்னாளில்
என்றைக்கும் வாழ்த்துவேன் நான்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி!!!
— with Sri Vinoth Kannan.

18/03/2019

கல்வியின் பயன் (குறளின் குரலாய்)


கற்கா காலம் கற்காலம்!
கற்ற காலம் தற்காலம்!
அறிவில் சிறந்தது எக்காலம்?
அறிவின் உயர்வே பொற்காலம்!


கற்றதில் வருவது
...........அறிவென்றால்-உயர்
அறிவில் நிற்பது அறமாகும்!

அறத்தின் உச்சம்
...........அன்பென்றால்- உயர்
அன்பின் உச்சம் அருளாகும்!

அருளில் பெருவது
............துறவென்றால்-உயர்
அருளால் உணர்வது இறையாகும்!

✍️செ. இராசா

17/03/2019

உப்பு அதிகமென்று//
எப்போதும் சொல்வதில்லை//
கடல் மீன்கள்!
(நல்ல கணவன்களும்...)✍️

வாழ்க பூனையாரே...



கண்ட இடம் சொர்க்கமென
கண்மூடி உறங்குகின்றாய்.
சொந்த இடக் கவலையின்றி
சுகமாக இருக்கின்றாய்..

எப்போது தேவையோ
அப்போதே கொள்(ல்)கின்றாய்
குப்பையில் பிறந்தாலும்
குபேரனாய் வாழ்கின்றாய்..

வாழ்க பூனையாரே...

16/03/2019

மரு வைத்த MGR கதைகள்

நிறம் மாற்றி வந்து ஏமாற்றிய நரி கதை சொன்னால்...உருவத்தைப் பார்த்து ஏன் அடையாளம் கொள்ளவில்லை என்கிறாள் மகள். அவளுக்குத் தெரியுமா வெறும் மரு வைத்த MGR கதைகள்

பாலில் மறைந்த நெய்யைப்போல்



பாலில் மறைந்த நெய்யைப்போல்- உயர்
பாலில் உறையும் தாய்மையன்றோ?!

மதியில் இருண்ட பகுதியைப்போல்- சிறு
மதியில் இருளும் ஞானமன்றோ?

கவியில் களிக்கும் கவிஞனைப்போல்- நான்
கவியில் கவிழும் கிறுக்கனன்றோ?

✍️செ. இராசா

(மடியில் நண்பரின் குழந்தை பெயர் தாரீகன்)

15/03/2019

#அரசியல்_பழகு




என்ன பேசி என்ன ஆகும்
எனக்கு ஒன்னும் புரியல!
வெண்ணை நாயம் பேசிப்பேசி
என்ன ஆகும் தெரியல!

எந்த ஆட்சி நல்ல ஆட்சி
எதுவும் இங்கே சரியில்ல!
ஒன்னு போயி ஒன்னு வந்து
ஒன்னும் இங்கே நடக்கல!

மாறி மாறி ஓட்டுப் போட்டும்
மாற்றம் மட்டும் வரவில்லை!
மாறி மாறி ஆண்ட போதும்
மாற்றிக் கொள்ள நினைக்கல!

வெள்ளைக் காரன் போன போதும்
கொள்ளை குணம் போகல..!
என்ன சொல்லி என்ன செய்ய
எங்க மக்கள் திருந்தல..!

கையக்கட்டி காலில் விழும்
அடிமைக் குணம் போகல...
திராவிடன்னா என்ன வென்று
சரியா நமக்கு சொல்லல?!

✍️செ. இராசா

குறிப்பு:

சொற்களில் உள்ளது சூட்சமம் தமிழா விழித்தெழு...சொற்களைப் கொண்டே ஆள்கிறார்கள்...

தமிழ்- திராவிடம்
கட்டபொம்மன்- கட்டபொம்முலு
பாளையத்துக்காரர்- தெலுங்கர்

(தமிழ்த்தாய் வாழ்த்தில்கூட முக்கியமான வரிகள் நீக்கப்பட்டுள்ளது)

.......இப்படி மாற்றி மாற்றி ஏன் சொன்னார்கள்?

பிரித்துப்பார்ப்பது தமிழனின் குணமல்ல. அனைத்து உறவுகளும் நம் சகோதர உறவுகளே. ஆனால், வரலாற்றை திட்டமிட்டு மறைப்பது குற்றமே. தமிழனின் உயரத்தைச் சொன்னவர்கள், தமிழனின் அரசியல் வீழ்ச்சியை மறைத்த காரணம் என்ன?!
வீழ்த்தியவர்கள் தமிழரல்லாதவர்கள் என்பதாலா?!!

சிந்திப்போம்....

#அரசியல்_பழகு

இனிய திருமணநாள் வாழ்த்துகள்!--சந்திரா_வெண்பா_4



அன்பின் உறவாய் அனைவரின் நண்பனாய்
என்றும் தமிழ்போல் எழிலுறும்- சந்திரா
உண்மை குணத்தால் உயர்கிற உங்களை
உண்மையில் போற்றும் உலகு!

வாழ்க பல்லாண்டு!
இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

14/03/2019

காமத்தினைக் காதலென்று எண்ணாதே

காமத்தினைக் காதலென்று எண்ணாதே
காதலினைக் காயத்திலே தள்ளாதே

தவறுகள் செய்திடவா
தரணியில் பிறந்து வந்தாய்
வலையிலே வீழ்த்திடவா
வலைத்தள தூது விட்டாய்


மலரினை நசுக்கிட வா
மதியிலே மது உண்டாய்
சிறகினை ஒடித்திடவா
சிரத்திலே விசம் கொண்டாய்

நிர்மூலம் ஆக்கிடவா
நீ எனைக் காதலித்தாய்
விரலிலே தீண்டிடவா
விழியிலே தூண்டிலிட்டாய்

✍️செ. இராசா

#காமத்தினைக்_காதலென்று
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/YGocVG8hBzc

ஆமாம் கார் பாழாயிடும்

தங்கையைப் பார்த்து “பாலை எடுத்து காரில் ஏறாதே கார் பாலாயிடும்” என்றான் மகன்....நானும் “ஆமாம் கார் பாழாயிடும்” என்றேன்!
//சிலேடை//

கட்டிடப் பொறிஞர் கவிதை

சிக்கிடும் கருவினை யெடுத்து
சிக்கனச் சொற்களில் செதுக்கி
கற்பனைக் கலவையில் இணைத்து
கட்டிடும் கோட்டையே கவிதை

 ✍️கட்டிடப் பொறிஞர்😊😊😊

13/03/2019

பாப்பா பாப்பா வா பாப்பா




பாப்பா பாப்பா வா பாப்பா-இப்
பாட்டின் சங்கதி நீதான்பா!

காற்றில் பறக்க வா பாப்பா- இந்தக்
காணொளி எல்லாம் விடு பாப்பா!

நட்பில் கவனம் கொள் பாப்பா- சிலர்
தப்பாய்த் தெரிந்தால் சொல் பாப்பா!

அறிவியல் ஹார்மோன் படி பாப்பா- அதை
அறிந்து தெளிந்து நட பாப்பா!

பொய்யும் மெய்யும் மிகை பாப்பா!- அதில்
பொய்யைக் காலால் மிதி பாப்பா

#கற்றது_கையளவு_3


முகநூலில் எழுதுகின்ற நிறையபேர் சொல்வார்கள். நான் என் மன திருப்திக்காகத்தான் எழுதுகின்றேன், எனக்கு likes, comments எல்லாம் முக்கியமில்லை என்று. எனக்கென்னவோ இந்தக் கூற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், யாருமே நம் பதிவை பார்க்க அவசியம் இல்லையெனில் நாம் வீட்டில் ஏதாவது ஒரு காகிதத்தில் அல்லவா எழுதி வைத்திருக்க வேண்டும். மேலும், like என்பது விருப்பக்குறியீடாக மட்டும் பார்க்கத் தேவையில்லை, நம் பதிவை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களே என்ற ஒரு வருகை பதிவேட்டு கணக்காகவும் எடுத்துக் கொள்ளலாம்.


இங்கே தங்கள் பதிவுகள் அனைவரையும் சென்றடைகிறதா இல்லையா எனத் தெரியாமலே பலரும் விரக்தி அடைவதைக் காண்கின்றோம். சிலபல எரிச்சல் ஊட்டும் பதிவுகளையும் காண்கிறோம். முகநூலில் பயணிக்கும் நாம் முகநூல் பற்றி முழுமையாகத் தெரிந்திருக்கிறோமா என்றால் இல்லையென்றே நினைக்கிறேன்.

எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் சுருக்கமாகப் பகிர நினைக்கின்றேன். உங்களுக்கு உதவுமெனில் எனக்கும் மகிழ்ச்சியே.

1. நல்ல பதிவுகளை வாழ்த்த நினைக்கிறோம். ஆனால் வாழ்த்தியபிறகு மற்றவர்கள் போடும் comments ஆல் நமக்கு ஒரே notifications தொந்தரவாக இருப்பதால் பலரும் பின்னூட்டம் கொடுக்கவே யோசிப்பது உண்டு. நல்ல பதிவை வாழ்த்தவும் வேண்டும் அதே சமயத்தில் தொந்தரவும் கூடாது, என்ன செய்வது? இதோ தீர்வு: அந்தப் பதிவின் மூலையில் வைத்து click செய்தால் “Turn off notifications for this post” என்று வரும். அதைத் தொட்டால் போதும். பிறகு தொந்தரவு இல்லை.

2. ஒரு சிலரின் பதிவுகள் மிகவும் எரிச்சலடைய வைக்கிறது. ஆனால் அவர் நட்பில் வேண்டும் இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள் அவ்வளவு தானே?! இதோ தீர்வு: அவருடைய ஏதாவது ஒரு பதிவில், அப்பதிவு வந்த இடத்தின் மூலையில் “Snooze” என்பதை எவ்வளவு காலம் வேண்டுமோ அந்த அடிப்படையில் click செய்யுங்கள். Follow off ம் செய்யலாம்.

3. அதிகத் தொந்தரவு எனில் “unfriend” செய்யுங்கள். அந்த நபர் உங்கள் பதிவைத் திருடுபவரா “Block” செய்துவிடுங்கள். வேறு வழியே இல்லை.

4. அடிக்கடி பலரும் தங்கள் படத்தைப்போட்டு எழுதுவார்கள். ஏன் தெரியுமா?! தங்கள் படங்களை முகநூல் நன்றாக அறியும் (முகப்பில் இருந்து எடுத்துக்கொள்ளும்) அதிக நபர்களுக்கு அப்பதிவுகள் போய்ச்சேரும். அதற்காக அடிக்கடி போட்டாலும் எரிச்சலே அடைய வைக்கும்.😊😊😊(நீங்க மட்டும் என்னவாம்...?!! சரி சரி ...விடுங்க)

5. Share பதிவுகள் அதிகமாகப் போகாது.

6. மற்ற யூடியூப் (இதை ஆங்கிலத்தில் எழுதாதற்கும் காரணம் உண்டு) share களும் அதிகமாகப் போகாது. ஆனால், முகநூல் காணொளிகள் போகும்.

7. Status மாதிரி இரண்டு மூன்று வரிகளில் எழுதுவது பார்வைக்கு போகும்.

8. மேலும், நீங்கள் யாரை அடிக்கடி பார்க்கின்றீர்களோ, like செய்கிறீர்களோ, அவர்களுக்கேப் பதிவுகள் அதிகமாகப் பார்வையில்படும். (இனிமேல் ச்சும்மா திட்டாதீங்கப்பா)

9. உங்களை யாராவது tag செய்தால் ஒன்று நீக்கலாம் இல்லையேல் தங்கள் Time lineல் அந்தப் பதிவை Hide செய்யலாம்.

இது சில தகவல்கள் மட்டுமே... அனைத்துமே இப்போது வியாபார நோக்கில் செயல்படுகிறது உறவுகளே. அதை அடுத்த பதிவில் தருகின்றேன்.

ஆகவே, அன்பார்ந்த மக்களே.. முகநூல் என்கிற மாயையின் பிம்பத்தைப் புரிந்து அதைப் பயனுள்ள முறையில் கையால்வோம் என்று நன்றி கூறி விடைபெறுகின்றேன் நன்றி.

(முகநூலும் தன் முகத்தை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறான். நாமும் மாறத்தான் வேண்டும். இல்லையேல் மாரத்தானில் காணாமல் போவோம்.

மாற்றம் ஒன்றே மாறாதது)

✍️செ. இராசா