23/09/2020

குறளுரையாடல்-11

 


#குறளுரையாடல்_11
#கரு_காமத்துப்பால்_புலவி
#தொடர்_உரையாடல்_பகுதி
#மருத்துவர்_ஐயாவுடன்
#குறள்_வெண்பாவில்

#ஐயா_1
தொல்காப் பியம்தோற்கும் ஓதுநன்னூல் நாணும்நீ
மெல்லிடைவல் மூவினங்கள் மீறு.

(நான் எழுதிய புதுக்கவிதையில் இருந்து ஐயா தொடங்கி வைத்தார்கள்)

#நான்_2
மீறிவரும் காமத்தை மிச்சமின்றி கொட்டினாலும்
ஊறிவரும் அன்பென்னும் ஊற்று

#ஐயா_3
ஊற்றாய்க் கிளர்ந்தெழும் ஊடலெண்ணம் காதலின்
தோற்றுவாய் என்று தொடர்

#நான்_4
தொடரத் தொடரத் தொலைக்கிற காமம்
கடக்க முடியாக் கடல்

#ஐயா_5
கடலும் நதியும் கலக்கும் அலையாய்
உடற்கூடும் காமம் உணர்

#நான்_6
உணர்வினைத் தூண்டி உலகினை நீக்கி
கணங்களில் வைத்திடும் காண்

#ஐயா_7
காணும் கவிதை களிப்பின் முழுமையில்
நாணும் எழில்ஊடே நான்

#நான்_8
நானென்ற ஒன்றே நழுவிடும் காமத்தில்
ஆணென்ன பெண்னென்ன அங்கு

#ஐயா_9
அங்கு தொடர்நாவல் அந்தமின்றி இன்னுமின்னும்
கங்குல் களிகாமம் காண்

#நான்_10
காண்கின்ற போதே கவிழ்க்கின்ற காமத்தை
ஊண்என்றே உண்ணும் உயிர்

#ஐயா_11
உயிரை விடுத்துடல் ஊர்விட்டுப் போக
உயிரைக் கொடுக்கும் உயிர்

#நான்_12
உயிரும் உயிரும் உரசும் பொழுதில்
உயிர்க்கும் புதிய உயிர்

#ஐயா_13
உயிரின் உணர்வை உளவுடலில் ஊற்றாய்
உயிர்ப்பாக்கும் ஊடல் உணர்.

#நான்_14
உணர்ச்சியின் உச்சத்தில் ஊடலும் ஓய்ந்து
கணத்திலே மாயும் கனம்

#ஐயா_15
கனமான நெஞ்சில் களிகாமம் பாய
இனமான பஞ்சாய் இனிது.

#நான்_16
இனிதான கூடலை எப்போதும் தேடும்
தணியாத காமமே தான்

#ஐயா_17
தானழிந்து தாமாகத் தான்மாறும் ஊடலால்
ஊனழியும் வரைகாதல் உண்டு

#நான்_18
உண்டான காமத்தை உள்ளுக்குள் வைத்தாலும்
கண்ணோட்டம் காட்டி விடும்

#ஐயா_19
விடுமுறையின் அந்தநாள் விட்டுவிடா ஊடலால்
தொடுகாமம் செம்மை தொடர்

#நான்_20
தொடர்கின்ற ஆட்டத்தில் தோல்வியே இல்லை
தொடரட்டும் அன்பின் தொடர்

✍️ ஐயாவும் நானும்

No comments: