08/05/2022

காதலியின் கல்யாணம் --- அணிந்துரை

 


#அணிந்துரை

(கவிஞர் மெய்யன் நடராஜ் அவர்கள் எழுதிய சிறுகதை நூலான #காதலியின்_கல்யாணம்
என்னும் நூலுக்கு யாம் வழங்கிய அணிந்துரை)

அனைவருக்கும் இனிய வணக்கம்!

ஒரு கவிஞன் கதாசிரியராக மாறும்போது அந்த கதைகள் எவ்வளவு கவித்துவமாக இருக்கும் என்பதெற்கு, இங்கே உள்ள பத்து கதைகளுமே சாட்சி. உண்மையில் எனக்கு நூலாசிரியரைப் பற்றி ஒரு கவிஞனாகத்தான் தெரியும். அவரின் கதைகளை இதுவரையிலும் படித்ததில்லை. இந்த "காதலியின் கல்யாணம்" என்னும் நூலை வாசித்தபோது அனைத்து கதைகளையும் ஒரே மூச்சில் முடித்துவிட்டேன். அப்படிப் படிப்பது, ஒரு நல்ல கதை நூலுக்குச் செய்யும் சரியான செயலுமல்ல என்பதை அறிவேன். உண்மையில் அது சிரமமான காரியமும்கூட. காரணம், ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துவதால் அதிலிருந்து மீள்வதென்பது அவ்வளவு சுலபமுமல்ல. சிறு இடைவெளிகூட எடுக்காமல், சற்றே இளைப்பாறாமல், ஒரு கதையின் தாக்கத்திலிருந்து அடுத்த கதைக்குப் போக முடியாதுதான். இருப்பினும், நூலாசிரியரின் எழுத்துநடை எம்மை அடுத்தடுத்த கதைப்படிக்க தூண்டியதால் அது சாத்தியமானதென்றே நினைக்கிறேன். கண்டிப்பாக இதே உணர்வு உங்களுக்கும் ஏற்படுமென்பதை இங்கே உறுதிபட முன்மொழிகின்றேன்.

#வாழ்த்து_வெண்பா
***********************
மெய்சிலிர்க்கும் ஆக்கத்தில்
.......மேம்பட்ட நற்கவிஞர்
மெய்யன் நடராஜர்
‌......மெய்யுணர்வில்- செய்துள்ள
பத்துக் கதைகளையும்
......பற்றிப் படிப்பவர்கள்
புத்தி தெளிவர் புரிந்து!

சரி இந்தப் பத்துக் கதைகளையும் பற்றி சுருக்கமாகக் குறள் வெண்பாவோடு சேர்த்து பார்ப்போமா...

1. #அவள்_அப்படித்தான்

அவளென்ன சொல்வாள்? அவளென்ன சொல்வாள்?
அவள்பற்றி சொல்லும் அவன்!

உறவுகளுக்குள் உள்ள பிணைப்பை உருக்கமாகக் கூறும் உன்னதக் கதையே இது.

2. #நாய்க்கொரு_வாலாட்டு

நாயென்று திட்டத்தான் நாயைப் படைத்தானோ
நாயென்ன கீழா நவில்.

ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனம் வாழத்துடிக்கும் சர்வாதிகாரத்தை ஒரு நாயின் பார்வையில் சொல்லி முடிவில் கண்ணீர் வரவழைக்கும் உருக்கமான கதை‌.

3. #உயிர்_கொடுத்த_உறவு

முகவரி தேடி முனைப்போடு வந்தால்
முகவரி காட்டும் முகம்

வேரைத் தேடும் பயணத்தில் சுகமான சுமைகளாய் விரியும் நினைவுகளே இக்கதை.

4. #விடியல்

கள்ளர்கள் எல்லோரும் கைகோர்த்து நின்றாலும்
வெள்ளாமை சேராது வீடு

கழுத்தறுக்க நினைத்தவர்களிடமிருந்து காப்பாற்ற கொரானா வடிவில் கடவுள் கொடுத்த விடியலாய் இக்கதை.

5. #அவள்_கொடுத்த_கடிதம்

அவளை நினைத்தே அவனும்; அதுபோல்
அவனை நினைத்தே அவள்!

கசப்பாய்க் கொடுத்த கடிதத்தில் அவளுக்கே தெரியாத இன்ப அதிர்ச்சியைக் கூறும் கதை.

6. #சமாதான_மருந்து

நீருக்குள் போகாமல் நீந்தியவர் யாருள்ளார்?!
யாருக்கும் இப்படித்தான் இங்கு

தன்மகள் வாழ்க்கைபற்றி பயந்து பின்னர் தன் வாழ்க்கையை நினைந்து தெளிவடையும் அம்மா பற்றிய கதை.

7. #காதலியின்_கல்யாணம்

எப்படியும் வாழலாம் என்றெல்லாம் எண்ணாமல்
தப்பின்றி வாழ்தல் தவம்

வாய்ப்பிருந்த போதும் கண்ணியம் காத்த காதலனின் நேர்மை‌யைக் காட்டும் கதை‌

8. #நேற்றைய_நேயர்

உயிராய் இருக்கையில் ஒன்றுமே செய்யார்
உயிர்விட்டால் வைப்பர் சிலை

கிடைக்க வேண்டியது தாமதமாய் கிடைத்தால் கிடைத்ததென்ன இலாபமென ஓங்கி உரைக்கும் கதை.

9. #புடலங்காய்

காயைக் கனியென்பர் காய்கின்ற உள்ளத்தார்
நாயை நரியென்பர் வந்து

ஹா.ஹா....கல்கட்டா புடலங்காய் பற்றிய நகைச்சுவைக் கதை‌.

10. #மூடி_மறைத்த_உண்மை

எங்கே எனத்தேடி எங்கெங்கோ போய்வந்தால்
இங்கேதான் உள்ளது மெய்

காணாமல்போன கதையை எப்படியோ தேடி கண்டுபிடித்த கதை.

ஆங்கிலச் சொற்கள் கலக்காமல், அதே சமயத்தில் புதிய சொற்களை வேண்டுமென்றே வலியத்திணிக்காமல், மிக மிக அருமையான உவமைகளோடு தனக்கே உரிய பாணியில் நவீனத்துவமும் குறையாமல் சிறுகதைகளைப் படைத்த நூலாசிரியர் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, கட்டாயம் இந்நூல் பல விருதுகளைக் குவிக்கும் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளதால் இப்போதே அதற்கானத் தனிப்பட்ட வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டு அன்புடன் விடைபெறுகின்றேன்.

அனைவரும் படியுங்கள்!
வாழ்க வளமுடன்!

அன்புடன்,

செ. இராசமாணிக்கம்

No comments: