28/02/2022

நான் விரும்பும் ஓர்குறள் ---------------- வள்ளுவர் திங்கள்- 200



#முன்னுரை
எல்லாக் குறள்களும்
......... இன்னமுதே என்றாலும்
நல்லதிலும் நல்லதென
..........‌நான்விரும்பிச்- சொல்வேன்;
"மனத்துக்கண் மாசிலன்
..........ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

#அந்தாதி

நஞ்சில்லா ஓர்நிலமாய் நம்நெஞ்சை மாற்றினால்
நஞ்சைபோல்* நன்மைதரும் நம்பு
(1)
*நஞ்சை- நன்செய்

நம்பித் தெளிந்தபின் நல்லோர்மேல் கொள்கின்ற
நம்பிக்கை இல்லாமை நஞ்சு
(2)

நஞ்சென்று கண்டபின்னும் நாடிடும் தீச்செய்கை
கொஞ்சமாய்க் கொல்லும் குடி
(3)

குடிக்கும்முன் அஞ்சும் குடித்தபின் விஞ்சும்
குடியால் அழியும் குணம்
(4)

குணமென்னும் ஒன்றேக் குறியீடாம் மாந்தர்
பிணமானால் இல்லை பெயர்
(5)

பெயரில்லா தெய்வத்தின் பின்செல்வோர் சூட்டும்
பெயர்போல்தான் எத்தனைப் பேச்சு?!
(6)

பேச்சும் செயலும் பிழையின்றி ஒத்திருந்தால்
தீச்சுடராய் நிற்பார் தெளி
(7)

தெளிந்த மனத்தோடு செய்கின்ற யாவும்
வெளிப்படக் காண்பர் வியந்து
(8)

வியந்து வியந்து மிரண்டிட வேண்டாம்
உயர்ந்திடலாம் நீயும் உணர்
(9)

உணர்ந்து நடப்போர்க்கே ஊழ்வினை தீரும்
நினைந்துன்னுள் நீக்கிடு நஞ்சு
(10)

26/02/2022

பிஞ்ச செருப்பால

 


பிஞ்ச செருப்பால
.........பின்னால போட்டாதான்
நஞ்ச விதைக்கின்ற
.........நாதாரி- அஞ்சுவான்
வாயத் திறந்தான்னா
.........வாயிலேக் குத்துவிட்டு
நாயப் பதம்பார்த்தா நன்று!
 
போட்டப் பணமெடுக்கப்
.........போராடும் காலத்தில்
காட்டான் கருவாயன்
.........காட்டுகிறான்- சேட்டை
அவனிவன் என்றே
.........அவன்பேசும் வாய்க்குள்
அவசியம் வைக்கனும் ஆப்பு!
 
என்ன படமெடுத்தால்
..........என்னவாம் வெண்ணைக்கு?
தன்னை நினைச்சானோ
..........தாதான்னு- மொன்னநாயி
நல்ல படத்தையெல்லாம்
..........நாக்கூசத் திட்டுகிற
சின்னப் பயபுள்ள சீ!
 
படைப்பைக் குறைசொல்லிப்
..........பாடுகிற நாயைத்
துடைப்பம் உடையபின்
...........தூக்கிப்- புடைத்தால்
திறப்பானா சொல்லுங்கள்
............தீவாயை மீண்டும்
திறந்தால் தரவேண்டும் சேர்த்து!
 
✍️செ. இராசா

அடிதடி வெண்பா



கட்டுனவள் சண்டைக்கே
.........காரணம் கிட்டலையாம்
முட்டிய சண்டையின்
‌‌...... ..மூலம்யார்- சுட்டணுமாம்
விட்டேன்னா மூஞ்சியில்
‌‌.........வேகமாக் கொட்டிடும்
பட்டுன்னு போயிடு பார்த்து




ஊடலை நீக்க உதவுகின்ற -------------- வெண்பாக்கள் நிகழ்விற்காக




போதை தலைக்கேறி
........போகின்ற காளையா?
பாதை தடுமாறிப்
.........பாய்ந்துவிழும்- பேதையா?
சீதையாய் நீயெந்தென்
........சிந்தைக்குள் நிற்கையில்
கோதையர்பின் போவேனா கூறு?!

நாட்பது வந்ததுமே
........நாய்போல ஆனேனா?
கேட்பார் உரையெல்லாம்
........கேட்டென்னைச்- சாட்டாதே
எம்பது வந்தாலும்
.......இப்படித்தான் என்றைக்கும்
உம்பாதம் தாங்கும் உடல்!

✍️செ. இராசா

25/02/2022

நான் இராஜா

 


உரிமை என்பது.....
நாம் எடுத்துக் கொள்வதில்..
ஆம்...இக்கணம் நான் இராஜா!

24/02/2022

நீங்களே சொல்லுங்கள்!

பாராட்டின் உச்சத்தில்
பொசுக்கென்று வருகிறது
பொறாமை

இப்படி நேற்றைய நாளில் குறுங்கவி ஒன்று பதிவு செய்திருந்தேன்.

இதில் யாருக்கென்று சொல்லவில்லை? படிப்பவர்களிடமே விடப்பட்ட முடிவு அது.
மேலும், அதில் ஒரு சிலேடையும் இருந்தது.
எத்தனைபேர் கவனித்தீர்களோ?!

பொசுக்கென்று- வேகமாக
பொசுக்கு என்று- சுட்டுவிடும் நோக்கில்

சரி அதற்கென்ன இப்போ...அதானே? கவிதை பிறப்பதென்பது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏதோ ஓர் உள்ளுணர்வின் அல்லது அழுத்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். அதற்கான காரணத்தை படைத்தவனே அறிவான். அதை நாமாக கேட்டாலொழிய யாரும் சொல்வதில்லை. அப்படி இக்கவிதை பிறந்ததற்கான காரணமும் ஓர் அழுத்த வெளிப்பாடே. அதைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இப்பதிவை வழங்குகின்றேன்.

சமீபத்தில் சங்க இலக்கியம் சார்ந்த ஒரு குழுவில் எனது இரண்டு கவிதைப் பதிவுகளைப் போட்டேன். எனக்கே மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதாவது மிகக்குறைந்த நேரத்திலேயே 300 விருப்பக்குறியீடுகள், 100க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள், 100+ பகிர்வுகள் என்று சென்றுகொண்டே இருந்தது. அட... இந்தக்காலத்தில் இலக்கிய கவிதைகளை இப்படிக் கொண்டாட ஒரு தளம் உள்ளதே என்று மிகவும் வியந்தேன். அந்த ஆர்வத்தில் அதே போன்ற மூன்றாவது பதிவு போட்டால் அதை நிராகரித்தார்கள்.. தொடர்ந்து மூன்று முறை போட்டும் நிராகரித்தார்கள். இவ்வளவிற்கும் அவற்றில் எந்தத் தவறான படமும் எழுத்துகளும் இல்லை. காரணமும் கூறவில்லை.

ஒரு புதிய நபர் வளர்வதை அங்கேயுள்ள நிர்வாகிகளே விரும்பவில்லையென்று அப்போதுதான் புரிந்துகொண்டேன். பிறகென்ன அந்தக் குழுவை விட்டு நீங்கி வந்துவிட்டேன். மறுபடியும் ஆட்கள் குறைந்த என் களத்தில் எனக்கான மதிப்புமிக்க உறவுகளுக்கும் மட்டும் டீயாற்ற வந்துவிட்டேன். இதுதான் இந்தக் குறுங்கவிக்குப்பின் உள்ள சோகமான முன்னுரை.

ஆமாம்.....நாம் ஏன் ஒரு சங்க இலக்கியத்திற்கென்று பிரத்தியேகமான பக்கம் ஆரம்பிக்கக்கூடாது?!

நீங்களே சொல்லுங்கள்!

இலங்கைக் கம்பளை முருகனுக்காய்

 


சங்கத்தமிழ் கண்டத் தமிழனை
பொங்கும்கடல் கொண்டப் பொழுதினில்
வந்துக்கரம் தந்தத் தலைமகன்
…........................................வடிவேலன்!
எங்கும்தமிழ்ச் சங்கம் பரவிட
எங்கள்குலம் எங்கும் உலவிட
குன்றில்உயர் குன்றில் உறைபவன்
..........................................கதிர்காமன்!
பண்டைத்தமிழ் பண்ணில் இசைந்திட
அண்டைக்குலம் எல்லாம் அசந்திட
இன்றைக்கருள் செய்யக் குமரனைத்
............. .......................தொழுவோமே!
கொச்சைத்தமிழ் எங்கும் களைந்திட
இச்சைக்குணம் இல்லா தொழிந்திட
அச்சன்குரு அன்புச் சரவணன்
............,.........................அருள்வானே!
............,..........................அருள்வானே!
............,..........................அருள்வானே!
 
மலையகம் காக்கவந்த வேல்முருகா!
மாநகர் கம்பளையின் மால்மருகா!
மூவினம் போற்றுகின்ற ஓம்முருகா!
பாரினம் யாவருக்கும் ஓர்- முருகா!
வேல்முருகா ஐயா வேல்முருகா
எங்களை ஆளுகின்ற வேல்முருகா
வேலாயுதா ஐயா வேலாயுதா
கம்பளை ஆளுகின்ற வேலாயுதா
 
 
கோடிநெஞ்சில் குடிகொண்ட
......... எங்கள் சண்முகா
நாடிவந்தோர் குறைதீர்க்கும்
...........ஆதி நாயகா
வேண்டிடுவோர் பிணிநீக்கும்
...........எங்கள் வேலவா
மீண்டிடவோர் வரம்வேண்டும்
..........ஞான பண்டிதா
ஞாலமெல்லாம் அருள்செய்யும்
...........எங்கள் குருபரா
ஞானமில்லார் மனம்மாற்றும்
..........ஞால பாலகா
காலமெல்லாம் புகழ்ஓங்கும்
..........சூர வேலவா
ஆசையில்லா நிலையின்றி
..........எம்மைக் காக்கவா
(வேல்முருகா ஐயா)
 
பழனியில் ஆண்டியான பாலகனே!
செந்தூரில் வென்றகிரு பாகரனே!
பரங்குன்றில் தெய்வயானை கொண்டவனே!
குருவாகி சுவாமிமலை நின்றவனே!
திருத்தணியில் வள்ளியினை ஏற்றவனே!
பழமுதிர்ச் சோலைவாழும் ஆண்டவனே!
எங்கள் கம்பளையை ஆளுகின்ற வேலவனே
எங்கள் கம்பளையை ஆளுகின்ற வேலவனே
(வேல்முருகா ஐயா)
அரோகரா... அரோகரா.... அரோகரா
 
✍️ செ. இராசா.
நன்றி: இலங்கை சுதாகரன், எஸ்.கணேசன் & சதீஸ், கம்பளை.

23/02/2022

புதிரில்லை போய்ப்பார் பொழப்பு

 இலைகள் துளிர்க்காமல்
..........எல்லாம்வீண் ஆச்சு
தலைநீட்டும் தாமரைக்கோ
..........தண்ணீர்வந் தாச்சு
கதிரவனின் பேரொளியால்
..........கையுயர்ந் தாச்சு
புதிரில்லை போய்ப்பார் பொழப்பு!

22/02/2022

நிர்வாணம்!

 


 

 உள்ளதை எல்லாம் களைவதல்ல;
அல்லதை எல்லாம் களைவதே..
நிர்வாணம்!

பிறந்த மேனியைத் திறப்பதல்ல;
இறந்த அகந்தையை புதைப்பதே..
நிர்வாணம்!

காமப் போரின் ஆயுதமல்ல;
ஞான வேரின் அடையாளமே...
நிர்வாணம்!

மறைபொருளைக் காட்டுவதல்ல;
மறை பொருளாய் மாறுவதே...
நிர்வாணம்!

ஆதி நிலையில் தொடர்வதல்ல;
சமாதி நிலையில் முடிவதே‌‌...
நிர்வாணம்!

✍️செ. இராசா

ஆமா அவரு யாரு --- பாடல்

 #ஆமா_அவரு_யாரு_பாடல்

அங்கே இங்கே ஆட்டைய போட்டு
மீட்டருக்கு மேட்டரப் போட்டு
சில்லறைக்கி சிரிக்குமொரு கவிஞரு- அவரு
வச்சுசெய்யும் அரசருக்கே அரசரு...
ஐயோ அம்மா அவருபெரிய கவிஞரு- அவரு
வச்சுசெய்யும் அரசருக்கே அரசரு

ஊமைக் குத்துவிட்டா காயம் கிடையாது
உள்ள உருவிட்டா ஒன்னும் தெரியாது
பொழக்க வழியின்றிப் பொறுக்கி எடுப்பாரு
புதுசா வருவோரின் பொழப்ப கெடுப்பாரு

ஐயோ அம்மா அவருபெரிய கவிஞரு- அவரு
வச்சுசெய்யும் அரசருக்கே அரசரு

புதிய நடையென்று பூவை வப்பாரு
மரபின் உடைநீக்கி மாறி நிப்பாரு
புகழைத் தக்கவைக்க போங்கு செய்வாரு
கபிலர் நான்தான்னு காசு கேப்பாரு

ஐயோ அம்மா அவருபெரிய கவிஞரு- அவரு
வச்சுசெய்யும் அரசருக்கே அரசரு

ஆமா அவரு யாரு?

நேரம் வரும்போது சொல்றேன்....

✍️செ. இராசா

21/02/2022

இட்லி --- தோசை

 


 #இட்லி
தன்னைச் சுருக்கி
குளிக்குள் பதுங்கி
ஆவி பிடிக்கிறது!

#தோசை
கால்களைப் பரப்பி
எண்ணையில் குளித்து
மேனி சிவக்கிறது!

#இட்லி..
ஒரு குழி வாய்க்காக
ஒரிடம் நிற்கும்
ஏழை!

#தோசை...
ஒருகுழி வாயில்
ஊரையே வளைக்கும்
பணக்காரன்!

#இட்லி_
உலக உணவில்
முதலிடம் பிடித்த
நல்லவன்!

#தோசை_
ருசியின் தேவைக்காய்
எண்ணையோடு சேர்ந்த
கெட்டவன்!

இப்போது சொல்லுங்கள்?!
இங்கே நல்லவனுக்கெங்கே விலை!

✍️செ. இராசா

பாராட்டின் உச்சத்தில்
பொசுக்கென்று வருகிறது
பொறாமை

வார்த்தைகளில் என்ன இருக்கிறது



வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்பவரா நீங்கள்? எனில் உங்களுக்கான பதிவுதான் இது.

விளைநிலத்தின் பெருமையை முளைவிடும் பயிர் காட்டும். நம் குலத்தின் பெருமையை பேசுகின்ற வாய்ச்சொல் காட்டிவிடும் என்கின்ற வள்ளுவனார் குறள் பாருங்களேன்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
-----குறள்- 959.

நன்றாக யோசித்துப்பாருங்கள். கோபத்தின் உச்சத்தில் சில பேர்களின் வாயில் அதிகபட்சமாக வரும் கெட்ட வார்த்தைகள் எருமை, நாய்...என்று மிருங்களின் பேர்கள்தான். ஆனால் அதுவே சிலருக்கோ, சாதாரணமாகவே குழந்தைகளைக் கொஞ்சும்போது கூட சனியனே, பிசாசே, கொன்றுவேன்....என்று கொட்டும் பாருங்கள்....அப்பப்பா..காதில் கூவம் வந்து பாயும்.

செட்டிநாட்டுப் பக்கம் கவனித்தீர்களேயானால் "#அரசாளுவான்" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதை உள்நோக்கி கவனித்தால் "அரசை ஆள்பவனே" என்கின்ற அர்த்தமாக இருக்கும். ஆமாம் இந்த வார்த்தை எப்படி திட்டுவதாகும். உண்மைதான், இங்கே வருகின்ற வார்த்தைகளில் சப்தம்தான் கோபத்தின் வெளிப்பாடே தவிர மறந்தும் அவச்சொல்கள் வந்துவிடக் கூடாது என்கின்ற பொறுப்புணர்ச்சியே மிகுந்து காணப்படும்.

இப்படி ஒவ்வொரு வார்த்தைகளையும் சற்றே உள்நோக்கியபோது, இந்த ராஸ்கோல் என்கின்ற வார்த்தையின் பொருள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம்.. அது ஆங்கிலத்தில் புட்டத்தைக் குறிக்கும் வார்த்தையான #ஆஸ்ஹோல் என்பதன் மருவுச் சொல்லே. அடடா......இப்படி நம்மோடு கலந்த பல வார்த்தைகள் நம்மை நம் கலாச்சாரத்தையே மாற்ற முயல்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

#பாளையத்துக்காரர்கள் (பாளையம்- படையினர் தங்கும் பாசறை) என்ற ஒரு சொல்லைச் சொல்லியே தெலுங்கர்கள் நம்மை ஆண்ட வரலாற்றை வீரபாண்டிய கட்டபொம்முலு கதையிலும் மறைத்தார்களே அது ஏன்? #தமிழர் என்கின்ற சொல்லிருக்க இன்னும் #திராவிடர் என்று சொல்வது ஏன்? மத்திய அரசு என்கின்ற சொல்லிருக்க அது ஒன்றிய அரசாக மாறியது ஏன்? இப்படி அரசியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் அன்றாட வாழ்க்கையிலும்கூட அதே நிலைதான்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157) மறந்து விடாதீர்.

எனில் என்ன செய்யலாம்? ம்ம்...வாங்க வழிக்கு...அரசியல் சொல்லாடல்களை நாம் அப்படி எளிதாய் மாற்றிவிட முடியாதுதான். ஆனால் குறைந்தபட்சம் புரிந்து கொள்ளலாம். அதேவேளையில் நாம் எழுதும் அல்லது பேசும் சொற்களில் அறச்சொல்லோ அவச்சொல்லோ வராமல் பேச முயற்சிக்கலாமே .ஆமாம், எங்கே தொடங்குவது? நம்மில் இருந்துதான். நம் குடும்பத்தில் இருந்துதான்....வாங்க மாறுவோம்...மாற்றுவோம்!!!

செ. இராசா

அரபிக் குத்துங்குறான்

 

அரபிக் குத்துங்குறான்
அதுதான் கெத்துங்குறான் (2)
அரபிட்ட போயி கேட்டால்
அடிக்க ஓடிவர்ரான்..
 
யல்லா யல்லா ஹபிபீ தமிழ்நாடு
எல்லாருமே ஓடிவந்து குத்துப்போடு

திருக்குறள் ---- வள்ளுவர் திங்கள் - 199



🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#அறத்துப்பால்
முப்பாலில் வைத்த முதல்பாலைக் கற்போர்கள்
தப்பாமல் நிற்பார் தனித்து
(1)

#பாயிரம்
முன்னுரைபோல் வைத்த முதல்-இயல் பாயிரமே
தன்னுரைபோல் நிற்கின்ற சான்று
(2)

#இல்லறவியல்_துறவறவியல்
இல்லத்தில் வாழ்வோர்க்கும் இல்லம் துறந்தோர்க்கும்
நல்லறம் காட்டுகின்ற நூல்
(3)

#ஊழியல்
என்ன முயன்றாலும் என்னயி(து) என்போர்க்காய்
முன்வினை ஊழ்சொன்ன நூல்
(4)
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#பொருட்பால்

#சமூகவியல்_அரசியல்
தனிமனிதன் தாண்டி சமூகஅறம் காக்க
புனைந்ததோர் பாலே பொருள்
(5)

மன்னரின் ஆட்சியோ மக்களின் ஆட்சியோ
சொன்னபொருள் மாறாத சொல்
(6)

#நட்பியல்
நன்-நட்பா தீ-நட்பா -நம்-நட்பு யாதென்று
நன்வழியைக் காட்டுமிந்த நூல்
(7)

#குடியியல்
உழவுத் தொழில்சொல்லி ஊணளவைச் சொல்லி
ஒழுக்கமுறை சொல்லுமிந்த நூல்
(8.)
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
#காமத்துப்பால்
அறத்தால் பொருளீட்டி ஆவதுதான் என்ன?
உறவாட வைத்ததோர் பால்
(9)

#களவியல்_கற்பியல்
மணமாகும் முன்;பின் வரும்காதல் நெஞ்சம்
இணங்குவதைச் சொல்லும் இனிது
(10)