30/09/2022

நரை

 

முதுமையைப் பறை சாற்றும்
வெள்ளை அறிக்கை!
 
கருப்பின் இருப்பைக் காட்டும்
வெண்கொடி!
 
நிறம்மாறத் துடிக்கும்
காலன்!
 
சாயங்கள் பூசும்
நடிகன்!
 
காதோரம் கொஞ்சும்
காதலன்!
 
தலையேறி நிற்கும்
காமுகன்!
 
பொய்-மை தாங்கும்
புலவன்!
 
தன்-மை வெளுத்த
தலை'வன்!
 
வேற்று-மை காணும்
பித்தன் !
 
வெள்ளுடை போடும்
புத்தன்!
 
இங்கே...
நரை குறையல்ல...
அது...
இளமைக்கு விடை தேடும்
இரண்டாம் அத்தியாயமே.‌.
 
✍️செ. இராசா

27/09/2022

மேலிருந்து பார்த்தால்
சிறிதாகத் தெரிகிறது
குறைகள்

26/09/2022

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே
உன் கோபமும் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நல்ல நர்த்தனம் ஆடுது தனியே...என் சொந்தமே நீதான்டி

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி

ஆண்:
மேகதூதம் படிக்க
உந்தன் மேனியைத் உற்றுப் பார்த்திடவா..
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகைக் காட்டிடவா..

பெண்:
எம்மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும் சேதிகள் சொல்லிடுமா?
சந்தோச தியானம் நடத்த
இதுதனி மலரல்லவா...

ஆண்:
கற்சிலைக் கவியென மாறி கனவென வந்ததோ முன்னாலே
கண்ணிமை இருப்பது மெய்யா அடிக்கடி பார்க்கிறேன் உன்னாலே..

பெண்:
சொற்பிழை புரிபவன் நீயா? சொற்களின் வித்தகன் நீதானே...
கற்றிட ஆசை எனக்கும் சொல்லிக் கொடுத்திடு என்மானே..

ஆண்:
தந்தானே தகதிமி தானே
தந்தாலே சம்மதந் தானே

பெண்:
பிறந்ததே உனக்கென நானே..  
பிறகென்ன அவசரம் வீணே


✍️செ. இராசா

 

 

கட்டழகே நீதான்டி
கட்டிக்கொள்ள வாரேன்டி
சம்மதத்த சொல்லேன்டி
சகலமென ஆவேன்டி

மோனலிசா சும்மாடி
மோகனமே நீதான்டி
காரிகையே நீவாடி
காத்திருக்கேன் அம்மாடி..

தாரகையே நீதான்டி
தூரிகையே நான்தான்டி
தொட்டெழுத வாரேன்டி
தொட்டிடவா சொல்லேன்டி

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி

ஔவைத் திங்கள் 10 ---- யார் கவிஞன்?

 


#ஔவைத்_திங்கள்_10
#யார்_கவிஞன்?

யாப்பேதும் கற்காமல் யாத்திடலாம் என்றாலும்
யாப்பறிந்து பாப்புனைந்தால் ஏற்பு!
(1)

யாக்கைக்கும் ஏழுதான் யாப்பிற்கும் ஏழுதான்
கோக்கின்ற அங்கத்தின் கூறு
(2)

இரண்டே அசைகளை இங்குமங்கும் வைத்து
மரபில் கவிபாடல் மாண்பு
(3)

இலக்கண வேலிகட்டி எம்மொழியைக் காக்கும்
புலவனைப் போற்றிப் புகழ்
(4)

யாப்பை உடைத்தெறிய யாப்பறிய வேண்டாமா?
வாய்ப்பறிந்து மீறலாம் வா...
(5)

விருத்தம் வருத்தமென வீண்வாதம் வேண்டாம்
கருத்தான ஓர்கவிதை கட்டு
(6)

ஹைக்கூவோ குக்கூவோ கற்றிந்து நீசெய்தால்
மெய்க்கூவாய் நிற்கும் கவி
(7)

சந்தக் கவிதைக்கும் சத்தான சொல்கண்டு
சிந்தையுடன் சந்தமுடன் செய்!
(8)

தன்னைக் கவியென்று தம்பட்டம் போடாமல்
கண்மூடிக் காண்பான் கவி!
(9)

கவிசெய்வோன் எல்லாம் கவிஞனா என்ன?
கவியென்றே வாழ்வோன் கவி!
(10)

✍️செ. இராசா

25/09/2022

மெட்டு: தென்றல் உறங்கிய போதும்

 

(சென்னையில் காவல்துறை நடத்திய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாடகர் திரு. #இன்பக்கலில் Singer Inba Kalil அவர்கள் பழைய பாடல் மெட்டில் பத்து நிமிடங்களில் ஒரு பாடல் வேண்டுமென்று தொடர்பு கொண்டார். இதில் மதுபற்றி வராமல் மற்ற போதை சமாசாரங்கள் வருவதுபோல் பொதுவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனடியாக சுடச்சுட கத்தாரில் எழுதி சென்னையில் மேடையேறிய பாடலைக் கேட்டது மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது. மிக அழகாகப் பாடிய நண்பருக்கும் இந்த வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றி)
 
சொந்தம் உதறிட்டுப் போகும்
பந்தம் உதறிட்டுப் போகும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா?
தம்பி போதை விரும்பணுமா?......(2)
 
கொஞ்சம் கொஞ்சமென்று கொல்லும்
உறவை நாடிக் கெஞ்சும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா?
தம்பி போதை விரும்பணுமா?....(2)
 
வாரக் கடைசியில்
தேடும் இந்தப் போதையே
இந்தப் போதையே 
 
மீண்டும் தேடவே
வேண்டும் என்று சொல்லுமே
என்று சொல்லுமே
 
போதுமென்று எண்ணிடாமல்
மீண்டும் தொடருமே..
ஆசை தீர வேண்டுமென்று
மீண்டும் தொடருமே...‌(2)
 
நெஞ்சம் நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா ?
தம்பி போதை விரும்பணுமா?
 
வாழ்க்கையோடி போன பின்னே
வாழ்வு திரும்புமா?
வாழ்வு திரும்புமா?
 
நாசமாகிப் போன பின்னே
நாளும் திரும்புமா?
நாளும் திரும்புமா?
 
நெஞ்சம் நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா ?
தம்பி போதை விரும்பணுமா?
 
✍️செ. இராசா

22/09/2022

நானும் கடவுளும்

இல்லையில்லை என்றுசொல்லி
........ஏசுகின்ற ஆட்களை
இல்லையில்லை உண்மையில்லை
........என்றுவந்து- சொல்லவா!
இல்லையில்லை தப்புமில்லை
........இஃதுமிங்கே உண்மையா?
இல்லையுண்டு சொல்லுமய்யா
........இன்று!
 
எல்லையின்றி நீளுகின்ற
.........எந்தனெல்லை கண்டவர்
இல்லையில்லை யாருமில்லை
.........எங்குமில்லை- இல்லையே
உந்தையின்றி நீயுமில்லை
.........ஓயுமுந்தன் எல்லையே
விந்தையில்லை உண்மையெந்தன்
..........வித்து!

21/09/2022

கண்ணில் கவியெழுதி

 

கண்ணில் கவியெழுதிக்
........காற்றில் பறக்கவிட்டால்
பண்ணென மாறியது
........#பற்றுவதைக்-கண்டாயோ?!
பைத்தியமாய் ஆகியின்று
.........பாவிபோல் நோகின்றேன்!
வைத்தியம் செய்திட
........ வா!

யாருக்கு யாரோன்னு

யாருக்கு யாரோன்னு ஏன்சொன்னாங்க? இங்க
யாருக்கும் யாருமில்லை தள்ளிநில்லுங்க
பாட்டுக்கு பாட்டுன்னு ஏன்சொன்னாங்க-அட
பாட்டிற்கு பாட்டில்'தான் தீர்வாமுங்க...

ஊருக்கு முன்னால "வாவ்" என்பாங்க- இந்தப்
பாருக்கு பின்னால "வ்வே" என்பாங்க...
நேருக்கு நேராக 'தூள்" என்பாங்க- நீ
நேருக்கு நேர்நின்னா "த்தூ" என்பாங்க...

✍️செ. இராசா

20/09/2022

RK SURESH SONG

 

பாடலுக்கான இணைப்பு

RK SURESH SONG
 
*****************
வெள்ளாட்டம் பால் குடிச்சு
... தேவர்மகன் பாடி வந்தால்
தென்னாட்டுச் சீமையெல்லாம்
....தேரோட்டம் போல வரும்
தென்னாட்டுச் சீமையெல்லாம்
....தேரோட்டம் போல வரும்
 
**********
வருவாரு வரும்போது பாரு- வீரப்
பசும்பொன்னின் பரம்பரை யாரு?
தென்பாண்டித் தேரு
தேவன்னா யாரு
வரலாறு மாறும் பாரு- அண்ணன்
வந்தாலே தாறு மாறு....
ஏ..
முறுக்கு மீசை முறுக்கி வரும் அழகப்பாருங்கடா
கருப்புசாமி நிறத்தில் வரும் கருணைபாருங்கடா
சிங்கம் போல சீறிவரும் நடையப் பாருங்கடா
சிதறு தேங்கா போல சிதறும் சிரிப்பப் பாருங்கடா
....................சுரேஷ் அண்ணன் சிரிப்பப் பாருங்கடா
வருவாரு வரும்போது பாரு- வீரப்
பசும்பொன்னின் பரம்பரை யாரு..
 
**********
பட்டாளம் கட்ட
படைகேட்ட போது
நேதாஜி யோட
நின்னது போல
பட்டென்று கூடி
பகையேதுமின்று
ஒன்னாக நிப்போம்
அண்ணன் கூட...
அந்த எஸ்ஸு இந்த எஸ்ஸு எங்க எஸ்ஸு ஆர்கே எஸ்ஸு...
டஸ்ஸு புஸ்ஸு எல்லாம் பீஸீ ஆர்கே எஸ்ஸு செம்ம மாசு
 
முறுக்கு மீசை முறுக்கி வரும் அழகப்பாருங்கடா
கருப்புசாமி நிறத்தில் வரும் கருணைபாருங்கடா
சிங்கம் போல சீறிவரும் நடையப் பாருங்கடா
சிதறு தேங்காபோல சிதறும் சிரிப்பப் பாருங்கடா
....................சுரேஷ் அண்ணன் சிரிப்பப் பாருங்கடா
வருவாரு வரும்போது பாரு- வீரப்
பசும்பொன்னின் பரம்பரை யாரு?
 
**********
பார்த்தாலே பத்திக்கும் நெருப்பு- தாய்ப்
பாசந்தான் எங்கண்ணன் இருப்பு
நாடாண்ட வம்சத்தின் ஆளு- வரும்
நாடாளும் மன்றத்தில் பாரு
எல்லோர்க்கும் பொதுவான ஆளு- பலர்
சொல்வாங்க நீகொஞ்சம் கேளு
RKS என்றாலே யாரு? - அவர்
வந்தாலே சீனாகும் பாரு...
 
***********
கடையேழு வள்ளல்
கதைகேட்கும் போது
எங்கண்ணன் தானே
அங்கே‌...வரும்
மூவேந்தர் நாட்டில்
முன்னோடி வம்சம்
பாண்டியன் போல
முன்னே வரும்
என்ன சொல்லி என்ன ஆக இப்ப என்ன செய்யப்போறோம்?
உண்மை சொல்லி நன்மை செய்ய அண்ணன் கூட நிற்கப்போறோம்
ஆர் கே அண்ணன் கூட நிற்கப்போறோம்
 
முறுக்கு மீசை முறுக்கி வரும் அழகப்பாருங்கடா
கருப்புசாமி நிறத்தில் வரும் கருணைபாருங்கடா
சிங்கம் போல சீறிவரும் நடையப் பாருங்கடா
சிதறு தேங்கா போல்சிதறும் சிரிப்பப் பாருங்கடா
....................சுரேஷ் அண்ணன் சிரிப்பப் பாருங்கடா
 
வருவாரு... சுரேஷ் அண்ணன்
வருவாரு வரும்போது பாரு- வீரப்
பசும்பொன்னின் பரம்பரை யாரு?
தென்பாண்டித் தேரு
தேவன்னா யாரு
வரலாறு மாறும் பாரு- அண்ணன்
வந்தாலே தாறு மாறு....
வரலாறு மாறும் பாரு- அண்ணன்
வந்தாலே தாறு மாறு....
அண்ணன் வந்தாலே தாறு மாறு....
சுரேஷ் அண்ணன் வந்தாலே தாறு மாறு
RKS வந்தாலே தாறு மாறு
 
✍️செ. இராசா

எழுத்தில் கனமில்லையாம்

 

எழுத்தில் கனமில்லையாம்
என் மேல் எழுந்த குற்றச்சாட்டு இது...
உண்மையில்...
கனமான குற்றச்சாட்டுதான்...
ஆம்... எழுப்பியவர் கனமானவர் என்பதால்.
 
அன்றொரு நாள்‌..
இலக்கணம் இல்லாவிட்டாலும்..
தலைக்கனம் இல்லாதோன் என்று
தட்டிக்கொடுத்த அவரே தான்
இன்று கனமில்லை என்கிறார்....
 
இங்கே
தலைக்கனம் கொண்ட தீக்குச்சி
நிமிர்ந்து எரிகிறதென்றாலும்
தலைக்கனம் கொண்ட நெற்பயிர்
குனிந்து பணிகிறதென்றாலும்
அதற்குக் காரணம் கனம்தானே..
 
ஆனால்....
இந்தக் கனத்தை எப்படி எடைபோடுவது?!
மலர்களை எடை போடமுடியும்
மணத்தை எடை போட முடியுமா?
மனிதனை எடை போடமுடியும்
மனத்தை எடைபோட முடியுமா?
 
அப்படியே எடைபோட்டாலும்
ஒரு கிராம் வைரத்திற்கு
ஒரு கிலோ கத்திரிக்காய் நிகராகுமா?
ஒரு மாகவி கம்பனுக்கு
ஓராயிரம் மா..மா கவிகள் நிகராகுமா?!
 
உண்மையைச் சொல்லுங்கள்...
இங்கே கனம் எதைப்பொறுத்தது?
புவியில் என்நிறை 77 கிலோ என்றால்
நிலவில் என்நிறை மாறுகிறதே...
சில ரேசன் கடைகளில் நிறை 1 கிலோ என்றால்
நம் வீட்டுத் தராசில் நிறை குறைகிறதே...
எனில் கனம் இடத்தைப் பொறுத்ததா?
 
இல்லையா பின்னே....
குழும விருதை வைத்து
எடை போட முடிந்தால்
பாரதிக்கேன் மூன்றாம் பரிசு?
ஒருவேளை..
அவர் எழுத்தில் கனமில்லையோ...?!!
 
அப்படித்தான் கணித்தார்கள்
அக்கால நடுவர்கள்...
அதைவிடுங்கள்...
என் எழுத்தில் கனமில்லையா?!
இருந்துவிட்டு போகட்டும்...
காலம் கனியாமலாப் போய்விடும்?!!
 
காத்திருக்கிறேன்....
கணம் கணம்...கனம் மிகவே...💐🙏
🙏
✍️செ. இராசா

19/09/2022

நீ இல்லையென்றால் --------- ஔவைத் திங்கள் - 009

 


புருவம் உயர்த்தியவள் புன்னகை பூத்தால்
அரும்பிடும் காதல் அகம்
(1)
 
விழியில் விழிமோதி வித்திட்ட காதல்
மொழியும் கவிதையின் மூச்சு
(2)
 
காதலர் ஒப்பந்தம் கல்யாணம் ஆனபின்
மோதலும் முத்தமும் உண்டு
(3)
 
முத்தத்தின் சாட்சியாய் முன்வயிறு முட்டிவர
புத்திரனோ புத்திரியோ பின்பு
(4)
 
குடும்பச் சுமைகொஞ்சம் கூடுகின்ற போதில்
எடுக்கும் முடிவில்தான் இல்
(5)
 
ஊடலும் கூடலும் ஒன்றிணைந்த இல்லத்தில்
தேடலும் கைகோர்க்கும் சேர்ந்து
(6)
 
எப்போதோ சொன்னதை இப்போது கேட்டாலும்
அப்போதும் சொல்வாள் அவள்
(7)
 
வாய்வார்த்தை முத்தி வழிமாறும் போதில்தான்
நோய்போல மாறும் நினை
(8)
 
நீரின்றி வாழ்வுண்டா? நீயின்றி நானுண்டா?
பாரென்னை என்றுரைத்துப் பார்!
(9)
 
இல்லாள் இனிதென்றால் எல்லாமும் உள்ளதுபோல்
இல்லையேல் ஒன்றும் இல
(10)
 
✍️செ. இராசா

18/09/2022

நானும் எமனும்

 


 
என்னப் பிறப்பிதுவோ?
.....என்னப் பொழப்பிதுவோ?
ஒன்னும் புரியாமல்
.....ஓய்ந்திடுமோ- என்னுசுரும்
ஏன்யா எமதர்மா....
.....எங்கிருக்க சொல்லய்யா
நான்யார் உரைத்திடய்யா
.....நன்று?
 
 
ஏன்யா இராசய்யா..
.....என்னய்யா கூப்பிட்ட
நான்யார்னு கேட்கும்முன்
......நான்யார்னு- தோன்றலையா?
நீயார்னு நான்சொல்ல
.....நேராநான் வந்தேன்னா
நீயாவ தென்ன
......நினை?!
 
 
அழிக்கும் கடவுளின்
......அக்மார்க் உருவே
விழியால் எரிக்கும்
......விதியின்- கழிவே
எருமையில் சுற்றும்
.....எமதர்ம நட்பே
விரும்பியே வைத்தேன்
.....வினா!
 
 
உயிர்க்கவலை இல்லா
......உறவே‌... இராசா...
உயிரைப் பிணைந்த
......உடலில்- உயிரைத்
தனியாய் பிரித்தால்
......தரும்பெயர் என்ன?
உனதுயிர் எங்கே?
......உணர்!
 
 
பிணமென மாற்றிப்
.....பிரிக்கும் எமனே
உணர்வென ஏற்றி
.....உயிர்க்கும்- கணமே
மனதினை விட்டு
....மறந்திடல் ஏனோ?
மனதிற்குள் தானா
......வுயிர்?
 
 
மறைபொருள் தத்துவமாம்
....."நான்யார்?" அறிவாய்
மறையும் வரைக்கும்
.....மகிழ்வால்- நிறைவாய்
உறைபொருள் தானென
.....உற்றுணர்ந் தாலே
இறைபொருள் தோன்றும்
.....இனிது!
 
 
உண்ட மயக்கம்
....உறங்கிவிட்டேன் பாரய்யா...
கண்ட கனாகண்டு
....கண்திறந்து- கொண்டேன்யா.
ஆனாலும் ஓர்கேள்வி
.....அப்புறமா சொல்லேன்யா
ஆணாக ஏன்பிறந்தேன்
.....அன்று?
 
✍️செ. இராசா

16/09/2022

தீர்க்க சுமங்கலி பவ
என்று மனதார வாழ்த்துகிறார்
அவர் கணவன்

15/09/2022

எவனைப் பார்த்தாலும் B.E ங்குறான்

 


எவனைப் பார்த்தாலும் B.E ங்குறான்
என்ன வேலைன்னா ஹிஹிஈ ங்குறான்...
சிவிலு மெக்கெல்லாம்* IT ங்குறான்
சில்ற பொழப்புக்கு பெஸ்டுங்குறான்
(Mechanical - short form Mech)
 
அப்ராட் டிரிப்புக்கு pray பண்ணுறான்
proud of இண்டியனாம் feel பண்ணுறான்
வாட்சப் ஸ்டேடசில் உசுப்பேத்துறான்
வாட் ப்ரோ ஒய் ப்ரோன்னு சீன் போடுறான்..
 
what Bro? why Bro?
what Bro? why Bro?
 
லேபர் மேசன்லாம் சொம்மா இல்லீங்கோ
பிளம்பர் பெயிண்டர்லாம் ரொம்ப பிஸிங்கோ
வீக் எண்ட் வந்தாலே பேமண்ட் பாருங்கோ
லோக்கல் டாஷ்மாக்கே குஷி.....மோடுங்கோ
 
பேச்சலர் இன்ஜினியர் வர்றார் பாருங்கோ
வாங்கும் சம்பளமே பத்த வில்லீங்கோ
என்ன செய்யலாம்னு நீங்க சொல்லுங்கோ- இல்லைன்னா...
IT Job இருந்தால் அட்ரஸ் சொல்லுங்கோ....
 
✍️செ. இராசா

14/09/2022

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஆனால்

 


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
ஆனால் பெண்களுக்கு மட்டும்
பேருந்தில் இலவசம்....
 
✍️செ. இராசா

குடி குடி அரசைக்காக்கும்

 

ஓடியோடி நாளுமோடி
.....ஓய்ந்திருக்கும் போதிலே
தேடியோடி மாலையோடி
....சேர்வதெங்கே பாரிலே
கூடியாடி மோதிமோதி
....கோப்பைதட்ட வேண்டியே
நாடியோடி யாருமோடி
.....வாங்குமந்தக் குப்பியே...
 
வாரநாளில் மட்டுமென்று
......வாங்கிவந்த ஆர்வமே
நேரகால எல்லையின்றி
......நீளுதிங்கே பாருமே
தூரதூரம் யாருமின்றி
......தொட்டுவந்த பானமே
ஊருகூடி யாருமின்று...
......ஊத்துகின்ற தீர்த்தமே
 
✍️செ. இராசா

12/09/2022

மண்ணள்ளிப் போட்டால் கை தட்டுகிறார்கள்

 


மண்ணள்ளிப் போட்டால்
கை தட்டுகிறார்கள்
மரம் நடுவிழாவில்..
 
கத்தியால் கிழித்தால்
கை கொடுக்கிறார்கள்
மருத்துவ மனையில்
 
ஸ்டேடஸ் பார்த்ததும்
தள்ளி விடுகிறார்கள்
வாட்சப்பில்...
 
ஆளைப் பார்த்தே
எடை போடுகிறார்கள்
ரேசன் கடையில்...
 
கொஞ்சம் வளர்ந்தாலும்
வெட்டி விடுகிறார்கள்
சலூன் கடையில்...
 
எவ்வளவு அடித்தாலும்
சிரிக்கிறார்கள்
மைதானங்களில்....
 
அடபோங்கப்பா....
 
✍️செ. இராசா
 
 
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
மன்னாதி மன்னா.....வடிவேலு அண்ணா 💐🙏💐

எது இனிது? ஔவைத் திங்கள்-008

 


வள்ளுவம் பேசுகின்ற மன்றத்தில் எங்கேனும்
உள்ளமர்ந்து கேட்டால் உவப்பு
(1)
 
நற்றமிழ் கற்றவரின் நன்நட்பு கிட்டுமெனில்
கற்கண்டாய் மாறும் கணம்
(2)
 
எண்ணம்போல் ஓர்பெண்ணை இல்லாளாய் பெற்றுவிட்டால்
வண்ணம்போல் மாறாதா வாழ்வு?!
(3)
 
ஊர்போற்றும் பிள்ளையாய் ஓர்பிள்ளை வந்துவிட்டால்
சேர்ந்திடும் இன்பச் செழிப்பு
(4)
 
இசையிலே ஒன்றி இசைவாகும் போதில்
இசைதரும் இன்பம் இனிது
(5)
 
கவியிலே ஒன்றி கவியாக்கும் போதில்
கவிதரும் இன்பம் களிப்பு
(6)
 
பக்திப் பரவசத்தில் பாடுகின்ற அவ்வேளை
தக்கபடி ஆடினால் சால்பு
(7)
 
காமக் களிப்பில் கலக்கின்ற அவ்வேளை
தாமதம் இன்பத் தவிப்பு
(8)
 
கணம்கணம் ஒன்றி களிப்புடன் செய்தால்
கணங்களில் இல்லை கனம்
(9)
 
அன்புடன் செய்யும் அனைத்துச் செயல்களும்
என்றுமே வாழ்வில் இனிது
(10)
 
✍️செ. இராசா

11/09/2022

சாதிவிட்டு சாதி -மகாகவி பாரதிக்கு இந்த வெண்பா உரையாடல்களை சமர்ப்பிக்கிறேன்

 


(எத்தனையோ எதிர்ப்புகளை மீறி சாதிவிட்டு சாதி திருமணம் நடந்த குடும்பத்தில், அந்த வீட்டுத் தலைவரை சம்மதிக்க வைக்கக் காரணமாக இருந்த மகாகவி பாரதிக்கு இந்த வெண்பா உரையாடல்களை சமர்ப்பிக்கிறேன்)

 
யாரென்ன சொன்னாலும்
.....ஏற்கமனம் தோன்றவில்லை
ஊரென்ன சொல்லுமோ?!
.....ஓர்கணம்- பாரென்னை
சாதிவிட்டு சாதியெனில்
.....தன்மானம் என்னாகும்?
நாதியற்று போகனுமா
.....நாம்?
 
 
என்னப்பா சொல்கின்றீர்?
.....இவ்வூரார் யாரப்பா?
என்:அப்பா நல்லப்பா
.....என்றெல்லாம்- சொன்னேன்பா
சித்தப்பா மாமாவாய்
.....செப்பியதும் பொய்யாப்பா
இத்தனைநாள் சொல்லலைப்பா
.....ஏன்?
 
 
பாரதியார் பற்றியெல்லாம்
.....பாடம் புகட்டிவிட்டு
பாரதி- யார்? என்பதுபோல்
......பண்ணாதீர்- பூரணமாய்
கட்டிக் கொடுத்திடுங்கள்
.....கைகாட்டும் பிள்ளையினை
விட்டுக் கொடுத்திடுங்கள்
.....வீம்பு!
 
 
உண்மை உணர்ந்தாலும்
.....உள்ளத்துள் போராட்டம்
கண்கள் திறந்தாலும்
.....காணாத- திண்டாட்டம்
மாறியது பாரதியால்
.....நான்பார்த்த கண்ணோட்டம்
மீறிடலாம் பொய்வர்ணம்
....விட்டு!
 
 
பிள்ளைக்காய் வாழ்வதாய்
.....பேசுகின்ற பெற்றோரும்
பிள்ளைசொல் கேளாமல்
......பிற்போக்கைப் - பற்றுகையில்
முற்போக்காய் வாழ்கின்ற
.....மூத்தகுடி என்பதுபோல்
நிற்கின்றீர் அப்பா
.....நினைந்து!
 
✍️செ. இராசா

மனமே மாற்றியோசி

 

பெயரென்ன? என்று கேட்டார்கள்
வைத்த பெயரா? வாங்கிய பெயரா? என்றேன்...
 
வயதென்ன? என்று கேட்டார்கள்
உடலிற்கா? மனதிற்கா? என்றேன்...
 
படிப்பென்ன? என்று கேட்டார்கள்
வயிற்றுப் படிப்பா? ஆன்மப் படிப்பா? என்றேன்..
 
மதமென்ன? என்று கேட்டார்கள்
மதம்பிடிக்கா மதமென்றேன்
 
சாதியென்ன என்று கேட்டார்கள்
சாதிக்க முனையும் சாதியென்றேன்
 
எந்த ஊர்? என்றார்கள்
யாதும் ஊரென்றேன்...
 
என்னத்..திமிரா? என்றார்கள்
எண்ணத் தெளிவு என்றேன்...
 
கொழுப்பு கூடினா இப்படித்தான் என்றார்கள்
கூடாமல் இருக்கத்தான் நடக்கிறேன் என்றேன்..
 
பெரிய ஆளென்ற நினைப்போ? என்றார்கள்
நான் என்னை மதிக்கிறேன் என்றேன்...
 
என்ன எதிர்பார்க்கிறீர்? என்றார்கள்
எண்ணம்போல் வாழ்வென்றேன்....
 
எந்திரித்து கைகொடுத்தார்கள்
புன்னகையில் பதில் சொன்னேன்!
 

10/09/2022

நிஜத்தைவிட நிழலே

 


இங்கே...
நிஜத்தைவிட
நிழலே பெரிதாய்த் தெரிகிறது
பல சமயங்களில்...
 
நிஜத்தை அடையாளம் காணவும்
நிழலே உதவுகிறது....
 
ஆனாலும்...
நிஜமில்லாமல்
நிழல் இல்லையே..
 
✍️செ. இராசா

08/09/2022

ஓணம் வாழ்த்துகள்

 




மூவேந்தரால் கர்வம் கொள்ளும் நாம்தான் 

சேரனை மட்டும் கேரளனாய்ப் பார்க்கிறோம்...

பாரம்பரியப் பெருமை பேசும் நாம்தான்
சிவப்பரிசி கண்டால் கேலி செய்கிறோம்...

மற்ற மீன்களை வளைத்துக் கட்டும்நாம்தான்
மத்திமீனை மட்டும் மட்டமாய்ப் பார்க்கிறோம்....

சூரியகாந்தியில் வடை சுடும் நாம்தான்
தேங்காய் எண்ணையைக் கொழுப்பென்கிறோம்

உருளைக்கிழங்கில் சிப்ஸ்தேடும் நாம்தான்
மரவள்ளிக் கிழங்கைத் தட்டிக் கழிக்கிறோம்...

மரபின் பெருமையைப் ஓகோவெனும் நாம்தான்
மரபணு மாற்றிய காய்கறி உண்கிறோம்...

விளைநிலத்தில் விவசாயம் செய்த நாம்தான்
விலைநிலம் இதுவென விளம்பரம் செய்கிறோம்...

அட...
நாம் முற்போக்கு வாதிகள் அல்லவா??

செ. இராசா

(பாரம்பரிய உணவு உட்கொள்ளும் மலையாள உறவுகளுக்கு ஓண வாழ்த்துகள் உரித்தாகட்டும்💐💐💐💐💐)

07/09/2022

யோசித்துப்பார்...!!!

 


யோசித்துப்பார்...!!!
 
கருவறைத் தொட்டியில்
நீந்திய உன்னை
பெருவெளிப் பள்ளத்தில்
துடிக்கவிட்டது யார்?
 
பரிசுத்த நிர்வாணமாய்த்
திரிந்த உன்மேல்
பாவ ஆடையை
போர்த்தியது யார்?
 
நீண்ட மாரத்தானில்
ஓடிடும் உன்னை
பசிப்பிணி தந்து
வதைப்பது யார்?
 
உறவு மேடையில்
உலவிடும் உன்னை
போலி முகமூடியில்
குத்துவது யார்?
 
நைந்த கூட்டைத்
துறந்திடும் உனக்கு
புதுக்கூடு தந்து
புதைப்பது யார்?
 
சுவடுகள் இன்றிப்
பறந்திடும் உந்தன்
வரவுக் கணக்கை
வைப்பதும் யார்?
 
யோசித்துப்பார்...!!!
 
✍️செ. இராசா