29/06/2018

100வது கவிச்சரம்--தமிழ்ப்பட்டறை



🙏தமிழ்த்தாய் வணக்கம்🙏
**********^**************
ஆதிமுதல் அகத்தியமாய்
ஆழம்நிறை தொல்காப்பியமாய்
அழகுத் திருக்குறளாய்
அற்புதத் திருவாசகமாய்
கம்ப ராமாயணமாய்
பாரதி கவிதைகளாய்
உலகாளும் தமிழ்த்தாயை
உள்ளத்தால் தொழுகின்றேன்!

🙏கவிச்சரத் தலைமை வணக்கம்🙏
********************************
பொறிஞராய்த் தேர்ச்சிபெற்று
அறிஞராய் பவனிவந்து
கவிஞராய் மிளிர்கின்ற
கவிச்சரத் தலைமையினை
மீனா திருப்பதி அவர்களை
மனமார வாழ்த்துகின்றேன்!

🙏அவை வணக்கம்🙏
**********************
வருங்காலக் கவியரசரும்
வருங்காலக் கவிக்கோவும்
உருவாகும் தளமாக
உருவாக்கும் தளமாக
இருக்கின்றப் பட்டறையை
இதயத்தில் வாழ்த்துகின்றேன்!

தமிழ்ப்பட்டறை
***************
தமிழ்ப்பட்டறை தளம்மூலம்
தமிழ்த்தொண்டு செய்கின்ற
எந்தமிழ்ச் சான்றோர்களை
என்னசொல்லி வாழ்த்திடுவேன்?!

எல்லோருக்கும் ஒரே மூச்சு!
எப்பொழுதும் தமிழ்ப் பேச்சு!
எல்லோருக்கும் ஒரே நோக்கம்!
என்றென்றும் தமிழ் தாகம்!
எல்லாமும் இருந்தாலும்
எங்கேயும் கர்வமில்லை!

எப்படி முடிந்ததென்று
என்னுள்ளே வியக்கின்றேன்!
எளிமையும் நேர்மையும்
எந்தமிழர் குணமன்றோ?!
எள்ளவும் ஐயமில்லை
எதுவும் இங்கே சாத்தியமே!

எம்மதமும் சம்மதமாய்
எல்லோரும் தமிழ்மதமாய்
எத்தளமும் கொள்ளாத
எழுச்சியுடன் சிறக்கின்ற
என்தமிழ்ப் பட்டறையே
எப்போதும் சிறப்பென்பேன்!

பதிப்பகம்
*********
விதை தூவி கரு பதித்து
விளைவது குழந்தையெனில்
கரு பதித்து வரி ஆகி
வருவது நூலாகும்!

தாயின் வலி சொல்லும்
பிரசவ வேதனையை
நூலின் வரி சொல்லும்
புத்தகம் தந்து விடும்!

தாய்க்கும் தாயாக
திகழ்கின்றப் பதிப்பகமே
சிறப்பான புத்தகத்தை
சுகமாக பிரசவிக்கும்!

என்னை வளர்க்கின்ற
என்னருமைப் பதிப்பகமே
“நான் எனும் மண்குடத்தை”
நான் உனக்குத் தந்துவிட்டேன்..

அவனைப் பெற்றெடுத்து
அவனியிலேத் தவழவிட
அருந்தமிழ்ப் பட்டறையை
அடியேனும் வேண்டுகிறேன்

நன்றி நவில்தல்
**************
அறிஞர்கள் அவையினிலே
கவிஞர்கள் சபையினிலே
எனக்கும் வாய்ப்பளித்த
எழில்மிகுப் பட்டறையே
இதயத்தால் வாழ்த்துகின்றேன்
இமயம்போல் நிலைத்திடுவாய்...
நன்றி! நன்றி!!நன்றி!!!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!
🙏🙏🙏🙏🙏🙏🙏

✍️செ.இராசா

No comments: