30/10/2020

மகள் பாடல்

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகளே....
இது உனக்காக உருவாக்கிய பாடல்...
(அனைத்து மகள்களுக்கும் பொருந்தும் வகையிலும் அமைத்த பாடல்)
 

என்னைப் பெத்த செல்லக் கண்ணு நீ- உன்னைக்
கண்ணுக் குள்ள வச்சி ருக்கேன் டா...
அன்புச் செல்லம் ஆசைச் செல்லம் நீ- உன்னைப்
பார்த்தால் போதும் எல்லாம் தூசுடா
 
எந்தன் அணுவல்லவா!
நீயென் தாயல்லவா!
அப்பாவென நீசெய்யும் அதிகார ஆர்ப்பாட்டம்!
அப்பப்பா.. என்ன சொல்ல உன்னாலே ஆனந்தம்!
அம்மாவென நீகாட்டும் அளவில்லா
ஆவேசம்
 
அம்மாடி...என்ன சொல்ல அதுகூட சந்தோசம்!
எந்தன் அணுவல்லவா!
நீயென் தாயல்லவா!

27/10/2020

சீப்பு



சீப்பை சீப்புதானே எனச்
சீப்பாக எண்ணாதீர்...

நாகரிகம் தொடங்கியது முதல்
நவ நாகரீகக் காலம் வரை
தோண்டிய இடமெல்லாம்
தொல்பொருளாய்ச் சிக்குவது
இந்த சீப்புதான்...

அன்று எலும்பால் உருவாகி
இன்று நெகிழியாய் நிறம்மாற
எத்தனையோ காலமானாலும்
இன்னும் காலமாகாமல்
இரத்தமின்றி தலை சீவுவதும்
இந்த சீப்புதான்..

யாரேனும் சீப்பை வேண்டாவிடில்
தலைக்கனமென எண்ணாதீர்!
ஒருவேளை...
தலைக் கனம் இல்லாமையே
காரணமாய் இருக்கலாம்.

உண்மையில்..
தலை முடியில்லா தலைகளுக்கே
சீப்பின் மொழி புரியும்..

இங்கே..
மனிதன் காலை வாரினால்தான் தவறு
சீப்பு தலையை வாரினால் தவறல்ல

சீப்பால் வெறுப்புற்ற
பேன்கள் வேண்டுமானால்
மயிர்க்காட்டில் மாநாடு போடலாம்!
சீப்பை ஒதுக்கிய
பெண்கள் கூடியதாய்
எந்த நாட்டிலும் சேதி உண்டா?!!

சோறு இல்லாமல் கூட
சுத்தும் புள்ளீங்கோ உண்டு..
சிகையலங்காரம் செய்யா
புள்ளீங்கோ உண்டா?

உண்மையைச் சொல்லுங்கள்
மனிதன் மட்டுமா சீவுகிறான்..

#கொடியில்_தலை_சீவும்_தென்றலும்*
மரத்தில் தலை சீவும் அருவியும்
அடுப்பில் தலை சீவும் நெருப்பும்
#உழுஉந்தில்**தலை சீவும் வயலுமென
இப்படி இயற்கையும் சீவத்தானே செய்கிறது

ஆனால்...
நான் சீவ மட்டும்
இந்த வீட்டில்
சீப்பு கிடைப்பதில்லையே ஏன்?!
😊😊😊😊😀😀😀😀

✍️செ.இராசா

#குறிப்பு

*இவ்வரி மட்டும் கவியரசரின் வரி. மேற்கோளாக கையாளப்பட்டுள்ளது.

**உழுஉந்து- Tractor- இவ்வார்த்தைப் பிரயோகம் தம்பி
மேழியன் பார்த்திபன்
அடிக்கடி பயன்படுத்துவார். இப்படி நாமும் இந்த மாதிரி நல்ல தமிழ் வார்த்தைகளையும் எடுக்க வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது. மனமார்ந்த நன்றி தம்பி

26/10/2020

அப்பா_பாடல்

 

 


#அப்பா_பாடல்

#தொகையறா:

உயிரின் விதைதூவி
உருவை உருவாக்கி
உயிரில் உயிர்தந்த தந்தையே-நீர்
உயிராய் விரிகின்ற விந்தையே...
ஆதி அந்தத் தந்தையே-நீர்
அந்தமில்லா விந்தையே!

#பல்லவி

ஆத்மாவில் வாழ்கின்ற அப்பாவின் வாசம்!
ஆதார மூச்சாக உள்ளூரப் பாயும்!
ஆத்மாவில் வாழ்கின்ற அப்பாவின் யாகம்!
ஆகாயம் மேலான சொல்லாதத் தியாகம்!

கண்ணிலே காண்கிற தெய்வம்
என்றுமே ஈன்றவர் அன்றோ?!
நம்முன்னே நிற்பதால் தெய்வமும் உண்மையன்றோ?!!

அப்பா நீ தானப்பா
எல்லாம் உன்னாலப்பா...
என்னுள் கண்டேனப்பா
தெய்வம் நீ தானப்பா...

#சரணம்_1:

உயர்ந்த மரத்தின் உறுதியினை
.........மண்ணில் மறைந்த வேர்சொல்லும்!
உயர்ந்த மனிதனின் உறுதியினை
........தந்தை தந்த ஜீன்சொல்லும்!
மனித குலத்தின் மகிமையினை
........கடந்து வந்த வழிசொல்லும்
இனிய குலத்தின் பெருமையினை
........என்றும் இந்த ஊர்சொல்லும்

தீதும் நன்றும் என்பதெல்லாம்
......யாரும் தந்திட முடியாது
யாதும் உண்மை என்றாலும்
...... வேரை மாற்றிட முடியாது

வேகம் வேகம் வேகம்
பாயும் கோபம் வீரம் யாவும்
பாசம் நேசம் தியாகம் எல்லாம்... அப்பா

#சரணம்_2

கடந்து வந்த பாதையிலே
.......நடந்து போனால் புரிந்துவிடும்
தடத்தை மீண்டும் பார்க்கையிலே
.......தந்தை யாரென விளங்கிவிடும்!
இளமை செய்யும் மாயையிலே
...... அறிவின் உரைகள் கழுத்தறுக்கும்!
ஆடி அடங்கும் வேளையிலே
.......அனைத்தும் உள்ளே எதிரொலிக்கும்!

ஆதித் தந்தை இல்லாமல்
...... யாரும் இங்கே கிடையாது!
உந்தை எந்தை இல்லாமல்
.......நீயும் நானும் கிடையாது!

வேகம் வேகம் வேகம்
பாயும் கோபம் வீரம் யாவும்
பாசம் நேசம் தியாகம் எல்லாம்... அப்பா

✍️செ.இராசா

வறுமை கொடியது

 கடையடைக்கும் தருணம்
கால்கடுக்க நின்று
உடைஞ்ச தக்காளிக்கே
ஊர்நியாயம் பேசி
ஏதோவோர் குழம்பு வச்சு
எப்போதோ சாப்பிடும்
ஏழைகளின் வாழ்க்கையில்
என்றைக்குமே இல்லை
நாளை பற்றிய கவலை....
ஆம்..
இன்னும் இன்றே முடியவில்லையே..?!!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பிந்நாளில் வேண்டுமென்ற பேராசை இல்லாமல்
இந்நாளை எண்ணுவோரே இங்கு
#குறள்_வெண்பா

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஒவ்வொரு வருடமும்
வேகமாய் ஏறுகிறது
வறியோர் எண்ணிக்கை
#வருத்தப்பா

✍️செ.இராசா

#தலைப்பு_வறுமை_கொடியது
#வள்ளுவர்_திங்கள்_134

24/10/2020

கண்ணாடி



இந்தக் கண்ணாடிக்கும் எனக்கும்தான்
எத்தனை கால பந்தம்?!

ஐந்தாம் வகுப்பென்று நினைக்கின்றேன்..
அருகில் அமர்ந்தபோதும்
கரும்பலகைக் கானலாய்த் தெரிந்தது!

உற்றுக் கவனித்த ஆசிரியர்
உறைக்கும்படிச் சொன்னாலும்
உற்றோரின் காதுகளில்
உறை(ரை)க்கவில்லை போலும்;
விளைவு...
முதல் கண்ணாடியே
பூதக்கண்ணாடியாய்
மூக்கை மட்டுமல்ல
மூச்சையும் அழுத்தியது

அதுமட்டுமா??!
படிக்காமலே வாங்கிய
பட்டப்பெயர்கள் வேறு..

"கண்ணாடி"
"சோடாப்புட்டி"
"பெரிசு"
"சிதம்பரம்'
இத்யாதி இத்யாதியாய்
இச்சமூகம் செய்த
கிண்டலும் கேலியும்...
அப்பப்பா...
அனைத்தும் அவ்வயதில்
ஆறாத இரணங்களே..

கிரிகோர் ஜோகன் மெண்டலின்
அறிவியல் அறியாமல்
கண் குறைபாட்டை
என் குறைபாடாக்கி
தாழ்வு விதைகளைத்
தாராளமாய்த் தூவியது இவ்வுலகு!

இங்கே..
கருப்பாய்ப் பிறந்தாலும் குறை
கண்ணாடி போட்டாலும் குறை
கிராமத்தான் என்றாலும் குறை
ஆங்கிலம் பேசாவிட்டாலும் குறை
இப்படிக் குறை குறையென்று
குறையில்லா விடையத்தை எல்லாம்
நிறைய விதைக்கும் சமூகத்தால்
நிறைகுறை அறியாக் குழப்பம்வேறு..

விளைவு...
காதலின் வரிகள்கூட இப்படிக்
கசப்பாய்த்தான் பிறந்தது!

"கண்ணாடி போட்ட நான்- உன்
முன்னாடி வந்துநின்றால்
தள்ளாடிச் சென்று- ஒரு மறைவின்
பின்னாடி போவது எதனால் தெரியுமா?!

இந்த கருப்பானவனைக் கண்டால்
உனக்கு வெறுப்புண்டாகுமோ
என்ற அச்சத்தால்...."

இதையெல்லாம் உடைத்து
சுக்குநூறாக்கி கெத்தாய் எந்திரிக்க
எத்தனை நாள் ஆனது தெரியுமா?!

ஆம்...அதற்கெனக்கு
பலரின் கண்ணாடிகள் தேவைப்பட்டது!

காந்தியின் கண்ணாடியில்
சத்தியத்தின் வலிமை தெரிந்தது!
பெரியாரின் கண்ணாடியில்
சாதியத்தின் கொடுமை தெரிந்தது!
அம்பேத்கரின் கண்ணாடியில்
மன்னிக்கவும்...
சட்டத்தின் ஓட்டையும் தெரிந்தது!
எம்ஜிஆரின் கண்ணாடியில்
ஏழைகளின் வலி தெரிந்தது!
கலைஞரின் கண்ணாடியில்
கன்னித்தமிழ் தெரிந்தது!

அதனால்தான் என்னவோ...
என் கண்ணாடியிலும்
தன்னம்பிக்கை விருட்சம்
நன்றாகத் தெரிந்தது!

பின்னர்தான்...
கருப்பு கௌரமானது
தமிழ் தெய்வமானது
யாதும் ஊரானது
யாவரும் உறவானது..
என் அகமும் கண்ணாடியானது
எப்புறமும் "நான்" ஆனது!

மொத்தத்தில்
என் கண்ணாடி
என் செல்லக் கவியானது!
இன்றும் ஓர் கவியானது!

✍️செ.இராசா



23/10/2020

ஓடிய கப்பல்தான்

 


ஓடிய கப்பல்தான்
ஒதுங்கி நிற்கிறது
அடுத்த பயணத்திற்காய்..

19/10/2020

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர்--பஃறொடை_வெண்பாவில்

 #குறள்

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

#என்னுரை
#பஃறொடை_வெண்பாவில்

#நஞ்சென்று_கண்டபின்_நாக்கிலே_வைப்பரோ?!
கொஞ்சமும் மெய்யில்லைக் கூற்றிதில் என்போரே..
நஞ்சென்று வள்ளுவர் நெஞ்சாரச் சொன்னது
வஞ்சக நெஞ்சுடன் வைக்கின்ற நஞ்சல்ல

நஞ்சுபோல் எண்ணியே நா(ம்)வொதுக்கும் ஒன்றினை
நஞ்செனக் காட்டாமல் நாகரிகம் வேண்டி
பரிமாறும் நல்லுறவின் பாசத்தைக் கண்டுக்
கருணையுடன் ஏற்றல் கனிவென்று கூறும்
திருக்குறள் போலிங்கேத் தேடிப்பார்த் தாலும்
ஒருநூலும் இங்கில்லை காண்!

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_133

18/10/2020

காலம்



யாருக்காகவும் காத்திருக்காது
யாரும் காக்க வைக்கவும் முடியாது

இங்கே..
படைத்த பிரம்மனின் காலமும்
படைப்பின் காலமும்
வேறு வேறு...

அஃதே..
மனிதனின் காலமும்
மாக்களின் காலமும்
வேறு வேறு...

நேரமும் காலமும்
நாம் கண்டறிந்த கணக்கே தவிர
காலத்தின் கணக்கல்ல

இங்கே
இருவரின் இடைவெளியில் இருப்பது
தூரம் மட்டுமல்ல
காலமும் தான்
---இது ஐன்ஸ்டீன் சொன்னது;

நிமிடங்கள் ஓவ்வொன்றும் வருடங்களாகும்
நீ என்னை நீங்கிச்சென்றால்
வருடங்கள் ஒவ்வொன்றும் நிமிடங்களாகும்
நீ எந்தன் பக்கம் வந்தால்
--இது கவிஞர் வைரமுத்து சொன்னது

ஆம்..
காதலித்துப்பார்
காலம் புரியும்!
அப்படியே....
கொஞ்சம் கால ஏட்டைப் புரட்டிப்பார்..
வரவு செலவு கணக்குகள்
வரலாறாய் விரியும்....

புத்தர்
வள்ளுவர்
இயேசு
முகமதுநபி
கம்பன்
விவேகானந்தர்
பாரதி
கண்ணதாசன்
இளையராஜா
........
.....
இன்னும் இன்னும்..
இவர்கள் யார்?
தன்னை முன்னும் பின்னும் வைத்து
காலத்தைப் பிரித்த ஞானவான்கள்..

பலர் காலத்தில் வாழ்கிறார்கள்
சிலர் காலத்தை வகுக்கிறார்கள்

வருடத்தை பெருபொழுதாக்கி
நாட்களை சிறுபொழுதாக்கி
வளர்ச்சியைப் பருவங்களாக்கி
வாழ்க்கையை வளமாக்கி
வாழ்ந்தான் நம் பாட்டன்
ஆனால் இன்று?!!
காலடியில் தொலைத்த காலத்தைக்
கீழடியில் தோண்டுகிறோம்.

இந்தக்
கால மாற்றத்தில் தான் எத்தனை
ஞால மாற்றங்கள்?!

காலத்தை மறைக்கும் தண்டனை தானே
சிறைத்தண்டனை!

இராமனையும் பாண்டவர்களையும்
வனவாசம் அனுப்பியததெற்கு
வசதியைப் பெருக்கவா
வருடங்களைக் கழிக்கத்தானே?!

காலம் விசித்திரமானது
இன்று சரியென்பதை
நாளை தவறாக்கும்
இன்று தவறென்பதை
நாளை சரியாக்கும்

ஒரே நதியில்
இரு முறை குளிக்க முடியாது..
இது யாரோ ஓர் ஜென் சொன்னது..
ஒரே பிறவியில்
இரு வாழ்க்கை வாழ முடியாது
இது இந்ந நானெனும் மண் சொன்னது..

ஆம்...
காலத்தைப் புரிந்தவரே
காலத்தோடு காலா காலம் வாழ்கிறார்..
காலத்தில் நிற்பவரே
காலத்தோடும் காலம் கடந்தும் நிற்கிறார்..

காலம் அறி....
ஞாலம் புரி...

✍️செ.இராசா


17/10/2020

அலைமகள் வணக்கம்

 


#நவராத்திரி_சிறப்பாய்_2
#அலைமகள்_வணக்கம்

செல்வம் வந்திட சென்றிடும் என்கிற
சிந்தையைக் கொண்டிருந்தேன்-தாயே
சிந்தையைக் கொண்டிருந்தேன்!
செல்வம் தந்திட வந்திடும் என்கிற
மந்திரம் கற்றுக் கொண்டேன்-தாயே
மந்திரம் கற்றுக் கொண்டேன்!

எள்ளும் இங்கே என்னது இல்லை
எல்லாம் உன்னாலே- தேவி
எல்லாம் உன்னாலே!
கல்லும் இங்கே நல்லா மின்னுது
எல்லாம் உன்னாலே- தேவி
எல்லாம் உன்னாலே!

ஆதிலட்சுமி
தான்யலட்சுமி
தைரியலட்சுமி தனலட்சுமி
கஜலட்சுமி
சந்தானலட்சுமி
விஜயலட்சுமி வித்யாலட்சுமி

✍️செ.இராசா

கலைமகள் வணக்கம்

 


 #நவராத்திரி_சிறப்பாய்
#கலைமகள்_வணக்கம்

#வெண்ணிற_ஆடை உடுத்தி- நீ
மீட்டுகின்ற வீணை
மீட்டுகின்ற வீணை
சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சங்கீதம் எங்கிலும் கேட்கும்!!
மனம் உள்ளவர் நெஞ்சினை ஈர்க்கும்
சங்கீதம் எங்கிலும் கேட்கும்!!!!
மனம் உள்ளவர் நெஞ்சினை ஈர்க்கும்

சுழலும் கோள்கள் சுற்றும் பொழுதில்
எழுப்புகின்ற ஓசை! எழுப்புகின்ற ஓசை!
மழலை கூடி மொழியும் பொழுதில்
எழும்புகின்ற ஓசை! எழும்புகின்ற ஓசை!
மழைகள் மோதி முத்தம் வைக்க
ஜலதரங்க ஓடை! ஜலதரங்க ஓடை!
கலைகள் ஆக்கி கானம் ஆக்க
கவியரங்க மேடை! கவியரங்க மேடை!!
மேடை மீதில் வீற்றிருக்கும் சகலகலாவல்லி!
சகலகலாவல்லி!
மீண்டும் மீண்டும் பாடிடுவோம் உமதுபேரைச்சொல்லி! உமதுபேரைச்சொல்லி!!

சரிகமபதநிச‌......சநிதபமகரிச
சரிகமபதநிச‌......சநிதபமகரிச

✍️செ.இராசா

#சரஸ்வதி_வணக்கம்