26/08/2020

குறளுரையாடல்-7 ஒருவிதை_இருகரு


 

#ஒருவிதை_இருகரு
#குறளுரையாடல்_7

இங்கே முதல் குறள் வெண்பாவை மருத்துவர் ஐயா எழுதியவுடன் நான் இரண்டு கருக்கள் வைத்து எழுதினேன். பிறகு ஒரே நேரத்தில் இரட்டைக் குழந்தைகளாய் குறளுரையாடல் தொடர்ந்தது. அதை படிக்கும் வசதிக்காக இரண்டாகப் பிரித்துள்ளேன்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#முதல்_பகுதி #அகப்பா (காதல் இன்பம்)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#ஐயா_1 (முதல் குறள்)
தேனினிக்கும் நற்காதல் தேன்பாவாய் காதினிலே
தானினிக்கும் சொற்பதமாய்த்
தான்.

#நான்_2
தானென்று நான்சொல்ல தானென்ன நீதான்; ஆம்
நானென்று நீசொன்னால் நான்

#ஐயா_3
நானழிந்து நாளெல்லாம் நானாக நீமாற
வானழிந்து நீதோன்றும் வான்.

#நான்_4
வானாய் உயர்த்திடவா வந்தாய்நீ என்னுள்ளே
தேனாய் இனியென் தினம்

#ஐயா_5
தினமும் உனதுள் திகழும் எனதால்
மனமும் தனதுள் மகிழ்.

#நான்_6
மகிழ்வின் பொருளாய் மனதில் நிறைந்த
சகியின் இருப்பே ஜெயம்

#ஐயா_7
செயமுண்டாம் உன்னால் செயலாற்ற என்றும்
பயமில்லை சொல்லும் பதம்

#நான்_8
பதமாய் ஒருவார்த்தை பைங்கிளிநீ சொன்னால்
இதமாய் இருக்கிறதே ஏன்

#ஐயா_9
ஏனெனும் கேள்வி எனதுயிரே உன்னிடம்
நானெழுப்ப மாட்டேன் நவில்.

#நான்_10
நவில்கின்ற போதுந்தன் நாவினைக் கண்டால்
கவிதையும் பெண்ணென்பார் கள்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#இரண்டாம்_பகுதி
#அகவாய்வு (தற்சோதனை)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#ஐயா_மூலக்குறள்_எண்_0
தேனினிக்கும் நற்காதல் தேன்பாவாய் காதினிலே
தானினிக்கும் சொற்பதமாய் தான்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#அகவாய்வு_கருவில்
#நான்_1
தான்தோன்றி போலிங்கு தன்போக்கில் போகாமல்
தான்யார்? விடையினைத் தோண்டு

#ஐயா_2
தோண்டி எடுத்துத் தொடுக்க நினைக்கும்'தான்'
தாண்டி மறையும் தனது.

#நான்_3
தனதென்றும் தானென்றும் தன்னையே எண்ணாமல்
மனதென்றும் மற்றோர்க்காய் வாழ்

#ஐயா_4
வாழ்வு எனப்படும் வந்தோர்க்கு நற்சேவை
தாழ்வு எனப்படும் தான்.

#நான்_5
தான்தான் எனச்சொல்லி தற்பெருமை கொண்டோரை
ஏன்தான் படைத்தான் இறை

#ஐயா_6
இறையருளின் பேராற்றல் இவ்வுலகில் யாண்டும்
நிறைந்திருக்கும் உன்னுள் நினை.

#நான்_7
நினைப்பது போலவே நிச்சயம் கிட்டும்
நினைவிலே என்றும் நிறுத்து

#ஐயா_8
நிறுத்தி ஒலிக்கா நிமிடம் தவத்தால்
இறுக்க நொடியும் இனிது.

#நான்_9
இனிதென்றால் யாதெனில் இக்கணத்தில்
வாழும்
மனிதம் நிறைந்த மனம்

#ஐயா_10
மனத்தில் படிந்ததும் மங்கலாக்கும் மாசு
சினத்தில் கறுக்கும் இனம்

✍️ஐயாவுடன் நான்

No comments: