31/12/2023

நகம்




விரல்நுனியைப் பாதுகாக்க
இயற்கையளித்த கவசங்களே
நகங்கள்...
அதனால்தான் என்னவோ
விரல்மீறி வளர
கவசங்களுக்கு அனுமதி இல்லை!

இறந்த செல்கள் எழுப்புகின்ற
கல்லறைத் தூண்களே
நகங்கள்...
அதனால்தான் என்னவோ
வர்ணங்கள் உதிர்ந்தால்
புதிய முலாம்கள் பூசுப்படுகின்றன!

பலருக்கும் பல்லிடுக்கே
நகவெட்டியானதால்
நகவெட்டிகள் எல்லாம்
மௌனவிரதத்தில்...

இன்றைக்கும் நகயிடுக்கே
கிள்ள உதவுவதால்
அடங்காதோர் காதெல்லாம்
ஆசிரியர் கைகளுக்குள்...

நகங்களின் தேவையென்பது
சும்மா சொறிவதற்கு மட்டுமல்ல...
அக விளையாட்டை
ஆவணப் படுத்துவதற்கும்தான்
புரியவில்லையா?!
எனில்...
வாத்சாயனரை வாசியுங்கள்!
அர்த்தவீரரை நேசியுங்கள்!
கீறலின் மொழி புரியும்; இந்தக்
கிறுக்கலின் ஒளி தெரியும்!

✍️செ. இராசா

கரு உதவி: மகன்

29/12/2023

எண்ணம்போல் வாழ்வு

 குறள் அந்தாதி


எண்ண அலைச்சுழலின் எண்ணிக்கை சீரானால்
வண்ண மயமாகும் வாழ்வு
(1)

வாழ்வை வளமாக்கும் மன்றத்தில் கற்றறிந்து
ஆழ்மனதை நன்றா(க்)க ஆய்
(2)

ஆய்ந்தறிந்து பார்க்காமல் அப்படியே ஏற்பவர்கள்
சாய்ந்திடுவர் மீண்டும் தவிர்த்து
(3)

தவிர்க்க முடியாத் தவறினைக் கூட
தவிர்க்க உதவும் தவம்
(4)

தவம்செய்வோர் வாழ்வில் தனித்துவம் கூட
உவமையாய்க் கூறும் உலகு
(5)

உலகியல் யாவும் உவகையாய்த் தோன்ற
கலங்காமல் செல்வீர் கடந்து
(6)

கடக்கும் வினைகள் கடந்துதான் போகும்
நடப்பதை ஏற்று நட
(7)

நடப்பதை ஏற்க நமக்குள்ள யுக்தி
திடம்தரும் யோகா தெளி
(8)

தெளிவுடன் நோக்கத் தெரிந்திடும் பாதை
ஒளிதரும் நற்தவம் ஊற்று
(9)

ஊற்றெனத் தோன்றும் உயர்கவிபோல் நம்வாழ்க்கை
ஏற்றமுற நல்லதையே எண்ணு!
(10)

✍️செ. இராசா

23/12/2023

 நீர் இருந்தால்
பாசம் பிடிக்கிறது..
நீ இருந்தாலும் பாசம் பிடிக்கிறது

விருப்பீடு போடாமல் விலகிநீர்ச் சென்றாலும்

 

விருப்பீடு போடாமல் விலகிநீர்ச் சென்றாலும்
.......வெறுப்போடு காண வில்லையே!
கருத்தீடு போடாமல் கடந்துநீர்ச் சென்றாலும்
.......கடுப்போடு காண வில்லையே!
அரும்பாடு காணாமல் அகன்றுநீர்ச் சென்றாலும்
......அதன்பாடு பேச வில்லையே!
வரும்பாட்டைப் பாராமல் வளைந்துநீர்ச் சென்றாலும்
.....வரும்பா(ட்)டும் நிற்ப தில்லையே!
 
என்றும் தொடரும்...
 
✍️செ. இராசா

21/12/2023

கண்ணகியின் காதல்


(முதலாம் பிரிவில்)

காதலென்றால் என்னவென்று
.......கற்பித்த நாயகனே
வேதனையை தந்தெம்மை
.......விட்டாலும்- சோதனையாய்
என்றைக்கும் மாறாத
.......எம்காதல் உண்மையென
நன்குணர வந்திடுமோர்
.......நாள்!
(1)

வயதுக்கு வந்ததுமே
.......வந்தெம்மைச் சேர்ந்து
நயமோடு தந்தீர்நல்
........வாழ்வு- வியப்புறவே
ஆண்டுசில போனவுடன்
........ஆர்வமில்லை என்பதுபோல்
வேண்டுமெனச் சென்றீரோ
.........வேறு?
(2)

கருநீலக் கண்ணழகி
......கண்ணகிதான் என்றீர்
கருத்தபெண்ணைக் காதலியாய்க்
......கண்டீர்- விருப்பமுற
கட்டியவள் நெஞ்சத்தைக்
........காயப் படுத்திடவே
விட்டுவிடத் தோன்றியதோ
.....வீடு?
(3)

மாதவம் செய்தவர்க்கே
....மாவரம் கிட்டுமெனில்
மாதவி பெற்றவரம்
....மாவரமே- பாதகியாய்
மாதவம் ஏதுமின்றி
.....மாவரம் பெற்றிருந்தும்
மாதவனை ஏன்தொலைத்தேன்
.....நான்?
(4)

காவிரிபூம் பட்டினத்தில்
...கைபிடித்த அந்நாளை
ஓவியமாய் எந்நெஞ்சில்
...ஒடவிட்டால்- தாவிவரும்
சந்தோஷம் போலதுபோல்
... சந்தோஷம் வேறுண்டா?
சிந்திக்கத் தோன்றும்
.... சிலிர்ப்பு!
(5)

போய்வாரேன் என்றீரே..
....போனீரே வந்தீரா?
தேய்பிறையாய் தேய்ந்தேனே
....தேடிநீர்ப்- பாய்ந்தீரா?
ஆனாலும் நான்கொண்ட
...அன்பென்றும் மாறாது!
தானாக நீயுணர்வாய்
....தான்!
(6)

ஆடல் கலைகாண
....ஆர்வமுடன் சென்றநீர்
ஆடல் அழகியுடன்
.....ஆர்வமுடன்- கூடுவதாய்
பார்த்தவர்கள் சொல்கையில்
.....பைத்தியம்போல் நானாகி
வேர்த்து விறுவிறுத்தேன்
......வீழ்ந்து!
(7)

என்னை மறந்தாலும்
...என்னைத் துறந்தாலும்
என்னன்பு மாறாமல்
...எப்போதும்- உன்நினைவைத்
தூக்கிச் சுகங்காணும்
...தொந்தரவு செய்யாது
நோக்கி நகர்கின்றேன்
....நொந்து!
(😎

அன்புசெய் அன்பர்க்கே
...அன்பென்றால் அன்புண்டோ?!
அன்புசெய் அன்பர்கள்
...அன்பிலார்- என்றாலும்
அன்பில் குறைவில்லா
...அன்புடையார் என்றானால்
அன்பிலாரும் வைப்பரே
...அன்பு!
(9)

கெட்ட சகவாசம்
.....கேடுதரும் என்றறிந்து
விட்டு விலகியின்று
.....வீட்டுக்கு- பட்டென்று
கட்டிய என்னோடு
.....கைகோர்க்க வந்தாலும்
நட்டம் உமக்கில்லை
.....யே!
(10)

✍️செ. இராசா

(எழுதத் தூண்டியவர் பறை ஆசான் திரு. நிர்மல் அவர்கள்)

18/12/2023

புதிதாய்த் தோன்றும் விடியல்

 


புதிதாய்த் தோன்றும் விடியல்
இனிதான் ஆரம்பம்
புதிராய்ப் பூக்கும் முறுவல்
இனிதான் ஆரம்பம்

இனிதாய்த் தோன்றும் தழுவல்
இனிதான் ஆரம்பம்
கனியாய் இனிக்கும் நழுவல்
இனிதான் ஆரம்பம்

கணத்தைக் கடக்கும் ஊடல்
இனிதான் ஆரம்பம்
கனத்தை இழக்கும் கூடல்
இனிதான் ஆரம்பம்

உடலை மறக்கும் உணர்வு
இனிதான் ஆரம்பம்
கடலைக் கடக்கும் களிப்பு
இனிதான் ஆரம்பம்

கனவை உடைக்கும் நனவு
இனிதான் ஆரம்பம்
நினைவைக் கொடுக்கும் நிகழ்வு
இனிதான் ஆரம்பம்

இனிதான் ஆரம்பம்..
இனிதான் ஆரம்பம்..

✍️செ. இராசா

(சூழலுக்காக எழுதியது... Title song)

17/12/2023

செல்ஃபி எடுக்காதே

 


செல்ஃபி எடுக்காதே
......சேட்டைநீ பண்ணாதே
குல்ஃபி கொடுக்காதே
......குத்திடுவேன்- சொல்லிட்டேன்
வாயக் குவிச்சுவச்சு
......வக்கணையா போஸ்கொடுத்து
மாய வலைபின்னாய்
.....வந்து!

✍️செ. இராசா

16/12/2023

பறை வணக்கம்


 

பறையிசைத் தாளங்கொண்டே பாட்டிசைக்க
தமிழன்னைத் தாழ்வணங்கித் தொடங்குகின்றோம்...

குறையேதும் வந்திடாமல் காத்திடவே
ஆசானை இங்கிருந்தே வணங்குகின்றோம்..

தோல்கட்டித் தட்டித்தட்டிக் கொட்டுகின்ற
தோழர்கள் தோள்கொடுக்கப் பாடுகின்றோம்....

கைதட்டித் தட்டித்தட்டி ஊக்குவிக்க
வந்துள்ள சபையோர்களை வேண்டுகின்றோம்..
வந்துள்ள சபையோர்களை வேண்டுகின்றோம்..(2)

15/12/2023

குருவியின் சாவிற்கு வருந்துபவர்தான்
கோழியின் சாவை விருந்தென்கிறார்...

கட்சிகள் மாறினாலும்

 


கட்சிகள் மாறினாலும் இந்தக்
காட்சி மாறலை...
திட்டங்கள் கூடினாலும் எந்தத்
தீர்வும் கிடைக்கல...

இத்தனை காலமாயும் இங்கே
எதுவும் மாறலை..
எத்தனை காலமாகும் இன்னும்
யாரும் பேசலை...

✍️செ‌. இராசா

எப்படி இருந்த நாம இப்ப

 

எப்படி இருந்த நாம இப்ப
எப்படி இருக்குறோம்?
எப்படி இருந்த நாம இப்ப
எப்படி இருக்குறோம்?

எப்படி இப்படி மாறினோம்னு
யாரு நினைக்கிறா?! இங்கே
யாரு நினைக்கிறா?!

யாரு நினைக்கிறா?! இங்கே
யாரு நினைக்கிறா?!

(1)
சேர சோழப் பாண்டியனா
ஆண்ட தாருங்க?!
ஆண்ட தாருங்க?
பாரி காரி ஓரியென
ஈந்த தாருங்க?
ஈந்த தாருங்க?

இப்படி
வாழ்ந்த பெருமைப் பேசி பேசி
பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க!

பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க!
அப்படி
வாழ்ந்ததைதப்போல் மீண்டும் வாழ
வழியைச் சொல்லுங்க? நல்ல
வழியைச் சொல்லுங்க!
வழியைச் சொல்லுங்க? நல்ல
வழியைச் சொல்லுங்க!


(2)
நீரு மோரு கூலு கஞ்சி
குடிச்சதாருங்க?
குடிச்சதாருங்க?
நூறு கிலோ கல்லைத் தூக்கி
போட்டதாருங்க?
போட்டதாருங்க?

இப்படி
பழையக் கதையப் பேசிப்பேசி
பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க

பயனுமென்னங்க?; ஒரு
பதிலைச் சொல்லுங்க


அப்படி
பழைய நிலையை அடையும்னா
துரித உணவெல்லாம்; அடத்
தூக்கிப்போடுங்க; அடத்
தூரத் தள்ளுங்க..

தூக்கிப்போடுங்க; அடத்
தூரத் தள்ளுங்க..

14/12/2023

சொர்க்கமுனா என்னவென்று

 (#பாடலின்_சூழல்:
புதிதாகத் திருமணமான கணவன் ஒரு கருத்து மோதலில் தன் மனைவியைப் பிரிந்தநிலையில் பாடுவது)

சொர்க்கமுனா என்னவென்று
சொல்லாமச் சொன்னவளே...
அர்த்தமுள்ள சொந்தமென்று
அன்பாக வந்தவளே...

என்னவென்று சொல்லிடுவேன்?
எந்தன் நெஞ்சில் எரிமலையே...
என்னவென்று தேற்றிடுவேன்
உண்மை ஏதும் புரியலையே...

துணையாக வந்தவுன்னை
துறந்துவிட நினைச்சேனே..
மனையாக வந்தவுன்னை
மறந்துவிட நினைச்சேனே

உலகம் போற போக்குலதான்
ஓடத்தெரியவில்லை...
சுழலும் வேக ஆத்துல தான்
நீந்தத்தெரியவில்லை...

ஐயம்வெரி சாரி சாரி
துப்புதிந்த உலகம் காறி...

✍️செ. இராசா

09/12/2023

நாமெல்லாம் சாகனுமா?

 


ஞாயிறு வந்தாலே
......நாமெல்லாம் சாகனுமா?
வாயிலே போகத்தான்
.....வந்தோமா?- போயினிமேல்
கொல்லாதீர் எனச்சொல்லிக்
....கோட்டைக்கே போனாலும்
எல்லோர்க்கும் சாவுதான்
......இங்கு!

பாடல்: நத்தம் விஸ்வநாதன் ஐயா



பல்லவி:

அம்மாவோட ஆசிகொண்ட தலைவரு
-அவரு
அண்ணாதிமு கழகத்தோட இளைஞரு
சும்மாகூட சோர்ந்திடாத மனிதரு
-அவரு
தென்னகத்தில் பிறந்துவந்த புனிதரு

நத்தம் விஸ்வநாதர்- அவர்
நித்தம் உழைக்கும் மாந்தர்!
நத்தம் விஸ்வநாதர்- ஒரு
குத்தம் இல்லா வேந்தர்!
 

சரணம்:

தன்னை முன்னிறுத்தி தனியாகப் போனதில்லை...
உண்மை வழிநிறுத்தி உயருமெங்க அண்ணாச்சி...
கண்ணை மூடிக்கிட்டு கடமையவர் செஞ்சதில்லை..
கட்சி விதிப்படியே நடக்குமெங்க அண்ணாச்சி‌‌...

தொகுதி உயர்ந்திடவும் துணையாக நிக்கிறாரு..
தகுதி இருக்கையிலும் தூணாக நிக்கிறாரு..
கழக ஒற்றுமைக்கும் காவலாக நிப்பவரு
பழகும் விதத்திலயும் பாசத்தைப் பொழிபவரு

நத்தம் விஸ்வநாதர்- அவர்
நித்தம் உழைக்கும் மாந்தர்!
நத்தம் விஸ்வநாதர்- ஒரு
குத்தம் இல்லா வேந்தர்

பாராட்டி சீராட்டி




பாராட்டி சீராட்டி பாலூட்டி சோறூட்டி
சோகத்தைப் பிள்ளைக்கிச் சொல்லாட்டி...
கெட்டிடத் தோதுண்டு
கெட்டிடத் தோதுண்டு
கெட்டிடத் தோதுண்டு கேட்டுக்க...
(1)

காலாட்டி காலாட்டி கண்மூடி எப்போதும்
வாலாட்டும் பிள்ளைக்கிப் போடாட்டி
கெட்டிடத் தோதுண்டு
கெட்டிடத் தோதுண்டு
கெட்டிடத் தோதுண்டு கேட்டுக்க...
(2)

வாதாடி வாதாடி வக்கீல்போல் வாதாடி
போராடி நின்னாக்க கைகொட்டி
தட்டிட வாய்ப்புண்டு
தட்டிட வாய்ப்புண்டு
தட்டிட வாய்ப்புண்டு சாதிக்க
(3)
............
✍️செ. இராசா


07/12/2023

எல்லா மனையும் மனையல்ல

 


எல்லா மனையும் மனையல்ல வெள்ளநீர்
இல்லா மனையே மனை

✍️செ. இராசா

(பட மீம்ஸ் உதவி: இணையம்)

மாறிமாறி ஆண்டபின்னும்

 


மாறிமாறி ஆண்டபின்னும்
.....மாற்றமேதும் இல்லையே
காறிகாறி துப்பினாலும்
......கண்டுகொள்ள வில்லையே
ஏறிஏறி வந்தவெள்ளம்
.....ஏரிபோல சூழவே
ஊறிஊறி ஈரமாகி
.....உண்மைகூட உறையுதே!

✍️செ. இராசா

நிற்கவே இல்லை
நன்றாக வடிகிறது
மக்களின் கண்ணீர்

05/12/2023

அம்மா அம்மா

 


பல்லவி

அம்மா அம்மா அம்மா அம்மா
எங்க தெய்வம் நீரே அம்மா..
அம்மா அம்மா அம்மா அம்மா
உண்மை வெல்ல வேண்டும் அம்மா....

சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே...
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)
 

சரணம்_1

எரியும் நெருப்பில் செந்தீ பற்றி
உடலை உதறி உயிர்நீக்கும்
எரிஞ்ச சாம்பல் பொடியில் மீண்டும்
பீனிக்ஸங்கே பறந்துவரும்..

நாடு இருக்கும் நிலைய பாத்து
உடனே நீங்க வந்திடனும்...
எதிரி கண்ணில் விரலை நீட்டி
குடையும் அழகை கண்டிடனும்..

ஊரு இங்கே ரெண்டு பட்டா
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
கழகத்துக்குள் கலகம் நடந்தா
யாருக்கிங்கே சந்தோசம்?

அம்மா ஆட்சி நடப்பதற்கு
வணங்குகிறோம் மண்ணைத் தொட்டு..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)
 

சரணம்_2

அண்ணன் எப்போ காலி ஆவான்
திண்ணை எப்போ காலி ஆகும்
என்றுவாழும் கூட்டமிங்கே
காலை ஊன்ற பார்க்குதிங்கே

பொய்யச் சொல்லி புரளியச் சொல்லி
வெல்லும் அந்த கூட்டத்துக்கு..
உண்மை சொல்லி உள்ளத சொல்லி
மீண்டும் வெல்ல வேண்டுமுங்க...

அம்மாதந்த திட்டம் போல
நல்ல திட்டம் மேலும் செய்ய..
சத்தியமா நம்மைப் போல
வேற யாரும் இங்கே இல்ல..

மீண்டும் அம்மா ஆட்சி செய்ய
வேண்டுகிறோம் வா தாயே...

தெய்வமெங்கத் தெய்வத்தாயே
சிங்கம் போல வா தாயே...
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)
 

பல்லவி

சிங்கம் போல ஆண்ட தாயே..
தேடுகிறோம் தெய்வம் நீயே
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..
செய்வீர்களா....என்றீரே?
தெய்வத்திடம் சென்றீரே..

(அம்மா அம்மா...)

✍️செ. இராசா

04/12/2023

அம்மா



முத்தையா பிள்ளைக்கும்
சகுந்தலா அம்மைக்கும்
மூத்த பிள்ளையாக
முத்தான பிள்ளையாக
தேவகோட்டை மாநகரில்
தேவதையாய்ப் பிறந்துவந்த
என்னருமைத் தாய்பற்றி
இங்கேநான் பதிந்திடவே
இயன்றவரை முயலுகின்றேன்..
ஈந்தவளை நினைந்திடவே....

நகரத்தில் பிறந்தவளை
நரகத்தில் தள்ளளாமா?!
சிலையெனச் செதுக்கியதை
சிதைத்திட எண்ணலாமா?!
பதினெட்டே வயதுவந்த
பாவையினைக் கூட்டிவந்து
மதிகெட்டார் எல்லோரும்
மாலையினை மாற்றவைத்தார்!

வெண்ணிலாவைத் தூக்கிவந்து
தார்டின்னில் போட்டதுபோல்
தென்றலைத் திசைமாற்றி
புயலோடு விட்டது போல்
மெல்லினத் தாயவளை
வல்லினத்தில் சேர்த்துவிட
சுலோசனா அம்மாவும்
செந்தில் நாதர் வசமானாள்!

செட்டிநாட்டில் பிறந்தவளை
பட்டிக்காட்டில் விட்டதினால்
வீட்டுக்கும் ஊத்துக்கும்
ஊத்துக்கும் வீட்டுக்குமாய்
அவளோடிய தூரத்தை
ஒருவாறு கணக்கெடுத்தால்
புதுடெல்லி தூரமெனப்
பொதுவாகச் சொல்லிடலாம்!

ஒருவழியாய் இருவருக்கும்
மூன்று பிள்ளை பிறந்துவிட
மூத்தபிள்ளை இராசாவை
தேவகோட்டை அம்மாச்சிக்கும்
இரண்டாம் பிள்ளை இரமேஷை
திருச்சி அத்தைக்குமாய்
மூன்று பிள்ளையிலே
இரண்டைத் தள்ளிவிட்டு
மூன்றாம் பிள்ளையான
ஜானகிராமனை மட்டும்
பெற்றவள் வைத்திருந்து
மற்றதை நினைத்திருந்தாள்...!!!

கடிதாசி எழுதனும்னாலும்
கடிதாசியப் படிக்கனும்னாலும்
தொலைப்பேசி வருதுன்னாலும்
தொலைக்காட்சி பார்க்கனும்னாலும்
அம்மாவத் தேடித்தான்
அனைவருமே வருவாக..

தனக்கான முடிவெடுக்கத்
தனியாக விட்டதில்லை...
தமக்காக வாழ்ந்திடவும்
தாயவளும் நினைக்கவில்லை..
ஊராட்சித் தலைவராக
ஒருமுறையே ஆனாலும்
ஊர்மெச்சும் பேரெடுத்த
உத்தமிதான் எங்காத்தா...

சாதனைப் பெண்மணினா
ஜான்ஸிராணி மட்டும்தானா?
சாதாரணப் பெண்மணிக்கு
சமையலறைக் கொட்டில்தானா?

வாக்கப்பட்ட இடத்திலயும்
வாங்கிக் கட்டிக்கிட்டு
பொறந்த இடத்திலயும்
பொல்லாப்ப வாங்கிக்கிட்டு
நல்ல சாப்பாட
நாளெல்லாம் ஆக்கிப்போட்டு
தனக்காக வாழாம
பிறருக்காய் வாழ்ந்துவரும்
தாயைப்போல் யாரிருக்கா?; என்
தாயைப்போல் தாயேருக்கா....!!!

✍️செ. இராசா

முரண்கள்

 

 


மனம் விரும்புவது வெற்றியை
ஆன்மா விரும்புவது அமைதியை
இந்த வாசகம்;
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல
பிடித்ததில் பதிந்ததும்கூட..
ஆம்..
யோசித்துப் பாருங்கள்?!
இந்த வாழ்க்கையில்தான்
எத்தனை எத்தனை முரண்கள்?!

ஆரவாரமிக்கது வெற்றி
அடக்கமானது அமைதி

பேசுபொருளாவது வெற்றி
பேசாமலிருப்பது அமைதி

புகழ்ச்சியில் திளைப்பது வெற்றி
இகழ்ச்சியிலும் சிரிப்பது அமைதி

பிரபலமாக்குவது வெற்றி
சுயபலமாக்குவது அமைதி

கவிஞனாய்க் காட்டுவது வெற்றி
கவிதையாய் மலர்வது அமைதி

சொல்லி அடிப்பது வெற்றி
சொல்லாமல் வெல்வது அமைதி

சாதனையில் கிடைப்பது வெற்றி
சோதனையில் தெளிவது அமைதி

ஆர்வமிகு இலட்சியம் வெற்றி
ஆத்மார்த்த இலட்சியம் அமைதி

தோல்வியின் தோல்வி வெற்றி
வெற்றியிலும் வெற்றி அமைதி

இப்படி வெற்றிக்கும் அமைதிக்குமே
எத்தனை எத்தனை முரண்கள்?!

எங்கே இப்போது சொல்லுங்கள்
வெற்றி வேண்டுமா?
அமைதி வேண்டுமா?

✍️செ. இராசா

03/12/2023

ஜாலி வெண்பாக்கள்

  


பையன் 1
என்னடா பார்க்குற...
.....இப்படிலாம் பார்த்தீன்னா
கொன்னேப் புடுவன்டா
.....கொய்யால- சின்னவனே
என்னைத் தெரியாம
.....எங்கிட்ட வம்பிழுக்க...
என்பேர் லியோடா..
.....ஏய்!


பையன் 2
போடாடேய் போடா...
.....பொசுக்குனு போயிடு
கேடாகும்.. அப்புறம்
......கேட்டுக்க- ஓடாம
நீலியோனா நான்யாரு?
......நாந்தான்டா பேடாஸ்மா...
போலியா பேசாதே
....பொய்!

✍️செ. இராசா


பூரி

 


வார்த்த வடிவுகண்டு
.....வாயிடுக்கில் நீரூற
கோர்த்த விரல்கூடிக்
.....கொஞ்சியுள்- சேர்க்கும்முன்
செஞ்ச மசாலாவைச்
.....செல்லமாய்த் தொட்டனுப்பப்
பஞ்சாய் பறக்கும்
.....பசி!
 
பூரியெனச் சொன்னாலோ
.......போய்விடுவேன் முன்னாலே
சாரியெனச் சொன்னாலோ
........சாஞ்சிடுவேன் தன்னாலே
செஞ்சவளும் இல்லாம
.......செஞ்சிடவும் எண்ணாம
நெஞ்சமெல்லாம் உந்தன்
....... நினைப்பு!
✍️செ.இராசா