28/02/2024

நாம் படித்திடாதவோர்

 

நாம் படித்திடாதவோர்
......நூல் படைத்த ஈசனின்
நான் படைப்புப் பாத்திரம்
........நானும் நீயும் அவனுமே...
 
தான் நடிக்குமாசையில்
.......தான் படைத்த ஒன்றினில்
நாம் நடிக்கும் வேளையில்
.......தானும் தோன்றக் காணுமே...
 
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
 
✍️செ. இராசா

26/02/2024

தத்தாக்காரம் போட்டுத்தானே பாடுறேன்-

தத்தாக்காரம் போட்டுத்தானே பாடுறேன்- தரிகிட
தாளத்தோட சேர்ந்துநானும் ஆடுறேன்!
பித்தாகோரஸ் தேற்றமெல்லாம் போடுறேன்- ஜெயிச்சிட
ஃபிட்டாநல்ல கம்பெனியத் தேடுறேன்!

என்ன வேணும் உனக்கு - இங்கே
எல்லா சரக்கும் இருக்கு (2)

கானா வேணுமா;? ரொம்ப
ஃபீலா வேணுமா?
பக்தி வேணுமா?; இல்லை
குத்து வேணுமா?
ராப் வேணுமா?; இல்லை
ஃபோக் வேணுமா?

ஆல்பம் செய்யவா?: இல்லை
ஆளை மடக்கவா?
ஃபிலிமுக்காவா? வெறும்
ஃபிலிமு காட்டவா?
கட்சிப் பார்ட்டியா?; இல்லை
கவர்மென்ட் பார்ட்டியா?

என்ன வேணும் உனக்கு - இங்கே
எல்லா சரக்கும் இருக்கு (2)

✍️செ. இராசா

25/02/2024

பஞ்சு மிட்டாய் டேஞ்சர் ஆச்சு

 


பஞ்சு மிட்டாய் டேஞ்சர் ஆச்சு
சாயமிப்போ வெளுத்துப்போச்சு
எய்ட்டி நைண்டி கிட்சுங்கெல்லாம்
கொடுத்து வச்ச மகராசெங்க ...

என்ன சொல்லி என்ன ஆக
ஆஹா...
கெமிக்கல்ஸ் எல்லாம் கூடிப் போக
ஓஹோ...

ஜெல்லி மிட்டாய் ஸ்நாக்சுக்கெல்லாம்
தடைங்க போட்டா நல்லாருக்கும்

அப்டி போடு...

✍️செ. இராசா

கடைசி

இதுதான் கடைசி என
எத்தனையோ கடைசிகள்
கடந்து போய்விட்டன..

அந்தக் கடைசி கடைசிதான் இன்னும் பிடிபடவேயில்லை

23/02/2024

பகுதிநேரம் பாடிடவா

 

பகுதிநேரம் பாடிடவா
.....பைந்தமிழை ஏற்றுகின்றேன்!
தொகுதியேதும் சேர்த்திடவா
.....செந்தமிழைத் தீட்டுகின்றேன்!
விகுதியாக வீற்றிடவா
.....வீறுகொண்டு தேடுகின்றேன்!
தகுதியாக மாற்றிடவே
.....தாயவளை வேண்டுகின்றேன்!
 
✍️செ. இராசா

21/02/2024

கெஞ்சுனாக்கக் கேட்டுக்க

கெஞ்சுனாக்கக் கேட்டுக்க
மிஞ்சுனாக்க மீறிக்க
அஞ்சுறதுக் கஞ்சிக்க
அஞ்சாமையக் கத்துக்க

ஏறிவந்தா எகிறிக்க
இறங்கிவந்தா இரங்கிக்க
சீறிவந்தாத் திமிறிக்க
சிரிச்சுவந்தா சிரிச்சுக்க

இணங்கிவந்தா ஏத்துக்க
வணங்கிவந்தா வணங்கிக்க
பணிஞ்சுவந்தா பார்த்துக்க
துணிஞ்சுவந்தா துணிஞ்சுக்க

ஆடிவந்தா ஆடிக்க
பாடிவந்தா பாடிக்க
ஓடிவந்தா அணைச்சுக்க
ஓடவச்சா நினைச்சுக்க

தோதுவந்தா திரும்பிக்க
சூதுவந்தா ஒதுங்கிக்க
சோதனையப் பழகிக்க
சாதனையப் படைச்சுக்க

✍️செ. இராசா

18/02/2024

முதுமை

 #முதுமை

வயதானால் அழகில்லையென்று
யார் சொன்னது?!

துளிர்க்கும் தளிர் அழகென்றால்
உதிரும் சருகு அழகில்லையா?!

நகைக்கும் மழலை அழகென்றால்
நரைக்கும் முதுமை அழகில்லையா?!

இங்கே...
முன்னுரையின் முகவரி
சுருக்கமிகு அழகென்றால்
முடிவுரையின் முக வரி
சுறுக்கமிகு அழகில்லையா?!

ஆமாம்...
இளமையெல்லாம் எழிலா என்ன?
எனில்;
வண்ணத்துப்பூச்சியின் எழிலென்பது
இளங்கூட்டுப்புழுவில் இல்லைதானே!

அட..
முதுமையெல்லாம் கசக்குமா என்ன?
எனில்;
பழுத்த பழங்களின் ருசியென்பது
பிஞ்சுக் காய்களில் இல்லைதானே...

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய இளமை என்பது
நாளைய முதுமையே...
இன்றைய முதுமை என்பது
நேற்றைய இளமையே...

உண்மையில்....
இளமை அழகுதான்
மறுக்கவில்லை...
ஆனால் பேரழகென்னவோ
காமம் கழிந்த முதுமையில்தானே?!

✍️செ. இராசா

பச்சைத் தமிழிலில்லைப் பாட்டு!

 

சுத்தத் தமிழ்நீக்கி
.....சூப்பராய் வேண்டுமென
எத்தனையோ பேரிங்கே
......ஏவுகிறார்- சத்தியமாய்க்
கொச்சைத் தமிழையே
......கொண்டாடும் காலத்தில்
பச்சைத் தமிழிலில்லைப்
.....பாட்டு!
 
✍️செ. இராசா

17/02/2024

பார்வை மோதும் நேரம் உயிர்களில்

 #Montage_Song

#பல்லவி
பார்வை மோதும் நேரம் உயிர்களில்
காதல் தீ வருமே...
ஜாடை காட்டி கூறும் விழிகளில்
மௌனக் கலவரமே...

இதுயென்ன புதிய உணர்விது
உடலெலாம் எரியுதே...
இதுயென்ன புதிய மொழியிது
கவியெலாம் பிறக்குதே..

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே- அடி
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே.....(2)

#சரணம்-1 (பருவக்காதல்)

பூர்வ ஜென்ம காதலிதுவோ
ஒன்னும் புரியலையே
மேக்னட் கண்களில் இத்தனைபவரோ
சுண்டி இழுக்கிறதே

இதுயென்ன புதிய அனுபவம்
என்னையே மறக்குதே
இதுயென்ன இனிய மதுரசம்
நினைத்ததும் மயக்குதே

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

#சரணம்-2 (இளமைக்காதல்)
நீயும் நானும் போடும் ஃபைட்டுகள்
இன்னும் தொடர்கிறதே..
ஆன போதிலும் நீள்கிற நைட்டுகள்
இன்னமும் இனிக்கிறதே..

இதுயென்றும் தொடரும் புதுசுகம்
இனிமையில் தொடரட்டும்...
இதுயென்றும் இனிக்கும் பலரசம்
தினமென்றும் கிடைக்கட்டும்

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

#சரணம்-3 (முதிர்க்காதல்)
போதும் போதும் என்னும் சலிப்புகள்
இன்னும் போகலையே...
போகும் போதிலும் காதலின் உணர்வுகள்
இன்னும் தீரலையே...

முடிவின்றி தொடரும் கவியென
முதுமையும் மலரட்டும்...
அழகின்றி மறையும் பொழுதிலும்
அகமென்றும் அரும்பட்டும்...

நேரம் போகும் வேகம் அருகினில்
மின்னல் ஆகிறதே...
நீளும் தூரம் நீண்டு போகையில்
இதயம் நிற்கிறதே...

✍️செ. இராசா


16/02/2024

பொழைக்க ஒரு வழியுமில்லை

 


தொகையறா 

கேனப்பய ஊருக்குள்ள
கிறுக்குப்பய நாட்டாம..
ஊருபூராம் கொள்ளையடிச்சு
வாழுறானே மாட்டாம..
..வாழுறானே மாட்டாம..
 

பல்லவி
பொழைக்க ஒரு வழியுமில்லை
போக ஒரு இடமுமில்லை
விடியலின்னும் வரவில்லையே
அண்ணாச்சி
ஏறும் விலை குறையவில்லை
ஏழ்மை நிலை மறையவில்லை
மாறுமுன்னு சொன்னாங்களே என்னாச்சி

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-1
பகுத்தறிவு வேணுமுன்னு பாடம் நடத்துறான்..
பார்ட்னரைத்தான் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்...
தாலியென்ன தாலியென்று கேலி செய்யுறான்..
தாலிகட்டித் தாரத்திடம் பல்லைக் காட்டுறான்..

சாதியற்ற சமத்துவந்தான் வேணு
மென்கிறான்..
சாதியென்ன பார்த்துதானே சீட்டை ஒதுக்குறான்...
டாஸ்மாக்க மூடனும்னு கோசம் போடுறான்...
நாங்கயெப்ப சொன்னமுன்னு வாயை மூடுறான்....

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!
 

சரணம்-
அனைவருமே சரிசமன்னு அழகாப் பேசுறான்..
அடுத்தடுத்த வாரிசுக்கே வாய்ப்பக் கொடுக்குறான்..
ஓட்டயெண்ணி மதவுணர்வைத் தூண்டப் பார்க்குறான்..
ஓனருபோல் நினைச்சிநம்மைக் கூறு போடுறான்..

ஒரேநாட்டு மக்களுன்னு ஓங்கிப் பேசுறான்..
உழைக்குமெங்கப் பாட்டாளிய ஒடுக்கப் பாரக்குறான்
கூட்டணிக்குக் கொள்கைகளை அடகு வைக்கிறான்...
குனிஞ்சுபோயி கால்பிடிச்சே நிமிர நினைக்கிறான்.‌

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!

✍️செ. இராசா

15/02/2024

பகுத்தறிவு வேணுமுன்னு

பகுத்தறிவு வேணுமுன்னு பாடம் நடத்துறான்..
பார்ட்னரைத்தான் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான்...

தாலியென்ன தாலியென்று கேலி செய்யுறான்..
தாலிகட்டித் தாரத்திடம் பல்லைக் காட்டுறான்..

சாதியற்ற சமத்துவந்தான் வேணு
மென்கிறான்..
சாதியென்ன பார்த்துதானே சீட்டை ஒதுக்குறான்...

டாஸ்மாக்க மூடனும்னு கோசம் போடுறான்...
நாங்கயெப்ப சொன்னமுன்னு வாயை மூடுறான்....

வாலுபோயி கத்திவந்த கதைதான் மச்சி!
மாறிமாறி ஆளுறாங்க நம்மல வச்சி!

✍️செ. இராசா

எண்ணத்தின் குப்பைகளத் தூக்கிப்போடு

 


எண்ணத்தின் குப்பைகளத்
............தூக்கிப்போடு
என்றென்றும் நல்லதையே
.............எண்ணப்பாரு
முன்னோரின் வார்த்தைகளக்
............காதில்போடு
முன்னேற்றம் இல்லையினா
.............என்னைக்கேளு!

அன்பாலே இவ்வுலகம் ஆனதப்பா
அன்பின்றி போகுமுன்னா ஆகுந்..தப்பா
தன்னாலே சுற்றுதிந்த பூமியப்பா
உன்னாலே ஆவதென்ன காமியப்பா..

✍️செ. இராசா

14/02/2024

காதலர் தின வாழ்த்துகள் ==== குறளோசை வெண்பாக்கள்

எல்லா உறவும் உறவல்ல அன்பில்பொய்
இல்லா உறவே உறவு!
(1)

காதலில் காதல் கவிக்காதல் நன்காதல்
காதலுள் எல்லாம் தலை!
(2)

பார்க்கப் பழுதற பார்த்தவை பார்த்தபின்
நீக்கல் தவறாம் நினை!
(3)

எண்ணி இணைதல் இயல்பே இணந்தபின்
எண்ணாமை என்றும் இழுக்கு!
(4)

விரைவில் இணைந்த உறவெல்லாம் காமம்
கரையக் கலையும் கனவு!
(5)

காதலுக்கும் உண்டோ கரைமீறும் ஓருணர்(வு)
ஆதலால் கண்ணாலம் செய்!
(6)

அவளழகு பேரழகு ஆவ்;என்பர் காதல்
அவதியிலே வீழ்கின் றவர்!
(7)

எக்காதல் எத்தனைநாள் ஆயினும் அக்காதல்
பொய்க்காமல் நீண்டால் அழகு!
(8)

காதல் எனச்சொல்வர் காண்கையில் தோன்றாது
காதல்பால் உள்ள(க்) கசப்பு!
(9)

கற்பும் நெறியும் கடைபிடிக்கும் காதலர்கள்
நற்றமிழ்போல் வாழட்டும் நன்று!
(10)

✍️செ. இராசா

12/02/2024

பேசு பத்து ------- குறள் வெண்பாக்கள்

பேசும் இடத்திலெல்லாம் பேசுகின்ற போதில்தான்
பேசும் உலகமிங்கே.. பேசு!
(1)

பேசும் தருணத்தில் பேசாமல் வீற்றிருப்போர்
பேசுபொருள் ஆவதில்லை..பேசு!
(2)

பேசும் முறையறிந்து பேசுகின்ற மாந்தரையே
பேச விரும்பிடுவர்...பேசு!
(3)

பேசும் கலையறியார் பேசுவதைக் கேட்பது
பேசி வதைசெய்யும் பேச்சு!.
(4)

பேசுவோர் பேச்சைப் பொறுமையாய் உள்வாங்கிப்
பேச எடுபடும்நற் பேச்சு!
(5)

பேசுகின்ற பேச்சைப் பிழையின்றிப் பேசவழி
பேசும்முன் யோசித்துப் பேசு!
(6)

பேசிக் கனலூட்டிப் பின்நாளில் வெல்வதுபோல்
பேசும் பயிற்சியுடன் பேசு!
(7)

பேசும் மொழியில் பிறமொழி சேராமல்
பேசினால் அஃதேநல் பேச்சு
(8)

பேசியே ஏமாற்றும் பேர்களைக் கண்டறிய
பேசத்தான் வேண்டுமிங்குப் பேசு!
(9)

பேசிடும் போதெல்லாம் பேரதிர்வு தோன்றுமெனில்
பேசுவதில் வல்லவன்நீ! பேசு!
(10)

✍️செ. இராசா

09/02/2024

இவனுங்கள நம்பமுடியாது தாயி..

 

இவனுங்கள நம்பமுடியாது தாயி..
உன்னைத்தான் நம்புறேன்..
கடைக்குட்டி கவிதா இருக்காளே..
அவளுக்கு நீதான் ஆத்தா தாயி...
நான் செத்துப்போயிட்டா
நீதான் எல்லா முறையும் செய்யனும்..
ஆமாம்...
இது அந்நிய சம்பந்தம்...
அவளோட மக வயசுக்கு வந்துட்டா
இந்தக்காச மொய்யா செஞ்சிடுன்னு..
எங்க அத்தை சொன்னாகன்னு அத்தாச்சி செஞ்சபோது உணர்ந்தேன்!
அன்பு...
என்றும் சாவதில்லையென்று..
 
✍️செ. இராசா

ஆதிப் பரம்பரைன்னு அழுத்திச் சொல்லுடா

 #தொகையறா_1

நெல்லையெனச் சொன்னாலும்..ஏலே
மதுரையெனச் சொன்னாலும்...ஏய்
கோவையெனச் சொன்னாலும். ஏனுங்க
சென்னையெனச் சொன்னாலும்...என்னாங்குற
எல்லோரும் ஒன்னு-இங்கே
எல்லோரும் ஒன்னு
தமிழோட மண்ணு - இது
தமிழோட மண்ணு

#பல்லவி
ஆதிப் பரம்பரைன்னு அழுத்திச் சொல்லுடா
சாதிப் பெருமைகளை ஒதுக்கித் தள்ளுடா
நீதி கிடைக்கினுன்னா நிமிர்ந்து நில்லுடா
மோதி ஜெயிக்கனுன்னா வேணும் தில்லுடா

#துள்ளலிசை
தமிழனோட நாகரிகம் தரணி அறிய வேணும்
தமிழனுக்குள் பிரிவினைன்னா சேதி எப்படித் தெரியும்?
தலைமுறைகள் தாண்டிநம்மப் பெருமை சேர வேணும்
தருதலைகள் தலையெடுத்தால் உண்மை எப்படிப் புரியும்?

தீர்வாகவே
.....தீயாகவே
........நேராகவே
..............நீயோடிவா!

சீராகவே
‌....பாராளவே
........பாங்காகவே
...........பாய்ந்தோடிவா!

ஆதிப் பரம்பரைன்னு....

✍️செ. இராசா


07/02/2024

கடன் பத்து ---- குறள் வெண்பாக்கள்



கொடுத்த கடனிருக்கக் கூச்சமே இன்றி
அடுத்த கடன்கேட்பர் ஆங்கு!
(1)

சித்திரை வந்தவுடன் செய்திடுவேன் என்றுரைத்து
நித்திரைக்குப் போவர் விரைந்து!
(2)

குலசாமி சாட்சியென கூறியபின் கூட
அலட்சியமே செய்வார் அறிந்து!
(3)

தந்தாலே கர்ணன் தராவிடில் கஞ்சனென
நிந்திப்போர் நட்பை விடு!
(4)

பணத்தேவை வந்தால் பணிந்துருகும் பேர்பின்
பணம்கேட்டால் போவர் பறந்து!
(5)

இதோஇதோ வென்றே இழுத்தடிக்கும் பேரை
உதாரணமாய் எண்ணி உணர்!
(6)

உதவி புரிவோரும் உண்மையில் இந்நாள்
எதற்கென்று யோசிப்பர் இங்கு?
(7)

சுயநலம் கொண்டவரே சுற்றமென சூழ்ந்தால்
இயல்பறிந்(து) ஆற்றல் இனிது
(8)

பட்டது போதுமென பக்குவாய்ப் போனாலும்
இட்டம்போல் பேசிடுவர் இங்கு!
(9)

பலன்கருதி மட்டும் பழகுகின்ற நட்பை
விலைகொடுத் தேனும் விடு!
(10)

✍️செ. இராசா

06/02/2024

பருவக்காதல்---பக்குவக்காதல்---இறுதிக்காதல்

 #பகுதி_1
#பருவக்காதல்

ஏதோ ஏதோ ஒரு தவிப்பு
ஏனோ ஏனோ இன்று புரியவில்லை
நானோ(ர்) நீனோ(ர்) என்னும் நெனப்பு
வேறோ ஒன்றோ ஒன்னும் விளங்கவில்லை..

என்ன இது மாயம் மாயம்
வண்ணமிகு வாழ்வின் ஓரம்
கண்ணிலொரு காதல் வெள்ளம்
பன்மடங்கு வேகம் பாயும் (2)

#பகுதி_2
#பக்குவக்காதல்

மெய்யோ பொய்யோ என்னும் தவிப்பு
ஐயோ ஹைய்யோ இன்னும் புரியவில்லை
நீரோ தீயோ என்னும் நினைப்பு
ஏனோ ஏனோ ஒன்னும் விளங்கவில்லை

என்ன இது வேகம் வேகம்
உந்தன்முகம் மாறும் ஜாலம்
நீளுகின்ற காதல் பயணம்
மீளும்வழி உயிரின் ஜனனம்!..(2)

#பகுதி_3
#இறுதிக்காதல்

கோபம் கொள்ளும் உந்தன் முறைப்பு
கொஞ்சும் காதல் முன்னே நிலைக்கவில்லை..
போதும் போதும் என்னும் சலிப்பு
போகும் போதும் இன்னும் போகவில்லை...

எண்ணமதில் நீயும் நானும்
இன்னும்சிறு பிள்ளைகள் மானே
எண்ணுகிற முன்னே காலம்
மின்னலெனப் போகுது தானே (2)

✍️செ. இராசா

05/02/2024

அங்கீகாரம்

 

அங்கீகாரம் என்பது
நாம் தேடிப் பெறுவதல்ல; அது
நம்மைத் தேடி வருவது!

அங்கீகாரம் என்பது
மொய்போல் கொடுப்பதல்ல; அது
மெய்யின்பால் கொடுப்பது!

அங்கீகாரம் என்பது
வியாபாரக் கணக்கீடல்ல; அது
துலாபாரக் கணிப்பீடு!

அங்கீகாரம் என்பது
சாதனை விருந்தல்ல; அது
வேதனை மருந்து!

அங்கீகாரம் என்பது
ஏகலைவனின் விரலொடித்து
அர்ச்சுனனை ஆதரிப்பதல்ல;அது
அன்னாஹசாரேக்களின் விரல்பிடித்து
கெஜ்ரிவால்களைக் காண்பது!

இங்கே...
போலிகளுக்கும் மரியாதையுண்டு
ஆனால் அது...
அரசியல்வாதியின்
அங்கீகாரம்போலத்தான்
தோற்றவுடன் ஓடிவிடும்..

இங்கே
கோமாளிகளுக்கும் மரியாதையுண்டு
ஆனால் அது
கூத்தாடிகளின்
மார்க்கெட் பொறுத்துதான்
போனவுடன் போய்விடும்...

பெரும்பாலும்
அங்கீகாரங்கள் என்பது
விஜயகாந்தைப் போலத்தான்
வாழும்போது தெரிவதே இல்லை
மரணித்தபின்தான் தெரிகிறது...

✍️செ. இராசா

04/02/2024

வாதலைவா வான்னு

 


வாதலைவா வான்னு
...‌....வரவேற்பு தந்தாலும்
நோதலைவா நோன்னுதான்
......நோவாங்கெ- சோதனையா?!
சீக்கிரமே நாமத்
......தெருத்தெருவா போனாதான்
வாக்குவரும் வாதலைவா
......வா!

✍️செ. இராசா


03/02/2024

வனத்திலோர் கூடுகட்ட

 


வனத்திலோர் கூடுகட்ட
வாய்க்கவில்லை வாய்ப்பு- பாலை
வனத்திலோர் கூடுகட்டி
வாழுமெந்தன் பொழப்பு!

இனத்தினோர் உடனிருக்க
ஏனோயில்லை இருப்பு- சொந்த
இனத்தினோர் தனித்திருக்க
ஏனோயெந்தன் தவிப்பு!

✍️செ.‌இராசா

வருவதை எல்லாம்

 


வருவதை எல்லாம்
.....வரிகளாய் மாற்றித்
தருவதை எல்லாம்
.....தரமாய்த்- தருவேன்!
அருளும் இறைவன்
.....அளந்து கொடுத்தால்
வருமா கவிதை
.......வரத்து?!

✍️செ. இராசா

நண்பரின் கேள்வி
செ.இலட்சுமணக்ககுமார் :

நான் உங்க ரசிகன்
ரசிகனுக்கு சமீபகாலம் ஏமாற்றம் தருகிறீர்கள்
அதிகம் கவி வருவதில்லை

எனது பதில்:
Raja Manickam

இனிய மனமார்ந்த நன்றி சகோ...
நலமா....
உண்மைதான் தங்களின் கூற்று...
குறள் வெண்பாக்கள், குறுஞ்சொற்பாக்கள், அளவடி வெண்பாக்கள், விருத்தங்கள், பாடல்கள், ஹைக்கூ, வசன கவிதைகள், புதுக்கவிதைகள்....என வடிவங்களில் பிரச்சினை இல்லை சகோ...

ஏறக்குறைய எல்லா வகையான கருவிலும் எழுதிய உணர்வு தோன்றுவதாலும், கூறுவது கூறல் குற்றம்; அறமில்லை என்ற கூற்றை ஏற்பதாலும், மிகவும் கவனமாகவே நகர்கின்றேன் சகோ‌.

உண்மைதான் போன வருடம் முந்தைய வருடக் கணக்கை விட வரத்து மிகவும் குறைந்திருக்கிறது.

இப்படி குறைவதும் மிகுதியாவது என் கையில் இல்லை சகோ. எல்லாம் வல்ல இறைவனின் கையிலும் தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்கத்திலுமே உள்ளது.

முயற்சி செய்கிறேன் சகோ‌...

(Blogல் சேமித்த காலத்தில் இருந்து வைத்துள்ள வருடாந்திர கவிதைக் கணக்கு கீழே)

02/02/2024

அடியே உன்னைப் பார்த்ததுமே

 

அடியே உன்னைப் பார்த்ததுமே
எல்லாம் மறக்குது..
அருகே நெருங்கி வந்ததுமே
எல்லாங் கொதிக்குது... (2)
 
இதுக்கு மெடிசின் பார்மசியில்
இல்லடி அம்மா..
அதுக்கு சூடா லவ்வுல நீ
தந்திடு உம்மா...
 
✍️செ. இராசா

01/02/2024

பண்டிகை

 

பண்டிகைகள் எல்லாம்
.....பலகாரம் உண்ணவெனும்
எண்ணத்தை மாற்ற
....இளைஞரெலாம்- எண்ணினரோ?!
கண்ணோடு கண்ணென்றே
....காதலர்கள் உண்கின்ற
பண்டி'கையின் உள்நோக்கம்
....பார்!