10/06/2021

கடன்

 #கடன்


 

"கடன் பட்டார் நெஞ்சம்போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்"

இது..
கடன் படுத்தும் பாட்டை
காட்டிட எண்ணியப்
புலவன் ஒருவன் அன்று
புனைந்திட்ட வரிகள்!

இங்கே...
வரியைக் கடன் வாங்கி
வரிவரியாய்க் கொடுத்தாலும்
வாங்கிய கடனெல்லாம்
வழங்கிட முடியுமா?!

இருவர் தந்த கடன் இவ்வுடலென்றால்
இறைவன் தந்த கடன் இவ்வுயிரன்றோ?!
உலகம் தந்த கடன் ஊனுடையென்றால்
உறவால் வந்த கடன் யாவருமன்றோ?!

அனைத்துக் கடனையுமே
அடைத்திட ஆசைதான்
அடைத்திடும் முன்பாக
அழைத்திட்டால் என்செய்ய?!

குபேரன் கொடுத்த கடன்
கோவிந்தன் கொடுக்கலையாம்..
என்ன நடந்தததென
எவர்வந்து சொல்லிடுவார்??

வங்கியில் கடனடைக்க
வழியில்லை என்றானால்
தமிழ்நாடு அரசைப்போல்
தள்ளுபடி செய்வாரா?
இல்லை.
வாழ்த்துப்பா பாடி
வாயிலேப் போடுவாரா?!

செஞ்சோற்றுக் கடன் அடைக்க
சேர்ந்திட்ட தோஷத்தால்
நல்லவன் கர்ணனுக்கே
நடந்ததைப் பார்த்தீரா?!

கடனட்டை தேய்த்தே
காலத்தைப் ஓட்டுகிற
தவணை முறையிங்கே
தண்டனை இல்லையா?!

பட்ட கடன்போதும்
பட்டென்று கட்டிடுவீர்
மற்ற கடனடைக்க
மனதார வேண்டிடுவீர்....

✍️செ. இராசா

No comments: