31/03/2023

கறுப்புக் கண்ணாடியில்
வெளியே தெரிவதில்லை
கண்ணீர்

30/03/2023

கர்டை தஹியென்றால்

 


கர்டென்று (Curd) வைத்திருந்தால்
.......கண்டுக்க மாட்டோம்யாம்
கர்டை தஹியென்றால்
........காண்டாகி- கர்ஜிப்போம்
கண்டன்ட் (content) தருகின்ற
........கர்த்தாவாய் இப்படியே
கண்டினியூ(continue) செய்யுங்கள்
......,...காட் (God)!
✍️செ. இராசா
(தஹி நஹி இதர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.... ஆனால் CURD கர்ட் என்று அழைப்பது மட்டும் சரியா?)

28/03/2023

தொலைநோக்கு




கண்கள் இரண்டென்றாலும்
காட்சி ஒன்றுதான் என்போரே...
உண்மையைச் சொல்லுங்கள்...
அத்தனை ஜோடி கண்களுக்கும்
அதே காட்சிதான் தெரிகிறதா?!

துரியோதனன் பார்வையில்
அருவருப்பாய்த் தெரிவது
தருமனின் பார்வையில்
அழகாய்த் தெரிகிறதே...‌!!!

நாத்திகர் பார்வையில்
கல்லாய்த் தெரிவது
ஆத்திகர் பார்வையில்
கடவுளாய்த் தெரிகிறதே....!!!

எனில்...
காட்சியென்பது
வெறும் கண்களில் இல்லைதானே...!!
ஆம்...
நண்பன் தருவது
நஞ்சென்றே கண்டாலும்
கண்ணோட்டம் இருந்தால்
உண்ணலாம் என்கிறாரே வள்ளுவர்...
எனில்...
நோக்கும் நோக்கில்தான் எத்தனை
நோக்குள்ளது பாருங்கள்....

அண்ணலும் நோக்கி
அவளும் நோக்கினால்
அங்கே காதல் உடன்படிக்கை
கையெழுத்தாகிறது‌!

அப்படி நோக்குவதை
அவள் அப்பாவும் நோக்கினால்
அதே உடன்படிக்கை
கைகலப்பாகிறது!

அனைவரும் கிளியை நோக்கையில்
அர்ச்சுனன் கண்களை நோக்கினானே
அது தொலைநோக்கு..

அனைவரும் ஈரோப்பை நோக்கையில்
ஹிட்லர் ரஸ்யாவை நோக்கினானே
அது தொலை நோக்கல்ல
அவனுக்கான தொல்லை நோக்கு.....

இங்கே...
ஒவ்வொரு நோக்கும்
அவரவர் கோணத்திலும் மாறும்....
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..!!

மறைந்திருந்து தாக்கிய
வாலி வதைபோல்
சதி செய்து தாக்கிய
கர்ண வதைபோல்
இங்கே தவறும் சரியாகும்
இலக்கு சரியென்றால்...!!!

இனியும் ஒன்று தவறென்றால்
கொஞ்சம் இடம்மாற்றிப் பாருங்கள்!
தெரியாததும் தெரியும்!

✍️செ. இராசா

27/03/2023

வார்த்தைக்குள் ஒளிந்த மௌனமே
கவிதை...

26/03/2023

தேவையில்லாத உடைகள்

 



நமக்குத் தேவையில்லாத உடைகள் யாருக்கோ தேவைப்படலாம் என்கின்ற கருத்தை வலியுறுத்தி கத்தாரில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் துணிகள் போடுவதை நாங்களும் ஒரு வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி இம்முறை என் மனைவியார் இங்கே இல்லாத தருணத்தில் சற்று அதிகமாவே போடும் சூழல் உருவானபோது நானே அனைத்துத் துணிகளையும் துவைத்து, மடித்து, சில துணிகளை நல்ல முறையில் அயனிங் செய்து வழங்கியது மிகவும் மனமகிழ்ச்சி கொடுத்தது. 
 
இதுபோல் பெட்டிகள் நம்மூரில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பணக்கார நாடான கத்தார் இப்படி ஏழைகளைப் பற்றி சிந்தித்து உணவு, உடை...என்று தானே வழங்கியும் மற்றவர்கள் வழங்கவும் ஊக்கப்படுத்தும் மனிதநேயப் பண்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. 
 
அதற்காகக் கத்தாரையும் கத்தார் மன்னர் மற்றும் மக்களையும் மனமார வாழ்த்துவோமாக....
 
வாழ்க வளமுடன்!
 
✍️செ. இராசா

நம்மிடம் உள்ளவற்றை நாம் கொடுத்தால்

நம்மிடம் உள்ளவற்றை நாம் கொடுத்தால் நமக்குத் தேவையானதைப் பிறர் கொடுப்பார்கள் என்பதற்கு சாட்சியாக ஓர் நிகழ்வு இன்று நடந்தது. நான் பயன்படுத்திய நிறைய இசைக்கருவிகளை என் இசை நண்பர் ஒருவருக்கு என் ஞாபகார்த்தமாக கொடுத்தேன். ஆனால் எனக்கோ என் மற்றொரு நண்பர் ஊரிலிருந்து பறை இசைக்கருவியை வரவைத்து அவர் ஞாபகார்த்தமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். உண்மையில் பறையை முதன் முதலில் வாங்கி இன்றுதான் தொட்டேன். வாங்கிய உடனேயே வாசித்தேன். எமக்கு இதுவரையிலும் அதுபற்றிய முறையான பயிற்சி கிடையாது. இனிமேல்தான் போகவேண்டும்....ஆகவே மக்களே தவறிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
 
அப்புறம் அந்த நண்பர் வேறு யாருமில்லை எங்கள் பக்கத்து மாவட்டமான இராமநாதபுரத்தைச் சேர்ந்த Viji Selvam தான். (ஒரு காலத்தில் சிவகங்கை மாவட்டமும் இராமநாதபுரம் மாவட்டம்தானே)
நன்றி நண்பரே....

 

24/03/2023

வாழ்த்துப் பத்து

 


மற்றோரைப் பாராட்டும் மாவுள்ளம் கொண்டோரை
உற்றாராய்க் காணும் உலகு
(1)
வாழ்த்துகிற உள்ளம் வருகின்ற யாவர்க்கும்
காழ்ப்புணர்ச்சி தோன்றாது காண்
(2)
போற்றுவதைப் போற்றினால் போற்றிடுவர் யாவரும்
தூற்றினால் துப்புவர் சொல்
(3)
நல்லதைப் பாராட்டும் நல்லுள்ளம் கொண்டோரை
பொல்லாரும் செய்வர் புகழ்
(4)
உச்சத்தில் நின்றாலும் ஊன்றுகோல் போன்றவர்
அச்சமின்றி காட்டுவர் அன்பு
(5)
பூனையை யானையெனப் பொய்யெல்லாம் சொல்லாமல்
பூனையைப் பூனையெனப் போற்று
(6)
காசுபொருள் தந்தால்தான் கர்ணனா என்னயிங்கு
பேசுகவி தந்தாலும் தான்!
(7)
நிற்போர் நடப்பர் நடப்பவர் ஓடுவர்
பற்றின்றிப் பாராட்டிப் பார்
(8)
கண்முன்னே நிற்போர்க்குக் கைதட்டா விட்டாலும்
எண்ணத்தால் செய்யாய் இடர்
(9)
நல்லோர் ஒருவரின் நாவிலே வந்துவிழும்
எல்லாமும் பொன்னென்றே எண்ணு!
(10)
 
✍️செ. இராசா

22/03/2023

வல்லாரை

 


வாரம் தவறாமல்
......வல்லாரை சேர்ப்போர்க்குத்
தூரம் விலகிவிடும்
......தோல்நோய்கள் - பூரணமாய்க்
காய்ச்சல் சளியெல்லாம்
......காணாமல் போய்சிந்தைப்
பாய்ச்சல் அதிகரிக்கும்
......பார்!
 
✍️செ. இராசா

21/03/2023

பாதை போகும் பாதையில

 


பாதை போகும் பாதையில நானும் போகுறேன்...
பள்ளம் மேடு இரண்டிலையும் பார்த்துப் போகுறேன்..
 
வேகம் வேகம் வேகம்
வேகம்போகும்போது
வேகத்தடை வந்தா
விவேகத்தோட போனும்...
தூரம் தூரம் தூரம்
தூரம் போகும்போது
தொல்லையேதும் வந்தா
துடைச்சு எறிய வேணும்...
 
(பாதை போகும்)
 
தெளிவாத் தெரியும் பாதையில
....வேகம் போகலாம்
தெரியாத பாதையினாப்
.....பார்த்துப் போகனும்
வெளிச்சம் இருக்கும் நேரத்துல
.....வேகம் போகலாம்
இருட்டான நேரத்துல
.....பார்த்துப் போகனும்.
 
வளைஞ்சு நெளிஞ்சு போவதால
.. உடம்பு களைச்சுப் போகும்‌..
இடையில் நிறுத்தி ஓய்வெடுத்துக்
...களைப்பப் போக்க வேணும்..
குதிச்சு குதிச்சுப் போவதால
.. மூட்டுக் தேயக் கூடும்....
தினமும் பயிற்சி செய்வதால
...தேகம் இரும்பா மாறும்..
 
(பாதை போகும்)
 
✍️செ. இராசா

டாஸ்மாக்கில்

 


டாஸ்மாக்கில் ஈட்டித் தருகின்ற திட்டங்கள்
பாஸ்மார்க்கில் சேராது பாஸ்!

20/03/2023

முருங்கையின் பிரிவு

 

(ஒன்பது வருடங்களாக குடியிருந்த வீட்டில்
நாங்கள் வரும்முன்னே ஒரு முருங்கை மரம் இருந்தது. அந்த மரத்தைவிட்டு விடைபெறுவதை எண்ணி எழுதிய வெண்பாக்களே இவை....)
 
வருவோரை எல்லாம்
........வரவேற்றல் போல்;யாம்
வருமுன்னர் வந்த
........மரமாம்- முருங்கை
வளர்ச்சியே இல்லாமல்
........வாழ்ந்தாலும் எம்போல்
தளர்ச்சி அடையவில்லை
.........தான்!
(1)
 
நீரில்லை என்றாலும்
........நிற்கின்றாய் இங்கேயே..
யாருன்னை வைத்தனரோ
........யாரறிவர்?- ஊரில்
வருபவர் எல்லாம்
.......வதைக்கின்ற போதும்
தருகின்றாய் இன்றைக்கும்
.......தான்!
(2)
 
ஒன்ப(து) ஆண்டுகளாய்
.....உன்னோடு வாழ்ந்திருந்தோம்
ஒன்பது பத்தாக
.....ஒப்பவில்லை- என்றல்ல..
ஒன்பதைத் தொட்டபையன்
.....உச்சநிலை கல்விதொட
ஒன்பதில் போகின்றோம்
.....ஓர்ந்து!
(3)
 
முருகன்போல் நிற்கும்
.......முருங்கை மரமே
வரும்முன் குடிபுகுந்த
......வாஞ்சை- தருவே
இருப்பதை ஈயும்
......இறையின் கொடையே
வருவேன் திரும்பவும்
......நான்!
(4)
 
பிள்ளைபோல் நானுன்னைப்
.....பேணியதை நன்கறிவாய்!
உள்ளத்தால் பேசியதை
.....உண்மையிலே- உள்ளுணர்வாய்!
தொல்லைபோல் எண்ணியுன்னை
.... தூரத்தில் வைத்தேனா?
எல்லையில்லா அன்புற்றேன்
.....இங்கு!
(5)
 
பெற்ற மகளைப்
.....பிரிகின்ற தந்தைபோல்
உற்ற உறவை
.....உதறிய- அற்பன்போல்
உன்னை விடுகையில்
..... உண்மை உணர்கின்றேன்
என்செய்ய நீயே
......இயம்பு?
(6)
 
கீரையில் சாம்பாராய்
.....கீரையில் கூட்டுமாய்
கீரையில் பல்வகைகள்
.....கிட்டுவதால் - யாரையும்
பச்சை நிறம்காட்டி
....பற்றுகின்றாய் போலும்;பார்
இச்சை மிகவைத்தார்
....இங்கு!
(7)
 
பிறந்தகம் விட்டுப்
... பிரிகின்ற பெண்போல்
உறவாய் நினைப்பேன்
...உளத்தால் - மறவேன்
வரவா முருங்கை
... வழிவிடு மீண்டும்
வரநான் வரம்தரு
.......வாய்!
(8)
 
வாழ்ந்த இடம்விட்டு
......வந்தவரே நன்கறிவர்!
ஆழ்ந்த மனதிற்குள்
.....அன்போடு- மூழ்கிடுவர்!
மாடும் பறவையும்போல்
.....நம்மையே சூழ்ந்திருந்(து)
ஆடும் மரம்மேலென்
.....அன்பு!
(9)
 
பாக்கிய ராஜைப்போல்
.....பாக்கியம் கிட்டுமெனில்
பார்க்கும் படமொன்றில்
......பாத்திரமாய்- ஆக்கிடுவேன்
கத்தார் முருங்கையுன்னைக்
..... காலத்தில் ஏற்றிவைத்து
கெத்தாய் நிறுத்திடுவேன்
......கேள்!
(10)
 
✍️செ. இராசா

19/03/2023

வெற்றி என்ற ஒன்றைத்தேடி

 

வெற்றி என்ற ஒன்றைத்தேடி
.....ஓடுகின்றேன்!
சுற்றி உள்ள சூழல்நாடித்
.....தேடுகின்றேன்!
கற்றுக் கொண்ட வித்தைதானே
......காட்டுகின்றேன்!
பற்று கொண்ட பக்தைபோலே
.....பாடுகின்றேன்!
 
 
நாளை நாளை என்று சொல்லி நாளைக் கடத்த வேணாம்...
நாளை என்ன நாளை... இன்றே நாளைத் தொடங்க வேணும்‌
காலை மாலை என்று சொல்லி
காலங் கடத்த வேணாம்...
 
வேலை செய்யும் வேளை வந்தா வேலை தொடங்க வேணும்
காத்திருக்கிற நேரத்துல கவுத்திடுவான்டா...
காலவைக்கிற ஓரத்துல நுழைஞ்சிடுவான்டா...
பாத்துநிக்கிற நேரத்துல புகுந்திடுவான்டா...
பார்த்துவைக்கிற பாகத்துல படுத்துடுவான்டா...
 
தெரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ‌..
அறிஞ்சுக்கோ தெளிஞ்சுக்கோ
அறிஞ்சு தெளிஞ்சு ஜெயிச்சுக்கோ...
 
✍️செ. இராசா

18/03/2023

பிரிவு

 

சீதை (இராமனின் மனைவி)
பிரியேன் எனச்சொல்லி பின்னாலே வந்து
பிரிந்தாள் இராமனின் பெண்டு
(1)
 
ஊர்மிளா (இலட்சுமணன் மனைவி)
அண்ணியார் சீதையோ அண்ணனுடன் சேர்ந்துவர
பெண்டின்றி வந்தான் பிரிந்து
(2)
 
யசோதா (புத்தனின் மனைவி)
மனைவியிடம் சொல்லாமல் வந்ததேன் புத்தா?!
மனையகன்று போவதா மாண்பு?!
(3)
 
குந்தி (பாண்டுவின் மனைவி)
கர்ணனை பெற்றதாய் காட்டாற்றில் விட்டுவந்த
கர்மாவின் சோதனையைக் காண்
(4)
 
குந்தி (துரியோதனன் அரண்மனையில்)
எதிரிகள் கூடத்தை ஏற்றிருந்த போதும்
மதிமனம் எல்லாமும் மைந்து
(5)
 
கண்ணகி (கோவலன் மனைவி)
தன்னைப் பிரிந்திருந்து தன்னோடு வந்தாலும்
தன்வினையால் போனார் தனித்து
(6)
 
பொய்சொல்லா காரணத்தால் போனதுதான் என்றாலும்
மெய்யாலே வென்றான்பார் மீண்டு
(7)
 
சாவித்திரி (சத்தியவான் மனைவி)
சத்தியவான் செத்துவுயிர் சாவித்திரி மீட்டகதை
சத்தியம் வென்றதன் சான்று
(8)
 
பிரிவுகள் எல்லாம் பிரிவென ஆகா
பிரிவெண்ணம் ஒன்றே பிரிவு
(9)
 
பிரியாமல் வாழப் பிரிவுகளும் வேண்டும்
பிரிந்தபின் கூடும் பிணைப்பு
(10)

17/03/2023

கண்மூடும் முன்பாகக் கண்திறந்தேன்...
மெய்சாயும் முன்பாக மெய்யுணர்ந்தேன்...

16/03/2023

 

கவியின் கவினில் கவிபிறந்தால் அந்தக்
கவிதான் சிறந்த கவி

14/03/2023

வாராக்கடன் வந்ததுபோல வந்தவளே..

வாராக்கடன் வந்ததுபோல வந்தவளே..
வந்தவளே- என்
தீராவலி தீர்ந்ததடி என்னவளே- அடியே என்னவளே

எத்தனை நாள் காத்திருந்தேன்...
இத்தனை நாள் எங்கிருந்த?
ஒத்தையில நிக்கயில என்னவளே
உன்னைப் பத்தி புரிஞ்சதடி உண்மையிலே...

நான்....
சின்னச் சின்னத் தப்புக்காக செஞ்சதெல்லாம் கொஞ்சமில்லை
முன்னப் பின்னப் பார்த்திடாம
முட்டிக்கிட்டோம் என்ன சொல்ல...

அத்தனையும் தப்புதான்டி என்னவளே..
அம்புட்டையும் மறந்திடுவாம் உண்மையிலே...

✍️செ. இராசா

(வாராக்கடன் வந்தால் வரும் மகிழ்ச்சியின் அளவில் ஒரு பாடல் பிறந்தது உறவுகளே....எப்படி இருக்குன்னு சொல்லுங்கள்...)

முத்தம்

 


உதடுகள் ஒப்பமிடும்
சப்தமில்லா உடன்படிக்கை!
 
பாசத்தைப் பறைசாற்றும்
மௌன ஒலி ஒப்பந்தம்!
 
காதலை உறுதிசெய்யும்
கட்டாயப் பத்திரம்!
 
காமத்தைத் தொட்டெழுப்பும்
அட்சயப் பாத்திரம்!
 
இந்த முத்தம்!
 
ஆம்
சில முத்தங்கள்
அரேபிய நட்பைப்போல்
அன்பைப் பரிமாறும்!
 
சில முத்தங்கள்
யூதாஸ்* பக்தியைப்போல்
வஞ்சத்தின் வலைவீசும்!
 
சில முத்தங்கள்
யசோதைக்குக் கண்ணன் தந்ததுபோல்
நினைத்தவுடன் மெய் சிலிர்க்கும்!
 
சில முத்தங்கள்
காஸ்ட்ரோவிற்கு** மரிடா தந்ததுபோல்
நினைத்தாலே மெய் விதிர்க்கும்!
 
இனியும்..
முத்த வரிகளுக்கு
வாத்ஸாயனரைத்***தேடாதீர்..
பிறகு....
புரூட்டஸ்கள்""" புன்னகைப்பார்கள்..
 
✍️செ. இராசா
 
#யூதாஸ்- ஏசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த சீடர்.
#காஸ்ட்ரோ- பிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்யும் முயற்சியாக அமெரிக்கா அவருடைய முதல் மனைவியான ரீட்டா ப்ளோரென்ஸ் வழியாக, உதட்டில் விஷம் தடவிய சாயத்தோடு அனுப்பியதாம். 638 கொலை முயற்சிகளில் தப்பித்துள்ளார்.
#வாத்ஸாயனர்- காமசூத்ரா எழுதியவர்.
#புரூட்டஸ்- ஜுலியஸ் சீசரைக் காட்டிக் கொடுத்தவர்.

13/03/2023

இக்கரையில் நானிருக்க

 


இக்கரையில் நானிருக்க
......எக்கரைக்கோ போனவரே
அக்கரையில் சோலியென்ன
......அங்கிருக்க- அக்கறையா
இக்கரைக்கு வந்திங்கே
......என்குறைய தீர்க்கலைன்னா
அக்குறைய யார்தீர்ப்பா
......ஆய்ந்து!
 
✍️செ. இராசா

12/03/2023

அஞ்சு கணவர்கள்

 


அஞ்சு கணவர்கள் உண்டென்ற போதிலும்
....ஆனதைக் கண்டீரே- யாவும்
....போனதைக் கண்டீரே-சூதை
அஞ்சி மறுக்கிறோம் என்கின்ற போதிலும்
.....ஏற்றிட மாட்டீரோ?- சூதைத்
.....தூற்றிட மாட்டீரோ?
 
எஞ்சி இருக்கிற கொஞ்சோண்டு கோமணம்
.....கண்களை உறுத்துதோ?- இல்லை
.... நெஞ்சினை வருத்துதோ?- சூதின்
வஞ்ச சகுனியர் வாழ்கின்ற நாடென
.....மாற்றிட வந்தீரோ?!- சூதைப்
.....போற்றிட வந்தீரோ?!
 
✍️செ. இராசா
 
(மதுபோல் சூதுவும் சமூகநோய்க் காரணிகளே....யாரும் அரசியல் சப்பைக்கட்டுகள் கட்ட வேண்டாம்)

11/03/2023

பிடிபடாத பொழுதுதான்
உண்மையில் பிடிபடுகிறது
வார்த்தைகளின் மகத்துவம்

09/03/2023

என்ன சொல்வதென்றே தெரியவில்லை

என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்கிறேன்..
சும்மா சொல் என்கிறாய்..
அதுதான் என்ன சொல்வதென்று தெரியவில்லையே...

07/03/2023

மரணக் கைதியின் கடைசி நாட்களைப்போல்..

 


மரணக் கைதியின்
கடைசி நாட்களைப்போல்..

முடிவை எதிர்நோக்கும்
இறுதி மணித்துளிபோல்...

த(க)ரிசனத்திற்காய் ஏங்கும்
பக்தனின் நிமிடம்போல்...

பதிலுக்காய்க் காத்திருக்கும்
காதலனின் கணத்தைப்போல்....

ஒவ்வொரு நொடியும்
உணர்கிறேன் என்னவளே.....

கொடிது கொடிது
கனவிலும் கொடிது பிரிவு!

✍️செ. இராசா

ஆட்டுக்கால் பாயா

 


ஆட்டுக்கால் பாயாவ அம்மணி செஞ்சான்னா
பாட்டுக்கா பஞ்சமெனப் பாட்டுவரும்- கேட்டுக்க
நல்லி எலும்பெடுத்து நாவுக்குள் வச்சாலே...
சொல்ல முடியா சுகம் (சுவை)!

✍️செ‌. இராசா

வடக்கர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் கூடுகிறது...
ஆள்வோர் அக்கறை

06/03/2023

அடித்தண்ணீர் மேலெழும்ப


 

அடித்தண்ணீர் மேலெழும்ப
......அன்றொரு காகம்
முடிந்தவரை கல்போட்டு
.......முங்கிக்- குடித்ததுவாம்
அக்காகம் இன்றுவந்தால்
.......அப்படியா நீர்குடிக்கும்?!
தக்ககுழாய் போட்டுறிஞ்சும்
.......சாய்த்து!

✍️செ. இராசா

 


அரசுப் பள்ளியின் நிலைய நினைச்சுப் பாருங்க...
அதுக்கு காரணம் யாருனு நீங்க சொல்லுங்க..
வளர்ச்சி என்பது நல்ல கல்வி தானுங்க...
அந்தக் கல்விய தருகிற பள்ளி எங்கெங்க?

அரசு ஊழியர் சம்பளம் நினைச்சுப் பாருங்க
அவுங்க பிள்ளைங்க படிக்கிற இடத்தைக் கேளுங்க..
தரத்தக் கூட்டினா எதுக்கு தனியார் பள்ளிங்க..
வரத்தப் பெருக்குற சங்கத் தலைவர் எங்கெங்க?

தனியார் மயமா எல்லாம் போச்சு- அட
விடுய்யா நமக்கு என்ன ஆச்சு
இதுவா நமக்கு இப்போ பேச்சு- அட
கொடுய்யா உடனே ஃபாரின் ஸ்காட்சு

✍️செ. இராசா

05/03/2023

பாடல் 2 (போதை விழிப்புணர்வு) மெட்டு: ஓடுகிற வண்டி ஓட



பல்லவி
போதைமேல போதை யென்று
போதைக்காக கூடும் பார்ட்டி
கஞ்சா போட்டுக் கவுந்து கிடந்தா
நஞ்சாகும் இதுவா பியூட்டி.(2)

போதைமேல போதை யென்று
 

சரணம்_1
நம்ம தமிழ் நாட்டினையின்று
பா...ழாக்கும் எண்ணம்கொண்டு
எங்கிருந்தோ வந்த கூட்டம்
விசம் தூவப் பார்க்குதுங்க...

போதையில திருப்பி விட்டு
பாதையினை மாற்ற எண்ணி
செய்திடும் சூழ்ச்சிக் குள்ளே
வீழ்ந்திட வேண்டாம் கண்ணே..

புத்தி கெட்ட கூட்டம்போல
கெட்டுப் போக வேண்டாம்மா..
நல்லவழி கேளம்மா...
போதை வழி தீதம்மா...

#பல்லவி
போதைமேல போதை யென்று
போதைக்காக கூடும் பார்ட்டி
கஞ்சா போட்டுக் கவுந்து கிடந்தா
நஞ்சாகும் இதுவா பியூட்டி.

போதைமேல போதை யென்று
 

சரணம்_2
மீண்டிடவே எண்ணுகின்றார்
மெய்யாலுமே காலையிலே
ஆனாபாவம் முடியவில்லை
போதைதேடும் மாலையிலே...

பொல்லா வலி தருவதம்மா
கட்டாயம் வேண்டாம்மா
வீணாகப் போக வைக்கும்
விடியாதே வாழ்க்கையம்மா

வந்தேறும் கூட்டம் இன்று
வம்பாகப் பரப்பி விட்டு
பொருளீட்டும் ஆசையால்
பொய்யானதைப் பரப்புறான்
 

பல்லவி
போதைமேல போதை யென்று
போதைக்காக கூடும் பார்ட்டி
கஞ்சா போட்டுக் கவுந்து கிடந்தா
நஞ்சாகும் இதுவா பியூட்டி.(2)

போதைமேல போதை யென்று

பாடல்-1 (போதை விழிப்புணர்வு) மெட்டு: ஒயிட்லகான்




(நாட்டில் பெருகிவரும் ஒயிட் பவுடர், கஞ்சா, ஊசி போன்ற போதை வஸ்துக்களுக்கு எதிரான ஒரு விழிப்புணர்வு பாடல்)

#பல்லவி

ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது
அது ஃபாஸ்டு மோடில் சாவ நோக்கி ஓடுது
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது
அது ஃபாஸ்டு மோடில் சாவ நோக்கி ஓடுது
கஞ்சா வோட புகைய வலிக்க அலையுது
இங்கே போதை ஊசி கிடைக்குமான்னு ஏங்குது
ஹேய் இழுக்க இழுக்க ஜாலிடா
அதை இழுத்தபின்னே காலிடா
அட தொட்டா போச்சு வாழ்க்கைடா
விடா விட்டா வரும் சாவுடா ஹோய் ஹோய்

#துண்டுப்_பல்லவி
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது
அது ஃபாஸ்டு மோடில் சாவ நோக்கி ஓடுது

#சரணம்_1
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் பங்காளி எங்கடா ரொம்ப நாளாக் காணோம்
மச்சான் மச்சான் மச்சான் மச்சான் ஞானம்
உன் பங்காளி எங்கடா ரொம்ப நாளாக் காணோம்
காலேஜின்னு போனான்டா அப்புறமா காணலடா
ஊரு ஊரா பார்த்தோமுடா எங்கேயுமா இல்லையடா
பொய்யா சொல்லி ஐயோ
பொய்யா சொல்லி பசங்க இப்போ சுத்துது
கொஞ்சம் ஏமாந்துட்டா வாயில அத்த வக்கிது

#துண்டுப்பல்லவி
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது

#சரணம்_2
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அதை வலிக்க சொல்ல சொகமா தானே இருக்கு
சிட்டான் சிட்டான் சிட்டான் சிட்டான் ஜினுக்கு
அதை வலிக்க சொல்ல சொகமா தானே இருக்கு(ம்)
போதை உள்ள போச்சுதுனா சொந்த பந்தம் போகுமடா
பக்கத்துல சேக்காதுடா படுத்துடுவே சீக்குலடா
ஆயாகூட ங்கொய்யால
ஆயாகூட அடிச்சு விரட்டும் பார்த்துக்க
அப்புறம் நாயாக்கூட மதிக்க மாட்டான் புரிஞ்சுக்க...

#துண்டுப்பல்லவி
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது

#சரணம்_3
விட்டுடு விட்டுடு விட்டுடு விட்டுடு கேளு
அதை விட்டுட்டு வந்தினா நீயும் நல்ல ஆளு
விட்டுடு விட்டுடு விட்டுடு விட்டுடு கேளு
அதை விட்டுட்டு வந்தினா நீயும் நல்ல ஆளு
சுத்த மான வாழ்க்கையினா போதை இல்லா வாழ்க்கையடா..
புத்திகெட்டு போனோமுனா போயிடுவோம் சீக்கிரம்டா
வேணாம் விடு இதுகளெல்லாம் டேஞ்சரு
உன் உழைப்ப எல்லாம் அப்படியே உறிஞ்சுது

#பல்லவி
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது
அது ஃபாஸ்டு மோடில் சாவ நோக்கி ஓடுது
கஞ்சா வோட புகைய வலிக்க அலையுது
இங்கே போதை ஊசி கிடைக்குமான்னு ஏங்குது
ஹேய் இழுக்க இழுக்க ஜாலிடா
அதை இழுத்தபின்னே காலிடா
அட தொட்டா போச்சு வாழ்க்கைடா
விடா விட்டா வரும் சாவுடா ஹோய் ஹோய்

#துண்டுப்_பல்லவி
ஒயிட் மாவத் தேடிக் கூட்டம் திரியுது
அது ஃபாஸ்டு மோடில் சாவ நோக்கி ஓடுது

✍️செ.இராசா

03/03/2023

ஓட்டுநர்


 

#ஓட்டுநர்

இந்தப்பெயர் பெரும்பாலும்
தரைவாகன இயக்குநருக்கே பொருந்தும்
எனில் இயக்குநர் எனலாமே
ஏன் ஓட்டுநர்?!!

ஓட்டுவதால் அல்லது ஓடுவதால்
ஓட்டுநர் என்றிருக்கலாம்...

கப்பலை ஓட்டுபவர் மாலுமி
விமானத்தை ஓட்டுபவர் விமானி
எனில்...
எதுவும் ஓட்டுநரின்றி ஓடாதுதானே?!
ஏன் ஓடாது...?!
வலவன் இல்லா வானூர்தி பற்றி
புறநானூறு புகழ்கிறதே...!!

என்னதான் தானியங்கி என்றாலும்
எங்கேனும் இயக்குபவர் இருப்பார்தானே...?!
உண்மைதான்...

இந்த‌..‌
உடலென்னும் இயந்திரத்தை
உள்ளபடி ஓட்டாமல்
உள்ளப்படி ஓட்டினால்
ஜீவாத்மா என்னும் பயணி
பரமாத்மாவின் வீடு போய்ச் சேருமா?!

அஃதே
அரசென்னும் இயந்திரத்தை
அறப்படி ஓட்டாமல்
அழும்படி ஓட்டினால்
குடிமக்கள் என்னும் பயணிகளின்
குடிகாக்க முடியுமா?!

எனில்
இயக்குபவர் இல்லாமல்
இயங்குபவர் இல்லை அப்படித்தானே?!

அதிலென்ன சந்தேகம்?!

அன்று
பார்த்தனின் சாரதி
பாடம் நடத்தாமல் இருந்திருந்தால்
பாரதப்போரில் வெற்றி கிடைத்திருக்குமா?!

இன்று
சனநாயக சாரதி
பணம் வாங்காமல் இருந்திருந்தால்
அநியாய வெற்றி அரங்கேறி இருக்குமா?!

ஓ...

யாரோ சொன்னார்கள்..
குதிரை சூதாட்டாம் தடைசெய்யப்பட்டதாம்
பாவம்....
அப்பாவி ஓட்டுநர்போல‌‌....

✍️செ. இராசா