31/10/2022

ஔவைத் திங்கள் 14 ---- கற்றது கைம்மண்ணளவு

 

கற்கின்ற போதெல்லாம் கல்லாமை கண்டறிந்தால்
கற்பதற்(கு) இல்லைக் கதவு
(1)
 
என்னதான் கற்றாலும் எண்ணியதை ஆராய்ந்தால்
ஒன்றுமே இல்லை உணர்
(2)
 
எல்லாமும் கற்றவராய் எப்போதும் சொல்பவரைக்
கல்லாரில் முன்வைப்பர் காண்
(3)
 
கற்றுவிட்டேன் என்றுவொன்றைக் காட்ட முயலும்முன்
பற்றிவரும் மற்றொன்று பார்
(4)
 
கற்றதைக் கற்றபின்னும் கற்றதுபோல் நில்லாதோர்
கற்றவருள் நிற்கின்ற கல்
(5)
 
இல்லாமை உள்ளவரை ஈகையும் உள்ளதுபோல்
கல்லாமை உள்ளவரைக் கல்
(6)
 
கிணற்றுத் தவளைபோல் கீழ்நிற்க வேண்டாம்
மணம்பரப்ப மேலேறி வா!
(7)
 
பட்டம் பதவியெனப் பற்றமட்டும் கல்லாமல்
வட்டத்தின் விட்டத்தை மாற்று
(8)
 
மதிப்பெண்ணை வைத்து மதிக்கின்ற போக்கால்
மதிப்பின்றி போகும் மதி
(9)
 
ஒன்றின்பின் ஒன்றாய் ஒருவாறு சென்றால்தான்
ஒன்றேனும் கற்றிடலாம் ஓர்ந்து
(10)
 
✍️செ. இராசா

27/10/2022

நேர்மறையாளனும் எதிர்மறையாளனும் சந்தித்தால்...


என்ன உலகமய்யா? என்ன மனிதரய்யா?
ஒன்னும் சரியில்லை ஓய்..
 
என்னே உலகமய்யா!! என்னே மனிதரய்யா!!!
ஒன்னும் குறையில்லை ஓய்...
 
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
என்னய்யா செய்கின்றீர்? எங்கேதான் கற்றீரோ?
என்னைப்போல் யாரய்யா இங்கு?
 
என்னம்மா செய்கின்றீர்!! எங்கேதான் கற்றீரோ?
என்போல் அறிவிலிதான் யார்?!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
நான்யார் தெரியுமா? நானின்றி ஒன்றுமில்லை
நான்தான் அனைத்திலும் வான்
 
நான்யார் எனக்கேட்டால் நானெல்லாம் ஒன்றுமில்லை
வான்கீழ் சிறுதுளி நான்!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
ஒன்றும் பயிலாமல் ஒப்பேத்த எண்ணிடுவோர்
என்ன கிழிப்பாரோ இங்கு?
 
ஒன்றும் பயிலாரும் உச்சத்தைத் தொட்டிடலாம்
என்றும் இறையருளால் இங்கு!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
காசுபணம் உள்ளதெனில் காக்காவும் பேரழகே
காசுதான் எல்லோரின் கண்
 
காண்கின்ற கண்பொறுத்துக் காக்காவும் பேரழகே
காண்பதை நேர்மறையாய்க் காண்
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