31/01/2020

எனக்கும் வந்தது நரை

எனக்கும் வந்தது நரை- என்
மனதில் சொல்லுது உரை- அது
காலம் அடிக்கிற பறை- அதை
ஞாலம் உணர்வது முறை!!!

ஆடியோடி ஆடியோடி



ஆடியோடி ஆடியோடி
........அடங்கிவிட்டாயோ?!
........அடங்கிவிட்டாயோ?!
தேடித்தேடி தேடிநீயும்
............தெளிந்துவிட்டாயோ?!
............தெளிந்துவிட்டாயோ?!

மாடிமேல மாடிகட்டி
............தூக்கமில்லையோ?!
............தூக்கமில்லையோ?!
கோடிமேல கோடிகூட்டி
............யாருமில்லையோ?!
............யாருமில்லையோ?!

வாடிவாடி வாடிவாடி
.............வருத்தமெதுக்கினி
.............வருத்தமெதுக்கினி
ஓடியோடி நீயும்வாடி
.............இருக்கேன்நான்இனி
.............இருக்கேன்நான்இனி

✍️செ. இராசா

tagTag Photopin

30/01/2020

புத்தக விமர்சனம்

(புத்தக விமர்சனம் Dr. Elanchezian Sav ஐயா அவர்களுக்கு)

ஐயா வணக்கம்,

நான் இந்தப் புத்தகத்தைத் தமிழில் படித்துவிட்டு அதையேதான் தாங்கள் ஆங்கிலத்திலும் வெளியிட்டுளீர்கள் என்று இந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை. இன்றைக்குதான் மீண்டும் படிக்கலாம் என்று படித்தேன்.
நான் நினைத்ததுபோல் இப்புத்தகம் கடினமாக இல்லை. காரணம் இந்தப் புத்தகத்தில் உள்ள ஆங்கிலம் எனக்கேப் புரிந்தது மட்டுமல்லாது மிகவும் அருமையாகவும் இருந்தது.

அந்த யானை மற்றும் சிலந்தி கதை இப்போது தான் நானும் படித்து அறிந்து கொண்டேன். கும்பகோணம் அருகில் உள்ளச் சின்னக் கோவிலில் தாங்கள் நடத்திய ஆய்வு மிகவும் அருமையான ஒன்று. எட்டுக்கால் சிலந்தி பற்றி சொல்லும்போது முக்குணங்களை ஆராய்ந்து அதைத் தமிழிலும் சொன்ன விதம் அருமை.

அடுத்ததுத் தாங்கள் கொடுத்தக் கட்டுரையின் தலைப்பு (negative spaces) மிகவும் வித்தியாசமாக இருந்தது. இடம் விட்டுக் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய ஆய்வு அது. பொதுவாக குறுகிய தெருவில் கட்டப்படும் எத்தனையோ கட்டிடங்கள் ஏன் அழகில்லாமல் போகின்றன என்பதை நான் கட்டிடவியல் பொறியாளர் என்ற முறையில் அறிவேன். ஆக இடம் விட்டுக் கட்டப்படும் கோவில் பற்றி சொன்ன அந்த கோணம் அழகோ அழகு.

அடுத்துத் தாங்கள் சொன்ன கள்ளழகர் கோவில் பற்றிய கட்டுரை உண்மையில் என் கண்களைத் திறந்தது. ஒரு கட்டிடத்தை கட்டிடக்கலைச் சிற்பத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று காட்டியது. அந்தமண்டபத்துச் சிற்பங்களை ஆராய்ந்து ஒவ்வொன்றாய் விளக்கியபோது அந்த படைப்பாளி இன்னும் வாழ்வதாகவே உணர்கின்றேன்.

பொதுவாக அனைத்துப் புத்தகங்களிலும் வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப் படும். ஆனால் தங்களின் ஆங்கிலப் புத்தகத்தில் தமிழ்ப் பெயர்கள் பயன்படுத்தியதை நான் மிகவும் பாராட்ட விரும்புகிறேன். ஒரு தமிழ் ஆர்வலர், கவிஞனாகவும் வரலாற்று ஆய்வாளராகவும் இருந்தால் எப்படி ஒரு புத்தகம் வெளி வரும் என்பதை நன்றாக உணர்கின்றேன்.

தமிழ் பெரிது பெரிது என்று நாமாகச் சொல்லுவது இனியும் பயன் தராது. இப்படி அனைவருக்கும் எடுத்துச் செல்வதே சரியாக இருக்கும். இப்புத்தகத்தில் குறை இல்லையென்று சொல்ல மாட்டேன், காரணம் கட்டிடவியல் அல்லாதவர்களுக்கு இப்புத்தகம் சற்றே சலிப்புத்தட்டும் வாய்ப்பும் உள்ளது. காரணம், நிறைய தொழில் நுட்ப விஷயங்களும் உள்ளது.மேலும் புகைப்படங்கள் தனியாகத் தரப்பட்டுள்ளது சற்றே அசௌகரியமாத் தோன்றலாம். ஆயினும் படங்களை மட்டும்கூடத் தனியாக ரசிக்கலாம்.

மேலும், தங்களைப் பற்றிய என்னுரை மிகவும் வியப்பாக இருந்தது. குறிப்பாக தாங்கள் சென்னையின் மழை வெள்ளத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கையை சூனியத்தில் இருந்து தொடங்கியது பற்றிய விபரம் உண்மையில் பிரமிப்பாக இருந்தது.

பொதுவாக நான் ஆங்கிலப் புத்தகம் அதிகமாகப் படிப்பவனல்ல. ராபின் சர்மா புத்தகம் மட்டும் விரும்பிப் படிப்பேன். ஆனால், தங்களின் புத்தகத்தை விடாமல் ஒரே மூச்சில் படித்தேன். மிகவும் எளிய பாமர நடை. காரணம் எனக்கேப் புரிகிறது. தங்களின் புத்தகம் உண்மையில் தமிழை தமிழனை உலகறியச் செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற படைப்புகளை மேலும் மேலும் தர அன்போடு வேண்டுகிறேன்.

வாழ்த்துகள்...நன்றி நன்றி

கொரோனாக் கிருமியாய்க்===#குறள்_அந்தாதி


#குறள்_அந்தாதி

#ஆண்:

கொரோனாக் கிருமியாய்க் கொல்கின்ற பெண்ணே
உரோமமா எந்தன் உசுரு?!

#பெண்:

உசுரென எண்ணித்தான் ஒட்டினேன் உன்னை
பொசுக்கெனச் சொன்னாயே போ!!

#ஆண்

போய்விடச் சொன்னாயே போக்கிடம் சொல்பெண்ணே
நாய்போல் அலையவா நான்

#பெண்:

நானென்றும் சொல்லலையே நாராச வார்த்தையினை
ஏனென்னைச் சீண்டுகிறாய் இன்று

#ஆண்

இன்றோடு கைப்பிடித்(து) தெத்தனைநாள் ஆனதடி
இன்றைக்கும் சண்டையெனில் ஏன்?

#பெண்:

ஏனென்றாக் கேட்கின்றாய் என்னிடம் இக்கேள்வி
தேனென்று போனாயோ? சீ!

#ஆண்

சீயென்று சொல்லியெனைச் சீண்டுகிறாய் நீயென்னைத்
தீயென்று காட்டுவதேத் தீர்வு!

#பெண்:

தீர்வில்லாக் காவிரிபோல் தேராத நின்பேச்சை
யார்வந்து கேட்பாரோ இங்கு?

#ஆண்

இங்கொன்றும் அங்கொன்றும் என்றைக்கும் போகாதத்
தங்கத்தைத் தீதுரைத்தல் தப்பு!

#பெண்:

தப்பென்றால் தப்பென்பேன் தப்படித்தல் தீதென்பேன்
எப்போதும் நீதான் எனக்கு!

✍️செ. இராசா

இருள்


எங்கே இருளில்லை?!

கொதிக்கும் சூரியனின்
கொப்பளிக்கும் மையத்தில்
நேரெதிர் மோதுகின்ற
நெருப்புக் கோடாய்;
ரௌத்திரம் காட்டுகின்ற
ராத்திரிக் காடாய்;
ராகுவாய்; கேதுவாய்;
இருப்பது இருள்தானே?!

ஒளிவாங்கி உமிழ்கின்ற
சோலார் நுட்பத்தை
ஊருக்கேப் பறைசாற்றும்
ஒய்யாரப் பிரதிநிதியாய்;
எல்லாக் கவிஞருக்கும்
எப்போதும் உவமதியாய்;
நிலவின் பின்னாலே
இருப்பதும் இருள்தானே?

கருவறை வரும்போதும்
கல்லறை புகும்போதும்;
இருளறை அதுவென்றா
விளக்கறை கேட்கின்றோம்!
விளக்கம் இருக்குமெனில்
விளக்கிடுவீர் பெரியோரே..

சுத்தவெளி சூனியமாய்
சுற்றியுள்ள அத்தனையும்;
இருட்டைத் தன்னகத்தே
இருப்பாய் வைக்கையிலே;
இருட்டென்றால் பயமெதற்கு
இயம்பிடுவீர் பெரியோரே..

இருட்டிலும் கண் தெரியும்
குருட்டில்லா ஆந்தையைப்போல்
குருட்டிலும் கண் தெரியும்
இருட்டில்லா விந்தைபெற
இருளகம் போய்விட்டால்
இருளும் ஒளியன்றோ?!!

✍️செ. இராசா

29/01/2020

மைதா



மைதா அழிவென்று மன்றாடிச் சொன்னாலும்
மைதாப் பலகார மாயத்தில்- கைதாகி
சைத்தான் புரோட்டாவை சால்னாவில் ஊறவிட்டு
வைத்தாயே வாயிலே மண்!

28/01/2020

எனக்கு நீ அப்படியா?



சிலருக்கு நீ என்றால் ஆகாதாம்!
சிலருக்கு நீ என்றால் பயமாம்!
ஆனால் எனக்கு நீ அப்படியா?!

உன்னில் தொடங்கும்
ஒவ்வோரு முறையும்
என்னையே காண்கிறேன்!

உன்னில் தொடரும்
ஒவ்வோரு முறையும்
என்னையே இழக்கிறேன்!

உன்னோடு இருக்கையில்தான்
என் உருவம் பார்க்கிறேன்!

உன்னோடு கலக்கையில்தான்
என் உயரம் அளக்கிறேன்!

நீ என் முதல்நாளிலும் இருந்தாய்!
நீ என் இறுதிநாளிலும் இருப்பாய்!
பின்னர் ஏன் இடையிடையே மட்டும்
இல்லாமல் போகிறாய்?!

நீ இன்றி நானில்லை....இங்கே
நீ இன்றி யாருமில்லை...

இருந்தும்...
நீ என்றால் ஆகாதாம்!
நீ என்றால் பயமாம்!
ஆனால் எனக்கு நீ அப்படியா?!
சொல்...தனிமையே....
எனக்கு நீ அப்படியா?!

#இனிது_இனிது_ஏகாந்தம்_இனி
து

✍️செ. இராசா

27/01/2020

இதுவாக் கவிதை?

இதுவாக் கவிதை? என்பதற்கும்
இதுவும் கவிதை என்பதற்கும்
இதுவே கவிதை! என்பதற்கும்
இடையில் எத்தனை வித்தியாசங்கள்?

26/01/2020

பனி போர்த்திய பகலாய் நீ




பனி போர்த்திய
பகலாய் நீ!
.............இருள் போர்த்திய
.............இரவாய் நான்!

கலை ஊற்றிய
சிலையாய் நீ!
............பிழை ஊற்றிய
............மலையாய் நான்!

நிஜம் உடுத்திய
நிழலாய் நீ!
.............நிழல் உடுத்திய
.............நிஜமாய் நான்!

அதிகாரமுள்ள
வடக்காய் நீ!
............அதி-காரமுள்ள
............தெற்காய் நான்!

மரபு மீறாப்
புதுக்கவி நீ!
............புதுமை குறையா
............மரபுக்கவி நான்!

ஆம்...

...எப்போதும்
............முரணாய் நீ!
......................❤️💜
.............அப்போதும்
......அரணாய் நான்!

✍️செ. இராசா.

காத்திருத்தல் இன்பம்


தூவிய விதையெல்லாம்
துளிர்த்திடுமா என்ன?!
ஏவிய அம்(ன்)பெல்லாம்
எய்திடுமா என்ன?!

நேசித்த உறவெல்லாம்
நினைந்திடுமா என்ன?!
வாசித்த கவியெல்லாம்
வாழ்ந்திடுமா என்ன?!

விடுத்த வினையெல்லாம்
விட்டிடுமா என்ன?!
கொடுத்த கடனெல்லாம்
கிட்டிடுமா என்ன?!

இருந்தும் காத்திருப்போம்
நம்பிக்கை நாணயமாய்..

✍️செ. இராசா

25/01/2020

அரூபரூப லிங்கரூப




#அரூபரூப_லிங்கரூப_சோதிரூபன!
சொரூபரூப சித்தரூப மாயரூபனே!
வானரூப மேகரூப மாரிரூபனே!
கானரூப தாளரூப ராகரூபனே!

ஆதிமூலனே சோதிரூபனே
..................ஆவுடை நாயகா!
நீதிதேவனே வேதஞானனே
...................நீருடை மன்னவா!
ஆத்மநாதராய் எம்முள்நிற்கிற
..................அற்புத நாயகா!
ஆற்றலாகியே எம்மையாள்கிற
..................அர்த்தநா ரீசுவரா!
சுத்தபுத்தியை சித்தனாக்கிடும்
..................சூட்சமம் சொல்லவா!
செத்தபுத்தியில் வித்தைகாட்டிடும்
..................சூத்திரம் காட்டவா!

......................(அரூபரூப...)

சங்கநாதமாய் சண்டைமேளமாய்
.................சப்தமாய்ப் பேசவா!
மங்கைநேசமாய் மந்தகாசமாய்
.................மௌனமாய்க் கொஞ்சவா!
அங்குமிங்குமாய் இங்குமங்குமாய்
..................ஆடிடும் ஈஸ்வரா!
அங்கமெங்குமாய் தங்கமின்னலாய்
..................ஆனயென் நாயகா!
சிங்கநெஞ்சமாய் சிந்தைவெள்ளமாய்
..................சீறிடும் என்னவா!
கங்கையுள்ளமாய் அன்பின்வெள்ளமாய்
.................காத்திடு(ம்) மன்னவா!

......................(அரூபரூப...)

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

ஓம் நமச்சிவாய!

✍️செ. இராசா

தத்தகிட தத்தகிட தத்தகிட தத்தோம்
தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தகடதோம்
தகதகிட தகதகிட தகதகிட தகடதோம்

ஊனுருக உயிருருக
.......உன்நாமம் சொல்வோம்!
உலகவுயிர் அத்தனையும்
........உன்னுருவைக் காண்போம்!
சந்தநடை வந்துவிழ
.........செந்தமிழைப் பயில்வோம்!
சொந்தநடை வந்தவுடன்
.........துள்ளியுனைத் தொழுவோம்!

24/01/2020

என்திறன் பாடுகின்றாய்..



கைக்கூ எழுதினேன்
கற்பனை இல்லையென்றாய்!

புதுக்கவிதை எழுதினேன்
பொய்யுரை என்றுரைத்தாய்!

பாடல் எழுதினேன்
பாத்திறம் வேண்டுமென்றாய்!

வெண்பா எழுதினேன்
வேண்டாத வேலையென்றாய்!

என்னதான் வேண்டுமென்றேன்?!
என்திறன் பாடுகின்றாய்..

✍️செ. இராசா
பெற்றோர்களின் தவம்
பிள்ளைகளுக்குக் கிடைக்கிறது
அமைதி

அந்த உருண்டை மலை ஓரத்தில....பாடல் மெட்டு


இந்த அரபிக் காரன் நாட்டுக்குள்ள
அரபிக் காரன் நாட்டுக்குள்ள
அரபிக் காரன் நாட்டுக்குள்ள
குப்பை கொட்ட வந்திருந்தேன்
அந்த குப்பை கூட்டி அள்ளு முன்னே
அந்த குப்பை கூட்டி அள்ளு முன்னே
இந்த சம்சார ஆசையிலே இன்னைக்கு
குடும்பம் குட்டிதான் ஆனதென்ன

ஏ..ஆத்தாடி ஆத்தாடி
என்னன்னு சொல்லிடுவேன்
என்னன்னு சொல்லிடுவேன்
என்னன்னு சொல்லிடுவேன்
நான்..நல்லா உழைச்சி
அங்கெங்கே குப்பைகொட்டி
அங்கெங்கே குப்பைகொட்டி
அங்கெங்கே குப்பைகொட்டி

நான் சேர்த்தது நாலு காசு
செஞ்சது ஒத்த வீடு
ஐயா நான் சேர்த்தது நாலு காசு
செஞ்சது ஒத்த வீடு
அந்த வீடு கட்டுமுன்னே
எனக்கு ஒரு பொண்ணைத்தேடி
எங்க அப்பா கட்டிவைக்க
அந்தப் பொண்ணக் கூட்டி வந்து
நானும் இங்க குப்பை கொட்ட
அந்தப் பொண்ணு என்னை
அத்தான்னு
சொல்லையிலே சொல்லையிலே சொல்லையிலே

நெஞ்சு தேனாய்க் குளிருமுங்க
ஆமா நெஞ்சு தேனா
தேனா...க்குளிருமுங்க
என்நெஞ்சில் ஆசைப் பொங்குமுங்க
நெஞ்சு தேனாக் குளிருமுங்க
என்நெஞ்சில் ஆசைப்பொங்குமுங்க....

✍️செ. இராசா

22/01/2020

நல்லோர் நட்பு


#ஒருவிகற்ப_நேரிசை_வெண்பா

இல்லாரோ உள்ளாரோ
.......என்றெல்லாம் எண்ணாமல்
கல்லாரோ கற்றாரோ
..........காண்கின்ற- எல்லோரில்
நல்லோராய் உள்ளோரை
...........நண்பராய்ப் பெற்றோரே
எல்லாமும் பெற்றவர் இங்கு!...
:
:
................................................
:
#தொடர்ந்து_3_குறள்_வெண்பாக்கள்
#அந்தாதியாக (முடிவில் தொடங்கும்)
:
:
இங்குள்ள நல்லோரை
............இப்போதே காணாமல்
எங்கேநீ காண்பாய் இயம்பு?!....
:
................................................
:
இயம்பிடும் முன்னரே
............இன்முகம் காட்டி
நயமாய்ப் பழகிடும் நட்பு!..........
:
...............................................
:
நட்பியல் கூறிடும்
............நல்லோர் உறவினைப்
பட்டென சீக்கிரம் பற்று!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_100
#போட்டிக்காக_எழுதாமல்_நிர்வாகியாக_எழுதியது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#இரண்டாம்_படைப்பு
********************
ரத்த உறவுகளில்
............இல்லாத ஒன்று
ஒத்த உணர்வாலே
.............உருவாகும் நட்பு!

வர்ணம் பாராத
............அன்பானோர் நட்பு!
கர்ணன் போலான
.............ஆன்றோரின் நட்பு!

ஒன்றும் எதிர்பாரா
..............நல்லோரின் நட்பு
என்றும் இருந்தாலே
............அதுதானே சிறப்பு!

நினைவில் வைத்து
.......கனவில் காண்பதல்ல நட்பு?
மனதில் புதைத்து
......மரணம்வரை தொடர்வதே நட்பு!

உடலோடு உறைகின்ற உயிர்போலே
உணர்வோடு ஒன்றானோர் நட்பாலே
உடமைகள் கைவிட்டுப் போனாலும்
உண்மையில் இழந்ததாய் ஆகாதே!

கோடிகளில் செல்வங்கள் சேர்த்தாலும்
கோட்டையில் கோலாச்சி இருந்தாலும்
நன்நட்பு இல்லாது போனாலோ
தன்னுயிரைக் காப்பாற்ற முடியாதே!!

✍️செ. இராசா

21/01/2020

முரண்களின் மொத்த உருவம் நாம்



குளிர் காலத்தில் வெயில்தேடிடும் நாம்தான்
கோடை காலத்தில் கொடைக்கானல் போகிறோம்!

வாரக் கடைசியில் ஓய்வுதேடிடும் நாம்தான்
வேலை இல்லையேல் வெறுத்துப் போகிறோம்!

இளமைப் பருவத்தில் இதயம்தேடிடும் நாம்தான்
இணைந்த பின்னரே சலித்துப் போகிறோம்!

தொலைவில் இருக்கையில் வியந்துபேசிடும் நாம்தான்
தொட்டுப் பார்க்கையில் விட்டுப் போகிறோம்!

கவிதை செய்கையில் கடவுளாகிடும் நாம்தான்
கற்பனை நிற்கையில் காணாமல் போகிறோம்!

ஆம்

#முரண்களின்_மொத்த_உருவம்_நாம்

20/01/2020

நிறைகுடம் மட்டுமல்ல..
வெறுங்குடமும் தளும்பாது ✍️

வெந்த பூரியில்
சப்தம் வராது✍️

19/01/2020

வெண்பாவும் பாடலும்.......#பாடல் மெட்டு: எவன்_என்று_நினைத்தாய்.



வெண்பாவும் பாடலும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தத்துவ வித்தகனாய் சத்திய புத்திரனாய்
நித்திய சத்குருவாய் நிற்கிற- உத்தமரின்
அத்தனை சொற்களையும் அற்புதப் பொக்கிசமாய்
நித்தமும் பற்றட்டும் நெஞ்சு!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

✍️செ. இராசா

#விஸ்வரூபம்
#எவன்_என்று_நினைத்தாய்
#பாடல்_மெட்டு

அறம் பொருள் அறிவாய்
அதன் படி நடப்பாய்
மனம் வளம் பெறுகையில்
வெளிப்படும் பலரூபம்

உயிர்ப்புடன் இருப்பாய்
உன்னில் உன்னை உணர்வாய்
நேரம் காலம் நேரும்போது
நெறிப்படும் சுயரூபம்

நேர்மையில் நின்றிடுவாய்
நின்று நீ வென்று காட்டிடுவாய்
இல்லறம் துறவறம்
இரண்டிலும் நின்றே
ஊழினை வென்றிடுவாய்..

இன்பங்கள் தவறு இல்லை
சிறு இன்பங்கள் தவறு இல்லை
காமங்கள் தாண்டி கடக்கின்ற பொழுது
கடவுளும் தூரம் இல்லை

அறம் பொருள் அறிவாய்
அதன் படி நடப்பாய்
மனம் வளம் பெறுகையில்
வெளிப்படும் பலரூபம்...(உயிர்ப்புடன்)

✍️செ. இராசா

tagTag PhotopinAdd

எத்தனைப் பிரச்சினைகள்?



எத்தனைப் பிரச்சினைகள்?
எத்தனைப் பிரச்சினைகள்?
எனக்கு மட்டும் ஏன்
இத்தனைப் பிரச்சினைகள்?

புலம்பிய தருணத்தில்
புறப்பட்டதோர் வாகனம்
ஒளியின் வேகத்தில்
உயரமாய்ப் பறந்தது

கம்பனாய்த் தெரிந்ததெல்லாம்
ஹைக்கூவாய்த் தெரிந்தது
பாரதியாய்த் தெரிந்ததெல்லாம்
பார்...ரதியாய்த் தெரிந்தது

கிழிந்த மேகம்
கீழே கிடந்தது
நீல வானம்
மேலே வெளுத்தது

ஒளிர்ந்த நிலவோ
ஓரமாய் இருந்தது
குருட்டு இருளோக்
கொட்டிக் கிடந்தது

சூரியச் சூட்டில்
கோள்கள் காய்ந்தது
பால்வீதிக் காடே
பற்றி எரிந்தது

இன்னும் இன்னுமென
இன்னும் போனால்
எங்கும் எங்குமென
எல்லாம் சுழன்றது...

சுழன்ற வேகத்தில்
கழன்று விழுந்தது
சுமந்து சென்ற
சூனிய மாயை...

என்னங்க என்ற
என்னவள் குரலில்
விழுந்தது எல்லாம்
விழித்துக் கொண்டது!

✍️செ. இராசா

18/01/2020

இப்படிக்கு உளி

என் தலையில் விழும்
எல்லா அடிகளையும் ஏற்கிறேன்!
இறுதி அடியில்
பிரம்மன் பிறப்பதால்...இப்படிக்கு உளி

17/01/2020

விக்ரம் வேதா பின்னணி இசைக்கு வரிகள்

புது முயற்சி
*************
 இங்கும் அங்குமாய்....
எங்கும் பாரடா
எங்கும் ஏனடா....
உன்னில் பாரடா


ஓரிறைவன் ஓரிறைவன்
.......ஆதிமுதல் ஆள்கிறவன்!
பாரிலுள்ள யாவிலுமே
......ஆனந்தமாய் வாழ்கிறவன்!
...உன்னில் பாரடா...

13/01/2020

எதற்காக நீ எரித்தாய்?!



எதற்காக நீ எரித்தாய்?!
💐💐💐💐💐💐💐💐

மாதவியின் மோகத்தில்
பாதகம் செய்துவிட்டு
சாதகப் பறவைபோல்
சாகசம் புரிந்தவனை;

குடியுரிமை இல்லாது
குடிதாண்டிப் போய்விட்டு
எல்லாம் முடிந்தவுடன்
இல்லானாய் வந்தவனை;

கட்டிய மனைவியை
கண்ணீரில் நனையவிட்டுக்
கூத்துப் பெண்ணோடு
குத்தாட்டம் போட்டவனை;

வேலி தாண்டியங்கு
வெள்ளோட்டம் செய்துவிட்டு
நாடி தளர்ந்தவுடன்
நாடியே வந்தவனை;

என்ன எதுவென்று
எதையுமே கேட்காமல்
மன்னனின் நீதிக்கா
மதுரையை நீ எரித்தாய்?!

💐💐💐💐💐💐💐💐💐
சொந்த நாடான
சோழநாட்டை விட்டுவிட்டு
வந்த நாட்டிலே
வழக்காட வந்தாயே..

கடவுச் சீட்டெங்கே
கடந்திங்கு வந்ததற்கு?!
உரிம அட்டையெங்கே
உரையாட வந்ததற்கு?!

என்றெல்லாம் கேட்காமல்
உன்குரல் கேட்டானே...
அன்னாரின் நாட்டினையா
கண்ணகி நீ எரித்தாய்?!

💐💐💐💐💐💐💐💐💐💐💐

விதியின் வினையாலும்
சதியின் துணையாலும்
ஏதோ நடந்ததென்று
ஏதேதோ சொல்லாது

சத்தியம் தவறாத
உத்தமப் பாண்டியனாய்
உண்மை உணர்ந்ததுமே
உயிரை விடுத்தானே...
அம்மன்னன் ஊரினையா
அம்மணி நீ எரித்தாய்?!

என்ன நீதி இது?!
எனக்கிது புரியவில்லை!!!

✍️செ. இராசா

(கண்ணகிபற்றி எழுதச் சொல்லித் தூண்டிய தம்பி Karthik Sethupathy க்கு நன்றி!!)

கடவுச்சீட்டு- பாஸ்போர்ட்-Passport

12/01/2020

எத்தனை விருப்பீடு (likes)



எத்தனை விருப்பீடு (likes)
எத்தனை கருத்தீடு (comments)
இப்படி..
எண்ணிக்கையின் கணக்கையே
எப்போதும் எண்ணாதீர்

இங்கே..
மிகுந்தால் உயர்வென்றும்
குறைந்தால் குறையென்றும்
தப்புக் கணக்கிட்டுத்
தவறிழைத்துவிடாதீர்...

பாரதப்போரில்
பார்த்தன் வேண்டியது
ஒரு பரந்தாமனைத்தான்;
துரியாதனன் வேண்டியதோ
இரண்டு அக்ரோனிப் படைகளை..
ஆனால் முடிவு என்னாயிற்று?!
நூறை ஐந்து வென்றதே?!!

பல-சரக்குக் கடைகளைவிட
புத்தகக் கடைகளில்
கூட்டம் குறைவுதான்
அதற்காகப் புத்தகங்களைக்
குறை சொல்ல முடியுமா?!

அறத்துப்பாலைவிட
இன்பத்துப்பால் இனிப்பானதுதான்
அதற்காக
காம பாசுரத்தை
கந்த சஷ்டியாக்க முடியுமா?!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்

ஒரு சூரியன்தான்
ஒரு வள்ளுவர்தான்
ஒரு கம்பர்தான்
ஒரு புகழேந்திதான்
ஒரு பாரதிதான்
ஒரு கண்ணதாசர்தான்
ஒரு நீங்கள்தான்
ஒரு நான் தான்...

இங்கே யாரும் யாராக வேண்டாம்
இங்கே யாரும் வேறாக வேண்டாம்
வருவது வரட்டும்..
வரும்போது வரட்டும்..

விதை வெடிக்கும் வரை
வீரியம் பெறட்டும்!
விருப்பம் ஜெயிக்கும் வரை
வினை விளையாடட்டும்!

அதுவரை...
விதைத்துக் கொண்டே இருப்போம்
#எதையும்_எண்ணாமல்...

✍️செ. இராசா

11/01/2020

தங்கையில்லாத ஆண்களுத்தான் தெரியும்
தனக்குப் பிறந்த மகளே
தனக்கானத் தங்கையென்று

09/01/2020

பொங்கலோ_பொங்கல்


பொங்கலோ_பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலும் வந்ததய்யா- தைப்
பொங்கலும் வந்ததய்யா

பொங்கலோ பொங்கலோ
பொங்கலோ பொங்கலோ
பொங்கலும் வந்ததய்யா (2 முறை)
******+******+********+******

#வீட்டுப்_பெரியவர்

சொந்தமும் பந்தமும்
சொந்த ஊர் வந்ததும்
சந்தோசம் பொங்குமய்யா- எங்கும்
சந்தோசம் பொங்குமய்யா!
எங்குலம் சேர்ந்ததும்
எங்கிலும் ஆனந்தப்
பொங்கலும் பொங்குமய்யா (2)

#அத்தை_மகள்

மல்லுவேட்டிக் கட்டிக்கிட்டி
மைனருபோல நடந்துகிட்டு
......துள்ளித்துள்ளி போற மச்சான்
......துள்ளித்துள்ளி போற மச்சான்
கன்னுக்குட்டி துண்டவாச்சும்
கையில்கொண்டு வாயேன் மச்சான் (2)

ஹா ஹா ஹா...

#மாமன்_மகன்

சும்மாச் சும்மாப் பேசிக்கிட்டு
பப்ஜி கேமு ஆடிக்கிட்டு
......கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிள்ளை
......கொஞ்சிக் கொஞ்சி பேசும் பிள்ளை
ஜல்லிக்கட்டு வீரன்கிட்ட
சாடைப்பேச்சு வேணாம் பிள்ளை

கோபத்தப் பார்ரா..

(சொந்தமும் பந்தமும்)

✍️செ. இராசா

உன் சுவாசக் காற்றால் என்னை வருடி



உன் சுவாசக் காற்றால்
என்னை வருடி
முத்து இதழ்களால்
முத்திரை பதிப்பாயே...
எங்கு சென்றாய்?

உன் கை விரல்களால்
என்னைத் தீண்டி
மோன நிலையிலே
மோகனம் புரிவாயே....
எங்கு சென்றாய்?

ஒவ்வொரு முறையும்
என்னை இசைத்து
உயிர்க்கும் அதிசயத்தை
உணர வைப்பாயே...
எங்கு சென்றாய்?

என்னவனே....எங்கு சென்றாய்?
உன் கரமேந்தி கவி ஊற்று
என் சிரமாட்டாத் தாலாட்டு
வா...
உன் #புல்லாங்குழல் நான்!

செ. இராசா

08/01/2020

ஒன்று

#ஒன்று பிடித்தால்
எந்த ஒன்று பிடிக்குமோ
அந்த ஒன்றைப் பேசுங்கள்!
அந்த ஒன்றை மட்டும் பேசுங்கள்!

ஒன்று உயர்வாகத் தோன்றினால்
எந்த ஒன்றைத் உயர்த்த வேண்டுமோ
அந்த ஒன்றை உயர்த்துங்கள்!
அதற்காக மற்ற ஒன்றைத் தாழ்த்தாமல்
அந்த ஒன்றை மட்டும் பேசுங்கள்!

ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்
இங்கே ஒவ்வோர் ஒன்றும்
ஒவ்வொரு தனித்தன்மை உள்ளவையே!
இந்த ஒன்று இப்படி
அந்த ஒன்று அப்படி அவ்வளவே...

உறுதியாக ஒன்று சொல்கிறேன்!
இறுதியாக ஒன்று சொல்கிறேன்!
ஒன்று ஒன்றாய் பாருங்கள்
ஒவ்வோர் ஒன்றும் நன்றாகப் புரியும்!!

✍️செ. இராசா

(தம்பி ஓடிப்போயிரு இல்ல அடி விழும்....😊😊😊புரியுது புரியுது...)

கூட்டம்

*
எங்கே இல்லை கூட்டம்?!

பக்தியின் பேரில் கூட்டம்
பகுத்தறிவின் பேரில் கூட்டம்
திருமண அரங்கிலும் கூட்டம்
திரைப்பட அரங்கிலும் கூட்டம்
தேனீர்க் கடையெல்லாம் கூட்டம்
தேடிடும் கடையெல்லாம் கூட்டம்
கல்விக் கூடத்திலும் கூட்டம்
கண்ட இடமெல்லாம் கூட்டம்

மனிதத் தலைகளால் மட்டுமா
மண்டிக் கிடக்கிறது இந்தக் கூட்டம்?!

அன்னமிட்டு அன்னமிட்டு
அன்னைபோல் அன்பாடும்
தாவரத்தின் கூட்டங்களாய்;

மகரந்தப் பொடிதூவி
மாங்கல்ய மணமாற்றும்
தேனீக்களின் கூட்டங்களாய்;

புழுவாய்ப் பூச்சியாய்
பறவையாய்ப் பாம்பாய்
எத்தனையோ கூட்டங்களாய்
இப்படி இணைந்து கூட்டிய
கூட்டங்கள்தானே எல்லாம்..

இங்கே..
சிற்றுயிர்கள் கூட்டமின்றி
பேருயிர்கள் இல்லை..
சில்லறைகள் கூட்டமின்றி
கல்லறையும் இல்லை

இவ்வளவு ஏன்?!
இங்கே
தனி மனிதன் கூட
தனி மனிதன் இல்லை...

கோடான கோடி உயிரணுக்கள்
கூட்டமாய் ஓடியபோது
தளபதிபோல் ஓடி வந்து
தல தூக்கிய தருணத்தில்
செல்களின் கூட்டமாய்
திசுக்களின் கூட்டமாய்
இப்படிக் கூட்டமாய்த் திரண்ட
ஒற்றைப் பிண்டம்தானே இந்த மனிதன்!

கோடான கோடி இறைத்துகள்கள்
கூட்டமாய்க் கூடியபோது
விண்துகளின் கூட்டமாய்
அணுக்களின் கூட்டமாய்
பஞ்ச பூதங்களாய்ப் பரிணமித்து
பல கூட்டமாய்த் திரண்ட
ஒற்றை உருண்டைதானே இந்தப்புவி?

ஆம்..
எங்கே இல்லை கூட்டம்?

ஒலிகளின் கூட்டம்தான் மொழி
துளிகளின் கூட்டம்தான் மழை
கற்களின் கூட்டம்தான் மலை
சொற்களின் கூட்டம்தான் கவி
கவிகளின் கூட்டம்தான் காவியம்
நிறங்களின் கூட்டம்தான் ஓவியம்
கணங்களின் கூட்டம்தான் காலம்
கனங்களின் கூட்டம்தான் ஞாலம்
மௌனத்தின் கூட்டம்தான் ஞானம்

இங்கே
நீயும் ஓர் கூட்டம்
நானும் ஓர் கூட்டம்

வா....
நாம் இருவரும் சேர்ந்தே
கூட்டுவோம் பெருங் கூட்டம்....

✍️செ. இராசா

07/01/2020

வளரும் வேகத்தில்
மறைந்தே போகிறது
குழந்தை உள்ளம்

தகதிமி தகதிமி ஆட்டம்-




தகதிமி தகதிமி ஆட்டம்- இது
தரிகிட தகதிமி ஆட்டம்!
அணுவிலே தொடங்கிய ஆட்டம்- இது
அண்டத்தில் ஆடிடும் ஆட்டம்!

சூனிய மாயையின் ஆட்டம்- இது
சூட்சம லோகத்தின் ஆட்டம்!
எங்கோ தொடங்கிய ஆட்டம்- இது
எங்கிலும் ஆடிடும் ஆட்டம்!

காண்போர் கண்டிடும் ஆட்டம்- இது
காணார் காணா ஆட்டம்!
துளியில் தொடங்கிய ஆட்டம்- இது
வளியில் ஆடிடும் ஆட்டம்!

அம்பல வாணரின் ஆட்டம்- இது
சம்பளம் வாங்கா ஆட்டம்!
கருவிலே தொடங்கிய ஆட்டம்- இது
இரவிலும் ஆடிடும் ஆட்டம்

✍️செ.இராசா

இணையத் தமிழர்--கரீம்

ஜனவரி 10ஆம் தேதி “இணையத் தமிழர்” விருது வாங்க இருக்கும் அன்பு நண்பர் கரீமுக்காக Kareemtime அவர்களுக்காக எழுதிய பாடல்
**************************************
(அரபு நாட்டில் ஓட்டுனர் வேலைக்கு வந்து இணையத்தின் வழியாக ஒரு கலக்கு கலக்கி அனைத்து அரபியர்களும் Autograph வாங்கும் அளவிற்கு உயர்ந்த நண்பரை நாம் வாழ்த்த வேண்டாமா?!)
*************************************
கரீம் கரீம் கரீம்!
கரீம் கரீம் கரீம்!

இணையத் தமிழன் நீ- எங்கள்
இதயத் தமிழன் நீ!
அரபுத் தமிழன் நீ- எங்கள்
அழகுத் தமிழன் நீ!.......(கரீம்)

சென்னைத் தமிழன் நீ- எங்கள்
சிங்கத் தமிழன் நீ!
அகிலத் தமிழன் நீ- எங்கள்
அன்புத் தமிழன் நீ!....(கரீம்)

உன்னைத் தெரியாதோன் ஊருக்குள் இல்லை!
உனக்கு(ம்) எப்போதும் நீதான் எல்லை!
மண்ணின் வாசந்தான் மணம்மாற வில்லை!
எமக்கும் எப்போதும் நீதான் முல்லை!

வண்ணக் கனவென்றே வாய்பேச வில்லை
எண்ணத் தமிழாலே எய்தாய் வில்லை!
சின்னக் கனவென்றே நீஎண்ண வில்லை!
மின்னல் சிரிப்பாலே செய்தாய் எல்லை!

✍️செ. இராசா

பட்டிக்காட்டு மண்ணவிட்டு



பட்டிக்காட்டு மண்ணவிட்டு
பட்டணந்தான் வந்தாலும்
கெட்டுப்போயி நிக்கவில்லை
கேட்டுப்பாரு தங்கரதம்!
கெட்டுப்போயி நிக்கவில்லை
கேட்டுப்பாரு தங்கரதம்!

அம்மன்பட்டி மண்ணவிட்டு
எங்கெங்கோ போன மச்சான்
எந்த ஊரு போனாலும்
என்னுசுரு சொல்லும் மச்சான்!
என்ன என்ன செஞ்சாலும்!
என்னுசுரும் சொல்லும் மச்சான்!

✍️செ.இராசா

05/01/2020

வான்புகழ் பெற்றிடயென் வாழ்த்து!



தெள்ளுதமிழ்ச் சோலைக்குள்
.........செந்தமிழ் வண்டாகி
வள்ளுவப் பூமேலே
..............வந்தமரும் சான்றோரே
தேன்தமிழ்ச் சொல்லெடுத்து
..............செய்கின்ற நற்கவியால்
வான்புகழ் பெற்றிடயென் வாழ்த்து!

04/01/2020

சாணுயரம் இல்லாத ..........சாமானை வைத்திங்கு



சாணுயரம் இல்லாத
..........சாமானை வைத்திங்குக்
காணுகிறார் கண்டபடிக்
........கோணுகிறார்- நாணுகிறார்
தானாகத் தன்பாட்டில்
........தந்தனத்தோம் போட்டபடி
சீனாகப் போடுகிறார் சீ!

✍️செ. இராசா

02/01/2020

வாருங்கள் விளையாடுவோம்.



எது கிடைக்கிறதோ
அதைப் பொறுத்தே நகர்வு
ஆனால்...
எது கிடைக்குமென
எவருக்கும் தெரியாது..

இங்கே அனைத்தும்
நம் கையில்தான் உள்ளதென்றாலும்
உண்மையில்..
நம்பிக்கையில்தான் உள்ளது எல்லாம்

எத்தனையோ பாம்புகள்
இறக்கிவிடத் துடித்தாலும்
எத்தனையோ ஏணிகளும்
இடை இடையே இல்லாமல் இல்லை...

தொடர்ந்து நகர்வோம்..
வருவது வரட்டும்!
தொடர்ந்து உருட்டுவோம்..
விழுவது விழட்டும்!

பரமபத விளையாட்டில்
பகடைகளின் கணக்கு
பரந்தாமனின் விளையாட்டில்
பாவ புண்ணிய கணக்கு...

வாருங்கள் விளையாடுவோம்...!!!