29/03/2019

மது புராணம்


திராவிடக் கட்சிகள்மேல் குற்றச்சாட்டு
************************************
திராவிடக் கட்சிகளே...
திராவிடக் கட்சிகளே...

திராவிடக் கட்சிகளின்
திராவக அரசியலில்- நீங்கள்
அடிமையை ஒழிப்பதுபோல்
அடிமையாய் மாற்றிவிட்டீர்!

மது விலக்கைத் தள்ளி வைத்து
மன விளக்கை இருள வைத்து
நிர்வாகம் செய்வதுபோல்- நீங்கள்
நிர்வானம் ஆக்கிவிட்டீர்!

குற்றச்சாட்டு மறுப்பு
*********************
இருவரும் வருமுன்னே
இல்லையா மதுப்பழக்கம்?!

ஆண்பாலும் பெண்பாலும்
அருந்துவது தவறென்றே
கூப்பாடு போடும்முன்
கூர்ந்தொன்றைக் கவனிப்பீர்;

அறிவாளி ஔவையும்
அறவாழி அதியமானும்
சமூகமாய் அருந்தியதற்கு
சங்ககாலச் சான்றுண்டு!

களிப்பென்ற சொல்கூட
கள்ளிலிருந்து வந்ததென்று
இரண்டிற்கும் பொதுவான
இன்பமென்ற பொருளுண்டு!

தென்னையிலும் பனையிலும்
முந்திரிப்பழக் கொட்டையிலும்
அரிசிச்சோற்றுக் கஞ்சியிலும்
இருப்பதெல்லாம் கள்ளாகும்!

ஊறலென்றும் கள்ளென்றும்
தேறலென்றும் தோப்பியென்றும்
நறவென்றும் பிழியென்றும்
அத்தனையு மதுவாகும்!

சாம வேத காலத்திலும்
சோம பானம் உள்ளதென்று
ஆரியரும் வேதியரும்
அருந்தியது மதுவாகும்!

வாத்சாய சாத்திரமும்
கோக்கோக சூத்திரமும்
கள்ளோடு களியாடும்
கல்(ல)வியிலு மதுவுண்டு!

சாராயப் குப்பிகளை
சாமிக்குப் படையலிட்டு
சாமியின் வேடமிட்டு
சாத்தியதைக் கண்டதுண்டு!

பாவத்தைப் போக்குகிற
பரலோகக் கடவுளுக்கு
ஒயினைப் படையலிடும்
ஒயின்விழா இங்குண்டு!

போட்டியிலே வென்றவர்மேல்
புட்டியினைத் திறந்துவிட்டு
குளிப்பாட்டி மகிழ்வோடு
குதிப்போரைக் கண்டதுண்டு!

அன்று முதல் இன்று வரை
அனைவருமே அருந்துகையில்
மதுஏற்பு திட்டம்
மகத்தான திட்டமன்றோ?!

நீதி
***
மகன் செய்தத் தவறென்று
மகனையே கொன்றவனை
மனத்திலே ஏற்றிக் கொண்ட
மனுநீதிச் சோழர்களே...

நீரின்றி அமையாத
நீதிநூல் வள்ளுவத்தை
சரியாகப் புரிந்து வைத்த
சரித்திரத் திராவிடர்களே...

கருணையில் கடை திறந்து
கருணா நிதி திரட்டி
குடிமகன் அனைவரையும்
குடிமகனாய் மாற்றியவரே..

மூன்றெழுத்தில் எப்போதும்
மூச்சிருக்கும் என்று சொல்லி
தமிழர் வாழ்வினையே
தரிசாக்கிய நல்லவரே...

கொடுப்பதும் தவறில்லை
குடிப்பதும் தவறில்லை- ஆனால்
குடியிலே அரசாளும்
குடியரசு தவறில்லையா?!!

வேகமாய்க் கடை திறந்து
விதவையாய் மாற்றிவிட்டு- எங்கள்
குடிகெடுத்து அரசாளும்
கொடியரசு தவறில்லையா?!

✍️செ. இராசா

No comments: