30/09/2020

இப்படிக்கு, ✍️ செ.இராசா

  


 

#சிலர்_சொல்கின்றார்கள்
"#தான்_ஒருபடி_மேல்" என்று
எங்கே சொல்லுங்கள்
எப்படி அப்-படியென்று?!

அறிவுப்படியா?!
அறிவுப்படி என்றால்
அறிவின் உச்சப்படி ஆடுமா என்ன?!!

எனில் பொருளாதாரப் படியா?
வந்துபோகும் வரும்படிதான்
உங்களின் படி என்றால்
அந்தப் படி நிலைக்குமா என்ன?

என்னது சாதிப்படியா?
இன்னும் சாதியைப் படி என்றால்
ஐயோ‌........பாவம்
முதலில் போய்ப் படியுங்கள்
அதுவே உங்களை ஏற்றிவிடும் படி
நானல்ல உங்களின் படி...

ஆமாம்..
நான் உங்களை அளக்கும் படி என்றால்
நீங்கள் எப்படி உருப்படி (அ) உயர்படி?!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்

 

ஆசிரியரோ....ஆசாரியோ
இருவரின் நிலைப்படிகள்
வேறு வேறு...

வணிகரோ‌....வாசகரோ
இருவரின் தரப்படிகள்
வேறு வேறு...

ஆமாம்‌...
எப்படி அப்படிச் சொல்கின்றீர்
நீங்கள் ஒரு படி மேல் என்று...

இருக்கலாம் நீங்கள்
அப்படியிலேயே யோசிப்பதால்...
கொஞ்சம்...
அப்படியே‌ மேலே பாருங்கள்...
.......
#இப்படிக்கு,
✍️செ.இராசா

ஆத்திசூடி விளக்கம் பகுதி-4---சகர வருக்கம்

 


#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_4
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#சகர_வருக்கம்

#சக்கர_நெறி_நில்_1
நன்னெறி தர்மத்தை நன்றாக உள்வாங்கி
அன்னெறியில் நிற்றல் அழகு

#சான்றோரினத்திரு_2
நற்சான்றாய் வாழ்கின்ற நல்லோரின் கூட்டத்தைச்
சுற்றமாய் ஆக்கியே சூழ்

#சித்திரம்_பேசேல்_3
அடுக்குத் தொடரில் அழகாய்ப் பேசி
கெடுக்கும் செயலை விடு

#சீர்மை_மறவேல்_4
சிந்தை மறவாத சீரான நல்லெண்ணம்
வந்திட வந்திடும் வாழ்வு

#சுளிக்கச்_சொல்லேல்_5
காட்டாறு பாய்வதுபோல் கண்டபடி பேசாதே
கேட்போர் முகம்சுளிப்பர் கேள்

#சூது_விரும்பேல்_6
சூதால்‌ வருவது சூதாலே போவதால்
சூதாட்டம் வேண்டாம் விடு

#செய்வன_திருந்தச்_செய்_7
செய்கின்ற செய்கை சிறிதாய் இருந்தாலும்
செய்வதை நன்றாகச் செய்

#சேரிடமறிந்து_சேர்_8
சேருமிடம் யாதென்று சிந்தித்து நன்றாகச்
சேருபவர் கொள்வார் சிறப்பு

#சையெனத்_திரியேல்_9
சீயெனச் சொல்வதுபோல் சேட்டைகள் செய்யாமல்
ஆவெனச் சொல்வதுபோல் ஆகு

#சொற்சோர்வு_படேல்_10
வாய்குளறிப் போனதுபோல் வந்ததெல்லாம் பேசாமல்
வாய்மையுடன் பேசட்டும் வாய்

#சோம்பித்_திரியேல்_11
சோம்பித் திரிகின்ற சொத்தையாய் வீற்றிருந்தால்
தேம்பி அழுவாய் தெளி

✍️செ.இராசா

28/09/2020

சக்கரம்

 


அற்புதக் கண்டுபிடிப்பே
இந்தச் #சக்கரம்...
 
இது..
குயவரின் சக்கரமாய்ச் சுழன்றபோது
நெளிந்த பானைகளை
நிமிர வைத்தது
உருளும் சக்கரமாய்ச் சுழன்றபோது
நிமிர்ந்த மனிதனை
நகர வைத்தது..
 
பின்னர்...
மெதுவாய் நகர்ந்த சக்கரம்
வேகமாய்ச் சுழன்றபோது
மரச்சக்கரம்
இரப்பர் சக்கரமானது 

மனித வாழ்க்கையும்
மறுவடிவம் பெற்றது...
 
தரையில் ஓடிய சக்கரங்கள்
தலைதூக்கியபோது
விமானங்களாய்
விண்ணில் உலாவியது.‌
 
விசைச் சக்கரங்கள்
வேகமாய் இயங்கியபோது
இயந்திரக் கப்பல்களாய்
கடல் கிழித்தது...
 
ராட்டைச் சக்கரத்தால்
ஆடை பிறந்தது..
டர்பைன் சக்கரத்தால்
மின்சாரம் பிறந்தது..
 
ஒவ்வொரு சக்கரமும்
ஒவ்வொன்றை உருவாக்க
சுதர்சனச் சக்கரமாய்
சுழன்றது மனித வாழ்வு..
காலத்தின் சக்கரத்தில்
பேரண்டம் முதல்
அணுத்துகள் வரை
அத்தனையும்
ஆச்சரியச் சக்கரங்களே.‌
 
பிறவியின் சக்கரத்தில்
உயர்திணை முதல்
அஃறிணை வரை
அத்தனையும்
சூட்சமச் சக்கரங்களே..
 
அசோகச் சக்கரமோ
நடராஜ சக்கரமோ
எல்லாம்
தத்துவம் போதிக்கும்
தர்மச் சக்கரங்களே....
 
இங்கே
சக்கரங்கள் வெறும்
சக்கரங்கள் அல்ல...
சக்கரங்கள் எல்லாம்
சக்தி மையங்கள்...
உயர நோக்குங்கள்....
சூரியச் சக்கரம் தெரியும்
உயிரில் நோக்குங்கள்
மூலச் சக்கரம் புரியும்..
 
இப்போது சொல்லுங்கள்!
சுற்றும் சக்கரங்கள்
பம்பரம் என்றால்
சுழற்றும் சாட்டையென்பது
பரம்பொருள் தானே...?!!
 
✍️செ.இராசா

அளவறிந்து கொடு

 


வழங்கும் வரைக்கும்
வள்ளல் எனும் வாய்தான்
வழங்குவது நின்றால்
வாரி வழங்கும்...
வாய்க்குவந்தபடி

இருப்பதைத் தந்துவிட்டு
இருப்பின்றி இருப்பதல்ல கொடை;
இருப்பின் அளவறிந்து
இயன்றதைத் தருவதே கொடை..

பாத்திரம் காணானின் ஈகையும்
பா-திறம் காணானின் பாராட்டும்;
கொடுத்தாலும் நிறையாத
கொடுங்கோல் கணக்கே...
ஆம்..
கொடு... #அளவறிந்து_கொடு

✍️செ. இராசா
#வள்ளுவர்_திங்கள்_130

27/09/2020

ஆத்திசூடி விளக்கம் பகுதி-3, ககர_வருக்கம்

 


#ஆத்திசூடி_விளக்கம்_பகுதி_3
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#ககர_வருக்கம்

#கடிவது_மற_1
சிடுசிடு வென்றே சிதறிடும் வார்த்தை
கடுமையாய்க் கொட்டும் விடு

#காப்பது_விரதம்_2
தொடங்கிய ஒன்றைத் தொடர்ந்து நடத்தித்
தடையின்றிச் செய்தல் தவம்

#கிழமை_பட_வாழ்_3
உரிமையாய் எண்ணி உலகத்தில் வாழ்ந்தால்
உரிமையாய் மாறும் உலகு

#கீழ்மை_அகற்று_4
கீழ்நிலை எண்ணங்கள் கீழேயே தள்ளுவதால்
ஆழ்நிலையில் கீழ்மை அகற்று

#குணமது_கைவிடேல்_5
நாளும் தவறாமல் நல்லகுணம் மாறாமல்
வாழும் முறைமையிலே வாழ்

#கூடிப்_பிரியேல்_6
கூடிப் பழகியபின் குற்றங்கள் சொல்லிமனம்
வாடிப் பிரிதல் வலி

#கெடுப்ப_தொழி_7
கெடுக்க நினைத்தால் கெடுதியே நேரும்
விடுவிடு தீதை விடு

#கேள்வி_முயல்_8
செவிதிறந்து கேட்போர்க்கேச் சேர்கிறது ஞானம்
செவியிரண்டை நன்றாய்த் திற

#கைவினை_கரவேல்_9
கற்றிட்ட கைத்தொழிலை கற்கவே இல்லையென
உற்றார்முன் கூறல் விடு

#கொள்ளை_விரும்பேல்_10
கொள்ளை அடிப்பதிலே கோடி வருமெனினும்
கொள்ளை விருப்பம் விடு

#கோதாட்_டொழி_11
சூதாட்டம் ஆடியே சொத்தினைச் சேர்த்திட்டால்
பாதாளம் கிட்டும் விடு

#கௌவை_அகற்று_12
கிசுகிசு வேண்டியே கிண்டலாய்க் கூறல்
அசுத்தம் அதனை அகற்று

✍️செ.இராசா

தந்தையும் தாயும்

 

தந்தையும் தாயும் தருவித்த நாளைப்போல்
சிந்தையில் நாளும் சிறப்புற- சிந்தித்தால்
வந்திடும் நல்லதோர் வாழ்வு

25/09/2020

SPB ஐயா அவர்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்

 

 

 

இறந்ததாய்ச் சொல்லுறாங்க ஐயா
இறக்குமா கானமென்றும் மெய்யா
இழப்பதற் கொன்றுமில்லை ஐயா-நீ
இறந்ததாய்ச் சொல்வதெல்லாம் பொய்யா
 
உன் புகழ் கூறிடா ஊரார்-இங்கு
உனக்கிங்கு ஈடென்றால் வேறார்
உலகமே அழகுது பாராய்- இங்கு
உனக்கிணை யாரிங்கு ஈடாய்
 
கவிதையை உயிர்பித்தாய் நீதான்‌-அந்தக்
கவிதைக்கும் இறப்புண்டா கூறாய்
இசைத்தமிழ் யாதென்றால் நீதான்-உந்தன்
இசைக்கிங்கு இழப்புண்டா கூறாய்
இசைக்கென்றும் மொழியில்லை ஐயா -இனி
இசைக்கிற மொழிஇசை இறையா?!
 
✍️செ.இராசா

24/09/2020

தலையெழுத்தையும்...

 


தலையெழுத்தையும் மாற்றி எழுதலாம்
தன்னம்பிக்கை இருந்தால்..

23/09/2020

அய்கிரி நந்தினி மெட்டு-----------ஐயப்பன் பாடல்

 


#அய்கிரி_நந்தினி_மெட்டு
#ஐயப்பன்_பாடல்
#இன்று_பிறந்தது

ஹரிஹர சங்கமச் சத்திய புத்திர
சக்தி சொரூபனே வந்திடய்யா...
கலியுக இன்னலைத் தட்டிட வெட்டிட
இன்பம் நிறைத்திட வந்திடய்யா..

இறையரு ளே இனியெங்கும் ததும்பிட
நீயும்வரப் பிணி ஓடுமய்யா..
ஹரி ஹர னே சிவமாதவ மைந்தனே
கர்மக் கொடும்பிணி ஓட்டிடய்யா

இனிதுற எங்கிலும் நல்லறம் ஓங்கிட
பந்தள மாமணி வந்திடய்யா...
கனிவுடன் எங்களைக் காக்கிற வேந்தனே
உன்முகம் காட்டிட வந்திடய்யா...
................இறையருளே

பரவிடும் வன்துயர் பற்றினை நீக்கிட
எம்குல தெய்வமே வந்திடய்யா..
பரிவுடன் பல்லுயிர் காக்கிற மன்னனே
ஐங்கரன் தம்பியே வந்திடய்யா..
................இறையருளே

கொக்கரக் கோவென கூவிடும் சேவலைத்
தன்கொடி தாங்கியோன் சோதரனே
கொக்கறு கோமகன் கந்தனைப் போலவே
செந்தமிழ் பாடிட வாருமய்யா
................இறையருளே

கொட்டிட கொட்டிட ஜண்டைகள் கொட்டிட
கேரளம் ஆள்கிற ஆண்டவனே..
பட்டென சட்டென படபட வேயென
பாரினை ஆண்டிட வாருமய்யா‌..
................இறையருளே

✍️செ..இராசா

குறளுரையாடல்-11

 


#குறளுரையாடல்_11
#கரு_காமத்துப்பால்_புலவி
#தொடர்_உரையாடல்_பகுதி
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்

#ஐயா_1
தொல்காப் பியம்தோற்கும் ஓதுநன்னூல் நாணும்நீ
மெல்லிடைவல் மூவினங்கள் மீறு.

(நான் எழுதிய புதுக்கவிதையில் இருந்து ஐயா தொடங்கி வைத்தார்கள்)

#நான்_2
மீறிவரும் காமத்தை மிச்சமின்றி கொட்டினாலும்
ஊறிவரும் அன்பென்னும் ஊற்று

#ஐயா_3
ஊற்றாய்க் கிளர்ந்தெழும் ஊடலெண்ணம் காதலின்
தோற்றுவாய் என்று தொடர்

#நான்_4
தொடரத் தொடரத் தொலைக்கிற காமம்
கடக்க முடியாக் கடல்

#ஐயா_5
கடலும் நதியும் கலக்கும் அலையாய்
உடற்கூடும் காமம் உணர்

#நான்_6
உணர்வினைத் தூண்டி உலகினை நீக்கி
கணங்களில் வைத்திடும் காண்

#ஐயா_7
காணும் கவிதை களிப்பின் முழுமையில்
நாணும் எழில்ஊடே நான்

#நான்_8
நானென்ற ஒன்றே நழுவிடும் காமத்தில்
ஆணென்ன பெண்னென்ன அங்கு

#ஐயா_9
அங்கு தொடர்நாவல் அந்தமின்றி இன்னுமின்னும்
கங்குல் களிகாமம் காண்

#நான்_10
காண்கின்ற போதே கவிழ்க்கின்ற காமத்தை
ஊண்என்றே உண்ணும் உயிர்

#ஐயா_11
உயிரை விடுத்துடல் ஊர்விட்டுப் போக
உயிரைக் கொடுக்கும் உயிர்

#நான்_12
உயிரும் உயிரும் உரசும் பொழுதில்
உயிர்க்கும் புதிய உயிர்

#ஐயா_13
உயிரின் உணர்வை உளவுடலில் ஊற்றாய்
உயிர்ப்பாக்கும் ஊடல் உணர்.

#நான்_14
உணர்ச்சியின் உச்சத்தில் ஊடலும் ஓய்ந்து
கணத்திலே மாயும் கனம்

#ஐயா_15
கனமான நெஞ்சில் களிகாமம் பாய
இனமான பஞ்சாய் இனிது.

#நான்_16
இனிதான கூடலை எப்போதும் தேடும்
தணியாத காமமே தான்

#ஐயா_17
தானழிந்து தாமாகத் தான்மாறும் ஊடலால்
ஊனழியும் வரைகாதல் உண்டு

#நான்_18
உண்டான காமத்தை உள்ளுக்குள் வைத்தாலும்
கண்ணோட்டம் காட்டி விடும்

#ஐயா_19
விடுமுறையின் அந்தநாள் விட்டுவிடா ஊடலால்
தொடுகாமம் செம்மை தொடர்

#நான்_20
தொடர்கின்ற ஆட்டத்தில் தோல்வியே இல்லை
தொடரட்டும் அன்பின் தொடர்

✍️ ஐயாவும் நானும்

நாவல் பழம்

 



எளிதாய்க் கிடைக்கையில்
மலிவாய் இருக்கிறது..
அரிதாய்க் கிடைக்கையில்
பெரிதாய் இருக்கிறது...
 
அருகில் இருக்கையில்
அலட்சியப் போக்கு..
அன்னியம் ஆகையில்
ஆச்சரிய நோக்கு...
 
ஆம்...எல்லாமே தான்..
 
✍️செ. இராசா
இன்று கத்தாரில் வாங்கிய நம்ம ஊர் நாவல் பழம்... வெறும் 200 கிராம்- 12 ரியால் (240 ரூபாய்)

22/09/2020

ஆத்திச்சூடி-2 உயிர்_மெய்_வருக்கம்

 


 

#ஆத்திச்சூடி_விளக்கம்_பகுதி_2
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#உயிர்_மெய்_வருக்கம்

#கண்டொன்று_சொல்லேல்_1
கண்டதை விட்டுவிட்டு கண்டபடி வேறொன்றைத்
தன்போக்கில் சொல்லல் தவறு

#ஙப்போல்_வளை_2
வளைந்து குனிந்து வணங்கிடும் ஙப்போல்
நிலையில் பணிந்து நிமிர்

#சனி_நீராடு_3
எண்ணெய்க் குளியலிலே எச்சூடும் ஓடுவதால்
என்றும் சனியில் குளி

#ஞயம்பட_உரை_4
உரைக்கும் கருத்தை உளறாமல் நன்றாய்
உரைக்கும் உரையே உரை

#இ_டம்பட_வீடு_எடேல்_5
நீள அகலத்தை நீட்டித்துக் கட்டாமல்
ஆளின் அளவறிந்து கட்டு

#இ_ணக்கம்_அறிந்து_இணங்கு_6
நல்லுறவு யாரென்று நன்றாக ஆராய்ந்து
நல்லோரின் சுற்றத்தை நாடு

#தந்தை_தாய்ப்_பேண்_7
தந்தைதாய் சந்தித்துத் தந்ததை சிந்தித்து
பிந்தைநாள் நன்றாகப் பேண்

#நன்றி_மறவேல்_8
நன்றியுடன் உள்ளவரே நன்றாக வாழ்வதால்
நன்றி மறவாமை நன்று

#பருவத்தே_பயிர்_செய்_9
செய்கின்ற காலத்தில் செய்வதை செய்திட்டால்
செய்யும்முன் வென்றதாம் செய்

#மண்_பறித்து_உண்ணேல்_10
நிலத்தை அபகரித்து நிர்வாகம் செய்து
பலனாய் வருமுணவு பாழ்

#இ_யல்பு_அலாதன_செய்யேல்_11
இயற்கை நிகழ்வின் இயல்பை நினைந்தோர்
நியதியில் செய்யார் பிழை

.#அ_ரவம்_ஆட்டேல்_12
பாம்பாக மாறுவோர் பக்கத்தில் வந்தாலே
வீம்பாக மாறும் விலகு

#இ_லவம்_பஞ்சில்_துயில்_13
இலவமர பஞ்சின்மேல் எப்போதும் தூங்க
பலநோய்கள் ஓடிவிடும் பார்

#வஞ்சகம்_பேசேல்_14
வஞ்சகமாய்ப் பேசி வலைவீச எண்ணினால்
வஞ்சகமே வாசல் வரும்

#அ_ழகு_அலாதன_செய்யேல்_15
அழகாகச் செய்தால் அழகாகும்; ஆக
அழகில்லா செய்கை அகற்று

#இ_ளமையில்_கல்_16
இளமையில் கற்றால் எளிதாக ஏற்கும்
அளப்பரிய சக்தி அறிவு

#அ_றனைமறவேல்_17
அறமே இறையாக ஆய்ந்திட்ட ஒன்றை
மறவாமை வேண்டும் மனம்

#அ_னந்தல்_ஆடேல்_18
தூக்கம் மிகுந்தாலும் துக்கமே என்றுணர்ந்து
தூக்கத்தை நீட்டாமல் துய்

✍️செ.இராசா

21/09/2020

இறைவழிபாடே தேவையில்லை

 

இறைவழிபாடே தேவையில்லை
ஒவ்வொரு கணமும் அறத்தோடு வாழ்ந்தால்....
✍️

இன்னும்...இன்னும்

 


 ❤️❤️❤️💛💛💛🌀💛💛💛❤️❤️❤️

நீண்ட விடுப்பின்
............கடைசி நாளைப்போல்...
தொடர் நாவலின்
............இறுதி அத்தியாயம் போல்..
முடிவை நெருங்கும்
.............முக்கிய கவிதையைப்போல்...
அந்தத் தருணத்தின்
.............அந்த(ம்)..... நேரம்தான்
இன்னும் இன்னுமென...
இன்னும் சுவாரசியமானது..

இந்த எண்ணக் கிளர்ச்சி
என்னக் கிளர்ச்சியோ?!!
மெல்லினமாய் உருவாகி
இடை இனமாய் தடம் மாறி
வல்லினமாய் முழங்கியபின்
வந்து-நீர் வீழ்ச்சியாகிறதே..

இங்கே...
தொல்காப்பியம் தோற்கும்
நன்னூல் நாணும்..
ஆம்..
போதும் என்றாலும்
போ... என்றாலும்
சீ என்றாலும்
விடு என்றாலும்
பொருள்வேறு வேறு..
புரிந்தோர் வெல்கின்றார்...
புரியாதோர் புலம்புகின்றார்...
இன்னும்...இன்னும்...

❤️❤️❤️💛💛💛🌀💛💛💛❤️❤️❤️

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_129
#தமிழ்ச்சோலை

20/09/2020

கஞ்சியக் கண்டதுமே

  


 

கஞ்சியக் கண்டதுமே கண்ணுக்குள் சந்தோசம்
வஞ்சியப் பார்த்ததுபோல் வந்திடுச்சே- நெஞ்சுக்குள்
கொஞ்சம் குடிச்சதுமே குற்றாலக் கள்ளாட்டம்
தஞ்சம் புகுந்திடுச்சே தள்ளு

✍️செ.இராசா