07/05/2022

இலக்கியம் ஆய்வோம் – 9 (பெரிய புராணம்)

 


6 #சிறப்பு_குறைந்த_நாயன்மார்கள்

அதென்ன சிறப்பு குறைந்த நாயன்மார்கள் என்று நீங்கள் கேட்கலாம். சிறப்பு மிகுந்த என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, சிறப்பு குறைந்த என்ற பதமும் உள்ளதுதானே?! எனில் அப்படியென்ன சிறப்பு குறைந்துவிட்டது? வாங்க பார்ப்போம்..

6.1. #இசைஞானியர்
6.2 #சடைய_நாயனார்
6.3 #விறன்மிண்ட_நாயனார்

(மூவரும் இதில் அடக்கம்)

யாம் ஏற்கனவே கூறியபடி இந்தப் #பெரியபுராணம் என்கிற காப்பியத்தின் மூல நூலான #திருத்தொண்டத்_தொகை என்னும் நூலில் அதைப் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரையும் சேர்த்து 60 நாயன்மார்கள்தான் கூறப்பட்டிருந்தது. அதை மறு உருவாக்கம் செய்த சேக்கிழார் என்ன செய்தார் தெரியுமா? அவரின் தாயாரான #இசைஞானியரையும் (இவர் உண்மையில் இசைஞானியா என்று தெரிவிக்கப்படவில்லை) தந்தையாரான #சடையநாயனாரையும் சேர்த்துள்ளார்.
பெற்றோர் என்பதால் மட்டும் சேர்ப்பதில் என்ன சிறப்பென்று தெரியவில்லை.

அதுபோக கூடுதலாக "#விறன்மிண்ட_நாயனார்" என்போரையும் சேர்த்துள்ளார். காரணம், அவர்தான் திருத்தொண்டத் தொகையில் "தில்லைவாழந்தணர்" என்னும் முதல் அடி கொடுத்தவராம். எனில், அதைச் சுந்தரர் அல்லவா சேர்த்திருக்க வேண்டும். சேக்கிழார் ஏன் சேர்த்தார். அவர் சொன்ன அடியில் அந்தணர் என்ற சொல் இருந்ததாலா?!

6.4 #நின்றசீர்_நெடுமாறன்
6.5 #மங்கையர்க்கரசியார்
6.6 #குலச்சிறையார்

(மூவரும் இதில் அடக்கம்)

நின்றசீர் நெடுமாறன் என்பவர் யாரென்றால் திருவிளையாடல் புராணத்தில் வருகின்ற சுந்தரபாண்டியன் அல்லது கூன் பாண்டியன் என்னும் மன்னனே. கி.பி.640ல் மாறவர்மன் என்ற பட்டத்தோடு மதுரையை ஆண்டவர். சமண மதத்தைச் சேர்ந்தவர். இவருடைய கூன் சரியாவதற்காக குலச்சிறையார் என்னும் அமைச்சர் நின்றசீர்நெடுமாறனின் மனைவியும் இராணியுமான மங்கையர்க்கரசியாருக்கு ஒரு யோசனை கூறினர். இவரின் கூனை நீக்க வல்ல வலிமை யாருக்குள்ளதென்று வாதம் நடத்தலாம் என்பதே அது. அதில் சமணரும் திருஞானசம்பந்தரும் போட்டியிட திருஞானசம்பந்தர் வெல்கின்றார்.
தோற்ற சமணர்கள் கழுவேற்றப்படுகிறார்கள் மன்னனின் கூனும் நீங்குகிறது.

பின்னர் மன்னனும் இராணியும் அமைச்சருமென அனைவரும் சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மதம் மாறுகின்றார்கள். மதம் மாறிய அல்லது மாற்றிய அனைவருக்கும் இடம் கொடுப்பதாங்க சிறப்பு?

No comments: