29/04/2020

ஏறிய பின்னாலும் ஏணியைப் போற்றுதலே
தேறிய உள்ளத்தின் சான்று

28/04/2020

#வஞ்சம்



வறுமையின் உச்சத்தில்
வெறுமையில் வாடுகையில்
பால்ய நண்பரிடம்
பசு மாடு வேண்டிவரப்
பதியினை நச்சரித்துப்
பாசமழைக் கொட்டியதில்
ஏழை அந்தணரும்
இப்படி எண்ணுகின்றார்;

பாஞ்சால மன்னனிடம்
பால் மாடு வேண்டுவதா?!
என்ன கொடுமையென்று
அந்நேரம் யோசித்து
நட்பின் காரணத்தால்
நாடியேச் செல்கின்றார்!

துருபத நண்பா; நான்
துரோணன் வந்துள்ளேன்
எப்படி இருக்கின்றாய்?!
செப்பிட வேண்டுகின்றேன்!

சுடுசொல் கேட்டதுபோல்
கடுமுக துரு-பதரும்
அகம்பாவ மனத்தோடு
"யார் நீ?" என்றிடவே
'ஆ' வேண்டி வந்தவரும்
'ஆ' வென்று அதிர்கின்றார்!

மன்னனாய் ஆனபின்னே
மண் பாதி என்றாயே
மன்னன் ஆனதினால்
மமகாரம் கொண்டாயோ?!

மண்ணா நான் கேட்டேன்?!
மண்ணள்ளிப் போட்டாயே
நண்பா கேட்டிடுவாய்
நாளை நடப்பதனை;

எந்தன் கல்வியினால்
உன்னை வென்றிடுவேன்!
மண்ணை வென்றிங்கே
மனிதம் காட்டிவிடுவேன்!

சொன்னதுபோல் அந்தணரும்
தன்திறன் காட்டிவிட்டு
பற்றிய வெற்றியைப்
பங்கிட்டுக் கொடுக்கின்றார்!

தோல்வியை ஏற்காத்
தோழனாம் துருபதனும்
பழிக்குப்பழி வாங்கும்
வழி ஒன்றைக் கண்டவனாய்
திருஷ்ட தியூமனென
திருமகனைப் பெறுகின்றார்!

கால ஓட்டத்தில்
காழ்ப்புணர்வு போனாலும்
பகையினை மறந்துவிட்டு
பழையவர்கள் சேர்ந்தாலும்
எண்ண விதைதூவி
எழுந்த விருட்சத்தால்
பாரதப் போரன்று
பாஞ்சாலர் வீழ்கின்றார்!

தந்தையின் நண்பரே
தந்தையைக் கொன்றதினால்
திருஷ்டனின் கையாலே
துரோணரும் வீழ்கின்றார்!

புறப்போர் முடிந்தாலும்
அகப்போர் முடிக்காத
துரோணரின் மைந்தனோ
திருஷ்டனைக் கொல்கின்றான்!

எதை எதை விதைத்தோரோ
அதைத்தானே அறுக்கின்றார்!
அதை எவர் அறிந்தாரோ
அவர்தானே உயர்கின்றார்!
ஆம்.....
அவர் 'தானே' உயர்கின்றார்!

✍️செ.இராசா

27/04/2020

கொரானா பேரால நடக்குதுங்க கொள்ளை

கொரானா பேரால
நடக்குதுங்க கொள்ளை- இங்க
நடக்குதுங்க கொள்ளை
ஆனாலும்
எங்களுக்கு வேற வழி இல்லை
ஆமாம் வேற வழி இல்லை
ஆமாம் வேற வழி இல்லை

மாசம் முழுக்க உழைச்சுப்பட்டு
மாடு மாறி உதைச்சுப்புட்டு
காசுக் கொடுக்கும் நேரத்தில
காசக் குறைச்சுக் கொடுக்கையில
என்னான்னு கேள்வி கேட்டால்
இன்னான்னு கேட்குறாங்க!
வேண்டான்னு சொன்னாக்க
வேண்டாமுன்னு சொல்லுறாங்க!

...(கொரானா பேரால)

வருசம் முழுக்க உழைச்சதில
வரவு கூடிப் பெருத்ததில
அள்ளி எதுவும் கொடுத்ததில்லை
கிள்ளிக் கூட தந்ததில்லை
இப்படிப் பட்ட நிலைமையில
எப்படி இப்படி செய்யுறாங்க?!
பாசுகிட்டபோயி நின்னால்
பீசப் புடுங்கி அனுப்புறாங்க!

...(கொரானா பேரால)

ஷூமில் கிளாஸ் நடத்தினாலும்
ஸகூலில் பீசு குறையவில்லை
காசக் கொட்டிக் கொடுத்தாலும்
ஸ்டாபுக்கவன் கொடுக்கவில்லை
போட்டுக் கொடுக்கச் சொன்னாக்க
போட்டுக் கொடுத்து விரட்டுறாங்க!
ஆடு போல ஆமான்னா
போடு போடுனு போடுறாங்க!

...(கொரானா பேரால)

✍️செ. இராசா

26/04/2020

அற்புதப் புன்னகை
மறைந்து போனது
கவசத்திற்குள்✍️

நீ என்ன செய்வாய் நாங்கள் கை கழுவினால்?!




சமயம் பார்த்து
சங்கைப் பிடிக்கிறாய்!

பயங் காட்டியே
சுயங் காட்டுகிறாய்!

இருப்பை உணர்த்த
இருப்பதைப் பறிக்கிறாய்!

ஆட்டம் காட்ட
ஆட்குறைப்பு செய்கிறாய்!

சந்தேகமே இல்லை- நீ
கார்ப்பரேட் கைக்கூலியே...

நீ என்ன செய்வாய்
நாங்கள் கை கழுவினால்?!

சொல் கொரோனா?!

✍️செ. இராசா
சமயம் பார்த்துக்
காரியம் செய்கிறது
கார்ப்பரேட் கொரானாக்கள்

23/04/2020

பாத்திரத்தின் நகர்வைப் பாத்திரமா அறியும்?!




அப்பப்பா....
எத்தனை அத்தியாயங்கள்?
எத்தனைப் பாத்திரங்கள்?
எத்தனை சுவாரஸ்யங்கள்?
எத்தனைத் திருப்பங்கள்?
ஆனால்..
இத்தனைக் கடந்த பின்னும்
இன்னும் பிடிபடவில்லையே...

எப்படிப் பிடிபடும்?!!
பாத்திரத்தின் நகர்வைப்
பாத்திரமா அறியும்?!

✍️செ.இராசா

"மனிதன் வதைக்கும்

குயில் கூவும்
மயில் அகவும்
காகம் கரையும்
.....
இப்படி ஆசிரியர் சொன்ன
அந்தக் கணமே
அங்கே இரு காகங்கள் கரைந்தன;
"மனிதன் வதைக்கும்" என்று


✍️செ. இராசா

21/04/2020

முகநூல்- குறள் அந்தாதி







#விருப்பு வெறுப்பான வெற்றுக் களம்போல்
இருந்தால் முகநூல் #எதற்கு?
(1)

#எதற்காக இப்படி ஏட்டிக்குப் போட்டி
அதனால் கெடாதா அகம்?
(2)

#அகநூலில் உள்ளதெல்லாம் அப்படியே சொல்வோர்
முகநூலில் உண்டா #முதல்?
(3)

#முதலில் கருத்திட்டு முன்னேற்றி விட்டோர்
எதனால் வரவில்லை #இன்று
(4)

#இன்றைக்கும் மாறாமல் இம்மென்றே உள்ளோர்கள்
என்றைக்கும் அப்படியே #இங்கு
(5)

#இங்கேயும் அங்கேயும் எங்கேயும் தாவாமல்
சிங்கமாய் நிற்போரைச் #சேர்
(6)

#சேர்கின்ற சேர்க்கை சிறப்பாய் இருந்திட
வேர்வரை ஆய்ந்தபின் #வேண்டு
(7)

#வேண்டி வருவோர்கள் வீண்வாதம் செய்தாலும்
வேண்டாம் வெறுப்பு #விருப்பு
(8)

✍️செ. இராசா

20/04/2020

குறள் அந்தாதிகள்



#நிரப்பிய பானைக்குள் நீரூற்றும் எண்ணம்
விரயமே வேண்டாம் #விடு
(1)

#விடுகின்ற தோட்டாபோல் விட்டவனின் எண்ணம்
சுடுகின்ற போதே #சுடும்
(2)

#சுடுபட்ட பூனைக்கு சூட்டினைப் பற்றி
எடுக்கின்ற பாடம் #எதற்கு?
(3)

#எதற்கும் எதிர்க்கிற எண்ணம் இருந்தால்
உதறும் ஒருநாள் #உறவு
(4)

#உறவைப் பெருக்க உவகைப் பெருக்கி
மறப்பதை எல்லாம் #மற
(5)

#மறவா நிகழ்வு மகிழ்வைக் கொடுத்தால்
நிறைய நினைவை #நிரப்பு
(6)

✍️செ.இராசா

குறிப்பு:

அந்தாதி என்றால் இறுதிச் சீரை முதல் சீராக்கித் துவங்குவது மட்டுமல்ல, இறுதிக் குறள் வெண்பாவின் இறுதிச்சீரும் முதல் வெண்பாவின் முதற்சீராக இருக்க வேண்டும்.

(இங்கே எம் குருநாதர் விக்டர் தாஸ் அண்ணா கற்றுக் கொடுத்ததையே நானும் அந்தாதிகளில் கடைப்பிடித்து வருகிறேன். நன்றி அண்ணா)

tagTag PhotopinAdd Locat

நான் ஓர் #சுத்த_பொறுக்கி




நான் ஓர் #சுத்த_பொறுக்கி; ஆம்
ஆழ்மனப் பதிவின்
சுத்தத் தருணங்களைப்
பொறுக்கித் தருவதால்!

நான் ஓர் #அற்பக்_கிறுக்கன்; ஆம்
அற்ப விடயத்திலும்
அற்புதம் கண்டால்
கிறுக்கித் தள்ளுவதால்!

நான் ஓர் #சமய_அடிபொடி; ஆம்
சமய மூடர்களை
அடிகளில் பொடிவைத்து
அடித்து விடுவதால்!

நான் ஓர் #அறிவு_வெங்காயம்: ஆம்
ஆத்திக ஏற்பையும்
நாத்திக மறுப்பையும்
பகுத்தறிவால் உரிப்பதால்!

நான் ஓர் #விளக்கெண்ணெய்; ஆம்
எதிர்மறை இருள் விலக்க
நேர்மறை விளக்கேற்றி
எண்ணெய் (என்னை) ஊற்றுவதால்!

நான் ஓர் #அகந்தைக்_கவிஞன்; ஆம்
அகம் தைத்த அறிவை
சகம் அறியவேண்டிக்
கவிதை'போல்' படைப்பதால்!

(சுயம்)

19/04/2020

நீயென் குறள்

கூறியதைக் கூறுவது குற்றமே ஆனாலும்
கூறிடுவேன் நீயென் குறள் (& குரல்)

✍️செரா

எது காதல்?.



மீசை அரும்பும்போது
ஆசை வெடிப்பது காதலா ?- இல்லை
ஆசை அடங்கையிலும்
ஆத்மாவை நனைப்பது காதலா?

எது காதல்?

கண்கள் திங்கும்போது
நெஞ்சம் துடிப்பது காதலா?- இல்லைத்
தூரமாய்த் துஞ்சினாலும்
தூறலாய்ப் பொழிவது காதலா?

எது காதல்?

இளமைத் தூண்டும் போது
வளமையால் வளைப்பது காதலா?- இல்லை
முதுமை அழைத்தாலும்
முதலாய் நினைப்பது காதலா?

எது காதல்?.

தவறாகப் புரிந்து கொண்ட
சரியான சொல்லா காதல்- இல்லை
சரிபோல் தெரிகின்ற
தவறான புரிதலா காதல்?

எது காதல்?

வார்த்தைக்குள் ஒளிந்துள்ள
நேர்மறைப் பொருளா காதல்- இல்லை
வார்த்தைக்குள் அடங்காத
ஓர்-மறை உணர்வா காதல்?

எது காதல்?

--செ.இராசா

17/04/2020

வாதம் எதிர்வாதம் மாற்றங்கள் தந்திடா
ஆதலால் ஆழ்மனதில் ஆய்

✍️செரா
கனிந்த மனத்தோடு கைத்தூக்கி விட்டால்
இனிதாய் வருமென் எழுத்து
✍️செரா

16/04/2020

மனமென்னும் கூடையில்

மனமென்னும் கூடையில் மல்லிகை போட்டால்
மனதெல்லாம் வீசும் மணம்போல்- தினமும்
உனதன்பின் பார்வை உரசும் பொழுதில்
எனதுள்ளம் பற்றுதே ஏன்?✍️

15/04/2020

இணையம்



எதிர்காலம் யாதென்று
நிகழ்காலம் சொல்கிறது
இணையம் மூலம்

✍️

(பள்ளிக் கூடங்கள் இணையத்தின் வழியாகத் தொடங்கியது. கட்டணம் அதே!!! நீங்க நடத்துங்க ஐயா)

14/04/2020

ஒன்னுமே புரியலே உலகத்திலே


ஒன்னுமே புரியலே உலகத்திலே
ஒன்னுமே புரியலே உலகத்திலே

மின்னலாய்ப் பரவுது கஷ்டமாய் இருக்குது
மின்னலாய்ப் பரவுது கஷ்டமாய் இருக்குது
ஒன்னுமே புரியலே உலகத்திலே

கையிலே தொட்டதும் குரங்காய்த் தாவுது
வாயிலே பட்டதும் வசதியாய்ப் போகுது (2)

சொன்னாலும் புரியல்லே என்னாகும் தெரியல்லே
சொன்னாலும் புரியல்லே என்னாகும் தெரியல்லே
நம்மைப் போலே நாதாரி எவனும் இல்லே

(ஒன்னுமே)

சைனாவில் வந்ததும் சட்டைநாம் செய்யலே
சைனாவில் வந்ததும் சட்டைநாம் செய்யலே

இத்தாலி வரையிலே எல்லோரும் தடுக்கலே
ட்ரம்பாலும் முடியலே என்னாகும் தெரியலே
ட்ரம்பாலும் முடியலே என்னாகும் தெரியலே
நம்மைப் போலே நாதாரி எவனும் இல்லே

✍️செ.இராசா

பாடலுக்கு

https://www.facebook.com/1529793087155445/posts/1871494149652002/?sfnsn=mo&d=n&vh=e

12/04/2020

நிஜத்தின் இருப்பை
அழுத்தமாய்ச் சொல்கிறது
நிழல்கள்
✍️செரா
அறியாத ஒன்றை அறிந்ததாய்ச் சொல்வோன்
அறிவுரை ஏற்பானா ஆய்

---செரா---

11/04/2020

துளிர்க்கும் காலத்திற்காய்
துடித்துக் கொண்டிருக்கிறது
எழுதாத கவிதைகள்

✍️செரா

#ஓஷோ_2



ஓஷோ தன் கதைகளின் வழியாக கருத்து சொல்லும் அழகு அவரின் அழகிய தனித்துவம். அப்படி அவர் ஒரு மரத்தையும் சிறுவனின் நட்பையும் வைத்து அவர் சொல்லும் அழகிய கதையையும் கருத்தையும் இங்கு பார்ப்போம்.

*பெரிய மரமும் ஒரு சிறுவனும் நட்பு கொள்கிறார்கள்.

1. ஆம் அன்பில் பெரியது சிறியது கிடையாது. அன்பிருந்தால் நட்பு சாத்தியமே.
2. பொதுவாக பெரியது எப்போதும் தன்முனைப்போடு (ஈகோ) இருக்கும். ஆனால், அன்பிருந்தால் இங்கே பெரியது சிறியது என்ற பாகுபாடு கிடையாது.
3. அன்பு எப்போதும் யாராக இருந்தாலும் அணைக்கவே செய்யும்.

* மரத்தின் கிளைகள் சிறுவன் விளையாடுவதற்காக வளைந்து கொடுக்கும். அவன் அதில் ஏறி சந்தோஷமாக விளையாடுவான். மரம் அவனை மகிழ்விப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தன் மலர்களையும் கனிகளையும் அவனுக்கு வழங்குவதில் ஆனந்தம் அடைகிறது. மரத்தின் அடியில் சிறுவன் தன்னை ராஜாபோல் உணர்கின்றான்.

4. அன்பு எப்போதும் வளைந்து கொடுக்கும். தன்முனைப்பு வளைந்து கொடுக்காது.
5. அன்பைப் பிறருக்கு கொடுக்கும்போது மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கிறது. தன்முனைப்போ பிறரிடமிருந்து வாங்கும் பொழுதே மகிழ்ச்சி கிடைக்கிறது,
6. அன்பு கொட்டிக் கிடக்குமிடத்தில் ஒருவன் ராஜாபோல் உணர்கின்றான். தன்முனைப்பு கொட்டிக் கிடக்குமிடத்தில் ஒருவன் ஒன்றுமில்லாதவனாக உணர்கின்றான்.

*பையன் இப்போது வளர்ந்து விட்டான். மரத்தின் கிளைகளில் ஏறி எல்லாக் கிளைகளையும் பற்றி ஆடுகிறான் பாடுகிறான். மரமும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.

7. தன்னால் மற்றவர்கள் பெரும் சுகம் கண்டு என்றும் அன்பானது மகிழ்ச்சி அடைகிறது. தன்முனைப்போ மற்றவர்கள் படும் துன்பம் கண்டே மகிழ்ச்சி அடைகிறது.

* சிறுவன் பெரியவனாக வளர்ந்துவிட்டான். முன்புபோல் மரத்தை நோக்கி வருவதில்லை. மரம் அவனையே நினைத்து கவலை அடைகிறது.

8. அன்பு மற்றவரிடம் பகிர முடியாதபொழுது கவலை கொள்கிறது. அன்பு மற்றவரிடம் பகிரப்படும்பொழுதே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

*பலநாள் கழித்து அவன் அவ்வழியாக வருவதுகண்டு மரம் அவனிடம் தன் ஏக்கத்தைக் கூறியது. "ஏன் நீ முன்புபோல் வருவதில்லை" என்று கேட்டது. "நான் ஏன் உன்னிடம் வரவேண்டும். உன்னிடம் என்ன இருக்கிறது? உன்னால் பணம் தரமுடியுமா?" என்றெல்லாம் பேசினான்.

9. அன்பிருந்தால் வேறெந்த எதிர்பார்ப்பும் இருக்காது. தன்முனைப்பு இருந்தால் எப்போதும் எதிர்பார்ப்பு மட்டுமே இருக்கும்

* மரமும் பதிலுரை கூறியது: "நான் நிழல் தந்தேன், தலையசைத்து விசிறி விட்டேன், மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்தேன். பணம் தானே வேண்டும். என் பழங்களை எடுத்துக்கொள். அதைப் பணமாக்கு" என்றது. அவனும் அனைத்து பழங்களையும் அள்ளிக்கொண்டு சென்றான். அவன் பணக்காரனாகிவிட்டான். பிறகு அவன் பல நாட்கள் வரவில்லை.

10. தன்முனைப்பு எப்போதும் வேண்டும் வேண்டும் என்றே கேட்கும்.

*பலநாள் கழித்து மீண்டும் அவ்வழியே வந்தவனிடம் அம்மரம் "வா நண்பா வா...என்னோடு பேசு..என்னை அணைத்துக்கொள்" என்றது. "நீ என்ன பைத்தியமா" என்றான் அந்த திடீர் பணக்காரன்.

11. அன்பு பார்ப்பதற்கு குழந்தைத் தனமாகவோ அல்லது பைத்தியக்காரத் தனமாகவோதான் தெரியும்.

*வாழ்வில் நொடித்துப்போய் மீண்டும் வந்தான். "என்ன நண்பா வேண்டும்" என்று மரம் கேட்டது. "வீடுகட்ட மரம் வேண்டும்" என்றான். "என் கிளைகளை வெட்டிக்கொள்" என்றது மரம். பிறகு பல நாள் கழித்து மீண்டும் வந்தான். நான் நொடித்துப் போனேன். பிழைப்பதற்கு படகிருந்தால் போதும் என்றான். அதற்கென்ன என் அடிப்பகுதி வரை வெட்டிக்கொள் என்றது மரம்

12. அன்பு எப்போதும் கொடுப்பதற்குத் தயாராகவே இருக்கிறது.
13. தன்முனைப்பு எங்கே ஆதாயம் உள்ளதோ அங்கேயே மீண்டும் மீண்டும் செல்கிறது. பிச்சைக்காரத்தனம்போல்...
14. அன்பு ஒரு பேரரசன், அன்பு ஒரு கொடையாளி, அன்பு ஒரு ஈகையாளி.

*எல்லாம் முடிந்து நொடித்துப்போய் தள்ளாடிப் போய் அவன் கிழவனாக வந்தான். "நண்பா வா...என் அடிமரம் மேல் அமர்ந்து கொள்" என்று மரம் அப்போதும் அன்போடு பேசியது.

15. ஆம் அன்பு கொடுப்பதில் இருக்கிறது. தன்முனைப்பு எடுப்பதிலேயே இருக்கிறது.

அன்பு செய்வோம்---அன்பு செய்வோம்--அன்பிற்காக அன்பு செய்வோம்

--இராசமாணிக்கம்--

"#சாவா_மூவாப்_பேராடு"



அணையா தீபமேற்ற
ஆசையுற்ற பெண் ஒருத்தி
ஆலயக் கணக்கரிடம்
அனுமதி வேண்டுகிறார்!

ஆண்டு முழுவதற்கும்
அவரும் கணக்கிட்டு
ஆழாக்கு நெய்யூற்ற
ஆகின்ற தொகையாக
முப்பத்தி இரண்டு காசை
முறையாகப் பெறும் போது
இராசராசச் சோழன் வந்து
ஒரு திட்டம் தீட்டுகின்றார்!

வந்த காசை வரவு வைத்து
அந்த நேரம் சென்றிருந்தால்
அதைப் பற்றி நாம் பேச
அவசியமும் இல்லையன்றோ?!

ஏழைகளின் வாழ்வினிலே
ஏற்றிடுவோம் தீபமென்று
எல்லோரையும் வரவழைத்து
இயம்புகின்றார் இப்படியே;

முப்பத்து இரண்டு காசை
மூலதனம் ஆக்குகிறேன்!
ஒரு காசில் மூன்று ஆடு
ஒருவருக்குத் தொண்ணூற்றியாறு
கடனாகத் தருகின்றோம்
கடமையாக நெய் தருவீர்!
ஆழாக்கு நெய் தந்து
ஆலயத்தில் ஒளி தருவீர்!

பெருக்கிடும் குட்டி தரும்
வருமானம் உங்களுக்கே!
கடமை முடிந்த பின்னே
கடனாடு எங்களுக்கே!
காசாகத் தந்தாலும்
கணக்காயர் ஏற்றிடுவார்!

நிபந்தனை ஒன்றேதான்
நினைவிலே ஏற்றிடுவீர்!
பெறுவது போல் தரவேண்டும்!
பிழையின்றி நடக்க வேண்டும்!
மூப்பில்லா ஆடுகளாய்
முறையாகத் தந்தால் தான்
சாகாது இத்திட்டம்
சாதிக்கும் நம் திட்டம்!

பேர் சொல்லும் திட்டத்தின்
பெயரிதுவே கேட்டிடுவீர்
"#சாவா_மூவாப்_பேராடு"
சாதித்தால் எமை நாடு!

ஆலயத்தின் விளக்கொளியில்
ஆயர் வீட்டை மிளிர வைத்த
ஆட்சியாளர் ஆண்டதுபோல்
ஆகிடுமா நம் நாடு?

ஆன்றோரே விளக்கிடுவீர்!

✍️செ.இராசா

10/04/2020

உம்காதில் கேட்கவில்லையோ-



ஊரெங்கும் உலகெங்கும் ஒலிக்கின்ற ஓலங்கள்
உம்காதில் கேட்கவில்லையோ- இறைவா
உம்காதில் கேட்கவில்லையோ?
பாரெங்கும் ஊடுருவிப் பலபேரை மாய்த்தாலும்
பாரம்தான் குறையவில்லையோ- புவியின்
பாரம்தான் குறையவில்லையோ?

காலங்கள் நேரங்கள் கண்ணீரில் சென்றாலும்
காட்சிகளில் மாற்றமில்லையோ? - இந்தக்
காட்சிகளில் மாற்றமில்லையோ?
ஞாலத்தின் சாபங்கள் ஞாயிறுபோல் சுட்டாலும்
ஞானத்தில் ஏறவில்லையோ?- எங்கள்
ஞானத்தில் ஏறவில்லையோ?

அப்பப்பா அப்பப்பா ஆட்டங்கள் போதும்பா
அப்பாநீ ஓடிவாப்பா- எங்கள்
அப்பாநீ ஓடிவாப்பா!
தப்பப்பா தப்பப்பா தப்புகளாய்ச் செய்தோம்பா
தண்டனைகள் போதுமப்பா- எமக்குத்
தண்டனைகள் போதுமப்பா!

✍️ செ. இராசா

#ஓஷோ-1




கல்லூரி முடிந்த காலகட்டத்தில் முதன்முதலில் மதகுபட்டி நூலகம் தான் எனக்கு ஓஷோவை அறிமுகப்படுத்தி வைத்தது. பகவத் கீதையின் ஒரு அத்தியாயத்திற்கு அவர் எழுதிய தலையணை அளவுப் புத்தகம். அதுதான் நான் முதன்முதலில் வாசித்தது. தொடர்ந்து இடைவிடாமல் படித்த முதல் அனுபவம், நான் என்ற உணர்வு கரைவதுபோல் இருந்தது. அவருடைய பல புத்தகங்கள் அப்படி இருந்தாலும், அவற்றில் சில நம்மோடு ஒட்டவே ஒட்டாது. காரணம் அவை அனைத்தும் மொழிபெயர்ப்புப் புத்தகங்களே. மேலும், அவர் புத்தகங்கள் எல்லாம் பேசிய சொற்பொழிவுகளின் எழுத்து வடிவங்களே.

வாழ்க்கையின் இரகசியம் பற்றிய ஒரு கதையில் வரும் புகழ்பெற்ற வாசகமான "இந்த நிலையும் மாறிவிடும்" என்ற வரிகளை என்னால் மறக்கவே முடியாது. இந்த வரிகளை என் தம்பியின் அலுவலகத்தில் ஒட்டி இருந்தேன். இவ்வரிகள் படிப்பவரின் மன நிலைகளைப் பொறுத்து அர்த்தம் தரும். பிற்காலத்தில் ஒரு கடையின் முகப்பிலேயே பெரிய அளவில் இதே வரிகளை எழுதி இருந்தார்கள்.

ஒருமுறை இவரின் திருச்சி ஆஸ்ரமத்திற்குச் சென்றுவர துவாக்குடி வரை ஆவலுடன் சென்ற நான். ஏனோ உள்ளே போகாமல் திரும்பி வந்துவிட்டேன். அது தனிக்கதை.

அரசியல் வாதிகள் முதல் ஆன்மீகத் தலைவர்கள் வரை பலரும் ஓசோவின் கதைகளையேச் சொல்வதாக சுகி சிவம் சொல்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, சினிமாத் துறையினரும் யூடியூப் காணொளி செய்பவர்களும் கூட அவரின் கதைகளையேச் சுடுகிறார்கள். ஆம், சமீபத்தில் அவரின் புகழ்பெற்ற அல்லது மற்றவர்கள் அவரின் புகழைக் கெடுக்க முனைந்த "From Sex to Super consciousness" (காமத்திலிருந்து கடவுளுக்கு) என்ற புத்தகம் படித்தேன்.

அதில் வரும் முதல் கதை ரஜினியும் செந்திலும் ஒரு படத்தில் "மாப்பிளை அவர்தான் அவர் போட்டுள்ள கோட் என்னது" என்று லூட்டி அடிப்பார்கள் அல்லவா?! அந்தக் காட்சி இருந்தது. இரண்டாம் கதை "இங்கு நல்ல மீன்கள் கிடைக்கும்" என்று பார்த்திபன் வடிவேலு இருவரும் ஒருபடத்தில் செய்யும் காட்சி இருந்தது.மூன்றாம் கதை ஒரு மரத்தையும் சிறுவனையும் வைத்து அன்பைப் போதிக்கும் ஒரு அருமையான கதை (அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்). என்னை மிகவும் கவர்ந்த கதை. அப்படியே குறிப்பெடுத்து என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். என் மகளும் மகனும் என் அருகில் வந்து இதெல்லாம் ஏற்கனவே யூடியூபில் வந்ததாகச் சொல்லி எனக்கும் காண்பித்தார்கள். ஆனால் கதையின் நீதியை மாற்றிவிட்டார்கள். அது கிடக்கட்டும், இங்கே எல்லாமே சுடப்பட்டதுதானா?

அந்த புத்தகம் மட்டுமல்ல, அவரின் அனைத்து நூல்களும் அறிவைத் திறக்கும் அதி அற்புதப் பொக்கிஷங்களே. மொழி பெயர்ப்பு சரியாக இருந்தால் நம்மைப் புரட்டிப்போடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

---இராசமாணிக்கம்--- தொடரும்

09/04/2020

சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

அகலக் குழி வெட்டி
அதிலாற்று மணல் கொட்டி
கருங்கல்லை மேலடுக்கி
பெருந்தச்சன் கட்டியதன்
சரியான தொழில்நுட்பம் வேண்டும்- வந்தால்
சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

நீரலையில் நிற்குங்கால்
நிலத்தடியில் போவதினை
நினைவலையில் கொண்டதினால்
அணைபோடத் திட்டமிட்டக்
கரிகாலன் மதிநுட்பம் வேண்டும்- வந்தால்
சரியாமல் தலைநிமிர்வோம் மீண்டும்!

உணவே மருந்தென்று
உலகெலாம் பறைசாற்றி
சித்த மருத்துவத்தில்
வித்தகங்கள் செய்துதரும்
தமிழ்ஞானப் பொதுமருந்து வேண்டும்- வந்தால்
தனியாகத் தலைநிமிர்வோம் மீண்டும்!

✍️செ. இராசா

06/04/2020

நெகிழியே


நேற்றுவரை உன்னை வெறுத்தோம்
நேற்றுவரை உன்னை சபித்தோம்
ஆனால் இன்றோ..
நீயே எம் கைகொடுக்கும் கர்ணனானாய்!
நீயே எம் உடல் காக்கும் கவசமானாய்!
சொல்..நெகிழியே
நீ நல்லவனா?!! கெட்டவனா?!

✍️செ. இராசா

05/04/2020

கொரானாக் குறள் அந்தாதி-2



நேர்மறை யாளராய் நேர்வதைக் காண்பவர்
வார்த்தையும் நேராய் வரும்

வருகிற துன்பம் வராமல் இருக்க
விருப்புடன் செய்வோம் வினை

வினையின் பலனை விதைத்தோன் அறுப்பான்
நினைவில் இதனை நிறுத்து

நிறுத்தம் கொடுத்து நிதானம் அடைந்தால்
உறுதியாய் வெல்லும் உலகு

உலகை மிரட்டும் ஒருவகை வைரஸ்
விலகுமா எங்கே விளக்கு

விளங்கா திருந்தால் விளக்கம் கிடைக்கும்
விலங்கா யிருந்தால் விலகு

விலகிட எண்ணி விளக்கினை ஏற்றப்
பலரும் நினைந்தால் பயன்

பயனைப் பொறுத்தேப் பழகும் சிலர்க்கு
நயமாய் உரைத்தல் நலம்

நலமுடன் செய்தும் நடப்பவை ஊழின்
நியதியால் நேருக்கு நேர்

✍️செ. இராசா

04/04/2020

மெட்டு: நீராரும் கடலுடுத்த


வேரோடு களைந்திடவே விருப்பமுடன் முடிவெடுப்போம்
பாரோடு பயங்காட்டிப் படுத்துமந்தப் பாவியினை
இக்கணமே விரட்டிடவே எடுக்கின்ற நல்முடிவால்
மக்களெல்லாம் மனமகிழும் தருணங்களும் திரும்பிடுமே
அத்தருண வாழ்வினைப்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் ஒளிபரப்ப இணக்கமுற இணைந்திடுவோம்!
இணைந்திடுவோம்!!

நம் சீர் மிகுந்த நலம் நினைந்து மனம் விரிந்து
வாழ்த்திடுவோம்!
வாழ்த்திடுவோம்!!
வாழ்த்திடுவோம்!!!

✍️செ. இராசா
பாடலாகக் கேட்க இங்கே


https://www.facebook.com/1529793087155445/posts/1861046514030099/?vh=e&d=n

02/04/2020

#கவியில்_கம்பனின் காவியம் போலே

மெட்டுக்காக எழுதிய ஒரு பாடல்
********************************
#கவியில்_கம்பனின் காவியம் போலே
#புவியில்_செழியனின் ஓவியம்போலே
காணும் உலகம் எல்லாம் நீதானே!
இசையில் அழகிய சிம்பொனி போலே
மனதில் கொட்டிடும் பேரிகை போலே
கேட்கும் யாவும் உந்தன் பேர்தானே!

முந்நாள் நான் கண்டதுமில்லை
இந்நாள் நிலை வந்ததுமில்லை
உடலின் செல்கள் தீயாய் எரிகிறதே!
கோவில் நான் சென்றதுமில்லை
தெய்வம் எனைத் தீண்டவுமில்லை
என்னுயிர் முழுதும் தீபம் ஒளிர்கிறதே!

உன்போல் தமிழ் இனிக்கிறதே
அன்பாய் எனை அழைக்கிறதே
உன்னைக் கவிக்கச் சொல்லிக் கதைக்கிறதோ?
ஆகாயம் உயரம்தான் ஆனாலென் அருகில்தான்
ஏற்பாய் அன்பே எந்தன் கவிதை நீ!
உடை போட்ட நிலாவாய்க் கனவில்
அணைத்தாயென் உயிரே அருகில்
மனதாலே மகிழும் தருணங்கள்!

மழையாய்ப் பெய்திடுவோம்
நதியாய் நாம் தழுவிடுவோம்
ஆத்மாவின் வேர்வரை நனைந்திடுவோம்!
கண்போடும் உறவெல்லாம்
தன்னால் தினம் ஏதேதோ
கதைகட்டும் வழியை அடைத்திடுவோம்’
கரங்கள் நான்கும் தழுவ
மணமேளங்கள் நாயணமுழங்க
அதுபோதும் எதுவும் தேவையில்லை!

✍️செ. இராசா