31/01/2022

புகைக்குச்சி

 


நீ முழுதாய் இருந்தபோது
லாக்கரில் வைத்த பொன்நிலவானாய்...
நீ வெளியே வந்தபோது
விடுதலையடைந்த பெண்நிலவானாய்...
நீ இதழேறியபோது
விரல்களில் பூத்த வெண்நிலவானாய்...
நீ விடுபட்டபோது
எரிந்து தணிந்த பிறைநிலவானாய்..
......
உண்மையைச் சொல்?
நீ புகைக்குச்சியின் எச்சமா? இல்லை
உயிர்க்கொல்லியின் மிச்சமா?!

✍️செ. இராசா

அனைத்தும் அறிந்தவர் யார்?! வள்ளுவர் திங்கள் 196



அறிந்ததைப் பின்பற்றி ஆராய்ந்து சென்றால்
அறிந்தவை ஆகும் அணு
(1)

இசைஞானிக் கீடில்லை என்கின்ற போதும்
இசைப்புயல் வந்ததேன் இங்கு
(2)

கவியரசர் ஆண்ட கலைத்துறைக் குள்ளும்
கவிப்பே ரரசராம் காண்
(3)

சச்சினின் சாதனை சத்தியம் ஆயினும்
உச்சத்தில் தோனி உணர்
(4)

பேரும் புகழும் பெரிதாய் இருந்தாலும்
யாரும் இறைவன்முன் எள்
(5)

நீந்துகின்ற ஆற்றிலினை மீன்குஞ்சு கற்றதெங்கே?
ஊர்ந்துவரும் உள்ளறிவால் ஓங்கு
(6)

ஒருவரால் ஆகுமெனில் உன்னாலும் ஆகும்
பெரிதாய் வியக்காமல் போ
(7)

கற்பதைக் கற்றபின்னும் கற்றவர்கள் நன்கறிவர்
கற்றவர்முன் தானோர் கடுகு
(8)


முடிவிலி அண்டத்தின் மூலம்தான் எங்கே?
முடிந்தால் பதில்தா முயன்று
(9)

பிறக்கும்முன் எங்கிருந்தோம் பின்நாளில் யாரும்
இறந்தபின் எங்கிருப்போம் சொல்?
(10)

✍️செ. இராசா

29/01/2022

ஏறு தழுவிடும் வீரம்

  


ஏறு தழுவிடும் வீரம் - தமிழ்
.....இனத்தின் தனித்துவம் ஆகும்!
வீறு நடையுடன் வேகம்- அவன்
.....வெடித்தால் தரணியே ஆடும்!
மீறி உடைக்கிற தீரம்- இனம்
.....விழித்தால் எரிமலை நோகும்!
சீறி அடிக்கிற ஞானம்- குறள்
.....திறத்தால் அவனடி ஓங்கும்!

✍️செ.இராசா

அருகில் இருப்போரை வைத்தே

அருகில் இருப்போரை வைத்தே
அளவிடப்படுகிறது
நம் உயரம்

28/01/2022


 

சுட்டமீன் வேண்டுமெனச் சொன்னவுடன் சுட்டவளே
சுட்டதடி உண்மையிலுன் சொல்

✍️செ. இராசா

இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணி

 

இல்லாத ஒன்றை
இருப்பதாய் எண்ணி
எதையோத் தேடுகிறாய்?
பொல்லாத உலகில்
பூக்களைப் பறித்து
பொய்களில் தூவுகிறாய்...

27/01/2022

குயில் கூவுவது

குயில் கூவுவது
தன் இருப்பைக் காட்டிக்கொள்ள அல்ல..
தன் சுயத்தை இழக்காமலிருக்க..

நீ கொஞ்சம் மூடு

 


நீ கொஞ்சம் மூடு என்றால்; அது
வாய்மூடும் கட்டளைச் சொல்லாகிறது...
உண்மையில்..
வாயும் கண்களும்தானே
மூடும் படியுள்ள புலன்கள்!

வாய்மூடி மௌனித்தால்
கேளா சப்தமும் கேட்கிறது...
வாய்மூலம் மூச்சுவிட்டால்
குறட்டையொலி காதைப் பிளக்கிறது..

கண் மூடி தியானித்தால்
அகமிங்கே விழிக்கிறது‌‌...
கண்திறந்து தூங்கினால்
அறுப்பதாயிங்கே அர்த்தமாகிறது

இங்கே...
மூக்குக்கும் காதுக்கும்தான் மூடி இல்லை
ஆனால்..
மூக்கை மூடினால்
முடிந்துவிட்டதாய் அர்த்தமாகிறது!
காதுகளை மூடினாலும்
ஏறக்குறைய அப்படித்தான்...

ஆக...
மூட வேண்டியதை
மூடவேண்டிய நேரத்தில்
மூடத்தான் வேண்டும்...
அதற்காக...
எப்போதும் மூடினால் எப்படி?!

ஆமாம்....
வந்தவுடன் செய்வதாய்க்கூறிய
வாக்குறுதிகள் என்னாச்சு?
ஓ...
கேட்டால் நீ கொஞ்சம் மூடு என்பார்களோ?!

✍️செ. இராசா

26/01/2022

ஒட்டகக்கறி நல்லதா?

 



இந்தக்கேள்வியைக் கேட்டதுமே நம்மவர்களில் பலர் அபச்சாரம் அபச்சாரமென்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். தயவுகூர்ந்து அனைவருமே இக்கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு நான் கூறுவதில் தவறேதேனும் இருந்தால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
 
மனிதனுடைய அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றையும் உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும். அதாவது அந்த இயற்கை சூழ்நிலையைப் பொறுத்தே இந்த மூன்றும் அமைந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். இந்த மூன்றிலுமே வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 
 
அந்த காலத்தில் உறைவிடங்கள் என்பது அங்கங்கே கிடைக்கும் மண்ணையும் கல்லையும் கொண்டு கட்டப்பட்டது. அது குளிருக்கு சூடாகவும் சூட்டில் குளிராகவும் இருந்தது இயற்கையின் கொடையே. உடை விடயத்திலும் அப்படியே....நம்ம ஊரில் சூடு அதிகமாக உள்ளதால் காற்றோட்டமான வேட்டி சட்டை, குளிர் பிரதேசங்களில் கம்பளி போன்ற ஆடைகள், மணல் புயல் அடிக்கும் வளைகுடா நாடுகளில் காதிற்குமேல் ஒரு துணி. அது பறக்காமல் இருக்க தலையில் ஒரு சுருமாடு போன்ற அமைப்பு. இப்படி எல்லாமே...
உணவிலும் அப்படியே....நம் பக்கம் எளிதில் சீரணமாகும் இட்லி போன்ற உணவுகள். குளிர் நாடுகளில் குளிரிலும் தாங்கக்கூடிய சப்பாத்தி அல்லது பிரட் போன்ற உணவுகள்.
 
இப்படி அந்தந்த ஊரில் எதுஎது கிடைக்கிறதோ அந்தந்த ஊர்வாழ் மக்கள் அதையெல்லாம் சாப்பிட்டவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தோம். உதாரணமாக, கேரளா என்றால் மரவள்ளிக் கிழங்கு, தேங்காய் எண்ணெயும், தமிழ்நாடு என்றால் நிலக்கடலை, நம் பாரம்பரிய நெல்லரிசி, பனைங்கருப்பட்டி இப்படி....ஆனால், என்று இவையெல்லாம் மாறியதோ, அன்று பிடித்தது சனி. இதில் நாமெல்லாம் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள்தான். காரணம் பெரும்பாலும் அனைத்து வகையான உணவுகளையும் நம்மால் விளைவிக்க முடியும். ஆனால், வளைகுடா நாடுகளில் அப்படியல்ல. (நான் கூறுவது ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பாக என்று வைத்துக் கொள்வோம்) அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது எதுவென்றால், கடல் மீன்கள், பாலைவனத்தில் விளையும் பேரிச்சம்பழம், ஒருவகையான உருளைக்கிழங்கு மற்றும் ஒட்டகம். இவ்வளவுதான். அங்கே இதை மட்டுமே கொடுத்த இயற்கை எவ்வளவு ஆற்றலை அந்த உணவில் கொடுத்திருந்தால் அவர்களால் வாழ முடியுமென்று யோசித்துப் பாருங்கள்.
 
உண்மைதான், பேரிச்சம் பழத்தின் நன்மைகளைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. ஆனால், இந்த ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பாலைவனத்தில் செறுப்பே போடாமல் நீரே குடிக்காமல் எவ்வளவு கஷ்டத்தில் வாழப்பழகியுள்ளது. அதன் பாலிலும் மாமிசத்திலும் எவ்வளவு ஆற்றல் உள்ளது தெரியுமா?!. குறிப்பாக ஆண்களுக்கு 90 வயதுவரைகூட ஆற்றல் இருக்குமாம் (உடனே சிரிக்க வேண்டாம்). உயிராற்றலின் சக்திபற்றி வேதாத்திரி மகரிஷி வழங்கிய காயகல்பக் கலை அறிந்தவர்கள் உணர்வார்கள். ஓஷோகூட காமத்திலுருந்து கடவுளுக்கு என்றநூலில் உயிராற்றலின் பெருமையைக் கூறியுள்ளார். 
 
ஷேக்மார்களின் ஆற்றல் இரகசியம் இப்போது புரிகிறதா?!. ஆம்...ஆண்ம பலத்தை ஆன்மீக பலமாக மாற்றும் ஆற்றல் நம் இயற்கை சார்ந்த உணவுகளுக்கு உண்டு என்பதை மறவாதீர்கள். என்னைப்பொறுத்தவரை சைவம் அசைவம் என்பதெல்லாம் நாம் வைத்துக்கொண்ட கட்டுப்பாடே. எஸ்கிமோவாய்ப் பிறந்தால் பச்சை மீனை மட்டும்தான் சாப்பிட வேண்டும். Nanook of the North என்னும் படம் பாருங்கள். உங்களுக்கே புரியும். ஆக நான் கூற வருவது என்னவென்றால் ஒட்டகக்கறி மட்டுமல்ல, நாம் பிறந்த மற்றும் வளரும் சூழலில் இயற்கையாய் விளைகின்ற அனைத்து வகைக் காய்கறிகளும் நல்லதே. 
 
இயற்கையோடு வாழ்வோம் இளமையாய் இருப்போம்.
 
வாழ்க வளமுடன்!
 
✍️செ. இராசா

சுதந்திர தினம்னா என்னப்பா?

 



இப்ப நான் உன்கைய சின்ன வயசுல இருந்து விடாமப் பிடிச்சிக்குட்டே இருக்கேன். பிறகு நான் என் கையை விட்டா என்ன செய்வ?.....சுதந்திரமா ஓடுவியா இல்லையா?!..அப்படி இந்தியாவைப் பிடிச்சு வைத்திருந்த இங்கிலாந்துகாரங்க நம்மள சுதந்திரமா விட்டுட்டு அவுங்க ஊருக்கே போன தினம்தான் சுதந்திர தினம்.
 
அப்ப....#குடியரசு_தினம்னா என்னப்பா?
 
இப்ப நான் உன் கைய விட்டுட்டேங்குறதுக்காக நீ பாட்டுக்கு உன் இஷ்டப்படி அங்க இங்க ஓடாம, நல்லா படிச்சு நல்லா வளர்ந்து ஒரு பொறுப்புள்ள குடிமகனா வாழணுமா இல்லையா?!....அப்படி நாம சுதந்திரம் பெற்றதுக்குப் பிறகு நாமே சட்டதிட்டெங்கெல்லாம் போட்டு முழு அங்கீகாரமுள்ள நாடா நிமிர்ந்த தினம்தான் குடியரசு தினம்.
 
இந்தியா பாகிஸ்தான் என்று நம் நாடு இரண்டாகப் பிரிந்தபோது, நம்மவர்கள் அம்பேத்கர் தலைமையில் அமைத்த வலுவான சட்டதிட்டங்களால் 1950ல் நாம் நிமிர்ந்தோம். ஆனால் பாகிஸ்தானுக்கோ மேலும் ஆறு வருடங்கள் கூடுதலாகத் தேவைப்பட்டு1956ல்தான் அவர்களுக்கான சட்டங்கள் கிடைத்தது. ஆனால், அந்நாட்டில் இராணுவ ஆட்சிகள் அதிகமாக நடந்தமைக்கும் அவர்களின் அரசியலமைப்பில் உள்ள நிலையற்ற தன்மைக்கும் நம்மைப்போல் வலுவில்லா அடித்தளமே காரணமாக உள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் ஒரு விடயத்தில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். அது என்னவென்றால் சுதந்திரம் வாங்கும்போதே நிலத்தைப்பிரித்துக் கொள்வது. அந்த விடயத்தில் ஏமாந்தவர்கள் நம் ஈழத்தமிழ் உறவுகளே. நம்பி ஏமாறுவதும் தமிழனின் குணம்தானோ?! 
 
ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், வலுவான கட்டமைப்பு இல்லாவிடில் அங்கேக் குழப்பங்கள் தவிர்க்க முடியாததாகிறது. அந்த விடயத்தில் நம் குடியரசு நாடான இந்தியா எவ்வளவோமேல். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.
 
வாங்க...வாங்க...ஜெய்ஹிந்த் 🙏🙏🙏
🙏
இனிய குடியரசு தின
வாழ்த்துகள்
 

செ. இராசமாணிக்கம்

24/01/2022

நான் இரசித்த கவிதை 2


  

#நான்_இரசித்த_கவிதை_2

ஒரு நல்ல எழுத்து வாசிப்பவனை ஏதோவொன்று செய்ய வேண்டுமென்று ஜெயகாந்தன் அவர்கள் சொல்வார்கள். அப்படித்தான் எல்லா எழுத்துக்களும் உள்ளதா என்றால் இல்லையென்றுதான் சொல்வேன். இருந்தாலும் நாமெல்லாம் எழுதுவதை நிறுத்தி விடலாமா என்றால் கூடாதுதான். காரணம் எழுதுபவருக்கும் எழுதாதவருக்குமுள்ள வித்தியாசமென்பது வாழ்வின் தான் இரசித்தவற்றையெல்லாம் பிறர் ருசிக்கத் தந்து ஆவணப்படுத்தும் ஓர் அழகிய கலையாக எழுத்து உள்ளதால்தான். ஆக....எழுதுவோம்.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக யாரோ ஒருவர் ஒரு இதழில் தன் கவிதை வந்ததாகப் பதிவு செய்திருந்தார். அதில் அவர் கவிதையோடு சேர்த்து மற்ற கவிதைகளும் இருந்தது‌. அதில் யாரோ ஒருவர் எழுதிய அந்த ஒற்றைக்கவிதை மட்டும் என்னை ஒரு உலுக்கு உலுக்கியதென்றே சொல்லலாம்.

#அந்தக்கவிதை இதோ;

சீதை தீக்குளித்ததில்
நிரூபணமாகிவிட்டது
இராவணனின் கற்பு

வார்த்தைகள் வேண்டுமானால் சற்று முன்னே பின்னே மாறி இருக்கலாம். ஆனால், கருத்து இதுவே. இதை எழுதியவர் பெயரும் தெரியாத என் ஞாபக மறதிக்காக எம்மைத் தயவுகூர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன். ஆனால் அவரின் கவிதை வரிகள் என்னை இன்னும் ஏதோ செய்து கொண்டுதானிருக்கிறது
காரணம், இந்தமாதிரி இதுவரையிலும் இவ்வளவு சுருக்கமாக அந்த நிகழ்வை யாரும் சொன்னதே இல்லை என்பேன்.

இராமாயணத்தில் மிக மிகக் கேவலமான ஒரு நிகழ்வாக நான் கருதுவது வாலி வதம்கூட அல்ல. தன் மனைவியான சீதையை இராமன் தீக்குளிக்கச்சொல்லி அவள் கற்பை நிரூபிக்கச் சொல்லும் இந்நிகழ்வு தான். (மீண்டும் ஒருமுறை அயோத்தியில் நடக்கும் அந்நிகழ்வு நல்லவேளை கம்ப இராமாயணத்தில் இல்லை) இதற்கு என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வே. அதை இக்கவிதையில் வைத்த அந்தக் கவிஞர் இராவணனைச் சொன்னது அழகிய முரண் மட்டுமல்ல. அவருக்கும் அந்நிகழ்வின் மீதான கோபமென்றே நினைக்கிறேன்.

ஒரு பெண்ணை சந்தேகப்படும் கணவன் யாருக்காக தன் கற்பைநிரூபிக்க வேண்டும் சொல்லுங்கள்.

"சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை" என்ற

வள்ளுவரின் வரிகள் இராமனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லைபோலும். ஒருவேளை சீதையை இராவணன் வல்லுறவு கொண்டிருந்தால் இராமன் கொன்றுவிடுவாரா?. இந்த மன எண்ணம் வந்த இராமனை விட அவனை மீண்டும் மன்னித்து ஏற்ற சீதைதான் இங்கே உயர்ந்தவள் என்பேன்.

கூடுதல் செய்தியொன்று; ராமாகீன் என்னும் தாய்லாந்து இராமாயணம் ஒன்றில் இந்த இராமன் அயோத்தி போனபிறகும் சந்தேகப்படுகிறார். சீதையைக் காட்டில் கொண்டுபோய் கொன்று போட்டு அவள் இதயத்தைக் கொண்டுவரச்சொல்கிறார். இலட்சமணன் மனது கேட்காமல் ஒரு மானின் இதயத்தைக் கொண்டு வருகிறார். இப்போது சொல்லுங்கள் காவியமே ஆனாலும் கடவுளே ஆனாலும் தவறென்றால் தவறுதானே?

இப்போது மீண்டும் அந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். இராவணனின் உயரமும் அந்தக் கவிதையின் உயரமும் சற்றே உயர்ந்துள்ளதா?!

இதுவே எழுத்தின் வலிமை!

நன்றி!

✍️செ. இராசா

இறைவனடி --------- வள்ளுவர் திங்கள் 195



 

ஒற்றை நூலால் உலகளந்த வள்ளுவனைப்
பற்றிட யார்க்கும் பலன்
(1)

இரண்டே அடியில் எழுதிய பாக்கள்
அரணடி சேர்க்கும் அறி
(2)

முப்பால் வழங்கிய மூத்தோன் அடிகளைத்
தப்பாமல் பற்றுதல் சால்பு
(3)

நான்மறை எல்லாம் வடதிசை நாட்டார்க்கு
வான்மறையே வையப் பொது
(4)

ஐந்தை அடக்குகிற ஆன்மீகம் கண்டறிய
பைந்தமிழ் வேதம் படி
(5)

ஆறா வலியையும் ஆற்றுகின்ற வல்லமை
மாறா மறைக்குள்ளே உண்டு
(6)

எழுசீரில் ஏற்றிய எம்பாட்டன் குறளைத்
தொழுகின்ற வேளையில் சொல்
(7)

எண்திசை யாவிலும் எல்லோர்க்கும் சென்றால்தான்
பண்ணிய நூலின் பயன்
(😎

ஒன்பது கோளுக்கும் ஓர்மையம் போலே
அன்பர்கள் மையம் அவன்
(9)

பத்துத் தலைக்குள்ளும் பற்றிய காமத்தீ
பத்தியதன் காரணம் பற்று
(10)

✍️செ. இராசா


23/01/2022

முன்னோக்குப் பார்வை


 

முன்னோக்குப் பார்வையும் மூர்க்கமான வேகமும்
உன்னோக்கில் வந்தால் உயர்வு

செல்லமா பேசிச் சிரிக்கிறத விட்டுட்டு

 


செல்லமா பேசிச் சிரிக்கிறத விட்டுட்டுச்
செல்லக் கொடுத்தாச் சிறப்பு

இக்காலக் குழந்தையாய்...

✍️செ. இராசா

22/01/2022

வேண்டாம் புத்தா


 

ஒட்டிய வயிறும்
சப்பிய கன்னமும்
மெலிந்த தேகமும்
குழிவிழுந்த கண்களும்
சதையில்லா எலும்பும்
என்ன இது?
இத்தனை மெனெக்கெடலா?
வேண்டாம் புத்தா....
நான் நானாகவே இருந்துவிடுகிறேன்...

செ. இராசா

வீட்டுக்கு வீடு வாசப்படி

ஒரே சண்டை
ஒரே குழப்பம்
களங்கியது மனம்
கண்களில் குளம்...
எதுவும் புரியவில்லை
இந்நேரத்தில் ஓர் அழைப்பு;

"அம்மா... சொல்லுங்கள்"
.........
அப்பா....அப்பப்பா...
மூச்சே விடாமல்
முப்பது நிமிடங்கள்..
அவ்வளவும் குற்றப்பத்திரிக்கை
அழைப்பு துண்டிக்கப்படுகிறது!

இப்போது மனம் தெளிவடைகிறது
வீட்டுக்கு வீடு வாசப்படி

✍️செ. இராசா

20/01/2022

மாதுறவு* கொண்டவனே

 


மாதுறவு* கொண்டவனே
.........மன்மதனின் சோதரனே
ஊதுபொதி மாமிசமே
..........ஊர்மேயும்- சாதுவனே
காவியுடைப் போட்டவனே
........கண்ணியத்தை விட்டவனே
பாவியுந்தன் பல்லுடைப்போம் பார்!

✍️செ. இராசா

மாதுறவு- மாது+உறவு
(கவிக்கோ சொல்லாடல்)

மாதுளம்பூ

  


மாதுளம்பூ பூத்ததாம்
............................விந்தையென்ன?
மாதுளம்* பூதானே...?!!

(மாது+உளம்)

உன்னைப்போல யாரும் இல்லைம்பான்

 


உன்னைப்போல யாரும் இல்லைம்பான்
கவனம்.... கவனம்
உன்னைவெல்லும் பேச்சே இல்லைம்பான்
கவனம்...கவனம்

உன்னாலவன் மேலே ஏற
உன்னைப்படி ஆக்கப் பார்ப்பான்
சொன்னபடி செய்வேனென்று
சொக்குப்பொடி போட்டுப் பார்ப்பான்
தூண்டில்புழு போலமாட்டி
தூண்டிவிட்டு ஆழம் பார்ப்பான்...
எந்த மீனும் சிக்கலைன்னா
என்ன நட்டம்? வேற பார்ப்பான்...

வந்தவரை லாபம்தானே
வாழ்ந்தவரை வாழ்க்கை தானே...
சொந்தக்கதை சோகம்தானே
சொன்னதெல்லாம் உண்மைதானே...
ஆனா ஒன்னு சொல்றேன் மச்சி
ஆண்டவன்லாம் இல்லை மச்சி
என்ன இது வாழ்க்கை மச்சி
எல்லாமிங்கே போலி மச்சி...

✍️செ. இராசா

மயிர் வழிக்க வந்தநீ

 


மயிர் வழிக்க வந்தநீ
மயிரை மட்டுமா வழித்தாய்??

பென்சில்கள் தலை சீவப்
பல்லில்லா சீப்பானாய்..
பேனாக்கள் பிழை செய்தால்
சுரண்டித்தரும் உளியானாய்..

பிட்பாக்கெட் புரிவோரின்
ஆறாம் விரலானாய்..
அடிதடி புரிவோரின்
அடுத்த நாக்கானாய்...

இதுமட்டுமா?!
ஏழைகளின் வீட்டு நெகவெட்டியானாய்
பூக்கடைக் கூடைக்குள் கத்தியானாய்
காகிதத்தை பிளக்கும் கூர்வாளானாய்
இத்தனையும் ஆனாய்....
இறுதியில் இப்படிப்
பேசிக் கழுத்தறுப்போர்க்கும்
பிளேடென்ற உவமையானாயே..

✍️செ. இராசா

தலைப்பு: திரு சரவணா சத்யநாராயணா ஆசிரியர் அண்ணா💐💐💐💐

19/01/2022

உனக்காக உன்னையே தந்துள்ளேன்

 

#விவேகானந்தர்: (சிறு வயதில்)
அப்பா எனக்காக என்ன வைத்துள்ளீர்?

#அவரின்_தந்தை;
கண்ணாடி முன் நின்று பார்

(#பொருள்: உனக்காக உன்னையே தந்துள்ளேன்)

#எம்_குறள்_வெண்பா

கண்ணாடி முன்பாகக் காண்கின்ற காட்சியே
கண்ணாவுன் சொத்தென்று காண்

✍️செ. இராசா


18/01/2022

ஒத்திப்போ ஒத்திப்போ

 


ஒத்திப்போ ஒத்திப்போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப்போ
இந்த சர்க்காரோட வண்டி வருது
ஓரம்போ ஓரம்போ....
சந்து பொந்து எல்லாம் தள்ள வருது பார்த்துப்போ பார்த்துப்போ.....

