29/11/2017

அம்மாவின் உலகம்


ஆயிரம்மைல் கடந்து
அயல் தேசம் வாழ்கின்ற
அன்பான தன் மகனை
அதிகாலை வேளையிலே
அம்மா அழைத்தாள்...

அழைப்பினை தடுத்துவிட்டு
அன்புமகன் அழைத்தான்...
அழைத்ததன் காரணத்தை
அம்மாவிடம் கேட்டான்.

"ஒன்றும் இல்லை ஐயா...
உன்குரலே இன்பம் ஐயா....
அழைப்புவரா  நாட்களிலே
அகிலமே இருளுதையா...
அதனாலே அழைத்தேன் ஐயா...."
..........................................
.........................................
நாலு வார்த்தை சொல்லும்போதே
நாக்கெல்லாம் பிறழ்கிறது...

அவள் அழுகைக் குரல் கேட்டு
இவன் நெஞ்சும் நனைகிறது..........


-----------செ. இராசா------

வேண்டும் வேண்டும்



மதம் தாண்டிய மனிதம் வேண்டும்
மறை தாண்டிய ஞானம் வேண்டும்
சினம் தாண்டிய குணம் வேணும்
இனம் தாண்டிய பாசம் வேண்டும்
நிறம் தாண்டிய நேசம் வேண்டும்
மறம் தாண்டிய மனம் வேண்டும்

நோய் இல்லா உடல் வேண்டும்
பொய் இல்லா உறவு வேண்டும்
கசடு இல்லா கல்வி வேண்டும்
கலவி இல்லா தமிழ் வேண்டும்
பிழை இல்லா நட்பு வேண்டும்
கிளை இல்லா சமூகம் வேண்டும்

அறிவு உள்ள தலைமை வேண்டும்
அன்பு உள்ள துணைமை வேண்டும்
தெளிவு உள்ள மக்கள் வேண்டும்
தேவை உள்ள செல்வம் வேண்டும்
இளமை உள்ள இதயம் வேண்டும்
இனிமை உள்ள மரணம் வேண்டும்

———செ. இராசா——-

27/11/2017

வெண்ணிலவு சுடுவதென்ன?


பெண்ணவளைக் கண்டுவிட்டால்
கண்ணிமைக்க முடிவதில்லை!

பெண்ணவளின் குரல்கேட்டால்
எண்ணம்வேறு வருவதில்லை!

ஆமாம்....

பெண்ணிலவு அவளென்றால்
வெண்ணிலவு சுடுவதென்ன?

ஓ.....

பெண்ணவளின் அழகுகண்டு
விண்ணிலவு(ம்) எரிகிறதோ?!!

——செ. இராசா—-

துளிப்பா (ஹைக்கூ)

நான் வாழும் வீடு
நாள் கழியும் கூடு
உடல்

—-செ. இராசா—-

25/11/2017

எங்கோ இசைக்கும் பாடல்--களஞ்சியம் கவிதைப் போட்டியில் (81) பங்குபெற்ற கவிதை (காலக்கெடு முடிந்தபிறகு பதிவிட்டது)


எங்கோ இசைக்கும் பாடல்கள்- அது
எங்ஙனம் அலைவழிப் பாயுமோ- நாம்
எங்கோ எழுப்பிடும் எண்ணமும்- அது
எளிதில் எவரையும் அடையுமே!

என்றோ பாடிய கீதங்கள்-அது
எப்படி பலகதை கூறுமோ- நாம்
என்றோ விதைத்த கர்மமும்- அது
இன்றைய நம்நிலை கூறுமே!

என்றோ கேட்ட கானங்கள்- நாம்
இன்றும் கேட்கையில் இன்பமோ- நாம்
என்றோ செய்த தர்மமும்- நமை
இன்றும் என்றும் வாழ்த்துமே!

உணர்ச்சியில் பாடிடும் ராகங்கள்- அது
உண்மையை எப்படி உரைக்குமோ- நல்
உணர்வுள்ள கவிதையின் வரிகளும்-அது
உயிர்ப்புடன் என்றும் நிலைக்குமே!

மேகங்கள் உரசிடும் முழக்கங்கள்- வரும்
மழையினை எப்படிச் சொல்லுமோ- மனித
வாழ்வினில் ஒலித்திடும் முழக்கங்கள்- அவன்
வாழ்க்கையை உலகுக்குச் சொல்லுமே! 

பக்தியைப் போற்றிடும் நாமங்கள்- இறை
பரவசம் எப்படி கூட்டுமோ- நற்
பண்புள்ள மனிதரின் வார்த்தையும்- நிறை
பரவசம் தந்திடும் ஊக்கமே!

இதயம் எழுப்பிடும் ஓசைகள்- உயிர்
இருப்பினை எப்படி உணர்த்துமோ- நம்
பிரபஞ்சம் எழுப்பிடும் ஓசையும்- அது
படைப்பின் தன்மையை உணர்த்துமே

——செ. இராசா——-

சிறுவர் பாடல்-வண்டி

கடகட கடகட வண்டி- இது
குழந்தைகள் தள்ளும் வண்டி!

குடுகுடு குடுகுடு வண்டி-இது
குதூகலம் தந்திடும் வண்டி!

தடதட தடதட வண்டி- இது
தடுமாற்றம் இல்லா வண்டி!

சிகுபுகு சிகுபுகு வண்டி- இது
சீறிப் பாயும் வண்டி!

விறுவிறு விறுவிறு வண்டி- இது
விர்ரென 
கிளம்பும் வண்டி!

புடுபுடு புடுபுடு வண்டி- இது
புல்லட்டு வேக வண்டி!


 https://www.facebook.com/photo.php?fbid=2096286020605532&set=gm.1938101419842098&type=3&theater&ifg=1

வெற்றிப்படிகள்-களஞ்சியம் கவிதைப் போட்டி-80 (வெற்றிக் கவிதை)

80வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், இரண்டாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. நிகரன் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வெற்றிப்படிகள்
***************
கற்பதைக் கசடறக் கற்றுவிட்டு
பெற்றதைத் தெளிவுறக் கடைபிடித்து
வெற்றிப் படிகளில் கால்வைப்போம்!


இடறிய கணங்களை நினையாமல்
இதயத்தில் கனங்களை சுமக்காமல்
இலட்சியப் படிகளை அடைந்திடுவோம்!

வெற்றியின் விளைவிலே மூழ்காமல்
வெற்றியை தலையிலே ஏற்றாமல்
வெற்றிமேல் வெற்றி குவித்திடுவோம்!
————————————————
விமானி ஆகிடும் கனவினிலே
விஞ்ஞானி கலாம்ஐயா தோற்றாலும்
விண்புகழ் அடைந்ததை நினைத்திடுவோம்!

பள்ளிகள் துரத்திய பலநபர்கள்
பள்ளியில் பாடமாய் ஆனதுபோல்
புதியதோர் சாதனை படைத்திடுவோம்!

எழுத்து மயக்கநோய் (டிஸ்லெக்சியா) கொண்டவர்கள்
எழுந்து உலகினை வென்றதுபோல்
எழுச்சியால் சாதனை செய்திடுவோம்!
——————————————
தோல்விகள் தொடர்ந்து வந்தாலும்
தோற்றதை நினைத்து புலம்பாமல்
தோள்கள் நிமிர்த்தி நடந்திடுவோம்!

தூற்றும் நபர்களை சபிக்காமல்
ஆற்றும் பணியினை நேசித்தே
வெற்றிப் படிகளை மிதித்திடுவோம்!

வெற்று மனிதராய் நடக்காமல்
வெற்றி மனிதராய் சாதித்தே
வெற்றியின் அளவுகோல் ஆகிடுவோம்!


https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1936710029981237/

நம்பிக்கை


என்ன ஆகுமய்யா?- பின்
எதற்கு கவலையய்யா?
உனக்குள் சக்தியய்யா-நீ
உள்ளதை உணருமய்யா!

சறுக்குதல் சகஜமய்யா- அதை
சகித்திடல் வேண்டுமய்யா!
வாழ்க்கை வட்டமய்யா- நீ
வாழ்ந்திடப் புரியுமய்யா!

விமர்சனம் வருமய்யா- அது
வளர்ச்சியின் உரமய்யா!
நல்லது(ம்) நடக்குமய்யா- நீ
நம்பினால் வெற்றியய்யா!

——செ. இராசா——-

10 பேருக்கு பகிர்ந்தால் நன்மையா?!


பக்தியின் பெயரால் பரப்பிவிடும்
பரப்புரைச் செய்திகள் வந்தவுடன்
படித்ததும் உடனே பதறாமல்
பகிர்ந்திடும் செயலை நிறுத்திடுவீர்!

மூலையில் எங்கோ அமர்ந்திருந்து
மூடநம்பிக்கை பரப்பிவிடும்- சில
மூடர்கள் அனுப்பிடும் செய்திகளை
மூளையில் சிறிதும் ஏற்றாதீர்!

பத்து பேருக்கு பரப்பியதும்
பற்பல நன்மைகள் வருமென்ற
பைத்திய தனத்தினை நம்பாமல்
பக்குவ பக்தியை வளர்த்திடுவீர்!

வாழ்க வளமுடன்!

——செ.இராசா—-

நமக்குள் பாரதம்


பாண்டவர் கௌரவர் போராட்டம்
பாரதக்கதைதனில் நாம் அறிவோம்!
அறிந்த கதைக்குள் பொதிந்துள்ள
அறியா விசயத்தைச் சொல்கின்றேன்!
காணொளிக் காட்சியில் நான்கேட்ட
கருத்தினை இங்கே பகிர்கின்றேன்!


பாண்டவர் ஐவர் என்பவர்கள்- நம்
புலன்கள் ஐந்தினைக் குறிப்பனவாம்!
கவுரவர் நூறு என்பவர்கள்- நம்
இச்சைகள் நூறினைக் குறிப்பனவாம்!
மனமெனும் கர்ணனின் ஆதரவோ- நம்
இச்சைகள் பின்னே நிற்கிறதாம்!

மயக்கத்தில் மனிதன் விழிப்பதற்கு- நம்
மனத்தினை வெல்வது அவசியமாம்!
இச்சையை புலன்கள் வெல்வதற்கு- நம்
இறைவனின் கருணையும் அவசியமாம்!
சிறப்பான பேச்சில் புரியவைத்த-சகோதரி
சுல்தானா பர்வீனை வணங்குகின்றேன்!

—— செ. இராசா——-

என்று மாறும் இந்த உலகம்?!


எங்கெங்கு காணினும் கண்ணீர் வெள்ளம்
என்றுதான் மாறுமோஆள்வோர் உள்ளம்
ஏழைகள் வாழ்விலே எங்கே இன்பம்?
ஏய்ப்பவர் ஆள்வதால் எல்லாம் துன்பம்!

வாக்குகள் மாற்றியே வாய்ப்பு தந்தோம்!
வரிசையாய் மாறிய முதல்வர் கண்டோம்!
வாய்வழி வள்ளலை வடக்கில் கண்டோம்!
வரிசையாய் வங்கிமுன் வாடி நின்றோம்!

திராவிடம் திராவிடம் என்று சொல்லி
திராவகம் வீசிய பலரைக் கண்டோம்!
தமிழினம் என்னினம் என்று சொல்லி
தமிழனைக் குத்திய தலைவர் கண்டோம்!

சமத்துவப் போதனை செய்து கொண்டே
சாதியம் வளர்த்திடும் கொடுமை கண்டோம்!
அடிக்கடி நிறங்களை மாற்றிக் கொண்டே
அறிவுரை வழங்கிடும் தலைமை கொண்டோம்!

ஆத்திகம் நாத்திகம் கூறு போடும்
ஆள்பவர் மனங்களில் மாற்றம் வேண்டும்!
கோத்திரச் சூத்திரம் போட்டுப் பார்த்தால்
ரௌத்திரப் பார்வையில் எரிக்க வேண்டும்!

—�—செ. இராசா—�—

14/11/2017

14.11.2017


#குழந்தைகள்_தினம் மற்றும் #உலக_சர்க்கரை_நோய்_தினம்

(மேலும் இன்று #அகல்யா_பிறந்த _தினம்
பூவுலகை விட்டுப் பிரிந்தாலும்- எங்கள்
நினைவுலகில் என்றும் வாழ்கின்ற
என் மாமா மகள் #அகல்யாவிற்கு
இப்பாடல் சமர்ப்பணம்)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குழந்தைகள் தினமாம் இன்று!- நம்
குழந்தைக்கு சொல்வோம் ஒன்று!-அது
குழந்தையைக் காக்கும் நன்று!

உடலைக் கெடுத்திடும் உணவுகள்- பல
உயிரைக் கொன்றிடும் உணவுகள்- அதைத்
தவிர்த்திட முயல்வோம் இன்று!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

குழந்தாய் குழந்தாய் கேளாய்- ஒரு
குறையில்லா உணவினை உண்பாய்- நீ
குறைவில்லா வாழ்வினை வாழ்வாய்!

துரிதம் காட்டிடும் உணவு!- அதுத்
துயரத்தை தந்திடும் உணவு!- அதைத்
தொலைத்தால் உண்டு மகிழ்வு! (குழந்தாய்)

எண்ணெய் மிகுந்த உணவு!- அது
எளிதில் நோய்தரும் உணவு- அதைத்
தவிர்த்தால் உண்டு வாழ்வு! (குழந்தாய்)

சர்க்கரை நிறைந்த உணவு!- அது
சீக்கிரம் சாய்த்திடும் உணவு!- அதைச்
சிறிதெனச் சேர்த்தால் இனிது! (குழந்தாய்)

காற்றுக்கள் நிறைத்த உணவு!- அது
காலத்தைக் குறைத்திடும் உணவு!- அதைக்
குறைத்தால் நீடிக்கும் வயது! (குழந்தாய்)

குழந்தாய் குழந்தாய் கேளாய்- ஒரு
குறையில்லா உணவினை உண்பாய்- நீ
குறைவில்லா வாழ்வினை வாழ்வாய்!

-------செ. இராசா---

68வது கவிச்சரம்: நட்பு


தமிழ்த்தாய் வணக்கம்:

***********************
ஆதியில் தோன்றிய அன்னைமொழி!
ஆயிரம் இலக்கியம் தந்தமொழி!
ஆண்டவன் பேசிடும் அமுதமொழி!
அம்மொழி செம்மொழி தமிழ்மொழியை
சிந்தையில் வைத்து போற்றுகின்றேன்!

தலைமை வணக்கம்
*******************
பன்முகம் கொண்ட பண்பாளர்!
பாடல்கள் புனைவதில் பெருங்கவிஞர்!
பாஷிகாபுரம் திருவாளர்!
நடுவர் தலைமையை வணங்குகின்றேன்

அவை வணக்கம்
****************
தமிழ்அக்கறை காட்டிடும் தளங்களிலே
தமிழ்ப்பட்டறைத் தளத்தின் மாண்பறிந்து
கவிச்சரச் சபையை வணங்குகின்றேன்!

தலைப்பு- நட்பு
**************
உறவுகள் எத்தனை இருந்தாலும்
உறவினில் சிறந்தது எதுவென்றால்
உரிமையில் பழகிடும் நட்பாகும்!

நட்பில் பலவகை இருந்தாலும்
நட்பில் சிறந்தது எதுவென்றால்
நல்லதை உரைத்திடும் நட்பாகும்!

சூழ்நிலை எதுவாய் இருந்தாலும்
சுதந்திரம் தருவது எதுவென்றால்
சூதில்லா நண்பரின் நட்பாகும்!

வருத்தம் ஆயிரம் வந்தாலும்
வலிகள் போக்கிடும் மருந்தென்றால்
வறுமையில் விலகா நட்பாகும்!

புதுப்புது நண்பர்கள் கிடைத்தாலும்
புதிதுபோல் இனித்திடும் நட்பென்றால்
பள்ளியில் கிடைத்த நட்பாகும்!

உபதலைப்பு-பள்ளி நட்பு
***********************
சாதியும் சமயமும் கலக்காத
சரித்திடும் பொய்கள் இல்லாத
வாதும் சூதும் அறியாத
வசதியும் வறுமையும் தெரியாத
பள்ளியின் நட்பு தொடர்கிறதா?!
பாக்கியம் அதுவென உணர்ந்திடுவீர்!

நன்றியுறை
**********
களஞ்சியக் கவிதைகள் புனைந்தாலும்
கவிச்சரம் அடியேன் தொடுக்கவில்லை!

மேடைத் தமிழின் எழுத்துக்களாய்
மலர்ந்திடும் கவிதைகள் இருப்பதினால்
மேதகுத் தலைவரை வணங்குகின்றேன்!

வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும்
நன்றியைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

வாழ்க வளமுடன்!

சினம்



கோபத்தில் கொட்டிய வார்த்தைகளோ
கொடுங்கனல் நெருப்பாய்ச் சுட்டுவிடும்!
கொடுஞ்சொல் வார்த்த காயங்களோ
கொடுமையின் வலிகளைச் சுட்டிவிடும்!

வன்சொல் வார்த்தைகள் வந்தபின்னே
வருந்திதான் ஆவது ஒன்றுமில்லை!
உயிர்க்கொலை தவறாய் நடந்தபின்னே
உயிர்வந்து உடலினை சேர்வதில்லை!

சினத்தினை அடக்குதல் சிரமமெனில்
சிதறிடும் வார்த்தையைத் தடுத்திடுவீர்!
நாவினை அடக்குதல் சிரமமெனில்
நாணத்தில் வெட்கியே குனிந்திடுவீர்!

சரிந்திடும் நொடிகளில் விழித்துவிடின்
சபலமும் சினமும் தோற்றுவிடும்!
சரித்திடும் கணங்களை வென்றுவிடின்
சரித்திரம் நமதாய் மாறிவிடும்!

—�—�செ. இராசா—�—
 
சிவாவின்  பின்னூட்டம்: 

சினம் கொள்ளா மனம் வேண்டும்-அதை
இனம் கண்டறியும் குணம் வேண்டும்,
பணம் இல்லா நிலையினிலும்-ஏன்

வனம் புகும் சூழலிலும்
மணம்மிகு வாழ்வை வாழ
சினமதை தவிர்த்தால் போதும்-இல்லை
பிணம்போலுனை ஊரார் எண்ணும்
 
பதில்  பின்னூட்டம்:

உண்மைதான் நண்பா..... ஆனால் சினம் தவிர்த்தல் எளிதல்லவே.....முயற்சியும் பயிற்சியும் வேண்டும்

எவ்விடம்/ எவரிடம் குறை இல்லை?


வெண்மதியிலும் குறையுண்டு- சிலர்
நன்மதியிலும் குறையுண்டு!
குறையில்லா இறைவனுக்கும்- ஒரு
குறையில்லாக் குறையுண்டு!

நிறைநிலை அடைந்தவர்கள்- பிறர்
குறைகளைக் காண்பதில்லை!
குறைகுணம் உள்ளவர்கள்- பிறர்
நிறைகளைக் காண்பதில்லை!



---------------------------

சிவாவின்  பின்னூட்டம்:

குறையில்லா உன் கவியிலும் 
 ஓர் குறையுண்டு...
அழகாய் வரி அமைத்து 

அற்புதக் கருத்தைக் கூறி
சிறிதாய் இதைப் படைத்துவிட்டாயே 

எனும் பெரும் குறைதான் நண்பா..

பதில்  பின்னூட்டம்

குறைகவியைப் படைத்ததிலே- நீ
நிறையவில்லை நானறிவேன்...

நிறைகவியைப் படைக்காத
குறையொன்றே குறையென்று,
குறைபோல சொல்வதைநான்
குறையாகக் கருதவில்லை...
நிறையன்பில் என் நண்பன்
குறையாகச் சொல்வானோ?!

குறைவான இக்கவிதை
குறையில்லாக் கவிதையென்றாய்....
நிறைவான வார்த்தை கூறி
குறையாத அன்புசெய்தாய்.....

நன்றி நண்பா....
 

10/11/2017

மழை பாடிட வாரீரோ-----களஞ்சியம் கவிதைப் போட்டி-79----(வெற்றிக் கவிதை)




(10.11.2017)


மதம்பற்றி பாடிடும் மாந்தர்களே-இனி
மழைபற்றி பாடிட வாரீரோ!
சாதியம் பாடிடும் மாந்தர்களே-இனி
சத்தியம் பாடிட வாரீரோ!

பார்புகழ் தமிழ்மறை வள்ளுவனே-மழைப்
பாயிரம் ஏற்றியே பாடியுள்ளார்!
வான்மகள் மழைநீர் இல்லையெனில்-ஒரு
புல்லும் புவியினில் இல்லையென்றார்!

கடலும் மேகமும் காதலிக்க-மழை
கூடலின் சாட்சியாய் வடிந்திடுமே!
பிறப்பும் இறப்பும் தொடர்வதுபோல்-நீர்
விழுவதும் எழுவதும் தொடர்ந்திடுமே!

பிறப்பினில் களங்கம் இல்லாத-மழை
மழலைபோல் என்றும் பரிசுத்தமே!
பிறப்பால் தனிநிறம் இல்லாத-நீர்
மனிதர்போல் பலநிறம் பெற்றிடுமே!

சார்ந்த பாதையில் கசடிருந்தால்-மழை
சாக்கடை சகதியாய் மாறிடுமே!
சிப்பியின் வாய்தனில் விழுமென்றால்-நீர்
சிப்பிக்குள் முத்தாய் மாறிடுமே!

கடவுளின் கருணையைக் காண்பதற்கு-மழை
கண்கொள்ளாக் காட்சியாய் தோன்றிடுமே!
இயற்கையின் பாதையை கெடுப்போர்க்கு-நீர்
இன்னலின் அரக்கனாய் மாறிடுமே!

வானத்தில் மேகமாய் உயர்ந்தாலும்-மழை
பூமியைக் குளிர்விக்க கீழ்வருமே!
வரம்புகள் மீறிச் சென்றாலும்-நீர்
பூமியை புரட்டிப் போட்டிடுமே!

அருவியாய் நதியாய்ப் பிரிந்தாலும்-மழை
கடைசியில் கடலில் கலந்திடுமே!
ஆயிரம் கிளைகளாய்த் தெரிந்தாலும்-நீர்
கடவுளின் ஓர்மையைச் சொல்லிடுமே!

 ----செ. இராசா-----



https://www.facebook.com/groups/1535309520121292/permalink/1956040691381504/?comment_id=1956230898029150&notif_id=1514709740474300&notif_t=group_comment_reply