07/06/2021

அன்பின் மிகுதி-----------வள்ளுவர் திங்கள் 162==ஊடல் கூடல்



அறுசுவையின் உள்ளே அருஞ்சுவை போலே
நறுமுகையுன் நெஞ்சிற்குள் நான்
(1)

பலமொழி தேசத்தில் பைந்தமிழ் போலே
நலமொழி கொஞ்சிடும் நீ
(2)

கவியில் திகழும் கவின்*நடை போலே
புவியின் விழிகளில் நாம்
(3)

அப்படி இப்படி ஆயிரம் சொன்னியே;பின்
எப்படி இப்படி இன்று?
(4)

காலத்தின் ஓட்டத்தில் காட்சிகள் மாறிடலாம்
ஞாலத்தில் மாறிடுமோ ஞாயிறு
(5)

அப்பப்பா போதும்பா அள்ளிவிட வேண்டாம்பா
தப்பெல்லாம் நான்தான்பா தள்ளு
(6)

கொஞ்சிய வாயாலே கொட்டாதே நஞ்சள்ளி
கெஞ்சியுனைக் கேட்கின்றேன் கேள்
(7)

சொல்லால் வதைக்கின்ற சூட்சமம் கற்றவரே
வில்லாய் விடுவதுயார்(ச்) சொல்?!
(8)

விட்டுக் கொடுப்பவரே வெல்கின்றார் என்பதினால்
கட்டிப் பிடிக்கின்றேன் கால்!😊
(9)

தன்முனைப்(பு) ஏதுமின்றி தாவித் தழுவுதல்
அன்பின் மிகுதி அறி❤️
(10)

✍️செ. இராசா

No comments: