30/11/2020

 

இராவணன் ஜீனுடா
இராத்திரி மேனிடா
வீரனில் சூரன்டா
சூரன்னா யாருடா?
வாடா...வாடா...வாடா
வாடா...வாடா...வாடா

நினைச்சதைப் புடிக்க நினைக்கிற முன்னே
நிஜமென ஜெயிப்பான் சூரன்..
விதைச்சது விளைஞ்சு வெடிக்கிற முன்னே
வெடியென வெடிப்பான் சூரன்..
இறங்கிடும் மாரி இரங்கிடும் முன்னே
இடியென இடிப்பான் சூரன்..
சூட்டினை மூட்டிச் சுட்டிடும் முன்னே
சூரியன் ஆவான் சூரன்.

வாடா...வாடா...வாடா...
வாடா...வாடா...வாடா....

29/11/2020

கருப்பசாமி_பாடல்

 





#கருப்பசாமி_பாடல்

#குலதெய்வம்_போற்றுவோம்

சாம்பிராணி கமகமக்க #செங்கிடாய்க்_கருப்பன் வர்றான்..
சாட்டையொலி தடபுடல்லா எங்குல சாமி வர்றான்..
வீச்சறுவாள் மினுமினுக்க மீசைய முறுக்கி வர்றான்...
வேட்டையாடும் வேட்கையில வேகமாய் ஓடி வர்றான்...

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்
கருப்பன் வர்றான் வர்றான்
அஞ்சாத சிங்கம்போல தககதன்னு வர்றான்

சீறிவர்றான் பாரு அவன் சின்னக் கருப்பன்
பாடிவர்றான் பாரு அவன் பெரிய கருப்பன்
ஆடிவர்றான் பாரு அவன் ஆண்டிக் கருப்பன்
தேடிவர்றான் பாரு அவன் கோட்டைக் கருப்பன்..
சலக்கு சலக்கு சத்தம்பாரு சங்கிலிக் கருப்பன்
கடக்கு முடக்கு ஓசைபாரு காட்டுக் கருப்பன்
கிடுகிடுவென சிடுசிடுவென தோன்றும் கருப்பன்
கடகடவென படபடவென மாறும் கருப்பன்

சமைய கருப்பன் சந்தனக் கருப்பன்
சப்பாணிக் கருப்பன் சோனை கருப்பன்
வெள்ளைக் கருப்பன் வீரக்கருப்பன்
வல்லைய கருப்பன் மாசான கருப்பன்
அழகுக் கருப்பன் அமுத கருப்பன்
அலங்காரக் கருப்பன் ஆங்காரக் கருப்பன்
நொண்டிக் கருப்பன்‌ ஆண்டிக் கருப்பன்
முன்னோடிக் கருப்பன் மாயாண்டி கருப்பன்
ஒண்டிக் கருப்பன் ஓங்காரக் கருப்பன்
சிங்கக் கருப்பன் சண்டக் கருப்பன்
வர்றான் வர்றான் வர்றான் வர்றான்
வர்றான் வர்றான் வர்றான் வர்றான்
பதினெட்டாம் படி கருப்பன்
படிஏற்றி விடும் கருப்பன்
வாடா...கருப்பா....வாடா....கருப்பா...வாடா கருப்பா வாடா...

பால கருப்பன் சூர கருப்பன்
பாறை கருப்பன் பாதாள கருப்பன்
எல்லை கருப்பன் நல்ல கருப்பன்
வல்லடி கருப்பன் வன்னி கருப்பன்
மாரடிக் கருப்பன் தேரடிக் கருப்பன்
வீரடிக் கருப்பன் மாட கருப்பன்
வேட்டைக் கருப்பன் வேப்படிக் கருப்பன்
கோட்டைக் கருப்பன் கொம்படிக் கருப்பன்
முத்துக் கருப்பன் உத்திரக் கருப்பன்
கச்சைக் கருப்பன் மச்சைக் கருப்பன்
வர்றான் வர்றான் வர்றான் வர்றான்
வர்றான் வர்றான் வர்றான் வர்றான்
பலபேரில் வருங் கருப்பன்
படிஏற்றி விடும் கருப்பன்
வாடா...கருப்பா....வாடா....கருப்பா....வாடா கருப்பா

கருப்பன் வர்றான் கருப்பன் வர்றான்
கருப்பன் வர்றான் வர்றான்
அஞ்சாத சிங்கம்போல தககதன்னு வர்றான்

✍️செ.இராசா

26/11/2020

ஜெயிப்போம் ஜெயிப்போம் ஜெயிப்போம் ஜெயிப்போன்டா

 #ஜெயிப்போம் ஜெயிப்போம் ஜெயிப்போம்
ஜெயிப்போன்டா- நாம
ஜெயிப்போம் ஜெயிப்போம் ஜெயிப்போம்
ஜெயிப்போன்டா....

ஏய்...
போராட்டம் போராட்டம் நம்மோட போராட்டம்
போராட்டம் வென்றாலே பாரெல்லாம் பாராட்டும்

தூக்கி ஏத்தி விடுனா வரமாட்டான்
தாக்கி தள்ள உடனே வந்திடுவான்
முட்டி மோதி வந்தா சிரிச்சிடுவான்
பட்டி தொட்டி எல்லாம் பேசிடுவான்
சாதி பேதம் சொல்லி தடுத்திடுவான்- நீ
சாதி பின்னர் சாதி மறந்திடுவான்!
கூறு போட்டு கேட்க மறுத்திடுவான்- நீ
கூறும் சேதி பின்னர் கேட்டிடுவான்!

உள்ளே உள்ளம் தூங்கும் சிங்கமுடா
உசுப்பி விட்டாப் பாரு பங்கமுடா
நல்ல நல்ல எண்ணம் போதுமடா
நம்ம வாழ்க்கை மாறும் நம்பனுன்டா
போட்டி போட்டா யாரும் போடட்டுன்டா
நமக்கு நாமே என்றும் போட்டியடா..
நாட்டில் இங்கே கோடி மக்களடா..
நாளை ஏன்டா...இன்றே ஜெயிப்போன்டா

✍️செ.இராசா

24/11/2020

செருப்பு



செருப்பு பிஞ்சிடும் என்று
செருக்கோடு சொல்வோரை
எப்படிச் சொல்லலாமென
எகிறிக் குதிப்பவரா நீங்கள்...
சற்று பொறுங்கள்...
செருப்பென்றால் இழிவா என்ன ?

ஒன்றா இரண்டா
பதினான்கு வருடங்கள்..
அயோத்தியை அலங்கரித்ததே
அந்த சீதாராமனின் செருப்புதானே...?!!

அட
இன்றைக்கும் கூட
இலங்கை ஜெயராஜ் ஐயா வீட்டின்
பூஜையறையை அலங்கரிப்பதே
குரு இராதாகிருஷ்ணனின் செருப்புதானே...?!

செருப்பு....

கல்லும் முள்ளும் குத்தியபோதும்
கத்திரி வெய்யில் கொளுத்தியபோதும்
கற்கால மனிதன் கண்டறிந்த
கால்களின் கவசமே செருப்பு

மரமாய்..
மாட்டுத்தோலாய்
நெகிழியாய்..
இரப்பராய்...
இப்படி எப்படி எப்படியோ மாறினாலும்
இன்னும் குணம் மாறாக் குன்றாய்
என்றும் தாங்கும் நண்பனாய்
கீழிருந்து தாங்குவதே செருப்பு

குளியலறைக்கு ஒன்றும்
படுக்கையறைக்கு ஒன்றுமாய்
காலணிகள் பல கொண்டோர்
கண்டிருக்க வாய்ப்பில்லைதான்
.
போத்தலைப் பொத்தல்போட்டும்
சாக்கினைச் சுற்றிக்கொண்டும்
எப்படியோ சமாளிக்கும்
ஏழையர்க்கேப் புரியும்...
செருப்பு..வெறும் செருப்பல்ல- அது
கொப்பளிக்கும் கால்களுக்கு ஏசி என்று...

அவசர நேரத்தில்
அறுந்து போயிருந்தாலோ
தேவையான இடத்தில்
தொலைந்து போயிருந்தாலோ தெரியும்
செருப்பு..வெறும் செருப்பல்ல- அது
தத்தளிக்கும் கால்களுக்கு நாசி என்று...

இனியும்....
செருப்பு பிஞ்சிடும் என்று
செருப்பை இழிவு படுத்தாதீர்....

இப்படிக்கு,

செருப்பாய்....
செ. இராசமாணிக்கம்

23/11/2020

பிறரைப் போற்று


அத்தினாபுரமே
அறுத்து விட்ட போதும்
இந்திரபிரஸ்தம் கட்டி
எழுந்து நின்ற பாண்டவரை
போற்றிட எண்ணாமல்
தூற்றிய கௌரவரின்
அழுக்காற்றுத் தீயாலே
அழிந்தது சுற்றமன்றோ?!!

கியூபாவோ..
கிழக்காசியாவோ..
எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாம் சென்று
வளர்ச்சி பிடிக்காமல்
வம்பிழுக்கும் ஆந்தையரின்
பொறாமைத் தீயாலே
பொசுங்குவது புவனமன்றோ?!

ஆம்...
தனிமனிதனோ தேசமோ..
பொறுமை வாழ்த்தும்
பொறாமை வீழ்த்தும்
போற்று...
போற்றப்படுவாய்...
வாழ்த்து
வாழ்த்தப்படுவாய்...

வாழ்க வளமுடன்!

#பிறரைப்_போற்று
#வள்ளுவர்_திங்கள்_137

21/11/2020

பாராட்டுகள் முதல்வரே

 


 சூதைத் தடைசெய்யும் சூத்திரம் கண்டதுபோல்
போதைத் தடைசெய்வீர் போற்றிடுவர் யாவருமே!
பாதைத் தடம்மாறி பள்ளத்தில் வீழ்வோரின்
பாதையை மாற்றுவீர் பார்த்து!

#பாராட்டுகள்_முதல்வரே

✍️செ.இராசா




#மான்
மான் என்று சொன்னதுமே
மனக்கண்முன் பாய்வது
மான் மட்டுமா என்ன?!
அம்மானில் மோகம் கொண்ட
பெம்மான்களும் தானே..?!!

ஆம்....
மேயாத மானைத் தேடிய
முருகப் பெருமான் முதல்
மேய்ந்த மானைத் தேடிய
சல்மான் கான் வரை
எம்மானாய் இருந்தாலும்
மான் என்றால் மோகம் தானோ ?!

ஆமாம்...
மாய மானாய் மாறி
மாயமானானே மாரீசன்...
அவனேன் அன்று
ஏதோவோர் விலங்காய் மாறாமல்
எதற்காகப் புள்ளிமானாய் மாறினான்..?!!

அஃதே. ...
கலவிய மான்களைக் கொன்று
கலவிசாபம் பெற்றானே பாண்டு
அவனேன் அன்று
ஏதோவோர் விலங்கைக் கொல்லாமல்
எதற்காகக் கூடியமானைக் கொன்றான்?

மயிர் நீப்பின் வாழா கவரிமான்போல்
உயிர் நீப்பர் என்கிறாரே வள்ளுவர்
அந்த சாதுவான மான்
அப்படிச் சாகுமா என்ன?!!

உண்மையில்..
மானுக்கும் மானுடனுக்கும் என்ன சம்பந்தம்?
தொல் பொருள் ஆய்வில் எல்லாம்
தோண்ட தோண்ட வருகிறதே
அந்த மான்சின்னம்
ஒருவேளை....
மானிடன் அதிகமாய் வாழ்ந்தது
மானுடன் தானா? எனில்
மானிடம் மாறியதெங்கே?
மானிடன் மாறியதாலா?!
எல்லாம்...
அந்த மானுக்கே வெளிச்சம்...!!!


✍️செ. இராசமாணிக்கம்

19/11/2020

வழுவழு மேனியில வாசம் கமகமக்க



வழுவழு மேனியில
வாசம் கமகமக்க
சுருட்டிய பாயைப்போல்
சுந்தரமாய் வந்திறங்க
ஆட்காட்டி விரலால
அங்கத்தில் பொத்தலிட்டு
மணக்கும் சாம்பாரை
மையத்தில் ஓட விட்டு
தேங்காய்ச் சட்னியையும்
பாங்காய்ப் பாய விட்டு
மஞ்சளும் வெள்ளையும்
சங்கமம் ஆகையில
இடையில கிள்ளி
இதழிலே வச்சாக்க....

அடா அடா அடா...

✍️செ.இராசா

(அன்றுமுதல் இன்றுவரை அது என்னமோத் தெரியல.. பிடிச்சது தோசை சாம்பார் சட்னிதான் போங்க)

ஈற்றுச்சீர் சொல்: ஊடல்

  


 #குறளுரையாடல்
#கற்பனை_உரையாடல்
#ஈற்றுச்சீர்_சொல்
#ஊடல்

#பெண்
உன்னருகில் நானிருக்க ஓயாமல் 'வா'என்றாய்
நின்கனவில் வந்ததுயார் சொல்?
(1)

#ஆண்;
என்னநீ உன்போக்கில் ஏதேதோ சொல்கின்றாய்
என்னென்ன சொன்னேனோ சொல்?
(2)

#பெண்;
சும்மா நடிக்காமல் சொல்லுங்கள் யாரென்று
ரம்பாவா ரம்யாவா சொல்?!
(3)

#ஆண்;
அடச்சே இதுயென்ன அக்கால பேர்கள்
நடப்புப் பெயர்களாய்ச் சொல்!
(4)

#பெண்;
மனசுல நீரென்ன மாதவனா சூர்யாவா?!
கனவுல வந்ததுயார் சொல்?!
(5)

#ஆண்;
அடயேம்பா நீவேற அத்தானப் போயி..
சுடலாமா இப்படிச் சொல்
(6)

#பெண்;
சும்மா மழுப்பியே சொல்லுவதைச் சொல்லாமல்
வம்பை இழுப்பதுயார் சொல்?!
(7)

#ஆண்:
ஐயோ முடியலையே ஆண்டவா என்னிறைவா
ஐயாநீ எங்கிருக்காய்ச் சொல்?!
(8)

#சிவன்;🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
சின்ன விடயத்திற்கே சீப்பட வேண்டுமா?!
வந்தது நானெனச் சொல்!
(9)

#பார்வதி;😜😜😜😜😜😀😜😜😜😜
யாமிங்கே வீற்றிருக்க யாரிடம் சென்றீர்கள்
சாமியே சீக்கிரம் சொல்?!
(10)

ஆண்:.....?!!!
(ஐயோ சாமி ஆளை விடுங்கள்😀😀😀😀😀)

✍️செ.இராசா

18/11/2020

பரிசுத்த அன்பில்

 

பரிசுத்த அன்பில் பயமேதும் இன்றி
உரிமையாய்க் கொஞ்சும் உளம்

✍️செ‌. இராசா

17/11/2020

இறைவனுக் கிடையில் எதற்கய்யாத் தரகர்?

 

 

இறைவனுக் கிடையில் எதற்கய்யாத் தரகர்?
இறைவனின் உடையில் ஏனய்யா நடிகர்?!
மறைபொருள் அறியா மதக்கடைக் கணக்கர்
மறையருள் அறிவா மனிதனுக் கருள்வர்?

நிறைகுடம் என்றும் சிந்துமா சொல்லு
குறைகுடம் தானே குதித்திடும் தள்ளு
இறையிடம் என்றும் உன்மனம் நம்பு
கறையின்றி நீயும் கழுவிட எண்ணு

அறத்தால் ஈட்டிடும் பொருளால் இன்பம்
அறிந்திட வேண்டும் அறமே தெய்வம்...
பிறப்பால் பிரிக்கும் பெயரா புனிதம்?!
சிறப்பால் சேர்க்கும் செயலே யாவும்!

உன்னுள் என்னுள் எங்கும்
......ஓடும் குருதி சொல்லும்
அன்றும் இன்றும் யாவும்
......ஆதிக் குருதிச் சொந்தம்
நீயும் நானும் யாரும்
.....நிற்கும் சாட்சி ரூபம்
தீயும் நீரும் யாவும்
...... தெய்வம் தந்த மூலம்

✍️செ.இராசா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்---சேக்கிழார் ஐயா

 


அன்றைய சேக்கிழாரால் ஆலயத்தில் நாயன்மார்
இன்றைய சேக்கிழாரால் எங்கெங்கும்
பாவலர்மார்
என்றைக்கும் சேக்கிழார்கள் ஏற்றிவிடும் ஏணியைப்போல்
தன்மையால் நிற்கின்றார் பார்!

✍️செ. இராசா

15/11/2020

பசி



பசி இல்லா உலகம் சாத்தியமா?!!

சாத்தியமெனில்.....
நெஞ்சும் இடுப்பும்
ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும்
வயிறும் ஆசன வாயும்
அவசியமின்றிப் போயிருக்கும் ..

எருவாய்க்கும் வேலையில்லை
திருவாய்க்கும் வேலையில்லை
திருவாய்க்கு வேலை இல்லையேல்
வருவாய்க்கும் தேவை இல்லை
ஒருவாய் உணவிற்காய்த்- தெருத்
தெருவாய்த்திரியும் நிலையும் இல்லை

ஆனால்...
பசி இல்லா உலகம் சாத்தியமில்லையே...

பசித்திரு என்று சொன்ன வள்ளலாரின் பசியும்
பசித்திருந்து அழுகின்ற வறியோரின் பசியும் பசிதான்
ஆனால் ஒன்றல்லவே.
முன்னது ஆன்மீகப் பசி
பின்னது அத்தியாவசியப் பசி...
பிந்தையப் பசி வந்தால்
முந்தையப் பசிக்கிங்கே இடமுண்டா என்ன ?

வயிற்றில் வருகின்ற பசியும்
வயிற்றிற்குக்கீழ் வருகின்ற பசியும் பசிதான்
ஆனால் ஒன்றல்லவே.
முன்னது உணவால் வரும் பசி
பின்னது உணர்வால் வரும் பசி
முந்தையப் பசி வந்தால்
பிந்தையப் பசிக்கிங்கே இடமுண்டா என்ன?

இங்கே...
வயிற்றில் வருகின்ற பசி
வலிய பசிதான்
ஆனால்;
வறுமையில் வருகின்ற பசி?!!
அய்யகோ....
வலியிலும் வழி இல்லாப் பசி

இறைவா போதும்
இரை தா...நீயும்..

✍️செ. இராசமாணிக்கம்

தலைப்பு:
Mohanan
தம்பி


09/11/2020

அனைவரும் சமம்

 


 

வந்துவிழும் வெள்ளொளியால் வானவில்லின் வர்ணம்போல்
வந்தவிந்தை ஆராய்ந்தால் நாம்
(1)

உன்னிலும் என்னிலும் ஓடுகின்ற செங்குருதி
என்றேனும் மாறிடுமா சொல்?
(2)

கருவறையில் தங்குகின்ற காலத்தை நீட்டும்
ஒருவருமே இல்லை உணர்
(3)

கல்லறைக்குப் போகின்ற காலத்தை நீக்குகின்ற
வல்லோர்கள் யாரிங்கே சொல்?
(4)

கட்சித் தலைவன்போல் கண்டபடி பேசவா
இட்டம்போல் செய்தீர் இறை?
(5)

நாக்கிலா? தோளிலா? வந்தவழி தாயிலா?!
போக்கிலாப் பொய்கள் பொசுக்கு
(6)

அப்பப்பா போதும்பா அள்ளிவிட வேண்டாம்பா
தப்பப்பா தீண்டாமைத் தீ
(7)

நம்பினால் ஆத்தீகர்! நம்பாதார் நாத்தீகர்!
தன்னினத்தை ஏய்ப்பவர் யார்?
(8)

புண்படுத்திப் புண்படுத்திப் போர்க்களம் ஆக்காமல்
பண்பட்டப் புத்தியில் நில்
(9)

ஆட்சியர் ஆனாலும் ஆசிரியர் ஆனாலும்
காட்டுகின்ற செய்கையால் காண்
(10)

✍️செ. இராசமாணிக்கம்

#அனைவரும்_சமம்
#வள்ளுவர்_திங்கள்_136

அடகுவச்சு அடகுவச்சு

 #விவசாயி_நிலை

அடகுவச்சு அடகுவச்சு
...அங்க இங்க கடனவச்சு
ஆத்தாடி என்ன சொல்ல
...ஆன கதை ஒன்னுமில்லை

ஆத்தாடி என்ன சொல்ல
...ஆன கதை ஒன்னுமில்லை

உழுதவன் கணக்குப் பார்த்தா
.....ஒழக்குகூட மிஞ்சாதாம்
ஊருல சொல்லயில...
......உண்மையிலே ஏறவில்லை
உழுவோர் உழுதாத் ‌தான்‌‌
.....ஒலகுக்கே புழப்பாமாம்
ஒலகுன்னு சொல்லயில...
.....ஏனய்யா நாங்கயில்லை

ஒலகுன்னு சொல்லயில...
.....ஏனய்யா நாங்கயில்லை

முதன்முதலாய் செஞ்ச தொழில்
..‌..‌முதலிழந்து போனாலும்
முதலாய் ஓடிவந்து
.‌..முட்டுதர யாருமில்லை ‌‌
அடச்சே...போடான்னு‌‌..
....அசலூரு போயிடலாம்
ஐயோ...... என்ன செய்ய?!
....ஆவியெல்லாம் கொல்லையில

ஐயோ...... என்ன செய்ய?!
....ஆவியெல்லாம் கொல்லையில..

✍️செ.இராசா

அன்பு நண்பர் பாடகர் Ganesh Kannan ஐயா கேட்டுக்கொண்டதற்கிணங்க உருவானது.

விவசாயிகளின் நிலை மாற வேண்டும் இறைவா🙏🙏🙏🙏🙏