07/05/2022

இலக்கியம் ஆய்வோம் - 2 (பெரிய புராணம்)

 


கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று நம் முன்னால் முதல்வர் சொன்னபோது, அது எவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய விடயமானதென்பதை அனைவரும் அறிவோம். எனில் சேக்கிழார் எழுதிய நூல்தான் என்னவென்று கூகுளில் தேடிய தலைமுறையும் உண்டென்பது நாம் மறுக்க முடியாத உண்மைதானே?!.

சிவனை வழிபட்ட அல்லது சிவனடியார்களுக்குத் தொண்டுபுரிந்த 60 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறிய சுந்தரரின் நூலான "திருத்தொண்டத் தொகை" என்னும் மூலநூலை அடிப்படையாகக் கொண்டு, அதை ஏற்றிய சுந்தரரையும் மற்றும் அவரின் தாய் தந்தையாரையும் சேர்த்து 63 நாயன்மார்களாக்கி மீண்டும் பாடிய இலக்கியச் சுவையுள்ள வரலாற்று நூல்தான் "பெரிய புராணம்". இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 63 நாயன்மார்களையும் அத்தோடு 64 வதாக சேக்கிழாரையும் சேர்த்து சிவாலயங்களில் வழிபடும் மரபு இன்றுமுள்ளது என்பதே இந்த நூலைப்பற்றிய சிறப்பாகும்.

ஏற்கெனவே உள்ள நூலைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய தேவையென்ன என்பது அனைவருக்கும் எழலாம். உண்மைதான்.... அதில் யாம் கண்ட சில நாயன்மார்கள், பக்தியின் மூர்க்கத்தில் மூக்கை அறுத்த, நாக்கை அறுத்த, காலை வெட்டிய, கையை வெட்டிய, பிள்ளைக்கறி சமைத்த....என்ற கதைகளைப் படித்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் எனக்கெழுந்த பல சந்தேகங்களைத் தேட முற்பட்டபோதும்; கல்லால் எறிந்தும், வெண்பா பாடியும், இசையில் இலயித்தும், மனதில் தொழுதுமென சைவத்தை அனைத்து வகையிலும் வணங்கிய கதைகளைப் படித்தபோதும்;....ஆகா.‌.என்று மெய் சிலிர்த்து விதுர்விதுர்க்க வைத்த அக்கதைகளை வேறு ஒரு கோணத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும்படி தொகுத்து வழங்க நினைத்ததன் விளைவுதான் இப்போது இக்கட்டுரையாக உங்கள் முன்னே விரிகின்றதென்பதைப் பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்.

இங்கே யாம் வைத்த தலைப்புகள் என்பது ஒரு புரிதலுக்காக மட்டுமே என்பதால், இதை வைத்து குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி தேவையல்ல என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். இப்போது யாம் எழுதப்போகும் கட்டுரையானது மிகவும் சுருக்கமான ஒரு குறிப்பாக மட்டுமே இருக்குமென்பதால் இதில் அனைத்துக் குறிப்புகளும் இடம்பெறாது. இப்போதைய தலைமுறைக்கு இலக்கியத்தைக் கடத்தும் முயற்சியாகவே யாம் இதை மேற்கொள்கிறோம் என்பதை மீண்டும் கூறிக்கொண்டு இக்கட்டுரையைத் தொடங்குகின்றேன்.

இங்கே முதன் முதலில் கோப நாயன்மார்களைக் கூறிடலாம் என்றுதான் ஆரம்பித்தேன் ஆனால், எடுத்த எடுப்பிலேயே அதைக்கூறும்போது, என்ன இப்படி உள்ளதே என்று தொடராமல் விட்டுவிடும் வாய்ப்புள்ளதால் சிவனைப் பல வழிகளில் தொழுவதன் மூலமாக அவனை அடைந்தவர்களைப் பற்றிய தலைப்பான சிவார்ப்பண நாயன்மார்களை முதலில் கூற விழைகின்றேன்.

No comments: