30/11/2023

உடைஞ்சபல்லே மீண்டும் மீண்டும் உடையுது

 

 


 உடைஞ்சபல்லே மீண்டும் மீண்டும் உடையுது- அட
முடிஞ்சகதை மீண்டும் மீண்டும் தொடருது

என்னக் கணக்கிதுவோ
....எதுவும் விளங்கவில்லை..
என்ன வழக்கிதுவோ
....ஏனோ முடியவில்லை..

உலகம்போற போக்குல உசரமின்னும் கிடைக்கல...
பயணம்போற போக்குல பல்லுகூட நிலைக்கல..

வயசுமட்டும் ஏறுது...
வாழ்க்கை இன்னும் மாறல...
முயற்சியெல்லைத் தாண்டுது
முடிவு மட்டும் தெரியல...

✍️செ. இராசா

29/11/2023

மாற்றத்தைக் காட்டுவாயோ

 

 


 இறைவா:உன் காலடியில்
‌.....ஏழை:இவன் வேண்டுகிறேன்
........என்நிலையை மாற்றுவாயோ?!

நிறைவான வாழ்க்கையினை
....நிசமாக்க வேண்டுகிறேன்
........நிம்மதியைக் கூட்டுவாயோ?!

குறையான மாந்தரையும்
.....குணமாக்க வேண்டுகிறேன்
...........குற்றங்களை நீக்குவாயோ?!

மறைந்தோடும் முன்னாலே
......மனம்:ஓங்க வேண்டுகிறேன்
..........மாற்றத்தைக் காட்டுவாயோ?!

✍️செ‌‌ இராசா

28/11/2023

போதை மீட்பு

போதை
என்னதான் உள்ளதென எண்ணி இறங்கிடுவோர்
தன்போக்கில் மூழ்கிடுவார் தாழ்ந்து
(1)

என்றோ எனத்தொடங்கி எப்போதும் என்றாகி
ஒன்றிப் பிணைபவரே உண்டு
(2)

பற்றின்றிப் பற்றிப்;பின் பற்றோடு பற்றுவைத்துப்
பற்றியதே பற்றிவிடும் பார்
(3)

அளவெனச் சொல்லித்தான் ஆரம்பம் ஆகும்
அளவின்றிப் போகும் அடுத்து
(4)

கண்கள் சொருகிவிட கால்கள் தடுமாற
எண்ணம் தடம்மாறு மே!
(5)

மீட்பு
எந்த அலைச்சுழலில் எண்ணங்கள் போகிறதோ
அந்த அலைச்சுழலை ஆய்!
(6)

பதிந்த தடம்பொதிந்த பாதையை மாற்றிப்
புதியதோர் பாதையைப் போடு
(7)

இருபத்தி ஓர்நாட்கள் ஏதேனும் செய்தால்
ஒருவாறு மா(ற்)றலாம் ஓர்ந்து
(8)

தவறென்று கண்டும் தவறுபவர் எல்லாம்
தவம்செய்ய வேண்டும் தனித்து
(9)

தனைமறக்கச் செய்யும் தவறிழைக்கும் முன்னே
தனையுணரச் செய்வீர் தவம்
(10)

✍️செ. இராசா

27/11/2023

மங்கையா மயானமா

மலர்களுக்குத் தெரியாது
தான் போகுமிடம்
மங்கையா மயானமா என்று..

ஆனாலும் அவையென்றும்
மணம் தர மறுப்பதில்லை.
மரணிக்கும் தருணம்வரை..

✍️செ. இராசா…

அண்ணாமலையே....

நினைத்தாலே முக்திதரும் அண்ணாமலையே
நிறைவுண்டோ நானுன்னை எண்ணாமலயே...

வினைதீர்க்கும் ஆண்டவனே அண்ணாமலையே
விளைவுண்டோ நானுன்னை எண்ணாமலயே‌...

எனையாளும் பைந்தமிழே அண்ணாமலையே
எனைக்கூட மறப்பாயோ எண்ணாமலயே...

உனைப்பற்றும் வரவேண்டும் அண்ணாமலையே
உடனேயேத் தருவாயோ எண்ணாமலயே- ஏதும்
எண்ணாமலயே...

✍️செ. இராசா

24/11/2023

குண்டாச் சோறத் தூக்கிக்கிட்டு

குண்டாச் சோறத் தூக்கிக்கிட்டு போறான் பாருடி....
அண்டாச் சோறத் திண்ணாக்கூட அடங்க வில்லடி.....(2)

ஏன்டா ஏன்டா பொடிப்பயலே இப்படி யெல்லாம் உண்டா
வேண்டாம் வேண்டாம் இதுக்குமேல வெடிச்சிடுன்டா குண்டா.....

✍️செ. இராசா

23/11/2023

அதிகாரம்

நெருங்கி இருந்தாலும்
தொட்டுவிட முடியாது
அப்படித் தொட்டால்
அங்கே தலை-கீழாகும்
 
உச்சத்தில் இருந்தாலும்
வரம்புமீற முடியாது
அப்படி மீறினால்
அதன் நிலை வேறாகும்
 
இப்போது ஆடினாலும்
எப்போதும் ஆட முடியாது
ஆட்டம் கை மாறினால்
அடக்கம் தீர்ப்பாகும்
✍️செ. இராசா

22/11/2023

வேர்க்கடலை சட்னியையும்

 


வேர்க்கடலை சட்னியையும்
.....வேகவச்ச இட்லியையும்
பார்க்கின்ற போதேநீர்
.....பாய்ந்துவரும்- யார்க்கும்
நலன்தரும் நல்லுணவாம்
.......நம்முணவை உண்டால்
பலன்தரும் வாழ்வுண்டு
.......பார்!
 
✍️செ. இராசா

19/11/2023

அத்தனைப் போட்டியிலும் ....அற்புதமாய் ஆடினீர்

  


அத்தனைப் போட்டியிலும்
....அற்புதமாய் ஆடினீர்
....... அப்படியே ஆடுவீரோ?
இத்தரை மீதினிலே
....இன்னுமொரு சாதனையை
.......இன்றைக்கும் செய்யுவீரோ?!
பித்தரைப் போலசிலர்
.....பேசுகிற வாய்களிலே
.......பேட்டாலே போ(மூ)டுவீரோ?
சித்தரைப் போலிருந்து
..... சிந்தனையில் மாறாமல்
......... செம்மையாகக் காட்டுவீரோ?!

இந்திய அணி வெற்றிபெற மனமார வாழ்த்துகிறேன்!
இனிய மனமார்ந்த வாழ்த்துகள்!

✍️செ. இராசா

18/11/2023

சோன்பப்புடிபோல

  


சோன்பப்புடிபோல
.......நீ சோக்காகீற பொண்ணு!
டான்கில்லருபோல
.......ஏன் டபாய்க்கீற நின்னு!
வா இப்படி வந்து
.......நீ என்ன வேணும் சொல்லு?!...
டாப் டக்கரு கிஃப்டு
.......அடி நாந்தான் உனக்கு பெஸ்டு!

✍️செ.‌இராசா

17/11/2023

ஆர்ப்பரிக்கும் குயிலோசை
அசையாமல் இருக்கிறது
மரம்
(1)

நன்றி உணர்வென்றே
புத்தியைக் காட்டிவிடுகிறது
நாய்
(2)

ஆட்டம் முடிந்தவுடன்
அடங்கிவிடுகிறது
மைதானம்
(3)

பற்றைவிடு பற்றை விடுவென

 


பற்றைவிடு பற்றை விடுவென
பற்றின்துயர் பட்டுத் தெரிந்தவர்
பற்றைவிடச் சுட்டும் பலகதை
....தெரிந்தாலும்

பற்றில்பல முற்றிக் கடந்திட
தொற்றிப்பல தொட்டுத் தொடர்ந்திட
பற்றைவிட மட்டும் மனமது
.....புரியாமல்

கற்றுக்கொடு கற்றுக் கொடுவென
பற்றைவிடக் கற்றுக் கொடுவென
கற்றுத்தரும் மன்றம் எதுவென
.......அலைமோதி

கற்றல்வழி கற்றல் வழியிலை
பற்றைவிட வெற்றி வழியெனில்
ஒற்றைவழி உள்ளம் வழியென
..... உணர்ந்தேனே!

✍️செ. இராசா

16/11/2023

உலக அரங்கினில் .....உச்சத்தைத் தொட்டீர்!

  


உலக அரங்கினில்
.....உச்சத்தைத் தொட்டீர்!
பலகோடி நெஞ்சினுள்
....பாய்ந்தீர்!- கலந்தீர்!
இறுதிவரை இப்படியே
....இந்தியா வெல்ல
உறுதிமொழி ஏற்பீர்
.....உணர்ந்து!

✍️செ. இராசா

மாமதுரை அன்னக்கொடி




கிரிக்கெட்டுல நாங்க கில்லி
கீச்சிடுவோம் போடா தள்ளி
உலகம் மெச்சும் சூப்பர் அணி
உனக்கு எரிஞ்சா.... குட்றா தண்ணி
உலகம் மெச்சும் சூப்பர் டீமு
உனக்கு எரிஞ்சா...சாவு மாமு

யே...
ரோகித்து‌...விராட்டு.... சிராசு

சிராசு மொகமத் சிராசு
ரன்னே இல்லாம செய்...ராசு

கும்பிடுறோம் ஷாமி....

✍️செ. இராசா

09/11/2023

வாய் செய்யும் தவறுக்கு....

வாய் செய்யும் தவறுக்குத்
தண்டனை அனுபவிக்கிறது
வயிறு

07/11/2023

குறளுரையாடல் --- அந்தாதி உரையாடல்

 


பேரன்பால் வந்த பெருமைக் குறள்வெண்பா
நீரன்பால் காணும் நிறைந்து! 

ஒற்றைப்படை தம்பி 

இரட்டைப்படை அண்ணா

பேரன்புத் தம்பி பிரியமுடன் வேண்டுகிறேன்
நீரன்பு தாரும் நிறைத்து!
(1)

நிறைந்த மனதோடு நிற்கின்ற நீரே
குறைவில்லா பேரன்பின் குன்று!
(2)

குன்றாத நற்றமிழாற் கூடிக் குலவிடுவோம்
வென்றாள வேண்டும் விசும்பு!
(3)

விசும்பை அடையத்தான் வேண்டுகிறார்; யார்க்கும்
பொசுக்கென்று கிட்டிடுமோ பொன்!
(4)

பொன்கிட்டும் போதும் பொருள்கிட்டும் போதிலும்பா
முன்கிட்டு மாறு முனை!
(5)

முனையொடிந்த கத்தியினால் மோதுவதும் தப்பு
தனைமறந்(து) ஆடுவதும் தப்பு!
(6)

தப்புத் தவிர்த்துயரத் தாம்கற்போம் இன்னும்யாம்
இப்புவியில் வாழ்வோம் இனிது!
(7)

இனிது நடந்தேற ஏகனை வேண்ட
பனிபோல் விலகும் பயம்!
(8)

பயம்விடுத்துக் கற்போம் பலவகைநற் பாக்கள்
சுயம்விடுத்தால் ஏது சுகம்?
(9)

சுகமாக உள்ளதென சும்மா இருந்தால்
அகத்தினுள் போகும் அழுக்கு!
(10)

அழுக்கை அகற்றும் அறிவை வளர்ப்போம்
இழுக்கைத் தவிர்க்கும் இது!
(11)

இதுதான் சரியென எண்ணிடும் போக்கால்
எதுதான் சரியோ இயம்பு?
(12)

இயம்பும் எவையும் எழிலாய் இருத்திச்
சுயம்பாய் ஒளிர்வோம் சுடர்!
(13)

சுடரொளி பட்டவுடன் சுற்றத்தைக் காட்டி
இடம்விட்டு நீங்கும் இருள்!
(14)

இருள்நீக்கி எங்கள் இயலாக்கி நிற்போம்
அருள்தூக்கி ஈவான் அவன்!
(15)

அவனருள் இல்லாமல் ஆவதுதான் என்ன?!
அவனை அவனால் அறி!
(16)

அறியத் தருவதுவும் அண்ணல் செயலே
நெறியைப் புரிந்தால் நிறைவு!
(17)

நிறைவான வாழ்க்கை நிறைகாண கிட்டும்
குறைகண்டால் போகும் குறைந்து!
(18)

குறைந்து துயர்போகக் கூடும் மகிழ்ச்சி
நிறைந்து நிலம்வாழ்க நீர்! -
(19)

நீரன்பைக் காட்டுவதில் வீமனையும் விஞ்சியநல்
பேரன்பால் தாமுனக்குப் பேர்!
(20)

✍️தம்பி வைர.வசீகரன் உடன்
அண்ணா

04/11/2023

தேய்ப்புப் பெட்டி --- Iron Box

 

மெதுமெதுவாய்ச் சூடேற்றி
......வேகமாய்த் தேய்த்தால்
புதுசாகத் தோன்றும்
.......பொலிவாய்- அதுவின்றி
வைத்த இடம்விட்டு
.......வைத்தபடி சென்றாலோ
நைத்ததுபோல் பாழாம்
.......துணி!

03/11/2023

அப்துல்கலாம்

  


ஏ_பீ‌_ஜெ என்கிற
ஆவுல் பக்கீர் ஜெனாலுபுதீன் 

அப்துல்கலாம் அவர்களால்தான்
இந்தியா எழுந்தது!
தென்னகம் தெரிந்தது!
அகிலம் வியந்தது!
ஐநா அதிர்ந்ததென்றால்
இது ஏதோ
உணர்ச்சியால் வெடித்த
உரையென எண்ணாதீர்...
உணர்ந்ததால் வடித்த
உண்மையென உணர்வீர்...

ஆம்;
அதுநாள்வரை இராமேஸ்வரம்
யாத்திரீகர்களுக்கான
புண்ணிய பூமி;
ஆனால் இன்றோ
நாத்திகர்களுக்கும் அதுவே...

காரணம்
மதம் சார்ந்ததால் அல்ல; மண்ணில்
மனிதமும் சேர்ந்ததால்...

முன் நாட்களில் அவர்தான்
செய்தித்தாள்கள் போட்டார்
பின் நாட்களில் அவரைத்தான்
செய்தித்தாள்கள் போட்டன...

அவரொன்றும் சைவரல்ல
ஆனால் சுத்த சைவமவர்..
அவரொன்றும் கலைஞரல்ல
ஆனால் பல்கலைக் கழகமவர்..

பத்மபூஷன்
பத்ம விபூஷன்
பாரத ரத்னாவென
பாரத விருதுகள் எல்லாம்
முதல்முறையாக
பெருமையடையந்தன: ஆம் அது
உரியவரிடம் சேர்ந்ததால்; தகுதி
உடையவரிடம் சேர்ந்ததால்...

அன்று....
கடைக்கோடித் தமிழ் மகனை
முதல்குடிமகனாக்க
டெல்லி தமிழகம் வந்தது
தமிழகம் தலைமை ஏற்றது; ஆம்
தமிழ்-அகம் தலைமை ஏற்றது.
பாரதம் தலை நிமிர்ந்தது!

ஆயுதங்கள் தயாரித்ததால்
அவரொன்றும் மகாத்மாவின் முரணல்ல
வல்லாதிக்கத்தை தடுக்க முடிந்ததால்
அவரும் பரமாத்மாவின் அரணே...
ஆம் அந்த அரனே...

அப்துல் கலாம்
ஓர் அற்புத விளக்கு
அந்த
அலாவுதீனின் விளக்கைப்போல
அல்ல அல்ல..
அதையும் விஞ்சிய அற்புத விளக்கு

கைகள் தேய்க்காமலே
கைகொடுத்த விளக்கு..
அவர்...
ஜின் இல்லாமலே வந்த ஜென்
வுமன் இல்லாமலே வாழ்ந்த மேன்

மாணாக்கர் முன் ஏணியவர்
ஞானாசிரியர் முன் ஞானியவர்
குர்ரான் ஓதிய குரல் அவர்
குறள் மறவாப் புகழ் அவர்

ஏவுகணையின் தந்தை
ஈவோடணைத்த தாய்
தனித்துவம் கொண்ட சரித்திரம்
தமிழ்த்தவம் தந்த சமத்துவம்
அப்துல் கலாம்;
அவர்பற்றி
இன்னும் கூறலாம்
இதற்கு மேலும் கூறலாம்
இருப்பினும்...
இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்!
இதயத்தில் நிறுத்திக் கொள்ளலாம்!
வாழ்க கலாம்!
வாழ்க கலாம்!
வைப்பீர் சலாம்!
வைப்பீர் சலாம்!

வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா