29/11/2021

சொல்லறம்---வள்ளுவர் திங்கள் 187

 #சொல்லறம்
#வள்ளுவர்_திங்கள்_187

சொல்லறம் இல்லாமல் சூழ்கின்ற சுற்றத்தைச்
சொல்லாமல் நீங்(க்)கச் சுகம்
(1)

சொல்லிய சொல்லைத் துறக்கின்ற பேருக்குச்
சொல்லிப் பயனென்ன சொல்
(2)

சொல்சுத்தம் இல்லாமல் சொல்வோரின் சொல்கேட்டு
செல்லாமை என்றும் சிறப்பு
(3)

உறவின் பெயரால் உறவாடி பின்னே
மறப்பதா நல்லோரின் மாண்பு
(4)

இழந்தபணம் வந்துவிடும் என்றைக்கும் யார்க்கும்
விழுந்தசொல் வந்திடுமா மீண்டு?
(5)

வாங்கும் வரைக்கும்தான் வாக்குறுதி எல்லாமும்
வாங்கியபின் மாறும் மனம்
(6)

நேரத்தை காலத்தை நிந்தனை செய்வோரை
ஓரத்தில் வைத்தால் உயர்வு
(7)

இதோவெனச் சொல்லி இழுத்தடிப்பு செய்தால்
அதோடு தொடர்பை அறு
(8.)

கடிகார ஓட்டங்கள் காக்குமா யார்க்கும்?!
முடிந்தவரை செய்து முடி
(9)

சேர்த்தால் பணமென்பர் செத்தால் பிணமென்பர்
பீத்தாமல் யோசித்துப் பேசு
(10)

✍️செ. இராசா

28/11/2021

 


நீ இருக்கிறாயா இல்லையா
என்கின்ற பட்டிமன்றம்
இன்றும் நடக்கிறது...

நீ இல்லை என்போரின் வாதங்கள்
எப்போதும் போலவே
உரக்க ஒலிக்கிறது....

நீ இருக்கிறாய் என்போரின் வாதங்கள்
இன்னும் அடித்துக் கொள்(ல்)வதால்
இரைச்சலாய் இருக்கிறது....

நீ இருக்கிறோயோ இல்லையோ
இருவரின் வியாபாரமும்
உன்னால்தான் நடக்கிறது..

ஆமாம்...நீ யார்?

✍️செ. இராசா

27/11/2021

மலர்களுக்குத் தெரியாது

மலர்களுக்குத் தெரியாது
தான் போகுமிடம்
மங்கையா மயானமா என்று..

ஆனாலும் அவை...
மணம் தர மறுப்பதில்லை.
மரணிக்கும் தருணம்வரை.

ஏனடா பொய்ப்பிணக்கு?!

 


என்னைத் தவிர்ப்பவளே
.......என்னடி ஆச்சுனக்கு?
நின்னைத் துறந்தபின்னே
.......நிற்குமா மூச்செனக்கு?

எங்கோ இருப்பவனே
......யாரடா நீயெமெக்கு?
எம்கோ ஆனபின்னே
.....ஏனடா பொய்ப்பிணக்கு?!

✍️செ. இராசா

26/11/2021

கூண்டுக்குள் பூட்டிவைத்துக் கூப்பிட்டோம் என்பதற்கா...

 

 

பல நாட்களுக்குப் பிறகு இன்று தோகாவில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அல்கோர் பூங்கா சென்றுவந்தோம். இம்முறை எம் பள்ளி நண்பரான நாகராஜ் குடும்பத்தோடு சேர்ந்து கட்டுச்சோறெல்லாம் கட்டிப்போய் அங்கேயே சாப்பிட்டு விட்டு சுற்றிப்பார்த்து வந்தோம். இப்போது ஒரு நபருக்கு 15 ரியால் (300 ரூபாய்) வாங்குகிறார்கள் (பத்து வயதிற்குக்கீழ் என்றால் 10 ரியால்). போனவுடன் சாப்பாடை ஒருபக்கம் வைத்துவிட்டு சிங்கம் புலி சிறுத்தை என்று விலங்குகளைப் பார்த்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். பிறகுதான் வாழ்வில் மறக்க முடியாத ஓர் நிகழ்வு நடந்தது.

ஆம்.... குரங்கு இருக்கும் பக்கம் போனோம். ஒரு குரங்கு 🐒 அமைதியாக அதுபாட்டுக்கு அமைதியாக இருந்தது. மற்றொரு குரங்கு 🐒 ஒருபக்கம் ஒடு டயரை உருட்டிக்கொண்டு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தது. நான் ஒருபக்கம் பிள்ளைகளோடு நின்றுகொண்டு கம்மான் கம்மான் என்று கத்தினேன். அப்போது அந்தக்குரங்கு தன் டயரைப் போட்டுவிட்டு படுவேகமாகப் பாய்ந்துவந்து அந்தக் கூண்டின் கம்பியைப் பற்றி புச்சென்று வாயில் வைத்திருந்த நீரைத் துப்பியது பாருங்கள்......அந்த இடமே ரணகளமாகி பின் சுதாரித்துக்கொண்டு சிரிப்பு மழையில் நனைந்தது. அப்புறம் துவட்டிவிட்டு பூங்காவைச் சுற்றிப்பார்த்து வீடுவந்து சேர்ந்தாலும் அந்நிகழ்வு மறக்க முடியாத நிகழ்வாகி இன்னும் சிரிப்பை வரவைக்கிறது. (ஏன்டா உனக்கு வெக்கமே இல்லையான்னு.... நீங்கள் கேட்பது கேட்கிறது 😀😀😀...அது எப்படி....யாருக்கிட்ட?!!...ஆங்...)
 
கூண்டுக்குள் பூட்டிவைத்துக்
...கூப்பிட்டோம் என்பதற்கா
காண்டாகி எங்கள்மேல்
...காறிநீர்த் துப்பிவிட்டாய்
ஆனாலும் உன்சேட்டை
....ஆனந்தம் தந்ததால்
தேனாய் இனிக்கும் தினம்!
 
✍️செ. இராசா

அழுவதைப் பார்த்து சிரிக்கின்ற
அவளுக்குத் தெரியாது
அப்பா(வும்) படைப்பாளியென்று

கவலை ஒதுக்கு

வாயில் வலைபின்னி வாய்ப்பிற்காய்க் காத்திருந்துக்
காயும் சிலந்திக்கேக் கட்டாயம்- ஈயுமிறை
பாயும் புலிக்கா பசியாற்ற விட்டிடுவான்
ஓயும் கவலை ஒதுக்கு

24/11/2021

தக்காளி வெண்பாக்கள்

  

 


#தக்காளி_வெண்பாக்கள்

#பெண்_1
பிக்காளி போலெண்ணிப் பேசுகிறாள் உன்னம்மா
தக்காளி நானென்று சொல்

#ஆண்_2
வெக்காளி அம்மன்போல் வேகமாய்ப் பேசாதே
தக்காளித் தொக்கன்றோ நீ

#பெண்_3
தொக்காக எண்ணித்தான் தொந்தரவு செய்தீரோ
சிக்கினீர் இன்றைக்குச் சீ

#ஆண்_4
ஐயையோ இல்லைம்மா அப்படியா எண்ணிவிட்டாய்
பையைப்பார் தக்காளிப் பேஸ்டு

#பேஸ்டு-அரைத்த தக்காளி

#பெண்_5
என்னய்யா சொல்கின்றாய் ஏதேதோ பேஸ்டென்று
சொன்னதன் அர்த்தமென்ன சொல்?

#ஆண்_6
தக்காளிப் பேஸ்டைத்தான் தக்காளித் தொக்கென்றேன்
சிக்கனமாய்த் தொட்டால் சிறப்பு

#பெண்_7
வக்கனையாய்ப் பேசினால் வாயிலே குத்திடுவேன்
தக்காளி இல்லையேல் தள்ளு

#ஆண்_8
அம்மம்மா ஏனம்மா ஆட்டமாய் ஆடுகிறாய்
கம்முன்னு வையம்மா கை

#பெண்_9
தங்கமா நான்கேட்டேன் தக்காளி தான்கேட்டேன்
எங்கய்யா வாவா...இரவு

#ஆண்_10
கன்னந்தான் தக்காளி... கையாலேக் கிள்ளிடவா
பொன்னெல்லாம் பின்னேதான் போ
😊😊😊😀😀😀

✍️செ. இராசா

சாமியே நீ யல்லால்

 


சாமியே நீ யல்லால்
பாரிலே யாருள்ளார்?!

புலிவாகனனே வா ஐயா...
சிவமாதவனே வா ஐயா...
அழைத்த உடனே அரிஅர மகனே
அபயமளித்திட வா ஐயா

தேகபலம் தா ஐயப்பா
வாழவரம் தா ஐயப்பா... (புலி வாகன..)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
கானகம் வருகிறோம் ஏன் ஐயா?!
காரிருள் சூழும் மாயையொழித்து
காத்திட வேண்டும் நீ ஐயா‌..

காலம் முழுதும் கானலாயுழன்று
காலனை அடைவதும் வீண் ஐயா..
ஞாலம் முழுதும் ஞாயிறு-எனவே
ஞானமாய்த் தோன்றிநீ வா ஐயா

தேகபலம் தா ஐயப்பா
வாழவரம் தா ஐயப்பா... (புலி வாகன..)

✍️செ. இராசா

கிடைக்காதபோதே அதன் மதிப்பு
உச்சமடைகிறது
தக்காளியைப் போல்...

23/11/2021

 சொல்லிய வார்த்தைக்குள்
சொல்லாத உணர்வாய் விரிகிறது
ஓர் நல்ல கவிதை....

22/11/2021

நான் இரசித்த கவிதை 1



ஒரு நல்ல இரசிகன் தானே நல்ல படைப்பாளியாக முடியும். அந்தவகையில் நான் படைப்பாளியா இல்லையா என்பதெல்லாம் உங்களைப்போன்ற இரசிகர்களின் கையில். ஆனால், நான் கண்டிப்பாக நல்ல இரசிகன் தான் என்பதை எம்மால் சொல்ல முடியும். 😊😊😊😊

இங்கே முகநூலில் எத்தனையோ நல்ல படைப்புகள் அங்கங்கே கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுள் சில படைப்புகள் நம்மை உலுக்கியும் விடுகின்றன. அவற்றையெல்லாம் அப்படியே படித்துவிட்டு முடிந்தால் ஒரு விருப்பக் குறியீடோ அல்லது கருத்தீடோ போட்டுவிட்டு நாமும் கடந்து போய் விடுகின்றோம். (அதில் பலரும் எந்த நேர்-எதிர் வினையும் ஆற்றுவதில்லை என்பதும் உண்மையே ) இனி அப்படி நாமும் கடந்துபோக வேண்டாம் என்று நினைத்ததால் இப்பதிவைத் தொடங்க நினைக்கின்றேன். இதற்கு முன்னோடி நம்ம கவிஞர் செல்வா சித்தப்பு (செல்வா ஆறுமுகம்) அவர்கள்தான். அவர்போல் பத்துக்கு பத்து என்று மிக நீண்ட பதிவாக கொடுக்கவெல்லாம் அடியேனால் முடியாது என்பதால் அவ்வப்போது ஒரு கவிதை மட்டும் எப்போது தோன்றுகிறதோ அப்போது எழுதலாம் என்று நினைக்கின்றேன். அது யார் கவிதையாக வேண்டுமானாலும் இருக்கலாம். (இங்கே கவிஞரின் உயரம் முக்கியமல்ல, கவிதையின் உயரமே முக்கியம்)

அந்த வகையில் அவர் எழுதி இருந்த கீழ்வரும் கவிதை என்னை மிகவும் உலுக்கியது.

#தேய்ந்த_உடலை_சுமந்திடுவது
#எத்தனை_கனமானது,
#அதேவேளையில்
#மரணம்தான்_எத்தனை_அற்புதமானது,
#கனத்த_கோழியின்_உயிரையும்
#இறகின்_எடைகூட_இன்றி
#ஆகாயத்தில்_மிதக்க_வைத்திடுகிறதே!!

✍️பனிப்பூக்கள் பார்த்திபன்

"தேய்ந்த உடலை சுமந்திடுவது
எத்தனை கனமானது"---ப்பா செம்ம.... இங்கே அவர் ஏன் முதிர்ந்த உடலை என்று சொல்லக் கூடாது...அதான் கவிதை...

அடுத்து பாருங்க....

கனத்த கோழியின் உயிரையும்---அது ஏன் கழுகு, புறா என்று சொல்லக்கூடாது...கோழி தானே அதிகம் பறக்காது, காரணம் அதன் கனம், அடுத்து வருவதில்தான் கவிதையின் உயிர் நாடி அடங்கியுள்ளது. ஆம்...இறகின் எடை கூட இன்றி ஆகாயத்தில் மிதக்க வைக்கிறதாம்...அதாவது உயிர் போன அந்த நிமிடம்.......

யோசித்துப் பாருங்கள். அவ்வளவு பெரிய பிள்ளையாருக்கு வாகனம் மிகச்சிறிய மூஞ்சூறு. அதன் தத்துவம் என்ன? மிகப்பெரிய பூத உடலை இயக்கும் கண்ணுக்குத்தெரியாத உயிர்...அதுதானே? ஆம்....எவ்வளவு பெரிய மனிதனுடைய உயிரும் ஆகாயத்தில் மிதந்து போகையில் அங்கே விழுவதென்ன வெறும் உடல் மட்டும் தானா? அவன் சுமந்த அத்தனைத் தலைக்கனமும் தானே?

சங்க இலக்கியங்களில் பதினெண் கீழ்கணக்கில் முதலில் வருவதென்ன? யாக்கை (உடல்) நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை பற்றிய பாடல்கள் போல் அதையே இக்கவிதை சொல்வதாய் எமக்குத் தோன்றுகிறது. மேலும் அக்கவிதையை நன்றாகப் பாருங்கள். அங்கே எந்த இலக்கண கட்டமைப்பும் இல்லை, அதே சமயத்தில் நவீனம் என்றெல்லாம் சொல்லி பசப்புகிற போக்கும் இல்லை. ஆயினும் அனைத்தையும் உள்ளடக்கிய அற்புதமான கவிதை.

தம்பியின் "#மணல்_கடிகாரம்" கவிதை நூல் ஏற்கனவே படித்துள்ளேன். உண்மையில் அந்நூலெல்லாம் கவிதை உலகின் ஆகச்சிறந்த நூல்களின் வரிசையில் வரவேண்டிய நூல் என்பேன். ஆனால், என்ன செய்ய? நல்ல கவிஞனின் படைப்பை இவ்வுலகம் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ளுமா என்ன?!...இருப்பினும் தம்பி நீங்கள் தொடருங்கள்...நாங்கள் இரசிப்போம்.

✍️செ. இராசமாணிக்கம்


ஒழுக்கமில்லார்----வள்ளுவர் திங்கள் 186


கல்லால் அடித்தால்தான் காமவெறி நாயடங்கும்
சொல்லிப் பயனில்லை தூக்கு
(1)

ஆசிரியர் தெய்வமாம் அப்படித்தான் கற்பித்தீர்
கூசிடும் செய்கையேன் கூறு?!
(2)

கற்பிக்கும் கல்வியில் கற்புநெறி இல்லையெனில்
கற்பவை எல்லாம் கசடு
(3)

மற்றோரைக் கைகாட்டி மௌனிக்கும் யாரையும்
கற்றோரில் சேர்க்காமல் காண்
(4)

தற்கொலைக் போக்கிற்கு தண்டனை யாருக்கு?!
பெற்றோரும் தானே பிழை
(5)

இளையோரும் பார்க்கும் இணையத்தில் காமம்
இலைமறை இல்லையே ஏன்?
(6)

கவர்ச்சியைத் தூண்டிக் கலையென்று சொல்வோர்
அவசியம் தேவையா? ஆய்!
(7)

ஊடகம் பூடகமாய் ஊதுகின்ற போக்காலும்
நாடெல்லாம் பற்றும் நிலை
(8.)

மீசை முளைக்கையில் மின்னலாய்த் தோன்றுகிற
ஆசையை ஆராய்ந்(து) அகற்று
(9)

காமத்தின் பாதையைக் கல்வியால் சீர்செய்யத்
தாமதிக்கக் கூடா(து) அரசு
(10)

✍️செ. இராசா

ஓவியம் Krishna Kv


20/11/2021

 


 

அப்பளம் பாயாசம்
.....அத்தனையும் வைத்தருகே
கப்படிக்கும் நாற்றக்
.....கழிவொன்றை- உப்பளவில்
சாப்பாட்டில் போட்டால்
.....சரியென்று தின்பீரா?
ஆர்ப்பாட்டம் செய்வீரா அங்கு?

✍️செ. இராசா

வஉசி.... வஉசி.... வஉசி

 

 


வஉசி.... வஉசி.... வஉசி
வஉசி.... யார்-யோசி...... நீ-யோசி...

செக்கிழுத்தச் செம்மலு வவுசி
தென்னாட்டுத் திலகரு வவுசி
கப்பல்விட்டத் தமிழரு வவுசி
கஷ்டப்பட்டத் தலைவரு வவுசி

வடநாட்டான் அவரைப் பத்தி
......படிக்குவுமில்லை
தென்நாட்டான் அவர்புகழப்
......பரப்பவுமில்லை
எழுதியதில் பிழையிருந்தால்
......திருத்திடலாங்க
எழுதிடவே இல்லையென்றால்
......என்னசெய்வீங்க?

சாதியோட தலைவராங்க உவுசி
சாதிச்சத் தலைவருங்க வவுசி

✍️செ. இராசா

17/11/2021

 


ஒன்றா...இரண்டா ஊசிகள்...
இன்னும் போகுதே..முடிவே இல்லையா?!
அன்பே இன்னும் ஊசியா..
கொரோனா தாண்டியும் இன்னோர் ஊசியா
ஆ...
😀😀😀😀😀😀
மூன்றாவது ஊசியும் போட்டாச்சு....

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சேக்கிழார் ஐயா

  

 


சேக்கிழார் ஐயாவின்
......செந்தமிழ்ச் சோலையில்
பூக்கின்ற பூவெல்லாம்
.....பைந்தமிழில்- பூக்கிறதாம்
பார்க்கின்றோர் மட்டுமல்ல
.....பாராரும் சொல்கின்றார்
யார்க்கய்யா கிட்டும் இது?!


16/11/2021

எப்போதும் பூரிக்கே ......இன்சுவையில் வெண்பாவோ?!

 

 


 #மசாலாவின்_கேள்வி
எப்போதும் பூரிக்கே
......இன்சுவையில் வெண்பாவோ?!
இப்பூரி பக்கத்தில்
.......யாமின்றி- உண்பாயோ?!
அப்பப்பா போதும்பா
.......ஆண்பாலர் வாயப்பா
செப்பும்பா என்னே சிறப்பு?

#பதில்
ஒப்புகிறேன் என்செய்ய?
........உப்பிய பூரிகண்டு
தப்புதான் செய்துவிட்டேன்
........தண்டனையைச் செப்பாயோ?
இப்போது சொல்லுகிறேன்
......என்றைக்கும் நீயின்றி
அப்பூரி போகுமா ஆறு!

✍️செ. இராசா

15/11/2021

COUNTRY MAN

  


இந்த வண்டி எவ்வளவு அழகாய் இருக்குப் பாருங்களேன்..... இதோடப் பேரு என்னன்னா #COUNTRY_MAN ஆம்...

அப்ப #நாட்டுப்புறத்தான் இல்லையினா
#பட்டிக்காட்டான்..ன்னு மொழிபெயர்ப்பு செய்யலாமா.... இருந்தாலும் அதுவும் ஒரு கெத்துதான்ல‌....

எமக்காக யாம் பாடிய பாடல்



#மெட்டு_விழியில்_விழிமோதி

உயிரில் உயிர்மோதி
உலகில் ஒயிரன்று பிறந்ததே
கனவு நனவாகக் கவிதை பலபாடி கடந்ததே
வான்...தேடல்கொண்டே...
போராடுதென்றே....
எங்களோட இராசனைக்
கொண்டு போன ஈசனே..
கொண்டு போன ஈசனே...

#மெட்டு_என்னைத்_தாலாட்ட

அந்த ஆகாயம் பறந்தானோ
ஆதி ஆராய உயர்ந்தானோ
இங்கே வேராகப் பதிந்தானோ
இல்லை வேறாகப் படர்ந்தானோ

செந்தமிழில் தானே
........நித்தம் படைத்தானே
உந்தன் பிள்ளை
........உன்னை என்றும் மறப்பானோ
மின்னல் போலே
.......மின்னியவன் மறைந்தானே...

......(அந்த ஆகாயம்)

காலையும் மாலையும் தன்னுள் தேடினான்
ஆலயம் தாண்டியும் எங்கோ ஓடினான்
ஏதோ ஏதோ மெட்டில் பாடினான்

காலமும் நேரமும் இன்றி ஓதினான்
ஆழமும் ஆசையும் கொண்டு நாடினான்
தீரா வேகம் நெஞ்சில் ஏற்றினான்..

ஆத்மார்த்த ராகங்கள் கேளாயோ
ஆத்மாவின் தியாகங்கள் பாராயோ
கர்த்தாவே கண்பார்க்க மாட்டாயோ
பக்தாவின் வேண்டல்கள் தீராயோ
உனைத்தானே தினம் தேடினான்

.....(அந்த ஆகாயம்)

அகமும் புறமும் அவன் பார்வையில்
கவியாய் மலரும் உடன் வார்த்தையில்
ஞாலம் என்றும் அவன் சிந்தையில்

கடமை தவறவில்லை வாழ்க்கையில்
கடனாய்ப் பழகவில்லை சேர்க்கையில்
உண்மை நேர்மை அவன் கொள்கையில்

அவனுக்கோர் நல்வெற்றித் தந்தாயோ?!
பலர்முன்னே யாரென்று சொன்னாயோ?!
வலியோர்முன் வாய்ப்பிங்கே கிட்டாதோ?
எளியோர்கள் ஏன்வெல்ல முடியாதோ?
உனைத்தானே தினம் தேடினான்..

.....(அந்த ஆகாயம்)

✍️செ. இராசா

நீர்த்தடம் மாறினால்---------வள்ளுவர் திங்கள்- 185



ஏரியைத் தூர்த்ததில் ஏற்றுகின்ற கட்டிடத்தால்
மாரிநீர்க் கில்லை வழி
(1)

பேர்தான் பெருநகரம் பெய்தால் பெருநரகம்
யார்தான் சரிசெய்வார் இங்கு?!
(2)

ஊழல் பெருவெள்ளம் ஓடுகின்ற மாநகரின்
சூழல் பெருவெள்ளம் தான்
(3)

நதியில் உருவான நாகரிகம் இன்று
நதியை மறைப்பதா நன்று?!
(4)

நீர்த்தேக்கம் இல்லாமல் நீர்மட்டம் கீழ்ப்போக
நீர்ப்பிச்சைக் கேட்கும் நிலை
(5)

நீர்நீர் எனச்சொல்வோர் நீர்நீர் எனச்சொல்வார்
நீர்வண்டி பின்னாலே நின்று
(6)

அழுக்காறு கொண்டோர் அரசியல் செய்தால்
அழுக்காறு தான்பாயும் அங்கு
(7)

கூவத்தை மாற்றுவதாய்க் கூவிய கூட்டத்தால்
கூவத்தில் ஆனதென்ன கூறு
(8.)

இவரை அவரும் அவரை இவரும்
தவறென்றால் யார்தான் சரி?
(9)

ஆக்கிரமிப்பு செய்த அதிகார வர்க்கத்தால்
போக்கிடம் இல்லாப் புனல்
(10)

✍️செ. இராசா