07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 4 (பெரிய புராணம்)

 


2. #சிவத்தொண்டு_நாயன்மார்கள்_10

சிவனை வணங்கிய நாயன்மார்களை முன்பு பார்த்தோம். சிவன்வேறு சிவனடியார் வேறல்ல என்கின்ற ரீதியில் சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்து அவர்களை வணங்கியவர்களை சிவத்தொண்டு நாயன்மார்கள் என்கின்ற வரிசையில் இங்கே காண்போம்.

2.1. #அப்பூதியடிகள்.

தன் வீட்டிற்கு உணவருந்தத் திருநாவுக்கரசரே வந்தபோது இலையறுக்கப் போன மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டான். அதையும் மறைத்து உணவளித்த வள்ளலே அப்பூதியடிகள்.
(இன்றைய தினம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரியும் என் இனிய கல்லூரி நண்பரின் பெயரென்பதால் எப்போது இப்பேரை படித்தாலும் அவர் ஞாபகம் வருவதை என்னால் தடுக்க முடிவதில்லை)

2.2. #இளையான்குடி_நாயனார்

திடீரென்று வந்த சிவனடியாருக்கு சமைக்க வீட்டில் ஒன்றுமில்லாமல், பகற்பொழுதில் விதைத்த விதைநெல்லை மண்ணோடு சேகரித்துவந்து பின் பிரித்தெடுத்து உணவாக்கிப் படைத்துள்ளார்

2.3. #இடங்கழி_நாயனார்

இடங்கழியாரின் அரண்மனையில் புகுந்து நெல்லைத் திருடிச்சென்றவரை விசாரித்தபோது, சிவனடியார்களுக்கு உணவளிக்கத்தான் திருடியுள்ளார் என்ற சேதியறிந்து, அவரை விடுவித்ததோடல்லாமல் அன்றுமுதல் நெற்களஞ்சியத்தைத் திறந்தே வைத்தவர்.

2.4. #சிறப்புலி_நாயனார்

இவரும் அடியார்களுக்கு உணவளித்தவர்.
ஒருமுறை 1000 சிவனடியார்களுக்கு உணவளிக்க முடிவுசெய்து ஒவ்வொருவராய் அழைத்து வந்துள்ளார். 999பேர் வந்துவிட்டார்கள்.‌ஒரே ஒருவர் வந்தால் 1000 ஆகிவிடும் ஆனால் ஆளில்லை என்பதால் வருத்தமுற்றார். அப்போது சிவனே 1000மாவது ஆளாக வந்தாராம்.

2.5 #சோமசிமாறர்

இவரும் சிவனடியார்களுக்கு உணவளித்தவரே.

2.6 #திருக்குறிப்புத்_தொண்டர்

சிவனடியார்களுக்குத் துணி துவைத்துக் கொடுத்தவர். ஒருமுறை சொன்ன நேரத்தில் துணியைத் தர முடியவில்லையே என்று கல்லில் மோதி உயிர் நீக்க முற்பட்டார்.

2.7. #நேசநாயனார்

சிவனடியார்களுக்கு உடையும், கோவணமும் நெய்து தந்தார்.

2.8. #கணநாதர்

திருஞானசம்பந்தரை நாளும் வழிப்பட்டுவந்தார்.
சிவனடியார்களுக்குத் தன்னால் முடிந்த தொண்டும் செய்து வந்தார்.

2.9. #மானக்கஞ்சாற_நாயனார்
தன் மகளுக்குத் திருமணம் ஆகும் தருவாயில் சிவனடியார் கேட்டார் என்பதற்காக சற்றும் யோசிக்காமல் தலைமுடியை அறுத்துக் கொடுத்துள்ளார். (அவர் ஏன் தலைமயிரைக் கேட்டார். காரணம் தெரியவில்லை)

2.10 #மெய்ப்பொருள்_நாயனார்
போரினால் வெல்ல முடியாத எதிரி சிவனடியார் வேசம்போட்டு வந்து கத்தியால் குத்தியபோதும், அவர் திருநீறணிந்த தோற்றம் கண்டு அப்பொழுதும் தொழுதவர். அவரை மற்ற யாரும் கொல்லவிடாமல் காப்பாற்றியவர்.

No comments: