31/03/2020

கண்மூடிக் கண்திறந்தால்

கண்மூடிக் கண்திறந்தால் கண்டிடலாம் உள்ளொளியில்
விண்கூடி நான்கலந்தால் வீடு

✍️செரா

30/03/2020

படைப்பின் இரகசியம் பார்

படைத்தோன் படைத்த படைப்பில் பொதிந்த
படைப்பின் இரகசியம் பார்

✍️செரா

#பாலைவனத்தில்_நீர்ச்செடி
#ஒட்டகத்திற்காக
#Camel_plant
தடைக் காலங்களில்
கூடிக் கொண்டே போகிறது
தலைக்குமேல் வேலை

#புடிச்சு_உள்ள_போடுங்க_சார்



மத்திய மாநில மந்திரி எல்லாம்
சத்தியம் பண்ணியேச் சத்தமாச் சொன்னாலும்
புத்தியே இல்லாதப் புள்ளீங்கோ எல்லாம்
சுத்தியே வந்தாக்க என்னங்க செய்யணும்?!

போடணும் போடணும் நல்லாப் போடணும்

இத்தாலி ஈரானு எல்லாம் போயிட்டுப்
பத்தாமத் தாண்டிய பாதக நோயினை
ஒன்றாகப் போராடி ஓழிக்கும் தருணம்
ஒன்றாகச் சுத்துனா என்னங்க செய்யணும்?!

போடணும் போடணும் நல்லாப் போடணும்

#புடிச்சு_உள்ள_போடுங்க_சார

✍️செ. இராசா

29/03/2020

#கஷ்டங்கள்_எல்லாமும்_ஓடிப்போகும்--மெட்டுக்குப்_பாட்டு



#கஷ்டங்கள்_எல்லாமும்_ஓடிப்போகும்
துயரங்கள் எல்லாம் பறந்துபோகும்
சாதிகள் பேதங்கள் ஓடிப்போகும்
வியாதிகள் எல்லாம் கடந்துபோகும்

அரசுகள் வரும் நாளில்
தீட்டும்வியூகம் ஜெயிக்கும்
ஒரு மனம்கொண்டு நாமும் வெல்ல வேண்டும்

பொது நலம் வேண்டுகையில்
தன் சிரமங்கள்
கடல் அலை மோதல்போல வந்துபோகும்(2)

(கஷ்டங்கள் எல்லாமும்...)

அனைவரும் சேர்ந்துநாம்
ஒன்றுபோல் எண்ணுவோம்
விலகுமே யாவுமே வீர்யம் அதிகம் (2)

அகிலமே அமைதியாய்
அடங்கிட சிலநாட்கள்
வந்ததோ என்றுதான் எண்ண வேண்டும்

(கஷ்டங்கள் எல்லாமும்...)

செ. இராசா

பாடல் இங்கே
https://www.facebook.com/1529793087155445/posts/1858820957585988/?vh=e&d=n

28/03/2020

கிருமியை ஏவி

கிருமியை ஏவிக் கெடுத்தோன் உயிரும்
கிருமியால் தானே கெடும்

வாழ்க கியூபா -நீ வாழ்க



அகத்தீ கொண்டோரின்
அகந்தையை உடைத்து
இன்னா புரிந்தோரின்
இன்னலைத் துடைத்தாய்!

பொருளைத் தடுத்தார்முன்
பெருங்கருணை காட்டி
சேகுவேரா வழிநின்று
பாகுபலி ஆனாய்!

வாழ்க வாழ்க கியூபா -நீ
வாழ்க வாழ்க!

✍️செரா

‘தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள்,
தெரிந்தவர்கள் கற்றுக்கொடுங்கள்’

__இது காஸ்ட்ரோவின் மிகப்பெரும் தாரக மந்திரம்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

---இது வள்ளுவரின் வாக்கு

26/03/2020

தடை உத்தரவால்
வேகமாய்க் குறைகிறது
கையிருப்பு

தடை  உத்தரவால்
வேகமாய்க் கூடுகிறது
உடல் எடை

இந்துப் பட பாடல் மெட்டில்


எப்படி எப்படி
இருப்பது எப்படி?

சைனாக்காரன் சரக்கு மாமா உக்காரு இப்படி
சைனாக்காரன் சரக்கு மாமா உக்காரு இப்படி
கொஞ்சநாளு நீயும் மாமோய் தூரம் போக வேணாம்
என்னை நீயும் பார்த்து ஜோராப் பாடவேணும் கானா

அது எப்படி எப்படி
ஹேங்
இருப்பது எப்படி?

சைனாக்காரன் சரக்கு மாமா உக்காரு இப்படி

கொஞ்சிக்கொஞ்சிப் பேசுறீயே எதுக்கு?
நீயும் வீட்டுக் குள்ள குந்திடனும் அதுக்காக

சாம்பிராணி போடுறீயே எதுக்கு?!
சனி வீட்டுக்குள்ள வந்திடுமே அதுக்காக

என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
இந்த வாழ்க்கை ரொம்ப ஜாஸ்திதான்

எல்லாரும்போல் இங்கேகிடந்தா
சோறு தண்ணி நாஸ்திதான்

அட வெட்டியாக என்ன பேச்சு
தலைமேல தண்ணிபோச்சு
யாரும் தானே வாழனும்
சும்மா போங்க மாமா
நமக்கு நேரம் ஆச்சுமாமா
அஹா ஹா
ஸடெப்பு போட்டுக் காட்டி
நடிப்போம் டிக்டாக்கில் லூட்டி

எப்படி எப்படி
இருப்பது எப்படி?
எப்படி எப்படி
இருப்பது அப்படி..

✍️செரா

25/03/2020

இத்தாலிப் பாட்டி


இத்தாலிப் பாட்டி எமனையும் வென்றது
சத்தான நல்லுடற் சான்று
--செரா

இத்தாலியில் 95 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளது நம்பிக்கையளிப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இத்தாலி நாட்டின் மடோனாவைச் சேர்ந்த, ஆல்மா கிளாரா கோசினி 95 வயது பாட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவர் மார்ச் 5ல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, விரைவிலேயே குணமாகி வீடு திரும்பியுள்ளார். வைரஸ் தடுப்பு மருந்து எதனையும் எடுத்துக் கொள்ளாமலே கொரானாவிலிருந்து குணமடைந்துள்ளார். அவர் மருத்துவர்களின் சேவையைப் பற்றி கூறும்போது, "டாக்டர்கள் எனக்கு நன்றாக சிகிச்சை அளித்தனர், பரிவுடன் நடந்து கொண்டனர், கொரோனா நோயிலிருந்து காப்பாற்றிவிட்டனர் அவர்களுக்கு எனது நன்றி." என்றார்.
தினமலர் செய்தி

புதிய விடியலுக்காய்..



என்ன நடக்கிறது?- இங்கே
என்ன நடக்கிறது?!

எத்தனையோ இடர்கள்
எத்தனையோ வலிகள்
இருந்தும்..
இப்படி ஒரு நிகழ்வு..
இதுவரைக் கண்டதில்லை

அதிகார மோதல்கள்
ஆயிரம் இழப்புகள்

அகதியாய் நகர்வுகள்
அங்கேயும் காயங்கள்

ஐயகோ
இன்னும் கேட்கிறது
அந்தத் துப்பாக்கி ஓசை

ஐயகோ
இன்னும் கேட்கிறது
அந்த மரண ஓலம்...
கனவா....இல்லை
நனவா?

இயந்திரம் மௌனிக்குமுன்
இஃதென்ன புது ஆயுதம்

ஓலம் குறையவில்லையே?!
ஓங்கி ஒலிக்கிறதே

புரிகிறது

மனிதனில் மனிதம் புக
மறைபொருள் தரும்
மருந்தா இது?!

கசப்பு மருந்துதான்
என்ன செய்ய?

காத்திருப்போம்..

#கை_கழுவுவோம்..

புதிய விடியலுக்காய்...

✍️செ. இராசா

(அன்பு நண்பர் கரீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதியது)

24/03/2020

அகவை தின வாழ்த்துகள் நண்பா

அகநக நட்பால் அணுவில் நுழைந்து
முகநகப் பேச்சால் முழுதும் கவர்ந்து
சகத்தில் சிறந்தத் தமிழ்போல் இனிக்கும்
சிகரம் அவனென் சிவா

பட்டா எதற்கு?

உன் விருப்பப் படிவத்தில்
என் ஒப்பம் கேட்கிறாய்
படிமமாய் நானிருக்க
பட்டா எதற்கு?

✍️செரா

22/03/2020

பஞ்ச பூதங்களில் எமை அஞ்ச வைத்த அருவ பூதமே



பஞ்ச பூதங்களில் எமை
அஞ்ச வைத்த அருவ பூதமே
கெஞ்சிக் கேட்கிறோம்
கொஞ்சமேனும் கருணை காட்டு

கஜாவால் கதறினோம்
காட்டுத்தீயால் பதறினோம்
வெள்ளத்தால் மிதந்தோம்
பூகம்பத்தால் மிரண்டோம்
ஆனாலும்...
உன் உறவுகள் எல்லாம்
உனைப்போல் இல்லையே...

நீ மட்டும் ஏன்
மாயோனாய் இருந்து
மாயஜாலம் செய்கிறாய்?!
மயான அமைதி தந்து
மௌனமாக்கிவிட்டாயே...

மண்டியிட்டுக் கேட்கிறோம்
மாயமாகிவிடு...
தயாள குணம் கொண்டு
தாயாகிவிடு...

வளி வழி வந்த அரூப பூதமே
வலி ஒலி தராமல் விலகிடு
கை வழிப் பரவும் கோப பூதமே
மெய்யாய்ப் பணிகிறோம் விலகிடு

🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

21/03/2020

கர்ணன் பெயர்

இரவல் பொருளை எடுத்துக் கொடுத்தாப்
பெருக்கினாய்க் கர்ணன் பெயர்

✍️செரா

20/03/2020

ஒளிவழிச் சென்றால்

வெளிவழிப் போகும் விழிவிடுத்(து) உள்ள
ஒளிவழிச் சென்றால் உயர்வு

✍️செரா





தேடித்தேடித் தினம் சென்று- ஊர்
ஊடி உலகம் எங்கும் பரவி- மத
சாதி போதனைகள் விலக்கி- இன
பேத வேதனைகள் விலகி- எங்கும்
தங்கு தடையின்றி நுழைந்தே- எமன்
சங்கை நானூதும் போதில்- எனை
உன்கை உடைக்கின்ற போதே
நான் வீழ்வேன் அதை மறந்தாயோ?!

#கொரானா

19/03/2020

வேறு வழியேயில்லை
கைகழுவ வேண்டியதுதான்
கூடா நட்புக்களை
தன்னையே ஆயுதமாக்கித்
தாக்குதல் நடத்துகிறது
கொரானா👾👾👾

✍️செரா

18/03/2020

#நான் ஓர் வெங்காயம்


நான் யார் என்று
நானேக் கேட்க
லூசா என்றார்
அன்புத் தாயார்

அதே கேள்வியை
அடிக்கடிக் கேட்க
நீண்ட முச்சைப்
பதிலாய்த் தந்தார்

அட நான்தான் யார்?

சுத்த புத்தி சித்தனா? இல்லை
செத்த புத்தி பித்தனா?
மலரா புத்தி மழலையா? இல்லை
மலர்ந்த புத்தி மடையனா?

ஆமாம் நான் யார்?!

வினா என்னுள் விடைதேடி
அனாதைபோல் அல்லாட
ஆதரவுக் கரம் தேடி
ஆழ்மனம் ஓடியது

ஞாலத்தின் ஞானத்தை
நூலகத்தில் தேடுகையில்
எண்ணற்ற குருமார்கள்
எண்ணத்தீ மூட்டிவிட
இருளகத்தில் ஒளி பட்டு
அருளகத்தை “நான்” கண்டேன்
உருவகத்து பொருள் பற்றி
அருவகமாய் “நான்” ஆனேன்

நான் கண்ட உண்மையினை
நான் இன்று சொல்லிடவா?!

நான் எனில் யாரென்றால்
...
....
....

#நான் ஓர் வெங்காயம்

✍️செரா

17/03/2020

கண்மூடும் முன்பாகக் கண்திறந்தேன்!
மெய்சாயும் முன்பாக மெய்யுணர்ந்தேன்!
✍️செரா

எடப்பாடி யாரென்றே



எடப்பாடி யாரென்றே எப்படியோ எண்ண
அடஅடா என்றே அசத்துறார் போங்க
இதுதான் உறவே இனிக்கிற செய்தி
இதுபோல் தொடர்ந்தால் இனிது

வாழ்த்தி வரவேற்போம்

முகத்தினை மூடி



முகநூல் கணக்கில் முகத்தினை மூடிச்
சகத்தினைச் சாடும் சனத்தை- அகத்தில்
மிகவும் கொடிய விசமாய் உணர்ந்து
நகர்ந்தால் கிடைக்கும் நலம்

✍️செரா

(முகமில்லாத நட்பு கோரிக்கைகளை அறிமுகமில்லாதபட்சத்தில் கண்டிப்பாக ஏற்பதில்லை உறவுகளே)

16/03/2020

மருத்துவம் போலதன் மகத்துவம் புரியும்



முதல் சுவாசம்
மோதும் தருணம்
அழுகை ஒலியில்
ஆனந்தம் பிறக்கும்!

இறுதி சுவாசம்
இழுக்கும் தருணம்
மரண ஓலத்தில்
மாயை இறக்கும்!

இடைப்பட்ட சுவாசம்
நடக்கின்ற தருணம்
இதய மேளத்தில்
எல்லாம் கேட்கும்!

அமைதியாய்க் கேட்கும்
அகத்தின் தருணம்
பிறழ்கிற தாளம்
பிடிபட்டுப் போகும்!

களைவிடும் தவறைக்
களைகின்ற தருணம்
மருத்துவம் போலதன்
மகத்துவம் புரியும்!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_108

15/03/2020

கொரானாக் குறள்--அந்தாதி



யாராய் இருந்தாலும் எட்டியே கைகூப்ப
வாராது நோய்கள் வணங்கு
(1)

வணங்குதல் என்பதை வாழ்த்துதல் என்றே
உணர்ந்தால் விரியும் உலகு
(2)

உலகம் முழுதும் உலவிடும் நோயை
விலக்கிட வேண்டும் விழி
(3)

விழிப்பாய் இருந்து விரைவில் திரும்பும்
வழியினைக் கண்டிட வா
(4)

வாயினில் ஒன்றினை வைத்திடும் போதினில்
நோயின் வலியை நினை
(5)

நினைவுடன் கைகளை நீரில் கழுவி
தனைவரும் நோயைத் தடு
(6)

தடுப்பு முறையால் தடுத்திட உந்தன்
உடுப்பில் சுடுநீரை ஊற்று
(7)

ஊற்றிக் குடிக்கிற ஓர்ரசம் போதுமே
வேற்று மருந்தேன் விடு
(8)

விடுகதை நோய்க்கு விடையினைத் தந்தே
இடுக்கண் களைவது யார்?!
(9)

13/03/2020

வணக்கம் சொல்லுங்க- அண்ணன் வணக்கம் சொல்லுங்க



வணக்கம் சொல்லுங்க- அண்ணன்
வணக்கம் சொல்லுங்க
வணக்கம் சொல்லுங்க- ஐயா
வணக்கம் சொல்லுங்க

தொட்டாப் பரவுது- கொரோனாத்
தொட்டாப் பரவுது
விட்டா விலகுது- தூரம்
விட்டா விலகுது!

கையைத் தொட்டாக்க கைவழியேப் பரவும்
கையைப் பற்றாமல் வணக்கம் சொல்லுங்க
மெய்யில் பட்டாக்க மெய்யெல்லாம் படரும்
மெய்யாய் எப்போதும் வணக்கம் சொல்லுங்க
தமிழன் நாகரிகம் தரணியெல்லாம் பேசும்
தருணம் இதுதாங்க வணக்கம் சொல்லுங்க
மனித நாகரிகம் மதங்கடந்து போகும்
மனதால் தெளிவோடு வணக்கம் சொல்லுங்க

மஞ்சள் பூண்டுன்னு சீரகத்து ரசங்க
கொஞ்சம் புளிசேர கூடுமுங்க ருசிங்க
உங்க உடலுக்கு ஏற்றுகின்ற உரங்க
எங்க உணவுக்கு ஈடுயிணை எதுங்க?
மருந்தே இல்லாத மகத்துவந்தான் உணவு
அருமை என்னான்னு புரியவேணும் உலகு
பாட்டன் முப்பாட்டன் தந்ததெங்கள் உணவு
வாட்டும் நோய்க்கிருமி வச்சிடுமா உறவு?

✍️செ. இராசா

காணொளி:

https://www.facebook.com/1529793087155445/posts/1839165699551514/?vh=e&d=n

ஓவ்வொரு செல்களும் .........உன்பெயர் சொல்லிடும்



ஓவ்வொரு செல்களும்
.........உன்பெயர் சொல்லிடும்
ஒவ்வொரு சுவாசமும்
.........உன்னையேத் தேடிடும்
வந்திடு வந்திடு உன்னையேத் தந்திடு
கொஞ்சிடுக் கொஞ்சிடு மிஞ்சினால் கெஞ்சிடு

கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

தடையின்றி மோதும் கடலலை போலே
விடையின்றி நீளும் வளியலை போலே
இடையின்றி ஏங்குது என்னுயிர் வாடுது
அறிவாயா?— நீ—-அறிவாயா?

உடையாய் மாறவா- என்
உயிர்மை ஏற்றவா?
கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

மடையின்றி ஓடும் நதியினைப் போலே
படையின்றிப் பாயும் நோய் வந்ததாலே
எடையின்றிப் போனது என்னுடல் நோகுது
அறிவாயா?—-நீ—-அறிவாயா?

உடையாய் மாறவா- என்
உயிர்மை ஏற்றவா?
கண்ணனே ஓடிவா- உன்
கன்னிநான் அல்லவா?!

✍️செ. இராசா

மௌனத்தின் பிறப்பு ஞானம்

ஒலிகளின் கலவை மொழி
மொழிகளின் கலவை இரைச்சல்
இரைச்சலின் இறப்பு மௌனம்
மௌனத்தின் பிறப்பு ஞானம் ✍️

செரா

மோட்சம் பெறுகிறது





மலர்களின் ஐனனம்
மோட்சம் பெறுகிறது
மணக்கின்ற மனங்களில்

✍️செ. இராசா

12/03/2020

நான் சாதி மதம் பார்த்தேனா?

இப்போது சொல்லுங்கள்?- நான்
சாதி மதம் பார்த்தேனா?; இல்லை
நீதீ பேதம் பார்த்தேனா?!
உறவு பகை பார்த்தேனா?! இல்லை
உயர்வு தாழ்வு பார்த்தேனா?

இல்லையே..

கரம் கொடுத்த அனைவரையும்
கவ்விக் கொண்டேன்
தோள் கொடுத்த அனைவரையும்
தொற்றிக் கொண்டேன்

என்ன தவறிழைத்தேன்
எம்மை ஏன் சபிக்கின்றீர்?!

என் நோக்கம் யாதெனில்
போதிப்பதே...

ஆம்

சரிசமம் யாதென்று
சரியாய்ப் போதிப்பது...

மறைபொருள் யாதென்று
மறைவாயப் போதிப்பது...

மரணபயம் இல்லார்க்கு
மனிதத்தைப் போதிப்பது..

முரண்பட்டு நிற்போர்க்கு
முக்தியைப் போதிப்பது..

நிறுத்து
நீ என்ன போதிதர்மரா?
போதனைசெய்ய...

பொறுங்கள்;
நான்
மதம் போதிக்கும்
மதகுரு அல்ல...
கொல்லாமை போதிக்கும்
குலகுருவும் அல்ல
கொடூரமாய்ப் போதிக்கும்
கொரானாவே நான்...
கோரமாய் ஊடுறுவும்
கோவிட்டே (COVID 19) நான்

என் பிரம்மாக்களே
என்னை மட்டும் சபிக்காதீர்...
நான் எமனல்ல சிவன்!

11/03/2020

பிடிபடாத பொழுதுதான் 
உண்மையில் பிடிபடுகிறது
வார்த்தைகளின் மகத்துவம்

09/03/2020

குடியுரிமை இல்லாமல்
வேகமாய்ப் பரவுகிறது
கொரானா
எல்லை தாண்டிய ஊடுறுவலை
எளிதாய் நடத்துகிறது
கொரானாக் கிருமிகள்

வங்கியில பணத்தைப் போட்டால்



வங்கியில பணத்தைப் போட்டால் ....திவால் திவால்!
எங்களோட வாழ்க்கை ஆச்சு....சவால் சவால்!
திட்டம் போட்டுத் திருடுறவன் ஜாலி ஜாலி
கட்டம் போட்டு வாழுறவன் காலி காலி

#சரணம்

அங்க இங்க ஓடியோடி குருவிபோல சேர்த்தோங்க
இங்க அங்க போட்டிடாமல் வங்கியில போட்டோங்க
ஆதாரம் வேணுமுன்னு ஆதார்கார்ட் கேட்டாங்க
போதாது பத்தலைன்னு பேனுகார்ட் கேட்டாங்க
எல்லாமும் தந்தபின்னே என்ன ஆச்சு?
வங்கியத்தான் காணோங்க எல்லாம் போச்சு!
...............(வங்கியிலப் பணத்தைப்)

இப்படியே போனாக்க என்ன ஆகும்?
தப்படியில் எல்லாமே மூழ்கிப் போகும்!

#வங்கி_மோசடி

✍️செ. இராசா

07/03/2020

நன்றி இருந்தால் பெருகிடும் ஈ



இருப்பு மிகுமாம் இருப்போர் இடமே
இருப்பதும் போகுமாம் இல்லா தவர்க்கே
இருப்பைப் பெருக்க இதயத்தில் #நன்றி
இருந்தால் பெருகிடும் ஈ!

இசை என்பதுஉ யிர்மொழி



இமைக் கதவுகளின் ஓசையும்
இதய மேளத்தின் தாளமும்
நாசித் துவாரங்களின் நாதமும்
நாடி நரம்புகளின் ரீங்காரமும்
மௌன ஒலியின் பிரசங்கமும்
மனன மொழியின் மௌனமும்
இரத்த ஓடையின் கானமும்
இச்சை வேகத்தின் ராகமும்
அசையா உடலிலும் அசையும்!
இசையா(ய்) உயிரிலும் இசைக்கும்!

#இசை_என்பது_உயிர்மொழி
#இசை_என்பது_உயர்மொழி

✍️செ. இராசா

04/03/2020

தப்பாக எண்ணுதல் தப்பு

தப்பாய் எழுதுவதைத் தப்பென்று சொல்லுங்கால்
தப்பாக எண்ணுதல் தப்பு
✍️

02/03/2020

இருப்பது இரண்டே அசைகள்



இரண்டே அசைகளை
............இடம்வலம் மாற்றிட
எத்தனை எத்தனைச் சீர்கள்?

சீர்களின் வரிசையைச்
..................சீராய் அமைத்திட
எத்தனை எத்தனை ஓசைகள்?

ஓசையின் சந்தத்தை
........ஒழுங்காய்ப் பிணைத்திட
எத்தனை எத்தனைக் கவிகள்?

கவிகளை எல்லாம்
......................கட்டிக் கோர்த்திட
எத்தனை எத்தனைக் காவியங்கள்?

காவியங்கள் எல்லாம்
,,...................கவித்துவம் மின்னிட
எத்தனை எத்தனை அணிகள்?

அணிகள் எல்லாம்
.....................அணிகலன் ஆக்கிட
எத்தனை எத்தனைக் கற்பனைகள்?

கற்பனை எல்லாம்
......................சொற்பதம் ஆகிட
எத்தனை எத்தனைச் சொற்கள்?

சொற்கள் எல்லாம்
.................சுவையாய்ச் சேர்ந்திட
எத்தனை எத்தனைப் பாடல்கள்?

பாடல்கள் எல்லாம்
................பாங்காய் அமைந்திட
எத்தனை எத்தனை இசைகள்?

ஆனால்;

இசைகள் இங்கே
................இதமாய் இசைந்திட
இருப்பது இரண்டே அசைகள்!!!

#தமிழ்_செம்மொழி

இரசமேப் போதும்

இரசமேப் போதும் எதற்குக் கவலை?!
வரமது மூத்தோர் மருந்து

அகம்பாவம்

அகம்பாவம் கொண்டால் அகம்;பாவம் ஆகும்
அகம்மீள வேண்டின் அறு

01/03/2020

கொற்றவையும் ஈசகோச- மங்கையும்



சங்க இலக்கியச் சாமியாம் கொற்றவையும்
எங்குலச் சாமியாம் ஈசகோச- மங்கையும்
இன்றைக்கும் வேறல்ல என்றைக்கும் ஒன்றாகும்
என்றறிந்து மெய்யுணர்வோர் இந்து!