22/06/2017

இன்றைய பள்ளிக்கூடங்கள்



பள்ளிகள் தருகிற தொல்லைகளால்- பலர்
படுகிற வேதனை கொஞ்சமில்லை!
பணத்தை பறிக்கிற பள்ளிகளில்- நல்ல
பண்பை படிப்பிக்க எண்ணமில்லை!

மனனம் செய்கிற கல்வியினால்- பலர்
மறைபொருள் யாதென அறிவதில்லை!
மதிப்பெண் குறைகிற மாணவனை-நல்ல
மதியில்லை என்பது சரியில்லை!

குறைவாய் படிக்கிற மாணவனை- ஒரு
குறையாய் சொல்வது நியாயமில்லை!
குறையாய் காண்கிற பள்ளிகளோ- அந்த
குறையை நீக்கிட முயல்வதில்லை!

குற்றங்கள் சுமத்திடும் பள்ளிகளால்- பல
குடும்பத்தில் குழப்பங்கள் தீர்வதில்லை!
குடும்பமும் கூடமும் ஒன்றானால்- ஒரு
குடிமகனும் நம்முள் கெடுவதில்லை!

பணமே குறியாய் நினையாமல்- நல்ல
படிப்பைத் தருவதே அறமாகும்!
பண்பின் மாண்பினைத் தவறாமல்- நல்ல
பள்ளியாய்த் திகழ்ந்தால் சிறப்பாகும்!

நான் எனும் மண் குடம்


கடலில் வீழ்ந்த மண் குடங்கள்
கடலின் அடியினில் சென்றனவாம்!

குடத்தின் அகத்து நீரினையே
குடங்கள் தனதாய் நினைத்தனவாம்!

வேறு குடங்களை தாழ்வாக
வெற்று குடங்களாய் இகழ்ந்தனவாம்!

கடலில் வீழ்ந்ததை அவைமறந்து
கடலை வெளியே தேடியதாம்!

பெரிய திமிங்கலம் அங்குவர
பொடியாய் போனதாம் மண்குடங்கள்!

மட்கலம் போலவே மனிதர்களும்
மறந்தனர் கடலெனும் கடவுளையே!

மட்கலம் என்னும் 'நான்' உடைந்தால்
மனிதனும் கடவுளும் ஒன்றாகும்!

நேற்றும் இன்றும்/ தீதும் நன்றும் பிறர்தர வாரா



இன்றைய தோல்வி வலிப்பதன் காரணம்
நேற்றைய வெற்றியால் துள்ளியதே!

இன்றைய இழப்பில் துவழ்வதன் காரணம்
நேற்றைய வரவால் ஆடியதே!

இன்றைய வாழ்வின் வறுமையின் காரணம்
நேற்றைய கர்மத்தின் வினையாலே!

இன்றைய சமூக நிகழ்வின் காரணம்
நேற்றைய தவற்றின் விளைவாலே!

இன்றைய அரசின் ஆட்டத்தின் காரணம்
நேற்றைய மெத்தனப் போக்காலே!

இன்றைய துரோகங்கள் வந்ததன் காரணம்
நேற்றைய கூடா நட்பாலே!

இன்றைய கொடுமைகள் நடப்பதன் காரணம்
நேற்றைய அலட்சிய மனத்தாலே!

இன்றைய நிகழ்வுகள் அனைத்தின் காரணம்
நேற்றைய சிந்தனைச் செயலாலே!

நாளைய நினைவுகள் இனித்திட வேண்டின்
இன்றைய நாளை அலங்கரிப்போம்!

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"
கூற்றினை மனதில் நிறுத்திடுவோம்!

கணங்கள் முழுமையும் உண்மையில் வாழ
கடின மனதைப் பழக்கிடுவோம்!

தந்தையர் தின வாழ்த்துக்கள்




உதிரத்தைக் கொடுத்து உடலைக் காத்து
உயிராய் நம்முள் உறைபவள் தாய்!
உதிரத்தை விதைத்து உயிராய் பதிந்து
உணர்வாய் நம்முள் கலந்தவர் தந்தை!

முன்நூறு நாட்கள் வயிற்றினில் வைத்து
இடையூறு தன்னுள் பொருத்தவள் தாய்!
பலநூறு நாட்கள் நினைவினில் சுமந்து
இடையூறு வென்றிட வளர்ப்பவர் தந்தை!

அகிலத்தில் அன்பை அறிமுகம் செய்து
அன்பின் வடிவாய் திகழ்பவள் தாய்!
அகிலத்தில் அறிவை நம்முள் விதைக்க
அனைத்து முயற்சியும் செய்பவர் தந்தை!

என்றும் தாயையும் தந்தையையும் நினைப்போம்.

குடிமகனின் வகைகள்


குடிகார மனிதர்களை
குடிக்கின்ற அளவாலே
மூன்றாக பிரிப்பதாக
மூத்தகுடி மகனொருவன்
குடிபற்றி சொன்னதையே
குறிப்பாக எழுதுகின்றேன்!


வருடத்தில் என்றேனும்
விழாக்கால நாள்மட்டும்
விருந்தினர் மகிழ்விற்காய்
விருப்பம் இன்றி குடிப்பவனே
கவுரவக் குடிமகனாம்!

வாரத்தில் ஒருநாளில்
விடுமுறை நாள்மட்டும்
விழாபோல கொண்டாடி
விருப்பம்போல குடிப்பவனே..

ராஜகுடி என்பவனாம்!
வருடத்தின் நாள்முழுவதும்
விடுமுறை தினம்போல
விடாமல் குடிப்பவனே...
வீழ்ந்தே கிடப்பவனே..
பண்ணிக் குடிமகனாம்!

குடிமகனைத் தரம் பிரித்த
குடிமகனின் நிலை இன்று
மூன்றாகத் தரம் உயர்ந்து
முன்னேற்றம் அடைந்தானாம்!

சிறுகுடியோ பெருங்குடியோ
ராஜகுடியோ பண்ணிக்குடியோ
எந்தகுடி ஆனாலென்ன
எல்லாமே குடிதானே?!

பானையிலே சீனியிட்டு
பாகற்காயை அதிலபோட்டு
பலநாளு ஊறவைச்சா
படுங்கசப்பு மாறிடுமா?!

புத்திகெட்ட மனுசங்கிட்ட
புட்டிதொட வேணாமுன்னு
புத்திமதி சொல்லுப்புட்டா
புத்தியிலே ஏறிடுமா?!

நிறங்களில் பேதமில்லை/ மதங்கள் என்பது யாது?


இறைநிலை ஒன்றை அறிந்திடவே
இருக்கின்ற மதங்கள் முயல்கிறது!
முன்னோர் காட்டிய பாதையிலே
முனைந்தே மதங்கள் செல்கிறது!


மலையின் உச்சியை அடைந்திடவே
பாதைகள் பலவாய் உள்ளதுபோல்
மறைபொருள் உண்மையை அறிந்திடவே
மதங்களை உலகில் படைத்தனரோ?!

பாதையும் பயணமும் வேறெனினும்
குறிக்கோள் ஒன்றே இலக்காகும்!
மதங்களும் மறைகளும் வேறெனினும்
இறைநிலை ஒன்றே முடிவாகும்!

தன்வழிப் பாதையே அறியாதோர்
பிறர்வழிப் பாதையைத் தீதென்பார்!
தன்குறை எதுவெனத் தெரியாதோர்
பிறர்குறை உள்ளதாய் போதிப்பார்!

கடல்நீர் நீலமாய்த் தெரிந்தாலும்
நீருக்கு நிறங்கள் கிடையாது!
கடவுளை மதங்கள் கூறினாலும்
மதமே கடவுளாய் ஆகாது!

சமூக வலைத்தளங்கள் (Facebook, WhatsApp...)



நல்லதும் கெட்டதும்
அலைவழி வந்திடும்!
வாழ்த்தும் வருத்தமும்
அதன்வழி சென்றிடும்!

பொம்மைக் குறியீடே
உணர்வாய் வெளியாகும்!
மனதின் எண்ணங்களோ
ஃபேஸ்புக் பதிவாகும்!

உறவின் நேசமெல்லாம்
வாட்சப்பில் உயிர் வாழும்!
தூரம் தொலைந்தாலும்
காலம் காலாவதியாகும்!

இங்கேதான்அனைவருமே
புகைப்படக் கலைஞர்கள்!
இங்கேதான் அனைவருமே
தத்துவ சிற்பிகள்!

பாடிடும் அனைவருமே
மனதினில் பாடகர்கள்!
எழுதிடும் அனைவருமே
மனதினில் கவிஞர்கள்!

மாயை உலகமிதில்
மயங்கிடார் யாருமுண்டோ?!

சரியாய் உள்ளதுபோல்
தவறும் இருக்கிறது
தவறாய் உள்ளதுபோல்
சரியும் இருக்கிறது

புலன்கள் அனைத்திற்குமே
ஓய்வு அவசியமே!

விரல்கள் ஓய்வுரவே
விரதங்கள் இருந்திடலாம்!
செவிகள் அமைதியுர
ஹெட்போன் தவிர்த்திடலாம்!


சுழற்சி விதி / பணமும் கடனும்




(1)

பணம் வந்தால் கடன் நீங்கும்!
கடன் நீங்கினால் சுமை குறையும்!
சுமை குறைந்தால் வீடு அமையும்!
வீடு அமைந்தால் நல்வரண் வாய்க்கும்!
நல்வரண் வாய்த்தால் மணம் முடியும்!
மணம் முடிந்தால் மனம் குளிரும்!
மனம் குளிர்ந்தால் மழலை பிறக்கும்!
மழலை பிறந்தால் பொறுப்பு வரும்!
பொறுப்பு வந்தால் பொறுமை வரும்!
பொறுமை வந்தால் பணிவு வரும்!
பணிவு வந்தால் அன்பு விரியும்!
அன்பு விரிந்தால் சுற்றம் பெருகும்!
சுற்றம் பெருகினால் இன்பம் பெருகும்!
இன்பம் பெருகினால் செல்வம் குறையும்!
செல்வம் குறைந்தால் கடன் வரும்!
கடன் நீங்கிட பணம் வேண்டும்!
பணம் வந்தால் கடன் நீங்கும்! ..... (மீண்டும்)


(2)

கடன் இருந்தால் நிம்மதி போகும்!
நிம்மதி போனால் வாழ்வே கசக்கும்!
வாழ்வு கசந்தால் உலகம் வெறுக்கும்!
உலகம் வெறுத்தால் சினம் வெடிக்கும்!
சினம் வெடித்தால் வன்முறை பிறக்கும்!
வன்முறை பிறந்தால் மரணம் நிகழும்!
மரணம் நிகழ்ந்திட ஜனனம் எடுக்கும்!
ஜனனம் எடுத்தால் வாழ்ந்திட வேண்டும்!
வாழ்ந்திட வேண்டின் செல்வம் வேண்டும்!
செல்வம் வேண்டின் அறிவு வேண்டும்!
அறிவைப் பெருக்கிட கல்வி வேண்டும்!
கல்வி வேண்டின் பணம் வேண்டும்!
பணத் தேவைக்கு கடன் வேண்டும்!
கடன் இருந்தால் நிம்மதி போகும்!
(மீண்டும்)

11/06/2017

விஞ்ஞானி மெய்ஞானி- ஒப்பீடு




உடலும் உயிரும் இயங்கிடும் முறையை
உலகும் கோளும் சுழன்றிடும் நிகழ்வை
அனைத்து படைப்பின் ஆற்றல் நிலையை
ஆராய்ந்து அறிவது அறிவியல் ஞானம்!

உடலையும் உயிரையும் இயக்கிடும் ஆற்றலை
உலகையும் கோளையும் சுழற்றிடும் சக்தியை
அனைத்து படைப்பின் ஆதார மூலத்தை
உள்ளூர உணர்வது ஆன்மீக ஞானம்!

கற்பனை உருவில் கணிதத்தை கலந்து
சோதனை முயற்சியை தினமும் செய்து
தானாய் அமைத்த பாதையில் நடந்து
தடுமாறி எழுந்து ஜெயிப்பவன் விஞ்ஞானி!

கற்பனை உருவைக் கற்சிலை செய்தோ
உருவம் அல்லா அருவத்தைத் தொழுதோ
தனக்குத் தெரிந்த பாதையில் நடந்தே.......
தன்னை தன்னால் ஜெயிப்பவன் மெய்ஞானி!

எழுத்துக்கள் மட்டுமே சத்தியம் (எழுதியவனல்ல)




நட்பின் சிறப்புபற்றி
நான்கு வரியினிலே
நான்கு வருடம் முன்பாக
நானே எழுதியது;


"நினைவில் வைத்து
கனவில் காண்பதல்ல நட்பு !.
மனதில் புதைத்து மரணம்வரை
தொடர்வதுதான் உண்மையான நட்பு !!"

இவ்வரிகள் எழுதியமைக்கு...
இன்று நான் வருந்துகிறேன்
இறந்தவன் முகம்பார்க்க
இங்கிருந்து செல்லாமல்
மரணம் வரை தொடர்வதாக
வார்த்தைகளில் எழுதியுள்ளேன்!

வாழ்ந்துவிடத் தவறிவிட்டேன்!

மனத்தாலே மொழியாலே
மண்டியிட்டு வேண்டுகிறேன்
மன்னியுங்கள் இப்பாவியினை....

Sorry da Bose......
I'm not with you in your last moment.

07/06/2017

தவறாய்ப் பேசினால் தவறில்லை/ ஆங்கிலம் சாத்தியமே


அகிலத் தொடர்பின் மொழியான
ஆங்கிலம் அறிவது அவசியமே!
ஆயினும் அம்மொழி அறியாதோர்
அதையொரு குறையாய் நினையாதீர்!

பள்ளியில் கற்காப் பிறமொழிகள்
சீக்கிரம் சரளமாய் பேசுகையில்
பள்ளியில் படித்த ஆங்கிலத்தை
பிறரிடம் பேசிட தயங்குவதேன்?

அதிகம் தெரிந்தே இருந்தாலும்
அதுஏன் பேசிட வருவதில்லை?
அதற்கு காரணம் மொழியில்லை
அவசியம் இல்லா பயவுணர்வே!

அடுத்தவர் பேசிடும் ஆங்கிலத்தில்
குறைகள் சொல்லிடும் வழக்கத்தை
ஆங்கில நாட்டினர் கொள்ளவில்லை!
அதைஏன் நம்மவர் உணர்வதில்லை!

நூறு வார்த்தைகள் தெரிந்தாலே
எம்மொழி ஆயினும் பேசிடலாம்!
வார்த்தைகள் அதிகம் தெரிந்தாலும்
வேகமாய் பேசிடத் தயங்குவதேன்?!

உயர்வு தாழ்வு எண்ணங்களால்
உள்ளத்தின் வார்த்தைகள் வருவதில்லை!
ஆங்கிலம் பேசினால் உயர்வாக
ஆழ்மனம் சொன்னால் அழித்திடுவீர்!

தவறாய்ப் பேசினால் தவறில்லை!
தடுமாறிப் பேசினால் தவறாகும்!
அலட்சிய மனதுடன் பேசிடுவோம்!
அறிந்தால் தவறைத் திருத்திடுவோம்!

சித்திரம் வரைவது கையாலே!
சிந்தனை தெரிவது மொழியாலே!
சூத்திரம் எதுவும் தேவையில்லை
சூழ்நிலை அமைந்தால் சாத்தியமே!

பிறப்பும் இறப்பும்


உயிராய்ப் பிறந்ததும் வைத்திடும் நாமம்!
உயிரை விட்டதும் பிணம் என்றாகும்!
தொட்டியில் தொடங்கிய உறக்கத்தின் பயணம்!
பெட்டியில் உறங்கிட மரணம் என்றாகும்!

இறந்திடும் உயிர்பின் எங்கே சென்றிடும்?
பிறந்திடும் முன்உயிர் எங்கே இருந்திடும்?
உண்மையை உணர்ந்தவர் எங்கே உள்ளனர்?
உணர்ந்தவர் உண்மையை எங்ஙனம் உரைப்பர்?

கருவரை தோன்றிய பிண்டங்கள் யாவும்
கல்லரை போவது காலத்தின் ஓவியம்!
சுயமாய் தோன்றிய பிம்பங்கள் யாவும்
சூன்யமாய் மறைவது புரியாத ரகசியம்!

ஆவதும் அழிவதும் கண்முன் காணினும்
ஆணவம் கர்வம் குறைந்திட வில்லையே!
பிறப்பும் இறப்பும் நம்முன் நடப்பினும்
பிறப்பின் நோக்கம் புலப்பட வில்லையே!

'ஆராரோ' ராகம் ஆனந்த கானம்!
'அய்யய்யோ' ராகம் முடிவின் சோகம்!
கானமும் சோகமும் வாழ்வின் கீதங்கள்!
பாடிடும் யாவரும் இறைவனின் ரூபங்கள்

06/06/2017

நம்ம தல தோனி



இளம் வயதில்
முதல் வேலை
இந்தியன் இரயில்வேயில்...

ஒரு பக்கம் பணி ஓட்டம்
மறு பக்கம் கிரிக்கெட் ஆட்டம்
இரண்டிலுமே கால்வைத்து
இளைப்பாற நேரமில்லை...

ஒரு சமயம் பணியினிலே .
பிறர் செய்த தவறொன்று
தன்தலையில் விழுந்துவிட...
பழிச்சொல்லின் வார்த்தைகள்
இளநெஞ்சில் தைத்துவிட....
இடிவிழுந்த மரம்போல
இதயத்திலே ஐயத்துடன்
இனியென்ன செய்வதென?
பலவாறு தான் குழம்பி
பலநேரம் தனிமையிலே
பலகையிலே அமர்ந்திருந்தார்...

பக்கத்திலே ஓர் உருவம்
பகவானாய் வந்தமர்ந்து
வாழ்க்கையின் விளையாட்டை
விளையாடும் வழியதனை
ஒவ்வொன்றாய் கூறியது;

வாழ்க்கையும் கிரிக்கெட்டும்
விளையாடும் முறையொன்றே!
பிரச்சனைகள் பந்துகளாய்
பறந்தே வந்துவிடும்!
ஒவ்வொன்றும் ஒருவிதமாய்
யுக்தியுடன் ஆட வேண்டும்!

சில பந்தை அடித்திடனும்...
சில பந்தை தவிர்த்திடனும்..
தவிர்க்கும் பந்துகளை
அடித்திட நினையாதே!
அடுத்திடும் பந்துகளை
கணித்திட மறவாதே!

சிலநேரம் பிறர்நேரம்
சிரமத்தை பொறுத்துவிடு!

உன்நேரம் வரும்நேரம்
உதிரத்தில் சக்தியினை
உடனடியாய் கூட்டிவிடு!

மூத்தவர் கங்குலியின்
வார்த்தைகள் ஒவ்வொன்றின்
உள்ளர்த்தம் புரிந்ததுமே
உள்ளத்திலே பதித்துவிட்டார்
உயரத்தையும் அடைந்துவிட்டார்....

தலைமையைத் துறந்தாலும்
தலையினில் ஏற்றாத
தன்மையால் என்றென்றும்
தலையாய்த் திகழ்கின்றார்...

நம்ம தல தோனி.....

தொக்கி நிற்கும் கேள்விகள்



நாலுபேரு சொல்லிவிட்டால்
பொய்யும் மெய்யாகுமா?
காசுபணம் கூடிவிட்டால்
நட்பும் எதிர்ப்பாகுமா?


பொறாமையும் போட்டியும்
குடும்பத்தில் வேண்டுமா?
பொல்லாங்கு சொல்லுதல்
எவருக்கும் அடுக்குமா?

பெரியண்ணன் சொல்வதெல்லாம்
வேத வாக்காகுமா?
பெருங்குடும்பம் கலைந்துவிட்டால்
மரியாதை கிடைக்குமா?

உணவினை தடுப்பது
அறச் செயலாகுமா?
உறவினை கெடுப்பது
மறப் பண்பாகுமா?

நண்பனின் நண்பனாய்
இருந்திடல் வேண்டாமா?
நம்பினோர் வயிற்றினில்
அடித்திடல் நியாயமா?

வாழ்வின் சக்கரமும்
சுழல்வது தெரியுமா?
வாழ்வதும் வீழ்வதும்
கணித்திட முடியுமா?

05/06/2017

போதை


மயக்கும் கள்ளும் போதை!
நயக்கும் சொல்லும் போதை!

குருட்டு பக்தியும் போதை!
திருட்டு உறவும் போதை!

அளவில்லா பணமும் போதை!
அதிகாரப் பதவியும் போதை!

கர்வம்தரும் கல்வியும் போதை!
கண்ணைக்கட்டும் களிப்பும் போதை!

அகங்கார அறிவும் போதை!
அலங்காரப் பெண்ணும் போதை!

எந்நேரம் முகநூல் போதை!
எழுதுகின்ற கவிதை போதை!

சிலநேரம் கிரிக்கெட் போதை!
பலநேரம் சினிமா போதை!

சிலருக்கோ கணினி போதை!
பலருக்கோ கைப்பேசி போதை!

'திராவிடம்' சொல்லே போதை!
தமிழனுக்கு தமிழே போதை!

தமிழனின் மறதியும் போதை!
தனிமனிதத் துதிகளும் போதை!

அளவை மீறும் அனைத்தும் போதை!
அறிவை மயக்கும் அனைத்தும் போதை!

முகநூல் விண்ணப்பம்



 ஒருநாளில் பலநேரம்
பலநாளில் சிலநேரம்
முகநூலில் கழிக்கின்றேன்!

பலநூல்கள் கற்காமல்
மின்நூல்கள் துணையோடு
அறநூல்கள் சிலபயின்று
முகநூலின் பயிற்சியினால்
கவிநூலைத் தொகுத்திடவே..
மனநூலில் போட்டுள்ளேன்!

என்நூலும் என்றேனும்
தனிநூலாய் வெளிவரவே...
தமிழ்நூலில் அந்நூலும்
நன்நூலாய் சிறந்திடவே...
முகநூலின் நண்பர்களை
இந்நாளில் வேண்டுகின்றேன்!🙏🙏

யாரேனும் சொல்வீர்களா?/ முதியவரின் ஏக்கம்


தம்மக்கள் அனைவருமே
தலைநிமிர்ந்து நடந்திடவே
என்நேரம் உழைத்தவனை
ஏணியாய் இருந்தவனை
உறவுகள் மறந்திடுமா...?!

விண்ணோடு சென்றவிட்ட
என்னோட மனையாளின்
அன்பான தருணங்கள்...
அழியாத நினைவலைகள்
அதுமட்டும் மருந்தாகுமா....?!

உதிரத்தின் சொந்தங்கள்
எமைவந்து பார்த்திடவே
இருநூறு முறை வேண்டி
இருவிழிகள் தேடிடுதே
என்றேனும் வருவார்களா?!

இருநாட்கள் தங்கிவிட்டால்
அந்நாட்கள் நினைவினிலே
எந்நாளும் வாழ்ந்திடுவேன்
இவ்வுண்மைச் சேதியினை
யாரேனும் சொல்வீர்களா?!


(Photo courtesy Mr. Jegan Nath)

04/06/2017

முகநூல் விண்ணப்பம்



ஒருநாளில் பலநேரம்
பலநாளில் சிலநேரம்
முகநூலில் கழிக்கின்றேன்!

பலநூல்கள் கற்காமல்
மின்நூல்கள் துணையோடு
அறநூல்கள் சிலபயின்று
முகநூலின் பயிற்சியினால்
கவிநூலைத் தொகுத்திடவே..
மனநூலில் போட்டுள்ளேன்!

என்நூலும் என்றேனும்
தனிநூலாய் வெளிவரவே...
தமிழ்நூலில் அந்நூலும்
நன்நூலாய் சிறந்திடவே...
முகநூலின் நண்பர்களை
இந்நாளில் வேண்டுகின்றேன்.....

03/06/2017

தற்பெருமை


தமிழ்மறைப் பெரும் புலவன்
தன்புகழைப் பாடிடவே- ஓர்
தனிக்குறளும் படைக்கவில்லை!
தனக்காகத் தன்னாலே
தனிப்பெயரும் வைக்கவில்லை!

ஞானத்தின் கருத்தெல்லாம்
ஞாலத்தின் பார்வைக்கு
ஞானியவன் தந்தபின்னும்
தன்நாமம் இதுவென்று
எங்கேயும் கூறவில்லை!

இங்கேயாம் இரு வரிகள்
இணைத்தேதான் எழுதிவிட்டால்
இளங்கவிஞர் எண்றெண்ணி
இறுமாப்பு கொள்கின்றோம்...
இருபுருவம் உயர்த்துகின்றோம்..

தற்பெருமை கொள்ளாத
தன்மையை யாம்கற்றிடவே
தரணிக்கு புரியவைத்த
தமிழன்னைத் தலைமகனைத்
தலைதாழ்த்தி வணங்கிடுவோம்!

