31/12/2018

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2019


அன்று முதல் இன்று வரை
அனைவருமே சொல்லுவது;
இன்று முதல் இனியென்றும்....
இப்படி அப்படி இருப்பதென்று

ஆனாலும்... அதையெல்லாம்
அப்படியே ஒதுக்கிவிட்டு..
அன்று சொன்ன வார்த்தைகளே
இன்று(ம்) மீண்டும் வருகிறது..

இன்று இங்கே உள்ள கணம்
இனியும் இங்கே வந்திடுமா?!
எண்ணம் இங்கே திண்ணமன்றி
எதுவும் இங்கே மாறிடுமா?!!

இன்று முதல் இனியென்றும்
இதையே மீண்டும் சொல்லாது
ஒன்றில் ஒன்றாய் ஒன்றுகின்ற
உயர்ந்த ஒன்றைப் பற்றிடுவோம்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
2018——>2019💐💐💐💐💐💐

என் மனைவியின் சக்களத்தியால்



இன்று
இரண்டாயிரத்து பதினெட்டின்
இறுதி நாள்...

இனிமேல் இல்லை...
இந்த வருடத்தில்
இன்னொரு நாள்..

என்னுள் இருந்த என்னை
எங்கும் காட்டிய 2018 ஐ
என்ன சொல்லி வாழ்த்திடுவேன்..

கசப்பும் இனிப்பும்
கலந்து இருப்பதுதான்
காலத்தின் சிறப்பு...
இதில் யார்தான் உண்டு விதிவிலக்கு...

என் கசப்பை நான் வைத்து
இனிப்பை மட்டும் தருகின்றேன்..
எடுத்துக் கொள்வீர்...

***************************

என் மனைவியின் சக்களத்தியால்
நான் பெற்றதுதான்
எத்தனை எத்தனை...

என்னது சக்களத்தியா?

ஆம்..
முகநூலுக்கு
என் மனைவி வைத்த பெயர்...
என் பார்வை அவள் மேல் அதிகம் என்பதால்

இதில் உண்மை இல்லாமலில்லை...
இருந்தும் அவள் இல்லையேல்
இவனும் இல்லவே இல்லை...

ஆம்..

"நான் எனும் மண் குடம்"
இது அவள் தந்த பொன் குடம்...

"தமிழ்ச்சோலை" நிர்வாகி
இது அவள் தந்த தமிழ் மகுடம்

இது மட்டுமா?

இலக்கணம் பயிற்றுவித்தாள்
தலைக்கனம் ஏதுமின்றி....

இலக்கியம் காட்டித் தந்தாள்
இலவசம் என்று சொல்லி...

பாடல் எழுத வைத்தாள்
காணொளி ஏற்ற வைத்தாள்
உறவைப் பெருக வைத்தாள்
உவகை அதிகம் தந்தாள்

எனில்... அவள் சக்களத்தி தானே...
அந்த சக்களத்திக்கு என் முதல் நன்றி

**************************************

அது மட்டுமா...இந்த 2018 தந்தது

புதிய பட்டயப் படிப்பு
புதிய புத்தகங்கள்....
புதிய மேடைகள்...
புதிய முயற்சிகள்..
புதிய பயணங்கள்..
புதிய உறவுகள்....
......
....
இன்னும் இன்னும்

அனைத்தையும் வழங்கிய வருடமே
உன்னைப் பிரிவதில் எனக்கு வருத்தமே...

சென்று வா....
உன்னை நினைவில் சந்திக்கிறேன்..

நன்றி நன்றி...2018

30/12/2018

கவிஞனாக ஆசைப்பட்ட தந்தை
தன் மகனுக்கு பெயர் வைத்தார்
 “கவிஞன்” என்று

29/12/2018

#அடுப்படியில்_அயிரைமீனு

#அடுப்படியில்_அயிரைமீனு
அடியே....அங்க கொதிக்கையில
அடிநாக்கில் எச்சில் ஊறி
அடிமனசு துள்ளுதடி....

பட்டணங்கள் போயிவந்து
பட்டிக்காடு வந்த மாமா
அடிமனசின் ஆசை தீர
பிடிச்சிடலாம் பொறுத்திடுங்க..

அத்தை மாமா காணலியே
அவுகெல்லாம் எங்க புள்ள...
அட்ரா சக்க.....பூங்குயிலே
ஒத்தையில விருந்தா புள்ள?!

வயக்காடு போனவுக
வரும் நேரம் ஆச்சு மச்சான்..
ஆகும்வரை பொறுத்த மச்சான்
ஆறும்வரை பொறுப்பீகளா..?

செ. இராசா..

https://youtu.be/5PJ0WO1dbDI

மருதம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த கவிதை

https://www.facebook.com/photo.php?fbid=10155744129277116&set=gm.1994376720651702&type=3

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்-சந்தோச மணிகண்டர்





செர்பிய நிறுவனத்தின்
செந்தமிழ்த் தூணுக்கு
அகவை தின வாழ்த்தொன்று
அகம் மகிழ தொடுத்துள்ளேன்...
அனைத்தையும் படித்துவிட்டு
அவரை இன்று வாழ்த்திடுவீர்....

யாரிவர்?

மின்னியலில் மின்னுகின்ற
மின்னியல் பொறிஞரிவர்!
எண்ணிய எண்ணத்தை
பண்ணுகின்ற சிற்பியிவர்!

மேலாண்மை புரிவதிலே
பேராண்மை மேலாளர்!
மேலாளர் ஆனாலும்
மென்மையான நண்பரிவர்!

புன்னகையில் பூக்கின்ற
சந்தோச மனிதரிவர்...
தன்பெயரில் (Money) மணி கொண்ட
சந்தோச மணிகண்டர்...

அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்....
வாழ்க வளமுடன்..

செ. இராசா

நவீன கவிதை



நவீன கவிதை பற்றிய புரிதலுக்காக என் அன்பு நண்பர் சத்யாவுடன் பேசிய சுவாரஸ்யமான உரையாடல்.....இதன் மூலம் அனைவருக்கும் நவீன கவிதை பற்றிய புரிதல் ஏற்படலாம் என்ற நோக்கத்திலேயே இந்தப் பதிவு)

இராசா:

நண்பரே வணக்கம்.
இந்தக் கவிதை பாருங்கள்

முயற்சி-1

அவளை நான் சுற்றுவது ஒன்றும்
கேவலமல்ல...
அது உலகை அடைவதற்கான
ஒத்திகையே
.................
இது எப்படி?
இது இப்போது தோன்றியது நண்பரே
😍1
கவிதை சரியா?
உலகை வெல்வதற்கான
சரியாக இருக்குமா
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

"கேவலம்" அதற்கு வேறு வார்த்தையை பயன்படுத்தலாம்
தோன்றும்போது எழுதி
அனுப்புங்கள்
உங்களை கண்டறிந்து கொள்ளுங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-2

அவளின் பின்னால் சுற்றுவது ஒன்றும்
குற்றமல்ல
அது உலகை வெல்வதற்கான
ஒத்திகையே

இப்ப பாருங்க...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

நண்பரே
கவிதையை உருவாக்க முயலாதீர்
இந்த வரிகளுக்கு
சரியான வார்த்தை
உங்களுக்குள் தானாகவே உருவாகும்
😍1
பொறுமை
😍1
அசைபோட்டுக்கொண்டே இருங்கள்
அந்த வரிகளை
ஒரு மூன்று கவிதைகள் எழுதும் வரை
சிரமம் இருக்கும்
பிறகு இயல்பிலே மாற்றம் வந்துவிடும்
எனது அனுபவம் தான் இது.
கருப்பொருள் ஒன்று தான்
சொல்லும் விதத்தில் வித்தியாசம்
அதுதான் நவீனம்
😍1
நான் இப்படி தான் நினைக்கிறேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இராசா:
முயற்சி-3

நான் அவளை சுற்றுகிறேனாம்
“அவர்களுக்குத் தெரியுமா?!!”
நான் உலகைச் சுற்றும் முயற்சியில் இருக்கிறேனென்று

இப்ப பாருங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:
ஏன் சிரமபடுறீங்க..........வெயிட்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சத்யா:

சிரமப்படல
நான் மாற்றி அனுப்புறேன்
உடனே எப்படி வரும்
யாருக்கும் வராது

இதோ பிறந்துவிட்டது நவீன கவிதை

"ஒத்திகையேதுமின்றி
அவளைச் சுற்றியே
வலையை
பின்னிக்கொண்டிருக்கிறது
என் ஆன்மா.
அதை
சிறையென்று
அவள் நினைக்கையில்
உறைந்து விடுவது
உயிர் மட்டுமல்ல.

....
?"

உயிர் மட்டும் அல்ல
அடுத்தது என்ன சொல்ல வருகிறார்
இந்த கவிஞர் என்று
கவிதையை
படிக்கும் வாசகரிடம் விட்டுவிடவேண்டும்
அவருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ
அந்த மாதிரி புரிந்து கொள்வார்
உயிரே உறைந்து போச்சு னு சொல்றாரு
அதைவிட வேற என்ன இருக்கிறது

விடை.

நம் உணர்வு
நாம் உருவாக்கி வைத்துள்ள காதலின் பிம்பம்
etc etc கேட்ச்

கவிதை களை
பலவாறு
எழுதலாம்
பயிற்சி பயிற்சி பயிற்சி
கொஞ்சம் முயற்சி
கற்றுக் கொள்ள யாரிடமும் தயக்கம் காட்ட தேவையில்லை
சொல்லும் விதம் மாறியுள்ளது
நான் அப்படி தான்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இராசா:

முயல்கிறேன் நண்பரே...நன்றி நன்றி...

(பொறுமையாய் சொல்லிக்கொடுத்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி)

படம் எடுத்த இடம்: பிரியா மெஸ், காரைக்குடி
— with Vasanthan.

28/12/2018

ஏகலைவன் - க(வி)தை

ஏகலைவன் - க(வி)தை
**********************
அகிலத்தில் சிறந்தவனாய்
அருச்சுனனை நிலை நிறுத்த
இருவரின் வாழ்க்கையிலே
குருதுரோணர் செய்தது
இதிகாசப் புராணத்தின்
இருண்ட பக்கங்கள்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
துரோணர் சொன்னாலும்
துவளாமல் போராடி
கோபுரம்போல் உயர்ந்தவனே
கொடையாளி கர்ணன்!

குலத்தின் பெயராலே
குருகுலம் இல்லையென
குருதுரோணர் மறுத்தாலும்
குருவினை மறவாது
குணத்தால் வென்றவனே
குறையில்லா ஏகலைவன்!

எத்தனை சமாதானம்
எவர் வந்து சொன்னாலும்
ஏற்கவே முடியாத
ஏகலைவன் தியாகத்தை
என்னவென்று சொல்லிடுவேன்
எழுதிடவே முயலுகின்றேன்..

துரோணரின் சந்திப்பு
********************
இளவரசர் அனைவரும்
கலைகற்கும் இடத்திற்கு
வேடுவர் குலம் பிறந்தோன்
வேண்டி வந்தான் துரோணரிடம்

அகத்தின் ஆர்வத்தை
முகத்திலே கண்டாலும்
அந்தண ஆசிரியர்
அவனுக்கு(ம்) மறுத்துவிட்டார்

ஏகலைவனின் வீரம்
********************
அன்புசெய் அன்பர்க்கே
அன்புசெய்யா அகிலத்தில்
அன்புசெய்யா ஆசிரியர்மேல்
அன்பு வைத்தான் ஏகலைவன்!

மனதினில் அவரையே
மானசீகக் குருவாக்கி
சிலையொன்று செய்து வைத்து
சிலை முன்னே கலை பயின்றான்!

சங்கொலி கிழிந்ததுபோல்
எங்கிருந்தோ சப்தம்வர
வந்ததிசை நோக்கி
அம்புகளால் அடக்கி விட்டான்!

வாயிலே தையலோடு
நாயொன்று துள்ளிவர
அருச்சுணனும் துரோணரும்
அதனையே பின்தொடர
ஏகலைவன் குகைக்குள்ளே
ஏறிவந்தார் இருவருமே...

குரு தட்சணை
**************
அங்கிருந்த சிலை கண்டு
ஆச்சரியம் அடைந்த குரு
அவன் செய்த கலை கண்டு
அப்படியே உறைந்து விட்டார்!

நேரடிச் சீடனுக்கே
நேர்த்தியுறா ஞானத்தை
இவன் கற்ற திறனறிந்து
இடிந்தே போய் விட்டார்!

இப்படியே இவன் சென்றால்
இவர் சபதம் தோற்குமென்று
தட்சணை கொடுக்கச்சொல்லி
கட்டைவிரல் வேண்டுமென்றார்!

சொல்லிய சொல்லொன்று
கொல்லுஞ் சொல்லானாலும்
வில்லம்பு வேகத்தில்
விரலினை வெட்டிவிட்டான்!

முடிவு
******
ஒருவனின் வளர்ச்சிக்கு
ஒருவனை அழிப்பதா?!
சாதியின் பெயராலே
சாத்திரத்தை மறுப்பதா?

என்ன கொடுமையென்று
ஏனென்று கேட்கவில்லை- சொல்
ஏகலைவா......நீ
என்ன கொடுமையென்று
ஏன் அன்று கேட்கவில்லை?

நீ மட்டும் அன்றைக்கே
நியாயத்தைக் கேட்டிருந்தால்
ஆதிப் பரம்பரையை
அடக்க நினைப்பார்களா?!

✍️செ. இராசா

https://youtu.be/L6W0q1ww8C8
https://youtu.be/L6W0q1ww8C8 

27/12/2018

முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை



முட்டிமுட்டி ஒர் மரபுக்கவிதை எழுதினேன்
முறைத்து முறைத்துப் பார்த்தாள்..

எளிய நடையில் ஓர் புதுக்கவிதை
எழுதினேன்
ஏனோ... மீண்டும் முறைத்தாள்..

மீண்டும் ஓர் ஹைக்கூ எழுதினேன்
இம்முறை “ம்கூம்” என்று முனங்கினாள்

என்னதான் உன் பிரச்சனை? என்றேன்
இதுதான் தமிழ் எழுத்துகளா?!! என்றாள்

😀😀
✍️செ. இராசா

(வருங்காலத் தலைமுறைகளிடம் தமிழைக் கொண்டுபோய் சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல.....அதை நாமே தொடங்க வேண்டும் உறவுகளே....)
மௌன விரதம் கடைபிடிக்கிறாள்
என்னோடு மட்டும்...

26/12/2018

இதழ்களில் மதுரசம்



(1)
இதழ்களில் மதுரசம்
அதிகமாய் இருக்கிறது
புதிய மலர்களில்

(2)
கொடுக்கும் மனத்தாலே
அதிகமாய் மணக்கிறது
மலரும் மனிதமும்

(3)
எவ்வளவு உறிஞ்சினாலும்
அழகாக இருக்கிறது
சனநாயகம்

(4)
இருக்க இடம் கொடுத்தால்
இருப்பதை உறிஞ்சுகிறது
மலர்களில் தேனீக்கள்

(5)
தலையில் பூச்சூடி
கவர்ந்து இழுக்கிறது
தாவரங்கள்

(6)
இரவின் கூடலில்
குளிரிலும் வியர்க்கிறது
மலர்களில்மேல் பனித்துளி...

25/12/2018

மெய்ஞானம்

இருக்கிறது என்கிறது ஆத்திகம்//
இல்லை என்கிறது நாத்திகம்//
இருப்பதை ஆராய்கிறது விஞ்ஞானம்//
இருப்பதை அனுபவிக்கிறது மெய்ஞானம்//

சுட்டும் விழிச்சுடரில்


சுட்டும் விழிச்சுடரில்
தொட்டுச்செல்லும் பெண்ணே- நீ
பட்டும்படா திருந்தால்- நான்
பட்டுப் போவேன் கண்ணே!

வெட்டும் விழிச்சுடரில்
கட்டிப்போடும் பெண்ணே- நீ
பற்றேயில்லா திருந்தால்- நான்
வெற்றாய்த் திரிவேன் கண்ணே!

தட்டும் விழிச்சுடரில்
சுட்டிப் பேசும் பெண்ணே- நீ
கவ்விக்கொள்ள மறுத்தால்- நான்
கவிதையில் வதைப்பேன் கண்ணே!

பற்றும் விழிச்சுடரில்
தொற்றிக்கொள்ளும் பெண்ணே- நீ
சுற்றிவிட நினைத்தால்- நான்
முற்றிலும் துறப்பேன் ..........உன்னையே!

நீ வேறு.... உலகம் வேறா?!!!

24/12/2018

தேவனுக்குத் தாலாட்டு


கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆண்டவரே.... கண்ணுறங்கு
கொஞ்சும் மாதா கண்ணுறங்க
கொஞ்ச நேரம் நீயுறங்கு

ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆராரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ

மண்ணிலுள்ள மாந்தரெல்லாம்
விண்ணுயரம் செல்வதற்கு
விண்ணுலகை விட்டிறங்கி
மண்ணிலிங்கு வந்தவரே....(கண்ணு)

அன்னை எங்கள் மேரிக்கு
அன்பானப் பிள்ளையாகி
அன்பாலே இவ்வுலகை
ஆளவேண்டி வந்தவரே.....(கண்ணு)

ஏழ்மைமிகுத் தச்சருக்கு
எழிலானப் பிள்ளையாகி
எல்லோரும் உய்வடைய
ஏகனாய் வந்தவரே...........(கண்ணு)

பரமபிதா ஆவியினால்
பரலோகம் விட்டுவந்து
பாவங்கள் செய்வோர்க்கு
பாடம் சொல்ல வந்தவரே...(கண்ணு)

கடமையை மறந்தவராய்
மடமையில் திரிவோரைக்
கரையேற்றும் வழிசொல்லக்
கடவுளாய் வந்தவரே......(கண்ணு)

✍️செ. இராசா

#இனிய_கிறிஸ்துமஸ்_வாழ்த்துகள்_2018

என் இதயத்தில் இருக்கும்





ஓவியத்தில் இருக்கும் ஓவியனாய்
கவிதையில் இருக்கும் கவிஞனாய்
இயற்கையில் இருக்கும் இறைவனாய்-என்
இதயத்தில் இருக்கும்..............
..............................
..............................
.............................
............................ஆசையப்பாரு😀😀😀


23/12/2018

காரி--க(வி)தை



காரி--க(வி)தை
*************************
வள்ளல்கள் எழுவரிலே
வில்லங்க வள்ளலிவன்,..
படைகொண்டு பொருளீட்டி
கொடை செய்த மன்னனிவன்

காரியின் தொழில்
***********************
மலையமான் எனும் நாட்டில்
மங்காதத் திங்களைப்போல்
காரியென்ற ஒரு மன்னன்
போர்த்தொழில் செய்து வர,

மண்ணாளும் மன்னர்கள்
சண்டைக்குத் துணைதேடி
காரியினை நாடிவந்து.
காரியத்தில் வென்றிடுவர்!

காரியின் கொடை
*************************
வென்றவர்கள் அனைவருமே
வண்டிவண்டி பொருள் தருவர்...
வந்தது அனைத்தையுமே
வாரிவாரி வழங்கிடுவான்....

இடம்பார்த்துப் பெய்வதில்லை மாரி
இனம்பார்த்து ஈவதில்லை காரி
இவன் பெருமை அறிந்தவர்கள் கோடி
இரந்து செல்ல வந்தார்கள் நாடி...

ஓரியின் மரணம்
*******************
ஓரி என்ற பெயர் கொண்ட மன்னன்
காரிபோல கொடை செய்த மன்னன்
கொல்லிமலை மன்னனென்று சொன்னால்
அள்ளித்தரும் மன்னனென்று சொல்வர்..

பெருஞ்சேரல் சேரனோடு சேர்ந்து
பெருந்தவறு செய்துவிட்டான் காரி
கொல்லிமலை அரசனைக் கொன்று
பொல்லாதத் தவறிழைத்தான் காரி

அதியமான் மரணம்
***********************
ஓரிமன்னன் மாண்ட சேதிகேட்டு
ஓடிவந்தான் அங்கே ஒரு மன்னன்;
ஓய்வெடுக்கக் காரிவந்த நேரம்
ஓடவிட்டான் காரியினை அன்று!

பதுங்கிப் போன புலிபோலே இருந்து
பாய்ந்து வந்தான் காரியவன் மீண்டும்
பெருஞ்சேரல் துணையோடு வந்து
பெரும்படையால் கொன்றானே அவனை.

கொன்றவனும் கொடையாளி மன்னன்
சென்றவனும் கொடையாளி மன்னன்

ஓரிக்கு நீதிகேட்டு
காரியுடன் சண்டையிட்டு
மண்ணிலே முத்தமிட்டான்
மாண்புமிகு அதியமான்....

ஔவைக்கு நெல்லி தந்து
அனைவருக்கும் பொருள் தந்து
விண்ணிலே கொடைதர
மண்ணிலே உயிர் நீத்தான்...

காரியின் வீரம்
*******************
கர்ம வினையாலே
காரியங்கள் நடப்பதினால்
காரியின் வீ(ஈ)ரத்தால்
காரியும் மீண்டு(ம்) வந்தான்...

படையாலே ஒரு பக்கம்
கொடையாலே மறு பக்கம்
தன்னறம் இதுவென்று
தனியறம் காத்தவனை
மூன்று வேந்தர்களும்
முடிசூடி மகிழ்ந்தார்கள்!!!

வாழ்க நின் புகழ்!!!

செ. இராசா

(பாரிபற்றி படிக்க/பார்க்க இணைப்பு கீழே உள்ளது)
https://www.facebook.com/100000445910230/posts/2270330326325142/

டேய் அப்பா... இறக்கிவிடுறா



தொப்புள் கொடியிலே தூளிகட்டி
தொங்கியே வாழ்ந்த காலத்தைப்போல்
தோரணக் கொடியிலே காகிதமாய்
தொங்கிட வைத்தல் சரிதானா?!!

(டேய் அப்பா... இறக்கிவிடுறா.... முள்ளு குத்துது)

✍️செ. இராசா

பட உதவி: Raju Arockiasamy சகோ

22/12/2018

கேப்பைக்கூழ்






கேப்பைக்கூழு வேணுமான்னு
.....கேட்டுக்கேட்டு தந்தவளே
கேப்பார்பேச்சு கேட்டாயோ?
....கேட்டாலும் மறுக்குறியே

கேப்பைக்கூழு தந்தாலே
.....கேட்கும்வரம் தருபவரே
கேப்பார்பேச்சு கேட்பேனா?
....கேழ்வரகேக் கிடைக்கலையே..!

✍️செ. இராசா

என் முதல் வெண்பா


கடவுளின் தன்மை யெதுவெனத் தேடும்
மடமையில் யானும் திணறினால்- என்னுள்
கடவுளின் தன்மை யிதுவெனச் சொல்ல
உடனே கவிதை வரும்!

✍️செ.இராசா

21/12/2018

#உயிரிருக்கும் வரையே




#உயிரிருக்கும் வரையே
..............உடலிருக்கும்- நல்ல
உடலிருக்கும் வரையே
..............உழைப்பிருக்கும்- நல்ல
உழைப்பிருக்கும் வரையே
..............உயர்விருக்கும்- நல்ல
உயர்விருக்கும் வரையே
..............ஊர்மதிக்கும்- இந்த
ஊர்மதிக்கும் வரையே
...............உறவிருக்கும்- நல்ல
உறவிருக்கும் வரையே
................உவப்பிருக்கும்- இந்த
உவப்பிருக்கும் வரையே
...............உலகிரு(னி)க்கும்- இந்த
உலகிருக்கும் வரையே
...............#உயிரிருக்கும்

(மீண்டும்)

✍️செ. இராசா

இது என் அன்புக்கவி அப்பா கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் அவர்களின் கவிதையில் இருந்த பிறந்த கவிதை.

ஒரு கவிதை மற்றொரு கவிதையைப் பிரசவித்தால் அந்தக் கவிதை மிகச்சிறந்த கவிதை என்பது என் திண்ணம்.

அந்த மிகச்சிறந்தக் கவிதையின் இணைப்பு கீழே உள்ளது

https://www.facebook.com/100005429500121/posts/962267497297558/

20/12/2018

வாழ்த்துகள் விஜய குருநாத சேதுபதி




(இந்த ராசா எப்பப் பார்த்தாலும் தத்துவமே சொல்றாப்லன்னு நினைக்க வேண்டாம். அதிலிருந்து சற்றுமாறி இதோ ஒரு ரசிகனாய் என் மனம் கவர்ந்த நாயகனுக்கு எழுதியது)

கத்தியில் கில்லியாடுவோர் முன்னே
கத்திக்கத்தி வீரம்காட்டுவோர் முன்னே
தென்றலாய் நடுவில் வந்து
தென்மேற்குப் பருவக்காற்றாகி
ப்ப்பா.......
நானும் ரவுடிதான்னு
நடைபோடும் நாயகனே...
நீ மக்களின் நாயகனே..

அலட்டாத தோரணையில்
ஆர்ப்பரிக்கா பாவனையில்
இயல்பான பேச்சில்
ஈர்ப்புள்ள நடையில்
உயிர்ப்புள்ள நடிப்பில்
ஊக்கமிகு துடிப்பில்
எளிமையான உடையில்
ஏற்றமுள்ள படங்கள் தந்து
ஐயமில்லாது வெற்றி பெரும்
ஒரு நடிகனாய்... இல்லை இல்லை
ஓரே நடிகனாய் வலம் வரும்
ஔதாரியமிக்க நாயகனே...நீ
மக்களின் நாயகனே

வாழ்த்துகள் விஜய குருநாத சேதுபதி
வாழ்க வளமுடன்

#சீதக்காதி_வெற்றிபெற_வாழ்த்துகள்

✍️செ. இராசா
தன்னைப் பெரிதாய் நினை//
தன்னை மட்டுமே பெரிதாய் நினைக்காதே//

19/12/2018

(தமிழ் இலக்கணம்-2)



அசை என்றால் என்ன?
*****************************
ஒவ்வொரு பாடலில் வரும் அடிகளும் சீர்களால் ஆனது. ஒவ்வொரு சீரும் அசைகளால் ஆனது. அசை சரியாக வரும் பாடலே நல்ல இசையாக மாறும்.

சீர்களில் மொத்தம் எத்தனை வகைகள் உள்ளன?
***************************************************************
சீர்களில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன.

அவையாவன...

1. ஓரசைச்சீர் (2 வகைகள்)
2. ஈரசைச்சீர் (4 வகைகள்)
3. மூவசைச்சீர் (8 வகைகள்)
4. நாலசைச்சீர் (16 வகைகள்)

ஓரசைச்சீர் பற்றி விளக்குக?
***********************************
ஒரே அசையோடு வரும் சீர் ஓரசைச்சீர் ஆகும். அவற்றில் நேர், நிரை என்ற இரண்டு அசைகளில் ஏதேனும் ஒரு அசையோடு வரும்.

வாய்ப்பாடு:

நேர்---நாள்
நிரை- மலர்

உதாரணம்: (இதுவே அடிப்படை)

க, கா, கல், கால்------நேர்
கல, கலா, கலம், கலாம்-----நிரை

ஈரசைச்சீர் பற்றி விளக்குக?
***********************************
இரண்டு அசைகளின் கூட்டாக வரும் சீர் ஈரசைச்சீராகும். அவை நான்கு வகைப்படும். (மாச்சீர்-2 + விளச்சீர்-2)

நேர் நேர்------தே மா
நிரை நேர்-----புளி மா
நேர் நிரை-----கூ விளம்
நிரை நிரை----கரு விளம்

(பழ மாங்காய், புளித்த ஊறுகாய் மாங்காய், வில்வ மரம், விளா மரம் என்ற ரீதியில் வைத்துள்ளார்கள்)

மூவசைச்சீர் பற்றி விளக்குக?
***************************************
ஈரசைச்சீருடன் நேர் சேர்க்க நான்கு சீர்களும், நிரை சேர்க்க நான்கு சீர்களும் மொத்தம் எட்டு சீர்கள் வருகின்றன. நேர் சேர்க்க வருவது காய்ச்சீர் என்றும் , நிரை சேர்க்க வருவது கனிச்சீர் என்றும் அழைக்கப்படுகிறது. (காய்ச்சீர்-4 + கனிச்சீர்-4)

நேர் நேர் நேர்- -------தேமாங்காய்
நிரை நேர் நேர்-------புளிமாங்காய்
நேர் நிரை நேர்-------கூவிளங்காய்
நிரை நிரை நேர்-----கருவிளங்காய்

நேர் நேர் நிரை- -------தேமாங்கனி
நிரை நேர் நிரை-------புளிமாங்கனி
நேர் நிரை நிரை-------கூவிளங்கனி
நிரை நிரை நிரை-----கருவிளங்கனி

நாலசைச்சீர் பற்றி விளக்குக?
*****************************************
எப்போதாவதுதான் நாலசைச்சீர் வருகிறது. இருப்பினும் இதையும் தெரிந்து கொள்வோம். மூவசைச்சீருடன் நேர் சேர்க்க எட்டு சீர்களும், நிரை சேர்க்க எட்டு சீர்களும் மொத்தம் பதினாறு சீர்கள் வருகின்றன. நேர் சேர்க்க வருவது பூச்சீர் என்றும், நிரை சேர்க்க வருவது நிழற்சீர் என்றும் அழைக்கப்படுகிறது. (பூச்சீர்-8 + நிழற்சீர்-8)

நேர் நேர் நேர் நேர்-- -------தேமாந்தண்பூ
நிரை நேர் நேர் நேர்--------புளிமாந்தண்பூ
நேர் நிரை நேர் நேர்--------கூவிளந்தண்பூ
நிரை நிரை நேர் நேர்------கருவிளந்தண்பூ

நேர் நேர் நிரை நேர்-- -------தேமாநறும்பூ
நிரை நேர் நிரை நேர்--------புளிமாநறும்பூ
நேர் நிரை நிரை நேர்--------கூவிளநறும்பூ
நிரை நிரை நிரை நேர்-----கருவிளநறும்பூ

நேர் நேர் நேர் நிரை-- -------தேமாந்தண்ணிழல்
நிரை நேர் நேர் நிரை--------புளிமாந்தண்ணிழல்
நேர் நிரை நேர் நிரை-------கூவிளந்தண்ணிழல்
நிரை நிரை நேர் நிரை------கருவிளந்தண்ணிழல்

நேர் நேர் நிரை நிரை-- -------தேமாநறுநிழல்
நிரை நேர் நிரை நிரை--------புளிமாநறுநிழல்
நேர் நிரை நிரை நிரை--------கூவிளநறுநிழல்
நிரை நிரை நிரை நிரை-----கருவிளநறுநிழல்

(தண்பூ-4 , நறும்பூ -4 , தண்ணிழல்-4 , நறுநிழல் -4 )

செ-இராசா---

மோனை & எதுகை



அன்பு நண்பர்களே,

தமிழில் இலக்கணம் பற்றி நிறையபேர் சொல்லி இருந்தாலும் கீ. வா. ஜகந்நாதன் ஐயா அவர்களின் "கவி பாடலாம்" என்ற புத்தகத்தில் மிக மிக எளிய முறையில் புரியும்படி விளக்கியுள்ளார். அதில் இருந்து எடுத்தவற்றை மேலும் சில குறிப்புகளோடு தருகின்றேன்.

மோனை:
************
* முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். (உ.ம்: க-க)

* அ-ஆ-ஐ-ஔ----என்ற நான்கும் வரலாம். (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: க-கா-கை-கௌ)

* இ-ஈ-எ-ஏ-என்ற நான்கும் வரலாம். (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: கி-கீ-கெ-கே)

* உ-ஊ-ஒ-ஓ-என்ற நான்கும் வரலாம் (இது இந்த வரிசையில் வரும் உயிர்மெய் எழுத்துக்களுக்கும் பொருந்தும். உ.ம்: கு-கூ-கொ-கோ)

* இது போக சிறப்பு விதியாக ச-வுக்குத் த-வும், ஞ-வுக்கு ந-வும், ம- வுக்கு வ-வும் வரலாம். (ச-சா-சை-செள-த-தா-தை-தௌ---எட்டு எழுத்துக்களை மோனையாக்கலாம்...இப்படியே மற்ற இரண்டு இணைகளுக்கும் வரும்)

எதுகை
**********
* இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.

* கடம்-படம்-தடம்-----என்று வருவது ஒத்த எதுகை.

* கலம்-கலி----என்று வருவது வருக்க எதுகை. குறில் என்றால் குறில்/ நெடில் என்றால் நெடில் (ல-லி-லு-லெ-லொ மற்றும் லை (லய்-என்று வருவதால், லை- விதிவிலக்கு),

* கற்ற-சட்ட----என்று வருவது இன எதுகை. (க ச ட த ப ற---அல்லது --- ஞ-ங-ண-ந-ம-ன----அல்லது--ய-ர-ல-வ-ழ-ள)

* சிறப்பு விதியாக வருவது ஆசிடை எதுகை-- (ய்-ர்-ல்-ழ்---என்ற எழுத்துக்கள் வந்ததற்குப் பின் வரும் மூன்றாம் எழுத்து கணக்கில் கொள்ளப்படுவது....உ. ம்: தீமை- வாய்மை)

* மேலும் ஒரு முக்கிய விதி: (கம்பு-பாம்பு என்றால் தவறு , காம்பு-பாம்பு என்றால் சரி....அதாவது முதல் எழுத்து குறிலா நெடிலா என்பதும் கவனிக்க வேண்டும்)

-----தொடரும்--

--செ. இராசா

18/12/2018

பெரிதாய் நினை


கருத்திலே வள்ளுவன்போல்- ஞானச்
செருக்கிலே பாரதிபோல்;

கற்பனையில் கம்பனைப்போல்- நல்ல
சொற்புனைவில் கவியரசர்போல்;

அருட்கவியில் வள்ளலார்போல்-பெரும்
பொருட்கவியில் வாலியைப்போல்;

கைக்கூவில் கவிக்கோபோல்- புதுக்
குக்கூவில் மீராவைப்போல்;

தத்துவத்தில் கலைஞரைப்போல்-நல்ல
சொற்பதத்தில் வைரமுத்துபோல்;

இசைக்கவியில் ரமணரைப்போல்-நம்ம
இதயக்கவி விக்டரைப்போல்;

தமிழ்க்கவியாய்க் கோலோச்ச- நானும்
தமிழ்த்தாயை வேண்டுகிறேன்!!!

✍️செ. இராசா

திரு. விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணாவை வணங்கி 🙏🙏🙏 சமர்ப்பிக்கிறேன்

(இடம்: கம்பர் கோவில், நாட்டரசன்கோட்டை)

#பெரிதாய்_நினை
#பெரிதிலும்_பெரிது_கேள்

17/12/2018

மனமெனும் மந்திரச்சாவி



என்னதான் மனிதன் முயன்றாலும்
எண்ணம்தான் மனிதனை முன்னேற்றும்!
என்னதான் அறிவியல் வளர்ந்தாலும்
எண்ணம்தான் அறிவை வளமாக்கும்!

மனிதனில் மனத்தைக் கழித்துவிட்டால்
மிருகமாய் உலகம் வகைப்படுத்தும்!
மனதினில் மாசினைக் கழித்துவிட்டால்
மனிதனை தெய்வமாய் மிகைப்படுத்தும்!

விரிந்து செல்கிற மனதினிலே
பிரபஞ்சம் அருகில் புலனாகும்!
குருகிச் செல்கிற மனதினிலே
குற்றமே கண்ணில் புலனாகும்!

மனமெனும் மந்திரச் சாவியிலே
மாயையின் பூட்டும் திறந்துவிடும்!
மனமெனும் அற்புதக் கருவியிலே
மறைந்துள்ள பொருளும் தெரிந்துவிடும்!

#வெற்றி_பெறாத_கவிதை
✍️செ. இராசா

அகச வரிசை



அகர வரிசை
*************
அன்பு இல்லையேல் அகிலம் இல்லை
ஆசை இல்லையேல் பிறப்பு இல்லை
இருப்பு இல்லையேல் செலவு இல்லை
ஈரம் இல்லையேல் மனிதன் இல்லை
உண்மை இல்லையேல் உறவு இல்லை
ஊக்கம் இல்லையேல் முயற்சி இல்லை
எளிமை இல்லையேல் மதிப்பு இல்லை
ஏற்றம் இல்லையேல் வளர்ச்சி இல்லை
ஐயம் இல்லையேல் கேள்வி இல்லை
ஒருமை இல்லையேல் பன்மை இல்லை
ஓர்மை இல்லையேல் கூர்மை இல்லை
ஔவை இல்லையேல் இதுவும் இல்லை

க- வரிசை
************
கண்கள் இல்லையேல் காட்சி இல்லை
காதல் இல்லையேல் கவிஞன் இல்லை
கிழமை இல்லையேல் வாரம் இல்லை
கீதை இல்லையேல் கண்ணன் இல்லை
குழப்பம் இல்லையேல் தெளிவு இல்லை
கூட்டம் இல்லையேல் கோசம் இல்லை
கெடுதல் இல்லையேல் கேடு இல்லை
கேள்வி இல்லையேல் அறிவு இல்லை
கைதி இல்லையேல் சிறைகள் இல்லை
கொள்கை இல்லையேல் கட்சி இல்லை
கோடி இல்லையேல் கோட்டை இல்லை
கௌரி இல்லையேல் உயிர்கள் இல்லை

ச- வரிசை
***********
சட்டம் இல்லையேல் நீதி இல்லை
சாட்சி இல்லையேல் தீர்வு இல்லை
சிந்தை இல்லையேல் மனிதன் இல்லை
சீற்றம் இல்லையேல் துன்பம் இல்லை
சுற்றம் இல்லையேல் சிறப்பு இல்லை
சூடு இல்லையேல் திருத்தம் இல்லை
செல்வம் இல்லையேல் இனிமை இல்லை
சே இல்லையேல் புரட்சி இல்லை
சைத்தான் இல்லையேல் பாவம் இல்லை
சொந்தம் இல்லையேல் பந்தம் இல்லை
சோம்பல் இல்லையேல் தோல்வி இல்லை
சௌரியம் இல்லையேல் எதுவும் இல்லை

✍️செ. இராசா

(தம்பி தத்துவம்லா சொல்றாப்லன்னு நினைக்க வேண்டாம்....ச்சும்மா ஒரு முயற்சி....மாற்றம் வேண்டுமெனில் தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்)

16/12/2018

பாரி- க(வி)தை

 பாரி- க(வி)தை
******************

கடையேழு வள்ளல்களின்
கொடைபற்றி கவிசொல்ல
தடையேது மில்லாமல்
தமிழ்வந்து துணைநிற்கத்
தமிழ்த்தாயின் தாள்களினை
தலைகுனிந்து வணங்குகிறேன்!
ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம்போல்
பார் புகழ்த் தமிழனுக்கு
பாரியின் கதை போதும்!

அவன் கதை முழுமையுமே
அனைவரும் அறிந்தாலும்
அதனையும் சுருக்கிடவே
அடியேன் நான் முயல்கின்றேன்!
அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனைப் பொருத்தருள்வீர்!

பாரி அறிமுகம்
**************
 சிவகங்கைச் சீமையிலே
சிங்கம்புணரி அருகினிலே
பிரான்மலையில் கோட்டைகட்டி
பெருங்குணத்தின் கொடை காட்டி
பாரி என்ற சிற்றரசன்
பார் புகழ ஆண்டு வந்தான்

கபிலரின் நட்பு
*****************
பாடி வரும் புலவருக்கும்
நாடி வரும் அனைவருக்கும்
கொடையளித்துக் கரம் சிவந்த
கொடை வள்ளல் பாரியென்று
தென்னகத்துக் கவிஞரெலாம்
தேடிதினம் வருகையிலும்
தமிழ்க்குடி வேந்தனுக்கு
தமிழ்த்தாகம் தீரவில்லை!

தமிழ்ச் சங்கம் கண்டெடுத்த
தலைசிறந்த புலவர்களில்
கபிலரை வரவழைத்து
கவிதையிலே தமிழ் குடித்து
கவிஞரின் நட்போடு
கடமையிலே களிப்புற்றான்!

முல்லைக்குத் தேர்
******************
அந்தி சாயும் வேளையிலே
அரண்மனைக்குத் திரும்புகையில்
அவன் கண்ட ஓர் காட்சி
அகத்தினை வருடியது...

வாடிய பயிர் கண்டு
வாடி நின்ற வள்ளலார்போல்
ஆடிய முல்லை கண்டு
ஆடிப் போய் நிற்கின்றான்..

காற்றில் கவி பாடும்
காசில்லாக் கவிஞன்போல்
காற்றில் கொடியாடும்
காட்சியினைக் காண்கின்றான்...

பற்றிடத் துணைதேடும்
பச்சிளம் குழந்தையைப்போல்
முல்லைக் கொடிபடர
முழு வீச்சில் தேடுகின்றான்...

அந்நேரம் அவனுக்கு
ஆன பொருள் சிக்கவில்லை
ஆயினும் அவனன்று
அப்படியே வரவில்லை..

தான் வந்த தேரினையே
தானமாய்க் கொடுத்துவிட்டு
கொடியைப் படரவிட்டு
கொடை வள்ளல்
நடை போட்டான்!

மூவேந்தர்- சினம்
*****************
பாரியின் பெரும் புகழும்
பார் முழுதும் பரவியதில்
தமிழனின் தீக்குணமும்
தடையின்றிப் பற்றியதில்
பாண்டிய மன்னனோ
பாரி மகள் வேண்டுமென்றான்!

மண முடிக்க மறுத்தாலோ
மறு கணமே போரென்றான்!
அங்கவையும் சங்கவையும்
அந்தப்புரம் சென்றிடவா
பிரான்மலை அரசனிங்கே
பிராணனை வளர்க்கின்றேன்!

வாடா....தமிழ் மண்ணா(ன்னா)
வாங்கி நீ சென்றிடலாம்
கொடுத்தே பழகியவன்
கொடுப்பதை ஏற்பாயோ...?!!!

சப்பைக் காரணத்தை
சாக்காக வைத்திருந்த
மூன்று வேந்தர்களும்
முன்னேறி வருகின்றார்...!!

போர் திறம்
**********
குறுநில மன்னனுக்கு
பெரும்படை இல்லையென்று
சின்னக் கணக்கோடு
முன்னேறி வருகின்றார்...

மலையே அரணாக
மலையாளும் சிற்றரசன்
மலையின் மேலிருந்து
மழைபோலே தாக்குகிறான்...

கல்லையும் சரங்களையும்
கடல்போல வைத்திருந்த
குறுநில மறம் கண்டு
குழப்பத்தில் திகைக்கின்றார்!

மூவேந்தர் தோல்வி
*******************
மலைவழி அத்தனையும்
மடைபோல அடைத்தாலோ
மலைக்குடி அத்தனையும்
மலையிறங்கி வருமென்று

மூவேந்தர் படையன்று
முகாந்திரம் அமைத்திருக்க;
மூங்கிலின் அரிசியோடும்
முக்கனியில் பலாவோடும்
சுரக்கின்ற சுனையோடும்
சோர்வில்லாக் கபிலரோடும்
தேன்தமிழ்த் துணையோடு
தேவர்போலே வாழ்வதாக
கிளி தரும் உணவோடு
கிலியின்றி வாழ்வதாக
அம்பிலே பாட்டெழுதி
அங்கிருந்து அவனனுப்ப
அதனை பார்த்தவுடன்
அனைவருமே திரும்பி விட்டார்!

சூழ்ச்சி
*******
கபிலர் இல்லாத
கணம்தேடிக் காத்திருந்த
காக்காய்க் கூட்டமொன்று
கவ்வியது பாரியினை...

இல்லையெனச் சொல்லாத
எல்லையில்லாக் கொடையாளி
கொடிக்குத் தேரினைப்போல்
கொடுமைக்கு உயிர் தந்தான்!

கபிலரின் அன்பு
***************
தமிழினம் முழுமையுமே
தலை குனிந்த அந்நாளில்
அங்கவை சங்கவையை
ஔவையிடம் ஒப்படைத்து
விண்ணிலே கவி பாட
நண்பரும் உயிர் நீத்தார்!!!

வாழ்க தமிழ்!
***********
தமிழறம் காத்தவனின்
தன்மானப் பிள்ளைகளை
தமிழே காத்த கதை
தமிழ் மன்னன் கதையன்றோ?
✍️செ. இராசா

  https://youtu.be/1fuPCCK3jqs

சிலை-2 (இது அரசியல் பதிவல்ல)


சிலைகளை வணங்குதல் தவறென்று
சிலைபற்றிப் பேசியத் தலைவருக்கு
சிலையினை நிறுவிய அன்பர்களே- அவர்
சிலையினை வணங்கிட மறவாதீர்!

சடங்குகள் செய்வது தவறென்று
சமயத்தை எதிர்த்தத் தலைவருக்கு
சடங்குகள் செய்கிற தோழர்களே- இந்த
சமயத்தை என்றுமே மறவாதீர்!

15/12/2018

நீரோடு நீர் சேர்த்து



நீரோடு நீர் சேர்த்து
நீர் மோதும் விளையாட்டில்
நீர்த் தூவும் விதையொன்றே
நீர்க் குடத்தில் துளிர்க்கிறது!

உடலோடு உடல் சேர்ந்து
உறவாடும் விளையாட்டில்
உருவாகும் அணுவொன்றே
உயிரொன்றைத் தருகிறது!

#__நம்பிக்கை




இருளொன்று வந்தாக்க
........வெளிச்சந்தான் வரும்புள்ள
இலையுதிர்ந்து போனாக்க
........வசந்தந்தான் வரும்புள்ள
ஒருபோகம் போச்சுதுன்னா
.........மறுபோகம் வரும்புள்ள
ஒருவுசுறு போச்சுதுன்னா
.........மறுவுசுறு வருமா புள்ள?!!

செ. இராசா

#நம்பிக்கை

இது மருதம் நிகழ்வில் மூன்றாமிடம் பிடித்த கவிதை

https://www.facebook.com/groups/1409890092433704/permalink/1970400379716003/

14/12/2018

உன் பார்வையில்


பெண் பார்க்கையில்- உந்தன்
கண் பார்க்கையில்- நான்
மின்னலின் கீற்றொன்று கண்டேன்- அடி
அன்றுதான் நானென்னைக் கொன்றேன்!

நீ பார்க்கையில்- பின்பு
நான் பார்க்கையில்- நான்
மனத்திலே மலரொன்று கண்டேன்- அடி
அன்றுதான் நான்மாற்றம் கொண்டேன்

ஊர் பார்வைக்கும்- உந்தன்
ஓர் பார்வைக்கும்- நான்
என்னுள்ளே பலமாற்றம் கண்டேன்- அடி
அன்றுதான் நான்காதல் கொண்டேன்!

✍️செ. இராசா

PC உதவி: திரு. முத்து சாமி இயக்குநர்

13/12/2018

நாம் எங்கே போகிறோம்?


நம்முடைய தாத்தா பாட்டிகளுக்கெல்லாம் தன்னுடைய பிறந்த நாள் என்னவென்றே தெரியாது. நம் அப்பாக்கள் பிறந்த நாளை அறிந்து வைத்திருந்தார்கள். நம்மை பிறந்த நாளன்று கோவில் போய் வரச்சொன்னார்கள். அவ்வளவே.....பிறந்த நாளுக்கென்று உடையெல்லாம் தனியாக வாங்கி தந்ததில்லை. சாக்கெலெட் மட்டும் கொடுத்துவிட்டு பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவோம்.

மேலும், முன்பெல்லாம் பிறந்த நாள் விழாவை அரசியல் தலைவர்களும், நடிகர்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். சாமானிய மக்களுக்கு பண்டிகைகள் மட்டுமே கொண்டாட்டமாக இருந்தது.

