09/06/2021

முதலமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல்

 


(நடக்குமோ நடக்காதோ?....பார்ப்பார்களோ பார்க்க மாட்டார்களோ?...முதலமைச்சருக்கு ஒரு மின்னஞ்சல் போட்டுள்ளேன்)

மதிப்பிற்குரிய முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு கத்தார் நாட்டில் இருந்து வரையும் ஒரு வேண்டுகோள் மடல்.

ஐயா வணக்கம்,

நான் சிவகங்கை மாவட்டம், அம்மன்பட்டி என்கின்ற கிராமத்தில் இருந்து வந்து பொறியாளராக கத்தாரில் பணிபுரிந்து வருகிறேன். என் தந்தையார் அதிமுகவில் இருந்தாலும் நான் எந்தக்கட்சியிலும் எம்மை இணைத்துக்கொள்ளாமல், அதே சமயத்தில் சமூக ஆர்வலராக தமிழ்க்குழுமங்களில் என்னால் முடிந்த தமிழ்த்தொண்டாற்றி வருகின்றேன். தாங்கள் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் சீரும் சிறப்புமாகத் தொண்டாற்றி வருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு என் விண்ணப்பத்தை வைத்தால் கண்டிப்பாக ஆவண செய்வீர்கள் என்கிற நம்பிக்கையோடு மூன்று வேண்டுகோள்களை வைக்கின்றேன்.

1. வாழ்வாதார வேண்டுகோள்
************************************
மதிப்பிற்குரிய ஐயா!

வெளி நாடுகளிலெல்லாம் உள்ளது போல், நம் நாட்டில் பணிபுரிவோர்க்கு வேலை நேரங்கள் என்பது இத்தனை மணி நேரம் என்று தீர்மானிக்கப்படாமல் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் 10 மணி நேரங்களுக்கு மேலாகவும் மற்றும் சில இடங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை வாங்குகிறார்கள். என்னதான் சட்ட வரைவுகள் இருந்தாலும் இவற்றைப்பற்றிய விழிப்புணர்வெல்லாம் யாருக்குமே இல்லை. அதேபோல் தனியார் சம்பள விடயத்திலும் அளவு நிர்ணயம் இல்லாமல் ஒப்பீட்டளவில் மிகப்பெரிய வேறுபாடுள்ளது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி இந்திய நாட்டிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ ஆவண செய்யுமாறு பணிவன்போடு வேண்டுகிறேன்.

2. தாய்த் தமிழுக்காக ஓர் வேண்டுகோள்
***********************************************
என்னதான் நாம் தமிழ்... தமிழ்.. என்று பேசினாலும், தமிழ்நாட்டில் பேச்சுத்தமிழ் தமிங்கிலீஸாய் மாறிவருவது தமிழார்வலர்கள் மத்தியில் மிகவும் வேதனையளிக்கிறது. பத்து வார்த்தைகள் பேசினால் அதில் ஐந்து வார்த்தைகள்தான் தமிழாக உள்ளது. இதில் கிராமத்தைவிட நகரத்தில் இந்த விகிதாச்சாரம் கூடுதலாக உள்ளது. இவற்றை மாற்றும் பொறுப்பு நம் ஊடகங்கள் அனைத்திற்குமே உள்ளது. ஆனால் அவர்களோ மக்கள் மேல் பழியைப் போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். ஆகவே அனைத்து ஊடகங்களையும் கூட்டி ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு தாங்கள் பேசினால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை விடுக்கின்றேன்.

3. சமூக நலனுக்காக ஓர் வேண்டுகோள்
************************************************
சாதியை ஒழிக்க என்னதான் இதுவரை நடவடிக்கை எடுத்திருந்தாலும் இந்த 2021 லும் சாதிய உணர்வுகள் இன்னும் இன்னும் வெறியாக மாறி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.தேர்தலிலும் சாதி பார்த்தே நிறுத்தும் போக்கு இன்னும் உள்ளதே இதற்கு சாட்சி. பள்ளிகளில் இருந்து இணையக் குழுமங்கள் வரை உள்ள சாதிய வெறியைப் போக்க தங்களால் முடிந்த நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றேன்.

ஐயா, தங்கள் முன்தீ-நுண் கிருமித்தோற்றோடு சேர்த்து எத்தனையோ பிரச்சினைகள் வரிசை கட்டி நின்றாலும், மேலே கூறிய மூன்று பிரச்சினைகளையும் தாங்கள் கூடுதல் கவனத்தில் எடுத்துக்கொள்ள பணிவன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுகொள்கிறேன். இதைத் தங்களைத் தவிர வேறு யாராலும் தீர்க்க முடியாது என்கின்ற நம்பிக்கையால் நான் முதன் முதலில் ஒரு மக்களின் முதல்வருக்கு நேரடியாக விடுக்கும் விண்ணப்பம் இது,

தமிழ்ச் சமூகத்தின் மேலும் மொழியின் மேலும் அக்கறையுள்ள ஓர் சாதாரண இந்தியத் தமிழ்க் குடிமகனான என் கோரிக்கை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு தாழ்மையுடன் வேண்டி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்!

இவன்,

செ. இராசமாணிக்கம்,
தோகா, கத்தார்

No comments: