24/06/2021

கண்ணகி சபதம் ---- வெண்பாவில்

 #கண்ணகி_சபதம்_
#வெண்பாவில்




#கோட்டை_வாயிலில்_கண்ணகி

நீதியில்லாக் கோட்டைமுன்
............நிற்கின்ற காவலனே
நாதியில்லாப் பெண்ணொருத்தி
...........நாடிவந்தேன்- பாதியின்றி
சேதியினைச் சொல்லியுன்
...........தென்னவனைத் தேற்றிடடா..
வாதிடவே வந்துள்ளேன் நான்!

#காவலன்_உரைக்க_மன்னவன்_சம்மதித்தல்

கோட்டைமுன் வாசலிலே
...........கோரத்தின் சாயலிலே
காட்டமாய்ப் பேசுகின்ற
............கன்னியின்- காட்சியினைக்
காவலன் சொன்னவுடன்
.............கண்மூடி மன்னவனும்
பாவவினை ஏற்கநின்றான் பார்த்து!

#மன்னவன்_உரை

கொற்றவன் நானம்மா?
.........குற்றமென்ன சொல்லம்மா
உற்றதைச் சொன்னால்தான்
..........உற்றவனைப்- பற்றிடலாம்
யாராய் இருந்தாலும்
..........இச்சபையில் ஒன்றேதான்
நேராய் வழக்காடு நீ!

#கண்ணகி_உரை

காவலனை ஏவிக் கழுத்தை அறுத்திட்ட
கோவலனின் பெண்டாட்டி நான்
(1)

சோழ நிலம்விட்டு சொந்த இனம்விட்டு
வாழவந்தால் கொல்வீரோ நீர்
(2)

வாழ வழிதேடி வந்தது தப்பென்றா
ஆழமாய் வைத்தீர்கள் ஆப்பு
(3)

காற்சிலம்பை விற்கக் கடைவீதி வந்ததற்காக்
கூற்றுவனாய் செய்தீர்க் கொலை
(4)

மாசாத்து வான்தந்த மாணிக்கம் தோற்குமா?!
கூசாமல் சொல்லாதே கூற்று
(5)

கடல்வணிகம் செய்தோரைக் கள்வராய்க் காட்டும்
மடத்தனச் செய்கையா மாண்பு
(6)

கோப்பெரும் தேவிதான் கொலுசெல்லாம் போடுவரோ?
தீர்த்திடவே தந்துள்ளீர் தீர்ப்பு
(7)

ஒன்றிய பக்கத்தில் ஓதிடும் மன்றத்தில்
என்ன கிடைத்துவிடும் இங்கு
(8.)

சங்கம் வளர்க்கின்ற சான்றோர்கள் கூட்டத்தில்
சங்கை அறுத்தநீ...சாவு
(9)

நல்லோரை மட்டும் நலமாக விட்டிங்கே
எல்லோரும் சாகட்டும் இன்று
(10)

#சிலம்பின்_சேதி

கண்ணகி போட்டுடைத்த
........காற்சிலம்பின் கற்களெல்லாம்
கண்களில் மின்னியதும்
........கள்வன்யார்- கண்டனரே!
மன்னன் மனம்நொந்து
........மண்ணிலே வீழ்கையில்
மன்னனோடு எல்லோரும் மண்!

#கண்ணகி_சபதம்

உட்பொருள் யாதென
.........உண்மையை நோக்காமல்
பட்டென்று கூறும்
.........பகுத்தறியா- முட்டாள்கள்
சட்டத்தின் பேரால்
.........சதிசெய்யும் போதெல்லாம்
கட்டாயம் தீவைப்பேன் காண்!

✍️செ. இராசா
24.06.2021

(என் குருநாதர் சின்னக் கண்ணதாசர் விக்டர்தாஸ் கவிதைகள் அண்ணா அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்)

No comments: