29/12/2021

ஆதி வந்தான்



 

அவனும் அவனின் ஏழு வயது மகனும் அவ்வளவு பாசமாக இருப்பார்கள். அவன் மகன் கேட்கும் அத்தனை விடயங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கின்ற தந்தையாகவே அவன் இருந்தான். ஆயினும் அவன் மகன் விரும்பிக் கேட்ட ஒரு நாய்க்குட்டியை மட்டும் அவனால் வாங்கித்தர முடியவில்லை. அதுதான் அவன் மகனுக்கு ஒரே ஏக்கமாக இருந்தது.

அவனும் விடுவதாக இல்லை. தன் மகனின் ஏக்கத்தைப்போக்கத் தெருத்தெருவாய் அலைந்தான். தெருமுக்கில் எதேச்சையாக ஒரு நாய்க்குட்டி வந்ததைக் கவனித்து அதைத்தூக்கிவந்தான். ஆனால் அவனின் தாயார் அதைப் பெட்டைநாயென்று சொல்லி நிராகரித்துவிட்டார்கள். எந்த நாயாய் இருந்தாலென்ன என்று எவ்வளவோ சொல்லியும் பெண்நாயை ஏற்கத் தயாராக இல்லை. மிகுந்த மனவருத்ததில் நாட்கள் நகர்ந்தது.

கார்த்திகை 1 ஆம்தேதி அவன் தன் மகனுக்கு மாலை போட்டுவிட்டு தானும் ஐயப்பனுக்காக விரதமிருந்தார். அப்போதும்கூட அவனும் அவன் மகனும் தெருவெங்கும் நாய்க்குட்டி தேடினார்கள். விரதமிருந்து ஐயப்பன் கோவில் சென்று மலையிறங்கி வரும்போது அவர்கள்கூட வந்த ஒருவர் அவனிடம் யார் யார் என்னென்ன வேண்டீனீர்கள் என்று விளையாட்டாகக் கேட்டார். அப்போது அவன் தான் தன் மைந்தனை ஐயப்பனிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அவன் மகனோ தனக்கோர் நாய்க்குட்டி வேண்டுமென்று இறைவனிடம் வேண்டியதாகக் கூறினான். இதைக்கேட்ட அவனின் மனது மிகவும் வாடியது

மலையிறங்கி வந்ததுமே எங்கெங்கோ தேடினான். முடிவில் ஒரு நாய்க்குட்டி கிடைத்தே விட்டது. அதைக்கண்ட உடனேயே அவனும் அவன் மைந்தனும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். என்ன பெயர் வைக்கலாமென்று அப்பா கேட்டார். மகனோ தன் செல்ல நாய்க்குட்டிக்கு "பெவி" என்று சொன்னான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெயர்க்காரணம் கேட்டான். அது ஆங்கிலப் பெயராமாம் அர்த்தமெல்லாம் இல்லையாமாம். ஏற்கெனவே தன் அன்பு மகனுக்கு வேற்றுமொழி வைத்த குற்றவுணர்வோடு இருந்த அப்பா இம்முறை தன் மகன் வைத்த பெயரை மறுதலித்து "ஆதி" என்று தமிழ்ப் பெயர்சூட்டினார். அதை மறுக்காமல் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இப்போதுமுதல் அவர்களின் குடும்பத்தில் ஆதியும் ஒருவனாய் வலம்வருகிறான்...

✍️செ. இராசா



கரையின் காதல் ----------கடலோரக் கவிதை



உன் விரல்கள் மீட்டுகின்ற வாத்தியம் நான்!
உன் சுவாசம் மோதுகின்ற நாசியும் நான்!
உன் நகவரிகள் வாசிக்கும் வாசகன் நான்!
உன் கழிவுகளை ஏற்கின்ற யாசகனும் நான்!
உன் இரசிகர்கள் அமர்கின்ற இருக்கை நான்!
உனைத் தழுவ விரிந்துள்ள இரு-கை நான்!
உன்னிலே ஏற்றிவிடும் ஏணிப்படி நான்!
உன்னிடம் கேட்டதில்லை ஏனிப்படி நான்?

✍️செ. இராசா

27/12/2021

மதுரை காந்தி அருங்காட்சியகம்

 







இன்று காலை சென்னையில் இருந்து காரைக்குடி வந்தவுடன், மனைவிக்கு மாத்திரை வாங்க மதுரை வரவேண்டிய வேலை இருந்தது. பெரும்பாலும் மருத்துவமனை சென்றால் பிள்ளைகளை அழைத்துச்செல்வதில்லை என்பதால் நண்பர் சிவாவை அழைத்துக்கொண்டு பயணமானோம். மதுரை மீனாட்சி மிஷனில் மனைவியை இறக்கிவிட்டு காத்திருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உடனே நம்ம காந்தி மியூசியம் போகலாம் என்கின்ற யோசனை வந்தது. ஏற்கனவே சிறுவயதில் போயிருந்தாலும் இப்போது போனபோதுதான் தெரிந்தது பல விடயங்கள். அங்கேநான் கவனித்த முக்கியமானவற்றை மட்டும் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறேன்.
 
1. மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற போது அவர் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த ஆடை வேறு எங்குமே இல்லாமல் மதுரை மியூசியத்தில் இருப்பது இக்காட்சியகத்தின் கூடுதல் சிறப்பு. அதைக் கண்டவுடனேயே கட்டாயம் உங்களுக்கு(ம்) மெய்சிலிர்க்கும் என்பதை அடித்துச் சொல்வேன்.
 
2. அவர் குண்டடிப்பட்டு மரணிப்பதற்கு முதல் நாள் பேசிய வாசகமும் அதே அறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அந்த வாசகம் உணர்த்துகிறது.
"சுடப்பட்டு நான் மரணமடைய நேர்ந்தால் முணுமுணுக்காமல் குண்டடியை ஏற்று இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே உயிர்நீக்க வேண்டும். அப்போதுதான் என்னுடைய குறிக்கோளுக்கேற்ப வாழ்ந்தவனாவேன்."
அவர் முதல் நாள் கூறியதுபோலவே குண்டடிபட்டதும் "ஹே ராம்" என்று கூறியே மரணித்தார் என்பதும் நாம் அறிந்ததே.
 
3. கட்டபொம்மன் கதையை எப்படி மாற்றிப் படம் எடுத்துள்ளார்கள் என்பது இங்கே உள்ளக் கல்வெட்டில் புலனாகிறது. அதாவது கட்டபொம்மனை 23 நாட்கள் அலையவிட்டபின்பே காலின் ஜாக்சன் இராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார். படத்தில் உள்ள வீராவேசம் எல்லாம் சும்மா டுபாக்கூர் என்பதை அறியலாம். மேலும், புதுக்கோட்டை மன்னரின் சூழ்ச்சியால்தான் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று கல்வெட்டு கூறுகிறது. அப்ப எட்டப்பன் யார்?. (கட்டபொம்முலு என்பவரே தெலுங்கர் என்பதை அறியாதத் தமிழர்களும் இங்கே உண்டுதானே?!) இதுபோல் நிறைய கல்வெட்டுக்கள் உள்ளன.
 
4. தமிழ்நாட்டுப் பொருட்கள் வைத்த ஒரு இடத்தில் ஐயனார் சிலைகள் இருந்தன. அதில் ஒரு ஐயனார் ஐயப்ப வடிவத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. (குறிப்பு: இருவரும் ஒருவரே என்று நான் முன்பே இதுபற்றி ஒரு கட்டுரை பதிவிட்டுள்ளேன்)
 
5. இந்தக் கட்டிடம் எத்தனைப்பேரிடமிருந்து கைமாறி கைமாறி இப்போது அருங்காட்சியகமாக வந்துள்ளது என்கின்ற வரலாறே பிரம்மிக்க வைக்கிறது.
 
6. காந்தி அஸ்தி கரைக்கப்பட்ட இடங்களை ஒரு வரைபடம் காண்பிக்கிறது. அதில் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம் இருந்ததைக் காணுகையில் நம் ஒருங்கிணைந்த இந்தியா கண்முன்னே வருகிறது. 
 
7. அப்படியே வெளியே வந்தால் ஒரு புத்தகக்கடை உள்ளது. அதில் காந்தியைப் பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன. அங்கே ஜே. கிருஷ்ணமூர்த்தி நூல்களும் தமிழருவி மணியன் நூல்களும் உள்ளன.
 
கண்டிப்பாக வாழ்வில் அனைவரும் ஒருமுறை சென்றுபார்க்க வேண்டிய இடமே இந்த அருங்காட்சியகம். ஆம்... மதுரையில் தன் மேலாடையைத்துறந்த மகாத்மாவின் இரத்தம் தோய்ந்த ஆடையும் அவரின் ஆத்மாவும் அங்கே அமைதியாக உறங்குகிறது.
ஓம் சாந்தி!
 
✍️செ. இராசா

தன்குற்றம் நீக்கியபின் ---------- வள்ளுவர் திங்கள் 191


 

நாற்றமாய் உள்ளதென நாக்கூசத் திட்டுகையில்
நாற்றமாய் ஆவதெது?; நாக்கு
(1)

மதுக்குளத்தில் நீந்தி மதிக்கரையில் ஏறான்
மதுவிலக்குப் பேசல் மடம்
(2)

இதையதைச் செய்யென எப்போதும் பேசி
எதையுமே செய்யாதோர் இங்கு
(3)

தூரத்தில் உள்ளதைத் துப்புறவு செய்தபின்
ஓரத்தில் வைக்கா(து) ஒழுகு
(4)

ஊரைக் குறைசொல்லி ஒப்பாரி வைப்போர்கள்
யாரைச் சரியென்பார் இங்கு
(5)

ஊழலோ ஊழலென ஓங்கி உரைப்பவரே
ஆழமாய் வைக்கின்றார் ஆப்பு
(6)

தன்குற்றம் நீங்காமல் சாற்றுகின்ற குற்றங்கள்
மன்றத்தில் போகும் மறைந்து
(7)

குறையில்லாச் சொந்தங்கள் கூடிட வேண்டின்
நிறையுள்ளம் வேண்டும் நினை
(8.)

பிறர்குறையைப் பேசுகிற பேச்சுக்கள் எல்லாம்
அறச்செயல் இல்லை அறி
(9)

தன்னை அறிவோரே தன்குற்றம் காண்கின்றார்
உண்மையை உள்ளாய்ந்(து) உணர்
(10)

✍️செ. இராசா


23/12/2021

ஐவர் அதிகாரம்



 
(நாகையில் நான் சந்தித்த கவி ஆளுமைகளுக்காக #ஐந்து_பத்துக்கள்)
 
விக்டர்தாஸ் அண்ணாவின் விண்முட்டும் செந்தமிழை
எக்கணமும் எண்ணுகிறேன் இங்கு
(1)
 
பாசத்தின் ஊற்றுநீர் பண்பாடி ஆற்றும்நீர்
நேசத்தில் நின்நிகர் நீர்
(2)
 
ஜெயகாந்தன் நற்சபைபோல் செய்தீரே அண்ணா
ஜெயஜெய போற்றியண்ணா ஜெய்
(3)
 
அன்பாய் அளித்தீர்கள் ஆயிரம் செய்திகள்
என்னண்ணா யாம்செய்வோம் ஈடு
(4)
 
பாடல் எழுதிடவே பண்பாய் உரைத்தீர்கள்
தேடலுக்குத் தந்தீர்நல் தீர்வு
(5)
 
பணத்தைப் பணமென்றாப் பார்த்தீர்கள் அன்று
குணத்தால்நீர் என்றென்றும் குன்று
(6)
 
ஓரிலையில் சோறுண்டோம் உன்பாவில் கட்டுண்டோம்
நேரிழைபோல் வைத்தாயே ஈர்ப்பு
(7)
 
கண்ணதாசன் கம்பனெல்லாம் கண்முன்னேக் கொண்டுவந்த
அண்ணதாசன் நாங்களெனில் ஆம்
(8.)
 
தம்பியெனச் சொல்கின்ற தங்க(ள்)க் குரலோசை
எம்முள் ஒலிக்கிறதே இங்கு
(9)
 
என்னையும் உங்களுடன் ஏற்றிவிட்டீர் நற்சபையில்
என்னேயேன் பாக்கியம் இன்று
(10)
 
பொன்மணி தாசரய்யா புன்னகை நேசரய்யா
உங்கள்போல் யாரய்யா உண்டு
(11)
 
அறுபத்தி எட்டென்றார் ஐயா அகவை
விறுவிறுப்பில் மெய்ப்பதி னாறு
(12)
 
ஒப்பில்லா வாகனத்தை ஓட்டுகிற மாண்பைப்போல்
செப்புபவை எல்லாம் சிறப்பு
(13)
 
மீனும் இறாலுமாய் மாமிசச் சோறுமாய்
வேணும் படியாய் விருந்து
(14)
 
விருந்தோம்பல் என்றாலே வேளிரைத்தான் சொல்வர்
வருந்துவர் முன்னோர் இனி
(15)
 
 தமிழ்பாடிச் செல்வோர்க்குத் தந்திடுவர் என்னும்
தமிழ்க்கூற்றை மெய்ப்பித்தீர் தந்து
(16)
 
நெல்லுக் கிறைத்தநீர் புல்லுக்கும் என்பர்;இக்
கல்லுக்கும் செய்தீர் களிப்பு
(17)
 
மூத்தத் தமிழறிஞர் முன்வந்து செய்ததுபோல்
பீத்தகவி செய்வேனோ பின்பு
(18)
 
பம்பரம்போல் சுற்றிவந்து பார்த்தெம்மைக் கேட்பீரே
"என்னவேணும் சொல்லிடுங்'கள்" என்று
(19)
 
விருத்தமும் செய்து விருந்தும் படைக்க
வருவோர்யார் பொன்மணி(யார்)முன் வா
(20)
 
திட்டகுடி தாண்டிவந்து தித்திக்க வைத்தவனே
முட்டக் குடியுன் தமிழ்
(21)
 

அண்ணாபால் அன்பிருக்கும் ஐயன்போல் பண்பிருக்கும்
வெண்பாவின் வேந்தரே நீர்
(22)
 
கண்மூடிக் கண்திறந்தால் காட்சியெல்லாம் வெண்பாவா
என்னப்பா ஏன்பா இது
(23)
 
திட்டகுடி யாரன்பும் தித்திக்கும் வெண்பாபோல்
இட்டம்போல் போட்ட இனிப்பு
(24)
 
கடையை அடைத்துவிட்டுக் கண்டெம்மில் நீரும்
தடையின்றித் தந்தீர் தமிழ்
(25)
 
கொலைசெய்த தாய்முன்னே கொஞ்சியழும் பிள்ளை
நிலைசொல்லி வைத்தீர் நெருப்பு
(26)
 
வலக்கரம் என்றுதான் வைத்துரைப்பார் உம்மை
பலச்சிரம் உன்னுள்ளே பார்
(27)
 
அன்பிற்கோர் எல்லையுண்டாம் ஆயாமல் சொல்கின்றார்
உன்-பாபோல் இல்லையென்பேன் ஓர்ந்து
(28)
 
முச்சங்கம் செய்திருந்த முன்னோர்கள் வந்திருந்தால்
அச்சன்போல் செய்திருப்பார் அன்று
(29)
 
உன்பால் வருமன்பால் உயிர்ப்பால் வரும்துடிப்பால்
நண்பா இதுவென்(ண்)பாப் பா
(30)
 
சித்தப்பூ கோவாலு செஞ்சதெல்லாம் கேட்கையில
அப்பப்பா அத்தனையும் அள்ளு
(31)
 
தேசாந் திரிபோலத் தேடியதைச் சொன்னீரே
ஆசான்யா நீர்:இனிமேல் ஆம்
(32)
 
துறவியெனச் சொல்றவன்லாம் தூக்குகிறான் சொம்பு
துறந்தாலும் செய்யலைநீ வம்பு
(33)
 
படிச்சதெல்லாம் அள்ளிப் பலருக்கும் தந்துப்
படியானாய் வள்ளல்நீப் பா
(34)
 
சேர்த்த பணமெல்லாம் செய்யத்தான் என்றாயே
வார்த்த வரலைப்பா... ம்மா❤️
(35)
 
கோவாலு சித்தப்பூ கொண்டுவந்த சாக்லேட்டோ
ஏவாளுக் கிட்டா இனிப்பு
(36)
 
அப்பா வரும்வேளை அப்பவென்ன ஆகுமென
அப்பாவாய்ச் சொன்னாய்; அழகு
(37)
 
பத்துக்குப் பத்தென்று பக்குவமாய் நீர்செய்யும்
வித்தையெல்லாம் என்னப்பா...வோய்
(38)
 
நிறுவன வேலைக்கும் நேரம் ஒதுக்கி
சிறப்பாகச் செய்தீர் செயல்
(39)
 
சொம்மா இருக்காம சோக்கா டபாய்க்கிற
யம்மாம் பெருசுன் மனசு
(40)
 
 
குருபக்தி என்னவென்று கூறாமல் கூறி
பெருஞ்சீடன் ஆனாயே பின்
(41)
 
சபரியைத் தேடித்தான் சாமிகள் போவர்
சபரியே தேடிவந்தார் அன்று
(42)
 
நச்சென்று செய்கின்றாய் நல்ல குறுங்கவிகள்
கச்சிதமாய் இப்படியேக் கட்டு
(43)
 
உபசரிப்பில் உன்னைப்போல் ஓராளும் உண்டோ
அபயம் தருமுந்தன் அன்பு
(44)
 
தொண்டிநகர் தாண்டிவந்து தொண்டுசெய்ய வந்தவனே
அண்ணன்மேல் எத்தனை அன்பு?
(45)
 
அண்ணா எனவுன்நா அன்பாய் அழைத்தாலே
அன்புமழைச் சாரல் அது
(46)
 
நாகை வருமுன்னே நம்மிருவர் கைகோர்க்க
தோகை விரிந்(த்)த மனம்
(47)
]
எதையும் எதிர்பாரா இத்தகைய
உள்ளம்
கதைக்கும் கவிகள் கவின்
(48)
 
தவமாய்த் தவமிருந்தத் தம்பியின் நோக்கம்
அவனால் அவனடைந்தான் அன்று
(49)
 
குடுகுடு வென்றே குருசேவை செய்யக்
கொடுத்தாயே நேசக் கரம்
(50)
 
✍️செ. இராசா

ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ?

 


ஈன்ற பிள்ளைகள் எத்தனையோ?
இருக்கும் பிள்ளைகள் இத்தனையே...
என்ன தவறிழைத்தேன் ஆண்டவா?!
ஒவ்வொரு முறையும்...
ஒவ்வொரு தடவையும்..
ஒவ்வொரு பிள்ளையாய்..
ஓ...
உனக்கும் ஆண் பிள்ளைதான் பிடிக்குமோ?!

#தாய்_நாயின்_குரல்

22/12/2021

அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்

 



அழகப்பா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில்தான் முன்பெல்லாம் அனைவரும் நடைப்பயிற்சி செய்வார்கள். வள்ளல் அழகப்பச்செட்டியாரின் மனம் போலவே மிகப்பெரிய மைதானம் அது. கொரானாவின் தாக்கத்தால் அந்த மைதானத்தில் பொதுமக்கள் செல்லும் வழி தற்சமயம் அடைக்கப்பட்டுள்ளது. நான் எப்போது காரைக்குடி வந்தாலும் அதிகாலை நண்பருடன் சென்று விடுவது வழக்கம். அவ்வளவு பெரிய மைதானம் பூட்டப்பட்டுள்ளதால் தொலைதூரக்கல்விக்கான மைதானத்தில்தான் நடந்து வருகிறோம். சரி அதற்கென்ன இப்போ?! அதானே... இதோ வருகிறேன்.
 
பாகற்காய்ச் சாறு, வாழைத்தண்டுச் சாறு, நெல்லிக்காய்ச்சாறு, இஞ்சிச்சாறு, காய்கறிச்சாறு மற்றும் முளைகட்டிய பயறு வகைகள் என்று வெறும் 10 ரூபாய்க்கு ஒரு ஐயா அங்கே விற்கின்றார். அனைவருமே வாங்கிப் பயனடைகிறார்கள். உண்மையில் இவையெல்லாம் வெறும் வியாபாரம் என்று கடந்துவிடமுடியாது. கண்டிப்பாக தற்போதையச் சூழலில் இவற்றைச் சேவையாய்த்தான் பார்க்கின்றேன். காரணம் யாரைப் பார்த்தாலும் உடல் உபாதைகள். பெரும்பாலும் யாரிடமும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய விடயமே. இலவசமாக ஆங்காங்கே உடல் ம்ற்றும் மனவளக்கலைக் கூடங்கள் இருந்தாலும் பாவம் போவோருக்குத்தான் நேரமில்லை. பிறகென்ன?! மருத்துவரிடம் செலவளிக்க வேண்டியதுதான் பணத்தையும் நேரத்தையும்...
 
மேலும் கொசுறாக ஒரு செய்தி:
பனி அதிகமாகப் பொழிகிறதென்று ஒருவர் தலைக்கவசம் போட்டு நடப்பதைக்கண்டு நாங்கள் வாய்விட்டுச் சிரித்தோம். அவருக்கேத் தெரியாமல் ஒளிப்படமும் எடுத்துவிட்டோம். காரணம் பனியிலும் நடக்கும் அவருடைய ஈடுபாடு..... 😀😀
😀
✍️செ. இராசா

21/12/2021

நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய்

 


நீ எனக்குப் புத்தகம் வாங்கித்தந்தாய்
நான் உனக்குப் பூ வாங்கித் தந்தேன்..
பதிலுக்குப் பதிலா என்றாய்??
இல்லை இரண்டுமே ஒன்றென்றேன்
என்ன புதிரென்றாய்?
மனம் கொஞ்சும் மணமென்றேன்..
மீண்டும் புன்னகைத்தாய்..
நானும்.......😊😊😊

20/12/2021

கலங்காதிரு மனமே --------- வள்ளுவர் திங்கள் 190

 #கலங்காதிரு_மனமே
#வள்ளுவர்_திங்கள்_190

நன்மை வரும்போது நான்தான் எனச்சொல்வார்
இன்னலில் சொல்வதில்லை ஏன்
(1)

கலங்கிப்போய் உட்கார்ந்தால் காட்சியா மாறும்
தளர்வுதரும் சிந்தனையைத் தள்ளு
(2)

சீரும் சிறப்புமாய்ச் செய்வதைச் செய்தாலும்
நேரும் வினைதான் விதி
(3)

கவலை எழுகின்ற காரணத்தை ஆய்ந்து
கவலை வலையைக் களை
(4)

நினைக்கின்ற ஒன்று நடக்காமல் போனால்
நினைவெழும் புள்ளியைத் தோண்டு
(5)

சிறிதாய் இருக்கையில் தீர்க்காமல் விட்டால்
குறியீடாய் மாறும் விடு
(6)

புலம்பி அழுகின்ற பொல்லாத செய்கை
கலங்கிய நெஞ்சத்தால் தான்
(7)

எண்ணம் எதுபோலோ எல்லாமும் அப்படியே
வண்ணமாய் மாறிடும் வாழ்வு
(8.)

கவலை மிகையானால் காட்சியுரு மாறும்
அவசியம் கவலை அறு
(9)

நிலையாமை பற்றி நினைப்போரின் வாழ்வின்
நிலைமாறும் நெஞ்சில் நிறுத்து
(10)

✍️செ. இராசா

15/12/2021

சபரிமலை ஐயப்ப தரிசனம் 2021

 


சபரிமலை ஐயப்ப தரிசனம் மிகவும்
அருமையாக
இருந்தது உறவுகளே...
 
1. நீலக்கல்லில் Virtual Booking ticket, ஆதார் அடையாள அட்டை & தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் (அ) PCR test result என அனைத்தையும் பரிசோதித்து முத்திரை வைக்கிறார்கள். (முத்திரை கட்டாயம் முத்திரை இல்லையேல் பின்னர் பம்பையில் திருப்பிவிட வாய்ப்புண்டு)
மேலும் அனைத்தையும் நன்றாகவே பார்க்கிறார்கள். என் ஊசியும் பையன் ஊசியும் கத்தாரில் போட்டிருந்ததால் சற்று நேரம் யோசித்தார்கள். ஆகவே குழந்தைகளைக் கூட்டிச் சென்றால் கட்டாயம் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்கவும்.
 
2. பம்பைவரை வாகனம் செல்வதற்கு Pass வழங்குகிறார்கள். அதற்கான இடமும் அங்கேயே உள்ளது. ஆனால் இவ்வசதி ஒருமுறை மட்டுமே. வரும்போது நீலக்கல்லிற்கு பேருந்தில்தான் வரவேண்டும்.
 
3. சன்னிதானத்தில் தங்க அனுமதி இல்லை. அதற்கேற்றார்போல் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் காலையில் பம்பையில் இருந்து கிளம்பினோம். கூட்டம் அவ்வளவாக இல்லை. சன்னிதானத்தில் மட்டும்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. வலதுபக்க வரிசையில் சென்றால் அதிக நேரம் எடுக்கிறது. இடதுபக்க வரிசை வேகமாகச் செல்கிறது. அருகில் இருந்து பார்ப்பதாக நினைத்து வலதுபக்கம் போவதென்னவோ நேர விரயம் என்றே நினைக்கிறேன். காரணம் சாமியை நெருங்கும் தருணம் மாற்றி விடுகிறார்கள். மேலும் சாமிக்கு முன்புறம் மிக நன்றாகத் தெரிவதுபோலவே மேடை அமைத்துள்ளார்கள்.
 
என்ன ஒரே ஒரு குறை. முன்பெல்லாம் இறைபக்தி அதிகமாக இருந்ததால் எல்லோரும் ஏறும்போது இடைவிடாமல் சரண கோசம் ஒலிக்கும். இப்போதோ அப்படி இல்லை. மேலும் தங்களின் மனைவியரோடு Video calling செய்தபடியே நடந்துவருவதெல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதைத் தவிர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
 
மற்றபடி மிகச் சுகாதாரமான முறையில் அமைத்த குடிநீர், மூலிகை நீர், கழிப்பறை, சிறுநீரக கழிப்பிட மேடைகள், மொத்த நீளத்திற்கும் துப்புரவாய் வைத்திருக்கும் பணியாளர்கள், அற்புதமான முறையில் கவனிக்கும் காவல்துறை என்று படு அமர்க்களமாக இருந்தது. மொத்தத்தில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
 
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏

14/12/2021

இப்போதே செய் --------------- வள்ளுவர் திங்கள் 189



நாளை இருக்குதென நாளைக் கடத்தாமல்
நாளையை இன்றாக்க நன்று
(1)

இருக்கின்ற போதெல்லாம் இம்சையென சொல்லிப்
பிரிந்தபின் சொல்வார் பெரிது
(2)

இதையதை என்றெல்லாம் ஏதேதோப் பேசி
எதையுமே செய்யாரே இங்கு
(3)

நல்ல மனதையும் நஞ்சாக்கிப் பார்க்கின்ற
பொல்லாப் பணமென்றும் பொய்
(4)

அறமில்லாப் பக்தி அரிசியில்லா நெல்போல்
பறந்துவிடும் வெற்றுப் பதர்
(5)

நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணும்
நிலைதானே மாயை நிலை
(6)

தன்முனைப்பின் உச்சத்தில் தானென்று சொல்வோர்கள்
தன்னால்தான் வீழ்வர் தனித்து
(7)

செய்கின்ற நேரத்தில் செய்வதைச் செய்யாமல்
செய்தாலும் இல்லை சிறப்பு
(8.)

இப்போதிங் கில்லையெனில் எப்போதும் இல்லையென்பர்
தப்பாமல் இப்போதே தாக்கு
(9)

சொல்லும்முன் யோசிப்பாய் சொல்லாமல் செய்திடுவாய்
நல்லோரின் சான்றாய் நட
(10)

✍️செ. இராசா

12/12/2021

 


 

 

 

நீண்ட இடைவெளியில்
எல்லாமும் மாறிவிட்டது
நரைதட்டிய நிஜங்கள்
நிழல்களைப் பார்த்தே நகர்கிறது...
தன்முனைப்புச் சிறைகள்
தன்னை விடுவிக்க ஏங்குகிறது...
இருந்தும்...
இருந்தும்...
ஏதோ ஒன்று தடுக்கிறது..
இன்னும் முழுமையாக மாறமுடியாமல்...

✍️செ. இராசா

10/12/2021

 


இத்தனை வருடங்கள் கத்தாரில் இருந்தாலும் தலைநகர் தோகாவில் இருந்து திருச்சிக்கு நேரடியாகச் செல்லும் முதல் விமானப்பயணம் இதுவே...திருச்சி வருபவர்கள் அனைவருக்குமே உள்ள கனவு இது. பெரும்பாலும் SRI LANKAN AIRLINESல் தான் கொழும்பு வழியாக வருவோம். இரவில் கிளம்பி மாறிமாறி வருவதால் பயண அலுப்பு கண்டிப்பாக இருக்கும். மேலும் நம் பணம் நம் நாட்டிற்குச் செல்லவில்லையே என்ற ஆதங்கமும் அதிகமாகவே இருக்கும். அதையெல்லாம் போக்கும் விதமாக இரண்டு விமானங்கள் (டெக்கான் மற்றும் ஏர் இந்தியா) இரண்டு நாட்கள் மட்டும் விடப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தியே. ஆயினும் இச்சேவை தொடர்ந்து அனைத்து நாட்களிலும் நடக்க வேண்டுமென்றால் நாம் கொண்டு செல்லும் பொருட்களின் எடை அளவிலும் மற்ற இதர வசதிகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். டாட்டாவிடம் இந்திய இயர்லைன்ஸ் கைமாறியுள்ளதால் கண்டிப்பாக கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்றே நம்புகிறேன்.
 
எது எப்படியோ...?! இப்பயணம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்லும் பயணம் மட்டுமல்ல அதிகமான முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பல வருடங்களுக்குப்பிறகு சாமி ஐயப்பனை தரிசக்கப் போகும் பயணமும்கூட.
எல்லாம் வல்ல இறைவனை அருள்புரிய வேண்டுகிறேன்... 🙏🙏
🙏
ஓம். சாமியே சரணம் ஐயப்பா
🙏
✍️செ. இராசா

பார்க்க வருகிறோம் ஐயப்பா

 


 

பார்க்க வருகிறோம் ஐயப்பா
பார்க்க வருகிறோம்
பாதம் பணிகிறோம் ஐயப்பா
பாவம் தொலைக்கிறோம்

சாமி சரணம் ஐயப்ப சரணம்
சாமி சரணம் ஐயப்ப சரணம்

சாமி சரணம் ஐயப்ப சரணம் சொல்லுங்க
சாமிவேதம் சரண கோஷம் நம்புங்க
சாமி சரணம் ஐயப்ப சரணம் என்னங்க?
சாமிபாதம் சரண மாகும் சொல்லுங்க...

(பார்க்க வருகிறோம்)

சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ
சாமியேய் சரணம் ஐயப்பா

மலையாளும் எங்க சாமி ஐயப்பா
மனசார நோன்பிருந்து வாராம்போ
நிலையான உன்ன விட்டால் யாரப்பா?
நிசமாக வந்திடுவார் கூறப்பா...
அலைமோதும் இந்த வாழ்க்கை ஏனப்பா?
அகம்மாற ஆழத்திலே வையப்பா..
பிழையான பிள்ளை இங்கே நானப்பா
பிழைமாற......தாயாய் அருள் செய்யப்பா

✍️செ. இராசா

08/12/2021

நீயே உனக்கு ஒளியாவாய்....

 


 #நீயே_உனக்கு_ஒளியாவாய்....
நீயே உனக்கு ஒளியாவாய்....

புத்தம் சரணம் சங்கம் சரணம் தர்மம் சரணம் சரணமே...(2)

உந்தனுள்ளே உந்தனுள்ளே
..........ஒன்றியொன்றித் தேடுவாய்!
சிந்தையுள்ளே சென்றுவுள்ளே
..........சீவனொன்றித் தேறுவாய்!
அந்தமாதி சொந்தசோதி
..........அர்த்தமாகி மின்னுவாய்!
விந்தையாகி உந்தனாவி
..........மீண்டதெங்கே எண்ணுவாய்!?

பெண்ணிலோடி போதையேறி
.........பேதைபோல பாவியாய்
மண்ணிலோடி மாயையேறி
.........வாழ்ந்திடாதே கோழையாய்!
கண்ணைமூடி தன்னிலோடி
.........கண்ணிலுன்னைக் காணுவாய்!
அண்டமோடி அங்குமோதி
.........ஐயமின்றி ஓருவாய்!

துன்பமெங்கே இன்பமெங்கே
.....தோண்டியுன்னைத் தேடுவாய்
இன்னலென்று கண்டபின்னே
.... எண்ணியுன்னைத் தேற்றுவாய்
மன்னனென்ன மக்களென்ன
....மாண்டபின்னே சொல்லுவாய்?
வந்தபின்னே நொந்தபின்னே
...மண்ணையள்ளித் தள்ளுவாய்!

✍️செ. இராசா

07/12/2021

NUMBERED LOCK

 


 

ஊருக்குப்போயிவந்து இரண்டரை வருடங்களுக்குமேல் ஆகிவிட்டதால் பயணப் பெட்டிகள் எல்லாம் சும்மாவே உறங்கிக் கொண்டுதான் இருந்தது. இப்போது அதற்கு வேலை கொடுக்கலாம் என்று நினைத்தால் அவைகள் அனைத்திலும் இருந்த பூட்டுக்களின் இரகசிய எண்கள் (NUMBERED LOCK) எல்லாம் மறந்தேவிட்டது. சரி என்ன செய்யலாம் என்று நினைந்து நானும் என் பையனும் முயற்சி செய்துபார்த்தால் ஒன்றுமே எடுபடவில்லை. சரி வேறு வழியின்றி 001, 002, 003.....என்று 700 வரை போயிவிட்டோம்....என்னடா இது முடியவே இல்லை கைகளும் வலிக்கிறது. சரி வலைத்தள உதவியை நாடலாம் என்று பையனிடம் சொன்னேன். உடனே YOU TUBE சென்று 5 நிமிடங்களில் தீர்வு கண்டான். 


அதாவது அந்த எண்கள் இருக்கும் இடத்தில் வெளிச்சம் அடித்தான். ஊசிமுனை அளவே உள்ளத் துளைகள் வரும்வரை மூன்றையும் சுற்றினான். பின்னர் மேலும் இரண்டு எண்கள் சுழற்றினால் பூட்டு திறந்துவிட்டது. அப்படியே அனைத்து பூட்டுக்களையும் திறந்து விட்டான். அட..... இதிலிருந்து தெரிவது என்னவென்றால், இங்கே எல்லாவற்றிற்குமே தீர்வுண்டு. மேலும் பெரியவர் சிறியவர்களிடம் சேர்ந்து பிரச்சினைகளைக் கையாண்டால் சுலபமாக அந்தத் தீர்வைக் கண்டுகொள்ளலாம் என்பதே. சரிதானே உறவுகளே!

அப்பசரி..

✍️செ. இராசா

06/12/2021

ஆத்தீ----------வள்ளுவர் திங்கள் 188

 #ஆத்தீ
#வள்ளுவர்_திங்கள்_188

காமத்தீக் குச்சியைக் கண்களினால் பற்றவைக்க
ஓமத்தீ வார்க்கும் உடல்
(1)

ஆத்தீ அடியாத்தீ... ஆசைத்தீ பொல்லாத்தீ
வார்த்தால் வருமய்யா வம்பு
(2)

நினைத்தவுடன் பற்றுகின்ற நெஞ்சத்துத் தீயை
அணைக்கின்ற நீர்தானே அன்பு
(3)

பிரிவே சுடுமென்று பேசிய சீதை
பிரிந்தே சுடுபட்டால் பின்பு
(4)

சேர்ந்தோர் பிரிகையில் தீயாய்ச் சுடுவதால்
நேர்வது நெஞ்சில் வடு
(5)

அயலகம் சென்றோர் அகத்தின் வலியை
அயலார் அறிவ(து) அரிது
(6)

ஒன்றுக்குள் ஒன்றாய் உறவாடி பின்னாலே
ஒன்றோடும் வாழாதார் உண்டு
(7)

காதல் உணர்வின்றி காமத்தில் செல்வோர்க்குக்
காதல் பிரிவெல்லாம் பொய்
(8.)

வேறு வழியின்றி வேறிடம் சென்றபின்
மாறிடுமோ நல்லோரின் மாண்பு
(9)

பிரிந்தவர் சேர்கையில் பெற்றிடும் இன்பம்
எரிந்தவர் நெஞ்சிற்(கு) இதம்
(10)

✍️செ. இராசா

அப்பாவின் கோபம்



உச்ச டெசிபலில்
உறுமுகின்ற அரிமா...
கொதிக்கும் எரிமலையில்
குமுறிவரும் லாவா....
பொங்கும் விழிகளில்
பொசுக்கிவிடும் சூரியன்...
சாட்டை அடிகளில்
சாத்துகின்ற கவிஞன்...
ஆனால்...
ஒற்றை வார்த்தையில்
ஒடுங்கிவிடும் கணவன்..
......
.......என்னங்க அங்க சப்தம்?!

டைம்லூப்

 

என் அன்பை வெளிப்படுத்த
என்ன செய்யலாம் என்றபோதுதான்
மின்னலாய் வந்தது அந்த யோசனை...
நேராக நகைக்கடை சென்றேன்..
நீ முன்பு கேட்டாயே அதையே வாங்கினேன்..
கொடுக்கலாம் என்று வரும்போதுதான்..
....அப்புறம்?!!
இரு...என் அன்பை வெளிப்படுத்த
என்ன செய்யலாம் என்றபோதுதான்
மின்னலாய் வந்தது அந்த யோசனை..
யோவ்.....
.....அட இருப்பா டைம்லூப் ஆகுதுல்ல..
 
✍️செ. இராசா