ஆனால், இன்று நிலைமை அப்படியா உள்ளது?!! அனைவரும் பிறந்த நாள் கொண்டாடுகிறோம். குழந்தைகளுக்காக என்று சொல்லிச்சொல்லி பெரியவர்கள் நடத்தும் ஆடம்பர விழாவாக மாறிவிட்டது. அது என்னமோ கேக் என்ற ஒன்றைக் கண்டிப்பாக வெட்டியே ஆக வேண்டுமாம். இல்லையென்றால் தெய்வக்குத்தம் ஆகிவிடும் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்டோம்.

அதைவிடக் கொடுமை... இப்போது சில வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடைபெறுகிறது....என்னவென்றால் தங்கள் பிள்ளைகளுக்குப் பிறந்த நாள் வந்தால் அவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளையோடு படிக்கும் மற்ற பிள்ளைகளைக் (மட்டும்) கொண்டுவந்து (McDonald போன்ற) உணவகங்களில் விடுமாறு சொல்கிறார்கள். பெற்றோர்கள் வெளியில் காத்திருந்து அழைத்துப்போக வேண்டும். இதெல்லாம் கேட்கும்போதே கோபம் வருகிறதல்லவா?!!

நான் கூட வட இந்தியர்களோ என்று நினைத்தால், அவர்கள் தமிழ்க்குடும்பத்தினராம் மேலும் தமிழ் சார்ந்த அறக்கட்டளைகள் வைத்துள்ளவர்களாம். அடக்கடவுளே..... இதுதான் தமிழறமா?!! “விருந்தோம்பல்” என்ற அதிகாரம் எல்லாம் இவர்கள் படித்துள்ளார்களா இல்லையா?!!

அவர்கள் கிடக்கட்டும்.... நீங்கள் போகலாமா? என்று நீங்கள் கேட்க வருவது எனக்கும் புரிகிறது. அதிகமுறை தவிர்த்திருந்தாலும் இம்முறை வற்புறுத்தலினால் என்னதான் நடக்கிறது என்று பார்க்கவே நாங்களும் சென்று காத்துக்கிடந்தோம். கொடுமை...(இதுவே முதலும் கடேசியும் என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டேன்)

பிள்ளைகளின் மனதில் ஒரு புதிய கலாச்சாரத்தை விதைத்து வருங்காலத்தை நாம் எங்கே கொண்டு போகிறோம்?!!!
(இந்த வெளிநாட்டுக் கடைக்காரன், பிள்ளைகளைக் குறி வைத்தே பல பரிசுகள் தந்து தன் கடையின் பெயரைக் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிக்கிறான் என்பதை உணர வேண்டாமா?!)

வேதனையுடன்....

✍️செ. இராசா

(நண்பர்களே,

கேக் வெட்டாமல் அதற்கு மாற்றாக என்ன செய்யலாம்?....ஒரு யோசனை சொல்லுங்களேன்)

அகப்பை_மூடனின்_குரல்



அகப்பை இங்கே கண்டவுடன்
அகப் பை உள்ளே உள்ளிருந்த
முகப்பைக் கிழித்து வருகின்ற
நினைப்பை இங்கே எழுதுகின்றேன்...

பானைத் தேனிலே அகப்பையைப்போல்
பாரதி சொன்ன உவமையைப்போல்
ஞான வகுப்பிலே மூடனைப்போல்
நானும் இருந்ததை எண்ணுகின்றேன்

அகநூல் எழுத்தை மாற்றாமல்
முகநூல் எழுதிடும் மூடனைப்போல்
அகத்தின் பையைத் திறக்காமல்
அகப்பை மூடனாய் இருந்துவிட்டேன்

எத்தனை எத்தனை பாடங்களை
எத்தனை முறைநான் கேட்டாலும்
எனக்குள் மாற்றம் காணாமல்
எத்தனை நாட்களைக் கழித்துவிட்டேன்

ஐயோ.... கொடுமை இதுவென்று
குய்யோ முறையென அழுவதிலே
இன்றொரு பயனில்லை என்றாலும்
இனியும் தொடர்ந்திட அனுமதியேன்...

✍️அகப்பை_மூடனின்_குரல்

12/12/2018

#மீண்டும்_குழந்தையாவோம்_மனதில்




சினத்தை வைத்துக் கொண்டு
சீறுவதும் இல்லை!- நீ
மனத்தை சிதைத்துக் கொண்டு
மயங்குவதும் இல்லை!

ஒன்றை நினைத்துக் கொண்டு
உருகுவதும் இல்லை!- நீ
தன்னை வியந்து கொண்டு
தடுமாறுவதும் இல்லை!

உன்போல் இருந்துவிட்டால்
உலகத்தில் சண்டை இல்லை..
முன்போல் இருந்துவிட்டால்
எந்நாளும் தொல்லை இல்லை...

#மீண்டும்_குழந்தையாவோம்_மனதில்

#கணங்களில்_வாழ்வோம்!




அந்த ஒரு கணம் பொறுத்துவிட்டால்
எந்த ஒரு சினமும் ஓடிவிடும்...

அந்த ஒரு கணம் கடந்துவிட்டால்
எந்த ஒரு சபலமும் கடந்துவிடும்

அந்த ஒரு கணம் விழிப்படைந்தால்
எந்த ஒரு துன்பமும் விலகிவிடும்

அந்த ஒரு கணம் தானே.....
இந்த ஒரு வாழ்க்கை........

ஆம்...

கனமின்றி வாழ
#கணங்களில்_வாழ்வோம்!

செ. இராசா

(கணம்- Moment, அந்த நேரத்தில்
கனம்- weight, சுமை)

நெஞ்செல்லாம் நினைவோடு


நெஞ்செல்லாம் நினைப்ப வச்சு
கெஞ்சவிடும் என்னவளே- உன்
நெஞ்சின் நினைப்பு எல்லாம்-என்
நெஞ்சில் மின்னுதடி!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

கண்ணெல்லாம் காதல் வச்சு
எண்ணத்தை மறைப்பவளே- உன்
கண்ணின் காட்சி எல்லாம்- என்
கண்ணில் தெரியுதடி!

👀👁👀👁👀👁👀👁👀👁👀👁

உயிரெல்லாம் அன்பை வச்சு
ஊமைபோல் நடிப்பவளே- உன்
உதட்டின் அசைவு எல்லாம்- என்
உதட்டில் வார்த்தையடி!

🗣👄🗣💋🗣💋🗣💋🗣💋🗣

(தலைப்பு மனைவி கொடுத்தது)

✍️செ. இராசா

11/12/2018

உலகெனும் கண்ணாடியில்
உன் உருவமேத் தெரிகிறது..

தரிகிட தகதிமி நடராஜா

இதோ சைவத்திற்கும் ஒரு பாடல்
*******************************
தகதக தகதிமி தகதக தகதிமி
தகதக தகதிமி நடராஜா
தரிகிட தகதிமி நடராஜா (1x2)

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

இசைக்கின்ற இசையின்
இசையிலே இசைந்து
அசைவது மட்டுமா நடனம்?- இல்லை
இசைக்கா இசையிலும்
இசையினை இசைக்கிற
அசைவுள்ள ஆட்ட(மே)மும் நடனம்!

தாம்தூம் தாளத்தில்
தகதிமி ஜதியினில்
ஆடுதல் மட்டுமா நடனம்?- இல்லை
அடிக்கிற பறையினில்
இடிக்கிற இசையினில்
துடிக்கிற துள்ள(ளே)ளும் நடனம்!

நாயண மேளத்தில்
நாட்டிய சபையினில்
காட்டுதல் மட்டுமா நடனம்?- இல்லை
நாட்டினை விட்டவர்
காட்டினைத் தேடையில்
காட்டிடும் ஆட்ட(மே)மும் நடனம்!

 #மார்கழி மாதத்தில்
கானக சபையினில்
ஆடுதல் மட்டுமா நடனம்- இல்லை
#ஆடியில் ஆடிடும்
ஆலயம் கூடிடும்
ஆனந்த ஆட்டமும் நடனம்!

#ஜிகுஜிகு உடையினில்
விறுவிறு நடையினில்
அடிக்கிற கூத்தா நடனம்- இல்லை
#கிண்கிணி ஓசையில்
பொங்கிடும் ஆசையில்
வந்திடும் ஆட்டமே நடனம்!

தில்லையின் கூத்தனே நடராஜா- நீ
எல்லையில் லாதவன் நடராஜா
அணுவிலே அசைந்திடும் நடராஜா-நீ
அனைத்திலும் ஆடிடும் நடராஜா

✍️செ. இராசா
https://youtu.be/rJRAZsh9lUw

10/12/2018

இயற்கை விவசாயம்



பசுமைப் புரட்சியென்றும்
பயிரில் புதுமையென்றும்
மகசூல் பெருகுதென்று
மகிழ்ச்சி கொள்ளவச்சு
மரபணு விதைக்குள்ளே
மரணத்தை விதைச்சபோதும்
பழைய நெல் வாங்கிவச்சு
புது நெல் தரும்போதும்
என்ன காரணம்னு
எவருமே கேக்கலையே?!!

வெள்ளைக் கோழி தந்த
வெளிநாட்டுக் காரனால
சைவ உணவுலயும்
சவக் கணக்கு கூடயில
பூச்சிகூட திங்காத
புழுத்த காய்கறிய
சந்தையில விக்கவைச்சு
சனத்தை கொல்லையில
படிச்ச பயபுள்ளை
பேசாமல் இருந்ததால
பாமர மக்களையும்
படுகுழியில் வீழ்த்திடுச்சே...

நிறைய பெத்து போட்டு
நிறைவோடு வாழ்ந்த மண்ணில்
குழந்தை இல்லையென்ற
குறைபோக வேணுமுன்னா
மிச்சமுள்ள நம்பிக்கையில்
மீட்டிடுவோம் விவசாயத்தை...
கருணையுள்ள இதயத்தோடு
காத்திடுவோம் இயற்கையினை...

✍️செ. இராசா

09/12/2018

#உறவில்_போலி_வேண்டாமே



இவன் சொன்னான்
அவன் சரி இல்லையென்று
அவன் சொன்னான்
இவன் சரி இல்லையென்று- ஆனால்
இருவரும் நண்பர்களாம்

இவள் சொன்னாள்
அவன் கொடுமைக் காரனென்று
அவன் சொன்னான்
இவள் லாயக்கில்லாதவளென்று-ஆனால்
இருவரும் தம்பதியினராம்

இவர் சொன்னார்
அவருக்கு வேலையே தெரியாதென்று
அவர் சொன்னார்
இவருக்கு ஒன்றுமே தெரியாதென்று-ஆம்
இவர்கள் ஒரே குழுவினராம்

இவர் சொல்கிறார்
அவர் மரபே தெரியாதவரென்று
அவர் சொல்கிறார்
இவர் மதிக்கவே தெரியாதவரென்று-ஆம்
இவர்கள் முகநூல் உறவுகளாம்

#உறவில்_போலி_வேண்டாமே

✍️செ. இராசா

08/12/2018

ஆத்தோரத் தோப்புக்குள்ள


தன்னானே தானே நன்னே
தன்னானே நானே நன்னே
தன்னானே தானே நன்னே
தானா...னே நானே நன்னே

ஆத்தோரத் தோப்புக்குள்ள
காத்திருக்கும் பூங்குயிலே....
அத்தானின் நெஞ்சுக்குள்ள
சத்தியமா குத்தமில்ல...

என்னோட நெஞ்சுக்குள்ள
என்னைக்கோ வந்த மச்சான்
உன்னை நான் குத்தமுன்னு
என்னைக்குமே சொன்னதில்லை...

ஓக்கூரூ சந்தையில
கத்திரிக்கா வாங்கையில
ஆத்தாடி உன்னால நான்
காத்தாடிப் போனேன் புள்ள...

மின்சாரக் கண்ண வைச்சு
என்னோடு பேசும் மச்சான்
கண்ணாலம் கட்டிடுங்க
எந்நாளும் கேட்டிடலாம்...

ஆத்தோரம் கொஞ்சுகின்ற
அத்தை பெத்த சின்ன புள்ள
ஆவணி வந்த பின்னே
தாவணியே தேவை இல்லை

ஐயோ...ம்கூம்...போங்க மச்சான்
ஆசை வச்ச மீசை மச்சான்
சீக்கிரம் வாங்க மச்சான்
சின்ன புள்ள பாவம் மச்சான்....

இங்க பார்ரா...சின்ன புள்ளையாமுள்ள...
போங்க...மச்சான்

✍️செ. இராசா

காணொளிக்கு இங்கே....

https://www.facebook.com/100000445910230/posts/2257314940960014/

07/12/2018

நன்றி பாராட்டுதல்


ஒடி ஓடி தினம் உழைத்து- உடல்
வாடிப்போகும் கடை நாளில்- வெறும்
கட்டில் உறக்கமதை விரும்பி- பெரும்
பற்றில் உழலுவோரின் முன்னே- பல
கோடி நன்மை தரும் SKYயை- பலர்
தேடி இங்கு வரச்செய்த- நம்
இறையின் கருணையினை எண்ணி

இன்றைய தினம் நடைபெற்ற
முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு
முழு நிகழ்வு வரை ஒத்துழைப்பு வழங்கிய
அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும்
அகமார்ந்த நன்றியும்! பேரன்பும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

(தொண்டாற்ற வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்)
SKY- Simplified Kundalini Yoga
முப்பெரும் விழா- Wife appreciation day, SKY family day & Vision Diploma Course Convocation day

06/12/2018

அகம் கொண்ட வலியதனை
முகநூலில் ஏற்றினால்...
அங்கேயும் வந்துவிட்டாள்
அழகான ராட்சசி..😀

#தேநீர்




கண்களுனைக் கண்டபோது
என் மூளையிலே ஒரு மின்னல்...

கையால் உனைத் தொட்டபோது
என் உடம்பெல்லாம் புல்லரிப்பு...

இதழில் உன்னைத் தீண்டுகையில்
இதயமெல்லாம் படபடப்பு.....

அணு அணுவாய் சுவைக்கையிலே
அப்பப்பா.... என் சொல்வேன்..?!!

நா நீரில் சங்கமித்த தேநீரே..,
“நான்” தொலைந்து போனேனே உன்னாலே.....

#தேநீர்

05/12/2018

ஆழக்குழி தோண்டி..............



"ஆழக்குழி தோண்டி
அதிலே ஒரு முட்டையிட்டு
அண்ணார்ந்து பார்த்தால்
தொண்ணூறு முட்டை"

இல்லை.....இல்லை

"சின்னக் குழி தோண்டி
சின்னதொரு முட்டையிட்டு
மண்மேலே பார்த்தால்
எண்ணூறு முட்டை"

விடுகதைகள் இரண்டுக்கும்
விடை மட்டும் ஒன்றே...
விடை அறிந்த உங்களிடம்
வினா ஒன்று கேட்கின்றேன்?

மண் நீரைத் தானுறிஞ்சி
விண்ணோக்கி வளருகின்ற
தென்னையின் இளநீரில்
எத்தனையோ பலனிருக்க
அத்தனையும் விட்டுவிட்டு,

மண்ணை விட்டு எழும்பாத
மண்ணிலே உறங்குகின்ற
தென்னை நகல் இளநீரில்
என்ன பலன் உள்ளதென்று
ஏன் இதை வைக்கின்றீர்?

மரபணு மாற்றுவதில்
தெரியாத நோயோடு
மரணமும் வருமென்று
நம்மாழ்வார் சொன்னதெல்லாம்
நமக்காகத் தானன்றோ?!!

செ.இராசா

(ஆம் மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் இயற்கைக்கு விரோதமானது. அண்ணாந்து பார்க்கும் அளவு உயர்ந்து அதில் நீரோட்டம் நடந்து வளரும் தென்னையே மிக நல்லது..

எல்லாம் வியாபாரநோக்கில் சந்தைப்படுத்தி நாட்டை அழிக்கின்றார்கள் உறவுகளே.....தயவுசெய்து தவிருங்கள்)