தற்பெருமைக் குணமதனைத்
தலையினிலே ஏற்றாது
தமிழ்க்கிழவன் வழிநின்று
தனியாகத் தெரிந்திடுவோம்!
தமிழ்போல நிலைத்திடுவோம்!

சென்னை சில்க்ஸ்- உமக்கு எம் நன்றிகள்




இடம் தீயால் எரிந்தபின்னும்
இடர் தீயின் அனல் பொருத்து
இறைத் தீயின் வினையென்றே
இத்தீயை நீர் நினைத்து-உம்
இதயத் தீயில் நீரிறைத்தீர்!

கடைத் தீயால் ஊழியர்கள்
பயத் தீயால் மனதினிலே
பசித் தீயை நினைத்தார்கள்!
கொடும் தீயது பற்றாது
உளத் தீயினில் நீரிறைத்தீர்!

வாழ்வீர் நீர் பல்லாண்டு!
மீள்வீர் நீர் பலத்தோடு!

சாமிக்குள் சாதி




ஒரு ஊரின் நடுவினிலே
கண்ணன் சாமி கோவில்!
கண்ணன் சாமி ஆட்டம் பார்க்க
ஒரே பக்தி கூட்டம்!


கழுத்தெல்லாம் மாலைகளாய்
ஒவ்வொன்றாக வீழும்!
குழந்தைகளும் குமரிகளும்
கன்னங்களில் போடும்!

அதே ஊரின் மறுதிசையில்
முனி சாமி கோவில்!
அந்த சாமி ஆட்டம்பார்க்க
அங்கும் ஓரு கூட்டம்!

முக்தியேறி போன முனி
ஊரச் சுத்தி வருது..
காலில் விழும் அனைவருக்கும்
ஆசிகளைத் தருது...

ஆடிவந்த முனிசாமி
கண்ணன்சாமியப் பார்க்க...
கண்களிலே பேசியதும்
கரங்கள் நான்கும் கோர்க்க....

இதைப்பார்த்த ஒரு மனுசன்
குய்யோ...முறையோன்னு கத்த....
என்னவென்று விளங்கவில்லை
சிறுவர்களுக்கு மட்டும்...

சாமிகளில் சாதியென்றும்
சாதிபார்க்கும் சாமியென்றும்
எதுவுமில்லை மக்கா...
எங்குமில்லை மக்கா...

கார்ப்பரேட் வேலை




கார்ப்பரேட் முதலைகளின்
காட்டுதர்பார் கண்டோர்....
கொடுங்கோலன் ஹிட்லர்கூட
பரவாயில்லை என்பர்!


காளைமாட்டில் பால்கறக்க
முடிந்தாலும் முடியும்....
கார்ப்பரேட்டில் விசுவாசம்
எந்நாளும் வேசம்!

பொதிசுமக்கும் கழுதைங்கதான்
கம்பெனியின் செல்வம்!
பொதுவுடைமை கதைத்தாலோ
கட்டம் கட்டப்படுவோம்!

பல்லாக்கு தூக்குபவன்
பதவிஉயர்வு பெறுவான்!
பணிநன்றாய் பார்ப்பவனோ
வாழ்த்துமட்டும் பெறுவான்!

போட்டுக்கொடுக்கும் அனைவருமே
நிறுவனத்தில் தங்கம்!
பொறுமைகாக்கும் அன்பர்களோ
பொழுதுப்போக்கும் தெண்டம்!

விடுமுறைன்னு போயிநின்னால்
தள்ளிப்போடு என்பான்!
விருப்பமான வேலைக்காரன்
நாமதான்னு சொல்வான்!

சம்பளத்த ஏத்தச்சொன்னால்
சரித்திரங்கள் சொல்வான்!
வரும் ஆண்டில் செய்வதாக
வாயில்வடை சுடுவான்!

பேப்பர்யாரும் போட்டுவிட்டால்
போய்விடாது தடுப்பான்!
உண்மையாக உழைப்பவனை
உடனேபோ என்பான்!

கார்ப்பரேட்டில் கருணையினை
என்னவிலை? என்பர்!
கருவாட்டில் புது ரத்தம்
எங்கே? எனக் கேட்பர்!