30/04/2023

வெள்ளியங்கிரி ---------- சிவனே போற்றி

 

அவனாயிவன் இவனாஅவன்
அடயாரென என்றே..
சிவனேமகன் சிரமோங்கிட
தருவாய்வரம் நன்றே...
 
அவரோகணம் இனியாவிலும்
ஆரோகணம் ஆகும்
சிவனேயெனுள் வருவானெனில் 
தீராவினை தீரும்!
 
தவறானவை சரியாகிடத்
தவமாய்தவம் செய்யும்
சிவனேயெனைத் தெளிவாக்கிட 
தமிழாளுமை தாரும்!
 
அவமானமும் அநியாயமும்
அணுகாதினி என்றே..
சிவனேசனாய் உருவானயென் 
திறம்கூட்டுவாய் இன்றே..
 
✍️செ. இராசா

29/04/2023

பறையும் எதிர்ப்பும்




என்னதான் நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி #பறை என்று பறை சாற்றினாலும், அனைத்துத் தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும் அதைத் தொடர்ந்து வாசித்தாலும் இன்னும் பறைமேல் உள்ள எதிர்மறைக் கருத்துகள் மறைந்தபாடில்லை என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம் உறவுகளே....

தற்சமயம் #பறையை சாவுக்கு வாசிப்பதில்லை என்றே சபதம் எடுத்துத்தான் அனைவரிடத்திலும் சொல்லிக் கொடுக்கின்றார்கள் என்றாலும் அக்கருவியையும் அந்த இசையையும் தவறாகக் கருதும் மனப்போக்கு இன்னும் இருப்பதை மாற்றும் விதமாகத்தான் நான் அதைப் முடிந்தவரை பயன்படுத்த முயல்கிறேன் உறவுகளே....

#தப்பு #கொட்டு என்று எதிர்மறைச் சொற்களால் அழைக்கப்படும் இப்பறையானது மாட்டுத்தோலால் செய்யப்பட்டுள்ளது என்று வாதம் வைக்கும் அன்புச் சகோதரர்களே, மத்தளம், மிருதங்கம், தபேலா......எல்லாம் மனிதரின் தோலிலா செய்யப்படுகிறது? அதுவும் மாட்டுத்தோலில்தான் செய்யப்படுகிறது. பிறகு அவைகள்மட்டும் எப்படி கோவிலுக்குள் செல்கிறது?! (யோசியுங்கள்)

அட... எனக்கு நேற்று ஒரு நண்பர் நரம்புக் கருவி பற்றி பாடம் எடுக்கிறார் பாருங்கள்.... அப்பப்பா வியந்து போனேன் போங்க. அதெல்லாம் ஏன்?...பறையைத் தூக்கி வைத்துவிட்டு அதைப்போய் படிக்கவாம். உறவுகளில்கூட சிலர் இதை இன்னும் அமங்கலக் கருவியாகப் பார்ப்பதையும் அறிவேன். ஆகா.... இதெல்லாம் எப்படி இவ்வளவு ஆழமாகப் பதிந்தது?!!

ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்கிறேன் உறவுகளே... கத்தாரில் ஓர் தமிழ் நிகழ்வின்போது பறை வாசித்துக் கொண்டிருந்தார்கள்‌. அச்சமயம் ஊரில் இருந்துவந்த ஒரு பையனை அந்நிகழ்விற்கு அழைத்துச் சென்றிருந்தேன். பறையிசை கேட்ட அந்த நிமிடமே அவன் உள்ளே வரத்தயங்கினான். என்னவென்று விசாரித்தபோது, அது என்னவோ ஒரு அருவருப்பாக உள்ளதென்றான். புரிகிறதா?!..

ஆதித்தமிழன் வாசித்த பறையை ஒரு சாதியக் கருவியாக மாற்றியதால் ஏற்பட்ட விளைவும் அதன் தாக்கமும் இன்னமும் மாறவில்லை என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்?!

நான் பறையிசை பற்றி எழுதிய ஓர் பாடலில் பறையின் வகைகளை இப்படி அடுக்கியிருப்பேன்...

குறிஞ்சிப்பறை முல்லைப்பறை
மருதப்பறை நெய்தல்பறை பாலைப்பறை
அரிப்பறை ஆறெறிப்பறை
வெற்றிப்பறை வெறியாட்டுப்பறை
வெருப்பறை வெட்டியான்பறை
குரும்பறை குறவைப்பறை
கோட்பறை கொடுகொட்டிப்பறை
சாப்பறை சாக்காட்டுப்பறை
தலைப்பறை தமுக்குப்பறை
தொண்டகப்பறை சூசிகப்பறை
பம்பைப்பறை பன்றிப்பறை

திடும் திண்டிமம் தண்ணம் தம்பட்டம்
தக்கை தப்பட்டை திமிலை படலை
முரசம் நசாளம் பண்டார மேளம்
தக்களி மத்தளி கரடிகை தாளம் காகளம் வீராணம்‌........

இத்தனை வகைப் பறைகள் ஏன் வாசித்தனர் என்று தெரியுமா?!... அதற்குப் பின்னணியில் உள்ள ஜீவகாருண்யம்/ இசை ரகசியங்கள்/ மருத்துவ குறிப்புகளைப் படித்துப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள்....நாம் இழந்த பறையிசையை இன்னும் ஒதுக்கி வைக்க வேண்டுமா இல்லை ஒவ்வொரு வீட்டிலும் வைத்துப் போற்ற வேண்டுமா என்று.....

இப்படிக்கு,

✍️செ. இராசா

28/04/2023

இரவை இரவிக் கலவி செய்ய

 


இரவை இரவிக் கலவி செய்ய
ஒளியின் வெள்ளோடை ஓடிவர
காகங்கள் எல்லாம் கானம்பாட
குயில்களும் கூடித் தாளம் போட
வரிசையாய் மரங்கள் மலர்தூவ
விழுந்த மலர்கள் விரிப்பாக...
சாலையில் நடந்துபார்
சொர்க்கம் உன் காலடியில்...
 
✍️செ. இராசா

26/04/2023

மைனரு வேட்டிகட்டி

 


மைனரு வேட்டிகட்டி
........மச்சிநீ வந்தீனா
பைனலு மேட்சாட்டம்
.........பத்திக்கும்- டைனமைட்டா
அத்தனைப் பொண்ணுகளும்
.........ஆர்ப்பாட்டம் செய்யுதுன்னா
எத்தனைப் பேருனக்(கு)?
..........இங்கு!
 
✍️செ. இராசா

24/04/2023

குளு குளு ஏசி கூலிங் பீரு ஓசி

 


 #பல்லவி
குளு குளு ஏசி
கூலிங் பீரு ஓசி
இங்கே வந்தா....எல்லாமே ஈஸி..
அடி தூளு ஹாட்டு
அல்ட்ரா மாடர்ன் டேஸ்டு
கொஞ்சம் வந்தா...போடலாம் டான்சு..

#சரணம்
வொர்க்கிங் ஹவர்ஸ் நீண்டதால செம ஜாலி..
வைஃபுக்கிட்ட சொல்லிடலாம் ஐயம் இன் ஜோலி...
ட்வல் ஹவர்ஸும் பத்தலைன்னா இன்னும் கூட்டு...
ஒன்டே டெஸ்டு மேட்சைப்போல வேணும் டேஸ்டு....

போரடிச்சா வந்திடலாம் மேரேஜ் ஹாலு
போக வேணாம் மாமா இனி ஈஸிஆரு

✍️செ. இராசா

23/04/2023

நானும்பல புத்தகங்கள் ........எழுதி யுள்ளேங்க

 


நானும்பல புத்தகங்கள்
........எழுதி யுள்ளேங்க
நாளைக்கென நம்மிடத்தில்
.........என்ன சொல்லுங்க?!
 
நாணும்படி ஏதுமின்றி
...........செஞ்சு வச்சேங்க!
வாழும்வரை நல்லதையே
...........செய்ய வேணுங்க!
 
காணும்பல காட்சியையே
...........கவிதை செஞ்சேங்க!
காலம்பல நின்றிடவே
...........கோர்த்து வச்சேங்க!
 
வேணும்பல வேணுமென
...........கேட்ப தாருங்க?
மின்னும்வரை செய்வதென்ற
...........முயற்சி தானுங்க!
 
✍️செ. இராசா 
 

22/04/2023

வந்தவுயிர் அத்தனையும்

 

வந்தவுயிர் அத்தனையும்
....... வாழ்ந்துவிட்டுப் போகும்முன்
நொந்துவுயிர் வாடிடவா
.......நோகின்றோம்- சிந்திப்பீர்
புன்னகையே காட்டாமல்
.......போகுமுயிர் போய்ச்சேரும்
என்றுவந்தால் என்ன
......இறப்பு?
 
✍️செ. இராசா

எட்டு மணிநேரம் என்பதே ரி




கூட்டணிக் கட்சிகளே கூப்பாடு போடுகையில்
ஏட்டிக்குப் போட்டியாய் ஏன்?!
(1)

உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் சட்டம்
இழைக்கும் விளைவென்ன எண்ணு?
(2)

விடியல் விடியலென வேண்டிவந்த பின்னர்
முடிவைத் தொடங்குவதா மாண்பு?
(3)

நேரத்தைக் கூட்ட நிறைவேற்றும் தீர்மானம்
யாருக்காய் இங்கே இயம்பு?!
(4)

திராவிட மாடலென செப்பியதன் பின்னர்
திராவகம் வீசலாமா செப்பு?!
(5)

உணவகத்தில் உள்ளோர் உழைக்கின்ற நேரம்
மணியெட்டைத் தாண்டும் தினம்
(6)

அங்காடி ஊழியர்கள் அத்தனை பேருக்கும்
எங்கய்யா எட்டுமணி இங்கு?
(7)

ஏற்கனவே நம்நாட்டில் எத்தனையோ மீறல்கள்...
ஏற்றாதீர் பாவம் இணைந்து!
(8)

அடித்துப் பிழைப்போரை ஆதரிப்பீர் என்றால்
வெடிக்கும் விளைவு விரைந்து!
(9)

உழைப்போர் சிலைவைத்த உன்னத நாட்டில்
பிழைப்போர் நிலையெண்ணிப் பேசு!
(10)

✍️செ. இராசா

21/04/2023

 ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவை
ஆம்...
ஊக்க-மது கைவிடேன் என்கிறார் குடிமகன்

இந்தியனை வெல்லயினி

 


முந்திமுந்திச் சென்றவனை
......மூக்கிலே குத்திய
இந்தியனை வெல்லயினி
......யாருள்ளார்?!- பந்தயத்தில்
வல்லரசாம் வல்லரசு
......வாய்கிழியப் பேசாதீர்!
வல்லசெயல் பேர்-அரசே
.....நாம்!
 
✍️செ. இராசா

20/04/2023

என்ன நடக்கும் எப்ப நடக்கும்

 


என்ன நடக்கும் எப்ப நடக்கும்
எதுவும் தெரியல....
முன்னே நடந்தா பின்னே இழுக்கும்
விதியும் புரியல...(2)
 
காலம் போகும் வேகம்
போகும் தூரம் போவோம்
வேகம் கொஞ்சம் ஓஞ்சா...
நாமும் கொஞ்சம் ஓய்வோம்...
 
காலம் நம்ம காலம்
கையில் வரும் நேரம்....
பாத்திருக்க வேணாம்
பாயும் புலி ஆவோம்...
 
✍️செ. இராசா 
 
(அதிகாலைப் பொழுதில் சாலையின் இருபுறமும் கொட்டிக் கிடக்கும் கொன்றை மலர்களின் கண்கொள்ளாக் காட்சி)

18/04/2023

இசக்கி ராஜா

 

மன்னாதி மன்னரு
மாமன்னர் பேரரு
எங்க அண்ணன் தங்கம் தான்டா - அவர்
கண்ணசைச்சா சிங்கம் தான்டா
வீராதி வீரரு
வேகத்தில் சூரரு
பாண்டியரு வம்சம் தான்டா- அவர்
பாயும்புலி அம்சம் தான்டா
பொன்னங்குறிச்சி வீரன் யாரு
ஊருக்குள்ள கேட்டுப் பாரு
இசக்கி ராஜா வர்றார் பாரு
தேவர் குலத்துத் தங்கத் தேரு
 
பாசத்தில் எங்க மூக்கையா தேவர்-அவர்
வழிவந்த பிள்ளையடா
சாதிமத மோதல விரும்பாத தலைவரு
இவர்போல இல்லையடா
PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம்
உருவாக்கிய தலைவராக
உதவின்னு கேட்டா உசுரையே கொடுக்கும்
உன்னதத் தலைவரடா
பொன்னங்குறிச்சி வீரன் யாரு
ஊருக்குள்ள கேட்டுப் பாரு
இசக்கி ராஜா வர்றார் பாரு
தேவர் குலத்துத் தங்கத் தேரு
 
போர்க்குணம் கொண்ட போராளி இவரு
பாராளும் பரம்பரைடா...
நேதாஜி போல நேர்வழி நடக்கும்
தென்பாண்டித் தமிழனடா..
இல்லைன்னு சொல்லாம எப்போதும் கொடுக்கும்
இக்கால கர்ணனடா...
தொல்லைநீ தந்தாக்க தோட்டாவாத் தெரிக்கும்
முக்குலத் தேவனடா...
பொன்னங்குறிச்சி வீரன் யாரு
ஊருக்குள்ள கேட்டுப் பாரு
இசக்கி ராஜா வர்றார் பாரு
தேவர் குலத்துத் தங்கத் தேரு
 
✍️செ. இராசா

சோலைஆறுமுகம்

 

தரமான சம்பவமாய்
.....தந்திடுவீர் என்றும்
கரம்கோர்க்க காத்திருக்கோம்
.....கண்டோர்- வரம்தாரீர்
அன்னைத் தமிழ்க்கடவுள்
.....ஆறுமுக நற்பெயரை
என்றைக்கும் காப்பதாய்
.....இங்கு!
 
✍️செ. இராசா
 
வாழ்க வளமுடன்!!!
 

17/04/2023

சென்னை மெட்ரோ



கத்தார் நாட்டில் சில ஆண்டுகளுக்குமுன் மெட்ரோ திட்டம் கொண்டு வந்தபோது, இந்தத் திட்டம் உண்மையில் தேவையில்லாத திட்டம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். காரணம், இங்கே உள்ள அரபிகள் ஒரு பொட்டிக்கடைக்குச் சென்றால்கூட வாகனத்தை விட்டு இறங்கிப் போய் வாங்க மாட்டார்கள். கடைக்காரர்தான் ஓடிவந்து வேண்டியதைக் கொடுப்பார். அப்படி இருக்கையில், யார் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போய் மெட்ரோவில் ஏறுவார்கள்‌ என்று நினைத்தோம்.மேலும் நாடுவேறு மிகவும் சிறிது. இதற்கு எதற்கு மெட்ரோ என்றுதான் உண்மையில் நினைத்தோம். ஆனால் உலகக்கோப்பை வந்தபோதுதான் அதன் தேவை அனைவருக்கும் புரிந்தது.

அதுபோலவே நம்ம ஊரிலும் மெட்ரோ வந்தபோது, பெட்டிகள் குறைவாக உள்ளதே... எப்படி சென்னை மக்கள் தொகையை மெட்ரோ சமாளிக்கும் என்றெல்லாம் ஐயம் இருந்தது. அதைவிட எனக்கு என்ன ஐயம் என்றால், சுத்தம் சுகாதாரமாக இருக்குமா என்பதுதான். ஆனால் நான் நினைத்ததைவிட பலமடங்கு மேலாக, அதி அற்புதமாக உலகத்தரத்தில் சென்னையில் மெட்ரோ இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்கூடாகக் கண்டபோது மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

காரணம், எங்கோ ஒரு சிறிய நாட்டில் செயல்படுத்துவது பெரிய காரியமில்லை. அந்நாட்டைவிட ஆறு மடங்கு மக்கள்தொகை கொண்ட ஒரு ஊரில் செயல்படுத்துவது பெரிய காரியமில்லையா?! அதைவிட ஆச்சரியம்....மெட்ரோ ரயில்முதல் நிறுத்த நிலையங்கள்வரை அனைத்து இடங்களும் சுத்தமாக இருந்தது. மேலும், நகரும் படிக்கட்டுகள் மிகப்பெரிய உயரத்தில் நிறுவியுள்ளார்கள். உள்ளே பயணச்சீட்டு வாங்கி அதைக் காண்பிக்கையில் தானியங்கி கதவுகள் திறப்பது மூடுவது எல்லாம், நம்ம ஊரிலும் மிகச் சிறப்பாக எந்த சிரமமும் இல்லாமல் நடப்பதைக் காண்கையில்,
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களில் இத்திட்டம் கண்டிப்பாக காலம் உள்ளவரை அவர் பெயர் சொல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

என்னால் முடிந்தவரை சென்னை மெட்ரோவை காணொளியாக்கியுள்ளேன். பிடித்தால் பார்த்துப் பகிருங்கள் உறவுகளே...

https://youtu.be/Xw9Sj2fT6Nw

✍️செ. இராசா

15/04/2023

கடவுளைப் புரிந்தவர் ..... கடந்திடும் எல்லை

 

கடவுளைப் புரிந்தவர்
..... கடந்திடும் எல்லை
கடனென உழல்பவர்
.....காண்பது.. இல்லை!
இடத்தினைப் பகையென
.....இகழ்ந்திடும் தொல்லை
இடமெலாம் தமதெ(ரெ)ன
.....நினைப்பவர் கில்லை!
 
வருவதில் மகிழ்பவர்
......வருந்துவ தில்லை
வருவதை இகழ்பவர்
......மகிழ்வது... இல்லை
இருப்பதில் கொடுப்பவர்
.....இறைவனின் பிள்ளை
இருப்பினை மறைப்பவர்
.....இருந்துமே இல்லை!
 
✍️செ. இராசா

14/04/2023

சித்திரையில் நற்செய்தி

 

சித்திரையில் நற்செய்தி
......சீக்கிரமே வந்திடவும்
வித்திட்ட அத்தனையும்
......வெற்றிபெற - எத்திசையும்
முத்திரையைத் தந்தபடி
.......முன்னணியில் சென்றிடவும்
முத்தமிழை வேண்டுகிறேன்
.......நான்!
 
✍️செ. இராசா
 

13/04/2023

கோபம்

 #கோபம்

கோபத்தின் உச்சத்தில் கொட்டுகின்ற வார்த்தைகள்
தூபமாய் சூழும் தொடர்ந்து
(1)

ஆத்திரத்தில் செய்கின்ற அத்தனை செய்கையும்
நேத்திரத்தை மூடும்; நினை!
(2)

மற்றவர்கள் செய்யும் மடத்தனச் செய்கைக்குக்
தற்கொலையா தீர்வு? தவிர்!
(3)

கோபமும் தீயும் குணத்தால் உறவைப்போல்
ஆபத்தாய் மாறலாம் ஆய்!
(4)

இதயத்தின் வேகம் இதமின்றி ஓடி
சிதைந்துவிடச் செய்யும் சினம்
(5)

சினமென்னும் தீயை சிதைத்திட வேண்டின்
மனதிற்குள் அன்புநீர் ஊற்று
(6)

சாதுவே கோபமுற்றால் சாமான்யன் என்னாவான்?!
தீதுதரும் கோபம் தவிர்!
(7)

கள்ளைப்போல் கோபமும் கைகால் தடுமாற
உள்ளிருந்தே வைக்கும் உணர்!
(8)

கோபமெனும் நஞ்சைக் குறைவாகக் கொண்டாலும்
ஆபத்தாய் மாறும் அது!
(9)

வெகுளியை விட்டால் விரையமாய்ப் போய்நற்
தகுதியின்றிப் போகும் தவம்!
(10)

✍️செ. இராசா

12/04/2023

வெண்பாவை வைத்தொன்றும்

 

வெண்பாவை வைத்தொன்றும்
....வெண்'பாவை தேடவில்லை
கண்பாவை கண்டாலும்
......கண்'பாவை- உண்டதில்லை
என்பாவை ஆழத்தில்
......என்'பாவை வீற்றிருக்க
நன்'பாவாய் நானிருக்கேன்
......நம்பு!
 
✍️செ. இராசா
 
(சும்மாவே புரியாது. இதுல இதுவேறயா....
அதானே...இப்பப் பாருங்க புரியும்.
பாவை என்றால் #கருவிழி என்றும் #பெண் என்றும் இரண்டு பொருள்கள் வருமாறு தொடுத்துள்ளேன். இப்பப் பாருங்க....)

11/04/2023

தமிழாலிவன் உருவானவன்

  


தமிழாலிவன் உருவானவன்
....தரமானவன் என்றே...
தமிழாளுமை குருவானவர்
....மொழிந்தார்பெயர் நன்றே!

புவியாவிலும் புகழோங்கிட
....புரிந்தான்செயல் என்றே..
கவியாள்பவர் குழுயாவிலும்
...கவிப்பார்குரல் ஒன்றே!

தலையேறிடா தலையாலிவன்
...தலையானவன் என்றே
கலையூறிய கலைஞானியர்
...கணித்தார்பலர் நன்றே!

புகழ்போதையில் தடம்மாறிடா
....புதிரானவன் என்றே...
இகம்யாவிலும் எடுப்பாரினி
.... இவன்பேரினை ஒன்றே...

✍️செ. இராசா

மச்சீ..வா ரைடிங் போகலாம்

 

மச்சீ..வா ரைடிங் போகலாம்
மனசுக்கு தேவைடா ரீசார்ஜு
போனா போகுது வந்தா வருகுது
விட்றா பார்க்கலாம் ஃபுல்ஸ்பீடு
ஃபுல்ஸ்பீடு ஃபுல்ஸ்பீடு
குண்டும் குழியும் இல்லா
ரோடு எங்கேடா...
அது வந்தா வரட்டும் வாடா
கண்ட்ரோலுடா
கண்ட்ரோலுடா..
 
டார்கெட் டென்ஷன் தூக்கிப் போடு
போகுற வரைக்கும் போவமுடா
பேஸ்கட் மாத்தி ஸ்டேட்ஸ் போடு
வாழுற வரைக்கும் வாழ்வமுடா
 
ஏய்...
நோநோ டென்ஷன்
நோநோ டென்ஷன் டென்ஷன்
டைமுக்கு ஏதுடா பென்சன்
வாவா
இங்க ரைடிங் போவோம் ஸ்பீடா

09/04/2023

சொத்து




இருப்பின் அடையாளமாய்
இருப்பது மட்டுமல்ல;
இருந்ததன் அடையாளமாய்
இருப்பதும் நம் சொத்துக்கள்தான்!

பின்னோர் அனுபவிக்க
முன்னோர் தந்தது மட்டுமல்ல;
பின்னால் அனுபவிக்க
இன்நாள்நாம் சேர்ப்பதும் சொத்துக்கள்தான்!

இந்த சொத்துக்கள் தான் எத்தனை எத்தனை?!

அசையும் சொத்தென்பர்
அசையா சொத்தென்பர்.....
பரம்பரைச் சொத்தென்பர்‌..
பங்காளிச் சொத்தென்பர்..
உரிமைச் சொத்தென்பர்...
புறம்போக்குச் சொத்தென்பர்
தனியார் சொத்தென்பர்...
அரசாங்கச் சொத்தென்பர்..

ஆமாம்...
உணவுக்கே வழி இல்லார்க்கு
உரிமைகோர சொத்துண்டா என்ன??

உண்மைதான்...
இங்கே....
சொத்திருந்தால் செல்வர்
சொத்தில்லையேல் செல்வர்...
அது...நாடாயிருந்தாலும் சரி
தனி‌‌... ஆளாயிருந்தாலும் சரி
சொத்தை வைத்துதான் எல்லாம்....

உண்மையைச் சொல்லுங்கள்...
சொத்தென்றால் பொருளும் நிலமும்தானா?!
எனில் இலக்கியச்சொத்தை
எதில் சேர்ப்பது?
அது‌....
அகத்தில் எவரையும்
அசைக்கும் சொத்தல்லவா?
இகத்தில் பலரையும்
இசைக்கும் சொத்தல்லவா?!
மொழிவழி செல்லும்
இனத்தின் சொத்தல்லவா?!
இனவழி செல்லும்
சந்ததியின் சொத்தல்லவா??
ஆம்....

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்..
சொத்துக்கள் அனுபவிக்கத்தான்
யாரும் அழிக்க அல்ல...
சொத்துக்கள் பெருக்கத்தான்
யாரும் கழிக்க அல்ல....

எனில் என்னசெய்யலாம்?!

பண்பாட்டுச் சொத்தை பாதுகாக்கலாம்
செந்தமிழ்ச் சொத்தை சீர்படுத்தலாம்
இலக்கணச் சொத்தை வளமாக்கலாம்
இலக்கியச் சொத்தைப் பெரிதாக்கலாம்...

அதெல்லாம் கிடக்கட்டும்
முதலில்‌..
நம் சொத்து யாதென்று
நாம் அறிவோமா?!

அதானே...

அதை அறியுங்கள் முதலில்
பின்னர் பிறமொழிபற்றி விவாதிக்கலாம்...

✍️செ. இராசா

08/04/2023

சென்னை ------குறள் வெண்பாக்கள்

 


காசு பணமென்று கண்டபடி ஓடுவதால்
தூசு பறக்குதிங்கே சூழ்ந்து
(1)
 
ஏழுமணி என்பதுதான் இங்கே அதிகாலை
வாழும் முறைசொன்னால் வம்பு
(2)
 
முன்னிரவில் உண்ணாமல் மூச்சுமுட்ட எல்லோரும்
பின்னிரவில் உண்ணுகிறார் பேர்க்கு
(3)
 
சாப்பிட்ட வேகத்தில் சட்டென்று தூங்குவதால்
கூப்பிடா நோயெல்லாம் கூட்டு
(4)
 
மக்களின் வெள்ளத்துள் மாநகரம் நின்றாலும்
மக்களாட்சி என்பதுதான் மாண்பு
(5)
 
எங்கெங்கு காணினும் ஏராளப் பூங்காவாய்
இங்குள்ளோர் செய்த எழில்
(6)
 
உழைக்காமல் இங்கே உறங்குவோர் இல்லை
சளைக்காமல் ஓடும் சனம்
(7)
 
சின்னத் தெருவுக்குள் செல்கின்ற ஊர்திகள்
என்னே அழகய்யா இங்கு?
(8)
 
ஊபரும் ஓலாவும் உண்மைமிகு நட்பைப்போல்
ஆபத்தில் வந்துதவும் அங்கு
(9)
 
தொழில்முனைவோர் எல்லாம் தொடர்ந்திங்கே வந்தும்
எழில்கூடும் சென்னை இது!
(10)
 
✍️செ. இராசா

07/04/2023

வெள்ளி

இந்த வெள்ளிக்குத்தான்
எத்தனைக் காரணப் பெயர்கள்?
 
சூரிய குடும்பத்தின்
இரண்டாம் கோளாய்
வெள்ளை வெளேரென
வளியில் உலா வருவதாலும்;
உலோக வரிசையில்
உயர்ந்த இரகமாய்
வெண்ணிற பொன்னென
வெள்ளியே இருப்பதாலும்;
வெள்ளியன்ற பெயர்
வெள்ளிக்கு வந்திருக்குமோ?!
 
ஜெர்மானிய தெய்வம் FRIGGம்
ரோமானிய தெய்வம் வீணஸும்
ஒன்றே என்பதுபோல்
FRIDAY வைக்குறிக்கும் வெள்ளியும்
வீணஸைக் குறிக்கும் வெள்ளியும்
ஒன்றாய் இருக்கலாமோ?!
 
சுக்ரவார் என்று கிழமையையும்
சுக்கிரன் என்று கிரகத்தையும்
வடமொழியும் குறிப்பதினால்
வெண்மை நிறமென்றும்
வெள்ளிக்கே பொருந்துமென்பது
மறுக்கமுடியா உண்மைதானே...!!
 
அதனால்தான் என்னவோ...?!
அத்தனை மதங்களுமே
வெள்ளியைக் கொண்டாடுகின்றனபோல..
 
ஆம்...
இந்த நாள்
ஆதாம் படைக்கப்பட்ட நாள்...
ஆண்டவர் இயேசு உயிர்நீத்த நாள்....
இஸ்லாமியரின் ஜூம்ஆ நாள்..
இந்துக்களின் விரத நாள்...
உண்மையில்...இந்த நாள்
அனைவருக்குமான புனிதநாள்...
 
வெள்ளி ஒளி பரவட்டும்.....
உள்ள ஒளி விரியட்டும்‌...
 
✍️செ. இராசா

 தனக்கான கவிதையைத் 

தானே எழுதிக்கொள்கிறது 

காலம்

06/04/2023

சலுகை உண்டா?

சலுகை உண்டா? என்றேன்....
சலுகை என்றால் என்ன என்றார்...
Offer Discount என்றேன்
அப்படி புரியிறமாதிரி தமிழ்ல சொல்லுங்க என்கிறார்...😀

 

மகிழுந்தோ தானியுந்தோ வண்டியிலே இல்லை
மகிழ்வின் இருப்பு மனம்!

03/04/2023

மொய் எழுதினால் இரசீது




வந்த வரவிற்கும்
.....வைத்துள்ள காசிற்கும்
முந்தைய மொய்க்கணக்கில் .
.....முட்டியதால்- வந்துள்ள
எந்திரம் மூலம்
.....இரசீது போடுகிற
விந்தைதான் இப்போ
.....விருந்து!

✍️செ. இராசா

(திருமணங்களில் மொய் வைத்தால் இரசீது தருகிறார்களாம்....😃😃😃)

01/04/2023

என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்

  


(விமானப் பயணத்தின் ஊடே தற்சமயம் கொழும்புவில் உள்ளபோது அருமையான மெட்டு ஒன்றிற்கு எழுதிய பாடலே இது)

#பல்லவி
என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்
ஏழைகளின் காவலன் அல்லாஹ்
இம்மையிலே தேர்ந்திட இல்லையென ஈந்திட..
சிந்தையிலே ஏற்றிடும் இரமலான்...

எல்லையின்றி கொடுப்பவன் அல்லாஹ்...
இன்னலின்றி தடுப்பவன் அல்லாஹ்..
உண்மையிலே நின்றிட அண்ணல்வழி சென்றிட
சிந்தையினை மாற்றிடும் இரமலான்...

என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்.
ஏழைகளின் காவலன் அல்லாஹ்.

#சரணம்
நோன்பு நோற்கும் மாதமே ரமலான்
ஆழ்ந்து நோக்கும் மாதமே ரமலான்
வாழும் காலம் போகுது தானே..
தீரும் முன்னே தெளிந்திடு நீனே...

வேதம் சொன்ன பாதையில் போனால்
யாவும் இங்கே வசப்படு...மே
ஞாலம் மீள காட்டிய வழியில்
நீயும் போக மாறிடும் வாழ்வே..

எண்ணம் போல வாழ்வே... வரம்தானே... 

மனம் மாற வேண்டிடவா..
தந்தால் மட்டும் தானே...
வரும்தானே‌....வளம் கூட வேண்டிடவா..
லாஹி லாஹா இல்லல்லா
நல்வாழ்வைத் தா அல்லாஹ்
லாஹி லாஹா இல்லல்லா
நல்வாழ்வைத் தா அல்லாஹ்

✍️செ. இராசா