20/06/2021

தொழில்நுட்பத் திருட்டுக்கள்

 


 #தொழில்நுட்பத்_திருட்டுக்கள்
#இது_பயமுறுத்தும்_பதிவல்ல
#விழிப்புணர்வுப்_பதிவே

அன்பு நண்பர்களே!

சமீபகாலமாக நடைபெறும் நூதனத் திருட்டுகளில் பலவற்றை நாம் நேரடியாகவோ அல்லது நம் நண்பர்கள் மூலமாகவோ அறிந்திருப்போம். இருந்தாலும் நமக்குள் பேசிவிட்டு அப்படியே அதைக்கடந்து சென்றிருப்போம். அப்படி நாம் கடந்து சென்றுவிடுவதால் மற்றவர்களுக்கு அது தெரியாமலே போய்விடுகிறது. அவற்றைத் தெரியப்படுத்துவதன் மூலம் மற்றவர்களின் இழப்பைத் தடுக்க முடியும் என்பதே இப்பதிவின் நோக்கம். இப்படித் தாங்களும் தங்களுக்கோ அல்லது தங்களின் நண்பர்களுக்கோ ஏற்பட்ட இழப்புகளை இங்கேப் பகிர வேண்டுகிறேன். முடிந்தால் அவற்றைத் தொகுத்து ஏதேனும் இதழ்களுக்குக் கட்டுரையாக அனுப்பி வைக்கும் எண்ணமும் உள்ளது. நன்றி!!!

1. தகவல் திருட்டில் முதலிடம் வகிக்கும் முகநூலில் இந்த முகநூல்த் திருடர்கள் செய்யும் திருட்டு அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சமீப காலமாக இது மிகவும் அதிகமாகி வருகிறது. பொதுவாக நம்மூரில் நம்மவர்கள் இதில் மாட்டுவது குறைவே. இருப்பினும் அவர்களுடைய குறிக்கோள் 100 பேரில் ஒருவர் சிக்கினால் போதும் என்பதே. நம் ID போலவே போலி ID தயார்செய்து பண உதவி கேட்கும் கும்பல் பெருகியதை அனைவரும் அறிந்திருந்தாலும் இந்தப் போலி IDக்களை நண்பராக ஏற்றுக்கொள்வதால் வரும் சிக்கல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. நம்மைத் தொடர்ந்து கவனித்து வேறு வகையிலும் கைவரிசை காட்டி விடுவார்கள் என்பதால் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுகிறேன்.

2. நமக்குத் தபாலிலோ அல்லது கொரியரிலோ சாமான் வருவதாக இருந்தால் (பெரும்பாலும் இணையவழியில் வாங்குபவர்கள்) அவர்களை அறிந்து வைத்து ஒரு கும்பல் என்ன செய்கிறது தெரியுமா? தங்களுக்கான பார்சல் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் பணப் பரிமாற்றத்தில் சிறு தொகை மட்டும் இன்னும் மீதம் உள்ளது. அதை மட்டும் செலுத்திவிடுங்கள் என்று சொல்வார்கள். சொற்பத் தொகைதானே என்று செலுத்தினால் எப்படியோ பெரும் பணம் போய்விடுகிறது. இதை யார் செய்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை. நீங்கள் கவனமாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் சொல்லலாம். அங்கேதான் அவர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்படுகிறார்கள். அதாவது உண்மையானவர்களின் ID மற்றும் தகவல்களை எல்லாம் திருடி அவர்கள் போலவே மாறிவிடுவார்கள்.

3. இங்கே சில அரசாங்க அழைப்புகள் துறை ரீதியாக குறிப்பிட்ட நபர்களின் துறை சார்ந்தே அவர்களுக்கு ஏற்றார் போலவே வருகின்றது.நாம் என்னதான் உண்மை அழைப்பைக் கண்டறியும் செயலி எல்லாம் போட்டிருந்தாலும் அவர்கள் கேட்கும் தகவல்களைக் கொடுத்தவுடனே பண அபகரிப்பு சுலபமாக நடைபெற்று விடுகிறது.
(இதுவும் ஒருவகையான புதுமையான திருட்டே)

4. வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுபவர்களை மடக்கி அவர்களிடம் இருந்து பணம் கறக்க ஒரு மிகப்பெரிய ஹைடெக் திருடர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வெப்சைட் தயாரித்து நல்ல ஆங்கிலத்தில் சாதுர்யமாகப்பேசி பணம் அடிக்கிறார்கள்.

5. வேலைவாய்ப்பு வாங்கித் தருவது சம்பந்ததமாக காலம் காலமாகப் போலி ஏஜெண்டுகள் திருடினாலும், இப்போதெல்லாம் உண்மை நிறுவனங்கள் போலவே வெப்சைட், கைப்பேசி எண், ஒப்பந்த வடிவமைப்பு..... இப்படி எல்லாம் பக்கவாய்த் தயாரித்து ஏமாற்றுபவர்கள் பெருகிவிட்டதால் எது உண்மை எது போலியென்றே தெரிய நிறைய மெனக்கெடல் வேண்டும்.

மக்களே....ATM PIN கொடுத்தால்தான் கொள்ளை அடிக்க முடியும் என்று இன்னும் நினைப்பவர்களா நீங்கள். எனில் உங்களுக்காகத்தான் இப்பதிவு. உங்கள் பெயர், கைப்பேசி எண், உங்கள் ATMல் நான்கு இலக்கங்களே (நான் PINல் உள்ள இலக்கங்கள் எல்லாம் சொல்லவில்லை) போதும்.

நம் எண்கள், தகவல்கள் எல்லாம் எங்கெங்கோக் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் திருடர்கள் போகும் வேகத்திற்கு மற்றவர்கள் போகமுடியவில்லை என்பதே உண்மை. இங்கேப் பணம் இழப்பவர்கள் எல்லாம் படிப்பறிவில்லாதவர்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். படிக்காதவர்களைவிட படித்தவர்களே அதிகம் இழக்கிறார்கள்.

இங்கே ஐந்தே ஐந்து மட்டும்தான் குறிப்பிட்டுள்ளேன். இதுபோகக் குழந்தைகளின் Game வைத்துப் பணம் பறிக்கும் திருட்டு வகையெல்லாம் தனி இரகம். நமக்கெல்லாம் பல விடயங்கள் தெரிவதே இல்லை. காரணம் கடந்த 10 வருடங்களில் இங்கே மாறியுள்ளது அறிவியல் மட்டுமல்ல... அறிவியல் சார்ந்த திருட்டுகளும்தான்‌. சாக்கிரதை உறவுகளே.

✍️செ. இராசா

(அனைவரும் தங்களின் அனுபவங்களை முடிந்தால் பகிர வேண்டுகிறேன்)

No comments: