14/09/2020

குடும்ப வாழ்க்கை, வள்ளுவர் திங்கள்-128

 


 #குடும்ப_வாழ்க்கை

#என்னுரை
வள்ளுவர் சொன்னபடி வாழ்ந்திடவே மீண்டும்நான்
வள்ளுவத்தைச் செய்தேன் வரி!
(1)

கூறியதைக் கூறுவது குற்றம்தான் என்றாலும்
கூறினேன் கூராகக் கூற்று!
(2)

குறையென்றால் என்பொறுப்பு குற்றத்தை ஏற்பேன்
நிறையென்றால் வள்ளுவரே நீர்!
(3)

#பதினோரு_கடமைகள்
பதினோரு பேர்களைப் பாதுகாத்து வாழ்தல்
மதிப்புள்ள இல்லறத்தான் மாண்பு!
(4)

#முதல்_மூவர்
பெற்றோர்கள் பிள்ளைகள் பெண்டாட்டி மூவரையும்
கட்டாயம் காத்தல் கடன்!
(5)

#இரண்டாம்_மூவர்
துறந்திட்ட நல்லோர் துயருரும் ஏழை
இறந்திட்ட இ(எ)ல்லார்க்கும்‌ தூண்!
(6)

#அடுத்த_ஐவர்
முன்னோர்கள் தெய்வம் விருந்தினர் சுற்றமென
தன்னையும் நோக்கல் தலை!
(7)

#முடிவு
இல்லறம் போற்றி இனிதாக வாழ்வோரின்
நல்லறம் செய்யும் நலம்!
(8)

இல்லற வாழ்வை எளிதாக்கி மேலேற
அல்லவை போகும் அகன்று
(9)

தன்னுடல் தன்மனம் தன்னுயிர் காப்பதைத்
தன்னறமாய்ச் செய்தல் தவம்
(10)

✍️செ.இராசா

#வள்ளுவர்_திங்கள்_128

No comments: