28/03/2017

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா



வாழ்க்கைப் பயணத்திலே
தன்னலத்தை மறந்தவனே-நீ
வாழ்க்கை அனைத்தையுமே
அர்ப்பணிப்பில் கரைத்தவனே!

வாடியவர் முகம்பார்த்தால்
வதங்குமடா உம்மனமே-அவர்
வாசல்வரை ஓடிவந்து
உதவுமடா உம்கரமே!

சிவாவென்ற நாமத்தினை
சுற்றத்தினர் அழைத்தவுடன்
சிலநொடியில் மின்னலென
சீவனாக நிற்பவனே!

சிந்தையிலே தெய்வமில்லா
நாத்திகத்தை கொண்டாலும்- நீ
சிறப்பான குணத்தாலே
ஆத்திகனை வென்றவனே!

இடைவேளை இல்லாமல்
எக்கணமும் உழைப்பவனே-நீ
இளைப்பாறும் வேலையிலும்
பிறர்நலனை நினைப்பவனே!

இடிபோன்ற துயரங்களை
புன்னகையால் வெல்பவனே! நீ
இறுமாப்பு கொள்ளாத
இதயத்தால் சிரிப்பவனே!

கடுகளவும் சேர்க்காதும்
மலையளவு அளிப்பதாலே- நீ
கர்மயோகி வள்ளலாகி
கர்ணனையும் வென்றவனே!

வாழ்க நண்பா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா

இரண்டு இதிகாசங்கள்



பாசமும் நேசமும் பற்றாய் மாறினால்
பாவமும் நாசமும் பூமியில் நிச்சயம்!
பாரதம் போற்றிய காவியம் இரண்டிலும்
பாதகப் பற்றினில் வீழ்ந்தவர் பாரீர்! 
 


தங்கையின் கண்கள் இருண்டிடக் கண்டதும்
தர்மத்தை கிள்ளி அழித்திட எண்ணியே!
தம்கரம் இரண்டிலும் பகடை உருட்டியே!
தம்சதி வீழ்ச்சியால் மாண்டவன் சகுனியே!

தங்கையின் முகத்தில் குருதியைக் கண்டதும்
தர்மத்தை மறந்து நாசத்தை எண்ணியே!
தசரதன் குலத்திடம் வீண்பகை
க் கொண்டதால்
தன்தலை பத்தும் இழந்தவன் இராவணன்!

சாத்திரம் கற்றவர் குலகுரு ஆனவர்!
கோத்திரப் பற்றினில் கர்ணனை தவிர்த்தவர்!
மித்திர துரோகத்தை ஐவரால் வென்றவர்!
புத்திரப் பற்றால் தோற்றவர் துரோணரே!

கலைமகள் அழகை வடிவமாய் கொண்டவள்
கருவில் வந்தவன் அரசாள வேண்டியே!
கள்நெஞ்சுக் கூனியின் வஞ்சகம் கேட்டவள்
கணவனைக் கொன்றவள் பாதகி கைகேயி!

பற்றினில் வீழ்ந்தவர் நால்வரைச் சொன்னேனே?!
பற்றினால் வென்றவர் யாரென்று சொல்வேனோ?!
பற்றினை விட்டவர் உத்தமர் ஆவார்!
பற்றினை கொண்டவர் பாழாய் போவார்!

ஒவ்வொரு கணங்களிலும் இன்பம்/ சுகமான நினைவுகள்


பிஞ்சுக் குழந்தையின் மெய்களிலே
கொஞ்சிப் பழகிடும் கணங்களிலே
நெஞ்சில் துளிர்த்திடும் இன்பங்களை
விஞ்சும் தருணங்கள் வேறுண்டோ?!

வெற்றிப் படிகளை மிதிக்கையிலே
தூற்றிய பலரது வாய்களிலே
போற்றிடும் வார்த்தைகள் வருங்கணமே
காற்றினில் வலிகள் பறக்காதோ?!

இசையை இரவில் கேட்கையிலே
இளமை பழமை நினைவினிலே
இதயம் கடந்து போகையிலே
இனிமை இதுவெனத் தோன்றாதோ?!

நண்பனை மீண்டும் பார்க்கையிலே
நட்பில் கலந்து லயிக்கையிலே
நதிநீர் வெள்ளம் போல்மனதும்
நளினம் ஆடியே ஓடாதோ?!

காதலி கரங்களில் விழுகையிலே
காதல் கடலில் குளிக்கையிலே
காலையும் மாலையும் தெரியாமல்
காட்சிகள் கண்களில் மறையாதோ?!


12/03/2017

பொருள் ஈட்டும் வழி:




பொருளை உலகில் தேடித்தான்
பொழுதும் நாளும் தேய்கிறது....

பணமும் காசும் சேர்த்திடவே
பயணம் தினமும் தொடர்கிறது....

களவும் பொய்யும் தவிர்த்தோர்க்கும்
கடனும் வறுமையும் வதைக்கிறது...

உயர்வின் உச்சியை அடைந்திடவே
உழைக்கா வர்க்கமும் துடிக்கிறது...

உண்மை நேர்மை கொண்டவர்க்கே
உலகில் சோதனை தொடர்கிறது...

உயர்வும் தாழ்வும் வந்தாலும்
உள்ளம் வளைந்திடக் கூடாது...

தேவைகள் நம்மில் குறையாமல்
தேடிடும் இன்பம் கிடைக்காது...

தேடிய யாவும் கிடைத்தாலும்
தெய்வம் மறந்தால் நிலைக்காது....

தர்மத்தின் வழியில் வாழ்ந்தேநாம்
தரணியில் பொருளை ஈட்டிடுவோம்....