30/06/2021

இத்தனை புத்தகமும் .........எங்கப்பூ தந்தாக

 #சிவகங்கைத்_தமிழில்_வெண்பா

 

 

இத்தனை புத்தகமும்
.........எங்கப்பூ தந்தாக
அத்தனை புத்தகமும்
.........ஆராச்சிப்- புத்தகமா
ஒத்தையில நானாதேன்
........ஒவ்வொன்னா ஆராஞ்சேன்
மெத்தைத் தலவாணி மேல்

✍️செ. இராசா

#எங்கப்பூ- எங்கப்பா
#ஆராச்சி- ஆராய்ச்சி
#நானாதேன்-நானாகத்தான்
#ஒன்னொன்னா- ஒவ்வொன்றாக
#ஆராஞ்சேன்-ஆராய்ந்தேன்
#தலவாணி-தலையணை

நினைவுகளின் சுமை தாங்கி

 


நினைவுகளின் சுமை தாங்கிதானே
நீயும் நானும்?

யோசித்துப் பாருங்கள்...!!!

நினைவுகளைக் குறைத்து
நினைவுகளை நெறிப்படுத்தி
நினைவின்றி இருப்பதே தியானமென்றால்
நினைவுகள் மட்டும் போய்விட்டால்
நம்மை எங்கே வைத்திருப்பர்?

நினைவுகளே இல்லாமல் பிறந்து
நிகழ்வுகளின் இருப்பை நினைவாக்கி
நினைவுகளைச் சுமந்தபடியே வளர்ந்து
நினைவுகளை மறந்தபடியே மரணிக்கும்; இந்த
நினைவுகள் சுமக்கும் மனித வாழ்வில்
பிறக்கையில் தொடங்கிய நினைவை
பூஜ்யமாய்க் கொண்டால்
இறக்கையில் மறக்கும் நினைவும்
பூஜ்யம் தானே...
எனில் .
இந்த சூனியத்திற்குள்தான்
எத்தனை சூட்சம நினைவுகள்?!

ஆம்...
நினைவுகளின் சுமை தாங்கிதான்
நீயும் நானும்!

எனில்...
குப்பைகளைச் சுமக்காமல்
மலர்களைச் சுமக்கலாமே....

செ. இராசமாணிக்கம்

29/06/2021

நீ உப்பி இருந்தாலும் ஒட்டி இருந்தாலும்

 


நீ
உப்பி இருந்தாலும்
ஒட்டி இருந்தாலும்
சிவப்பாய் இருந்தாலும்
கருகி இருந்தாலும்
வடிவாய் இருந்தாலும்
வதங்கி இருந்தாலும்
....
அட
நீ எப்படி இருந்தாலும்
ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன்..

வா...என் செல்லப் பூரியே.. 😀😀😀

மேதகு

 


காலம்
தனக்கான தேவைகளைத்
தானே தீர்த்துக் கொள்கிறது!
சில சமயங்களில்...
தீர்த்தும் 'கொல்'கிறது!

'பிரச்சினை'
அண்டை வீட்டில் நடந்தாலும்
அண்டை நாட்டில் நடந்தாலும்
அதற்கென்ன இப்போ என்றிருந்தால்
அது புரிய வாய்ப்பில்லை...
அதை...
அந்நிய மனத்தோடு அல்லாமல்
அன்பின் அகத்தோடு அணுகினால்
அவர்களின் நியாயம்
அப்போது புரிய வாய்ப்பிருக்கிறது?

வரலாறு என்பதென்ன?
வரவும் செலவுமாய்
வந்துபோனோர் கணக்கா?!
இல்லை...
ஆள்வோர்கள் செய்திட்ட
அதி-கார அதிகாரங்கள் தானே?!

ஒரு காலத்தில் காலூன்றிய இனம்
மறு காலத்தில் சறுக்குவதும்
அந்நேரம் அந்நியர் மேலேறி
அடக்கிட முயல்வதும்
அங்கே கிளர்ச்சி எழுந்து
புரட்சி வெடிப்பதும்
வரலாற்றுச் சக்கரத்தில்
வாடிக்கையான நிகழ்வே..

அப்படி எழுந்த ஓர் இனத்தையும்
அதை எழுப்பிய ஓர் தலைவனையும்
படமாக்கிச் சொன்ன கதை இது
இல்லை இல்லை
பாடமாய் உணர்த்தும் கதை
"மேதகு" என்கின்ற
மாவீரன் எழுந்த கதை!

கதை
கதைக்குள் கதை
இது...
கதை சொல்லும் யுக்தி!

தெருக்கூத்து வழியாக
தெரிவிக்க வந்த கதை..
தமிழருக்குச் சொல்வதுபோல்
தரணிக்கேச் சொல்லும் கதை...
என்ன நேர்த்தி?
என்ன தெளிவு?
எண்ணி எண்ணி வியக்கின்றேன்
இமய இயக்குனரை
இதயத்தால் வாழ்த்துகின்றேன்...!!!

இங்கே...
எதைச் சொல்ல எதை விட?!
அனைத்தையும் சொல்வது
அத்தனை எளிதுமல்ல
இருந்தும் முயல்கின்றேன்...

புத்த பிக்குகள்
சிலோன் பிரதமர்கள்
நகர மேயர் துரையப்பா
காந்தியவாதி செல்வா
காவல்துறை அதிகாரிகள்
தந்தையார் வேலுப்பிள்ளை
தாயார் பார்வதி அம்மாள்
காடையர்கள்....
போராளிகள்...
இப்படி...
பார்த்துப் பார்த்து செய்த
பாத்திரப் படைப்புகள்
அதிலும்
அந்த மாவீரர் பாத்திரம்!!
அதற்காக மாத்திரம்
அளிக்கலாம் ஆயிரம் மதிப்பெண்..
ஓமய்யா...
அவரின் மதிப்பை எண்?!
பாராட்ட வார்த்தைகளில்லை
பார்த்தோர் சொல்கின்றார்

யாரப்பா அந்த இசைஞர்?
பின்னணியில் பின்னுகிறார்
நெஞ்சிற்குள் பண்ணுகிறார்...
நல்ல காலம் கட்டாயம் அவருக்குண்டு
நமக்கும்தான்...😊😊😊

பாடல் வரிகள்...
பக்குவமாய்ப் பறைகிறது
மேதகு தலைவரின்
மேலான எண்ணத்தை....

ஒளிப்பதிவு ஒலிப்பதிவென
ஒவ்வொரு துறையிலும்
பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படைப்பு!

கை கொடார் மத்தியில்
கைதூக்கி விட்டோர்க்கும்
நெஞ்சார்ந்த வாழ்த்துகளை
நேர்மையாய்த் தெரிவித்த
நல்லோர் அனைவரையும்
நானும் வாழ்த்துகின்றேன்!!!

நன்றி மறப்பது நன்றன்று!

அனைவருக்கும் வாழ்த்துகள்!

அவசியம் பார்க்க வேண்டிய படம்!!!
அனைவரும் பாருங்கள்..🙏🙏🙏
ஆதரவு தாருங்கள்...🙏🙏🙏

#மேதகு_தொடரும்

✍️செ. இராசா

(இயக்குனர் கிட்டு அவர்களிடம் எம் வாழ்த்துக்களை அலைப்பேசியிலும் பகிர்ந்து கொண்டேன்)

28/06/2021

அன்பிற்கும் உண்டோ

 


#அன்பிற்கும்_உண்டோ
***************************

காணாத கன்றொன்றைக்
.........கண்டுகொண்ட அவ்வேளைத்
தானாகப் பொங்கிவரும்
..........தாய்ப்பசுவின் கண்ணீர்போல்
அன்பானோர் வந்தவுடன்
..........ஆற்றொழுக்காய் ஓடிவரும்
அன்பிற்கும் உண்டோ அணை!

(1) #இருவிகற்ப_இன்னிசை_வெண்பா

தன்னின துன்பத்தைத்
..............தன்துன்பம் என்றுணர்ந்துத்
தன்னையே அர்ப்பணிக்கும்
................தன்மையை ஆராய்ந்தால்
அன்பீன்ற வீரம் அது!

(2) #இன்னிசைச்_சிந்தியல்_வெண்பா

தன்வீட்டார் வந்ததுமே
............தவ்விவரும் நாயினம்போல்
புன்னகைத்தல் அன்பின் மொழி!

(3) #குறள்_வெண்பா

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_165

சொல்லாடல் செய்தே சுருட்டிய

 


முகநூலை வலம் வந்தபோது கண்டப் பதிவுகளில் பெரும்பாலானப் பதிவுகள் சாதிய, இனப்பிரிவினைப் பதிவுகளாகவே இருந்தது கண்டு வேகமாய் எழுந்த கேள்விகளே இவை....

யாதுமே ஊரென்ற எம்பாட்டன் கூற்றிலே
ஏதுமே இங்கில்லை ஏன்?!
(1)

சாதிகள் இல்லையென்று சாடியவன் கூற்றையும்
காதிலே போடலையே ஏன்?
(2)

ஒன்றியம் என்றெல்லாம் ஓதிடும் போக்காலே
என்னதான் வேண்டுமாம் இங்கு?
(3)

செந்தமிழ் நாட்டைத் திரா''விடம்' என்போரே
எந்தமிழ் நாட்டில்;நீர் யார்?!
(4)

சொல்லாடல் செய்தே சுருட்டிய கூட்டத்தின்
சொல்லிலே உள்ளதும் சூது
(5)

✍️செ. இராசா

(#மேதகு பாருங்கள்....ஒரு இனத்தலைவரின் மாண்பு தெரியும். ச்சும்மா வாய்ச்சவுடால் செய்தே வண்டி ஓட்ட வேண்டாம்)

27/06/2021

மழைத் தூவும் மேகம் உனைக் காணும் நேரம் நிறம்மாறும் உடன்தூறும்

மழைத் தூவும் மேகம்
உனைக் காணும் நேரம்
நிறம்மாறும் உடன்தூறும்
.......................தொடும் தேகம்
கேளாயோ அன்பே....நானென்றும் நீரே
தொட்டுத் துடைப்பேன் கண்ணீரே

பல காலமாய்ப் புரியாமலே
கானலாய் நானும்.... இருந்தேனே
பல காலமாய்ப் புரியாமலே
கானலாய் நானும்.... இருந்தேனே
கவிழ்க்கும் விழியாலே
காட்டு நதியானேன்..
கவிக்கும் மொழியாலே
கம்ப னடியானேன்
காதலே.... கோபம் கொள்ளாதே
ஆரோமலே......போதும் கொல்லாதே

பல நேரத்தில் அறியாமலே
பாவிபோல் நானும் நடந்தேனே
பல நேரத்தில் அறியாமலே
பாவிபோல் நானும் நடந்தேன்
இருந்தும் பொறுத்தாயே
இருக்கி அணைத்தாயே..
அன்பைப் பொழிந்தாயே
அள்ளி அணை------தாயே!
காதலே....தூரம் போகாதே
ஆரோமலே...போதும் கொல்லாதே

✍️செ. இராசா

24/06/2021

சாதிகள் இல்லையடி பாப்பா

 


இந்த
ஒற்றை ஒளிப்படமே...
ஓங்கி அடிக்கிறது
பற்றில் உழல்வோரைப்
பறைசாற்றி ஒலிக்கிறது..
ஆம்...
பறைசாற்றி ஒழிக்கிறது...

சாதிகள் இல்லையடி பாப்பா-நிறச்
சாயத்தை நீக்கிவிட வாப்பா!
ஏதிலார் யாருமில்லை பாப்பா- இதை
ஏற்பவரை ஆதரிக்க வாப்பா!

பாதியில் போய்விடாதே பாப்பா- பல
பாவிகளைக் களையெடுக்க வாப்பா!
ஆதியில் சாதியில்லை பாப்பா- இதை
ஆய்ந்துநீ படையெடுத்து வாப்பா!

செ. இராசா...

அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

கண்ணகி சபதம் ---- வெண்பாவில்

 #கண்ணகி_சபதம்_
#வெண்பாவில்




#கோட்டை_வாயிலில்_கண்ணகி

நீதியில்லாக் கோட்டைமுன்
............நிற்கின்ற காவலனே
நாதியில்லாப் பெண்ணொருத்தி
...........நாடிவந்தேன்- பாதியின்றி
சேதியினைச் சொல்லியுன்
...........தென்னவனைத் தேற்றிடடா..
வாதிடவே வந்துள்ளேன் நான்!

#காவலன்_உரைக்க_மன்னவன்_சம்மதித்தல்

கோட்டைமுன் வாசலிலே
...........கோரத்தின் சாயலிலே
காட்டமாய்ப் பேசுகின்ற
............கன்னியின்- காட்சியினைக்
காவலன் சொன்னவுடன்
.............கண்மூடி மன்னவனும்
பாவவினை ஏற்கநின்றான் பார்த்து!

#மன்னவன்_உரை

கொற்றவன் நானம்மா?
.........குற்றமென்ன சொல்லம்மா
உற்றதைச் சொன்னால்தான்
..........உற்றவனைப்- பற்றிடலாம்
யாராய் இருந்தாலும்
..........இச்சபையில் ஒன்றேதான்
நேராய் வழக்காடு நீ!

#கண்ணகி_உரை

காவலனை ஏவிக் கழுத்தை அறுத்திட்ட
கோவலனின் பெண்டாட்டி நான்
(1)

சோழ நிலம்விட்டு சொந்த இனம்விட்டு
வாழவந்தால் கொல்வீரோ நீர்
(2)

வாழ வழிதேடி வந்தது தப்பென்றா
ஆழமாய் வைத்தீர்கள் ஆப்பு
(3)

காற்சிலம்பை விற்கக் கடைவீதி வந்ததற்காக்
கூற்றுவனாய் செய்தீர்க் கொலை
(4)

மாசாத்து வான்தந்த மாணிக்கம் தோற்குமா?!
கூசாமல் சொல்லாதே கூற்று
(5)

கடல்வணிகம் செய்தோரைக் கள்வராய்க் காட்டும்
மடத்தனச் செய்கையா மாண்பு
(6)

கோப்பெரும் தேவிதான் கொலுசெல்லாம் போடுவரோ?
தீர்த்திடவே தந்துள்ளீர் தீர்ப்பு
(7)

ஒன்றிய பக்கத்தில் ஓதிடும் மன்றத்தில்
என்ன கிடைத்துவிடும் இங்கு
(8.)

சங்கம் வளர்க்கின்ற சான்றோர்கள் கூட்டத்தில்
சங்கை அறுத்தநீ...சாவு
(9)

நல்லோரை மட்டும் நலமாக விட்டிங்கே
எல்லோரும் சாகட்டும் இன்று
(10)

#சிலம்பின்_சேதி

கண்ணகி போட்டுடைத்த
........காற்சிலம்பின் கற்களெல்லாம்
கண்களில் மின்னியதும்
........கள்வன்யார்- கண்டனரே!
மன்னன் மனம்நொந்து
........மண்ணிலே வீழ்கையில்
மன்னனோடு எல்லோரும் மண்!

#கண்ணகி_சபதம்

உட்பொருள் யாதென
.........உண்மையை நோக்காமல்
பட்டென்று கூறும்
.........பகுத்தறியா- முட்டாள்கள்
சட்டத்தின் பேரால்
.........சதிசெய்யும் போதெல்லாம்
கட்டாயம் தீவைப்பேன் காண்!

✍️செ. இராசா
24.06.2021

(என் குருநாதர் சின்னக் கண்ணதாசர் விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்)

22/06/2021

கடல்நீர்த் துளியொன்றில்

 

கடல்நீர்த் துளியொன்றில் காணும் கடல்போல்
உடல்நீர்த் துளியொன்றில் ஊனான உன்னுள்
உறைவது யாரென உள்நோக்கிச் சென்றால்
மறைபொருள் காட்டும் மதி!

21/06/2021

உயிரும் உடலும் உளமும் இணைக்கும்
பயிற்சியாம் யோகாப் பழகு

சூது விளையாட்டு----------வள்ளுவர் திங்கள் 164

 


 #சூது_விளையாட்டு
#வள்ளுவர்_திங்கள்_164
#குறள்_வெண்பாக்கள்

சும்மா எனச்சொல்லி சூதாட்டம் போவோரே
யம்மா... எனச்சொல்வர் பின்பு
(1)

பப்ஜியென கிப்ஜியென பல்லிழிக்கும் நேரத்தில்
ச(த)ப்பென்று கன்னத்தில் சாத்து
(2)

பகடை உருட்டியே பல்லுயிர் மாய்த்த
சகுனி விளையாட்டைத் தள்ளு
(3)

இணையக் கடலுக்குள் எந்தோர் வலையும்
உனைப்பற்ற வந்தால் ஒதுங்கு
(4)

கள்ளைவிட போதையெனக் கன்னியைச் சொல்வோர்கள்
உள்ளபடி சூதறியார் ஆம்
(5)

சின்ன வயதிலே சிந்தைக்குள் சூதென்றால்
என்னவிளை வாகும் இயம்பு
(6)

கள்ளத் தனமாகக் காணொளிக்குள் மூழ்குகின்ற
பள்ளிக் குழந்தைகளைப் பார்
(7)

தலைமுறை மாற்றத்தின் செய்கை அறியார்
நிலைகுழைந்து போவார் நிசம்!
(8.)

பணத்தைக் கொடுத்துப் பறிக்கின்ற வெற்றி
அனைத்தும் கொடுக்கும் அழிவு
(9)

நூதன சூதெனும் நோயிலே சிக்குவோர்
வேதனைக் கில்லை மருந்து
(10)

✍️செ. இராசா

20/06/2021

தொழில்நுட்பத் திருட்டுக்கள்

 


 #தொழில்நுட்பத்_திருட்டுக்கள்
#இது_பயமுறுத்தும்_பதிவல்ல
#விழிப்புணர்வுப்_பதிவே

அன்பு நண்பர்களே!

சமீபகாலமாக நடைபெறும் நூதனத் திருட்டுகளில் பலவற்றை நாம் நேரடியாகவோ அல்லது நம் நண்பர்கள் மூலமாகவோ அறிந்திருப்போம். இருந்தாலும் நமக்குள் பேசிவிட்டு அப்படியே அதைக்கடந்து சென்றிருப்போம். அப்படி நாம் கடந்து சென்றுவிடுவதால் மற்றவர்களுக்கு அது தெரியாமலே போய்விடுகிறது. அவற்றைத் தெரியப்படுத்துவதன் மூலம் மற்றவர்களின் இழப்பைத் தடுக்க முடியும் என்பதே இப்பதிவின் நோக்கம். இப்படித் தாங்களும் தங்களுக்கோ அல்லது தங்களின் நண்பர்களுக்கோ ஏற்பட்ட இழப்புகளை இங்கேப் பகிர வேண்டுகிறேன். முடிந்தால் அவற்றைத் தொகுத்து ஏதேனும் இதழ்களுக்குக் கட்டுரையாக அனுப்பி வைக்கும் எண்ணமும் உள்ளது. நன்றி!!!

1. தகவல் திருட்டில் முதலிடம் வகிக்கும் முகநூலில் இந்த முகநூல்த் திருடர்கள் செய்யும் திருட்டு அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சமீப காலமாக இது மிகவும் அதிகமாகி வருகிறது. பொதுவாக நம்மூரில் நம்மவர்கள் இதில் மாட்டுவது குறைவே. இருப்பினும் அவர்களுடைய குறிக்கோள் 100 பேரில் ஒருவர் சிக்கினால் போதும் என்பதே. நம் ID போலவே போலி ID தயார்செய்து பண உதவி கேட்கும் கும்பல் பெருகியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இந்தப் போலி IDக்களை நண்பராக ஏற்றுக்கொள்வதால் வரும் சிக்கல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நம்மைத் தொடர்ந்து கவனித்து வேறு வகையிலும் கைவரிசை காட்டி விடுவார்கள் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

2. நமக்குத் தபாலிலோ அல்லது கொரியரிலோ சாமான் வருவதாக இருந்தால் (பெரும்பாலும் இணையவழியில் வாங்குபவர்கள்) அவர்களை அறிந்து வைத்து ஒரு கும்பல் என்ன செய்கிறது தெரியுமா? தங்களுக்கான பார்சல் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் பணப் பரிமாற்றத்தில் சிறு தொகை மட்டும் இன்னும் மீதம் உள்ளது. அதை மட்டும் செலுத்திவிடுங்கள் என்று சொல்வார்கள். சொற்பத் தொகைதானே என்று செலுத்தினால் எப்படியோ பெரும் பணம் போய்விடுகிறது. இதை யார் செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை. நீங்கள் கவனமாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் சொல்லலாம். அங்கேதான் அவர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்படுகிறார்கள். அதாவது உண்மையானவர்களின் ID மற்றும் தகவல்களை எல்லாம் திருடி அவர்கள் போலவே மாறிவிடுவார்கள்.

3. இங்கே சில அரசாங்க அழைப்புகள் துறை ரீதியாக குறிப்பிட்ட நபர்களின் துறை சார்ந்தே அவர்களுக்கு ஏற்றார் போலவே வருகின்றது.நாம் என்னதான் உண்மை அழைப்பைக் கண்டறியும் செயலி எல்லாம் போட்டிருந்தாலும் அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்தவுடனே பண அபகரிப்பு சுலபமாக நடைபெற்று விடுகிறது.
(இதுவும் ஒருவகையான புதுமையான திருட்டே)

4. வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுபவர்களை மடக்கி அவர்களிடம் இருந்து பணம் கறக்க ஒரு மிகப்பெரிய ஹைடெக் திருடர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வெப்சைட் தயாரித்து நல்ல ஆங்கிலத்தில் சாதுர்யமாகப்பேசி பணம் அடிக்கிறார்கள்.

5. வேலைவாய்ப்பு வாங்கித் தருவது சம்பந்ததமாக காலம் காலமாகப் போலி ஏஜெண்டுகள் திருடினாலும், இப்போதெல்லாம் உண்மை நிறுவனங்கள் போலவே வெப்சைட், கைப்பேசி எண், ஒப்பந்த வடிவமைப்பு..... இப்படி எல்லாம் பக்கவாய்த் தயாரித்து ஏமாற்றுபவர்கள் பெருகிவிட்டதால் எது உண்மை எது போலியென்றே தெரிய நிறைய மெனக்கெடல் வேண்டும்.

மக்களே....ATM PIN கொடுத்தால்தான் கொள்ளை அடிக்க முடியும் என்று இன்னும் நினைப்பவர்களா நீங்கள். எனில் உங்களுக்காகத்தான் இப்பதிவு. உங்கள் பெயர், கைப்பேசி எண், உங்கள் ATMல் நான்கு இலக்கங்களே (நான் PINல் உள்ள இலக்கங்கள் எல்லாம் சொல்லவில்லை) போதும்.

நம் எண்கள், தகவல்கள் எல்லாம் எங்கெங்கோக் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் திருடர்கள் போகும் வேகத்திற்கு மற்றவர்கள் போகமுடியவில்லை என்பதே உண்மை. இங்கேப் பணம் இழப்பவர்கள் எல்லாம் படிப்பறிவில்லாதவர்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். படிக்காதவர்களைவிட படித்தவர்களே அதிகம் இழக்கிறார்கள்.

இங்கே ஐந்தே ஐந்து மட்டும்தான் குறிப்பிட்டுள்ளேன். இதுபோகக் குழந்தைகளின் Game வைத்துப் பணம் பறிக்கும் திருட்டு வகையெல்லாம் தனி இரகம். நமக்கெல்லாம் பல விடயங்கள் தெரிவதே இல்லை. காரணம் கடந்த 10 வருடங்களில் இங்கே மாறியுள்ளது அறிவியல் மட்டுமல்ல... அறிவியல் சார்ந்த திருட்டுகளும்தான்‌. சாக்கிரதை உறவுகளே.

✍️செ. இராசா

(அனைவரும் தங்களின் அனுபவங்களை முடிந்தால் பகிர வேண்டுகிறேன்)

18/06/2021

பேசும் படம் ---- ஸ்கேட்டர் கேர்ள்--Skater girl


 

#நேற்றும்_இன்றும் இரண்டு படங்கள் பார்த்தேன். இரண்டுமே மிகவும் அற்புதமானத் திரைப்படங்கள். அதில் ஒரு படம் நான் மிகவும் இரசிக்கும் உலக நாயகன் நடித்த "#பேசும்_படம்" என்கிற தலைப்பில் 1987ல் வெளியான பேசாத படம். அதாவது மொழி இல்லாமல் உருவான ஒரு அற்புதமான படம். ஆனால் என் சிறுவயதில் அப்படமெல்லாம் பார்க்கும் வயது என்னிடம் இல்லை என்பதால் அதையெல்லாம் அன்று புறக்கணித்தேன் எனலாம். ஆனால் இப்போது பார்க்கும்போது ப்பா....என பிரம்மிக்க வைக்கிறது‌. பே.பே என்று ஊமை மொழியெல்லாம் இல்லாமல் இரண்டு மணிநேரம் நகரும் திரைப்படம் எடுப்பதெல்லாம் சாதாரண விடயமா என்ன?!! அப்படத்தில் கமல்ஹாசன் வேறு. சொல்லவும் வேண்டுமா?!! வியப்பூட்டும் படைப்பு.

அடுத்து இன்று ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் "#Skater_girl" #ஸ்கேட்டர்_கேர்ள் பார்த்தேன். அது ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் நடைபெறும் கதையாம். அப்படியே தமிழ்நாட்டில் நடைபெறும் உணர்வே ஏற்படுகிறது. இன்னும் சாதிகள் பார்க்கிறார்களா என்று ஒருவர் கேட்கும்போது அதற்கு "வெளியே இல்லை, ஆனால் உள்ளே வைத்துள்ளார்கள்" என்கிற எதார்த்தமான வசனம் வரும் காட்சி நெஞ்சை உருக்கும் நிகழ்வு. பெண்ணியம் பேசும் காட்சிகள் உள்ள அற்புதமான திரைப்படம் அது. இந்திய கிராமங்களை கண் முன்காட்டி வருங்கால மாற்றத்தை மெல்லிய உணர்வுகளோடு வரம்பு மீறாமல் காட்டுகிறது அத்திரைப்படம்.

இப்படி நான் பார்த்த இரண்டு படங்களுமே மிகவும் அற்புதமான திரைப்படங்கள். படம் எடுத்தால் இப்படி எடுக்க வேண்டும் என்று உணர்த்திய படங்கள்......💐💐💐💐

கண்டிப்பாகப் பாருங்கள்🙏🙏🙏💐💐🙏

பிரைட்டக் கூட்டுனா நீ ஃபிகராத் தெரியுற

 



#பிரைட்டக்_கூட்டுனா நீ ஃபிகராத் தெரியுற
டார்க் மோடுல செம்ம மாசு காட்டுற
ஸ்டேடஸ் மாத்தியே என் பீப்பி ஏத்துற
ஹார்ட்டு பீட்டுல லவ் சாங்கு பாடுற

வாவ் வாவ் வாவ் அந்தப் பிரம்மன் எங்கடி?
வா வா வா அவன் காலைக் காட்டடி...
யோவ் யோவ் யோவ் நீ பெரிய ஆளுய்யா
நோ நோ நோ நீ அதுக்கும் மேலய்யா

✍️செ. இராசா

வரும் வரும் வரும் ..........நீ கவலைப்படாதே

 #வரும்_வரும்_வரும்
..........நீ கவலைப்படாதே
பொறும் பொறும் பொறும்
..........நீ பதைபதைக்காதே

வாழ்க்கை யொரு வட்டம்- அட
வாழ்வி லில்லை நட்டம்
தேவை யொரு திட்டம்- நீ
தேடும் போது கிட்டும்

அடிக்கிற ஆறு பந்தும்
.......சிக்ஸர் ஆவதில்லை
அதனால் என்ன இப்போ
........ஆட்டம் முடியவில்லை
முடிஞ்ச வரைக்கும் நீயும்-அட
....... முயற்சி செய்து காட்டு
முடியலேன்னா என்ன-அட
........அடுத்த ஆட்டம் பாரு

நம்பிக்கையா இறங்குடா
நம்பிக்--கைய வையுடா
என்ன இல்ல இங்கடா
எண்ணந் தானே வாழ்க்கைடா

✍️செ. இராசா

17/06/2021

மதுப்பிரியர்கள் பாடும் பாடல்

 #மதுப்பிரியர்கள்_பாடும்_பாடல்


 

அடிச்ச பீருல...மச்சிப் போதையே இல்லை
குடிச்சு பாருல...அது குவாட்டரே இல்லை
வேறவழி இல்லை..தெரிஞ்சே விலைய ஏத்துறான்
யாரும் கேக்கல...கேட்டா கைய ஓங்குறான்
ஓனர் யாருங்க...உடனே நியாயம் சொல்லுங்க
ஒழுங்கா இல்லன்னா ஃப்ரீயா சரக்கத் தள்ளுங்க
ரேசன் கடையிலும் கொஞ்சம் கருணை காட்டுங்க
தேசம் நிமிர்த்துற தூணே நாங்க தானுங்க
குடிக்கும் எங்களைக் கூட்டி டீலப் போடுங்க
கொடுக்கும் காசுல கொடுக்கத் திட்டம் போடுங்க

குடியைக் காக்கும் எங்கள் தெய்வம்- நீங்க
கொடுத்தா நாங்க நல்லா செய்வோம்

✍️செ.இராசா

16/06/2021

பாடல்பற்றி--- ஒரு முக்கிய அறிவுரை

 என் குருநாதர் கவிஞர் சின்னக் கண்ணதாசர் விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்கள் எனக்கு பாடல்பற்றி ஒரு முக்கிய அறிவுரை கூறியிருந்தார்கள். அதாவது ஒரு பாட்டு எழுதும்போது நம்மால் மெட்டுப் போடமுடியும் என்றாலும் அந்த மெட்டை இசையமைப்பாளருக்குத் தெரிவிக்காமல் வெறும் வரிகளை மட்டுமே அனுப்பிவைக்க வேண்டும் என்பார்கள். ஆனால் பலமுறை நான் அவரின் பேச்சை மீறிய சீடனாகவே இருந்துள்ளேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் மெய்வாக்கைக் கேட்காமல் இன்றும் என் மகனுக்காக ஒரு பாடலை எழுதி என் அன்பு இசைஞர் இலங்கை சுதாகரன் Rhythms Suda அண்ணா அவர்களுக்கு வழக்கம்போல் மெட்டையும் சேர்த்து அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து பதிலே வரவில்லை. பதில் வரவில்லையென்றால் ஏதோ குறையென்று அர்த்தம் என்பதைப் புரிந்து கொண்டு கேட்டபோது பாடல் மெட்டு கானாபோல் உள்ளதே என்றார். ஆமாம்...மகள் பாடலில் இருந்து வேறுபடுத்தவே அப்படி இருக்கட்டுமே என்றேன். அவர் உடனேயே எனக்கு எப்போதும்போல் தன் மெட்டிலேயே தன் குரலில் பாடி அனுப்பி வைத்தார் பாருங்கள். ப்பா.... அசந்து போனேன்.

இதற்குத்தான் குருவின் பேச்சை வேத வாக்காக கேட்க வேண்டுமென்பது.
மன்னியுங்கள் குரு அண்ணா.....🙏🙏🙏

மனமார்ந்த நன்றி இசைஞர் அண்ணா🙏🙏🙏🙏