இது யாரு விட்ட வண்டி
சர்க்காரு விட்ட வண்டி.... (2)

கட்டிங் போட போறவங்க
குவாட்டர் காரன முறைக்க
குவாட்டர் போட போறவங்க
ஆஃப் காரன முறைக்க

ஆஃப் வாங்கி போறவங்க
ஃபுல்லு காரன முறைக்க
சாதா பாருக்கு போறவங்க
ஏசியப் பார்த்து முறைக்க

கூலிங் இல்லா பீருக்கு
கூடக் காசு வாங்குறான்
தட்டிக் கேட்டுப் போனாக்க
தப்புத் தப்பாப் பேசுறான்
நாங்கல்லாம் இல்லையினா
சர்க்காரெங்கே சொல்லுமைய்யா?!

(ஒத்திப்போ)

கத்தாரில் 50ஆம் வருடப் புத்தகக் கண்காட்சி

 




கத்தாரில் 50ஆம் வருடப் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. முன்கூட்டியே இணையத்தில் பதிவுசெய்து குழந்தைகளையும் அனுமதிக்கும் நேரமான மாலை 4:00 மணிக்குமேல்தான் கிளம்பினோம். வாகன நிறுத்தத்திற்கு பணமெல்லாம் வாங்கவில்லை. ஆனால் மிகப்பெரிய வரிசை காத்திருந்தது.பையனை அனுமதிக்க ஊசிபோட்டதற்கான சான்றிதழையெல்லாம் காட்டித்தான் உள்ளே விட்டார்கள். பாப்பாவை அனுமதிக்க மீண்டும் வேறு வரிசையில் வரச்சொன்னார்கள். எப்படியோ அடித்துப் பிடித்து உள்ளே போனால் நிறைய அரபிக்கடைகளாகவே இருந்தது. அரபிகள் அள்ளிச்சென்றதைப் பார்க்கையில் எத்தனைபேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒரே ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் விலைகேட்டேன். வெளியே உள்ளதைவிட அதிகமாகவே விலை வைத்துள்ளார்கள் என்பதால் நாங்கள் வாங்கவில்லை. இருப்பினும் இப்போதும் இத்தனை நூல் விரும்பிகள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு வருகிறார்கள் என்பதைப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆம்....செல்வத்தால் உயர்ந்த நாடு கல்வியறிவிலும் உயர இப்பேர்பட்ட புத்தகக் கண்காட்சிகள் தேவையே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாதுதான். ஆமாம்...நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?!
 
✍️செ. இராசா

நல்ல நடிகனாலும்
தொடர்ந்து நடிக்க முடியவில்லை...
தாம்பத்யத்தில்
✍️

17/01/2022

சபையறிந்து பேசு -------- வள்ளுவர் திங்கள் 194 (கவிதை-2)

 குடிக்கும் சபையைக் குறளரங்கம் ஆக்கி
அடிக்கும் நபரை அடி
(1)

குறளோதும் மன்றத்தில் கூடிய பின்னால்
உறங்கும் நபரை உதை
(2)

தமிழ்கூறும் நல்லரங்கில் தங்கிலீசு என்றால்
அமிலத்தை அள்ளி அடி
(3)

ஆன்மீகக் கூட்டத்தில் ஆபாசம் பேசினால்
சான்றோராய் எண்ணாமல் சாத்து
(4)

சிறுவர்கள் பள்ளிக்குச் சேக்கிழார் வந்தால்
சிறுகவி தந்தால் சிறப்பு
(5)

வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்தபின்னும்
வேலையைப் பேசுபவர் வீண்
(6)

இலக்கிய மன்றத்தில் எக்கருத்தும் பேசார்
இலக்கியச் செம்மலாம் இங்கு
(7)

இணைய அரங்கத்தில் எல்லோரும் பார்க்கத்
தனைத்தான் புகழ்வாரைத் தள்ளு
(😎

பேசுபவர் பேச்சைப் பெரிதாக எண்ணாமல்
பேசுபவர் பேச்சாப் பெரிது?!
(9)

சபைக்குத் தகுந்தாற்போல் சால்பாகப் பேசல்
சபையாளும் வல்லமையின் சான்று
(10)

✍️செ. இராசா