06/06/2018

ஏன் மறந்தாய்?!


கவிதை-1 (காமத்துப்பால்-கற்பியல்)
***********************************
♥️🍀♥️🍀♥️🍀♥️🍀♥️🍀♥️🍀♥️

கலைக்கண்ணால் உனைக் கண்டு
மலைத்தேநான் நிற்கையிலே
அலைகின்றேன் எனச்சொல்லி
நிலைகுலைய வைக்கின்றாய்

சிலைபோன்ற சித்திரமாய்
கலைமகளாய் நீ இருக்க
வலைவீசும் மாயனென
மலை மலையாய்க் கேட்கின்றாய்

உம்மிடம் அமருகையில்
தும்மலை நானடக்க
எம்மை யாரோ நினைத்தாரென
விம்மி விம்மி அழுகின்றாய்..

உன்னையே நினைந்தேன் என்று
உருகி உருகி நான் சொன்னால்
நினைக்குமுன் மறதியென்று
“ஏன் மறந்தாய்?” என்கின்றாய்

அப்பப்பா போதுமடி
விட்டுவிடு என்றாலோ
“நீ அப்படியே சொல்வாயென”
நித்தம் என்னை வதைக்கின்றாய்!

ஏன் மறந்தாய்?
**************
கவிதை- 2 (பொருட்பால்-அரசியல்)
***********************************
🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌼🌼

ஆயிரம் பொய் சொல்லி
ஆட்சியிலே அமர்ந்தவர்கள்
அடுத்தடுத்த கொடுமைகளை
அடுக்கடுக்காய்ச் செய்தாலும்
அனைத்தையும் மறந்தேதான்
அவர்களுக்கே வாக்களித்தாய்!

உண்மைக்குப் புறம்பானோர்
நன்மைக்கு மாறானோர்
நன்றியை மறந்தவராய்
நம்மை அன்று வதைத்தாலும்
கொடுஞ்செயல் புரிகின்ற
கொடியோர்க்கே வாய்ப்பளித்தாய்!

ஏன் மறந்தாய்? ஏன் மறந்தாய்?
என் மனமே ஏன் மறந்தாய்?!
உன்னுடைய மறதியாலே
இந்நிலைமை வந்ததன்றோ?!!
நம்முடைய தமிழ்நாட்டில்
வன்கொடுமை நடக்குதன்றோ?!!

ஏன் மறந்தாய்? ஏன் மறந்தாய்?
ஏன் மறந்து வாக்களித்தாய்?!
அடக்குமுறை அடிமைகளை
அடியோடு களைந்தெறிய
வல்லாரைக் கீரையுண்டு
நல்லோர்க்கு(ம்) வாய்ப்பளிப்பாய்!

(இது மனசாட்சியின் கேள்வி)

No comments: