29/05/2022

மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம்

 


இந்தப் படத்தில் உள்ள நபர் யாரென்றால், நான் தினந்தோறும் மாலைநேரத்தில் நடைப்பயிற்சி செய்யும் பூங்காவில் பணிபுரியும் காவலர்களில் ஒருவரான குலசந்த் சிங் என்னும் பஞ்சாபியர். தினமும் என்னை சந்திக்கும் இந்நபரிடம் இன்றுதான் சில நிமிடங்கள் பேசினேன். அவரிடம்நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தியபோது கவிதையெல்லாம் எழுதுகிறேன் என்றுதான் கூறினேன். அப்போது அவர் முகம் ஆயிரம் வோல்ட் விளக்காக மின்னியது. உடனே ஓடிப்போய் தன்னிடமுள்ள ஒரு புத்தகத்தை எடுத்துவந்து தான் எழுதிய பஞ்சாபிய கவிதைகளை எல்லாம் சொல்லி, மன்னிக்கவும் என்னால் ஹிந்தியில் மொழி பெயர்க்கத் தெரியாதென்றார். எனக்கு சிரிப்புதான் வந்தது. காரணம் நமக்கே ஹிந்தி நம்ம டங்கிலிஷ் போல் ஆங்கிலம் கலந்துதான் பேசவரும். படிக்க வராது. ஆனாலும் அவர் ஏற்றி இறக்கி சொன்ன அந்த விதமே...அது கவிதைதான் என்று அடையாளப்படுத்தியது. ஆகா...மொழி தெரியாத கவிதையைக் கேட்டு மகிழ்ந்த தருணம் இருக்கிறதே...அதுவே ஒரு கவிதை தாங்க....
 
கூடுதல் தகவலாக, அவரிடம் நான் எழுதிய பஞ்சாபி தமிழ்ப்பாடலைக் காண்பித்தேன். ஆள் மிரண்டுவிட்டார். அந்தக் காணொளியில் வரும் ஆங்கிரீஜ் சிங் புகழ்பெற்ற நபரென்பதை மீண்டும் இவர்மூலமும் தெரிந்து கொண்டேன். அந்தக் காணொளியில் நானும் டர்பன் கட்டி வருவதைப் பார்த்து, அசந்தே விட்டார். அப்போதுதான் அவரிடம் உங்கள் டர்பன் எங்கே என்று கேட்டபோது, கத்தார் வந்து நீக்கிவிட்டதாக மெல்லிய சோகத்துடன் கூறினார். அவரைத் தொடர்ந்து கவிதை எழுதச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
 
அந்தக் காணொளிக்கான இணைப்பு இங்கே உள்ளது. பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.
 

No comments: