30/06/2018

நிலா



சுட்டெரிக்கும் சூரியனின்
கட்டழகுக் காதலியே- உன்
வட்டமுகப் பார்வையிலே
வெட்க ஒளித் தெரியுதடி...

பகலெல்லாம் மோகத்தில்
பகலவனைக் காதலித்தும்- சில
இரவெல்லாம் மனமுருகி
உருவம் ஏன் தேயுதடி?!

பிரிவென்றால் என்னவென்று
பிறருக்குச் சொல்லிடவா- ஒரு
மாதத்தில் ஒரு நாளில்
மறைந்தே நீ வாழ்கின்றாய்?

வாழ்வென்றால் என்னவென்று
வையகத்தார் கற்றிடவா- நீ
தேய்பிறையாய் வளர்பிறையாய்
தேகத்தை மாற்றுகின்றாய்?!

✍️செ. இராசா

29/06/2018

எது உண்மை?


கண்ணில் காணும் காட்சியெல்லாம்
உண்மை என்றே நம்பாதே!- அஃதே
கண்ணில் காணாக் காட்சியெல்லாம்
கற்பனை என்றே கதைக்காதே!

விண்ணில் விண்மீன் இல்லையெனில்
விடுமுறை சென்றதாய் எண்ணாதே!- அஃதே
உன்னுள் உள்ளொளி இல்லையெனில்
உள்ளதைப் பொய்யென உரைக்காதே!

காதில் விழுகிற வார்த்தையெல்லாம்
ஓதிடும் வேதமாய் நம்பாதே!- அஃதே
காதில் விழுகா வார்த்தைகளும்
காற்றில் தவழ்வதை மறக்காதே!

இறைவனை மறுத்திடும் பெரியோர்களும்
இறைநிலை என்பதை அறிந்திடுவீர்!-அஃதே
இறைவனே இல்லை என்போரும்
இதைப்பற்றி கவலைகள் கொள்ளாதீர்!

100வது கவிச்சரம்--தமிழ்ப்பட்டறை



🙏தமிழ்த்தாய் வணக்கம்🙏
**********^**************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதைகளாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!

🙏கவிச்சரத் தலைமை வணக்கம்🙏
********************************
பொறிஞராய்த் தேர்ச்சிபெற்று
அறிஞராய் பவனிவந்து
கவிஞராய் மிளிர்கின்ற
கவிச்சரத் தலைமையினை
மீனா திருப்பதி அவர்களை
மனமார வாழ்த்துகின்றேன்!

🙏அவை வணக்கம்🙏
**********************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறை
***************
தமிழ்ப்பட்டறை தளம்மூலம்
தமிழ்த்தொண்டு செய்கின்ற
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரே மூச்சு!
எப்பொழுதும் தமிழ்ப் பேச்சு!
எல்லோருக்கும் ஒரே நோக்கம்!
என்றென்றும் தமிழ் தாகம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
என்னுள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் இங்கே சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கின்ற
என்தமிழ்ப் பட்டறையே
எப்போதும் சிறப்பென்பேன்!

பதிப்பகம்
*********
விதை தூவி கரு பதித்து
விளைவது குழந்தையெனில்
கரு பதித்து வரி ஆகி
வருவது நூலாகும்!

தாயின் வலி சொல்லும்
பிரசவ வேதனையை
நூலின் வரி சொல்லும்
புத்தகம் தந்து விடும்!

தாய்க்கும் தாயாக
திகழ்கின்றப் பதிப்பகமே
சிறப்பான புத்தகத்தை
சுகமாக பிரசவிக்கும்!

என்னை வளர்க்கின்ற
என்னருமைப் பதிப்பகமே
“நான் எனும் மண்குடத்தை”
நான் உனக்குத் தந்துவிட்டேன்..

அவனைப் பெற்றெடுத்து
அவனியிலேத் தவழவிட
அருந்தமிழ்ப் பட்டறையை
அடியேனும் வேண்டுகிறேன்

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையினிலே
கவிஞர்கள் சபையினிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையே
இதயத்தால் வாழ்த்துகின்றேன்
இமயம்போல் நிலைத்திடுவாய்...
நன்றி! நன்றி!!நன்றி!!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

குறுங்கவிதைகள்---3--வியர்வை



(1)
பாட்டாளி உடம்பில்
பாய்ந்தோடும் அருவி
வியர்வை

(2)
இயந்திர உலகில்
இறங்க மறுக்கிறது
வியர்வை

(3)
இல்லாதோர் வாழ்வில்
இலவசமாய் ஓடுகிறது
வியர்வை

28/06/2018

அஞ்சாமை


அஞ்சிஅஞ்சி வாழ்வதிலே
....................என்ன இருக்கு?
அஞ்சாமல் வீழ்ந்தாலே
....................அதுவே சிறப்பு

கெஞ்சிகெஞ்சி இரப்பதிலே
...................என்ன இருக்கு?
கெஞ்சாமல் இறந்தாலே
...................அதுவே சிறப்பு

கொஞ்சிப்பேசி நஞ்சைத்தரும்
.....................உலகை நினைத்து
வஞ்சினத்தை நெஞ்சுரத்தால்
......................தடுத்து நிறுத்து!

அஞ்சுபொறி அடக்கிநீயும்
....................உன்னைச் செதுக்கி
அஞ்சாமை குணத்தோடு
....................வாழ்வை நடத்து!

எஞ்சியுள்ளத் தொப்புள்கொடி
....................உறவை நினைத்து
வஞ்சகத்தால் வென்றவர்க்கு
....................பாடம் புகட்டு!

27/06/2018

குறுங்கவிதைகள்-9--சக்கரம்


(1)
சுழலுகின்ற சக்கரத்தில்
பிறக்கின்ற தோற்றம்
பிரபஞ்சம்

(2)
சக்கரத்தின் சுழற்சியில்
வேகமாய்க் கழிகிறது
காலம்

(3)
சக்கரத்தைச் சுற்றிவிட்டு
சகலமும் செய்கிறான்
இறைவன்

(4)
வடிவம் முடிந்தவுடன்
உருவமாய் வெளியில் வரும்
படைப்பு

(5)
தலையில் தட்டுவது
உருக்குலைக்க அல்ல
உருவாக்கவே...

(6)
முழுமை அடைந்தவுடன்
முற்றும் அறுபடும்
முழுமைப்பேறு

(7)
சுழற்சியின் மையத்தில்
சூத்திரக் கணக்கு
படைப்பு

(8)
மண்ணில் பிறந்து
மண்ணில் முடிகிறது
மனித வாழ்க்கை

(9)
நிலைத்து நிற்க
தீயால் சுட வேண்டும்
ஞானத்தீயால்..

✍️செ. இராசா

(பட உதவி திரு. Riaz Ahamed, Qatar)

யாரும் கேட்கலையே...


கத்திகத்திச் சொன்னாலும்
கத்துவது கேட்கலையே.....
சத்தம்போட்டுச் சொன்னாலும்
சத்தியத்தை உணரலையே

வெள்ளைக்கோழி திண்ணாக்க
வெளங்காமப் போவோமுன்னும்
நாட்டுக்கோழி திண்ணாக்க
நன்றாக இருப்போமுன்னும்....கத்திகத்தி

சூரியகாந்தி எண்ணெயில
சூனியமா போவாமுன்னும்
நம்ம ஊரு எண்ணெயில
நல்ல தரம் இருக்குதுன்னும்... கத்திகத்தி

சீனியும் சக்கரையும்
சீக்கிரமே அனுப்புமுன்னும்
நாட்டுக் கருப்பட்டியே
நம்மை வாழ வைக்குமுன்னும்..கத்திகத்தி

புரோட்டாவைத் தின்னாக்க
புட்டுக்குட்டு போவாமுன்னும்
நவதானியம் தின்னாக்க
நலமாக இருப்போமுன்னும்...கத்திகத்தி

நூடுல்சு உணவெல்லாம்
நாள் குறிக்கும் உணவென்றும்
இடியாப்பம் பனியாரம்
இனிமைமிகு உணவென்றும்..கத்திகத்தி

சாக்கலேட்டும் குக்கீசும்
சமாதி கட்டுமென்றும்
எள்ளு கடலை உருண்டையே
தரமான மாற்றென்றும்......... கத்திகத்தி

ஓட்சும் பீசாவும்
காசுக்காக வந்ததென்றும்
ஆப்பமும் இட்லியுமே
ஆரோக்கிய உணவென்றும்....கத்திகத்தி

............

(அடப்போங்க ஜி......ச்சும்மா.....முதல்
உங்க வீட்ல கேட்டாங்களா?

புரியுது...புரியுது....

இருந்தாலும் சொல்லுவது கடமையல்லவா)

✍️செ. இராசா

26/06/2018

புரிதல்



அன்னைத்தமிழ் அருளாலே
அன்று நான் எழுதியதை
இன்றுதான் படித்துணர்ந்து
நன்று என்று சொல்லுகின்றாள்....

என்னடி ஆச்சு என்று
என்னவளைக் கேட்டதற்கு,

அன்று அவள் எழுதாததால்
அன்று ஒன்றும் புரியலையாம்....
இன்று அவளும் எழுதுவதால்- நான்
அன்றே நன்றாய் எழுதினேனாம்.....

ஒன்று இங்கேப் புரிகிறது;

ஒன்றை நாம் புரிவதற்கு- அந்த
ஒன்றாய் மாற வேண்டும்......
நன்று இல்லை என்பதற்கு
நன்றாய் அதிலே ஊற வேண்டும்...

25/06/2018

இளைப்பாற ஓர் நிழல் -களஞ்சியம் கவிதைப் போட்டியில் பங்குபெற்ற கவிதை


உலகத்தில் பிறந்துள்ள
உயிரினங்கள் அத்தனையும்
இளைப்பாறும் ஓர் நிழலாய்
இருக்கின்ற ஓர் இறையே....

இன்பத்தை அறிவதற்கு
துன்பத்தைக் கொடுத்தாயா?- இல்லை
இறையுன்னை அறிவதற்கு
இன்னலைத் தந்தாயா?!

ஒன்று உயிர்வாழ
ஒன்றினைப் படைத்தாயா?- இல்லை
ஒன்றான உனையறிய
ஒன்றொன்றாய்ச் செய்தாயா?!

மனிதம் உயர்வடைய
மதங்கள் தந்தாயா?!- இல்லை
மனிதன் மீண்டு எழ
மனதில் நினைத்தாயா?!

இளைப்பாறும் ஓர் நிழலாய்
இருக்கின்ற ஓர் இறையே- நீ
இசைந்தாடும் ஓர் கவியாய்
இதயத்தில் இருந்திடுவாய்!

23/06/2018

சினம் 😡😡😡😡😡😡


சினமென்னும் குணத்தை அனுமதித்தால்
மனமென்னும் குரங்கு விழிப்படைந்து
மயக்கத்தில் கண்களை மறைத்துவிட்டு
மரணத்தின் வாசலைத் திறந்திடுமே!

சினத்தின் தாயென வீற்றிருக்கும்
மனத்தில் தோன்றிடும் ஆசைகளே
அடிமனப் பற்றாய் உருமாறி
அவற்றுள் தடைவர சினம்வருமே!

பாலை மாற்றிடும் உறைபோலே
பாழாய் வீழ்த்திடும் சினம்தானே
வஞ்சகம் என்றே உருமாறி
நஞ்சென மனத்தில் தங்கிடுமே!

சினத்தை நாமும் தவிர்த்திடவே
மனத்தை அதற்குப் பழக்கிடவே
தவத்தை நாளும் கடைபிடித்தே
வளத்தை சேர்த்திட முயல்வோமே!

சமாதி= சம + ஆதி



ஓராயிரம் மின்சக்தி.....

உன் இரட்டைப் பார்வைக்குள்
இரண்டாயிரம் காந்தசக்தி....

நம் இருவரின் பார்வைக்குள்
“நான்” கரையும் ஆத்மசக்தி....

ஆம்
இந்தக் காதல் பார்வையில்
நாம் சமாதியானோம்.....

ஆம்
இந்தக் காதலால்
நாம் ஆதியோடு சமம் ஆனோம்...

காலத்தை இழந்து
காலத்தோடு இணைந்து
காலமாக கரைந்த கணங்களே
காதலின் கணங்களன்றோ?!
இல்லை... இல்லை
அது
கடவுளின் கணங்களன்றோ?!

✍️செ. இராசா

குறிப்பு:
******
(சமாதி= சம + ஆதி)

22/06/2018

கல்லா இளைஞன்



கல்லா இளைஞன் (📖📒👱‍♂️)
ஒருவனுக்கு;
அன்று
கல்லா நன்றாய்க் (💰💶💰 ✔️)
கட்டியதால்;
பல
கள்ளாய்க் குடிக்கும் (🍻🥃👬👭)
சவகாசம்;
அவனைக்
கள்ளாய்க் குடிக்க (🥃🍾🍷🥃)
வகைசெய்தே;
அவன்
கள்ளுக்கு அடிமை (🥃🍷😇😇)
ஆனானே;
பின்னர்
கல்லாப் பெட்டியும் (💰💶—>0)
கரைந்ததுவே:
அவன்
கள்ளடி நட்பும் (👬👬——>0)
தொலைந்தனவே:
பின்னர்
கள்ளுக்கு கேயந்தி. (🥃😞)
நின்றானே;
அவன்
கள்ளால் அனைத்தையும் (😪😓😭)
இழந்தானே!