08/09/2020

இறப்பு

  

 


#இறப்பு

அமங்கலமாய்க் கருதும்
அநேக சொற்களில்
அச்சம் தரும் சொல்லென்றால்
அது அந்தச் சொல்லே....
ஆம்..
#இறப்பு என்ற சொல்லே..

பிறந்தோர் இறப்பரெனத்
தெரிந்தே இருந்தாலும்
இருந்தோர் இறக்கையிலே
இழந்ததாய் அழுகின்றோம்

"சாகும் வரை உன் பிணத்தை
நீதான் சுமக்க வேண்டும்"
என்ற இக்பாலின் வரிகள்
இதயத்தைத் தைத்தாலும்
இருக்கும் பிணங்கள்நாம்
இறந்தார்கள் என்கின்றோம்!

இன்றைய நான் என்பது
நேற்றைய நானா என்ன?
இன்றைய நான் என்பது
நேற்றைய நானின் இறப்புதானே?
இல்லையேல் புகைப்படங்கள் எதற்கு?
இதய செல்லைவிட
இறக்கா செல்கள் யாதிங்கே?!

கழிந்த வருடங்களின்
கணக்குதானே வயது
இழந்த வருடங்களின்
இருப்புதானே இறப்பு

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்
ஒன்று சாகாமல்
ஒன்று இல்லை

அறியாமையின் சாவில்தானே
அறிவுடைமை பிறக்கும்
தன்முனைப்பின் சாவில்தானே
நன்உறவு ஜனிக்கும்

இளமையின் சாவில்தானே
முதுமை பிறக்கும்
இன்னலின் சாவில்தானே
இன்பம் பிறக்கும்

ராக்கெட் கழன்றால்தான்
செயற்கைக்கோள் சுழலும்
விந்தணு கழன்றால்தான்
அண்டக்கோள் உயிர்க்கும்

அணுவின் மையம் முதல்
அண்டத்தின் மையம் வரை
அணுக்கரு சிதைவதை
அறிவீர்கள் தானே?

ஒன்று ஒன்றாக மாறி
ஒன்று ஒன்றில் சேர்ந்து
ஒன்று ஒன்றோடு ஒன்றினால்
ஒன்று எப்படி இறக்கும்?
ஒன்றும் இறப்பதில்லை...
என்றும் இருப்பதினால்...

வார்த்தைகளை உற்று நோக்குங்கள்...

"இயற்கை எய்தினார்"
இயற்கையோடு எய்தியதால்
"இறைவனடி சேர்ந்தார்"
இறைவனோடு சேர்ந்ததால்
"காலமானார்"
காலத்தோடு கலந்ததால்..
இப்படி இன்னும்... இன்னும்...

ஆம்...
இங்கே யாரும் இறப்பதில்லை
இருப்பை விட்டுச்சென்றால்...

வாழ்வின் எச்சமாய்
வெறும் கழிவை விட்டுச் செல்லாதீர்..
வாழ்வின் உச்சமாய்
பெரும் புகழை விட்டுச் செல்லுங்கள்...
இறப்பும் இறந்துவிடும்
இருப்பே நிலைத்துவிடும்

#இறவாநிலை

✍️செ.இராசா

(புகைப்படம்: இரமணர் மண்டபம், திருவண்ணாமலை)

No comments: