31/05/2022

ஒவ்வொரு கணமும்
ஜென்நிலையைப் போதிக்கிறது
மாதக் கடைசி

29/05/2022

மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம்

 


இந்தப் படத்தில் உள்ள நபர் யாரென்றால், நான் தினந்தோறும் மாலைநேரத்தில் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் பணிபுரியும் காவலர்களில் ஒருவரான குலசந்த் சிங் என்னும் பஞ்சாபியர். தினமும் என்னை சந்திக்கும் இந்நபரிடம் இன்றுதான் சில நிமிடங்கள் பேசினேன். அவரிடம்நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தியபோது கவிதையெல்லாம் எழுதுகிறேன் என்றுதான் கூறினேன். அப்போது அவர் முகம் ஆயிரம் வோல்ட் விளக்காக மின்னியது. உடனே ஓடிப்போய் தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை எடுத்துவந்து தான் எழுதிய பஞ்சாபிய கவிதைகளை எல்லாம் சொல்லி, மன்னிக்கவும் என்னால் ஹிந்தியில் மொழி பெயர்க்கத் தெரியாதென்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம் நமக்கே ஹிந்தி நம்ம டங்கிலிஷ் போல் ஆங்கிலம் கலந்துதான் பேசவரும். படிக்க வராது. ஆனாலும் அவர் ஏற்றி இறக்கி சொன்ன அந்த விதமே...அது கவிதைதான் என்று அடையாளப்படுத்தியது. ஆகா...மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம் இருக்கிறதே...அதுவே ஒரு கவிதை தாங்க....
 
கூடுதல் தகவலாக, அவரிடம் நான் எழுதிய பஞ்சாபி தமிழ்ப்பாடலைக் காண்பித்தேன். ஆள் மிரண்டுவிட்டார். அந்தக் காணொளியில் வரும் ஆங்கிரீஜ் சிங் புகழ்பெற்ற நபரென்பதை மீண்டும் இவர்மூலமும் தெரிந்து கொண்டேன். அந்தக் காணொளியில் நானும் டர்பன் கட்டி வருவதைப் பார்த்து, அசந்தே விட்டார். அப்போதுதான் அவரிடம் உங்கள் டர்பன் எங்கே என்று கேட்டபோது, கத்தார் வந்து நீக்கிவிட்டதாக மெல்லிய சோகத்துடன் கூறினார். அவரைத் தொடர்ந்து கவிதை எழுதச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
 
அந்தக் காணொளிக்கான இணைப்பு இங்கே உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
 

கேள்விகள் பத்து

 


 #கேள்விகள்_பத்து

சாராயம் பீரெல்லாம் தப்பில்லை என்றா;நீர்
தாராளம் காட்டுகின்றீர் தந்து!
(1)

வாயில் வடைசுட்டே வைத்திடலாம் என்றா;நீர்
வாயினிக்கச் சொல்கின்றீர் வந்து!
(2)

தேர்தலுக்கு முன்னாலே தீர்த்திடலாம் என்றா;நீர்
நேர்மையின்றி பேசுகின்றீர் நின்று!
(3)

ஆண்டவர்கள் தப்பென்றே ஆண்டிடலாம் என்றா;நீர்
வேண்டியதைச் செய்யவந்தீர் வென்று!
(4)

நெஞ்சத்து நீதியும் விற்பனைக்கே என்றா;நீர்
அஞ்சாமல் சொன்னீர்கள் அன்று!
(5)

ஊதிப் பெருக்கிடவே ஊடகங்கள் என்றா;நீர்
சேதிபலச் சொல்கின்றீர் சேர்ந்து!
(6)

யாரென்ன சொல்வார்கள் எம்முன்னே என்றா;நீர்
ஊரெல்லாம் விற்கின்றீர் கள்!
(7)

நக்கீரர் எல்லோரும் மௌனித்தார் என்றா;நீர்
இக்கட்டில் வைத்துள்ளீர் கள்!
(8.)

ஜால்ராக்கள் உள்ளவரை சந்தோஷம் என்றா;நீர்
சால்பின்றி செய்கின்றீர் கள்!
(9)

போசாக்கு பானமெல்லாம் போதையில்லை என்றா;நீர்
போய்சாக விற்கின்றீர் கள்!
(10)

✍️செ. இராசா

26/05/2022

அரும்பு மீசை காலத்தில்

 


அரும்பு மீசை காலத்தில்
பெரிய மீசை வேண்டுமென
அடிக்கடி சிரைத்த நாம்தான்;
கட்டை மீசை காலத்தில்
வைத்த மீசையை
மீண்டும் குறைக்கிறோம்...

✍️செ. இராசா

கொடுஞ்சொல் வேண்டாம் ---- குறள் வெண்பாக்கள்

  


 

#கொடுஞ்சொல்_வேண்டாம்
#குறள்_வெண்பாக்கள்

சொல்லவும் கூசுகின்ற சொற்களைக் கூறுபவர்
நல்லவரே இல்லை நகர்
(1)

கொல்லும்சொல் கூறிவிட்டு குற்றமென்ன இஃதென்போர்
சொல்லும்சொல் யாவும் சுடும்
(2)

தீஞ்சொல் உதிர்த்துத் திமிராய்த் திரிபவர்மேல்
வாஞ்சை அடைந்தால் வலி
(3)

பெருமை உடையவர்கள் பேசுகின்ற பேச்சில்
எருமைக்கும் இல்லை இடம்
(4)

பொல்லாசொல் சொல்லிப் புறமுதுகில் குத்துபவர்
நல்லோர்போல் தோன்றும் நரி
(5)

வசைபாடி எப்போதும் வைகின்ற வாயில்
அசைபோட வேண்டும் அவல்(ள்)
(6)

அவச்சொற்கள் பேசிட அஞ்சாத வாயில்
சிவச்சொல்லால் இல்லை பயன்
(7)

குறைகளைச் சொல்லியே கும்பி நிறைப்போர்
நிறைகளைக் காணார் விடு
(8)

சொந்தமும் பந்தமும் சுற்றமும் எல்லாமும்
நிந்திப்போர்க் கென்றும் நிழல்
(9)

நல்ல உணவோடு நஞ்சிருந்தால் என்னாகும்?
அல்லசொல்லும் அப்படித்தான் அங்கு!
(10)

✍️செ. இராசா

25/05/2022

ஒவ்வோர் உருட்டிற்கும்

 


ஒவ்வோர் உருட்டிற்கும்
ஒவ்வோர் கணக்குண்டு...
 
இங்கே எல்லா உருட்டுகளும்
எல்லோருக்கும் தெரிந்துவிடாது..‌
 
இதில் தெரிந்தவர்கள் மட்டும்தான்
புதுசு புதுசாய் உருட்டுகிறார்கள்‌...
 
தெரியாதவர்களோ...
பிறர் உருட்டுவதை வேடிக்கை பார்க்கிறார்கள்..
இல்லையேல்....
இப்படி உருட்டியதையே உருட்டுகிறார்கள்...
 
✍️செ. இராசா

கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்


 

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
இடுப்பையும் இதழையும் இதிகாசமென்பீர்?!
 
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
அழுக்குத் தலைவர்களை அதிசயமென்பீர்?!
 
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான்
அதே பல்லவியை ஆகாவென்பீர்?!
 
போதும்...
எங்கள் பழைய பிரம்மாக்களே‌‌...
கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்
புதிய ஒளி பரவட்டும்
🔥
✍️செ. இராசா
 
(குறிப்பு: எப்போதும் மனதளவில் இளமையானவர்கள் இதிலடங்க மாட்டார்கள்)

24/05/2022

கடலைவிடப் பெரிசுங்க....

 





கடல் அன்னையை வாழ்த்தி மீனவர்கள் பாடுவதுபோல் ஒரு பாடல் எழுதி, அதை நானே பாடியும் இருந்தேன். அது நம் இலங்கை சுதாகரன் அண்ணா இசையில் மிகவும் சிறப்பான முறையில் மெருகேற்றம்பெற்று நேற்று கையில் கிடைத்தது. அதற்கான காணொளி தயாரிப்பில் இறங்கியபோது நானும் நண்பர் மற்றும் பொறியாளருமான விஜியும் சேர்ந்து முதலில் அல்கோர் கடற்கரைபோய் மீனவர்களைத் தேடினோம். இன்று மணல்புயல் இருந்ததால் யாரும் மீன் பிடிக்கப்போகவில்லை என்பதால் அங்கே யாருமே இல்லை.
 
சரியென்று தோகா கடற்கரை சென்றபோது அங்கே இருந்த சில நம்மவூர் (கடலூர்) மீனவர்களை சந்தித்து பாடலைப்பற்றி விளக்கி காணொளிகள் இருந்தால் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். மாலை வீட்டிற்கு வாருங்கள் என்று கூறிவிட்டு தங்களிடம் இருந்த மீன்களையெல்லாம் அப்படியே அள்ளிக் கொடுத்தார்கள். அவர்களுக்கும் எனக்கும் என்னங்க உறவு? நம் தாய்மொழியைத் தவிர....
 
அன்பையும் மீனையும் அள்ளிக் கொடுக்கும் அந்த மனதே....மீண்டும் அவர்களைப்பார்க்க மாலையில் எங்களை உந்தியது.
ஒரு சிறிய அறையில் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் வெளியே சமைத்தபடி உள்ளே புன்முறுவலோடு வாங்க...வாங்க....என்று வரவேற்றார்கள். பாடலை போட்டுக்காட்டினோம். சில காணொளிகள் மட்டும் இருந்தது. அனைத்தையும் டெலிட் செய்துவிட்டார்களாம். எப்படியாவது ஊரிலிருந்தாவது மற்றவைகளை அனுப்பி வைப்பதாகச் சொன்னார்கள்.
 
வெளியே அழைத்துச் சென்று ஒரு பெங்காளி உணவகத்தில் தேனீர் அருந்தினோம். அப்போது குமார் அண்ணன் மிகச் சுருக்கமாக நிறைய தகவல்களைப் பகிர்ந்தார்கள்.
 
அதாவது, அவர் கத்தார் வந்து 22 வருடங்கள் ஆகிறதாம். அந்த குட்டிப் படகில் நான்கு மீனவர்களும் இரண்டு அல்லது ஒரு கத்தாரி முதலாளியுமாக மீன் பிடிக்கச் செல்வார்களாம்.
 
குமார் அண்ணாதான் கேப்டனாம். தன் இரண்டாவது பையன் சேது போன வருடம்தான் ஊரில் இருந்து வந்தானாம். அவனைப் படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்க வேண்டுமென்பதற்காக நீச்சலேதும் கற்றுக்கொடுக்காமல் வளர்த்தாராம். மீன் குஞ்சுக்கு கற்றாக் கொடுக்க வேண்டும். அவன் நீச்சலில் மிகவும் சாதனையே படைத்துள்ளானாம். அவனும் அப்பாவுக்குத் துணையாக கத்தாருக்கு வந்துவிட்டான். அந்த அறையில் உள்ளவர்களில் எந்தக் கெட்ட பழக்கங்களும் அவருக்கு மட்டும் இல்லையென்று சொன்னார். அதாவது பாக்கு, தண்ணி மட்டுமில்லை பபுள்கம்கூட மெல்ல மாட்டாராம். (இன்றுதான் பபுள்கம் மெல்லுவதும் கெட்ட பழக்கம் என்று அறிந்து கொண்டேன்).
 
இந்தச் சிறு படகில், அனுமதியுடன் பக்ரைன் போய் வந்துள்ளார்கள். சவுதி துபாய் பார்டரெல்லாம் போய் அங்கிருந்து வேகமாய் ஓடியும் வந்துள்ளார்கள். ஏன் கத்தாரி உங்களிடம் வருகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்தான் ஆச்சரியம் அளித்தது. நான்கு வருடங்களுக்கு முன்புவரை கத்தாரி இல்லாமல்தான் போய் வந்துள்ளார்கள். ஒருசமயம் ஈரான் நாட்டைச் சேர்ந்த சிலர், நம் தமிழக மீனவரோடு பயணிக்கையில், நம்மவர் கழுத்தில் கத்தி வைத்து, கட்டிப்போட்டுவிட்டு ஈரான் போய் இறங்கியபின், ஜிபிஸ் கருவியையெல்லாம் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்களாம். நம்ம ஆள், அங்கிருந்து மீண்டும் திரும்ப நினைத்தால், பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் தத்தளித்து, எப்படியோ வேறு ஒரு படகு மூலம் தகவல் அனுப்பி பின் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்பின்தான் சட்டம் மாறியுள்ளது. ப்பா.. எவ்வளவு பெரிய நிகழ்வை எவ்வளவு சுருக்கமாச் சொல்லிவிட்டார். 
 
நேற்றுவரை யாரென்றே தெரியாத அந்த மீனவ நண்பர்களின் அந்த மெய்யன்பில் மணக்கும் பேரன்பு இருக்கிறதே...அது கடலைவிடப் பெரிசுங்க....
 
✍️செ. இராசா

23/05/2022

எப்போது பார்த்தாலும் .......ஏதாச்சும் செஞ்சீன்னா

 

எப்போது பார்த்தாலும்
.......ஏதாச்சும் செஞ்சீன்னா
எப்படிப்பா சோறுவரும்?
........ஏன்பாப்பா- இப்படின்னா..
சோமாட்டா* இங்கிருக்க
.......சோறெதுக்கு என்றென்னை
போமா எனச்சொல்றா பொண்ணு!
 
✍️செ.‌ இராசா
 
(ச்சும்மா...ஒரு கற்பனைதான்)
Zomota

22/05/2022

எனக்கான மேடை ஒன்று

எனக்கான மேடை ஒன்று- அது
எங்கே இருக்கிறது?!
அதற்காகத்தானே இன்று- இந்த
ஜீவன் துடிக்கிறது...!!!

உனைக்காணும் ஒரு நொடி

 

உனைக்காணும் ஒரு நொடி
...உயிர்ப்பூக்கும் மறுபடி
விடைதேடும் பிணியினி
...மகிழ்வாகும் கவனி நீ...
எமை எழுப்பும் ஒலியினி
.... இதழாலே எழுப்புநீ
கவிணான பிரளயமும் நீ நீ நீ
 
அந்தி நேரத்துக் கடற்கரையில்
....அணைக்கையிலே அது சுகமே
வண்டி வேகத்தில் பறக்கையில்
....வளைக்கையிலே அது சுகமே
உந்தன் மடியினில் தவழ்கையில்
....தலைமுடியைக் களையனுமே.
 
சிந்தும் மழையினில் நனைகையில்
...குடையெனவேத் தழுவனுமே...
கணம் கணம் இனிதெனக் கழியுமெனில்
... கவியென மாறிடும் காதலுமே...
காதலுமே
காதலுமே
 
✍️செ. இராசா

21/05/2022

அடியே அழகே

 அடியே அழகே

.....அரும்பாக் கவியே

.......உனை நான் செதுக்க வாறேன்டி

அடியே இசையே

......எழும்பா விசையே

........உனை நான் இசைக்கப் போறேன்டி..


காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?

காவியமா மாத்திடநான் காதலிச்சாப் போதும்

காகிதமா இருந்தாக்க யாருக்கென்ன இலாபம்?

ஓவியமா மாத்திடநீ ஓடிவந்தாப் போதும்..


அடியே அழகே.....ஆசைக் கவியே

அடியே இசையே....மேஸ்ட்ரோ விசையே...(2)


அடடா அழகா

...குறும்பாக் குமரா

.......இதுதான் கலக்கல் நடையாடா?!

அடநீ பொறுடா

......அலும்பைக் குறைடா

........ இல்லைன்னா விழுகும் அடிபோடா...(2)


இருந்தாலும் நீதான்டா என்னோட ஆளு

விருந்துண்ணும் முன்னாலே வேணாண்டா மோரு

வரும்போது வந்தாதான் வாழ்த்திடும் ஊரு

வரம்பநாம் மீறுனால் தூத்திடும் பாரு


அடடா அழகா...குறும்பாக் குமரா

அடநீ பொறுடா......அலும்பைக் குறைடா..(2)


✍️செ. இராசா

19/05/2022

நீதித்தாய் கண் திறந்தாள்...

 


ஆள்பவர்கள் மாறினர்!
ஆளுநர்கள் மோதினர்!
நல்லதோர் நாளுக்காய்
நாட்களும் ஓடின..
 
நம்பி நம்பி ஏமாந்தே
நம்பிக்கை சோர்ந்தபோது
நீண்ட துயில் முடித்து
நீதித்தாய் கண் திறந்தாள்...
அந்த...
அற்புதம்மாவின் பாதங்களுக்காக...
 
🙏🙏🙏🙏
🙏
✍️செ. இராசா

18/05/2022

வரலாற்று வெண்பாக்கள்

 


 #வரலாற்று_வெண்பாக்கள்

காங்கிரசார் ஆடிய கண்றாவி ஆட்டத்தால்
தாங்கொண்ணாப் பேரிழப்பு தான்!
(1)

பாக்கிஸ்தான் வாலறுக்க பார்த்திருந்த வல்லரசு
தாக்கியது வங்காளம் சென்று
(2)

இந்திரா காந்தியினால் இந்தியா வென்றதினால்
வங்காள தேசமெனும் நாடு
(3)

வங்காள தேசத்தை வைத்துவந்த ஓட்டெடுப்பில்
சிங்களத்தான் நிற்கவில்லை சேர்ந்து
(4)

சிங்களத்தான் வாலறுக்க சிந்தித்த இந்திரா
சங்கூதத் திட்டமிட்டார் சார்ந்து
(5)

உள்நாட்டுப் போரினை ஊதிப் பெரிதாக்க
அள்ளியள்ளித் தந்தார்கள் அன்று
(6)

காலத்தின் ஓட்டத்தில் காணாமல் சென்றுவிட
ஞாலத்தின் மாற்றத்தில் மைந்து!
(7)

தாயைப்போல் இல்லாத் தமையனார் செய்தபிழை
நாயைப்போய் ஏவிவிட்டார் வந்து!
(8.)

முன்வினைப் பாவமும் மூழ்ந்தெழுந்த சாபமும்
தன்வினையால் சுட்டதே சான்று
(9)

சட்டமும் நீதியும் தண்டனையைத் தந்தபின்னே
விட்டுவிடல் தானே முறை!
(10)

✍️செ.இராசா.

வடிவானவள் .....வெடியாயென ...........வருவாளெனில் யாவும்

 


வடிவானவள்
.....வெடியாயென
...........வருவாளெனில் யாவும்
அடிதூளென
.......அடடாவென
.............அழகோவியம் ஆகும்!
இடியாயிலை
......இசையாயென
............எனிலோடிடும் தாளம்!
முடிவாகிட
........முறையாயொரு
...............மொழிவாயொரு ராகம்!
 
விழியாடிடும் மொழியால்-நீ
மொழிவாய்ப் பழபொழிகள்....
இதழோவிய வரியால்- நீ
தருவாய்ப் புதுக்கவிகள்‌‌..
...யாவும்
.......ஆகும்
.........தாளம்
‌............ ராகம்
 
✍️செ. இராசா

17/05/2022

தொட்டுப் பணிகின்றேன் தாள்!

 


ஒன்றிரெண்டு மூன்றென்றே
......ஒவ்வொரு ஊசிகளாய்
நுண்தீக் கிருமியின்
.....நோய்தடுக்கும்- எண்ணத்தில்
கட்டுக்குள் கொண்டுவர
......கைகொடுத்த யாவரையும்
தொட்டுப் பணிகின்றேன் தாள்!
 
✍️செ. இராசா
 
(பையனுக்கு மூன்றாம் ஊசியும் போட்டாச்சு)

சியாறும் தன்மகனை

 


பசியாறும் தன்மகனைப் பார்க்கின்ற போதே
பசியாறும் தாயின் பசி
 
✍️செ. இராசா

16/05/2022

புத்தகம் படித்தால்
மறந்து விடுகிறது
மனக்கவலை

பச்சை

 


 #பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சையென்றால்
இதில் பச்சையென்பது
வளத்தைக் குறிக்கும்!

அவர் சொல்வது பச்சைப் பொய்யென்றால்
அதில் பச்சையென்பது
அளவைக் குறிக்கும்!

இவர் பச்சையாய்ப் பேசுகிறார் என்றால்
இங்கே பச்சையென்பது
கெட்ட வார்த்தையாகும்!

பாவம் பச்சைப்புள்ளை என்றால்
அங்கே பச்சையென்பது
பிஞ்சுக் குழந்தையாகும்!

அதுவே...
பச்சையமுள்ள இலையென்றால்
நிறமியைக் குறிக்கும்!

பச்சைக் கொடியென்றால்
இனத்தைக் குறிக்கும்!

பச்சை விளக்கென்றால்
சமிக்ஞையாகும்!

பச்சை மையென்றால்
அதிகாரமாகும்!

எனில்....
இந்த பச்சைக்குத்தான்
எத்தனைக் குறியீடுகள்?
எத்தனை மதிப்பீடுகள்?
எத்தனை அலங்காரங்கள்?
எத்தனை அடையாளங்கள்?
எதனால் இப்படி?

ஓ...
புவிக் காகிதம் மேல்
மழைத் தூரிகை வரைந்த ஓவியத்தில்
உயிர்ப்புடன் ஒளிர்வது
பச்சை நிறம் என்பதாலா?

✍️செ. இராசா

காலமும் நேரமும் வெண்பாக்கள்

 

எதிர்பாரா நேரத்தில் எங்கிருந்தோ வந்தால்
அதிசயம் தானே அது?!
(1)
 
எதிர்பார்த்த எல்லாமும் ஏமாற்றம் தந்தால்
புதிராகும் தானே பொழப்பு?!
(2)
 
பிறபலம் இல்லார் பிரபலம் ஆனால்
மறவாதே ஊழின் வலி!
(3)
 
விழுவது யாவும் விளையுமா என்ன?
எழுவது தானே எழும்?!
(4)
 
குப்பைக் குணவானும் கோபுரத்தின் மேல்நின்றால்
தப்பைச் சரியென்பர் சார்ந்து!
(5)
 
தேவைக்கு மாத்திரம் தேடிவரும் நண்பர்கள்
தேவையா என்றே தெளி!
(6)
 
நம்மை நினையாரை நாமெண்ணி வாழ்தல்போல்
நம்மை நினைப்பாரும் உண்டு!
(7)
 
இறந்தபின் ஆழ்ந்த இரங்கலெனச் சொல்லி
மறந்திடும் மானுட வாழ்வு!
(8)
 
நடிக்கின்ற ஆளையே நல்லவனாய் நம்பும்
படித்தவர் கூட்டத்தைப் பார்!
(9)
 
காலமும் நேரமும் கைகூடும் போதில்தான்
ஞாலத்தை வெல்கின்ற வாழ்வு
(10)
 
✍️செ. இராசா

15/05/2022

முள்ளின்மேல் நின்றுகொண்டு

 


முள்ளின்மேல் நின்றுகொண்டு
......முன்னோக்கிப் பார்த்தாலும்
பள்ளத்தில் நின்றுகொண்டு
......பார்க்கின்ற- கள்வர்கள்
உச்சாணிக் கொம்பேறி
......ஒய்யாரம் காட்டுவதாய்ப்
பச்சைப்பொய் சொல்கின்றார் பார்!
 
✍️செ. இராசா

13/05/2022

தொட்டதெதுவும் துலங்கவில்லை

 

தொட்டதெதுவும் துலங்கவில்லை
என்ன கருமம் தெரியவில்லை
பட்டபிறகும் புரியவில்லை
இன்னும் ஏனோ விடியவில்லை
 
முட்டி முட்டி பார்க்குறேன்
முடிஞ்சவரை மோதுறேன்
வெற்றி ஒன்றைத் தேடுறேன்
வெறிபிடிச்சு நோகுறேன்..
 
இந்தா இந்தா இந்தா என்றே
இன்னும் நாளை கடத்துறான்...
அந்தா அந்தா அந்தா என்றே
நம்ப வச்சே அறுக்குறான்...
 
.....தொட்டதெதுவும்
 
✍️செ. இராசா
 
(சூழ்நிலைக்கு எழுதிய பாடலே...)

அந்த நாட்கள்

 

நடுத்தர வயதில்
அந்த நாட்கள் தள்ளிப்போனால் வரும்
பதட்டம் இருக்கிறதே....‌
அப்பப்பா சொல்லி மாளாது.....
 
எப்போதோ செய்த குடும்பக் கட்டுப்பாட்டில்
இப்போது சந்தேகம் வரும்....
தொட்டவுடன் பதில் சொல்லும் கூகுளோ
பலதகவல் தந்து பதற வைக்கும்...
தோழிகள் குழாமில் சொன்னாலும்
சகஜமென்றே பதில் வரும்...
ஏங்க....என்று அவரிடம் சொன்னாலோ
ஏக்கப் பெருமூச்சில் தீயெரியும்....
ஆனாலும்.....
அந்தச் செல்ல அணைப்பில்தான்
அந்த நாட்கள் மீண்டு(ம்) வரும்..
 
✍️செ. இராசா
 
(ஆண்களின் புரிதலுக்காக பெண்ணின் பார்வையில்

12/05/2022

உண்டோம் உறங்கினோம்

 


உண்டோம் உறங்கினோம்
..... உட்கார்ந்தோம் ஓடினோம்
கண்டோம் களித்தோம்
....கரம்பிடித்துக்- கண்ணுண்டோம்
சேர்ந்தோம் செலவழித்தோம்
....சேய்பிறக்க வித்திட்டோம்
சார்ந்தோம் சரிந்தோம் சலித்து!
 
✍️செ. இராசா

11/05/2022

எங்கே போனீங்கோ- நீங்கோ


 

எங்கே போனீங்கோ- நீங்கோ
எங்கே போனீங்கோ; ஏங்கோ
எங்கே போனீங்கோ-நீங்கோ
எங்கே போனீங்கோ..
 
டாசு மாக்க மூடச் சொல்லிச்
.....சொன்ன தாருங்கோ
கேசு போட்ட போது வந்து
.....நின்ன தாருங்கோ...
 
சொல்லுங்கோ....
 
டாசு மாக்கு தீமை யென்று
.....சொன்ன ஆளுங்கோ
காசுக் காக வாயை மூடி
.....போன தெங்கெங்கோ..
 
குடியைக் கெடுக்கும்
......குடியை நிறுத்த
............குடிமகனும் நினைக்கனும்
குடியைப் பெருக்கி
........நிதியைப் பெருக்கும்
...........குடியரசும் திருந்தனும்
குடிக்கும் குடியை
.....குறைச்சுக் குடிக்கக்
.........குடிமகனைப் பழக்கனும்!
குடியால் அழியும்
.....குடும்பம் செழிக்க
...........குடிக்கடையக் குறைக்கனும்!
 
✍️செ. இராசா

அதிசயமே...

அடுத்தவர் வரிகளை
அப்படியே வைக்கும் பதிவுகளில்
ஏனோ..
எழுதியவர் பெயர் மட்டும் விடுபட்டு விடுவது 

அதிசயமே...

ஆணியின் கேள்வி

 


அடிகள் பல வாங்கித்தான்
ஆழம்காண முடியுமென
தலையில் அடித்துச் சொல்லும்
எங்கள் பிரம்மாக்களே..
 
கூர்மையான காலிருந்தும்
குச்சியான மேலிருந்தும்
தலையில் அடிப்பதற்குத்
தலைக்கனம்தான் காரணமா?
 
 
எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.‌‌...
உங்கள் கடவுள்களைக் காலெண்டராக்கி
எங்கள்மேல் தொங்கவிடுவதால்...
 
ஆனாலும் வருத்தம்தான்
உங்கள் கடவுளைத் தொங்கவிட
எங்களையும் சிலுவையேற்றுவதால்....
 
ஆமாம்....
தெரியாமல்தான் கேட்கிறேன்
நீங்கள் வந்து குத்திக்கொண்டு
எங்களையேன் சொல்கின்றீர்
ஆணி குத்தியதென்று‌....
 
ஓ...நீங்கள் மனிதர்கள் அல்லவா?!
 
✍️செ. இராசா

10/05/2022

தீ வெண்பாக்கள்

  


#தீ_வெண்பாக்கள்

மக்களின் சாபத்தில் மன்னர்கள் வீழ்கையில்
உக்கிரமாய் மாறும் உணர்வு!
(1)

கண்ணகிகள் விட்டகண்ணீர் கானலில்லை என்பதனை
கண்டதின்று வையகமே காண்!
(2)

பக்சேக்கள் செய்தபலி பாவங்கள் அத்தனைக்கும்
தக்கதொரு தீர்வுதான் சாவு!
(3)

மந்திர மாந்த்ரீக மாயைகள் எல்லாமும்
சொந்தவினை போக்கிடுமா சொல்?
(4)

புத்தரின் பல்காக்கும் புண்ணிய பூமியில்
புத்தன்சொல் காத்தனரா சொல்?
(5)

அகிம்சை வழிசென்றோர் ஆயுதத்தைத் தூக்க
வகுத்தோர் எவரென்று சொல்?
(6)

இனத்திற்குள் ஒற்றுமை இல்லாமல் செய்து
தனக்கென வாழ்ந்தவர்யார் சொல்?
(7)

வெற்றியெனச் சொல்லி வெறிகொண்டு கொக்கரித்தாய்...
பற்றி எரியுது பார்!
(8)

அறமின்றி ஆடும் அனைவருக்கும் பாடம்
இறக்கும்முன் செய்வான் இறை!
(9)

பிரித்தாளும் சூழ்ச்சியால் பேயரசு செய்தால்
எரிமூட்டிக் கொல்வான் எமன்!
(10)

✍️செ. இராசா