31/08/2019

கற்றகலை வித்தைகளை

கற்றகலை வித்தைகளை கற்றதுபோல் பற்றிடனும்
பற்றியதை விட்டிடாமல் பற்றியதில் முற்றிடனும்
முற்றியதும் நின்றிடாமல் முற்றின்றி கற்றிடனும்

#தமிழே_வா- இடையூறு செய்யாத எழுத்தை

#தமிழே_வா
*************
இடையூறு செய்யாத எழுத்தை
தடையேதும் இல்லாமல் தா- தமிழே
உடைகட்டி உரையாடும் எழுத்தை
தடைபோட்டு தடுத்தாள வா!

நடைமாற்றி நடிக்கின்ற உறவை
விடையின்றி வெளியேற்ற வா- தமிழே
எடைபோட்டு பார்க்கின்ற உறவை
மடைபோட்டு மறித்தாட வா!

கடையேழு வள்ளல்கள் மனத்தைக்
கொடையாகக் கொடுத்தாள வா!-தமிழே
குடைபோல காக்கின்ற குணத்தை
அடைகின்ற ஞானத்தைத் தா!

✍️செ. இராசா

30/08/2019

பூவோடு நிற்கின்ற பூனையைப்போல்





பூவோடு நிற்கின்றப் பூனையைப்போல் அன்போடு
பாவோடு நிற்கின்றேன் பார்!

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா!!



பாரி முதல் காரி வரை
பாரிலுயர் சரித்திரமும்
கலைஞர் முதல் கவிக்கோ வரை
கலக்கியவர் கதைகளையும்
கண்ணன் முதல் திண்ணன்* வரை
கடவுள்பக்தி வரிகளையும்
என்னெழுத்தில் எழுதியதை
எத்தனை பேர் படித்தீரோ?!

பாரதியின் சாடலிலே
பாமரன்நான் முயன்றதையும்
வள்ளுவரின் வரிபிடிக்க
தெள்ளுத்தமிழ் பயில்வதையும்
கவியரசர் நடைபிடிக்கத்
தவியாகத் தவிப்பதையும்
என்னோடு பயணிக்கும்
எத்தனைபேர் அறிவீரோ?!!

வெண்பாவைப் படைத்திடவே
கண்பாவைத் துடிப்பதையும்
துளிப்பாவை** எழுதிடவே
துடிப்போடு இருப்பதையும்
புதுக்கவிதை செய்திடவே
புதியநடை பிடிப்பதையும்
என்னோடு நட்பாடும்
அன்பானோர் அறிவீரே!!!

எண்ணிக்கையில் குறைவெனினும்
எண்ணத்திலே உயர்ந்தோரே;
என்னெழுத்தில் ஏதேனும்
உண்மையிலே குறையிருந்தால்
என்னகுறை எனச்சொல்லி
பின்னூட்டம் இடுவீரா?!
உங்களிடம் இன்றைக்கு
உரிமையோடு கேட்கின்றேன்....!!

✍️
செ. இராசா

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா!!
😊😊😊😊

*திண்ணன்- கண்ணப்ப நாயனார்
**துளிப்பா- ஹைக்கூ

28/08/2019

இடுப்பு மடிப்ப எழுதிக் குவிச்சு

இடுப்பு மடிப்ப எழுதிக் குவிச்சு
கடுப்பைக் கெளப்பும் கவிஞா- உடுப்பு
விடுத்த கவிதை விடுத்து துடிப்பில்
அடுத்த கவிதை அளி!

பாவம் ஹைக்கூ.

ஹைக்கூ என்பது வாமன வடிவம்போல்;
மூன்றாம் அடியில்தான் சூட்சமம்
இல்லையேல் பாவம் ஹைக்கூ...😭😭😭

சேலையில தூளி கட்டி



சேலையில தூளி கட்டி
சீரா நல்ல பாட்டு கட்டி
செல்லங்கள தூங்க வச்சோம் அப்போ!
கக்கத்துல பேபி வச்சு
பக்கத்துல டேபு வச்சு
செல்லங் காட்டி கெஞ்சுறாங்க இப்போ!

ஆடுமாடு கோழி காட்டி
ஆகாயத்தில் நிலவு காட்டி
சோறு ஊட்டி வளர்த்ததெல்லாம் அப்போ!
தட்டிதட்டி சேனல் மாற்றி
குட்டிசுட்டி படத்த ஓட்டி
டிபன் திங்க சொல்லுறாங்க இப்போ!

காலுமேல குத்த வச்சு
மேலுமேல தண்ணி ஊத்தி
குளிக்கவச்ச காலமெல்லாம் அப்போ!
சிட்டிங் சேரு மேல வச்சு
புட்டிப் பாட்டில் வாயில் வச்சு
கொடுமைகட்டி அடிக்கிறாங்க இப்போ!

மண்ணுமேல கைய வச்சு
ஒன்னு ரெண்டு எழுத வச்சு
படிக்க வச்ச காலமெல்லாம் அப்போ!
யூடிபில பாட்டப் போட்டு
நோட்பேடுல குந்திக் குட்டு
என்னென்னமோ செய்யுறாங்க இப்போ!

பம்பரங்கள் ஆடிக் கிட்டு
பச்சக் குதிரைத் தாண்டி வந்து
கபடியெல்லாம் ஆடுனாங்க அப்போ!
டெம்பில் ரன்னில் ஓடிக்கிட்டு
பப்ஜி கேமு ஆடிக்கிட்டு
லெவலத் தாண்டி ஓடுறாங்க இப்போ!


(இதுக்கு மேல எழுதினால் நமக்கு அடிவிழுமோ....ச்சும்மா...😊😊😊)

✍️செ. இராசா

*இந்தப் படம் பார்த்தவுடன் தோன்றிய கற்பனையே...இந்த சந்தப்பாடல். மனமார்ந்த நன்றி கிராமத்து வெ. வயிரவன் ஐயா🙏🙏🙏

27/08/2019

கவுனி அரிசி



பர்கரும் பீட்சாவும்
பழகிய தலைமுறைக்கு
கருப்பு கவுனிபற்றி
கவிதையில என்ன சொல்ல?!

ஓட்சும் கெலாக்சும்
உண்ணுகிற தலைமுறைக்கு
சிவப்பு அரிசியோட
சிறப்புகள என்ன சொல்ல?

மருந்த விருந்தாக்கி
அருந்துகிற தலைமுறைக்கு
கூகிள் சொன்னாலும்
கேட்கத்தான் நேரமில்லை...!!!

✍️செ. இராசா

சாப்பிட்டு பாருங்க அல்வா மாதிரி இருக்கும்

ஆம் நண்பர்களே. நமது நாட்டின் மன்னர்கள் ஆட்சியில் அரசர்கள் மற்றும் அரசிகள் சாப்பிடும் அரிசி என்று பெயர் பெற்ற கருப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி பயன்பற்றி நமக்கு தெரியுமா?

ஆனால் சீனா வில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த அரிசியின் மகத்துவம் பற்றி தெரிந்ததனால் உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவில் இந்த அரிசியை பயிரிட்டு வருகின்றனர். பண்டைய காலத்தில் சீனாவில் இந்த அரிசியை அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சட்டமே இருந்ததாம். நம்ம ராசராசன் சோழன் காலத்தில் இதை ராஜாங்க உணவாக உண்டார்களாம்.

வாரத்தில் 2 முறை இந்த கவுணி அரிசியை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதனால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் அபரிவிதம்.

கவுனி அரிசியின் பயன்கள்
*************************
புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம்.
இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும்.
இந்த கவுனி அரிசி -யில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை, மற்றும் இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது.

மேலும் கவுனி அரிசி -யில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
கவுனி அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது.

இந்த கவுனி அரிசி -யில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும். செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கவுனி அரிசி பொங்கல் இருக்கும்.

26/08/2019

குறள் அந்தாதி--எண்ணத்தை


எண்ணத்தை ஆராயும் எண்ணப் பயிற்சியால்
வண்ணமாய் மாறுமே வாழ்வு!
(1)

வாழ்வை வளமாக்கும் மாண்பு தெரிந்திட
ஆழ்மன எண்ணத்தை ஆய்!
(2)

ஆய்ந்து
ம் அறிந்தும் அடிமன ஆசைகள்
பாய்ந்து வருவதைப் பார்!
(3)

பாரில் அனைத்தையும் பற்றிடும் ஆசையை
வேரின் அடியினில் வெட்டு!
(4)

வெட்டிய பின்னும் வெளிவரும் கோபத்தைக்
கட்டுமே யோகக் கலை!
(5)

கலையாய் மனத்தின் கவலையை நீக்கி
மலையாய் மதியினை மாற்று!
(6)

மாற்றம் வெளியில் வருமென எண்ணாது
மாற்றிட உன்னுள் முயல்!
(7)

முயன்று முயன்று முனைப்புடன் சென்றால்
முயலையும் வெல்லும்:ஆ மை
(8)

ஆமைகள் வந்தால் அழிவோம் என்பதால்
தீமையைக் கொன்றே அழி!
(9)

அழிவதும் ஆவதும் ஆகூழ் பொறுத்தே
விழிப்புடன் செய்வாய் வினை!
(10)

✍️செ. இராசா

#நாநலம் (குறளிள் குரலில்)


நாவெனும் ஆயுதம்
..................கொண்டேதான்
நாட்டினை ஆள்பவர்
..................ஆள்கின்றார்!
#வாய்மையை வசதியாய்
..................மறந்தேதான்
வாய்மெய் மௌனித்து
..................சிரிக்கின்றார்!

நாநலம் காத்திட முயல்வோர்தான்
நாணயம் பெருக்கி வாழ்கின்றார்!
நாநயம் விரும்பும் நல்லோர்தான்
நாணய நட்பால் சிறக்கின்றார்!

#பயனில_சொல்லாப்
.................... பெரியோர்தான்
நயமாய் #இன்சொல்
.....................சொல்கின்றார்!
#புறங்கூறா குணத்தைக்
.....................கொண்டோர்தான்
அறங்கூறும் குணத்தால்
................... வெல்கின்றார்!

✍️செ. இராசா

25/08/2019

#மரத்தின்_கேள்வி?!



கான்கிரீட் காட்டுக்குள்
காலூன்றி நிற்கின்றேன்!

தலையில் வெயிலேற்றி
நிழல்காக்க முயல்கின்றேன்!

பற்றிய தீப்பிழம்பாய்
பற்றாமல் கொதிக்கின்றேன்!

நகர புகைக்குள்ளே
நகராமல் வேகின்றேன்!

காலம் முடியும்வரை
காய்வதுதான் எம் விதியோ?!

ஞானப் புத்தர்களே...
ஞால அறம் இதுதானோ?!

#மரத்தின்_கேள்வி?!

23/08/2019

அழுகை


பிறந்ததை உறுதி செய்ய
பிஞ்சுகள் போடும்
பிள்ளையார் சுழியே
அழுகை

இருந்ததை உறுதி செய்ய
இருப்போரால் தூவப்படும்
அங்கீகார மொழியே
அழுகை

ஆனால்
அழுகை பற்றித்தான்
எத்தனை எத்தனை
மூட நம்பிக்கைகள்..

ஆணின் அழுகை
கோழைத்தனமாம்!
பெண்ணின் அழுகை
ஆபத்தான ஆயுதமாம்!

“வெங்காயம்”

ஆம்
அது உரித்தால்கூடத்தான்
அழுகை வரும்...
காரணம்
இரசாயண மாற்றமே ஒழிய
இருபால் மாற்றமல்ல...

போதும்..
அழுகையிலும்
இனம் பிரிக்காதீர்...

புத்தகம் படித்தும்
படம் பார்த்தும் அழுதுள்ளீர்களா?!
எனில் நீங்களே மென்மையானவர்கள்

அட கொஞ்சம் பொறுங்கள்....
உண்மையில் நீங்களே பலமானவர்கள்

ஆம் சொல்வது அறிவியல்...
சந்தேகமெனில்
கூகுள் மாமாவைக் கேளுங்கள்!

அழுகையில் மட்டும்தான்
அழுத்தமெனும் நதி
அமைதிக் கடலில்
அடக்கமாகிறது!

அழுகையில் மட்டும்தான்
ஆன்ம ஒளி
ஆத்ம ஜோதியில்
ஐக்கியமாகிறது!

அது மட்டுமா?!

அழுகை பக்தியின் உத்வேகம்
அழுகை உணர்ச்சியின் உற்சாகம்
அழுகை அன்பின் அடையாளம்
அழுகை மனிதனின் மாமருந்து

இங்கே
சில அழுகைகள்
சூர்ப்பணகை அழுகைபோல்
சூனியமாக்க வல்லவை!

ஆனால்
சில அழுகைகள்
மாணிக்கவாசகர் அழுகைபோல்
மகத்துவம் வாய்ந்தவை!

இங்கே
சில அழுகைகள்
பிக்பாஸ் அழுகைபோல்
பித்தலாட்டமானவை!

ஆனால்
சில அழுகைகைள்
திருமணத்து அழுகைபோல்
திவ்யமானவை!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
ஆன்மா குளிக்கும்!

அழுங்கள் அழுங்கள்
அழுகையில்தான்
அழுத்தத் தீ அணையும்!

🙏வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🙏

அகவையில் ஒன்று கூடியதை-என்
அகமகிழ் உறவுகள் வாழ்த்தியதில்
முகநூல் புலனம் நிரம்பியது- என்
அகநூல் அன்பில் மூழ்கியது!!!.....

🙏வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🙏

22/08/2019

தருவாய் வரமாய்த் தமிழ்!

அண்ணனாய் அப்பாவாய் ஆசிதரும் வள்ளலாய்
அன்பாலே ஆள்கின்ற ஆசானே- என்னுள்
குருவாய் உருவாய் குணமாய் மணமாய்
தருவாய் வரமாய்த் தமிழ்!

21/08/2019

குழந்தைத் தனம் என எண்ணாதீர்;
கோபுர உயரத்தின் அடித்தளமது!
கோபுரத்தைத் தொட்டதாய் எண்ணாதீர்;
குழந்தைத் தனமான எண்ணமது!

20/08/2019

#அழகுக்_கருப்பா.... அழகுக் கருப்பா...



#அழகுக்_கருப்பா.... அழகுக் கருப்பா...
விழியின் வலைக்குள் விழுந்த கருப்பா..
அழகுக் கருப்பா.... அழகுக் கருப்பா.
உயிரின் அணுவில் உலவும் கருப்பா..

நிசமாய் நீயும் வந்ததாலே
பசலை நோயும் கருமையாச்சோ?
இருந்து என்னை ஆள்வதாலே
குருதி என்னுள் குளிர்ந்துபோச்சோ?

ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பின்னும்
ஒன்றாய் மாறும் விந்தை இதுவோ..?!!

தமிழாய் நீயும் வந்ததாலே
தனிமை எல்லாம் கவிதையாச்சோ?!
மொழியாய் என்னை ஆள்வதாலே
மொழிவதெல்லாம் கானமாச்சோ?!

ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பின்னும்
ஒன்றாய் மாறும் விந்தை இதுவோ..?!!

✍️செ. இராசா

பட உதவி: கிராமத்து வெ. வயிரவன் நன்றி ஐயா

கற்றதால் என்ன பயன்?



பாரதி வரிகளைப் பருகிவிட்டு
பாரினில் சாதியம் பார்ப்பானும்;
ஆயிரம் அறநூல் படித்துவிட்டு
வாயினில் சாதியம் பறைவோனும்;

அத்தி வரதரைத் தொழுதுவிட்டு
நித்தியாய் நடந்திடும் ஆத்திகனும்;
சத்திய சீலனாய்ப் பேசிவிட்டு
புத்தியை மாற்றிடும் நாத்திகனும்;

மனவளக் கலைகள் பயின்றுவிட்டு
குணங்களை செதுக்கா மாணவனும்;
ஒழுக்க போதனை சொல்லிவிட்டு
வழுக்கியே வாழ்கிற ஆசிரியனும்:

கற்றதால் என்ன பயன்?

செ. இராசா

18/08/2019

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Kavitha Raja



இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Kavitha Raja
19th August

வெண்பா
**********
தந்தையும் தாயும் தரணி துறந்ததால்
சிந்தையில் எண்ணி சிதறாதே- உந்தன்
இருவிழி காக்கும் இமைகளைப் போலே
இருப்பவன் நானே இனி

புதுக்கவிதை
*************
ஜனனமும் மரணமும்
ஜகத்திலே இருந்தும்
நமக்கது உண்மையில்
நடக்கிற போதே
இன்பம் துன்பம்
இரண்டையும் அறிவோம்!

அந்த உணர்வை
அடியேன் நானும்
இன்றுநீ பிறந்த
இனிய நன்னாளில்
உணர்ந்தேன் அன்பே
உண்மை உண்மை!

ஹைக்கூ
*********
அ என்றால் அம்மா
அர்த்தம் புரிகிறது
அணைந்தவுடன்...

#இனிய_பிறந்தநாள்_நல்வாழ்த்துகள்

#அழகு பன்னி மூஞ்சி வாயென்கள்






#அழகு

மலர் அழகு
மழை அழகு
மழலை அழகு
மங்கை அழகு
திங்கள் அழகு
கடல் அழகு
கவி அழகு
தமிழ் அழகு
தரணியே அழகு

ஆம்...
அழகு எங்கும் கொட்டிக்கிடக்கிறது

அது காட்சியாய்ப் பார்க்கும்
புறக்கண்களுக்கு புலப்படாது!
அது கவிதையாய் ருசிக்கும்
அகக்கண்களுக்கே புலப்படும்!

லைலாவின் அழகை அறிய
மஜ்னுவின் கண்கள் வேண்டும்

ராஜாவின் அழகை அறிய
கவியின் கண்கள் வேண்டும்
😊😊😊

கல்
சிலையாக மாறுவது
சிற்பியின் கண்களால்..

சொல்
கவியாக மாறுவது
கவிஞனின் கண்களால்..

எல்லாம்...
கண்களைப் பொறுத்ததே

இங்கே...
ஒல்லிப்பிச்சான்கள்
குரங்கு மூஞ்சிகள்
பன்னி மூஞ்சி வாயென்கள்
எனச் சொன்னோரெல்லாம்
எங்கேயோ போய்விட்டார்கள்

ஆமாம்...
நாம் எங்கே போகிறோம்....?!!
ஓ..
அவர்களோடு நிழற்படம் எடுக்கவா?!

17/08/2019

கைக்குள் நுழைந்தே கட்டிப் போட்டுவிட்டாயே..



நீ..
அதிகாலையில் கூவும்
அறைகூவலில்தான்-இங்கே
அனைவரின் விடியலும்!

நீ..
அவ்வப்போது எழுப்பும்
அலையொலியில்தான்- இங்கே
அனைவரின் சுவாசமும்!

இங்கே உன்
மின்கலம் மட்டும்
மண்டையைப் போடுமானால்:
உடனே உந்தன்
மறு ஆயுளுக்கு
மணுபோட ஆயத்தமாவோம்!

இங்கே உன்
செயலிகள் மட்டும்
செயலிழக்குமானால்
உடனே எங்கள்
செல்களும்
செத்ததுபோல் சலிப்படைவோம்!

ஆனால் ஒன்று
இங்கே உன்னால்தான்
மொட்டை மாடியும்
பால்கனிகளும் சும்மாவே உள்ளன.
வேண்டுமானால்
நிலாவைக்காட்டி சோறூட்டிய
அம்மாக்களைக் கேள்..

இங்கே உன்னால்தான்
தெருவெல்லாம் அமைதியாகவே உள்ளன
வேண்டுமானால்
பிள்ளைகளோடு விளையாண்ட
அப்பாக்களிடம் கேள்..

என்னது பிள்ளைகள்
விளையாடுகிறார்களா?!

அடஆமாம்
இன்னும் விளையாடுகிறார்கள்
வீடியோகேமில் மட்டும்

என்னே உந்தன் மாயை?!

கைக்குள் நுழைந்தே
கட்டிப் போட்டுவிட்டாயே..

விரும்ப வைத்தே
விலங்கிட்டுவிட்டாயே..

✍️செ. இராசா

குளுகுளு தேகத்தைக் கொஞ்சி...



வழுவழு மேனியாய் வார்த்திட்ட உந்தன்
குளுகுளு தேகத்தைக் கொஞ்சி- இழுக்க
நினைத்திடும் முன்பே நெருங்கிடும் நீரால்
நினையே ருசிக்குது நா!

✍️செ. இராசா

16/08/2019

#அன்னைத்_தமிழ்_யாசகனின்_ஏக்கம்



முன்பெல்லாம்
நினைக்கும் முன்பே நிஜமாவாய்!
கதைக்கும் முன்பே சொல்லாவாய்!
விதைக்கும் முன்பே மரமாவாய்!

ஆனால்....இப்போதோ
உருவி உருவி அழைத்தாலும்
உயிரை வாங்குகிறாய்!

உரிமையோடு கேட்கிறேன்
உயிர்மெய்யாய் வந்தெனக்கு
உயிர்மை தருவாயா?!

#அன்னைத்_தமிழ்_யாசகனின்_ஏக்கம்

15/08/2019

சுதந்திரதின வாழ்த்துகள்



செங்கோட்டையில்
பிரதமரேற்றி
ஜெயின்ஜார்ஜ் கோட்டையில்
முதல்வரேற்றி
மாவட்டத் தலைநகரங்களில்
ஆட்சியரேற்றி
பள்ளி வளாகங்களில்
ஆசிரியரேற்றி
முகநூல் வாட்சப்பில்
ஸ்டேடஸ் மாற்றி
சுதந்திரமாய்ப் பறக்கிறது
மூவர்ணக்கொடி

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்

14/08/2019

கூவிக்கூவி வித்தாலும் கூட்டம் இன்னும் கூடலை!



கூவிக்கூவி வித்தாலும்
கூட்டம் இன்னும் கூடலை!
கூப்பாடு போட்டாலும்
கூறு கட்ட முடியல!

எல்லாருக்கும் சீட்டு தந்தும்
கல்லா கட்ட முடியல!
எல்லாருமே முழிச்சதால
சில்லறைக்கும் வழி இல்லை!

ஐயோ என்ன கொடுமையின்னு
குய்யோ முய்யோன்னு கத்துறான்!
வரவே இன்னும் வல்லையின்னு
வயித்து வலியில் துடிக்கிறான்!

வீட்டுக் கொரு இஞ்சினியர்
வீட்டைக் காவல் காக்குறான்!
வேலை வெட்டி கிடைக்காமல்
வெட்டி வேலை பார்க்குறான்!

✍️செ. இராசா

கண்மூட வைக்கின்றான் கை




கண்மூடி ஆட்டுவிக்கும் கண்ணனிவன் ஆட்டத்தை
கண்மூடி யோசித்தால் கண்டிடலாம்- உண்மையிலே
கண்மூடி ஆடாது கண்ணியமாய் வாழ்ந்திடவே
கண்மூட வைக்கின்றான் கை!

✍️செ. இராசா

13/08/2019

கண்ணான கண்ணா....



கண்ணான கண்ணா
என்னோட மன்னா
என்னோடு பேச வா...
கண்ணாலே என்னைக்
களவாடும் மன்னா
கண்ணாலம் கட்ட வா...

நீ மேகம் என்றால்
நான்பூமி ஆவேன்
நீர் தூவ ஓடி வா

நான் காத்து நிற்பேன்
நீ சேரும் காலம்
என் காதல் தோற்குமா?!

பன்னீராய் மேகம் தூறும்
பாசம் கூடும்
கண்ணாலம் கூடுமா?!

வாராயோ அன்பே
அன்பே அன்பே வாரோயோ அன்பே
வாராயோ அன்பே அன்பே
வாராயோ அன்பே (2)

✍️செ. இராசா

(ச்சும்மா...😊😊😊)

#அன்பின்_உச்சம்



என்னுள் நெருப்பை மூட்டிவிட
கண்ணில் தீப்பொறி தந்தவளே...
பற்றிய நெருப்பைப் படரவிட்டு
பற்றிட ஏன்தான் மறுத்தாயோ?!!

அணைக்க மறந்த தேகத்திலே
அணையா தீபம் ஏற்றியுள்ளேன்..
என்னுள் உன்னைக் கண்டிடவே
என்னை எண்ணெய் ஆக்கியுள்ளேன்

உன்னை நீயே காண்பதற்கு
என்னை நீயும் காண்பாயா?!
என்னை நானும் சேர்வதற்கு
உன்னை நீயும் தருவாயா?!

#அன்பின்_உச்சம்

(வள்ளுவர் திங்கள் நிகழ்வுக்காக எழுதியது

உள்ளுக்குள் தள்ளுவதே,,,,,



உள்ளுக்குள் தள்ளுவதே உள்ளுக்குள் தள்ளுமென
உள்ளத்தில் நீயும் உணர்!

09/08/2019

வரியாகத் தந்திட வா!!

புரியாத சொல்லைப் புகுத்துதல் இன்றித்
தெரியாத சொல்லைத் திணித்திடல் இன்றிச்
சரியான சொல்லைச் சரியாகப் போட்டு
வரியாகத் தந்திட வா!!

#நேர்_கொண்ட_பார்வையில்



#நேர்_கொண்ட_பார்வையில்
நீ செல்லும் போது
யார் எங்கு சென்றாலும்
நீ செல்ல வேண்டாம்!

ஊர் போகும் பாதையில்
ஊறுள்ள போது
யார் எங்கு போனாலும்
நீ போக வேண்டாம்!

பார் பேசும் வார்த்தையில்
பழுதுள்ள போது
யார் என்ன சொன்னாலும்
நீ கேட்க வேண்டாம்!

வா என்று சபலங்கள்
வரவேற்கும் போதும்
நோ என்று வெட்டிவிட
நீ தயங்க வேண்டாம்!

✍️செ. இராசா

(அப்புறம் படம் நல்லா இருக்கு...உண்மையிலேயே அஜீத் நல்லா நடிச்சிருக்காப்ல. இவரு மாதிரி ஒரு பெரிய கதாநாயகர் இந்த மாதிரி கருத்துள்ள படத்தில் நடிப்பது வரவேற்கத் தகுந்த ஒன்று.👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽)

#மாயோனே



#மின்னஞ்சலாய் வந்தோனே
என்னெஞ்சிலே நின்றோனே
நேராய் நீயும் வாடா மாயோனே

மாயோனே...
நீயே எந்தன் #ஆண்டிராய்டல்லவா ஆனாயல்லவா!
நானே உந்தன் #ஆப்பிள்அல்லவா
அள்ளிக்கொள்ளவா!
#கூகுள் வேகத்தில் வாசம்செய்தாயே
மாயோனே....

#பேஸ்புக்கில் பேசும்பொருள் நீதானே
#ஹேஸ்டாக்கில் #டிரண்டாகி நீயே வந்தாயே

தேடும் ராகம் நீயேஅல்லவா
நேரில்அள்ளவா
பாடும்-கானம் நானேஅல்லவா பாடிக்கொள்(ல்)ளவா?!

லப்டப் ஓசைக்குள் #டிக்டாக் ஆனாயே

காலம் போக்கும் மாயமல்லவா
மாயையல்லவா
ஜாலம் காட்டும் வித்தையல்லவா
வெட்டிப்போடவா
சின்னப் பொட்டிக்குள் சிக்கிக் கொள்ளாதே

✍️செ. இராசா

(ச்சும்மா ஒரு பாடல்....புகைப்படம் வேறு கிடைக்கவில்லை...அதான் நாங்களே...😊😊😊😀😀)

08/08/2019

மாணிக்கம் பிள்ளை- #இன்னிசை_வெண்பா




மாணிக்கம் பிள்ளையின் மைந்தனின் பிள்ளையாம்
மாணிக்கம் பேர்கொண்ட மைந்தனின் பிள்ளையை
மாணிக்கம் போலவே வண்டியில் ஏற்றினார்
மாணிக்கம் பிள்ளை மகன்!

✍️செ. இராசா

#குறிப்பு

#இன்னிசை_வெண்பா

இவ்வெண்பா புரிவதற்கு என் ஐயாவின் பெயரும் என் பெயரும் தெரிவது அவசியம் என்பதால் கீழே உள்ள விபரம்;

ஐயா (அப்பாவின் தந்தை) பெயர்: மாணிக்கம் பிள்ளை
என் பெயர்: இராச மாணிக்கம்

(மேலும் இப்படத்தில் உள்ள இருவரின் பெயரும் வெண்பாவில் இல்லை😊😊😊)

07/08/2019

எலிக்கு வைக்கப்படும் உணவு
எலியின் மீது பரிதாபப்பட்டு அல்ல

06/08/2019

கடிகாரத்தை சரி செய்யும் ஒவ்வொரு முறையும்



முன்னோக்கியோ அல்லது
பின்னோக்கியோ...
கடிகாரத்தை சரி செய்யும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு அனுபவமே...

அடிக்கடி மாற்றுவோருக்குத்தான்
அது அனிச்சை செயலாக..
எப்போதோ மாற்றுவோருக்கு
அது என்றும் வியப்பாகவே...

எது எப்படியோ....
எல்லோருடைய கடிகாரங்களும்
ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன...

✍️செ. இராசா

03/08/2019

எப்பப்பா ஏற்றினாய்





எப்பப்பா ஏற்றினாய் எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா தப்பு!

✍️செ. இராசா

அட்றா அட்றா அட்றா!



அட்றா அட்றா அட்றா!
அட்றா தம்பி அட்றா!
தொட்றா தொட்றா தொட்றா!
தொட்றா தம்பி தொட்றா!

போற்றும் உலகம் போற்றட்டும்!
தூற்றும் உலகம் தூற்றட்டும்!
பற்றிக் கொண்டுத் திரியாதே!
தொற்றிக் கொண்டுத் துவளாதே!
(அட்றா....)

ஆதித் தமிழன் வாழட்டும்!
சாதித் தமிழன் மாறட்டும்!
ஏங்கி ஒதுங்க நினையாதே!
ஓங்கி அடிக்க மறவாதே!
(அட்றா...)

அத்தி வரதரைத் தேடட்டும்!
பக்தியில் பணத்தை வீசட்டும்!
எதையும் உடனே ஏற்காதே!
கதையை எல்லாம் நம்பாதே!
(அட்றா...)

தமிழைத் தமிழாய்ப் பேசட்டும்!
தங்கிலீஸ் வாயை மூடட்டும்!
மம்மி டாடி சொல்லாதே!
அம்மா அப்பா விட்றாதே!
(அட்றா...)

✍️செ.இராசா

01/08/2019

நிரம்பி வழியும் கோப்பையிலே-நீர்
நிரப்பிட மேலும் முடியாது!
தன்னை வியக்கும் உள்ளத்திலே-நீ
உண்மையைப் போதிக்க முடியாது!...✍️

1994-1995, பத்தாம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி




1994-1995
பத்தாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி (த-மேல்நிலை)
மருதுபாண்டியர் நகர்
சிவகங்கை

செ. இராசமாணிக்கமாகிய நான்...
அன்றைய நினைவுகளை
இன்று(ம்) அசைபோட்டேன்...
ஒவ்வொரு வகுப்பறையிலும்
ஒவ்வொரு காட்சிகள்...

இக்கால நிஜத்தோடு
அக்கால நினைவுகள்
இரண்டும் மோதியதை
எப்படிச் சொல்லிடுவேன்?!
உடம்பெல்லாம் புல்லரிப்பு!
உயிரெல்லாம் மெய்சிலிர்ப்பு!

நானூறே எட்டாத பள்ளியில்
நான் தாண்டிய நானூறு
இன்றும் தொடர்வது
இரட்டை மகிழ்ச்சியே!!!

மனைவியோடும் மக்களோடும்
படித்த பள்ளியைப்
படிப்படியாய்க் காட்டியே
நெகிழ்ந்த நிமிடங்களை
நெஞ்சில் சுமக்கின்றேன்....

✍️செ. இராசா