25/02/2018

அசாம் மேகாலயா நினைவலைகள் -01






இந்தியத் தாயின் குழந்தையென
ஏழு சகோதர மாநிலங்கள்....
இறைவன் செய்த அற்புதத்தில்
ஏழும் எழில்மிகு ஓவியங்கள்....


அங்கொரு வேலைத் தேடிவரே
ஆசையில் உடனே கிளம்பிவிட்டேன்
அப்பா என்னுடன் துணைக்குவர
அசாம் மண்ணிலே கால் வைத்தேன்...

அப்பா...அப்பா...அப்பப்பா....
என்ன குளிரென வெடவெடத்தேன்
அச்சா....அச்சா....மாலும்... நகி....
எதுவும் தெரியாது நான் விழித்தேன்...

அப்படி இப்படி சமாளித்து
அங்கே வாழ்ந்திடப் பழகிக்கொண்டேன்..
அசாம் மேகாலயா மாநிலத்தின்
அற்புத அழகினை தினம் ரசித்தேன்....

மேகம் கொஞ்சிடும் மலை முகட்டில்
மோகம் கொண்டே மயங்கி நின்றேன் ..
எங்கும் ஓடிடும் நீர்ச் சுனையில்
என்னை நானே இழந்துவிட்டேன்...

நான்கு வருடமே வாழ்ந்தாலும்
நாளும் நினைவிலே வாழ்கின்றேன்...
என்னைச் செதுக்கிய மாநிலத்தை
என்றும் மனதில் வாழ்த்துகின்றேன்....

24/02/2018

***கவிதை இல்லை***

***************************
ஒரு காரணத்திற்காக இங்கே கவிதை இல்லை
****************************
****************************

துளிகள்

என்றேனும் ஓர் கவிதை எழுதிடமாட்டேனா?!
ஏக்கத்தோடு நான்....
 ####################################################

இதயத்திலே அன்பு வைத்து
இணையத்திலே வாழ்த்துவதால்
அன்பின் எல்லை விரிகின்றது!
அகிலம் அன்பால் இணைகின்றது!

#######################################################

முதுமையின் முகவரிதான்
முகத்தில் தெரிகிறது
முதிர்ச்சியின் அடையாளமாய்

########################################################

ஔவை...அவ்வை
மையம்...மய்யம்-எது சரி?
மய்யம் சரி என்றால்
‘மை’ எதற்கு?

####################################################

ஒலி அலையை உள் வாங்கி
வளி அலையாய் உரு மாற்றி
கலி உலகை ஆள்கிறது
#_கைப்பேசி

###########################################################

கண்பேசி காதலித்து
வாய்பேசி வறுத்தெடுத்தால் 
கைப்பேசி கதகதக்கும்

காலம் பதில் சொல்லும்--களஞ்சியம் கவிதைப் போட்டி (94) இரண்டாமிடம் பெற்றக்கவிதை கவிதை



எளியவன் ஒருவன் கைகட்டி நின்றால்
எலியென அவனை அலட்சியம் செய்து
வலிகளைத் தருகிற அறிவிலிக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!

குறைவிலா செல்வம் தன்னிடம் இருந்தும்
நிறைவிலா மனதுடன் மேலும் சேர்த்து
செலவுகள் செய்யாக் கஞ்சனுக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!

கல்வியை இளமையில் ஏளனம் செய்து
கல்லா மனிதராய் காலத்தைக் கழித்து
கல்லாய் இருக்கும் குருடருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!

கள்ளினை நாளும் விரும்பிச் சுவைத்து
களிப்புடன் போதையில் தன்னை மறந்து
காலத்தைப் போக்கும் மூடருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!

ஆட்சியை சூழ்ச்சியால் தன்வசம் செய்து
சாட்சிகள் இன்றியே தவறுகள் செய்து
காட்சியை மாற்றிய கயவருக் கெல்லாம்
காலமே பதில் சொல்லும்!


 https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2019022691749970/

23/02/2018

வாழ்க பேகன்




 
சிவனின் பரதம் ஆடுகின்றான்- இவன்
சிந்தையிலே தினம் மகிழ்கின்றான்!

பந்தைக் காலில் உதைக்கின்றான்-இவன்
பந்த பாசத்தில் நகைக்கின்றான்!

சிவாவின் மகனாய் சிரிக்கின்றான்-இவன்
சித்தப்பா என்னையும் நினைக்கின்றான்!

குறளினைத் தெளிவுடன் கூறுகின்றான்- இவன்
குரலினை உயர்த்தியேப் பேசுகின்றான்!

வள்ளலின் வாரிசாய் வருகின்றான்- இவன்
துள்ளலில் சிவாவையே மிஞ்சுகின்றான்!

வாழ்க மகனே...
வாழ்க பேகன்...

21/02/2018

உலகத் தாய்மொழி தினத்தில் ஓரு சிறுவர் பாடல்


பாப்பா பாப்பா வா பாப்பா
பாரதி என்றால் யார் பாப்பா?
அப்பா அப்பா என்னப்பா?
அவர்தான் தேசியக் கவிஞரப்பா....

அறிவுப் பாப்பா சொல் பாப்பா
குறளைத் தந்தது யார் பாப்பா?
அப்பா அப்பா நல்ல அப்பா
அவர்தான் உயர்திரு வள்ளுவரப்பா.....

அழகுப் பாப்பா சொல் பாப்பா
மொழியில் சிறந்தது எது பாப்பா?
அப்பா அப்பா சொல்றேன்பா
அம்மொழி செம்மொழி "தமிழ்" தான்பா.

ஆக்கம்: செ. இராசா

19/02/2018

மழை



சாதி மதம் பார்க்காத
சமத்துவக் குணத்தோடு
மேடு பள்ளம் காணாத
சமநோக்குப் பார்வையோடு
இரவார்க்கும் தருகின்ற
ஈரமுள்ள நெஞ்சோடு
இறங்கி வந்து உதவி செய்யும்
இறைவனின் தன்மையோடு
நீராகப் பொழிகின்ற
நீரின்றி உலகேது........

—-செ. இராசா—-

18/02/2018

எழுதுகோல் பேசுகின்றேன்-களஞ்சியம் கவிதைப்போட்டி (93)- வெற்றிக்கவிதை

93வது களஞ்சியம் கவிதைப் போட்டியில் கவிதை எழுத எமக்கு வாய்ப்பளித்த திரு.சேக்கிழார் அப்பாசாமி அண்ணா அவர்களுக்கும், இரண்டாம் இடத்திற்கு அடியேனின் கவிதையை தேர்வு செய்த நடுவர் திரு. கோபிநாத் ஐயா அவர்களுக்கும் மற்றும் ஊக்கம் தந்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


எழுதுகோல் பேசுகின்றேன்
**************************
கரங்கள் இரண்டாலும்
கற்களில் செதுக்குகின்ற
கல்லுளியாய்ப் பிறந்தவன் நான்..

பல்லாயிரம் கவிதந்த
பனையோலைச் சுவடிகளின்
பண்டைய எழுத்தாணி நான்.....

தொட்டுதொட்டு மை எடுத்து
தோல்துணி தொட்டெடுத்த
தொன்மைமிகு தொடுகோல் நான்...

கழுத்தளவு மை நிரப்பி
காகிதத்தில் வடிக்கின்ற
காகித எழுதுகோல் நான்....

எத்தனையோ காலங்களாய்
எழுத்துக்கள் ஈன்றெடுக்கும்
எழுதுகோலாய் இருப்பவன் நான்...

தொடுதிரையின் வருகையிலும்
தொலைதூரம் போகாமல்
தொடுவிரலாய் தொடர்பவன் நான்...

என்றென்றும் உங்களோடு நான்....

——செ. இராசா—-

https://www.facebook.com/groups/1535309520121292/search/?query=Gopinath 

14/02/2018

மிதிலையில் காதல்



கீழ் ஊரும் இரையைக் காணும்
மேல் மாடப் புறாவைப்போல
கீழ் சென்ற இறையின் உருவை
மேல் நின்று கண்டாள் சீதை!

விண்ணில் உள்ள மீனைக் கண்டு
தன்னை மறந்த குழந்தை போல
கண்ணில் விழுந்த சீதை கண்டு
தன்னை அன்று மறந்தான் இராமன்!

நான்கு விழிகளும் மோதி நிற்க
நாயகன் நாயகி நின்ற நிலை- ஒரு
மொழியின்றி பேசிய மோனநிலை-அது
மிதிலையில் பொழிந்த காதல் மழை!

—-செ. இராசா—-

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

(இந்தக் கவிதை மற்றொரு நபரால் (வசந்த்) திருடப்பட்டு அவருடைய முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது..............எதேச்சையாக நான் கண்டேன்....நானே ஆச்சரியப்படும் வகையில் நிறைய ஆச்சரியக் குறிகளைச் சேர்த்திருந்தார். என்னை விட அதிகமாக நிறைய லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் வாங்கி இருக்கிறார்)



காதல் இல்லா காலமும் இல்லை!
காதல் கொள்ளா உயிர்களும் இல்லை!
காதல் இல்லான் கவிஞனும் இல்லை!
காதல் கொள்ளான் மனிதனும் இல்லை!

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
அந்தைய காலத்துக் காதலின் சாட்சியே
இந்தைய காலத்து மனிதர்கள் என்று
சிந்தையில் நாமும் எண்ணிட வேண்டும்!

காதலன் காதலி காதலை மட்டும்
காதல் என்றே எண்ணிட வேண்டாம்!
கடவுளின் பக்தியும் அன்பும் கருணையும்
கற்புள்ள நட்பும் காதலே ஆகும்!

காதலால் தோன்றிய மனிதர்கள் யாவரும்
காதலர் தினத்தைப் போற்றிட வேண்டும்!
காதலில் ஒழுக்கம் காத்திடும் யாவரும்
காதலால் சிறப்புற வாழ்த்திட வேண்டும்!

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்

♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

13/02/2018

நாயடியேன் வேண்டுகின்றேன்





ஆதி முதல் அந்தம்வரை
ஆன பொருள் அத்தனையும்
கூடி நின்ற தத்துவமாய்
கோடி முகம் கொண்டவனே!

உருவத்திலே சிவனென்றும்
அருவத்திலே அன்பென்றும்
அருஉருவ லிங்கமென்றும்
ஆகிநின்ற தத்துவமே!

இருப்புநிலை சிவமென்றும்
இயக்கநிலை சக்தியென்றும்
இரண்டுநிலை ஒன்றாக
இணைந்துள்ள இறைநிலையே!

அறிவுநிலை அறியாத
அறிவிலியாய் இருந்தவனை
நாயகனே பொறுத்தருள்வாய்
நாயடியேன் வேண்டுகின்றேன்!

—- மகா சிவராத்திரி வாழ்த்துகள்

11/02/2018

அடி.

அலைபாயும் எண்ணமெல்லாம்
அடங்கித்தான் போனதடி
என்ன அடி...😖🤛

ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும்



அசையாத கல் மேலே
அசைகின்ற கல் சேர்ந்து
இரு கல்லும் சிவன்போலே
இணக்கமாய் இணைந்திருக்க
ஆற்றலின் சக்தியினால்
அதன் வேகம் அதிகரித்து
சிக்கியதன் தன்மைக்கேற்ப
முக்தியும் கிடைக்குமன்றோ?!!!

---செ. இராசா----

பத்மஶ்ரீ முருகானந்தம்


மாதவிடாய் காலங்களில்
மனைவியுற்ற துயர்கண்டு
மகளிரினம் அத்தனைக்கும்
மாற்றுவழி தீர்வுவேண்டி 


சோதனைகள் செய்கையிலே
வேதனைகள் வந்தபோதும்
உரியவரும் உறவினரும்
உதறித்தள்ளிப் போனபோதும்

மனதிலுறுதி குறையாமல்
மலிவுவிலை பொருள்செய்த
பத்மஸ்ரீ முருகானந்தத்தை
பாராட்டி மகிழ்ந்திடுவோம்!

—வாழ்க வளமுடன் ஐயா—-

(இவரால் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை. இவரை வைத்து “ பேடு மேன்” என்ற திரைப்படம் ஹிந்தியில் எடுக்கப்பட்டுள்ளது)

காதலெனும் தேர்வெழுதி-களஞ்சியம் கவிதைப் போட்டியில் (92) பங்குபெற்ற கவிதை




காதலெனும் தேர்வெழுதி
************************
காலையிலே கதிரவனாய்
மாலையிலே வெண்ணிலவாய்
எனக்காக வலம்வந்த
என்னழகுப் பெண்ணிலவே...

கச்சிதமாய்ச் சொல்லெடுத்து
கவிதைகளை வார்த்தெடுக்கும்
கவிஞராக மாற்றிவிட்ட
கட்டழகுக் காரிகையே....

கண்ணழகில் எனை இழுத்து
கற்பனையில் சிக்க வைத்து
காதலெனும் தேர்வெழுதி
காக்கவைத்த காதலியே...

விடையெதுவும் தெரியாமல்
விழிபிதுங்கி நானிருக்க...
அன்பான புன்னகையால்
அழைப்பிதழைத் தந்தாயே!

10/02/2018

நன்றி நவிலல்



அறம் வழி பொருள் ஈட்டி
அதன் வழி இன்பம் கூட்டி
இறைநிலை அடையும் வழி
இதுவென எடுத்துக்கூறி
அறிவின் பேரொளியை
அகிலத்தில் பாய்ச்சுகின்ற
அற்புத சேவை செய்யும்
ஆசான்கள் அனைவரையும்
மனம் மொழி மெய்களாலே
மகிழ்வோடு வணங்குகின்றேன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!

07/02/2018

அடிக்கடி வரும்......



அடிக்கடி அன்பில் வரும்
அழையா விருந்தாளியே...
இம்முறை வந்த நீ- ஏன்
இன்னும் செல்லவில்லை?

அவ்வளவு பிடிக்குமா என்னை?

வந்தாய்...
இருந்தாய்.....
கட்டிப்பிடித்தாய்....
தலைவலி தந்தாய்
தும்ம வைத்தாய்- ச்சீயென
துப்ப வைத்தாய்....

இருந்தும்
போகாமல் உயிரை வாங்குகிறாய்...

போய்விடு....:
சளியே போய்விடு

முடியல....

——செ. இராசா—-

05/02/2018

கருணை/ மழைநீரின் கருணைபோலே



 கண்ணு மண்ணு தெரியாம
கண்டபடி குடிச்சிகிட்டு
தன்னைக்கூடத் தெரியாம
தள்ளாடி நடந்துகிட்டு

வீடு வாசல் போகாம
வீதியில விழுந்தவன் மேல்
பாவம் பாவம் என்று சொல்லி
பாசம் காட்டும் அம்மாக்களே....

உப்புக்கடல் மேல் பொழியும்
மழைநீரின் கருணைபோலே
உங்கமகன் மேல் பொழியும்
மனக்கருணை உள்ளதன்றோ?!

--செ. இராசா---

வீணையடி நீ எனக்கு


 
 
வீணையடி நீ எனக்கு- என்
விரல்கள்தொடத் தடை எதற்கு?

மூங்கில் குழல் நீ எனக்கு- நான்
முத்தமிடத் தடை எதற்கு?

உடுக்கையடி நீ எனக்கு- உன்
இடுப்பைத்தொட தடை எதற்கு?

மேளமடி நீ எனக்கு- உனைத்
தாளமிடத் தடை எதற்கு?

இசைக்கருவி நீ எனக்கு- உனை
இசைக்கத் தடை எதற்கு?

——செ. இராசா——

என்ன விலை உடலே?!!!

ஒவ்வொரு மனிதர்களின்
ஒவ்வொரு உறுப்புக்கும்
ஒவ்வொரு விலை வைத்தால்
ஒவ்வொரு மனிதருமே
ஒவ்வொரு கோடீஸ்வரர்!


இருதயமும் கல்லீரலும்
இரண்டில் ஒரு சிறுநீரகமும்
ஒரு லட்சம் டாலர் முதல்
இரண்டு லட்சம் டாலர்களாம்.....
 
ஓடுகின்ற இரத்தமும்
ஊறுகின்ற விந்துவும்
பெண்ணின் கரு முட்டையும்
கண்ணின் இரு கார்னியாவும்
ஒவ்வொரு உறுப்புக்கும்
ஒவ்வொரு விலைவைத்தால்
முழு உடலின் மொத்தவிலை
மூன்று கோடி ரூபாய் முதல்
நான்கு கோடி ரூபாய்களாம்....

இத்தனை மதிப்புள்ள
உடலென்னும் பொக்கிஷத்தை
இனியும் கெடுக்காமல்
உடல்நலனைக் காத்திடுவோம்!

-----செ. இராசா-----

சில துளிகள்

 *******************************
சிந்தையிலே சில கணங்கள்
சிதறாமல் இருந்திருந்தால்
சிறப்பாக இருந்திருக்கும்

********************************

கோட்டை கட்டி வாழ்ந்த இனம்
கோப்பை தட்டி வாழ்கின்றது
தமிழ்க் குடிமகன்களாய்
********************************
அதீத பாசமும்
அதீத கண்டிப்பும்
ஆபத்தில் முடியும்
********************************************
சிக்கனம் வார்த்தையில் இல்லையெனில்
சிக்கல்கள் வரலாம் சாக்கிரதை!
*******************************************

02/02/2018

இந்த உலகப்பூ



“காதல் ஜோடி தற்கொலை”

தினத்தந்தி நாளிதழில்
திகைப்பூட்டும் செய்தி கண்டேன்.

அறிந்தும் அறியாத
அரும்பு மீசை பருவத்திலே
அன்று கண்ட செய்தியினை
அடிஅடியாய் வாசித்தேன்...
...........
குற்றால அருவியிலே
குதூகலம் நடத்திவிட்டு,
மண்ணுலகுக் காதலை
விண்ணுலகில் தொடர்வதற்காய்,
காதல் பறவைகள்
காலனிடம் சென்ற சேதி
புரிந்தும் புரியாமல்
வரிவரியாய் வாசித்தேன்...
........

இறந்தோர் அறையினிலே
இருந்த காகிதத்தில்
காதலன் எழுதி வைத்த
கவிதை வரிகளையும்
காலை நாளிதழில்
வரி வரியாய் வாசித்தேன்....

அடிமனதின் பதிவுகளாய்
ஆழமாய் பதித்துவைத்த
மன நூலின் வரிகளைநான்
முக நூலில் எழுதுகின்றேன்....

இதோ;

“இந்த உலகப்பூ
ஒரு நாள் வெடித்துச் சிதறத்தான் போகிறது....
சிதறிய பூக்களில்
சிவந்த பூ ஒன்று
உன் காலடியில் விழுமேயானால்
அது என் இதயப்பூவாய்தான் இருக்கும்”

என்னை உறையவைத்து
எனக்குள் எழுச்சி தந்த
இறந்த காதலரின்
இறக்காத கவிதையினை
இங்கே உங்களுக்கு
இயன்றவரை எழுதிவிட்டேன்.

நன்றி