08/06/2021

கட்டுரை---ஆன்மீகம்---எது சிறந்த யோகம்?

#எது_சிறந்த_யோகம்? (என் பார்வையில்)




இங்கே மதுவை விரும்பிக் குடிக்கும் மதுப்பிரியர்கள் (குடிகாரர்கள் என்று சொல்லக் கூடாதாம்) அனைவருக்கும் மது உடல் நலத்தைக் கெடுக்கும் என்று தெரியாதா? புகைப்பவர் அனைவரும் புகை தனக்குப் பகையாகும் என்று அறிந்திருக்க மாட்டார்களா? கோபத்தின் உச்சத்தில் காளியாட்டம் ஆடுபவர்கள் பின் அமைதியாகும் பட்சத்தில் தனது தவறை உணர்ந்திருக்க மாட்டார்களா? ஆக....எது நல்லது? எது கெட்டதென்று அனைவருக்குமே நன்றாகத் தெரிகிறது. இருந்தும் பல நேரங்களில் இனி இப்படி செய்யக்கூடாது என்று எல்லோரும் முடிவெடுக்கிறார்கள் (நான் உட்பட) முடிவில் என்ன ஆகிறது? அறிவை உணர்ச்சி மிஞ்சும் அளவைப்பொறுத்து பின் விளைவுகள் அமைந்து விடுகிறது...உண்மை தானே?

சிலர் கோபத்தின் உச்சத்தில் பிறரைத் தாக்கும்போது படாத இடத்தில் பட்டு தாக்குண்டானவர் இறந்தால் தாக்கியவர் கொலைகாரர் ஆகிறார்.
இறக்கவில்லையெனில் அவர் கொலைகாரர் என்கிற வரைமுறைக்குள் வருவதில்லை, இருவருக்கும் உள்ள வித்தியாசம் அவ்வளவுதான். ஆமாம்...இப்போது ஏன் இதுபற்றிய ஆராய்ச்சி என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இதோ சொல்கிறேன்;

அறிவை மட்டுமே மையமாக வைத்து ஆராய்ந்து மெய்ப்பொருளை அறிவதை "ஞான யோகம்" என்பார்கள். அதுவே, இறைவனிடத்தில் அப்படியே சரணாகதி அடைவதை "பக்தி யோகம்" என்பார்கள். இது தவிர பயிற்சியின் மூலமாக செல்வதை "ராஜ யோகம்" என்றும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதை "கர்ம யோகம்": என்றும் சொல்வார்கள். இதில் எது உயர்ந்த யோகம்? எதை பின்பற்றினால் சரி என்றெல்லாம் விவாதிப்பவர்களுக்காக சுவாமி விவானந்தர் பதில் கூறுகிறார்: இந்த நான்கு யோகங்களில் நான்கில் ஒன்றோ அல்லது இரண்டு, மூன்று அல்லது நான்கின் கூட்டாகவோ கையாளலாம் என்கிறார் . அவரின் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரோ அனைத்திலும் எளிது பக்தியோகமே என்கிறார்.

அறிவை மட்டுமே பெருக்கிக்கொண்டு போவது நல்லதுதான். ஆனால், இங்கே யார் அறிவாளி சொல்லுங்கள்? இன்னும் சாதி பார்த்தே ஓட்டுப்போடும் படித்தவர்கள் அறிவானவர்களா? இல்லை இன்னும் மதம் பார்த்தே ஓட்டுப்போடும் படித்தவர்கள் சான்றோர்களா? இங்கே ஒழுக்கம் தவறுவோர் அதிகமாக உள்ளது படித்த மேலோர்கள் மத்தியில் தானே?! ஆக்கத்திற்கு பயன்படும் அறிவியலைவிட அழிவுக்குப் பயன்பட்ட அறிவியலின் விளைவுகளால்தானே இத்தனைப் போர்க்கருவிகள் மாறும் கொரோனா போன்ற தீ-நுண்கிருமிகள். ஆக "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்" என்று வள்ளுவரின் கூற்றே இங்கு சத்தியமாகிறது. எனில் இந்த உண்மை அறிவை எப்படிப் பெறுவது? ஒரே வழிதான்.....அது இறைவனைச் சரணடையும் வழி மட்டுமே. ஏன் இறைவன்?!

பக்தி யோகத்தால் மூட நம்பிக்கைக்கு ஆட்பட்டு தவறான வழியிலும் செல்வதற்கான வாய்ப்பினைக் கண்கூடாகக் காண்கின்றோமே? ஆனால் ஞான யோகமும் அகங்காரத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமுள்ளதாய் இருக்கிறதே?. எனில் எது சிறந்த எளிமையான யோகமாக இருக்க முடியும் என்றால், தவறென்றே அறிந்தும் உணர்ச்சியின் விளைவால் தவறு செய்யாமல் மீள வேண்டுமாயின் வெறும் ஞான யோகம் மட்டும் அல்லாமல் "ஞான யோகத் தோடு கூடிய பக்தியோகமே மிகச்சிறந்த யோகமாக இருக்க முடியும்" என்பதே எம் திண்ணம். இல்லையேல் தவறென்றே தெரிந்தாலும் தவறில் இருந்து மீள்வதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நன்றி வணக்கம்!!!

ஓம் நமச்சிவாய!
வாழ்க வளமுடன்!

✍️செ. இராசா

No comments: