16/08/2020

மயிர்




என்னது மயிரா?!

தலைப்பைக் கண்டவுடன்
தடி எடுக்காதீர்..
தலைக்கனத்தால் எடுக்கவில்லை
தலைக் கனத்ததால் எடுக்கிறேன்
காரணம்
மயிரே தவிர..மமதை அல்ல!

ஒருவன் மயிரிழையில்
உயிர் தப்பினான் என்றால்
இங்கே மயிர் என்பது
நேரத்தைக் கூறுபோடுகிறது

ஒரு மயிர்நுணியே
உள்ளது எனச் சொன்னால்
இங்கே மயிர் என்பது
நீளத்தைக் கூறுபோடுகிறது

ஓ...மயிர்க்கூச்செறிகிறதே என்றால்
இங்கே மயிர் என்பது
மெய்யால் மெய்சிலிர்க்கிறது

சங்க இலக்கியங்களில்
எங்கே மயிரில்லை...
அதாவது மயிரென்ற சொல்லில்லை

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்"
-----இது வள்ளுவர்

"மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்"
----இது கம்பர்

"வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி"
---இது திருப்பாவை

"வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய"
----இது பதிற்றுப்பத்து
இன்னும் இன்னும்...
இந்த "மயிர்" எங்கும் உள்ளது

உங்களுக்குத் தெரியுமா?!

இலங்கையில் இன்னும்
இது நல்ல "பெயர்ச்சொல்
தமிழகத்தில் மட்டும்தான்
தலைகீழ் "இழிச்சொல்"
தலைவீழ் "முடிச்சொல்"

முடி என்ற சொல்
முடிவான சொல்லில்லையா

யார் சொன்னார்கள்?

தலையில் கிரீடம்போல் உள்ளதால்
தலை மயிர் மட்டுமே "முடி"
மற்றபடி
தாடை மயிர் முடியல்ல அது தாடி
மூக்கிற்கு கீழேவுள்ள மயிர் மீசை
அவ்வளவே...

எனில் எப்படி பொருள் மாறியது?
மயிர் மட்டுமா மாறியது?!
நாற்றம் மாறியது
காமம் மாறியது
இப்படி மயிரும் மாறியது

ஒன்றைச் சொல்லுங்கள்
"கக்கூஸ்" எப்படி "ரெஸ்ட் ரூமாகும்"

வார்த்தையின் பொருள் திரிவது
வார்த்தையாலா? இல்லை
வார்த்தையை வதைப்போராலா?

நாகரிகச் சமுதாயத்தின் நாக்கில்
ஆத்தா வார்த்தையும்
அநாகரிகமே...
புதிய தலைமுறையின் நாக்கில்
எஃப் வார்த்தையும்
நாகரிகமே....

மயிரை வழிப்பது வெறும் சடங்கல்ல
உயிர் பிரிந்தாலும் நடக்கும்
ஆன்மா விழித்தாலும் நடக்கும்..

மயிரை துச்சமாய் நினையாதீர்!
மயிர் பற்றிய துச்சாதனன் குருதி
மயிரில் தைலமானதை
மறந்து விடாதீர்!

மயிரை மட்டமாய் நினையாதீர்..
மயிர் இல்லா தலைவர் பலர்
மயிர் முடி சூடுவதை
மறந்து விடாதீர்...!!

"மயிர்"
கெட்ட வார்த்தையல்ல
கெட்டுப்போன வார்த்தையே....

✍️செ.இராசா

#சொற்பொருள்_அறி

No comments: