29/03/2021

நீ வருவாய் என---------வள்ளுவர் திங்கள் 153-------குறள் வெண்பாக்கள்

 

இணையவழி எத்தனைநாள் இப்படியே இன்னும்
இணையவழி என்ன இயம்பு
(1)
 
ஆண்ட்ராய்டு கைபேசி ஆகிடுமா ஆகாதே
ஆண்டுபல ஆனாலும் ஆண்
(2)
 
மின்கலம் தீர்ந்துவிட்டால் மென்பொருள் என்னாகும்?!
மின்னூட்டம் இல்லாமல் வீண்
(3)
 
காணொளிக் காட்சியில் கண்டுகொண்டால் போதுமா?!
கானல்நீர் ஆகாதே நீர்
(4)
 
நுண்கிருமி பற்றிவிட்டால் நோய்வரும் என்கின்றார்
நுன்நினைவை மிஞ்சிடுமா நோய்
(5)
 
வாட்சப்பில் வாழ்ந்திடவா வந்தென்னைக் கைப்பிடித்தாய்
வாட்டத்தில் நோகின்றேன் வா
(6)
 
ஒளிப்படம் காட்டி உசுப்பேற்ற வேண்டாம்
ஒளியேற்ற ஓடிவா நீ
(7)
 
கண்காணா நுண்கிருமி கண்டயிடம் போகையில்
உன்னாலே முடியாதா சொல்?!
(8)
 
இன்னுமின்னும் எத்தனைநாள் இப்படியே தள்ளிடுவாய்
இன்றைக்கே வந்துவி(டு) இங்கு
(9)
 
வருவாய் எனவெண்ணி வாசலிலே நின்றால்
வருவாய் வரவெண்ணி நீ
(10)
 
✍️செ. இராசா

27/03/2021

அனுபவப் பதிவு 16------கல்லூரிஅனுபவம்----------பூஜ்யம் நூறானது

 

 


#RomanticHeroes

தமிழ்வழிக் கல்வியில் இருந்து பொறியியல் வந்ததாலும், நானே எனக்குள் ஏற்படுத்திக்கொண்ட தாழ்வு மனப்பான்மையாலும் முதலாம் ஆண்டில் இயற்பியல் (Physics ) மற்றும் அடிப்படை இயந்திரவியல் & மின்னியல் (Basic Mechanic & Electrical) பாடங்களில் தோல்வியடைந்தேன். அதற்குப்பின் எந்த பாடத்திலும் தோல்வியடையவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த முதலாமாண்டு தோல்வியில் மறக்கமுடியாத சுவாரஸ்யங்கள் நிறையவே இருந்தது‌. பொதுவாக கணிதத்தில்தான் பெரும்பாலோனோர் தோல்வி அடைவார்கள். நானோ இயற்பியலில் தோல்வி அடைந்தததன் காரணம் அலட்சியம் மட்டுமே. இயற்பியல் புத்தகம் தலையணைமாதிரி மிகவும் பெரியதாக இருக்கும். இதையெல்லாம் யார் படிப்பார்கள் என்று நண்பர் ஒருவரிடம் விற்றுவிட்டேன். கடைசியில் அதில் நான் மட்டும் தோல்வியடைய, வாங்கிய நண்பரோ அதில் மட்டுமே தேர்ச்சியடைந்தார். அடுத்து அடிப்படை பொறியியல் என்கிற பாடமானது மற்ற துறைகளை மேலோட்டமாகப் படிப்பது. அதாவது நான் கட்டிடவியலாக இருந்ததால் மற்ற துறைகளான இயந்திரவியல் மற்றும் மின்னியல் படிக்க வேண்டும். அதைப்போலவே மற்றவர்களும் அவர்கள் துறையை விட்டுவிட்டு மற்ற துறைகளைப் படிக்க வேண்டும். இதில் எனக்கு சுத்தமாக வரவே வராத மின்னியலில் நான் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?! வெறும் பூஜ்யம் தான்..... ஆனால் உங்களுக்கொன்று தெரியுமா?!..அந்த பூஜ்யம் தந்த மின்னியல்தான் இன்று கத்தாரில் மின்கம்பிவட பொறியாளராக்கி என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கிறது என்றால் நம்புவீர்களா?!. "பூஜ்யத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்" என்ற கவியரசரின் வரிகளை அன்றுநான் படித்திருக்கவில்லைதான். ஆனால் இன்று முழுவதும் புரிந்துகொண்டேன் என்றால் அது மிகையல்ல (ஜீரோ 0 எடுத்ததற்கு எவ்வளவு பில்டப்பு😊😊😊😊)

இருப்பினும் இரண்டாம் வருடத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் என்பதைவிட எப்படி பரீட்சை எழுதவேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டதால், இரண்டாம் வருட முடிவில் முதலாம் மாணவனாகத் தேர்ச்சியடைந்தேன். அதுமட்டுமல்லாமல், Planning and cost evaluation என்ற பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த மாணவனாகி மிகவும் மதிப்புமிக்க மாணவனாகவும் ஆனேன். நான் சீனியரான பிறகு ஜூனியர் மாணவ மாணவிகள் எல்லாம் என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் ரமேஷ் அவர்கள் என்னிடமே அனுப்பி வைத்தார். அது எவ்வளவு பெருமையாகவும் சந்தோசமாகவும் இருந்தது தெரியுமா?!..அட அட அடா....

அப்புறம்... நான் மேடையேறிய விடயங்களைக் கூறுகிறேன். கல்லூரியில் மேடையேறுவது என்பது எப்படியென்றால், ஒவ்வொரு குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் 750 ரூபாய் கட்டணம் மற்றும் 15 நிமிடங்கள்தான் தருவார்கள். நான் இரண்டாம் வருடம் படிக்கும் போது Romance-99 என்று ஆரம்பித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது Romantic Heroes என்று ஆரம்பித்து மேடையேறி இரண்டாமிடம் வாங்கியதென்பது வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றே. நம் 15 நிமிடங்களில் முதலில் வள்ளுவரைக் காண்பித்து கவிதாலயாவில் வரும் 'அகர முதல எழுத்தெல்லாம்" என்ற குரல் ஒலிக்க மலர் தூவுவோம். அதன் பின்னர், நானே இயக்கி நடித்த நான்கு நிமிட நாடகம் வரும். அதைத்தொடர்ந்து பாரதி என்ற இயந்திரவில் நண்பர் இயக்கிய நடனம் அரங்கேற்றம் செய்தோம். முடிவில் குஜராத் பூகம்பத்தில் இறந்தோர்க்கு மௌன அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரையும் எந்திரிக்க வைத்தோம். இப்படி அப்பவே அனைத்தையும் வழங்கித்தான் வென்றோம். முதலிடம் வென்றவர் எங்கள் துறையைச் சேர்ந்த நண்பர் கானா சரவணன்தான் என்பது எங்களுக்கெல்லாம் பெருமை. நான்காம் வருடமும் அதே வடிவமையில் அரங்கேற்றம் செய்தோம். எங்களுக்குத்தான் முதலிடம் என்றார்கள். ஆனால் சில குழுக்கள் பெண்களை அதிகம் கலாய்த்ததால் பிரச்சினையாகி எந்த நிகழ்வுகளிலும் யாருக்கும் இடங்களை அறிவிக்கவில்லை.

முதலாம் வருடத்தில் ஏற்பட்ட ஒரு விளையாட்டான தோல்விக்குப் பதிலடி நான்காம் வருடத்தில் கிடைத்தது. ஆம். நான் என் கட்டுமானவியல் துறையின் கருத்தரங்க நிகழ்விற்கு (STRESS 2001) தலைவரானேன் (Chairman). அந்தநேரத்தில் இரண்டு மூன்று லெட்சங்கள் சேர்த்து இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு அழைப்பை விடுத்து நிகழ்வை நடத்துவது என்பது ஒரு சவாலான விடயமே. அதையும் ஜூனியர் மாணவர்களின் துணையால் நன்றாக நடத்தி முடித்தோம். அது ஏன் ஜூனியர் மாணவர்கள் என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. எங்கள் வகுப்பில் வெறும் இரண்டு பெண்களோடு சேர்த்து மொத்தம் 18 பேர்தான், ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டில் முறையே 100+ 80+ மாணவர்கள் படித்தார்கள்.(கட்டிடவியலுக்கான மதிப்பை புரிந்து கொண்டதால் மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். நானும் பணத்திற்காக டேரிஃப் கார்டு (Tariff card) கொடுத்தபோது நிறைய பணம் குவிந்தது. அட நம் பேச்சையும் கேட்டு பணம் தருகிறார்களே என்று மனதிற்குள் மகிழ்ச்சி கூடியது. மேடையில் பேசவேண்டிய தருணம் வந்தது. நான் ஆங்கிலத்தில் பேசும் பேச்சை டெல்லியில் இருந்து வந்து தற்சமயம் அமெரிக்காவில் பணிபுரியும் நண்பன் கபில்குப்தா தயாரித்துக்கொடுத்தான். (இவனிடம் ஆங்கிலத்தில் பேசுவதற்காகவே ஒரு சிலமாதங்கள் அறையெல்லாம் எடுத்துத் தங்கியுள்ளேன்). என்னதான் அவன் பேசத் தயாரித்துக் கொடுத்தாலும் நான் தமிழில் பேசிய வரிகளே முத்தாய்ப்பாக அமைந்தது.

அவ்வரிகள் இதோ...

வையகமே வாழ்த்துமளவில்
வானளாவில் உயர்ந்து நிற்கும்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
கட்டிடவியல் துறையைக்
கலைநயத்துடன் தேர்ந்தெடுத்து
எதிர்கால இந்தியாவை
ஏற்றமிகு இந்தியாவாக மாற்றத்துடிக்கும் வருங்கால வல்லுனர்களை
வருக வருகவென வரவேற்கிறேன்...

✍️செ. இராசா

26/03/2021

அனுபவப் பதிவு-15---கல்லூரி அனுபவம்---விளையாட்டு வினையான கதை---கட்டுரை



பொதுவாகவே பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டில் அனைத்துத் துறைகளுக்கும் பொதுப் பாடமாகத்தான் இருக்கும். ஆகவே இரண்டாமாண்டில்கூட தன் துறையை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்தது. அப்படி இரசாயனத்துறை (Chemical) போகவேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்தவன்தான் மயிலாடுதுறை சேமங்கலத்தைச் சேர்ந்த உயிர் நண்பன் சுபாஷ்‌. என்னிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக கட்டிடவியல் துறையிலேயே தொடர்ந்தான். அப்படி நானும் அவனும் நண்பர்களாக மாறியபோது அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. மாயவரத்தில் இருந்து வந்துபோய் படித்த அவனும் எங்களின் நட்பால் எங்கள் விடுதியிலேயே தங்க ஆரம்பித்தான். அவனைக்கான அவர் அப்பா அடிக்கடி வந்துபோவார். நல்ல பாசக்கார அப்பா. நாங்கள் அவனிடம் என்னடா உங்க அப்பா ME படிக்கிறாரா என்று நக்கல் செய்வோம். அப்போதுதான் சிதம்பரத்தைச் சேர்ந்த மிகவும் கலகலப்பான இரவுடிசம் நிறைந்த செல்வக்குமார் என்ற நண்பன் அறிமுகமானான். பொதுவாகவே நண்பன் சுபாஷ் இருந்தாலே அங்கே நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. இப்போது செல்வாவும் கிடைத்ததால், சொல்லவும் வேண்டுமா?!

புதுவருடம் பிறந்த தருணம். விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரும் குடித்துவிட்டு அல்லோகலம் செய்து கொண்டிருந்தார்கள். முதன்முதலில் நமக்கும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அன்றுதான் தோன்றியது (முன்பே ஊரில் ஒருமுறை சித்தப்பா ஒருவர் பனிரெண்டாம் வகுப்பு படித்தபோது ஒருவாய் குடிக்க கொடுத்த அனுபவமும் உண்டு). ஆனால் கையில் காசில்லாதபோது அந்தக்குறையை தீர்த்துவைத்தது நண்பன் செல்வாதான். எப்படியோ தன்னை அடமானம் வைத்தாவது பணம் புரட்டுவேன் என்று கூறி பீர் வாங்கிக்கொடுத்தான். நான் குடித்த அந்த முதல் முழு பீரின் போதை இருக்கிறதே... இன்னும் சுற்றுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அன்று அவன் எங்களுக்குக் கருணை காட்டியதுபோல் நாங்களும் பல பேர்களுக்கு பின்நாட்களில் கருணை காட்டியுள்ளோம் என்ற உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். பின் எங்கள் கூட்டணியில் காட்டுமன்னார்கோயில் சதீஸ் சந்தர், ஹீமுஷ்ணம் ஆண்டெனி,
சிதம்பரம் பிரதீஸ்குமார், கடலூர் செந்தில் என்று ஒவ்வொருவராக இணைந்தனர்.

இப்படி இணைந்த நட்புகளுக்குள் ஒரு தேர்தல் விளையாட்டொன்று கசப்பாக மாறிய சம்பவமும் உண்டு. எனக்கும் ஒரு நண்பருக்கும் இடையிலான அந்தத் தேர்தல் விளையாட்டில் மொத்தம் 15 பேர்கள் ஓட்டுப்போட வேண்டும் நான் அதிமுக என்றும், அவன் திமுக என்றும்...யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போமென விளையாட்டாகத்தான் போட்டி வைத்தோம். ஆனால் அவன் அதை விளையாட்டாக எடுக்காமல் வேண்டுமென்றே ஏதேதோ செய்து வென்றது மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஆம்லெட்டெல்லாம் கொடுத்து வெற்றியைக் கொண்டாடினான். அதை என்னால் அன்று தாங்கமுடியவில்லை. கழிப்பறையில் சென்று அழுதேன். அவன் பிற்காலத்தில் என் உயிர் நண்பனாக மாறினாலும் அன்றைய தினமும் அதற்கடுத்த வருடமும் என் எதிரியாவே தெரிந்தான். அன்றைய நிகழ்வானது என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து, எப்படியும் அக்கல்லூரியில் நான் யாரென்று நிரூபிக்க வேண்டுமென்று கங்கனம் கட்ட அந்நிகழ்வே காரணமாக இருந்தது. பின்னர் கல்லூரியில் நிறைய சாதிக்கவும் தூண்டுகோலாக இருந்தது.

சொல்கிறேன்....

✍️செ. இராசா


அனுபவப் பதிவு 14--------கல்லூரி வாழ்க்கை தொடக்கம்----கட்டுரை



அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்துரையாடலில் வருடந்தோறும் 1.5 இலட்சம் மற்றும் வருடாந்திர கட்டணங்கள் கட்டினால் போதும் என்று கூறினாலும், இதுசரிதானா? இல்லை சரிவராதா? என்ற குழப்பத்தில் பாண்டிச்சேரி ஜிப்மரில் மலேசியாவில் இருந்து வந்து மருத்துவப்படிப்பு படிக்கும் பெரியப்பா மகனைப் பார்க்கச் சென்றோம். அந்த நல்ல உள்ளம் சிலபல கேள்விகளை என் தந்தையிடம் கேட்டார்கள். பணமெல்லாம் கட்டி படிக்க வைக்க உங்களால் முடியுமா? அப்படியே முடிந்தாலும் உடனே வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் நான் தருவேனென்று என்ன உத்தேசம்? இப்படி பல கேள்விகள் கேட்க ஒரு வழியாக என் தந்தையாரும் குழம்பி மருத்துவமே வேண்டாம் என்ற நல்ல முடிவோடு வீடு வந்து சேர்ந்துவிட்டோம்.

சில நாட்களிலேயே அண்ணாமலையில் இருந்து பொறியியல் படிப்பிற்கான அழைப்பு வந்தது. மீண்டும் ஓர் குழப்பம் ஆரம்பமானது. நாங்கள் எதிர்பார்த்ததோ கட்டிடவியல் (CIVIL) ஆனால் வந்ததோ இயந்திரவியல் மற்றும் உற்பத்தியியல் (MECHANICAL & PRODUCTION) இருந்தும் என் தந்தையார் கட்டிடவியலிலேயே உறுதியாக இருந்தததால் அதையே மாற்றித்தரக் கோரினோம். அங்கேயும் ஒரு குழப்பம், கட்டிடவியலா (Civil) அல்லது கட்டுமானவியலா (Structural) எதில் மாற்ற வேண்டும் என்றார்கள். இக்கேள்விக்கு அன்றைய அறிவு நிலையில் விடை சொல்வதென்பது அவ்வளவு எளிதாக இல்லை. இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்று தெரிந்தவர்களிடம் கேட்டபோது, கட்டுமானவியல் என்றால் கணிதம் அதிகமாக இருக்கும் என்றார்கள். மேலும் இறுதிச் சான்றிதழில் Civil & Structural என்றே இருக்கும் என்றார்கள். சரியென்று சம்மதித்து படிப்பதற்காக பணமும் கட்டி சேர்த்தும்விட்டார்கள்

சிவகங்கையில் இருந்து சிதம்பரம் பயணமான எனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மிரட்டியது என்றே சொல்ல வேண்டும். எங்கள் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலைச் செட்டியார் சுதந்திரத்திற்கு முன்பாகவே கட்டிய கல்லூரி அது. ஒருமுறை பிரித்தானியா சென்றபோது அங்கே உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைப் பார்த்துவிட்டு அதேபோல் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கட்டவேண்டுமென்று இடம் தேடியுள்ளார்கள். பொதுவாக அனைத்துச் செட்டியார்களுமே சிவ வழிபாட்டில் ஈடுபாடுள்ளவர்கள்தான். அதுவும் அவர்களின் பூர்விகமான கடலில் அழிந்த பூம்புகாரின் அருகிலேயே, சிவதளங்களின் தலைமைத் தளம்போல் வீற்றிருக்கும் தில்லையிலேயே கல்லூரி ஆரம்பித்தது ஆச்சரியம் இல்லைதான். முதலில் மீனாட்சி கல்லூரியாக இருந்து பின்னர் பல்கலைக்கழகமாகமாறி மிகப் பிரம்மாண்டமான வளாகத்தில் படிப்பதென்றால் சும்மாவா?

என் முதலாமாண்டுக்கான விடுதியென்பது 4 மாடிகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம். மிகவும் புதிய கட்டிடத்தில் எனக்கான அறை இரண்டாம் தளத்தில் இருந்தது. கிராமத்தில் இருந்து வந்த எனக்கு, அச்சூழல் மிகவும் அந்நியமாக இருந்தது. என் அறைவாசிகள் ஆங்கிலம் கலந்த மிகவும் வாட்டசாட்டமாக பெரிய ஆளாக இருந்தார்கள். சீட்டு விளையாடிக்கொண்டு என்னையும் அழைத்தார்கள். அவர்கள் இயல்பாகவே இருந்தாலும் எனக்குத்தான் ஒருவிதமான பயம் தொற்றிக்கொண்டது. விடுதி உணவகத்தில்தான் எங்கள் ஊரைச் சேர்ந்த பள்ளி நண்பர்கள் வைத்தீஸ், அழகர்சாமி என்ற இருவரைச்சந்தித்தேன். அவர்கள் இயந்திரவியல் துறை எடுத்ததாய்ச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். என் சொந்த ஊரான அம்மன்பட்டி அருகேயுள்ள வீழனேரி மற்றும் நகரம்பட்டியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப்பார்த்துதான் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டேன். மூன்று பேரும் சேர்ந்து பேசி நான்காவது மாடியில் 447 என்ற அறையில் ஒன்றாகத் தங்கினோம். அந்த அறைக்கு "சிவகங்கைச் சிகரங்கள்" என்ற பெயரெல்லாம் வைத்து ஒரு கலக்கு கலக்கும் அளவிற்கு பின்நாளில் மாறினாலும் கல்லூரியின் முதலாமாண்டு என்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்தான் இருந்தது. காரணம் நானோ தமிழ்வழிப் பள்ளியில் இருந்து வந்தவன், பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் படுவேகமாக நடத்துவார்கள். ஒன்றும் புரியாமல் மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மையில் இருந்தேன். என்னைப்போலவே பலரும் இருப்பதைக் கண்டு அங்கேயே தமிழ்ச்சங்கம் ஒன்றையும் கூட்டிவிட்டோம்.

இன்னும் சொல்கிறேன்....

✍️செ. இராசமாணிக்கம்

25/03/2021

இராசாவின் குறுஞ்சொற்பா ஆத்திசூடி------இலக்கண வாய்ப்பாட்டில்-----ஞானக்கருத்துகள்



#காப்பு
இரண்டிரண்டு சீர்களில் ஏற்றிடும் சொற்பா
தரணிக்கே தந்தாள் தமிழ்

#அகர_வரிசை

1. அறிவை உயர்த்து
2. ஆற்றலைக் கூட்டு
3. இருப்பைப் பெருக்கு
4. ஈர்ப்பை வகு
5. உணவைப் பகிர்
6. ஊரே உறவு
7. எதிர்ப்பைக் கழி
8. ஏழைக்(கு) உதவு
9. ஐயம் விலக்கு
10. ஒன்றித் தெளி
11. ஓங்கி ஒலி
12. ஔவியம் நீக்கு
13. எஃகுபோல் நில்

#உயிர்மெய்_வருக்கம்

14. க- கர்வம் களை
15. ங- எங்கும் இறை
16. ச- சமமாய்ப் பழகு
17. ஞ- அஞ்ஞானம் போக்கு
18. ட- தடத்தைப் பதி
19. ண- இணங்கி இரு
20. த- தந்தால் வரும்
21. ந- நம்பித் தெளி
22. ப- படிப்பைத் தொடர்
23. ம- மறைபொருள் நோக்கு
24. ய- துயரத்தை நீக்கு
25. ர- உரம்போல் உதவு
26. ல- இலகுவாய் மாறு
27. வ- வரையறை வை
28. ழ- அழஅழ சீக்கு
29. ள- உளத்தால் உயர்வு
30. ற- அறத்தால் நிறைவு
31. ன- மனம்போல் மகிழ்வு

#ககர_வரிசை
32. கவலை ஒழி
33. காலை எழு
34. கிடைப்பதைக் கொள்
35. கீழே அமர்
36. குறையின்றிக் காண்
37. கூறுவதைக் கூறு
38. கெட்டோரை வாழ்த்து
39. கேட்பதைக் கேள்
40. கைபேசி வை
41. கொஞ்சமாய்ப் பேசு
42. கோபம் தவிர்
43. கௌரவம் பேண்

#சகர_வரிசை

44. சமாதியில் மூழ்கு
45. சாகாமல் வாழ்
46 சிற்றின்பம் தாண்டு
47. சீறாமல் சீறு
48. சுறுக்கமாய்ப் பேசு
49. சூழல் உணர்
50. செவிகள் திற
51. சேர்ப்பதைச் சேர்
52. சைவம் புசி
53. சொல்லும்முன் கேள்
54. சோதனை தாங்கு
55. சௌக்கியம் தள்ளு.
.
#தகர_வரிசை
56. தகுதியில் நில்
57. தாழ்வெண்ணம் தீது
58. திறந்தமனம் வேண்டு
59. தீச்சொல் தவிர்
60. துரியம் தாண்டு
61. தூற்றல் பொறு
62. தெளிவுடன் பேசு
63. தேடித் தெளி
64. தைரியம் கொள்
65. தொடர்ந்து நட
66. தோல்வியில் கல்

#நகர_வரிசை
67. நம்பிக்கை வை
68. நாட்டம் முதல்
69. நிறைவுடன் வாழ்
70. நீர்க்குமிழி வாழ்வு
71. நுணுக்கமாய் ஆய்
72. நூல்மெய் உணர்
73. நெறிமுறை சார்
74. நேரம் பெரிது
75. நைதல் விதி
76. நொறுங்கல் தவிர்
77. நோக்கம் அடை

#பகர_வரிசை
78. பணிவுடன் பேசு
79. பாடி உணர்த்து
80. பிழையை உணர்
81. பீற்றல் விடு
82. புன்னகை காட்டு
83. பூரணம் ஆகு
84. பெண்களைப் போற்று
85. பேருண்மை காண்
86. பைந்தமிழ்ப் பற்று
87. பொய்மெய் அறி
88. போலியை நீக்கு

#மகர_வரிசை
89. மனத்தைப் பழக்கு
90. மாயை விலக்கு
91. மின்னல் பிறப்பு
92. மீண்டும் இறப்பு
93. முயற்சியை நீட்டு
94. மூச்சை அடக்கு
95. மென்மையாய்ப் பேசு
96. மேலிருந்து பார்
97. மையத்தில் நில்
98. மொழிகளைத் தாண்டு
99. மோட்சம் இலக்கு
100. மௌனம் பழகு

#வகர_வருக்கம்
101. வலிகள் பொறு
102. வாழப் பழகு
104. விளைவை விடு
105. வீரியம் காட்டு
106. வு- உடல்வளம் பேண்
107. வூ-ஊன்றுகோல் ஆகு
108. வெறுப்பை விடு
109. வேண்டுவதை வேண்டு
110. வையமெனில் நாம்
111. வொ- ஒருமுறையே வாழ்வு
112. வோ-ஓர்இறை நம்பு

✍️செ.இராசமாணிக்கம்

24/03/2021

கொரோனா தடுப்பூசி



உன் கூர்மையான ஆயுதத்தை
என்மேல் செலுத்த உடன்பாடில்லைதான்
என்ன செய்ய?!
ஊரே சொல்கிறதே நீ உத்தமனென்று

நீ வரமோ சாபமோ?!...நான் அறியேன்
இன்றைய நிலையில்...
சாபங்களும் வரங்கள்தானே
வா...வந்து செலுத்து....
வாங்கிக் கொள்கிறேன் ‌.

ம்ம்...ஷ்

#போட்டாச்சு_போட்டாச்சு
#கொரோனா_தடுப்பூசி

✍️செ.இராசா

23/03/2021

நெத்தியில பொட்டு வச்சு

 


 

நெத்தியில பொட்டு வச்சு
நீண்டகொம்பில் எண்ணை வச்சு
பச்சப்புள்ள போலிருக்கான் கறுப்பு-அட
குட்டிப்புள்ள போலிருக்கான் கறுப்பு-அவன்
குத்திப்புட்டா நாங்கயில்ல பொறுப்பு-நீங்க
குத்துப்பட்டா நாங்கயில்ல பொறுப்பு!!!

✍️செ.இராசா

இராசாவின் குறுஞ்சொற்பா----அறத்துப்பால்



#பாயிரவியல்

1. இறைவனைப் போற்று
2. மழைபோல் இறை
3. சான்றோரே சான்று
4. அறமே துணை

#இல்லறவியல்

5. இல்லறம் நாடு
6. மனைவியே தூண்
7. பிள்ளைகள் பேறு* (செல்வம்)
8. அன்பைப் பெருக்கு
9. விருந்தோம்பல் செய்
10. இன்சொல் இயம்பு
11. நன்றியுடன் நில்
12. சீர்தூக்கிப் பார்
13. ஐந்தை அடக்கு
14. ஒழுக்கம் உயர்வு
15. பிறர்மனையாள் தாய்
16. பொறுத்தால் ஜெயம்* (வெற்றி)
17. பொறாமை தவிர்
18. திருட்டை ஒழி
19. பிறர்பேச்சை நீக்கு
20. வீண்பேச்சை வெட்டு
21. கெடுவினையால் கேடு
22. உதவிசெய்(து) ஒழுகு
23. ஈகையே பெரிது
24. புகழ்பெற வாழ்.

#துறவறவியல்

25. அருளுடையார் ஆகு
26. புலால் விடு
27. தவமே விளக்கு
28. வேசம் விலக்கு
29. களவெண்ணம் கொல்
30. வாய்மையே;நேர் மெய்
31. கோபத்தை வெல்
32. துன்புறினும் வாழ்த்து
33. உயிர்க்கொலை ஊறு
34. நீர்க்குமிழி வாழ்வு
35. பற்றின்றி வாழ்
36. மெய்ப்பொருள் காண்
37. ஆசை அறு

#ஊழியல்

38. கர்மவினை பார்

என்னுரை
**************
திருக்குறள் போலே திரும்பவும் செய்ய
திருவருள் வேண்டும் தெளி
(1)

அசலொன்று கண்முன் அழகாய் இருக்க
அசலினைப் போலேன் அடுத்து?
(2)

இரண்டடிக் குள்ளே எழுசீர் அதுபோல்
இரண்டுசீர் வெண்பா இது
(3)

குறளின் குரலாய் குறுஞ்செய்தி ஆன
#குறுஞ்சொற்பா இஃதெனக் கூறு
(4)

இலக்கணம் வைத்தே எழுதிய போதும்
இலக்கணம் புதிதே இதில்
(5)

தலைக்கனம் இன்றித் தமிழை வணங்கி
மலையை உடைக்கும் உளி
(6)

ஔவைத் தமிழ்போல் அடியேன் குறுக்கிய
பாவைக் குறள்வழி பார்
(7)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

(திருக்குறள் அதிகாரத் தலைப்புகளை ஔவையின் ஆத்திசூடிபோல் ஆனால் அப்படியே அல்லாமல், இரண்டு சீர்கள் வைத்து, அந்த இரண்டு சீர்களையும் வெண்பா வாய்ப்பாட்டில் பிணைத்து, ஈற்றுச்சீரான இரண்டாம் சீரை நாள்,மலர்,காசு, பிறப்பு என்ற வெண்பா வாய்ப்பாட்டிலேயே அமைத்தும் இதைப் படைத்துள்ளேன். இதற்கு #குறுஞ்சொற்பா என்று பெயரிட்டு தமிழன்னையின் கால்களில் அர்ப்பணிக்கின்றேன்‌.)

22/03/2021

கல்வியின் சிறப்பு------------குறள் வெண்பாக்கள்---வள்ளுவர் திங்கள் 152


 

படிக்கப் படிக்கப் படிக்கின்ற பாடம்
படிக்காத நூல்கள் பல
(1)

கற்றதாய்ச் சொல்லிக் கதைக்கின்ற சொற்களே
கற்றதைக் காட்டிவிடும் காண்
(2)

அடிமுடி இல்லாத ஆண்டவன் போலே
முடிவதே இல்லைப் படிப்பு
(3)

வேகாத பூரியில் வந்திடும் சப்தம்போல்
போகாத புத்தியின் போக்கு
(4)

பயின்றதாய் வாங்கிடும் பட்டங்கள் எல்லாம்
பயிற்சியின் சான்றெனப் பார்
(5)

தலையில் கனமுள்ள தீக்குச்சி எண்ணி
தலைக்கனம் என்றும் தவிர்
(6)

தன்னையும் தன்சூழ் தரணியையும் கற்காமல்
என்னதான் கற்றாலும் வீண்
(7)

அறத்தில் நழுவாமல் ஆற்றிடும் செய்கை
சிறப்பான கல்விப் பயன்
(8)

உயர்வென்றும் தாழ்வென்றும் உள்ளத்தில் எண்ணார்
உயர்நிலையில் கற்றோர் உணர்
(9)

மற்றவை எல்லாம் மறையலாம் என்றைக்கும்
கற்றவை தந்திடும் கை
(10)

✍️செ.இராசா


21/03/2021

 

சக மனிதனையும்
சந்தேகப்பட வைக்கிறது
இருமல்

20/03/2021

காலம் தாண்டிய வேதம்

  


(மலையாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவருக்காக போட்ட மெட்டிற்கு அடியேன் திருக்குறளை வைத்து சற்றுமுன் எழுதிய பாடல் இது.)

#காலம்_தாண்டிய_வேதம்- தீய
பேதங்கள் கூறாத வேதம்
பாரே பொதுவாய் ஏற்கின்ற வேதம்
ஓ......ஓர் மறை

காலம் தாண்டிய வேதம்- நாம்
வாழ்ந்திடக் கூறிடும் வேதம்
பாரே பொதுவாய் ஏற்கின்ற வேதம்
ஓ......ஓர் மறை

என்றும் திருக்குறள் நற்றமிழ் வேதம்
இந்த ஞாலத்தை மாற்றிடும் வேதம்
பாரத மண்ணின் பைந்தமிழ் நாட்டை
என்றென்றும் காக்கின்ற வேதம்
புத்தியில்ஏற்றிட புத்துயிர்தந்திடும்
நெஞ்சில்பதித்தால் நிமிர்ந்திட வைக்கும்
சகோதரா...படித்தால் படியேற்றும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு- நாளும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு

வள்ளுவம் வாழ்வியல் வாழ்த்துவோமே!

பிறப்பிலேயில்லை என்றைக்கும்பேதம்
யாகவாராயினும் நாகாக்க வேண்டும்
பொய்யுரையில்லா மெய்யுரைகாண
முப்பால் வைத்தே மூத்தோன் படைத்த
அறமும் பொருளும் கனிவுடன் காமமும்
ஒருங்கே நல்கிய ஒப்பற்றநூலை
சகோதரா...படித்தால் படியேற்றும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு- நாளும்
குறளோடு குரலேற்று கூடும்வாழ்வு!

✍️செ.இராசா

ஒரே கடலில்தானே ஒன்றாய்த் திரிந்தோம்

 


ஒரே கடலில்தானே
ஒன்றாய்த் திரிந்தோம்
பிறகு ஏன்;
வலையில் சிக்கியும் வஞ்சிக்கின்றீர்?!

ஒரே நீரில்தானே
உண்டு களித்தோம்
பிறகு ஏன்;
வெவ்வேறு விலைவைத்து பிரிக்கின்றீர்?!

ஓ...
நீங்கள் மனிதர்கள் அல்லவா?
பிறகு எப்படி;
இந்த ஏழை மீன்களின் வேதனை புரியும்?

✍️செ. இராசா

(தம்பி Ramesh Devar அவர்களின் பின்னூட்டத்தால் விளைந்த வரிகள் இவை.
மனமார்ந்த நன்றி தம்பி 🙏🙏🙏)

வள்ளுவர் மண்ணெனச் சொல்

 

தெள்ளுதமிழ் நாட்டைத் தெளிவாக எப்போதும்
வள்ளுவர் மண்ணெனச் சொல்


19/03/2021

கம்மாய் அழிகையில

 





கம்மாய் அழிகையில
கெண்டைப்பொடி புடிச்சதுபோல்;
தோப்புக் கிணத்துக்குள்ள
தூண்டிபோட்ட நாட்களைப்போல்;
ஊருவிட்டு ஊருவந்து
நாடுவிட்டு நாடுவந்து
தோகாக் கடலுக்குள்ள
தூண்டியில மீன் புடிச்சு
நம்மூரு புளிபோட்டு
நல்லாக் கொதிக்க வச்சு
கழுவிய மீனெடுத்து
கம கம கண்ணு கொதிக்கவிட்டால்
அடா அடா அடா.....
.......
அதச்சொல்ல முடியலையே
அதச்சொல்ல மொழியில்லையே....
✍️செ.இராசா

மிகப்பெரிய அங்கீகாரம்

மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கிய
உலகப் பாவலர் தமிழன்னைத் தமிழ்ப் பேரவை
அமைப்பிற்கும் அதன் நிறுவனர் மற்றும் தலைவர் தமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம் ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வெற்றி என்ற ஒன்றைத்தேடி ஓடுகின்றேன்

வெற்றி என்ற ஒன்றைத்தேடி ஓடுகின்றேன்
சுற்றி உள்ள சூழல்நாடித் தேடுகின்றேன்
கற்றுக் கொண்ட வித்தைதானே காட்டுகின்றேன்
பற்று கொண்ட பக்தைபோலே பாடுகின்றேன்

✍️செ. இராசா

18/03/2021

அனுபவப் பதிவு-13------------கல்லூரி நுழைவுத்தேர்வு--------------கட்டுரை

 




அனைவருடைய வாழ்விலும் ஒன்றிலிருந்து மற்றொன்றை நோக்கிப் போகின்ற பருவங்கள் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்றே. அதுவும் குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் எந்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் நம் எதிர்கால வாழ்க்கைக்கான சவாலும் அடங்கியுள்ளதால் அதுபற்றி சொல்லவே வேண்டாம். மிக மிக முக்கியமான தருணமாகவே அது அமைகிறது. ஆம்...எனக்கும் அப்படியே அமைந்தது.

நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்த அந்தத் தருணம்தான் தமிழ் நாட்டில் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் சிஸ்டம் அறிமுகமானது (1997). ஆனால் அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் சேர்ந்திருக்கவில்லை, அதற்கு தனி விண்ணப்பம் போட வேண்டும். அதுபோக மருத்துவம், பிசியோதெரபி, நர்சிங், சித்தா, வேளாண்மை....என்று அனைத்திற்கும் தனித்தனி படிவங்கள் போட வேண்டும். ஆங்கிலத்தில் இருக்கும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்தல் என்பது என்னைப்போன்ற தமிழ்வழிக் கல்வி கிராமத்து மாணவர்களுக்கெல்லாம் அது மிகப்பெரிய சவாலே. ஆனால் எனக்கான அனைத்து படிவங்களையும் என் அப்பாவின் உயிர் நண்பரான நகரம்பட்டியைச் சேர்ந்த #சுந்தரமூர்த்தி_சித்தப்பா குடும்பத்தினர்தான் இரண்டு நாட்களாக பூர்த்தி செய்து கொடுத்தார்கள். (மனமார்ந்த நன்றி சித்தப்பா மற்றும் குடும்பத்தினர்)

இந்தப் பனிரெண்டாம் வகுப்பு முடிந்தவுடன்தான் எத்தனை போராட்டங்கள் எத்தனை மன அழுத்தங்கள்? எத்தனை கோச்சிங் வகுப்புகள்? எத்தனை நுழைவுத்தேர்வுகள்? எத்தனை கலந்துரையாடல்கள்? நம்மை ஒரு வழி செய்து விடுவார்கள். நானும் முதலில் சிவகங்கையில் உள்ள கோச்சிங் வகுப்பிற்குத்தான் சென்றேன். அங்கே என் பனிரெண்டாம் வகுப்பு வாத்தியார்களே இருந்ததால், அது சரிப்பட்டு வராதென்று மதுரையில் அமெரிக்கன் பள்ளியில் தல்லாகுளம் அருகே ஒரு மாதம் தெரிந்த மாமா வீட்டில் தங்கி இருந்து படித்தேன். சாதாரண ஸ்லிப்பர் செருப்புதான் போட்டுகொண்டு போன என்னை அந்த #மாமாதான் நல்ல செருப்பு வாங்கிக்கொடுத்து ஒரு மாதம் சாப்பாடு போட்டு இருக்க இடம் கொடுத்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அங்கிருந்த படியே அத்தனை நுழைவுத் தேர்வுகளையும் எழுதினேன். மதுரை தியாகராஜா கல்லூரியில் பொறியியலுக்கும், யாதவா கல்லாரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கும் எழுதினேன்.ஒரு வழியாக அனைத்து அழைப்புகளும் ஒவ்வொன்றாக வந்தது.

முதலில் பொறியியலுக்கான அழைப்பில் சென்னை சென்றோம். என் அப்பா சிவில் எடுக்கச்சொன்னார், ஆனால் நானும் என் மாமாவும் சம்பந்தமே இல்லாமல் வாணியம்பாடியில் உள்ள பிரியதர்சினி பொறியியல் கல்லூரியில் லெதர் டெக்னோலஜி என்ற பிரிவை எடுத்து வந்தோம். இவ்வளவிற்கும் ஊருக்கு அருகிலேயே முகமது சதக் கல்லூரியில் சிவில் இருந்தது. அக்கால கட்டங்களில் சிவில் என்றாலே சிவிலா என்று ஏளனமாகப் பார்ப்பார்கள். என் அப்பா சிவில் ஒப்பந்தக்காரர் என்பதால் நானும் அவர் வேலையைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்திருக்கிறார். நானோ மாற்றி எடுத்துவிட்டு வந்ததால் மிகவும் வேதனை அடைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், வாணியம்பாடி கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போனால் வெறும் செங்கல் கட்டிடமாக இன்னும் பூசாமலே ஒரு கட்டிடம் இருந்தது. அதைத்தான் கல்லூரி என்று சொன்னார்கள். மேலும் அந்த ஊரே எனக்கு அந்நிய தேசம் போல் இருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அங்கிருந்து கிளம்பி வீடுவந்து சேர்ந்தோம்.

அப்பா மிகவும் நொந்துபோய் ஒரு மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது கூட மோசமில்லை, தான் சென்னை சென்று அண்ணாமலைச் செட்டியாரின் உதவியாளர் காலில் விழுந்து சிவில் வாங்கி வருவதாகவும் என் சம்மதம் தெரிவிக்கவும் சொன்னார். அப்போது அந்த மாமா " பார்ரா நீ வாழ்க்கையில் நிமிர உன் அப்பா குனிகிறாராம்" என்று சொன்னவுடன் என் கண்கள் குளமானத்தைச் சொல்லவும் வேண்டுமா?...

அப்பா சென்னை கிளம்பி அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவியாளரிடம்
பேசியுள்ளார். அவர்கள் பேரத்தை ஒன்றரை லட்சத்தில் ஆரம்பித்து ஐம்பதாயிரம் ரூபாயில் முடித்துள்ளார்கள். இயந்திரவியல், மின்சாரவியல், கணினி என்று எது வேண்டும் என்றார்கள், என் அப்பா சிவில் மட்டுமே என்று கூறி பணம் கட்டியுள்ளார்கள். இப்படிப் பொறியியலுக்குக் காத்துக்கொண்டிருந்தால் எதிர்பாராவிதமாக மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு அதே அண்ணாமலையில் சிதம்பரத்தில் இருந்து அழைப்பு வந்தது. முதல் நாள் MBBS (பொது மருத்துவம்) இரண்டாம் நாள் BDS (பல் மருத்துவம்) .அங்கே எல்லாமே பணம்தான் என்று அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

நாங்கள் ஏதோ ஒரு தைரியத்தில் கௌன்சிலிங் போனோம். நான் போன தோரணையே அவர்களுக்கு உணர்த்தியிருக்கும் நான் எந்தமாதிரி பின்புலமென்று. நான் இரு கைகளையும் கூப்பி வணக்கம் ஐயா என்று கூறினேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு என்னை அமரச்சொன்னார்கள். அவர்களே ஆரம்பித்தார்கள், தம்பி...இங்கே படிக்க உங்களிடம் பணம் இருக்கிறதா என்று?...நான் என் நிலைமையை முழுதாகச் சொன்னவுடன் என் மேல் இரக்கம் கொண்டு விவசாயிகளுக்கான ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் தருவதாகவும் ஆனால் வருடம் ஒன்றரை லெட்சம் மட்டும் கட்டவேண்டும் என்றார்கள். மேலும் நீங்கள் தேர்வாகி விட்டீர்கள் நாளைய BDS கௌன்சிலிங் வரவேண்டாம் என்றார்கள்.

என்ன செய்யலாம் என்ற குழப்பத்தோடு என் அப்பாவும் நானும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மலேசியாவில் இருந்து வந்து படிக்கும் என் சொந்த பெரியப்பா மகனைப் பார்க்க சென்றோம். அவர் என்ன ஆலோசனை வழங்கினார் தெரியுமா?

......தொடரும்

17/03/2021

பணநாயகம்------வேதனை வெண்பாக்கள்



கொள்கையும் இல்லாமல் கோட்பாடும் இல்லாமல்
கொள்ளை அடிக்கவா கூட்டு
(1)

எப்படி எப்படியோ ஏறிவந்தாய்...அப்பாடி!
எப்படி வெல்வாய் இனி?
(2)

இலவுகாத்த பைங்கிளிபோல் என்னய்யா வாழ்வு?!
களவுகாக்க தந்திடுமா கை
(3)

மறுமலர்ச்சி என்றெல்லாம் வாய்கிழியச் சொன்ன
மறுமலர்ச்சி எங்கே?பொய்க் கோ?!
(4)

தூக்கி அடிச்சதினால் தூக்கி அடிச்சனரோ?
வாக்கிற்கு வக்கில்லா வாய்!
(5)

கட்சியைப் பற்றிடவே கட்சியைக் கொண்டுள்ள
கட்சியின் தேவையென்ன?! காசு!
(6)

நீட்டென்றும் டோலென்றும் நீடிக்கும் சோதனையில்
ஓட்டென்றால் வந்திடுமா ஓட்டு!
(7)

மையத்தில் நின்றாலும் ஓரத்தில் நின்றாலும்
பையைத்தான் பார்ப்பார்கள் போ!
(8)

தீரா விடமென்று தீராமல் திட்டிவிட்டு
தாராளம் காட்டனுமா? தா!
(9)

சதிமதம் பார்த்திங்கே சீட்டெல்லாம் தந்தாலும்
சாதிகளை வேரறுக்கும் காசு
(10)

உங்களில் ஒருவன்,

✍️செ. இராசா

15/03/2021

அனுபவப் பதிவு -12---பள்ளி வாழ்க்கை சுருக்கமாக-----கட்டுரை


 

#ஏழு_பள்ளிகள்
#சாதாரண_மாணவன்_சாதனை_மாணவன்
#8ஆம்_வகுப்பில் 80/500------ #10ல்-432/500

சிவகங்கை மாவட்டம் அம்மன்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த எனது தந்தையார் செட்டிநாட்டு ஊர்களில் சிறப்புமிகு நகரமான தேவகோட்டை என்ற ஊரில் வாழ்ந்த 18 வயதே ஆன என் அம்மாவைத் தன் 21 வயதிற்குள்ளாகவே திருமணம் செய்துவிட்டார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே 50கிமீ தூரம் வரும். மேலும் அக்கால கட்டத்தில் மின்சார வசதியோ வாகன போக்குவரத்து வசதியோ இல்லாத ஊரில் எப்படித்தான் என் தாயாரைக் கட்டிக்கொடுத்தார்களோ? பிற்காலத்தில் நானே இக்கேள்வியை என் அம்மாவிடம் கேட்டபோது, சென்னை கூட்டிப் போவதாகப் பொய் சொல்லியே தந்தையார் திருமணம் செய்தாராம். பாவம்....அவர் அம்மன் பட்டியை விட்டு வரவே மாட்டார் என்பதை அன்று யாருமே தெரிந்திருக்கவில்லை போலும். ஆமாம் இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் என் பள்ளி வாழ்க்கை கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையே எப்படி அடிப்பட்டது என்பதைச் சொல்வதற்காகத்தான்.

சிறுவயதிலேயே என் தந்தையார் அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகளைப் பெற்றதால் என்னை என் அம்மாச்சி வீடான தேவகோட்டையிலும் என் இரண்டாம் தம்பியை மூன்றாம் அத்தை ஊரான திருச்சியிலும் கொடுத்துவிட்டு மூன்றாம் தம்பியை மட்டும் அம்மன் பட்டியிலேயே படிக்க வைத்தார்கள்.

நான் 1/2 கிளாஸ் போன்ற (Pre KG/ LKG போல்) ஒரு வகுப்பை அம்மன் பட்டியிலேயே பழைய #பிரஸிடென்ட்_ஐயா_வீட்டில் ஒரு அக்கா எடுத்ததாக ஞாபகம். பின்னர் #தேவகோட்டை_புனித_ஜான் என்ற கிறுத்துவ நடுநிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அங்கே அம்மாவிற்கு எடுத்த இராணி டீச்சர்தான் எனக்கும் டியூசன் எடுத்தார்கள். கைக்குட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற ஒழுக்கமெல்லாம் சொல்லிக் கொடுத்தது இன்னும் ஞாபகம் உள்ளது. ஆங்கிலத்தில் Tenses (take took taken) புத்தகம் கொடுத்து படிக்க வைத்ததை இன்னும் மறக்கவில்லை.
எனக்குக் கண் குறைபாடு ஏற்பட்டதைக் கண்டறிந்து சொல்லி 5 ஆம் வகுப்பிலேயே கண்ணாடி போட வைத்தார்கள். ஐந்தாம் வகுப்பின் இறுதியில் தாத்தா இறந்துவிட்டார். உடனே என் தந்தையார் தேவகோட்டையில் இருந்து சிவகங்கைக்கு 5 கிமீ அருகேயுள்ள #சோழபுரம் என்ற ஊரில் #சுத்தானந்த_பாரதி_தேசிய_வித்யாலயம் என்ற உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள். இரண்டே வருடங்கள்தான் இப்பள்ளியில் படித்தேன். ஆனால் என் வாழ்வில் மறக்கவே முடியாத பள்ளி என்றால் அது இதுவே. காரணம், இங்கே பாடம் மட்டும் சொல்லிக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் இலக்கிய மன்றம் என்ற பெயரில் மேடைப் பயிற்சியும், வியாழக்கிழமைகளில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளும், வெள்ளிக்கிழமைகளில் பக்திப் பிரார்த்தனையும் நடைபெறும்.

என்னை முதன் முதலாக ஆண்டுவிழாவில் #கோலாட்டம் ஆட வைத்து, ஒரு வயதான பாட்டி ரஜினி படம் பார்க்கப் போவதுபோல் நானே உருவாக்கிய #தனி_நடிப்பு_நாடகம் போட வைத்ததும், #மாணிக்கவாசகர் பற்றி பேசும்போது பயந்து நடுங்கிய சமயத்தில் "டேய் இராசமாணிக்கம்...ஏன் பயப்படுகிறாய் கீழே உள்ள அனைவரையும் ஆடுமாடாக நினைத்துக்கொள்" என்று மாணிக்க வாத்தியார் தைரியம் கொடுத்ததும் இப்பள்ளியில்தான். இன்றும் பல தமிழ், ஹிந்தி, சம்ஸ்கிருத, ஆங்கிலப் பாடல்கள் மனப்பாடமாகத் தெரியும் என்றால் இந்த இரண்டு வருடங்களில் கற்றுக் கொண்டதே என்பேன்.

சோழபுரம் பள்ளி எங்கள் ஊரிலிருந்து சற்றே தொலைவு (14 கிமீ) என்பதாலும் காலையில் 6:30க்குப் போய்விட்டு மாலை 6:30 க்குத்தான் பேருந்து வருமென்பதால் எட்டாம் வகுப்பிற்கு ஊருக்கு சற்று அருகிலேயே உள்ள #ஓக்கூர் (5 கிமீ) #சோமசுந்தரம்_செட்டியார்_உயர்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். சோழபுரத்தில் நல்ல மதிப்பெண் எடுத்த நான் இங்கே மொத்தமே 80/500 எடுக்கும் அளவு தாழ்ந்துவிட்டேன். இப்பள்ளியில்தான் அதே ஊரைச் சேர்ந்த #நண்பன்_சிவக்குமார் கிடைத்தான்‌ அந்த ஒரு காரணத்திற்காகவே அப்பள்ளிக்கு நன்றி சொல்லலாம். இங்கே மேடையில் #முட்டாள்_இராஜா என்ற நாடகத்தில் நானே கதாநாயகனாக நடித்தேன். என் நடிப்பை ஒருவர் பார்த்துவிட்டு நான் பிற்காலத்தில் பெரிய நடிகராக வருவேன் என்று சொன்னார். அது என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தாலும் அதெல்லாம் நடக்கவில்லை. பாட்டுப் போட்டியிலும் கலந்துகொண்டு இரண்டாமிடம் வந்தேன். இங்கேதான் நகரம்பட்டியைச் சேர்ந்த #இரமேஸ் என்ற நண்பனும் பழக்கமானான். நானும் என் தம்பியும் சரியாகப் படிக்கவில்லை என்று என் தந்தையார் ஒக்கூரிலிருந்து பொன்னமராவதி அருகே உள்ள ஆத்திக்காடு #தெக்கூர் என்ற ஊரில் #விசாலாட்சி_கலாசலா_மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் விடுதியில் தங்கி படிக்கச் சேர்த்துவிட்டார்கள்

என்னால் விடுதியில் தங்கவே முடியவில்லை. முதல்நாளே தப்பி ஓடினால் உடனே பிடித்துவிட்டார்கள். இரண்டாம் நாள் என் தம்பியோடு ஓடினால் இரண்டு மணிநேரம் தேடி ஒரு கிணற்றடியில் பதுங்கிய எங்களைப் பிடித்து வெளுத்துவிட்டார்கள். பிறகு எப்படியோ போராடி அப்பாவிடம் சொல்லி சொல்லி ஒரு வருடம் மட்டுமே படித்து மீண்டும் சிவகங்கை திரும்பி விட்டோம். ஆனால் இந்தப் பள்ளியிலும் மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. ஒருமுறை ஊருக்குக் கிளம்பத் தயாரானபோது கண்காணிப்பாளர் விடாததால் சொறி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டேன். பொன்னமராவதி மருத்துவமனைக்குக் கூட்டிப்போயி வாந்தி எடுக்க வைத்து சரிசெய்தார்கள். பின்னர் அந்த வார்டன் பிரபாகரன் அடி பிரித்துவிட்டார். இன்னும் வலிக்கிறது என்றால் பார்த்துக்குங்க...அந்தப் பள்ளியில் பொன்னமராவதி ஆறுமுகம் என்ற புகழ்பெற்ற ஒருவர் எழுதிய நாடகத்தில் #தேவா_என்ற_பாத்திரத்தில் நடித்த நான் #முதலிடம்_வாங்கியது மறக்க முடியாதது. அதுமட்டுமல்ல.... இங்கேதான் நான் படிக்க ஆரம்பித்தேன். தர வரிசையில் 16-14-12-7-2...வரை வந்துவிட்டேன்.

அங்கிருந்து கிளம்பியநான் #சிவகங்கையில் 10ஆம் வகுப்பிற்கு வந்தபோது யாருமே சேர்த்துக் கொள்ளவில்லை. மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 5000 ரூபாயோ 2000 ரூபாயோ கேட்டார்கள்.. #மருதுபாண்டியர் என்ற அரசுப்பள்ளியில் ஒரு பெஞ்சு மட்டுமே கேட்டார்கள். என்னை எங்கப்பா அங்கே சேர்த்துவிட்டார்கள். அங்கே அதுவரை எடுத்த அதிகபட்ச மதிப்பெண்ணே 315தான். அதில்தான் படித்து முதன்முதலாக 432 என்று 400க்குமேல் அதிகமாக எடுத்து முதல் மாணவனாகவும் கணக்கில் 100 எடுத்த மாணவனாகவும் ஆனேன். இப்பள்ளியில் #The_Lost_Son என்ற ஆங்கில நாடகத்தில் நடித்தது மறக்க முடியாது.

அடுத்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு #கற்பூரசுந்தர_பாண்டியன்_மேல்நிலைப் பள்ளியில் படிக்கப் போனேன். சொல்லிக்கொள்வதுபோல் இல்லாக் கேவலமான பள்ளியே இது. 11ஆம் வகுப்பில் புத்தகமே வரவில்லை. மரத்தின் அடியிலேயே கழித்தோம். இங்கேதான் மேலூரைச்சேர்ந்த நண்பர் #நாகராஜ் மற்றும் #ஜெயகாந்தன் பழக்கமானார்கள். இவர்களால் ரங்கீலா ஹம்ஆப்கே ஹைன் கோன் என்கிற ஹிந்திப் படப் பாடல்களெல்லாம் கேட்க ஆரம்பித்தேன். மற்றபடி இப்பள்ளியில் சொல்ல ஒன்றுமில்லை. இங்கே 992 தான் எடுத்தேன். இப்பள்ளியில் சேராமல் இருந்திருந்தால் எனக்குப்பிடித்த உயிரியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவத்தில் போயிருப்பேன் என்ற ஆதங்கம் இன்னும் இருக்கிறது. எது எப்படியோ கிராமத்தில் இருந்து 4 கிமீ சைக்கிள் மிதித்து மதகுபட்டி வந்து அங்கிருந்து பேருந்தில் சிவகங்கை சென்று படித்துவிட்டு மீண்டும் ஊர்வரும் வாழ்க்கைப் பாடம் இருக்கிறதே அது பள்ளிப் பாடத்தைவிடமேல் என்றே சொல்வேன்.

நான் படித்த ஏழு பள்ளிகளில் மிகச்சிறந்த பள்ளியென்றால் அது சோழபுரம் பள்ளியே. அதைப்போல் நல்ல பள்ளிகள் உருவானால் நிறைய நிறைய நல்ல மாணவர்கள் உருவார்கள் என்பது என் திண்ணம்.

என்னைப் பொறுத்தவரை மேடைகளில் பயமில்லாமல் நடிக்கும் ஒருவன் பிற்காலத்தில் எங்கேயும் எந்த நிறுவனங்களிலும் எந்த கூட்டத்திலும் பயமின்றி சாதிப்பான். அதேபோல் விளையாட்டில் கலந்து கொள்ளும் ஒருவன் அடிக்கடி தோல்விகளை சந்திப்பதால் வாழ்க்கையில் தோற்றாலும் தற்கொலை என்ற முடிவுக்கெல்லாம் போகாமல் தோல்விகளை விளையாட்டாக சந்திப்பான். ஆக... பள்ளிப் படிப்பைவிட இவற்றை ஊக்குவிக்கும் பள்ளிகளே மிகச்சிறந்த பள்ளிகள் என்றுகூறி என் பள்ளி வாழ்க்கையை இத்தோடு நிறைவு செய்கிறேன்.

✍️செ.இராசா

குறளுரையாடல் அந்தாதி ------------கரு: தேர்தல் நடப்பு ----(நானும் மாமாவும்)


#நாள்_15_03_2021



வெண்பா வேந்தர் அகன் என்கிற அனுராதா கட்டபொம்மன் ஐயா அவர்களிடம் பல நாட்களுக்குப் பிறகு தேர்தல் நடப்பு குறித்து குறளுரையாடல் புரிந்தது மிகவும் மகிழ்வை தந்தது.

(அன்பின் மிகுதியால் அவர்களை மாமா என்று அழைப்பதால் இங்கே மாமா என்றே குறிப்பிட்டுள்ளேன்).

#காப்பு (#மாமா_அவர்கள்_வழங்கியது)
நன்றே நிகழ்ந்தேற நாயகனே நீயருள்வாய்.
நன்றி உரைத்தனன் நன்று.

#நான்_1
நன்றாகச் செய்தாலும் நன்றல்ல என்போர்க்கு
நன்றல்லா எல்லாமும் நன்று

#மாமா_2
நன்றென்று நம்பினால் நட்டாற்றில் தள்ளுவர்
இன்றெங்கும் உள்ளார் இளித்து

#நான்_3
இளித்தே கதைத்திங்கே எப்படியோ வெல்ல
அளிக்கின்றார் ஆயிரம் வாக்கு

#மாமா_4
வாக்கிங்கே வேண்டாமாம் நாக்குச் சுவைபோதும்
பாக்கோடு பட்டைச் சரக்கு.

#நான்_5
சரக்கினை நம்பித்தான் தந்துள்ளார் பாரீர்
சரக்கின்றி போனால் சரிவு

#மாமா_6
சரிந்ததைத் தூக்கியிங்குச் சாத்திவைப் பாரைத்
தெரிந்தேநாம் ஏற்றோம் சிரித்து.

#நான்_7
சிரித்து நகர்வதால் தீர்வொன்றும் இல்லை
தெரிந்தும் சிரிக்கின்றோம் சே!

#மாமா_8
சேர்ந்தார் செலவழிப்பர் சேரார் முகஞ்சுழிப்பர்
சீர்செய்தார்க் குண்டு சிறப்பு.

#நான்_9
சிறப்பான நல்வாழ்வை செய்திடுவோம் என்போர்
மறக்காமல் செய்வார் தமக்கு

#மாமா_10
தமக்கு தமக்கென்றால் தள்ளாதார் தாமாய்ச்
சுமப்பர் தலைமீதில் தாள்.

#நான்_11
தாளைப் பணிந்து தலைவா எனச்சொல்லி
தாளையே வாருவார் தள்ளு

#மாமா_12
தள்ளுவதைத் தள்ளித் தருவதைத் தந்தால்தான்
கள்ளமனம் வெல்லுமினி காண்.

#நான்_13
காண்போர் அனைவருமே கைப்பொத்தி நிற்பதினால்
வான்முட்ட அள்ளுகின்றார் வந்து

#மாமா_14
வந்துவந்துப் போவதெலாம் வாக்களிக்கும் மட்டுந்தான்
சொந்தம் பகையாகும் பின்பு.

#நான்_15
பின்புறம் குத்துவதில் பேய்போல் திரிகிற
தன்மையில் மூத்தோன் தலை

#மாமா_16
தலையிருக்க வாலாடும் சத்தியந்தான் வாடும்
வலைவிரிப்பர் ஓடிடலாம் வா

#நான்_17
வாருங்கள் என்றழைத்து வாங்குவதை வாங்கிவிட்டு
வாருவதில் வல்லவர்க்கே வாழ்வு

#மாமா_18
வாழ்வுவரும் போது மதியாதார் தன்னிலையில்
தாழ்வடையும் போதழுவர் சார்ந்து.

#நான்_19
சார்ந்த அமைப்பிற்கே சத்தியமாய் இல்லார்க்கு
தேர்தலில் கிட்டுமா தீர்ப்பு

#மாமா_20
தீர்ப்புவரும் நாளில் தெரிந்துவிடும் பூமணக்கும்
நார்மணக்கா தென்றறிதல் நன்று.

✍️மாமாவுடன்_நான்