15/06/2021

இலை

 #இலை
*********


 

விதையின் வீரியத்தை
விருட்சமாய் மாற்ற
மண்ணிற்குள் வேராய்
விண்ணோக்கி நேராய்
உயிர்ப்பின் இருப்பை
உன்னதமாய்ச் சொல்கின்ற
இலைகளின் துளிர்ப்பை
என்னவென்று சொல்லிடுவேன்?

புவியைப் போர்த்தியுள்ள
நீலப் புடவைக்குள்
கவியாய்க் காட்சிதரும்
பசுமைப் பெட்டகத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
ஈர்க்கும் விந்தையினால்
பூக்கும் புன்னகையை
என்னவென்று சொல்லிடுவேன்?

அங்கே இங்கேயன
எங்கேயும் போகாமல்
தனக்கான உணவைத்
தானே தயாரித்துத்
தான்விடும் மூச்சைத்
தரணிக்கே அளித்து
தரணியின் மூச்சைத்
தனக்குள் இழுத்து
பிறருக்காய் இங்கே
பிரணாயமம் செய்கின்ற
பெருங்கொடைத் தன்மையை
என்னவென்று சொல்லிடுவேன்?

ஒற்றை இலைகொண்ட
புல்லாய் இருந்தாலும்
கற்றை இலைகள் கொண்ட
மரமாய் இருந்தாலும்
நீரில் இழைகின்ற
பாசியாய் இருந்தாலும்
நீரின்றி விளைகின்ற
கள்ளியாய் இருந்தாலும்
உணவை வைக்கின்ற
வாழையாய் இருந்தாலும்
உணவாய் ஆகின்ற
கீரையாய் இருந்தாலும்
எதுவுமே இங்கே
வெற்றிலை இல்லையே..
அட....
வெற்றிலையும் கூட
வெற்று இலை இல்லையே..?

"இறைவனைத் தொழ
பச்சிலை போதுமாம்"
திருமந்திரம் சொல்கிறது!

"எடைக்கு எடைப் போட்டியில்
துளசி இலை வென்றதாம்"
புராணமொன்று புகழ்கிறது!

இங்கே..
வில்வ இலையோ? அரச இலையோ?
வேப்பிலையோ? வேற்றிலையோ?
சைவமென்றும் சமணமென்றும்
பக்தியென்றும் சக்தியென்றும்
ஒவ்வொரு இலைக்குமே
ஒவ்வொன்று சொன்னாலும்
சருகாகும் இலைகளெல்லாம்
சத்தமாய்ச் சொல்லுவதை
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன்:
சத்தியத்தைச் சொல்லுகின்றேன்:

"இருக்கும்வரை உயிர் காப்போம்
இறந்துவிட்டால் உரம் ஆவோம்"

இவன்,

செ. இராசமாணிக்கம்

No comments: