30/06/2019

#நந்தினையை_விடுதலை_செய்



குடிகுடின்னு குடிக்க வச்சு
குடிநெடுகக் கடைய வச்சு
குடியுரிமை தருகுதிங்க அரசு- இது
குடிமகன்கள் விரும்புங் குடியரசு!

கள்ளுக் கடைய மூடிப்புட்டு
எல்லாக் கடையும் திறந்துவச்சு
கெட்ட சரக்கக் குடுக்குதுங்க அரசு- இது
கேட்ட சரக்க மறுக்குங் குடியரசு!

போதைப் பொருள வித்துக்கிட்டு
பாதை தவறிப் போயிக்கிட்டு
டாஸ்மாக்கில் நடக்குதுங்க அரசு- இது
கேஸ்போட்டு தள்ளுங் குடியரசு!

✍️செ. இராசா

#ReleaseNandhini
#நந்தினையை_விடுதலை_செய்

29/06/2019

புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.



(ஒரு வேளை என் புத்தக வெளியீட்டிற்கு வள்ளுவர் வந்திருந்தால்.....அந்த நேரத்தில் வரும் வரிகள் எப்படி இருந்திருக்கும்....ஒரு சின்ன கற்பனை)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

அறத்தோடு பொருளீட்டி
மறத்தோடு இன்பமுற
எழுசீரின் குறளாலே
எழுந்தநின் குரலாலே
ஈரடியால் உலகளந்த
ஈடில்லா நாயகனே...
அணுவிலும் சிறியோன் நான்
அண்டமளவு வணங்குகிறேன்!

இல்வாழ்க்கை இல்லையெனில்
நல்வாழ்க்கை இல்லையென்றும்
துறவுமனம் இல்லையெனில்
பிறவிப்பயன் இல்லையென்றும்
இல்லறத்தைத் துறவறத்தை
இரண்டையும் படைத்தவனே..

நான் எனும் மண்குடத்தை
வான் வரைத் தெரியவைக்க
தாம் இன்று வந்ததெல்லாம்
யாம் செய்த பாக்கியமே...
ஊழ்வினையை என் சொல்வேன்?!
உத்தமனே....வணங்குகின்றேன்!

வெண்பா அறியாதோன்
அன்பால் அழைத்தவுடன்
பண்பாய் வந்தெம்மை
தன்பால் ஈர்த்தவனே...
நன்பா நான் படைக்க
நண்பா நீ உதவு..
என்பா பார் புகழ
உன்பால் சரணடைந்தேன்!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ. இராசா

#ச்சும்மா_சென்னை_பாஷையில

சாரு சாரு என்று சொல்லி
சாரு போட்டு ஓப்புட்டாக்க
வேறு மாறி நினைச்சிட்டியா பாடு- நான்
தாறு மாறு ஆக்கிடுவேன் ஓடு!


ச்சும்மா ச்சும்மா சலாம் போட்டு
ச்சும்மா னாச்சும் போயிக்கின்னா
டம்மி பீஸா நினைச்சிட்டியா பாடு- நான்
கும்மாங் குத்து குத்திடுவேன் ஓடு!

✍️செ. இராசா

28/06/2019

#தேநீர்_கவிதை



பற்றிடாது பார்த்து நிக்க
துறவியல்ல நான்- உனைப்
பற்றினாலும் விட்டு விடாப்
பழையவனே நான்!

தொட்டிடாது விட்டு விலக
தோசியல்ல நான்- உனைத்
தொட்டபின்னும் தொடருகின்ற
தூயவனே நான்!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

27/06/2019

என்னோடும் வாழ்கின்றாய் நீ!

நீர்நிலம் காற்றோடும் நீலநிற வானோடும்  
ஓர்நிகர் சூரியனாய் ஊடாடும் என்னிறைவா
இங்கின்றி அங்கின்றி எங்கெங்கும் நிற்பவனே
என்னோடும் வாழ்கின்றாய் நீ!

26/06/2019

#தேநீர்_கவிதை...உன்னோடு உறவாடும்



உன்னோடு உறவாடும்
ஒவ்வொரு துளிகளிலும்
மின்சாரக் கிளர்ச்சிகள்
மின்னலாய் வருகிறது!

இதழோடு விளையாடும்
எல்லாப் பொழுதிலும்
கவலைக் குப்பைகள்
காணாமல் போகிறது!

கண்ணோடு கவிபாடும்
கணங்கள் முழுவதிலும்
நிர்வாண அமைதியில்
நெஞ்சம் மகிழ்கிறது!

ஆசையில் கைப்பற்றும்
அனைத்து நொடிகளிலும்
இனிப்போடு கசப்பாகி
இன்னும் தொடர்கிறது!

#தேநீர்_கவிதை

✍️செ. இராசா

வாட்சப்பில்...முகநூலில்




வருவது எல்லாம்
உடனே தரப்படுகிறது
வாட்சப்பில்..

கம்பனே எழுதினாலும்
கௌரவம் கிடைக்காது
முகநூலில்..

#நீரின்று_அமையாது_உலகு


#நீரின்று_அமையாது_உலகு
💧💧💧💧💧💧💧💧💧💧


கரிகாலன் கட்டி வச்சக்
கல்லணையும் கண்டோம்- சோழ
ராஜன் வெட்டி வச்ச
வீராணமும் கண்டோம்!

ஏரி குளம் கண்மாய் என்று
மாரி நீரைக் கண்டோம்- அன்று
ஆறு ஓடும் பாதையெல்லாம்
ஊறு இன்றி வாழ்ந்தோம்!

வெள்ளைக்காரன் ஆட்சியிலும்
வெள்ளநீரைத் தடுத்தே- அன்று
பென்னிகுவிக் கொடையாலே
பெரியாரணையும் கண்டோம்!

பட்டணத்து ஏரியெல்லாம்
கட்டிடமாய் செய்தே- இன்று
பட்டிக்காட்டு கண்மாய்களும்
பட்டாபோட்டு விற்றோம்!

மழைநீரை சேகரிக்க
மறந்து போனதால- இன்று
சிறுநீரும் வத்திப்போயி
சீரழிஞ்சு நிக்கோம்!

படிக்காத மேதை தந்தார்
பல்நோக்குத் திட்டம்- இன்று
யோகத்து முதல்வர் தந்தார்
யாகநோக்குத் திட்டம்!

இப்படியே போனாக்க
இன்னும் என்ன ஆகும்?!- வாழ்வு
கேள்விக்குறிப் போலவளைஞ்சு
கேவலமாப் போகும்!

#நீரின்று_அமையாது_உலகு

✍️செ. இராசா

24/06/2019

#பாயின்_வேதனை


உறங்கையில் உடனிருந்தேன்
உறவுக்குக் கை கொடுத்தேன்!

பந்தியிலே முந்தி நின்றேன்!
பந்தங்களைத் தாங்கி நின்றேன்!

சூட்டிலே இதம் தந்தேன்!
குளிரிலே சுகம் தந்தேன்!

பிரசவத்திலும் விரிப்பானேன்!
பிறர் சவத்திலும் விரிப்பானேன்!

எப்போதும் துணை வந்தேன்!
இப்போது ஒதுக்கி விட்டீர்!

#பாயின்_வேதனை

23/06/2019

யாகநோக்குத் திட்டம்!

படிக்காத மேதை தந்தார்
பல்நோக்குத் திட்டம்!
யோகத்து முதல்வர் தந்தார்
யாகநோக்குத் திட்டம்!

22/06/2019

குழந்தையாகவே இருந்திருந்தால்



நாளைய உணவை எண்ணி
நாயாய் அலைய வேண்டாம்

நேற்றைய நிகழ்வை அள்ளி
நினைவாய்ச் சுமக்க வேண்டாம்!

நான் என்னும் கர்வத்திலே
நாள்களைக் கழிக்க வேண்டாம்!

வான் மிகும் துயரத்திலே
வாடிமனம் நோக வேண்டாம்!

சாதிமத இனவெறியில்
சண்டையிட்டு சாக வேண்டாம்!

சாக்கடை அரசியலை
சகித்துப்போய் நகர வேண்டாம்!

முகநூலில் எழுதிவிட்டு
முடிந்ததாய் எண்ண வேண்டாம்!

புலனத்தின் செய்திகளை
புரியாமல் தள்ள வேண்டாம்!

இதுவும் கவிதையென
இதையும் படிக்க வேண்டாம்!

அப்படியே படித்தாலும்
அனைத்தையும் சகிக்க வேண்டாம்!

ஆம்....நாம் மட்டும் இன்னும்
#குழந்தையாகவே_இருந்திருந்தால்

✍️செ. இராசா

21/06/2019

#குறள்_அந்தாதி--உலக யோகா தின வாழ்த்துகள்


(1)
வாகாய் உடலை வளைந்(த்)திட வைக்கிற
யோகாக் கலையைப் படி!

(2)
படித்த கலையைப் பயிற்சிகள் செய்தே
துடிப்புள்ள ஆற்றல் பெறு!

(3)
பெறுகிற ஆற்றலைப் பேராற்ற லாக்கி
உறுதியாய் ஒன்றிலே செல்!

(4)
செல்கிற ஒன்றிலே சிந்தையும் ஒன்றினால்
வெல்வது நீயே உணர்!

(5)
உணர்வை அறிவால் ஒடுக்கும் திறனால்
குணத்தை உயர்த்த நினை!

(6)
நினைப்பை விழிப்பில் நிறுத்தும் திறனால்
முனைப்புடன் செய்வாய் வினை!

(7)
வினையின் பயனாய் விளையும் அதனால்
நினைவுடன் காரியம் செய்!

(8)
செய்வது எல்லாம் சிறப்பாய் இருந்திட
மெய்யான யோகம் பயில்!

✍️செ. இராசா

17/06/2019

#பொய்யறிவு

சீதைக்கு ராமன் சித்தப்பா
சேக்கிழார் எழுதிய கதையப்பா
திருக்குறள் நூலைப் படியப்பா
திருமூலர் சொன்னது சரியப்பா

தமிழே எந்தன் மூச்சப்பா
தமிழ் இஸ் ஆல்வேஸ் பெஸ்டப்பா
இந்தியா எந்தன் நாடப்பா
இந்தி இதர்மே நகியப்பா

ராஜ ராஜன் யாரப்பா?!
ரஞ்சித் இயக்கிய படமப்பா
திராவிடம் என்றால் என்னப்பா?
தமிழனைக் கா.....த்த சொல்லப்பா!!!

#பொய்யறிவு

16/06/2019

வெண்பாற் கடலில் மிதந்திடும் மாதவா


வெண்பாற் கடலில் மிதந்திடும் மாதவா
வெண்பா வடிவில் விரைந்துவா- நண்பனாய்
என்பால் தமிழாய் இருந்திட வேண்டியே
அன்பால் அழைக்கிறேன் வா!

✍️செ. இராசா

(குழந்தையும் தெய்வமும் ஒன்றல்லவா?!

15/06/2019


நீ கருப்பாய் இருப்பதையே
நான் மிகவும் ரசிக்கிறேன்...
ஏன் தெரியுமா?!
நீயும் என் நிறம் என்பதால்!!

உன் மேனியைப் பாலூற்றி
பாழாக்க விரும்பவில்லை
ஏன் தெரியுமா?
நீ அப்படியே வேண்டும் என்பதால்!

நீ கசந்தாலும் இனித்தாலும்
உன்னை விடுவதாய் இல்லை
ஏன் தெரியுமா?!
நான் வறுமையில் இருந்தபோதும்
நீ என்னோடு இருந்தாய் என்பதால்

ஆம்..
என் அன்புக் குழம்பி நீ (#வரக்காப்பி)

சுத்த புத்தி சித்தனுக்கும்

சுத்த புத்தி சித்தனுக்கும்
செத்த புத்தி பித்தனுக்கும்
சிந்தையிலே “நான்” ஒன்றுமில்லை-பிறர்
சிந்தைவிட்டு “நான்” போவதில்லை! (✍️)

14/06/2019

ஆடையில்லா மாங்கனி




ஆடையில்லா மாங்கனியை ஆசையுடன் கண்டதுமே
ஓடையிலே வேகமுற ஓடுகின்ற நன்னீராய்
முந்திவந்து வாயினிலே முத்தமிடும் நீரூற்றை
வெண்பாவாய்க் கொட்டிவிட்டேன் நான்!



சமோசாவும் சட்னியும் சந்திக்கும் வேளை
விமோசனம் தந்திடுவேன் நான்!

#தற்கொலை புரியலாமா?!




காய்த்தது கனியும் முன்னே
காய்களைப் பறிக்கலாமா?!
வாழ்வது கழியும் முன்னே
வாழ்வினை முடிக்கலாமா?

காலணி கடிக்கு தென்றால்
கால்களை வெட்டலாமா?!
காதணி கனக்கு தென்றால்
காதினை அறுக்கலாமா?!

மனத்திலே அழுத்தம் வந்தால்
மண்ணை நீ துறக்கலாமா?
வினையிலே குழப்பம் வந்தால்
விண்ணை நீ விரும்பலாமா?

கற்பனைக் கவிதைக் கெல்லாம்
சொற்களை வதைக்கலாமா?!
மற்றவர் தவறுக் கெல்லாம்
#தற்கொலை புரியலாமா?!

✍️செ. இராசா

(இந்த வாரத்தில் மட்டும் மிகவும் நெருங்கிய உறவுகள் இருவர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். தற்கொலைச் சாவுகள் அதிகரித்துக்கொண்டே வருவதற்கு சமூகத்தில் பரவும் எதிர்மறை எண்ணங்களே மிக முக்கிய காரணம். தற்கொலைச் சாவைத் தடுக்க நிறைய கவுன்சிலிங் தேவைப்படுகிறது.)

13/06/2019

ஆதார மில்லாத ஆர்ப்பாட்டப் பேச்சால்:நீ
சேதாரம் ஆனாயே பார்!

(*வரலாற்றைத் திரிக்காதீர்)

11/06/2019

மனிதன் என்கிற கணிப்பொறியில் (Computer)



மனிதன் என்கிற கணிப்பொறியில் (Computer)
மனது என்பது மென்பொருளே (Software)
உடல் என்கிற வன்பொருளில் (Hardware)
உயிராய் இருப்பது மின்கலமே...
(Battery)

மென்பொருள் கொண்டு இயங்குகின்ற
நம்மன ஓட்டம் எண்ணங்களே (Thoughts)
கண்டதைக் காணும் ஓட்டத்தினால்
கணிப்பொறி நின்றிடும் உணருங்களேன்
(Hang)

அழகாய் அடுக்கிய எண்ணங்களால்
அழகுறும் கணிப்பொறி உணருங்களேன்
(Folders)
இடத்தை அடைத்திடும் எண்ணங்களை
உடனேக் குப்பையில் போடுங்களேன்
(Recycle bin)

வன்பொருள் சரியாய் இல்லையெனில்
மென்பொருள் சரியாய் இயங்காதே!!
இயக்கிடும் மின்கலம் இல்லையெனில்
எதுவும் இங்கே இயங்காதே!!

உடலுயிர் மனத்தை சீரமைக்க
உயர்ந்த பயிற்சிகள் தேவையன்றோ?!
மனவளக் கலையெனும் மன்றத்திலே
மூன்று பயிற்சியும் கிடைக்குதன்றோ?!

✍️செ. இராசா

குறிப்பு
*******
உடலுக்கு- எளிய முறை உடற்பயிற்சி
உயிருக்கு- காயகல்பம் எனும் பயிற்சி
மனதிற்கு- தவம் மற்றும் தற்சோதனை

*மதம் சார்ந்து அல்ல மனிதம் சார்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்!

10/06/2019

#மெய்ப்பொருள்


கெட்டுப் போகும் பாலின் உள்ளே
கெடாத நன்நெய் உறைவதுபோல்
விட்டுப் போகும் உயிர்களின் உள்ளே
விடாத வினைகள் உறைகிறதே!

அழிந்து போகும் மலரின் உள்ளே
அற்புத மதுரம் உறைவதுபோல்
ஆடித் திரியும் வாழ்வின் உள்ளே
அற்புத ஞானம் உறைகிறதே!

உப்புக் கரிக்கும் கடலின் உள்ளே
உயிர்கள் உவந்து உறைவதுபோல்
தப்பாய்த் தெரியும் உலகின் உள்ளே
தத்துவ ஞானம் உறைகிறதே!

✍️செ. இராசா

ஊசலாட்டம்



ஜனனம் மரணம்
பயணத்தின் இடையே
உயிரின் ஊசலாட்டம்

இன்பம் துன்பம்
இரண்டுக்கும் இடையே
வாழ்வின் ஊசலாட்டம்

வெற்றியும் தோல்வியும்
வந்து போவது
வினையின் ஊசலாட்டம்

இரவும் பகலும்
தொடர்ந்து வருவது
புவியின் ஊசலாட்டம்

நட்பும் பகையும்
நம்மைத் தொடர்வது
உறவின் ஊசலாட்டம்

ஐந்து வருடத்தில்
ஆட்சி மாறுதல்
ஜனநாயக ஊசலாட்டம்

ஆத்திகம் பேசிட
நாத்திகம் பேசுதல்
அரசியல் ஊசலாட்டம்

சாதியை வைத்து
வேட்பாளர் நிறுத்துதல்
தேர்தல் ஊசலாட்டம்

எத்தனை எத்தனை ஊசலாட்டம்!
எல்லாம் இங்கே ஊசலாட்டம்!

09/06/2019

ஒத்தை மரக்கள்ள



ஒத்தை மரக்கள்ள ஊத்திவச்ச பானைபோல
அத்தை மகபெத்த அத்தனையும்- சத்தியமாய்
முத்தான முத்தாக முந்தியே வந்தாலும்
அத்தான்நான் சிக்கலையே ஏன்?

✍️செ. இராசா

பணம் வந்ததால்- நஞ்சுக் குணம் வந்ததால்






பணம் வந்ததால்- நஞ்சுக்
குணம் வந்ததால்- நெஞ்சம்
சினம் கொண்டதால்- மங்கை
மனம் நொந்ததால்
மதுபற்றித் திரிகின்ற மனிதன்- அவன்
மதிபற்றி அறியாத மடையன்!

இடர் வந்ததால்- கொஞ்சம்
கடன் வந்ததால்- நெஞ்சம்
உடன் பட்டதால்- மீண்டும்
கடன் பட்டதால்
உலகத்தைத் துறக்கின்ற மனிதன்- அவன்
உயிர்பற்றி அறியாத மடையன்!

✍️செ. இராசா

08/06/2019

#பூமியின்_சீற்றம்



பச்சை மேனியை
பங்கம் செய்தாய்
பொறுத்திருந்தேன்

ஊசியைச் சொருகி
உதிரம் குடித்தாய்
பொறுத்திருந்தேன்

புகையை ஊதி
புன்னகை செய்தாய்
பொறுத்திருந்தேன்

குடைந்து குடைந்து
கொடுமை செய்தாய்
பொறுத்திருந்தேன்

கழிவுகளைக் கொட்டிக்
களிப்புற்றாய்
பொறுத்திருந்தேன்

நெகிழியின் உறையால்
நெஞ்சைக் கிழித்தாய்
பொறுத்திருந்தேன்

 

அணுவை சிதைத்து
அகம் மகிழ்ந்தாய்
பொறுத்திருந்தேன்..

பொறுத்து பொறுத்து
புண்ணாய்ப் போனேன்..
பொறுத்தது போதும்
பொங்கி எழுவேன்...

எரிமலைக் குழம்பாகி
எவரையும் எரிப்பேன்
மலையைப் பிடுங்கிப்
மண்டையைப் பிளப்பேன்
கடலைக் கொட்டி
உடலைக் கிழிப்பேன்

மீண்டும் சமைப்பேன் மனிதா
நீ இல்லாப் புது உலகை..

#பூமியின்_சீற்றம்

07/06/2019

நீயே எந்தன் அதிசயமே


கரங்களில் ஏந்திய நாள் முதலாய்
கவிதையாய் இனிக்கிற ஸ்ட்ராபெர்ரியே..

தோள்களில் தூக்கிய நாள் முதலாய்
தோழியாய்த் தொடர்கிற புளூபெர்ரியே

நடந்து பழகிய நாள் முதலாய்
அடங்க மறுக்கிற ஆரஞ்சே

கொஞ்சிப் பேசிய நாள் முதலாய்
நெஞ்சில் மொழிகிற மாதுளமே

நிழலாய்ப் பிறந்த நாள் முதலாய்
நிஜமாய் இனிக்கிற பழ ரசமே

நீயே என்றும் அதி-ரசமே
நீயே எந்தன் அதிசயமே

✍️செ. இராசா

06/06/2019

எம்மனம்தான் துள்ளாது சொல்?!




சூரியனின் மோகத்தில் சூழ்ந்த கருமேகம்
மாரியாய் மாறியிங்கு மண்மீதுத் தூறியதும்
அம்மணமாய்த் துள்ளுகின்ற அம்மனத்து ஆசையிலே
எம்மனம்தான் துள்ளாது சொல்?!

✍️செ. இராசா

நாணயம்



கீழே விழுந்தாலும்
வெற்றியைத் தீர்மானிக்கிறது
நாணயம்

பிரபஞ்ச வெளி





காலிப் பானைகளில்
நன்றாகத் தெரிகிறது
பிரபஞ்ச வெளி

05/06/2019

சிறைபட்டுப் போவதா வாழ்க்கை?!

இல்லாததை நினைத்து
இருப்பதை இழப்பதா வாழ்க்கை?!
இருப்பதைப் பெருக்கி
இருப்பை உணர்வதே வாழ்க்கை!

மனிதத்தைத் தொலைத்து
மறைகளைப் படிப்பதா வாழ்க்கை?!
மறைபொருளை உணர்ந்து
மறையாப்புகழ் பெறுவதே வாழ்க்கை!

சிந்தையைச் சுருக்கி
சிறைபட்டுப் போவதா வாழ்க்கை?!
சிந்தையை விரித்து
சிறகடித்துப் பறப்பதே வாழ்க்கை!

✍️செ. இராசா

#சிறைச்சாலை உணவகம்

எல்லாம் நன்மைக்கே


பிடித்ததோ மருத்துவம்
கிடைத்ததோ பொறியியல்
அதனாலென்ன...
அதுவும் நன்மைக்கே..


படித்ததோ கட்டிடவியல்
பார்ப்பதோ மின்னியல்
அதானலென்ன..
அதுவும் நன்மைக்கே..

மனமுவந்ததோ ஒன்று
மணமுடித்ததோ ஒன்று
அதனாலென்ன...
அதுவும் நன்மைக்கே..

வேண்டியதோ ஊக்கத்தொகை
வந்ததோ அதிக வேலை
அதனாலென்ன....
அதுவும் நன்மைக்கே

ஆமாம் நன்மை யாருக்கு?!

✍️செ. இராசா