31/10/2018

வாலி நீ வாழி



கவியரசர் வரிகளால் கவரப்பட்டு
கவியரசர் எதிரிலே கடைவிரித்து
கவியரசர் ரசித்த கவிஞனே

நீ...

வானத்தில் மையெடுத்த வித்தனே!
வார்த்தை விளையாட்டில் சித்தனே!
வாழ்க்கைக்கு வழிகாட்டும் புத்தனே!

திருவரங்கம் பெற்றெடுத்த
கவியரங்க ராஜனே; நீ
கவி ரங்கராஜனே....

ஆக நினைத்தாய்; அன்று ஓர் மாலி!
ஆகி நின்றாய்; அன்றே ஓர் வாலி!
ஆதி அடைந்தாய்; என்றும் புகழ் வாழி!

வாலி நீ வாழி!!!

உறவின் பலம் (குறளின் குரலாய்)


அகத்தில் அன்பினைக் கொண்டிருந்தால்
சகத்தில் அனைத்துமே உறவாகும்!
முகத்தில் சினத்தைக் கொண்டிருந்தால்
புறத்தில் அனைத்துமே வேறாகும்!

காகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுதூரம்!
நாகத்தின் குணத்தைக் கொண்டிருந்தால்
வேதனைத் துயரங்கள் வெகுமானம்!

வாக்கினில் இன்சொல் கொண்டிருந்தால்
போற்றிடும் சுற்றமே சூழ்ந்திருக்கும்!
நாக்கினில் வன்சொல் கொண்டிருந்தால்
தூற்றிடும் சூழலில் வாழ்விருக்கும்!
தேசியத் தலைவரை
அனைவரும் வணங்குகிறார்கள்
சாதிய அடையாளத்தோடு

30/10/2018

அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்



நீ......
அப்பா... அப்பா.....என்றாலே- என்
அங்கமெல்லாம் சிலிர்க்குதடா- நீ
ஐயோ.... அப்பா... என்றாலே- என்
ஆவியெல்லாம் துடிக்குதடா!

நீ......
தப்பாய் தமிழைக் கதைத்தாலே- என்
தமிழும் உன்போல் நகைக்குதடா- நீ
தமையனை அடிக்க வருகையிலே- என்
தம்பியின் நினைவே வருகுதடா!

நீ...
தலையின் உச்சியில் அமரயிலே- என்
தமிழின் அமர்வாய்த் தோன்றுதடா- நீ
கழுத்தை சுற்றிக் கவ்வையிலே- என்
கடவுளின் கருணை தெரியுதடா!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்ல மகளே.....
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

28/10/2018

நடனம்


இசைக்கின்ற இசையின்
இசையிலே இசைந்து
அசைவது மட்டுமா நடனம்?- இல்லை
இசைக்கா நிலையிலும்
இசையினை இசைக்கிற
அசைவுள்ள ஆட்ட(மே)மும் நடனம்!

தாம்தூம் தாளத்தில்
தகதிமி ஜதியினில்
ஆடுதல் மட்டுமா நடனம்?- இல்லை
அடிக்கிற பறையினில்
இடிக்கிற இசையினில்
துடிக்கிற துள்ள(ளே)ளும் நடனம்!

நாயண மேளத்தில்
நாட்டிய சபையினில்
காட்டுதல் மட்டுமா நடனம்?- இல்லை
நாட்டினை விட்டவர்
காட்டினைத் தேடயில்
காட்டிடும் ஆட்ட(மே)மும் நடனம்!

26/10/2018

அட ஆம்....பெண்ணே
என் வீட்டுக் கண்ணாடியும்
உன் முகமே காட்டுகிறது

மின்னல்






(1)
கூடலின் சேதியை
வேகமாய்ச் சொல்கிறது
மின்னல்

(2)
இசைவோடு இடித்ததை
இசையோடு சொல்கிறது
மின்னல்

(3)
நீர்க்குடம் உடைந்ததை
ஊருக்கேச் சொல்கிறது
மின்னல்

(4)
இருளில் இடித்ததை
வெளிச்சத்தில் காட்டுகிறது
மின்னல்

(5)
தனியாக உரசியதை
தரணிக்கேச் சொல்கிறது
மின்னல்

25/10/2018

போற்றிப் பாடடி பெண்ணே



போற்றிப் பாடடி பெண்ணே- உனைத்
தூற்றுவர் வியப்புறக் கண்ணே!
மாற்றிப் பாடடி பெண்ணே- நல்ல
மாற்றத்தை விரும்புவோர் முன்னே!

கற்றுக் கொள்ளடி பெண்ணே- உனைப்
பற்றிடும் உலகமே கண்ணே!
கற்றதைச் சொல்லிடு பெண்ணே- நீ
கற்றதால் மகிழ்வோர் முன்னே!

உற்றுப் பாரடி பெண்ணே- இங்கு
சுற்றிலும் தீதோர் கண்ணே!
நெற்றியைச் சுருக்கிடு பெண்ணே- சில
கற்பில்லா அற்பர்கள் முன்னே!

சிற்பியாய் மாறிடு பெண்ணே- உனை
சிற்பமாய் செதுக்கிடு பெண்ணே!
வெற்றியைப் பெற்றிடு பெண்ணே-உனை
வெற்றென இகழ்வோர் முன்னே!

இன்னும் ஓட வாழ்த்துகின்றேன்



கடந்து போகும் வாழ்க்கையிலே
காட்சியாய் நிற்போர் சிலர்
கானலாய் மறைவோர் பலர்

அகநூலில் பதிந்தோரை
அப்படியே எழுதுவது
முகநூலில் எப்போதும்
முடியாத காரியமே...

ஆச்சரியப் பூச்சொரியும்
எத்தனையோ உறவுகளில்
பிலிப்பினோ சந்தோசும்
பிரியமான நண்பராவார்

அறுபத்து ஐந்திலும்
அடங்காத வேகத்தில்
ஓய்வே இல்லாது
ஓடுகின்ற மனிதரிவர்...

என் அப்பா ஓய்வெடுத்து
எத்தனையோ வருடமாச்சு
என்னப்பா வயதோடு- இவர்
என்னோடு ஓடுகின்றார்- அட
என்னமாய் ஓடுகின்றார்?!!!!!!!

இன்னும் ஓட வாழ்த்துகின்றேன்.

அஃது எங்கே சொல்வீரோ?!



அன்பே...அழகே...என்றாலோ
ஆகா.... அடடா...என்கின்றாள்

இனியவளே...என் இதயமே என்றாலோ
ஈ...ஈ...என சிரிக்கின்றாள்

உயிரே.... என் ஓவியமே...என்றாலோ
ஊடலைத் தவிர்க்கின்றாள்

எங்கேனும் சென்றால்தான்
ஏதேதோ கேட்கின்றாள்...

ஐயத்தின் பார்வையிலே;
ஒன்றுமில்லா சங்கதிக்கு
ஓ... வென்று அழுகின்றாள்

ஔடதம் தேடுகின்றேன்
அஃது எங்கே சொல்வீரோ?!

24/10/2018

#மீ_டூ_எங்கே_போகிறது?

சூரிய காந்தி பூக்கள் சொன்னதாம்
சூரியன் தங்களையேப் பார்ப்பதாக
#மீ_டூ_எங்கே_போகிறது?

விளைநிலம்

தூவிய விதையும் துளிர்க்கிறது
தூவாத களையும் முளைக்கிறது
மனம் என்ற விளைநிலத்தில்
(#விளைநிலம் வினைத்தொகை )

23/10/2018

ஆண்டவனைத் தரிசிக்க அன்னை மொழி போதும்




ன்நூறு கோடிக்கு
ஏழாயிரம் மொழிகளாம்!
ஏனைய உயிர்களுக்கு
எத்தனை மொழிகளோ?!!

ஆனால்..

காதலைப் பற்றவைக்க
கண்களின் மொழி போதும்

கவிதையைத் தோற்றுவிக்க...
காதலின் மொழி போதும்

அகிலத்தை நேசிக்க
அன்பின் மொழி போதும்

ஆண்டவனைத் தரிசிக்க.
அன்னை மொழி போதும்; எனில்
அன்னிய மொழி எதற்கு?!!

(குறிப்பு:

இனி என் வீட்டில் கண்டிப்பாக வேற்று மொழியில் சடங்குகள் நடக்காது. ஆனால் தமிழில் நடக்கும்)

✍️செ. இராசா

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

——திருமந்திரம்

22/10/2018

காதல் இன்பமானது


நீரிலே வாழ்கின்ற
............... மீன்களைப்போல்- உன்
நினைவிலே உயிர்ப்புடன்
................வாழுகின்றேன்!

மழையிலே துளிர்க்கின்ற
...............உயிர்களைப்போல்-உன்
வரவிலே வேகமாய்த்
...............துளிர்க்கின்றேன்!

மொழியிலே மகிழ்கின்ற
................தமிழனைப்போல்- உன்
விழியிலே விழுந்ததில்
................மகிழுகின்றேன்!

கவியிலே கரைகின்ற
.................கவிஞனைப்போல்- என்
கவி(தை)யே நீயெனக்
.................கரைகின்றேன்!

தன்னையே தேடிய
.................புத்தனைப்போல்-நான்
என்னையே உன்னிடம்
.................தேடுகின்றேன்!

பாலிலே உறைகின்ற
.................நெய்யினைப்போல்- உன்
பார்வையில் காதலை
..................உணருகிறேன்!

பக்தியில் உருகிடும்
.................ஆத்திகன்போல்- உன்
பக்கத்தில் நானிங்கே
.................உருகுகின்றேன் !

கண்டதை உளறிடும்
.................நாத்திகன்போல்- உனைக்
கண்டதில் நானும்தான்
.................உளறுகின்
றேன்
 
செ. இராசா

21/10/2018

செல்வம் சந்திரன்--பிறந்தநாள் வாழ்த்துகள்



💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸

ஓரிரு செல்வங்கள்
உரித்தாகக் கொண்டோரே
செல்வந்தர் எனச்சொல்லி..
செருக்கிலேத் திரிகையிலே
பதினாறு செல்வங்கள்
பெற்றோனாய் இருந்தாலும்
பெருந்தன்மை கொள்ளாத
பெரியோனே! (நற்)பெயரோனே!

💐💐💐💐💐💐💐💐

செல்வம் சந்திரன் நீ!
செல்வத்தில் இந்திரன் நீ!
தமிழின் செல்வன் நீ!
தமிழ்ச்செல்வி கணவன் நீ!
முத்தமிழ் கற்றவன் நீ!
மும்முத்து பெற்றவன் நீ
இயற்கையின் நேசன் நீ! - எங்கள்
இதயத்தின் தோழன் நீ!

வாழிய நீ பல்லாண்டு
வாழிய நீ பல்லாண்டு
வாழிய நீ தமிழ்போன்று
வாழ்க வளமுடன்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

திரு. Selvam Chandran

சட்டத்தின் பார்வைக்கு



சட்டத்தின் பார்வைக்கு
சாக்கடைகள் தெரியலையே
உச்சத்தில் இருப்போர்க்கு
எச்சைகள் தெரியலையே

நீதியின் வலைக்குள்ளே
நித்திகள் மாட்டலையே..
ரஞ்சிதம் செய்தார்மேல்
ரௌத்திரம் காட்டலையே..

காணொளி சிக்கினாலும்
காட்சிகள் மாறலையே....
சாமிகள் மாட்டினாலும்
மாமிகள் போகலையே....

பெண்ணியம் பேசும்முன்
உண்மையை உணருங்கள்...
இருமுடி தூக்கும்முன்
இவர்களைத் துரத்துங்கள்...

(குறிப்பு:
********
இரண்டு பேர் மலையேற
இருநூறு காவலர்கள்
இருமுடியைத் திறந்தாலோ
இருப்பதோ கொய்யாப்பழம்

போங்க... போங்க....)

✍️செ. இராசா

20/10/2018

அனுபவம் அனுபவமே



உயர்ந்த கோபுரத்தை
உரசிடும் மேகங்கள்..

சுட்டிடும் பாலையைத்
தொட்டிடும் தூரல்கள்...

ஈர சாலைகளில்
ஊர்ந்திடும் ஊர்திகள்...

மழையின் பேரழகில்
சுயமியில் சிரிப்பவர்கள்...

புலனம் வழியாக
பகிர்ந்திடும் உறவுகள்

அனைத்தையும் ரசிக்கின்ற
அனுபவம் அனுபவமே....

சேத்த காசு எங்க மாமா




தோட்ட வேலை பார்த்து பார்த்து
சேத்த காசு எங்க மாமா?
மந்தச்செய்யில் இடம் வாங்கி
மக்காச்சோளம் போடு மாமா

பார்த்து பார்த்து சேர்த்த காசில்
பாதிதானே கிட்டும் புள்ள
மீதி காசு இல்லாமத்தான்
நாதியத்து நிக்கேன் புள்ள

என்ன மாமா சொல்லுறீக
ஏன் உசுரு இருக்கையிலே...
அப்பன் தந்த சீதனத்தில்
அரைப்பவுனு தேறும் மாமா..

ஆனைபோல மனசு வச்சு
ஆத்தாவாய் வந்த புள்ள
உன் மல்லிக்கைப்பூ மனசைப்போல
இனி எல்லாமே மணக்கும் புள்ள..

-செ. இராசா-

19/10/2018

அவள் பெயரை எழுதித்தர ................

நான் எழுதும் வரியெல்லாம்
நகைப்பாக உள்ளதென்று
எழுத்தை மாற்றச்சொல்லி
என்னவளும் வேண்டுகின்றாள்

ஏதேனும் புதிதாக
ஏதாவது எழுதச்சொல்லி
என்னையவள் கேட்கின்றாள்

என்ன நான் எழுதுவது?
எதை நான் எழுதுவது?

புரியும்படிச் சொன்னாலோ
எளிதாக உள்ளதாமாம்
புதியவார்த்தை போட்டாலோ
புரியவே இல்லையாமாம்

சத்தியத்தைச் சொன்னாலோ
தத்துவங்கள் எதற்கென்றாள்
அறம்பற்றி எழுதினாலோ
அறிவுரைகள் யாருக்கென்றாள்

சமூகத்தைச் சாடினாலோ
சிகப்பு மணம் குறையுதென்றாள்
சரித்திரத்தை எழுதினாலோ
சலிப்பு தரும் பதிவு என்றாள்

காதலைச் சொன்னாலோ
காதலே இல்லையென்றாள்
கடவுளைப் பாடினாலோ
கவிதையே இல்லையென்றாள்

அவள் பெயரை எழுதித்தர
அப்படியே நகைக்கின்றாள்

கடலில் இருந்த மீனொன்று




கடலில் இருந்த மீனொன்று
கடலைக் காணும் ஆசையிலே
கடலைத் தாண்டி வந்ததுவாம்!

கடலைக் காண்கிற ஆர்வத்திலே
கடலின் அழகில் தனைமறந்து
கடலுக்குத் திரும்பிட மறந்ததுவாம்!

கடலின் உள்ளே இருக்கையிலே
கடலை அறியா மடமையெண்ணி
கரையில் உயிரைத் துறந்ததுவாம்!

17/10/2018

தோல்வி துன்பத்திற்கே


புலனத்தில் வந்த ஒலிநாடாவில்
சலனத்தோடு ஒரு குரல்...

சொன்னது அனைத்தும்
சொல்லவண்ணாத் துயரங்கள்...
சொல்லும் குரலுக்கு
சொந்தமானத் துயரங்கள்....

துக்கமும் துயரமும்
தொண்டையை அடைத்தது
கண்களை நனைத்தது
மனங்களைத் தைத்தது

வேகமாய்க் கைபேசியில் தொடர்புகொள்ள
அதே குரல் மறுமுனையில் ...

ஆனால்....இம்முறை
கம்பீரமாய்க் கதைத்தது....
எனக்கு ஆறுதல் கூறியது......
நகைப்போடு...ஆறுதல் கூறியது..

உண்மையில் நான்
துன்பம் தோற்றது கண்டேன்

ஆம்...

துன்பம் தொடருமாயின்
தோல்வி துன்பத்திற்கே..........

குறுங்கவிதைகள்

# எவ்வளவு எடுத்தாலும்
தீராமல் வருகிறது
கல்வியறிவு

# எவ்வளவு எடுத்தாலும்
தீராமல் இருக்கிறது
பொருளாசை

# கொஞ்சம் இருந்தாலும்
நிறையவே வருகிறது
தைரியம்

16/10/2018

#metoo----எனக்கும் கூடத்தான்

#metoo

எனக்கும் கூடத்தான்- ஆம்
எனக்கும் கூடத்தான்!
என்னை கூடத்தான்- அவன்
என்னை நாடினான்!

மனதில் வைத்தது
மன்றம் வருகுது
என்ன நடந்தது?
என்னமோ நடந்தது.....

யாரு நல்லவர்?
யாரு கெட்டவர்?
பட்டிதொட்டியில்
பட்டிமன்றங்கள்...

நீதி என்பது
சாட்சி சார்ந்தது!

உண்மை என்பது....?!!!
நானே அறிந்தது

#எனக்கும்_கூடத்தான்
#metoo

நட்பு(பூ)

இன்சொல்லில் நீர் ஊற்றும் அன்பில்தான்
இதயத்தில் நட்பு(பூ) மணக்கிறது
தெரியுமா நண்பா.....?!!!

15/10/2018

பப்பாளி

ஊரில் இருந்த பப்பாளி
யாரும் மதியா பப்பாளி
உடுப்பு போட்ட பப்பாளி
உலகைச் சுற்றிடும் பப்பாளி

மஞ்சள் நிறத்து பப்பாளி
மங்கையை மிஞ்சிய பப்பாளி
தாவணி போட்ட பப்பாளி
தங்கத்தை விஞ்சிய பப்பாளி

ப்பா... என்ன விலை??

(உடுப்பு போட்ட அனைத்து பழங்களும் பார்வைக்கு)

14/10/2018

மழைக்கால நிலவே வா வா



மழைக்கால நிலவே வா வா- என்
மனதை வருடிட வா....
வெண்மேக நிலவே வா வா- என்
வேதனை போக்கிட வா....

வெண்மை சுமந்து வளியில் தவழ்ந்து
அன்பைத் தூவிடும் நிலவே....
உன்னைக் கண்டதும்
என்னகம் சொல்லிடும்
உண்மையை யாரறிவாரோ- அந்த
உண்மையை நீ அறிவாயோ...

(மழைக்கால நிலவே....)

புவியை நினைந்து பதியெனச் சுழன்று
கவிதை செய்திடும் நிலவே
என்னை நினைந்து
என்னகம் சுற்றிடும்
பெண்ணினைக் காட்டிடுவாயோ- அந்த
பெண்ணென நீ வருவாயோ?!!

(மழைக்கால நிலவே....)

13/10/2018

எங்கே எனது கவிதை


மணிக்கொரு கவிதையென
மலர்ந்து வந்த கவிதைகளை
மாலையாய் கட்டி வைத்து
மங்கைக்கு சூட்டிடவே
நாளொன்று பார்த்து வைத்து
நாயகியை நாடுகையில்
புன்னகை பூத்தவாறு
என்னவளும் என்னவென்றாள்

மின்னலின் கீற்றொன்று
கண்ணினைப் பறிப்பதுபோல்
என்னவளின் விழிப்பார்வை
என்னையும் பறித்ததன்று...

என்ன செய்வதென்று
ஒன்றுமே புரியவில்லை...
மீண்டும் புன்னகையில்
என்னவளும் என்னவென்றாள்...

“எங்கே எனது கவிதையென”
எங்கிருந்தோ ஓர் குரல்
என்னைவந்து உசுப்பிவிட
கவிதையைத் தேடுகின்றேன்
கவிமாலை காணவில்லை....

வந்த வாய்ப்பொன்று
வழிதவறிப் போகலாமா?!
மனமே வரவில்லை
மறுபடியும் தேடுகின்றேன்
அங்குமிங்கும் ஓடுகின்றேன்
அப்படியே தாவுகின்றேன்...

ஐயோ... அம்மா....

கண்விழித்து பார்க்கின்றேன்
கவிதாவைக் காணவில்லை....

கவிதை கிடைத்து விட்டது

குளமெல்லாம் வீடு




குளமெல்லாம் வீடு பாரு
சாலையெல்லாம் குளம் பாரு
வக்கற்றோர் என்றால் யாரு?
வாக்காளர் என்றே பேரு!

எழுத்துப் பிழை





💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இன்று "எழுத்துப் பிழை" என்ற ஒரு வித்தியாசமான தலைப்பில் நான் எழுதிய கவிதைக்கு பின்னூட்டமாய் வந்த மரியாதைக்குரிய தமிழ்ப் பாமணி அகன் மாமா அவர்களின் கவிதையில் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.

இப்படி எழுதுவதை வெண்பாக்களில்தான் நான் பார்த்துள்ளேன். எனக்கு வெண்பா தெரியாததால் அவைகளை நான் ரசிப்பதோடு சரி. நான் எழுதிய கவிதைக்கும் முதன்முதலில் வந்த பதில்கவிதையில் உண்மையில் மிகவும் மனம் மகிழ்ந்தேன்.

இரண்டு கவிதைகளும் இதோ உங்கள் பார்வைக்காக...........

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுத்துப் பிழை
**************
இறைவன் எழுதிய அருட்பாவில்; நான்
இடையில் பிழையாய் வந்தேனா-இல்லை
கடவுள் படைத்த கவிப்பாவில்; நான்
காட்சிப் பிழையாய் வந்தேனோ?

எந்தை சிந்திய துளிப்பாவில்; நான்
விந்தைப் பிழையாய் வந்தேனா- இல்லை
எல்லை இல்லா வினைப்பாவில்; நான்
எழுத்துப் பிழையாய் வந்தேனா?

✍️இது அடியேனின் வரிகள்...

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

எழுத்துப் பிழை
**************
இறைவன் ஊட்டிய அருட்பாலில் - நீ
இடையில் பிழையாய் வரவில்லை - அந்தக்
கடவுள் படைத்த கவிப்பாலில் - நீ
காட்சிப் பிழையும் இல்லையடா..

உந்தை சிந்திய துளிப்பாவில் - உன்
உதிரம் மேனி இரண்டிலுமே - தமிழ்
வந்து விழுந்த ததனால்தான் - நீ
சிந்தும் மையும் சிரிக்குதடா….

வாழ்த்துகள் ராசா…

---✍️ இது தமிழ்ப்பாமணி அகன் மாமா வரிகள்
மதி விழிப்படைந்தால்
கத்தியும் காலணியாகும்

12/10/2018

நீ இல்லா உலகத்திலே--126 -வது கவிதைப்போட்டி-(வெற்றிக்கவிதை)


பொய் இல்லா உலகத்திலே
மெய்யென்ற வார்த்தையில்லை!
நோய் இல்லா உலகத்திலே
மருந்தென்ற சொல்லே இல்லை!

அறம் சாரார் உலகத்திலே
அறிவுரைகள் நிற்பதில்லை!
மறம் சாரார் உலகத்திலே
மறையுரைகள் நிலைப்பதில்லை!

தமிழ் கல்லார் உலகத்திலே
தமிழ்பேச்சு அர்த்தமில்லை!
தமிழ் கற்றோர் உலகத்திலே
தமிழ்தவிற ஏதுமில்லை!

நீரில்லா உலகத்திலே
ஓருயிரும் பிறப்பதில்லை!
நீ இல்லா உலகத்திலே
நான் வாழத் தேவையில்லை!

தமிழ்ப்பட்டறை நடத்திய 126 -வது கவிதைப்போட்டியில் முதலிடம் தந்த கவிஞர் வாலிதாசன் ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த தலைவர் சேக்கிழார் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும்.
(தமிழ்ப்பட்டறை என்பது 10 உள்நாட்டுக்கிளைகள் மற்றும் 2 பன்னாட்டுக் கிளைகளும் கொண்ட அமைப்பு.

இதுவரையிலும் இந்த அமைப்பு நடத்தும் போட்டி தவிர வேறு எங்கும் நான் கலந்துகொண்டதில்லை. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு இந்த இரண்டு முதலிடங்கள் கிடைத்துள்ளது. இவைகளை இறந்த என் மாமன் மகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.
https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2179662845685953/

ஒரு கேள்வி

சாதிகள் இல்லையென
சமத்துவம் பேசிவிட்டு
சாதிவிட்டு காதலித்தால்
சண்டையிடும் சமூகத்தில்
பாரதியின் பாடல்கள்
படிப்பதற்கு மட்டும்தானோ?!!!
அச்சில் கோர்த்ததை
அகத்தில் கோர்க்கிறது
#கல்வி//.    

அகத்தில் கோர்த்ததை
அச்சில் கோர்க்கிறது
 #புத்தகம்

10/10/2018

பொய் சுடுமா??


உண்மை சொல்லா மனிதருக்கே
நெஞ்சம் சுடுமெனச் சொன்னீரே-ஐயா
உண்மை சொல்லும் மனிதருக்கே
உண்மையில் சோதனை கண்டீரோ?!!

பொய்யே சொல்லா அரிச்சந்திரன்
பொல்லா வேதனை அடைந்தானே- ஐயா
மெய்யே சொன்ன அவனுக்கும்
பொல்லா வேதனை சரிதானோ?!

பொய்யே சொல்லா தருமரையும்
மெய்யை மறைக்கச் சொன்னாரே- ஐயா
மெய்யாய் வாழ்ந்த மனிதனையும்
பொய்யுக்கு அழைத்தது சரிதானோ?

இருவரை மனதில் நிலைநிறுத்தி
இந்தியத் தந்தை வாழ்ந்தாரே- ஐயா
நெஞ்சில் பொய்சுடும் என்றீரே;அவர்
நெஞ்சைச் சுட்டது மெய்யன்றோ?!

மெய்யாய் வாழ்ந்த தலைவருக்கே
ஊழ்வினை சுட்டிடும் என்றாலே- தம்பி
பொய்யாய் வாழும் மனிதர்களை
பாழ்வினை சுடாது விட்டிடுமோ?!!

09/10/2018

115வது கவிச்சரம்--நட்பு



115வது கவிச்சரம்
******************
💐🌸💐🌸💐🌸💐🌸💐
தமிழ்த்தாய் வாழ்த்து
*******************
ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்த தொல்காப்பியமாய்
திருவள்ளுவனின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசரின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்!

கவிச்சரத் தலைமை வணக்கம்
*****************************
அறிவில் திருமகனார்
அறிவியல் தமிழ்மகனார்
அப்துல்கலாம் ஐயாவின்
அணிந்துரையில் வெளிவந்த
“அறிவியல் பூங்கொத்து” ஆசிரியர்
திருஞானம் ஐயாவை
ஒருமனதாய் வாழ்த்துகின்றேன்!
இருகரத்தால் வணங்குகின்றேன்!

அவை வணக்கம்
****************
ஆலம் விழுதுபோல்
ஞாலத்தில் காலூண்றி
இரண்டு கிளைகளை
இலங்கையிலே பரவவிட்டு
பத்தாவதாய் வரவிருக்கும்
புதுக்கோட்டை அமைப்பிற்கும்;
அத்தனை அவைகளுக்கும்
அடியேனின் வணக்கங்கள்!

நட்பு
*****
ரத்த உறவுகளில் இல்லாத ஒன்று!
ஒத்த உணர்வான நட்புக்கே உண்டு!

ஒன்றும் எதிர்பாரா நல்லோரின் நட்பு!
என்றும் அமைந்தாலே அதுதானே சிறப்பு!

வர்ணம் பாராத அன்பானோர் நட்பு!
கர்ணன் போலான ஆன்றோரின் நட்பு!

உடன் இருத்தல்
***************
உடலோடு உறைகின்ற உயிர்போலே
உணர்வோடு ஒன்றானோர் நட்பாலே
உடமைகள் கைவிட்டுப் போனாலும்
உண்மையில் இழந்ததாய் ஆகாதே...!!!

கோடிகளில் செல்வங்கள் சேர்த்தாலும்
கோட்டையில் கோலாச்சி இருந்தாலும்
நன்நட்பு இல்லாது போனாலோ
தன்னுயிரை காப்பாற்ற முடியாதே....!!!

நன்றி நவில்தல்
***************
என்னால் முடிந்ததை நான்
எப்படியோ சொல்லிவிட்டேன்!
நன்றாய் இருந்தெதனில்
நற்றமிழின் பெருமையென்பேன்!
ஏதோ இருந்ததெனில்
எளியோனின் பிழையென்பேன்!
பிழையைப் பொருத்தருள
பிரியமுடன் வேண்டுகிறேன்!

நன்றி! நன்றி!!

நன்றாகவே இருந்தேன்


நன்றாகவே இருந்தேன்...
நீ வரும் வரையில்..........

என்று நீ வந்தாயோ
அன்று முதல் இன்றுவரை
கிறுகிறுப்பும் தாகமுமாய்- என்
சுறுசுறுப்பை முடக்கிவிட்டாய்

என்று நீ வந்தாயோ
அன்று முதல் இன்றுவரை
படுக்கையினைத் தேடுகின்ற
பாவியாக மாற்றிவிட்டாய்

என்று நீ வந்தாயோ
அன்று முதல் இன்றுவரை
தலையிலே பாரமாக
சம்மட்டி அடிக்கின்றாய்

என்று நீ வந்தாயோ
அன்று முதல் இன்றுவரை
அகத்தினுள் இருந்துகொண்டு
ஆட்டிப்படைக்கின்றாய்

போய்விடு சளியே போய்விடு

08/10/2018

#ஆராய்ச்சியில்_நான்

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நல்ல மகனே நான்- ஆனால்
மகனுக்கும் மகளுக்கும்
நல்ல அப்பாவா நான்?!

உண்மையான நண்பருக்கு
நல்ல நண்பனே நான்- ஆனால்
உரித்தான மனைவிக்கு
நல்ல நண்பனா நான்?!

நிறுவன மேலாளருக்கு
நல்ல ஊழியனே நான்- ஆனால்
கீழ்நிலை ஊழியர்களுக்கு
நல்ல மேலாளரா நான்?!

இறைவனிடம் எப்போதும்
யாசித்தவனே நான்- ஆனால்
யோசிக்காமல் எப்போதும்
கொடுத்தேனா நான்?!

மற்றோரின் பாராட்டில்
மகிழ்ந்தவனே நான்- ஆனால்
மற்றோரைப் பாராட்டி
மகிழ்ந்(வித்)தேனா நான்?!

#ஆராய்ச்சியில்_நான்

07/10/2018

நீயெந்தன் வரமே


என்னுள் எப்படி நீ வந்தாய்?!
என்னுயிரே சொல்
என்னுள் எப்படி நீ வந்தாய்?!

அரும்பிய மீசையோடு
அலைந்தேனே... திரிந்தேனே
அப்போதே என்னுள்ளே
ஆசையோடு வந்தாயோ?!!

முளைவிடும் தாடியினை
முகச்சவரம் செய்துவிட்டு
கண்களிலே வலைபோட்டு
கண்டதைத் தேடியதில்
இன்பத்துப் பாலாக
இதயத்தில் நுழைந்தாயோ?!!

கல்லூரி வாசல்தாண்டி
பலநூறு மைல்கள் தாண்டி
எங்கெங்கோ போனாலும்
எப்போதும் உறவாட
முகநூலில் வந்தாயோ?!!

அந்நாளும் இந்நாளும்
எந்நாளும் சொல்லிடுவேன்
அன்பான நற்றமிழே
நீயெந்தன் நல்வரமே....

புரியாத புதிருக்கு



புரியாத புதிருக்கு விடைதேடி ஒருவன்
சரியான பதிலுக்கு குருநாடி போனான்
அரிதான விடயங்கள் அறியாத அவனும்
தெரியாத ஞானத்தை எளிதாகக் கற்றான்

தெரியாத பலரோடு உறவாடும் பொழுதும்
தெளிவான மனதோடு சரியாக நின்றான்
சதியாலே சிலரோடு உறவாடும் பொழுதே
விதியாலே சிலநேரம் தடுமாறி நின்றான்

✍️செ. இராசா

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி.......” என்று வள்ளுவர் சொன்ன அளவுக்கெல்லாம் இந்த விடயம் அவ்வளவு பெருசு இல்லீங்க....ரொம்ப சின்ன விடயம்தான். இருந்தாலும் சின்னச்சின்ன விடயம்தானே நமக்கு தெரிவதில்லை. அதற்கு நாம ஒரு தீர்வும் தேடுவதில்லை. ஏன்னா அது சின்ன விடயம்தானே?!!!

இப்பெல்லாம் சின்ன விடயங்களுக்குத் தீர்வு காணொளியில் கொட்டிக் கிடக்குங்க.... உதாரணம்... காலுரை எப்படி மடிப்பது, வீட்டு உபயோகப் பொருட்கள் எப்படி செய்வது போன்ற விடயங்கள்.



அப்படி ஒரு விடயம் என் பையன் எனக்கு சொல்லித்தந்தான். பொதுவாக, புத்தகம் படிக்கும்போது, அதுவரை படித்தபகுதியை பின்பு தொடர்வதற்காக ஒன்று மடித்து வைப்போம், இல்லையினா ஏதோ ஒரு அட்டையை சொருகி வைப்போம், இல்லையா?!. இப்படி பண்ணுவதை பார்த்த என் பையன், எனக்கு ஒரு குச்சியில் பேப்பர் வைத்து படத்தில் உள்ளதுபோல் செய்து தந்தான். இப்பொழுது நல்ல உபயோகமாக இருக்குங்க.

உங்களுக்கும் உபயோகமாக இருக்குமேன்னு இந்த பதிவு போடுறேங்க.

வாழ்க வளமுடன்!

06/10/2018

கண்ணீர்


அழுக்கினைத் துடைத்தெறிய
ஆண்டவன் அருளியது
கண்ணீர்!

புண்பட்ட மனங்களின்
ரணங்களை குறைப்பது
கண்ணீர்!

இன்பத்தின் உச்சியிலே
இமைகளை நனைப்பது
கண்ணீர்!

மழலையின் கண்ணீர்- அது
மொழியின் ஆரம்பம்!

மங்கையின் கண்ணீர்- அது
சமூகத்தின் அவமானம்!

ஆண்களின் கண்ணீர்- அது
ஆற்றாமை அடையாளம்!

ஆயினும்;

அன்பின் கண்ணீர்- அது
இன்பத்தைக் கூட்டிவிடும்!

பரவசக் கண்ணீர்- அது
பக்தியைப் பெருக்கிவிடும்!

இடரின் கண்ணீர்- அது
துயரினைக் கழித்துவிடும்!

இரக்கத்தின் கண்ணீர்- அது
கருணையைக் காட்டுவிடும்

உடைந்துவரும் கண்ணீர்- அது
உள்ள(த்)தை பறைசாற்றும்!

பெருகிவரும் கண்ணீர்- அது
பெருந்துயரை வி(வ)ழிமொழியும்!

கண்ணீர் வழியட்டும்!
கண்ணீர் வழியட்டும்!

✍️செ. இராசா

05/10/2018

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்- அப்பூதி அடிகளார்



அண்ணாமலையில் பயின்று
அண்ணாமலையிலேயே தொண்டாற்றும்
அன்பு நண்பா....

63 நாயன்மார்களில் ஒருவராம்
அப்பூதி அடிகளார் பெயர்கொண்டதால்
அண்ணாமலையோடு சங்கமித்தாயோ?

உனக்கு ஞாபகம் இருக்கிறதா
நாம் தங்கிய அறையின் எண்?

ஆம்....அதுவும் 63 தான்

ஏழாம் நூற்றாண்டின் பெயரோனே..
உனக்கு ஞாபகம் இருக்கிறதா
நாங்கள் உனக்கு வைத்த பெயர்?!

அதான்......சல்மான்கான்..

அன்றுமட்டுமல்ல எங்களுக்கு நீ
என்றுமே கருப்பு சல்மான்கான்தான்

உனக்கு ஞாபகம் இருக்கிறதா?!

கட்டுமானவியல் துறையில் நானும்
இயந்திரவியல் துறையில் நீயும்
அன்று மேடையில் தமிழில் கலக்கியது
அனைத்தும் மயிர் கூச்சொரியும்
ஆச்சரியம் அல்லவா?!!!

அன்றுபோல் இன்றும்
அன்னைத் தமிழ்கொண்டே
நெஞ்சம் குளிர வாழ்த்துகிறேன்..

அருமை நண்பா...

வாழ்க நீ பல்லாண்டு
வாழ்க நீ தமிழோடு
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்

04/10/2018

“நான்” (ஒரு சிந்தனை)





ஒவ்வொரு தனி மனிதனையும் (ஒவ்வொரு “நான்” னையும்) சுற்றி ஒவ்வொரு வட்டங்களாக போட்டால் பெரும்பாலும் பின்வருமாறு அமையும்.

1. குடும்பம்
2. சுற்றம், நட்பு மற்றும் தெரிந்த நபர்கள்
3. சமூகம் மற்றும் தெரியாத நபர்கள்
4. அனைத்து பிற உயிரினங்கள் மற்றும் அனைத்து உயிரற்ற பொருட்கள் 


இந்த வட்டங்களில் உள்ள அமைப்பு முறைகளை அவரவர்களுக்கு தகுந்தவாறு மாற்றிகூட அமைத்துக்கொள்ளலாம். அது முக்கியமல்ல. இந்த அனைத்து வட்டங்களும் ஒவ்வொரு “நான்”னையும் மையமாக வைத்தே அமைகின்றன என்பதே இங்கு மிகமுக்கியமாகும்.

இங்கே இந்த நானானது உடலாலும், மனத்தாலும் அனைவரையும் தொடர்புகொள்வதற்காக ஒரு ஆரம் அமைத்து மற்ற வட்டங்களின் எல்லைகளையும் விரித்துக்கொள்கிறது. அனைத்திற்கும் ஆதாரமான இந்த நானே மிக முக்கியமாக இருப்பதால் இந்த நானை நாம் பாதுகாக்க வேண்டியது முக்கியமாக அமைகிறது.

இந்த உயிருள்ள நானானது கடமை அல்லது தொண்டு செய்வதன் மூலமாக உடலாலும், எண்ணங்களின் மூலமாக மனத்தாலும் இந்த உலகத்தைத் தொடர்புகொள்கிறது. அவ்வளவு முக்கியமான இந்த உடலையும் மனத்தையும் நாம் ஒழுங்காகப் பேணிக்காக்க வேண்டுமல்லவா?!!

உடலை நன்றாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் உணவுப்பழக்கங்களும், மனதை நன்றாக வைத்துக்கொள்ள பயிற்சியும், நல்ல புத்தகங்களும் மற்றும் நல்லோர்களின் தொடர்பும் தேவைப்படுகிறது.

நாம் நன்றாக இருந்தால்தானே நம் குடும்பம், சுற்றம், நட்பு, சமூகம் என அனைவரிடமும் நல்லிணக்கமாக வாழ முடியும். எல்லா உறவுகளுக்கும் மையமான நம்மை நாம் செதுக்கும் முறையை அறிந்து கொள்ளவேண்டும் என்றுகூறி கீழே ஒரு கவிதையோடு விடைபெறுகிறேன் உறவுகளே.....நன்றி வணக்கம்

கவிதை
*********

நான் என்பதை மையம்கொண்டே
நாம்பல வட்டங்கள் போடுகின்றோம்!
உடலும் மனமும் ஒருங்கிணைந்த
கடமையை ஆரமாய் அமைத்திடுவோம்!

ஆரத்தின் அளவைப் பொறுத்தேதான்
அமைகின்ற வட்டங்கள் சிறப்பதினால்
அதனை அழகாய் வடிவமைக்கும்
அடிப்படை அறிவை பெருக்கிடுவோம்!

இவண்

செ. இராசா
உணவை வீணாக்குவது மட்டும் தவறல்ல

வீணாகிறதே என்பதற்காக உண்பதும்தான்

குறுங்கவிதைகள்


(1)
என்றோ விட்டது
இன்னும் சுற்றுகிறது
பிரபஞ்சமாய்

(2)
எடை கூடினாலும்
எழிலாய்ச் சுற்றுகிறது
இந்த பிரபஞ்சம்

✍️செ. இராசா

குறிப்பு
******
அன்பு நண்பர்களே...

கீழே உள்ள படத்தைப்பற்றி ஒரு சிறு விளக்கம்:

இது ஒரு இரவு முழுவதும், ஒரே கோணத்தில், ஒரே கருவியில், ஒவ்வொரு 5 நிமிடங்களும் எடுத்து ஒரே வடிவாக அழுத்தம் கொடுக்கப்பட்டு கிடைத்த புகைப்படமாகும்.

இதை எடுத்த புகைப்படக்கலைஞர் அன்பு நண்பர் திரு. Riaz Ahamed அவர்கள்.

02/10/2018

கள்ளும் காமமும்



************************************
நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்....
************************************
பருகினால் சொருகிடும் கள்ளா இவள்?
பார்வையால் உருக்கிடும் பாவை இவள்!

நிறத்திலே கருப்பான ரம்மா இவள்?
நிழலிலும் அழகான ரம்பா இவள்!

குளுமையில் பொங்குகின்ற பீரா இவள்?
குணத்திலே பொறுமையான வீரா இவள்!

தலையிலே ஏறுகின்ற விஷ்கியா இவள்?!
தலைவனை மதிக்கின்ற வித்யா இவள்!

கசப்பினை தருகின்ற பிராந்தியா இவள்?
கடிந்தாலும் கசக்காத கவிதா இவள்!

உள்ளத்தை மயக்குகின்ற போதையா இவள்?
உண்மையைப் போதித்த கோதையே இவள்!

செ. இராசா

(ரம்பா- தேவலோகத்தில் உள்ள அழகான பெண், வீரா- படைப்பு, வித்யா- அறிவு, கவிதா- கவிதை)

கள்ளும் காமமும்
*****************
அச்சத்தில் தொடங்கிடும் முதலாட்டம்
இச்சைக்கு இசைந்தால் தொடராட்டம்

நாணத்தை மீறிடும் களியாட்டம்
“நான்”(னை) மறந்தால் கலியாட்டம்

கனத்தை மறைத்திடும் சதிராட்டம்
மனத்தை மயக்கிடும் புதிராட்டம்

ஆசையை அடக்கிடும் போராட்டம்
ஆசையை மீறினால் வெறியாட்டம்

உண்மையை உளறிடும் நாவாட்டம்
உலகத்தை மறக்கிற வெள்ளோட்டம்

✍️செ. இராசா
உள்ளே செல்லச்செல்ல//
உருவைக் குலைக்கிறது//
சரக்கும் சந்தேகமும்

கற்றுக் கொண்டவன்- ஒரு பாடல்


(ஒருவர் சூழ்நிலை சொல்ல....அதற்காக எழுதியது)

கற்றுக் கொண்டதையும்- தமிழில்
பெற்றுக் கொண்டதையும்- பிடியில்
சற்றும் நழுவாமல்- வாழ்வில்
முற்றும் கடைபிடித்தான்!

ஈன்றோர் கையிருப்பில்- தினம்
திண்போர் இருக்கையிலே- தமிழ்ச்
சான்றோர் சொன்னதுபோல்- இவன்
தனியாய்த் தெரிகின்றான்!

கடமையின் பெயராலே- பலர்
கடன்கள் வாங்கையிலே- அது
மடமைச் செயலென்றே- இவன்
உடன்பட மறுக்கின்றான்!

லஞ்சம் பெறுவதில்லை-யாரையும்
தஞ்சம் புகுவதில்லை- யாரும்
பங்கம் செய்தாலும்- இவனோ
வஞ்சம் வைப்பதில்லை!

கொட்டிக் கொடுக்கையிலும்- சிலர்
திட்டித் தீர்க்கையிலும்- என்றும்
விட்டுக் கொடுப்பதினால்- இவன்
கெட்டுப் போவதில்லை!

(வேறு)

உண்மை நேர்மை என்பதிலே
என்ன பயனெனக் கேட்போரே..
உண்மை தந்திடும் வலிமைகளே
நன்மை பயனென அறிவீரோ....

கற்றுக் கொண்டதையும்- தமிழில்
பெற்றுக் கொண்டதையும்- பிடியில்
சற்றும் நழுவாமல்- வாழ்வில்
முற்றும் கடைபிடித்தால்- நாமும்
வெற்றியைத் தொட்டிடுவோம்!

ஓர் பார்வை பார்


தேமதுரத் தமிழோசை
தேடிவரச் செய்திடுவேன்
ஓவியமே நீயென்னை
ஓர் பார்வை பாராயோ...

வானுயர்ந்த வள்ளுவனை
வாசலுக்கே வரவழைப்பேன்
ஒப்பற்ற என் குறளே(ரலே)
ஓர் பார்வை பாராயோ...

பார்புகழும் பாரதியை
பாட்டிசைக்க பணித்திடுவேன்
ஓடிவரும் கவியமுதே
ஓர் பார்வை பாராயோ...

கவியரசர் கவியேற்ற
கட்டளைகள் போட்டிடுவேன்
தாவிவரும் தெள்ளமுதே
ஓர் பார்வை பாராயோ...

கவிக்கோவின் வரிகளிலே
ஹைக்கூவில் காதலிப்பேன்
கருவிழியாய் இருப்பவளே
ஓர் பார்வை பாராயோ...

என்னுடைய தமிழ்கொண்டே
உன்னைநான் தொட்டிடுவேன்
கவிமலராய் சிரிப்பவளே
ஓர் பார்வை பாராயோ...

01/10/2018

உறக்கம் கலைவதெப்போ?!!


இறக்கமே இல்லாமல்
.......உயருகின்ற விலைவாசி
இரக்கமே இல்லாமல்
.......நடக்கின்ற அரசாட்சி
இரண்டிலும் சிக்கியுள்ள
.......அப்பாவிப் பொதுமக்கள்
இவைகளை மீட்டெடுக்க
......உறக்கத்தைக் கலைவதெப்போ?!

அறநெறி தெரியாமல்
......ஆள்கின்ற தலைவர்கள்
மறநெறி தெரியாமல்
.......எதிர்க்கின்ற தலைவர்கள்
இரண்டையும் சகிக்கின்ற
.......அப்பாவிப் பொதுமக்கள்
இவர்களைச் சுளுக்கெடுக்க
........உறக்கத்தைக் கலைவதெப்போ?!

உண்மையே இல்லாமல்
.........உரைக்கின்ற ஊடகங்கள்
நன்மையே செய்யாமல்
.........நடிக்கின்ற நடிகர்கள்
இரண்டையும் நம்புகின்ற
.........அப்பாவிப் பொதுமக்கள்
இவைகளை மதிக்காமல்
..........உறக்கத்தைக் கலைவதெப்போ?!!

நீதியின் ஓட்டையிலே
.........நீந்துகின்ற கயவர்கள்
நீதியை வழங்காமல்
.........நீட்டிக்கும் நடுவர்கள்
இரண்டையும் என்னவென்று
........கேட்காத பொதுமக்கள்
இவைகளைச் சரியாக்க
.......உறக்கதைக் கலைவதெப்போ?!

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